கெடிலக் கரை நாகரிகம்/பக்கத்து வீட்டுப் பணக்காரி
கெடிலத்தாளின் பக்கத்து விட்டில் ஒரு பணக்காரி இருக்கிறாள். இந்தப் பணக்காரி கெடிலத்தாளைவிட ஒரு சிறிது கூடுதலாக விளம்பரம் பெற்றுள்ளாள். அதற்குக் காரணம், அவள் கெடிலத்தாளினும் கூடுதலான உயரமும் பருமனும் உடையவளாயிருப்பதே. அவளுடைய செல்வம் என்பது இந்த உயரமும் பருமனுந்தான். பணக்காரியாகிய அவள் பக்கத்திலிருப்பதால், சில நேரங்களில் சிலர் கண்களுக்குக் கெடிலத்தாள் தென்படாமல் போய்விடுகிறாள். ‘பணக்காரரைச் சுற்றிப் பத்துப்பேர் இருப்பார்கள்’ என்பது பழமொழி யாயிற்றே! இதனால், திருமுனைப் பாடி நாட்டைப் புகழத் தொடங்கிய புலவர்களுள் சிலர் அந்தப் பணக்காரியின் பக்கமே பார்வையைச் செலுத்தியுள்ளார்கள். சங்க இலக்கியங்களில் கூட அப் பணக்காரிதான் இடம் பெற்றுள்ளாள். இருப்பினும், சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்ட பெரிய இலக்கியங்கள் பலவற்றில், தனது உயர்ந்த தன்மையாலும் வன்மையாலும் கெடிலத்தாளும் பரவலாக இடம்பெற்றுப் பாராட்டப்பட்டுள்ளாள்.
கெடிலத்தாளின் பக்கத்து வீட்டுப் பணக்காரியின் பெயர் தென்பெண்ணையாறு என்பது. மக்கள் இதனைப் பெண்ணையாறு என்றே அழைப்பர். இந்தத் தென்பெண்ணை, மைசூர் மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் நந்திதுர்க்கத்திற்கு வடகிழக்கே சன்னராயன் ப்ெட்டாவில் தோன்றுகிறது; கோலார் மாவட்டத்திலிருந்து வந்து பெங்களுர் மாவட்டம் வழியாகத் தமிழ் மாநிலத்தில் சேலம் மாவட்டத்திற்குள் புகுகிறது. பின் அம்மாவட்டத்தைக் கடந்து வடார்க்காடு மாவட்டத்தின் தென்மேற்கு மூலையில் புகுந்து செங்கம், திருவண்ணாமலை வட்டங்களின் வழியாக வந்து தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டித் திருக் கோவலூர் வட்டத்தில் புகுகிறது; திருக்கோவலூர் - விழுப்புரம் - கடலூர் ஆகிய வட்டங்களின் வழியே சென்று கடலூருக்கு வடக்கே 4. கி.மீ. தொலைவில் வங்காளக் குடாக்கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றின் நீளம் 400 கி.மீ. (250 மைல்) ஆகும்.
கெடிலமும் பெண்ணையும் திருக்கோவலூரிலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கடலூருக்கு அருகில் கெடிலத்திற்கும் பெண்ணையாற்றுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒன்றரை கி.மீ தொலைவுதான். இதனால்தான், பெண்ணையாறு கெடிலத்தின் பக்கத்து வீட்டுப் பணக்காரி என இங்கே உருவகம் செய்யப்பட்டது.
பெண்ணையாறு கெடிலத்தினும் நீளமும் அகலமும் உடைமையானும், மலையமான் மரபு மன்னர்களின் தலைநகராய்ச் சங்க காலத்தில் விளங்கிய திருக்கோவலுரை ஒட்டி ஒடுவதாலும் சங்கநூல்களில் பெண்ணையாறு இடம்பெற்றுள்ளது. அகநானூற்றிலுள்ள
- "துஞ்சா முழவின் கோவல் கோமான்
- நெந்தேர்க் காரி கொடுங்கான் மூன்றுறைப்
- பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்."
என்னும் (35) பாடல் பகுதியிலும், புறநானூற்றிலுள்ள
- "நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
- பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே"
என்னும் (126) பாடல் பகுதியிலும் பெண்ணையாற்றைக் கண்டு கண் குளிரலாம். சங்ககாலத்திற்குப் பின்னும் தேவாரம், பெரியபுராணம் முதலிய பல்வேறு இலக்கியங்களிலும் பெண்ணையின் பெருமை பெரிதும் பேசப்பட்டுள்ளது. கெடிலம் போலவே பெண்ணைக்கும் தெய்வநெறிப் பெருமை உண்டு.
சங்க காலத்தில் மலாடு எனப் பெயர் பெற்றிருந்த திருமுனைப்பாடி நாட்டை, திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். அம் மரபினருள் சிறந்தவன் திருமுடிக்காரி. அவனைப் புகழ்ந்து பாடிய சங்கப் புலவர்கள் சிலர் கோவலூரையும் பெண்ணையாற்றையுங் கூடப் புகழ்ந்துள்ளனர். ஆனால் கெடிலத்தைப் பற்றிச் சங்கப் புலவர் எவரும் பாடவில்லை. காரணம்: பெண்ணையாறு பெரியதாய்த் திருக்கோவலூருக்கு அருகிலேயே ஒடுவதும், கெடிலம் சிறியதாய்த் திருக்கோவலூருக்குத் தெற்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவில் ஒடுவதும் ஆகும். அவ்விடத்திற்கு மேற்கே சில கல் தொலைவிலிருந்துதான் கெடிலம் தோன்றி வருகிறது. ஆதலின், அவ்விடத்தில் அது சிறியதாய்த்தானே இருக்க முடியும்? மற்றும், பக்கத்தில் பெரிய பெண்ணையாறு இருப்பதால் இதன் பெருமை அங்கே அடிபட்டுப் போயிற்று.
இருப்பினும், கெடிலம் திருக்கோவலூருக்கு மிக அண்மையில் சில கல் தொலைவிற்குள்ளேயே ஒடுவதாலும், அங்கே தன் குறுக்கே கட்டப்பட்டுள்ள புத்தனேந்தல் அணையின் வாயிலாகத் திருக்கோவலூர்ப் பகுதியை வளப்படுத்துவதாலும், திருக்கோவலூரின் பெருமைகள் அனைத்திலும் பெண்ணையாற்றைப் போலவே கெடிலத்திற்கும் பங்கு உண்டு. இந்த இரண்டு ஆறுகளும் பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால், கெடிலக்கரை நாகரிகத்தைப் பெண்ணைக்கரை நாகரிகமாகவும் பெண்ணைக்கரை நாகரிகத்தைக் கெடிலக் கரை நாகரிகமாகவும் கொள்வதால் தவறொன்றுமில்லை.
ஒரு கல்வெட்டு கெடிலத்தையும் பெண்ணையையும் இணைத்து முடிச்சு போட்டுள்ளது. திருக்கோவலூர் - கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் 1446 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட விசயராய மகாராயரது கல்வெட்டின் இறுதியில், இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார் எழுத்து’ என்னும் கையெழுத்துத் தொடர் உள்ளது. இங்கே இரண்டாறு எனச் சுட்டப்பட்டிருப்பவை கெடிலமும் பெண்ணையுமே. இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார்’ என்றால், இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் உள்ள பகுதியில் வாழ்பவர்கள் என்பது பொருள். இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி என்பார்கள்; இவர்களை இரண்டு ஆற்றில் ஊட்டின குட்டிகள் என்று சொல்லலாம்.
கெடிலமும் பெண்ணையும் தனித்தனி ஆறுகளாய்த் தத்தம் போக்கில் சென்று தனித்தனியே கடலில் கலக்கினும், இடையில் ஒரு பகுதியில் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. திருக்கோவலூருக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து மலட்டாறு என்னும் ஒரு சிற்றாறு பிரிந்து திருக்கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து அப்பர் பிறந்த திருவாமுருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது. இந்த வகையில் கெடிலமும் பெண்ணையும் உடல் தொடர்புடைய உறவினர் போல் நெருக்கம் உடையனவாயுள்ளன. இந்தக் கூட்டுறவால் பெண்ணைக்குப் பெருமையில்லை - கெடிலத்திற்கே பெருமை! ஆம் பெண்ணையின் பகுதி ஒரு துணையாறாகிக் கெடிலத்தோடு கலப்பதால் கெடிலத்திற்கே பெருமை!
உருவினால் பெரியவள் என்றாலும் பெண்ணைக்காரி வந்தவள், கெடிலக்காரியோ, பிறந்தவள். திருக்கோவலூர் ஒன்றினால் மட்டும் பெண்ணைக்காரி சிறந்தவள்; பல ஊர்களால் கெடிலக்காரி சிறந்தவள். நீர்ப்பாசனச் சிறப்போடு பெண்ணைக்காரி நின்று விடுகிறாள்; கெடிலக் காரியோ, நீர்ப்பாசனத்துடன், தன் கரையில் பெரியார்கள் பிறந்தமை, தொழில் துறை, வாணிகம், துறைமுகம் முதலிய பல்வேறு சிறப்புகளுடனும் பொலிந்து திகழ்கிறாள். சமயத்துறையிலும் பெண்ணைக்காரியினும் கெடிலத்தாளே பெரியவள்; அப்படியிருந்தும் ‘பெத்த பேர்’ பெண்ணைக்கே.