கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/காலின் கீழ் பந்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

86. காலின் கீழ் பந்து

போட்டியின் அமைப்பு முன் ஆட்டத்தைப் போல்தான்.

தலைக்கு மேலாக பந்தை வழங்கி ஆடுவதற்குப் பதிலாக, இதில் வேறு முறையைக் கையாள வேண்டும்.

வரிசையில் நிற்கும் ஒரு குழுவினர் அனைவரும், கால்களை நன்றாக அகலமாக விரித்து வைத்துக் கொண்டு நிற்க, அந்தக் கால்களின் இடைப்பட்ட பரப்பிற்குள்ளே தான் பந்தை உருட்டிவிட வேண்டும்.

போட்டி தொடங்கியவுடன், பந்து வைத்திருக்கும் முதல் ஆட்டக்காரர் முன்புறமாகக் குனிந்து கீழே பார்த்து, தான் விரித்த கால்களுக்கிடையே பந்தைப் பின் புறமாகத் தள்ள, அடுத்தடுத்து அவருக்குப் பின் நிற்பவர்களும் பந்தை அதே முறையில் தள்ளி, விளையாடி விட அந்தப் பந்து கடைசி ஆட்டக்காரரிடம் செல்கிறது.

உடனே அவர் பந்தை பிடித்துக்கொண்டு, முன்னே இருக்கும் எல்லைக்கு ஓடிச் சென்று, பின் திரும்பி ஓடிவந்து முன்னாட்டக்காரராய் மாறி முன்னே நிற்க, அவர்களும் பின்னால் நகர்ந்து கொண்டு இடம் தர, உடனே முன் கூறிய முறையிலே ஆட்டத்தைத் தொடரவேண்டும். -

எல்லோருக்கும் ஒரு முறை ஒட வாய்ப்பு உண்டு முதலில் ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது.