கெடிலக் கரை நாகரிகம்/கெடிலத்தின் பயணமும் துணைகளும்

விக்கிமூலம் இலிருந்து
4. கெடிலத்தின் பயணமும்
துணைகளும்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர்ப் பகுதியில் தோற்றமெடுக்கும் கெடிலம், அவ்வட்டத்தில் கிழக்கு நோக்கி ஏறக்குறைய எட்டு கி.மீ. தொலைவு ஓடித் திருக்கோவலூர் வட்டத்துக்குள் புகுகிறது; திருக்கோவலூர் வட்டத்தில் அரியூர் வரைக்கும் கிழக்கு நோக்கி ஓடிப் பின்னர் வடகிழக்காய் வளைந்து செல்கிறது; 10 கி.மீ. தொலைவு அளவு வடகிழக்காய் ஓடிய பின்பு தென் கிழக்காய்த் திரும்புகிறது; 20 கி.மீ. தொலைவு அளவு தென்கிழக்காய் ஓடிவந்து, பரிக்கலுக்கும் பாதூருக்கும் இடையே உள்ள மாறனோடை என்னும் ஊருக்கருகில் மீண்டும் கிழக்கு நோக்கிச் சென்று, சேந்தநாடு என்னும் ஊருக்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் கடலூர் வட்டத்துக்குள் புகுகிறது. அங்கிருந்து கடலூர் வரைக்கும் சிறிது தொலைவு கிழக்கும் - சிறிது தெலைவு வடகிழக்கும் - சிறிது தொலைவு தென் கிழக்குமாக மாறி மாறி வளைந்து நெளிந்து நெளிந்து வளைந்து சென்று கடலூருக்கு அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. பிறப்பிடத்திலிருந்து முடிவிடம் வரைக்குமான கெடிலத்தின் பயணத் தொலைவின் நீளம் ஏறக்குறைய 112 கி.மீ. (70 கல்) ஆகும்.

கெடிலம் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதியிலும் பெரும்பாலும் பாறைகள் நிறைந்த பாதையிலே வருகிறது என்று சொல்லலாம். இப் பகுதியில் சில இடங்களில் கெடிலத்தின் கரைகளையொட்டி வண்டியும் செல்ல முடியாத அளவுக்குப் பாறை நெருக்கம் மிக்குள்ளது. பல இடங்களில் ஆற்றுப் படுகையில் மணலைக் காண்பது அரிது. அந்த வட்டாரத்தில் அண்மைக்கு அண்மையில் சிறுசிறு பாறைகளும் சிறுசிறு கற்குன்றுகளும் இருக்கக் காணலாம். பாறையோ குன்றோ இல்லாத இடங்களில் தனித்தனிக் கற்களாயினும் தரைக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும்.

திருக்கோவலூர் வட்டத்தில் சேந்தமங்கலம் - திருநாவலூர்ப் பகுதிக்குக் கிழக்கிலிருந்து பாறைகளையும் கற்குன்றுகளையும் அவ்வளவாகப் பார்க்கமுடியாது. இங்கிருந்துதான் ஆற்றுப்படுகை மணற்பாங்காயிருக்கக் காணலாம். அதைத் தொடர்ந்து கடலூர் வட்டமும் மணற்பாங்கானதேயாம்.

கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் மலைப்பகுதியில் தோன்றித் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதி வரைக்கும் பாறைகளிடையே ஓடிவருவதால்தான், அப்பர் பெருமான் தேவாரத்தில்,

[1]"வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
திரையார்ந்த புனல்பாய் கெடிலம்"
[2]"வரைகள் வந்திழியும் கெடிலம்

என்று பாடியுள்ளார். கெடிலம், தான் தோன்றும் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாய்க்கால் போலவும், திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கத்தில் ஓர் ஓடை போலவுமே தோற்றமளிக்கிறது. பின்னர்க் கிழக்கு நோக்கி வரவரத்தான் வளர்ந்து விரிகிறது. இந்நிலை எல்லா ஆறுகளுக்கும் உள்ள பொது இயல்புதான்.

கடலூர் வட்டத்தில் அகன்று விரிந்துள்ள கெடிலம், அங்கே பாறைகளுக்கிடையே ஓடாவிடினும், திருவதிகைக்குக் கிழக்கே சென்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து கடலூர் பகுதி வரைக்கும், செங்கல் மலைத் தொடர்ச்சியாகிய கேப்பர் மலை (பீடபூமி) மேட்டு நிலத்தின் வடபுறமாக அதன் அடிவாரத்தையொட்டி ஓடி, கடலூர்க் கடற்கரைக்கு அருகில் மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது.

துணைகள்

குறுகிய காலத்தில் குறுகிய முயற்சியில் தம் குறிக்கோளை முடித்து விடுபவர் போல, கெடிலம் 112 கி.மீ. (70 கல்) நீளம் குறுகிய பயணத்திலேயே தன் கதையை முடித்துக்கொள்ளினும், ‘அரைக்காசு கல்யாணமாம் - அதிலே ஒரு வாணவேடிக்கையாம்’ என்ற பழமொழியேபோல, தன் குறுகிய பயணத்திலேயே பேராறுகள் புரியும் அருஞ்செயல்களைத் தானும் புரிகிறது; பேராறுகள் பெற்றுள்ள பெரும் பேறுகளைத் தானும் பெற்றுள்ளது. அப்பேறுகளுள், பயணத்திடையே கிடைத்திருக்கும் துணைகள் குறிப்பிடத்தக்கவையாம்.

தாழனோடை ஆறு (சேஷ நதி )

‘துணையோடின்றித் தனிவழி ஏகேல்’ என்பதற்கேற்ப, கெடிலத்தின் பயணத்திடையே இரண்டு துணையாறுகளும் பல கால்வாய்களும் வந்து சேருகின்றன. முதல்முதலாகத் திருக்கோவலூர் வட்டத்தில் ‘தாழனோடை’ என்னும் சிறு துணையாறு வந்து கெடிலத்தோடு தென்கரையில் கலக்கிறது. இந்தக் கலப்பு, விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிடையே பரிக்கல் நிலையத்திற்கும் உளுந்தூர்ப்பேட்டை நிலையத்திற்கும் இடையேயுள்ள பாதூர்ப் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 2 கி.மீ தொலைவு அளவில் மாறனோடை என்னும் ஊருக்கருகில் நிகழ்கிறது, இந்தத் தாழனோடை, தான் கெடிலத்தோடு கலக்கும் பாதூருக்கு மேற்கே ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் - இறையூருக்கும் எலவானாசூருக்கும் இடையேயுள்ள புகைப்பெட்டி, குஞ்சரம் என்னும் ஊர்களின் அருகிலிருந்து தோன்றி வருகிறது. ஒரு சிறிய ஏரிப் பகுதியிலிருந்து தோன்றும் இவ்வோடை, வழியிலும் சில ஏரிகளின் தொடர்புடன் சில கால்வாய்களையும் பெற்று வரவரப் பெரிதாகி 20கி.மீ. பயணத்தின் முடிவில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது.

வேறு பெயர்கள்

சிலவிடங்களில் இச்சிற்றாற்றின் இரு கரைகளிலும் தாழை அடர்ந்திருப்பதால் இது தாழனோடை எனப் பெயர் பெற்றது. இந்த ஆறு எந்தெந்த ஊரின் வழியாக வருகிறதோ அந்தந்த ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக, இது களவனூர் என்னும் ஊர் வழியாக வருவதால் ‘களவனூர் ஆறு’ என அவ்வூர்ப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது. இஃதன்றி, ‘சேஷநதி’ என்னும் பெயரும் இதற்கு வழங்கப் படுகிறது. புராண நம்பிக்கை அடிப்படையில், கெடிலத்தைக் கருடநதி எனவும் இந்தத் துணையாற்றைச் சேஷநதி எனவும் கொண்டு, கருடநதியும் சேஷநதியும் ஒன்று கூடுவதாகச் சொல்லப்படுகிறது. கருடனும் சேஷனும் (ஆதிசேஷன்) திருமாலுக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றதாகப் புராணக்கதை கூறுகிறதல்லவா?

பாலமும் அணையும்

இந் நீரோட்டம் ஓடை என்னும் பெயரால் அழைக்கப் படினும் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல வளர்ந்து ஒரு சிறிய ஆறு போலவே தோற்றமளிக்கிறது. திருவெண்ணெய் நல்லூரிலிருந்து களமருதூர் வழியாக உளுந்தூர்ப் பேட்டை செல்லும் மாவட்டக் குறும்பாதையில் களவனூருக்கு அருகே இந்தத் தாழனோடை ஆற்றுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாகப் பேருந்து வண்டி போக்கு வரவு இப்பொழுது நடைபெறுகிறது. தாழனோடையைக் கடக்கும் இக் குறும்பாதை கெடிலத்தையும் கடக்கிறது; ஆனால், இப் பாதையில் தாழனோடையில் பாலம் உண்டு; கெடிலத்தில் பாலம் இல்லை.

பாதூருக்கு அருகே தாழனோடை ஆற்றில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டுத் தண்ணீர் பாதூர் ஏரிக்கு அனுப்பப் படுகிறது. திருக்கோவலூர் வட்டத்தில் பாதூர் ஏரி ஒரு பெரிய ஏரியாகும். இவ்வாறாகத் தாழனோடை கெடிலம் போலவே பல ஏரிகளிலிருந்துதான் தண்ணீர் பெறுவதன்றி, தானும் ஏரி நிரப்பும் பணிபுரிகிறது.

மலட்டாறு

அடுத்து, திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் தென்பெண்ணை யாற்றிலிருந்து ஒரு சிற்றாறு பிரிந்து வந்து தென்கிழக்காக 35 கி.மீ. தொலைவு ஓடி, கடலூர் வட்டத்தில் அப்பர் பிறந்த திருவாமூருக்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் வடகரையில் அதனோடு கலக்கிறது. இந்த ஆற்றிற்கு ‘மலட்டாறு’ என்பது பெயர். மலட்டாறு கெடிலத்தோடு கலக்கிறது என்று சொல்வதினும், ஒரு பாலம்போல் பெண்ணையாற்றையும் கெடிலத்தையும் இணைக்கிறது என்று சொல்லலாம்.

இந்த மலட்டாற்றின் கதையே தனி. இதன் கரையில் தேவாரப் பாடல் பெற்ற பதிகள் மூன்று உள்ளன. இது பெண்ணையாற்றின் பழைய பாதை எனக் கருதப்படுகிறது பெண்ணையாறு தன் பழைய பாதையை மலட்டாறு என்னும் பெயரில் விட்டுவிட்டு வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை அமைத்துக்கொண்டு ஓடுகிறது. முன்பு, பெண்ணை யாற்றுப் பாதையாக இருந்தாலும் இப்போது மலட்டாறு மலட்டாறு தானே!

மலட்டாறு என்னும் பெயரிலிருந்தே அந்த ஆற்றின் வளம் புரிகிறது. மலடு என்றால் பிள்ளை பெறாத்தன்மை என்பது பொருள். இந்த ஆறு, தனக்கெனத் தனித்தன்மை ஒன்றும் இன்றி வேறொரு பெரிய ஆற்றிலிருந்து தோன்றுவதாலும், மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் பெற்று மற்ற காலங்களில் வறண்டிருப்பதாலும் மலட்டாறு என அழைக்கப்பட்டது. இது பழைய கதை. பிற்காலத்தில் பெண்ணையாற்றில் அணை கட்டப்பட்டிருப்பதால் பெண்ணையாற்றிலிருந்து ஓரளவு தண்ணீர் மலட்டாற்றிற்குக் கிடைக்கிறது. இது பெண்ணை யாற்றில் பிரிகிற இடத்திலிருந்து 16 கி.மீ. தொலைவு வரை ஓரளவு நீர் உடையதாகி 4,400 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியும் செய்கிறது. அதன் பின்னர், போதிய நீர்வளம் இன்றி வெற்று வடிகாலாக ஓடிவந்து கெடிலத்தில் இணைகிறது.

மலட்டாற்றினால் கெடிலத்தைவிடப் பெண்யைாற்றுக்கே நன்மை மிகுதி. மலட்டாற்றினால் கெடிலத்திற்கு நன்மையை விடத் தீமையே மிகுதி எனலாம். பெண்ணையாற்றிலிருந்து மலட்டாற்றின் வாயிலாகக் கெடிலத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீராவது கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெள்ளக் காலத்தில் பெண்ணையாற்றின் அரக்க வெள்ளத்திற்கு ஒரு போக்குக் காட்டும் முறையிலேயே மலட்டாறு அமைந்துள்ளது. பெண்ணையாற்று வெள்ளத்தின் ஒரு பகுதி மலட்டாற்றில் திரும்பிவிடுவதால் அதன் வேகம் தணிய, அதன் கரையிலுள்ள பகுதிகள் ஓரளவு தப்புகின்றன. அதே நேரத்தில் அந்த அரக்க வெள்ளம் மலட்டாற்றின் வழியாகக் கெடிலத்தில் பாய்வதால் கெடிலக்கரைப் பகுதிகள் கேடுறுகின்றன.

வெள்ளக் காலத்தில் மட்டும் பெண்ணையாற்றிலிருந்து கெடிலத்திற்குக் கிடைக்கும் இந்த நீர்க்கொடை, மிகவும் வயிறு நிரம்பிவிட்ட ஒருவரது வாயில் மேலும் வலிந்து திணிக்கப்பட்ட உணவுப் பொருள் போன்றதாகும். பெண்ணையாறு தன்னால் தாங்க முடியாத சுமையின் ஒரு பகுதியைக் கழித்துக் கெடிலத்தின் தலையில் கட்டிவிடுகிறது என்றும் கூறலாம். பெண்ணைக்கும் கெடிலத்திற்கும் இடையே இந்த வேலையைச் செய்யும் தூதுவன்தான் மலட்டாறு. பெண்ணையாற்றின் வேகத்தைத் தடுப்பதற்காக இடையாறு என்னும் இடத்தில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புக்கரை போன்ற சிறு அணையை உடைத்துக்கொண்டு அரக்க வெள்ளம் ஓடி வந்து கெடிலத்தை ஒரு கை பார்த்து விட்டதுண்டு. அந்தோ, அதற்குமேல் மலட்டாறுதான் என்ன செய்யும்! எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கெடிலமோ, பெண்ணையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் எளிய இரவலனாக இல்லாமல் தலைக்குமேல் தனக்குத் துன்பம் உள்ள போதும், பெண்ணையாற்றின் துன்பத்திலும் பங்கு கொள்ளும் பெருந்தகையாளனாகக் காட்சியளிக்கிறது. கெடிலத்திற்கு இப்படியொரு பெருமையைத் தேடித்தந்த பெருமை மலட்டாற்றிற்கு உரியது; அதனால், மலட்டாற்றையும் பாராட்ட வேண்டியதுதான்.

பாலமும் அணையும்

மலட்டாறுதானே என்று இதை எளிதாய்ப் புறக்கணித்து விடுவதற்கில்லை. வெறும் தரைப் பாலம் அமைத்து இதை ஏமாற்றிவிட முடியாது. கடுமழை பெய்யும் காலத்தில் இதில் பெருவெள்ளம் ஓடுவதால் இதைக் கடப்பதற்குப் பெரிய பாலம் வேண்டியுள்ளது. கடலூரிலிருந்து பண்ணுருட்டி - திருவெண்ணெய் நல்லூர் வழியாகத் திருக்கோவலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பண்ணுருட்டிக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் மேல் உயரமான அழகிய பாலம் ஒன்று கட்டப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவெண்ணெய் நல்லூர் (ரோடு ) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 11 கி.மீ. தொலைவில். திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் இடையாறு என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில் மலட்டாற்றில் ஒருசிறு அணை கட்டப்பட்டுள்ளது. இடையாறு அணை என்று இது அழைக்கப்படுகிறது. இப்படியாக மலட்டாறும் ஆற்றிற்குரிய இலக்கணங்களுள் பலவற்றைப் பெற்றுப் பயனளிக்கிறது.

விருத்த பினாகினி

மலட்டாறு என்றதும் ஒரு சிலருக்குக் குழப்பம் ஏற்படலாம். ஏனெனில், மலட்டாறு என்னும் பெயரில் மற்றும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறும் பெண்ணையாற்றிலிருந்துதான் பிரிகிறது. ஆனால், இது கடலோடு சென்று கலக்கிறது. இந்த மலட்டாற்றைப் பற்றி மட்டும் தெரிந்து வைத்து, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றைப் பற்றி அறியாதவர்கள் குழப்பம் அடையத்தானே நேரும்! கெடிலத்தோடு கலக்கும் மலட்டாறு திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை என்னும் ஊருக்கருகில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து பிரிந்து திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்து விடுகிறது. கடலோடு கலக்கும் மலட்டாறு, பெண்ணையாறு திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்ததும், சிறிது தொலைவிலேயே விழுப்புரம் வட்டத்தில் அப் பெண்ணையாற்றின் இடப்பக்கத்திலிருந்து பிரிந்து, விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம் முன்னாள் பிரஞ்சிந்தியாவாகிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சிறுசிறு திட்டுப் பகுதிகள் ஆகியவற்றின் வழியாக ஓடி, கடலூருக்கு வடக்கே சில கல் தொலைவில் மதலப்பட்.டு என்னும் ஊருக்கு அருகில் கடலோடு கலக்கிறது. இந்த மலட்டாற்றுக்கு ‘விருத்த பினாகினி’ என்றும் ஒரு விருதுப் பெயர் உண்டு. பினாகினி என்றால் பெண்ணையாறு. அதிலிருந்து பிரியும் மலட்டாறு விருத்த பினாகினி எனப்படுகிறது. எனவே, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றை விருத்த பினாகினியினின்றும் வேறு பிரித்துணர வேண்டும்.

துணைக் கால்வாய்கள்

இப்படியாகக் கெடிலத்தோடு இரண்டு துணையாறுகள் கலப்பதன்றி, இடையிடையே கால்வாய்கள் பலவும் வந்து கலக்கின்றன. திருக்கோவலூர் வட்டத்தில் சீக்கம்பட்டு, தாமல் முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து, புத்தனேந்தல் அணைக்கு மேற்கே கெடிலத்தின் தென்கரையில் கலக்கிறது. அடுத்து, பெரும்பாக்கம் ஏரியிலிருந்து கழிவாக வரும் ‘மல்லிகா ஓடை’ என்னும் கால்வாய் அந்தப் பகுதிக்கு அண்மையில் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. அதனை யடுத்துக் கிழக்கே, பரிக்கல் ஏரியிலிருந்துவரும் ‘மாறனோடைக் கால்வாய்’ வடகரையில் கலக்கிறது. அதற்கும் கிழக்கே, திருநாவலூர் ஏரிப் பக்கத்திலிருந்து திருநாவலூர்ச் சிவன் கோயிலின் மேற்கு மதிலையொட்டி வரும் ‘நாவலோடை’ என்னும் திருநாவலூர்க் கால்வாய் அவ்வூர்க்கருகில் வடகரையில் கலக்கிறது. அதற்கும் சில கி.மீ. கிழக்கே, அதாவது, திருவாமூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘இராகவன் வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் கெடிலத்துடன் வடகரையில் கலக்கிறது. இந்த இராகவன் வாய்க்கால், திருக்கோவலூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றிலிருந்து பிரிந்து வழியிலுள்ள பல ஊர்களின் ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிக்கொண்டு இங்கே வந்து கெடிலத்தோடு கலக்கிறது. மலட்டாற்றினாலன்றி, இந்த இராகவன் வாய்க்காலாலும் பெண்ணையாற்றிற்கும் கெடிலத்திற்கும் தொடர்புள்ளமையை அறியலாம்.

அடுத்தபடியாக, திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் வந்து கலக்கும் ‘நரியன் ஓடை’ என்னும் கால்வாய் மிகவும் இன்றியமையாதது. கெடிலத்துடன் கலக்கும் கால்வாய்களுக்குள் இதனை மிகப் பெரியது எனலாம். கூட்டடி, ஆரியநத்தம், பாலக்கொல்லை முதலிய பல ஊர்ப் பக்கங்களிலிருந்து வரும் தண்ணீர் இந்த ஓடையாக உருவாகிறது. ஒரு சிற்றாறு போன்ற இந்தப் பெரிய ஓடையில் வெள்ளம் போகும் போது ஆண்டுதோறும் ஒரு சிலராவது அகப்பட்டு இறந்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து, கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கே சேமக்கோட்டை, இலந்தைமேடு முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து வரும் ‘இலந்தை மேட்டான் ஓடை’ என்னும் கால்வாய் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. மற்றும், திருவதிகைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் ஆண்டிக்குப்பம் என்னும் இடத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து திருவதிகைக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் கூடுகிறது.

அதற்கும் கிழக்கே - அதாவது கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் ‘நடுவீரப்பட்டு வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் வந்து கெடிலத்தின் தென்கரையில் சேர்கிறது. இது சேருமிடத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு மலைப்பாங்கில் ‘தேவமேடு’ என்னும் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதிலிருந்து இந்தக் கால்வாய் தோன்றி, நடுவீரப்பட்டுக்கும் சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்கும் நடுவாக ஓடிவந்து அவ்வூர்கட்கருகில் கெடிலத்துடன் கூடுகிறது. இந்த நீரோட்டம் என்றும் வற்றுவதேயில்லை. பெருமழை பெய்யும்போது இதில் ஓடும் முழங்கால் அளவு தண்ணீரில்கூட யாரும் நடந்து கடந்து செல்ல முடியாது. மீறி நடந்தால், நடந்தவரை உருட்டிப் புரட்டியடித்து இழுத்துக் கொண்டு சென்று விடும். அவ்வளவு விரைந்து ஓடக்கூடியது இந்தக் கால்வாய். இது, தன்னைக் கடப்பதற்காக இரு கரைகளிலும் காத்திருப்பவர்களின் பொறுமையைச் சிறிது நேரம் பதம்பார்த்துவிட்டு உடனே அடங்கி விடும். அதாவது, மழை விட்டதும் கால்வாய்நீரும் அதன் வேகமும் மிகமிகக் குறைந்து விடும். மழையில்லாத கோடையில்கூட இக்கால்வாயில் சிறிதளவாவது இனிய தெளிவான ஊற்று நீர் ஓடிக்கொண்டிருப்பது, இந்தக் கால்வாய்க்கு மட்டுமின்றி, இதைக் கப்பமாகப் பெற்றுக்கொள்கின்ற கெடிலத்திற்கும் ஒரு பெருமையே.

இப்படியாக இன்னும் பல கால்வாய்கள் ஆங்காங்கே கெடிலத்தோடு வந்து சேர்கின்றன. துணைக்கால்வாய்கள் வந்து சேர்வது போலவே கிளைக்கால்வாய்களும் அணைகளிலிருந்து பிரிந்து பாசனத்திற்குப் பயன்படுகின்றன, தான் பெறுஞ்செல்வங்களைப் பிறர்க்கு வாரி வாரி வழங்கிவிட வேண்டுமல்லவா? அணைகள் உள்ள இடங்களில் அணைகளின் மேல்புறத்திலிருந்து கால்வாய்கள் பிரிவதன்றி, அணை இல்லாத சில இடங்களிலும் ஆற்றிலிருந்து கால்வாய்கள் பிரிக்கப்பட்டுப் பாசன வசதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘தாழனோடை’ அல்லது ‘சேஷநதி’ என்று சொல்லப்படும் துணையாறு கெடிலத்தோடு கலக்கும் இடத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ‘சேந்தமங்கலத்தான் ஓடை’ என்னும் பெயரில் ஒரு கால்வாய் பிரிந்து, சேந்தமங்கலம், அதற்கும் தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள சேந்த நாடு முதலிய ஊர்களில் சென்று பாய்கிறது.

மையனூர் ஏரியிலிருந்து தோன்றுகிற கெடிலம் - வழியில் பல ஏரிகளிலிருந்து தோன்றும் துணைக் கால்வாய்களைப் பெற்று வரும் கெடிலம், தானும் தன் கிளைக்கால்வாய்களின் வழியாகச் சில ஏரிகளை நிரப்புகிறது. எடுத்துக் காட்டாக, கடலூர் நகராட்சியின் தென்மேற்கு மூலையில் - புருகேசுபேட்டை என்னும் ஊர் எல்லையில் - கேப்பர் மலையின் அடியில் உள்ள ‘கொண்டங்கி’ என்னும் ஏரி கெடிலத்தின் கிளைக்கால்வாயால் நிரப்பப்படுகிறது, மூன்று பக்கம் மலை சூழ்ந்த இந்த ஏரிக்கரையில் நின்று மெல்லிய காற்றுடன் இயற்கைக் காட்சிகளை நுகர்வது கண்ணுக்குத் தெவிட்டாத பெருவிருந்து!

இப்படியாகக் கெடிலம், தன் பயணத்திடையே போக்கும் வரவும் புணர்வும் உடையதாய்த் திகழ்கிறது.


  1. அப்பர் தேவாரம் - திருவதிகைப் பத்தாம் பதிகம் - 11.
  2. அப்பர் தேவாரம் - திருவதிகைப் பதினோராம் பதிகம் - 7.