கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மந்திரி ஆட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

28. மந்திரி ஆட்டம்

அமைப்பு:

ஆட்டத்திற்குரிய ஆடுகள அமைப்பு, முன் ஆட்டத்திற்குரியது போல்தான்.

மந்திரி என்று ஒருவர் இருந்தால், மெய்க்காப்பாளர் என பல பேர்கள் இருப்பார்கள் அல்லவா! அதேபோல் துணையாக, மூன்று அல்லது நான்கு மெய்க்காப்பாளர் கள் என்றும் அவர்கள் ஆடுகளத்தின் உள்ளே நிற்க வேண்டும்.

மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும், அவர்களை விரட்டித் தொட முயல வேண்டும்.

ஆடும் முறை:

மற்ற ஆட்டக்காரர்கள் மந்திரியைப் பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வர, மந்திரி தன் ஆட்களோடு தப்பிக்க ஆடுகளம் முழுவதும் ஓட வேண்டும்.

தன்னால் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்த உடனேயே, மந்திரியானவர் தன் காப்பாளர்களை நோக்கி, ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட, உடனே அவர்கள் அவரைச் சுற்றி நின்று கை கோர்த்த வாறும், திரும்பிக் கொண்டும், மந்திரியைத் தொடாதவாறு வட்டமிட்டும், வந்தவர்களைத் தள்ளியும், தடுக்க முயல வேண்டும்.

அவர்களையும் மீறி விரட்டுபவர்கள் தொட்டு விடுவார்கள் என்ற நிலைமை உருவானால், மந்திரி தன் தலைமேல் கைவைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து விட வேண்டும்.

இவ்வாறு இரண்டுமுறை செய்து, மந்திரி, அவர்களிடமிருந்துதப்பித்துக் கொள்ளலாம். மூன்றாவது முறை அவர் தலைமீது கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டால், அவர் ஆட்டம் இழக்கிறார். அவர் யாராலாகிலும் தொடப்பட்டாலும், ஆட்டம் இழந்து விடுகிறார்.

மந்திரியை யார் தொடுகின்றாரோ அவர் மந்திரியாக மாறுகிறார். அல்லது அவர் தானாக ஆட்டம் இழந்து விட்டால், மெய்க்காப்பாளர்களில் ஒருவர் மந்திரியாகி விடலாம். இவ்வாறு அடுத்தடுத்து ஆட்டம் தொடர வேண்டும்.