உள்ளடக்கத்துக்குச் செல்

கேரக்டர்/‘அக்கப்போர்’ சொக்கப்பன்

விக்கிமூலம் இலிருந்து


அக்கப்போர் சொக்கப்பன்

"சார்,சார்" என்று கையைத் தட்டிக் குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.

காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராயிருந்தாலும், எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், எந்த இடமாயிருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டை வெடித்து விடும்.

"சார்! உங்களுக்குத் தெரியாதா சமாசாரம்? இப்படி எங்கே போகிறீர்கள்?" என்று கேட்பான்.

"ராயப்பேட்டைக்கு!" என்பார் அவர்.

"பாவம், உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது போலிருக்கு. அந்தப் பக்கம் போகாதீங்க, சார்; கல்லடிபட்டுச் செத்துப்போவீங்க?" என்பான்.

"கல்லடியா? ஏன்? எதுக்கு? என்னை எதுக்கு அடிக்கிறாங்க?" என்று அலறுவார் அந்த ஆசாமி. "அரசியல் கட்சி இரண்டு அந்தப் பக்கம் ஊர்வலமாப் போறப்போ இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டுப் பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! ரோடு போடறதுக்காக அங்கே கொட்டி

யிருந்த ஜல்லிக் கல்லெல்லாம் தீர்ந்து போயிட்டுது. அத்தோடாவது சண்டையை நிறுத்தினாங்களா? இரண்டு கட்சிங்களும் சண்டை போடறதுக்காக ஜல்லிக் கல் கொட்டியிருக்கும் பக்கமாவே போயிகிட்டிருக்காங்க. இதுவரைக்கும் முந்நூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடிப்பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாமல், ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேறே தூக்கிட்டு போறாங்க, சார்! ராயப்பேட்டை ரோடு முழுதும் 'ஜே ஜே' என்று கூட்டம். இதுக்காகப் போலீசார் வேறே அந்தப் பக்கமா யாரையும் விடறதில்லை.நான் இப்போ அங்கிருந்துதான் சார் வாரன்' என்று பயங்கரமாக ஒரு செய்தியை அவிழ்த்துவிடுவான்.

ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால் அங்கே சண்டையும் இருக்காது. மண்டையும் உடைந்திருக்காது. இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவுதான்; சொக்கப்பன் அதையே அரசியல் கட்சிச் சண்டையாக மாற்றிப் பிரமாதமாக வர்ணித்து விட்டிருப்பான்.

திடீரென்று ஓடி வந்து, "புழலேரி உடைத்துக்கொண்டு விட்டது. மவுண்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்துக்கொண்டிருக்கிறது" என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுண்ட் ரோடே அல்லோல கல்லோலப்படும். அடுத்தாற்போல் மயிலாப்பூருக்குப் போய், "வெள்ளத்தில் மவுண்ட்ரோடு பூராவும் முழுகிவிட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது" என்பான்.

அங்கிருந்து இன்னோர் இடத்துக்குப் போவான். அங்கே யாராவது குப்பை மேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள், அதைக் கண்டுவிட்டுத் தெரிந்தவகளிடமெல்லாம் ஓடிப்போய், "சார்; பழைய மாம்பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது, சார். பெரிய தீ விபத்து

ஒரு டஜன் பயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக்கிட்டிருக்குது. ஆனா இன்னும் தீ அடங்கின பாடில்லே" என்பான்.

அங்கிருந்து சீட்டாடும் கிளப்புக்குப் போய், மதுரையில் அனிதா போஸைப் பார்க்க, சுபாஷ்சந்திர போஸ் வந்திருப்ப தாக ஒரு 'டூப்' விடுவான்.

"நீ நேரில் பார்த்தாயா?" என்று கேட்டால், "பார்த்தேனா? அவரோடு பேசினேன். முத்துராமலிங்கத் தேவர்கூட என் அருகில் இருந்தாரே!" என்பான்.

  • சுபாஷ் போஸ் என்ன சொன்னார்?" என்று கேட்டால் 'இனி இந்தியாவிலேயே தங்கிவிடப் போவதாகவும் சுதந்திரா பார்ட்டியில் சேர்ந்துவிடப் போவதாகவும், சொன்னார்' என்பான். அப்புறம் நாலைந்து நாளைக்கு சொக்கப்பனே கண்ணில் தென்பட மாட்டான். சுபாஷ்போஸ் மறைந்தது போல் அவனும் எங்காவது மறைந்து விடுவான்!

அவன் திரும்பி வந்தபிறகு, "சொக்கப்பா! எங்கே உன்னைக் கொஞ்சநாளாகக் காணோம்? எந்த ஊருக்குப் போயிருந்தாய்?" என்று கேட்டால், "பங்களூருக்குப் போயிருந்தேன். உங்களுக்குத் தெரியாதா சமாசாரம்?" என்று கேட்டு விட்டு நம் காதோடு ஏதோ ரகசியத்தைச் சொல்ல வருவான்.

"பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு எனக்கு ஒரு ஸீக்ரெட் இன்பர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கியிலிருந்த என் பணம் பூரவையும் திருப்பி வாங்கிண்டு ராத்திரியோடு ராத்திரியா கார்லேயே திரும்பி வந்துட்டேன். அப்புறம் கேளுங்கோ. கையிலேயோ பத்தாயிரம் ரூபா காஷ்! கார் சித்தூரைத் தாண்டி நடுக்காட்டிலே வந்துகிட்டிருக்குது. நல்ல இருட்டு! நான் ஒண்டி ஆள். திடீர்னு ஏழெட்டு ஆசாமிங்க கம்பும் கழியுமா காருக்குக் குறுக்கே வந்து. வழிமறிச்சுட்டாங்களே, பாாக்கலாம். எனக்கு எப்படி, இருக்கும்? காரெல்லாம் சோதனை போட்டாங்க. கடைசியிலே பணப்பையை எடுத்துப் பார்த்துட்டு,

'சரி; போகலாம்'னாங்க. யாருடான்னு விசாரிச்சா புரொகிபிஷன் செக்கிங் போலீஸ் மப்டியிலே வந்திருக்கோம்னு சொல்றாங்க" என்பான்.

கடைசியில் ஒன்றுமே நடந்திருக்காது. அவ்வளவும் கனவிலே கண்டிருப்பான். காலையிலே பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு அவற்றுக்குக் காது மூக்கு வைத்துப் பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலுபேரிடத்தில் சொல்லாவிட்டால் அவனுக்கு நிம்மதி ஏற்படாது.

யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்கெல்லாம் போய், "சார் துரைசாமி இன்னிக்கு நடு ரோடிலே நாலாயிரம் ரூபாயைத் தொலைச்சுட்டான். சார்!" என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய்ச் சொல்லும்போது நாற்பதாயிரம் என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது அதுவே நாலு லட்சமாகிவிடும்!

உலகமே பிரளயத்தில் மூழ்கிவிடப் போவதாகப் போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிப்பட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்.