உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குரங்காட்டம் (அ)

விக்கிமூலம் இலிருந்து

15. குரங்காட்டம் (அ)

அமைப்பு:

வந்திருக்கும் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் வட்டத்தைச் சுற்றி நின்று கொண்டிருக்க, வட்டத்திற்குள்ளே ஒருவர் மட்டும் நிற்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர்களில் ஒருவரிடம் ஒரு பந்து இருக்க வேண்டும். அதுதான் ஆடுதற்கு உதவியாக இருக்கும்.

ஆடும் முறை:

ஆடுதற்குரிய சைகை கிடைத்தவுடன், மையத்தில் நிற்பவர், பந்தை வைத்திருப்பவரை நோக்கி ஓடி, பந்தைத் தொடவோ அல்லது பிடுங்கிக்கொள்ளவோ முயற்சிக்க வேண்டும்.

உடனே பந்தை வைத்திருப்பவர். தான் தப்பித்துக் கொள்வதற்காக, பந்தை அடுத்தவருக்கோ அல்லது எதிர்ப்புறத்தில் உள்ளவருக்கோ தூக்கி எறிந்துவிட வேண்டும். நடுவில் இருப்பவர் அம்முறை ஏமாந்துபோய், மீண்டும்பந்திருக்கும் இடம் நோக்கிப்பாய்ந்தோடுவார்.

இவ்வாறு மாறி மாறிப் பந்தை, மாற்றிக்கொண்டே இருக்கும்பொழுது, எதிர்பார்த்து வருகின்றவர் ஏமாறி ஏமாறி ஒடித் தடுமாறும் அளவுக்கு ஆட்டம் காட்ட வேண்டும்.

குறிப்பு:

பந்தை ஒழுங்காக எறியாதவர், அல்லது பந்தை சரியாகப் பிடிக்காது கீழே விழ விடுபவர் நடுவில் நிற்பவராக ஆட வேண்டியவராகி விடுவார். ஒருவர் கையில் இருக்கும்பொழுதே நடுவில் நிற்பவர் வந்து பந்தைத் தொட்டுவிட்டாலும், அவரும் நடுவில் நின்றாடுபவராகி விடுவார்.

நடுவில் நின்று ஆடக் கூடியவர் சுறுசுறுப்பாக இருந்தால்தான் ஆட்டமும் சுவையாக இருக்கும். பந்தைப் பிடிப்பவர்களும் எறிபவர்களும் பம்பரம்போல் சுழன்று பரபரப்புடன் ஆடினால், ஆட்டம் காண்பதற்கும் ஆடுதற்கும் மிக அருமையானதாக அமையும்.