உள்ளடக்கத்துக்குச் செல்

கேள்வி நேரம்/9

விக்கிமூலம் இலிருந்து

 இடம் கோனாபட்டு,

புதுக்கோட்டை மாவட்டம்

கேள்வி கேட்பவர் : பால நடராஜன்

பங்கு கொள்வோர் :

சி. பத்மஜா, ம. இராஜலெட்சுமி, கி. சுப்பிரமணியன்

பால நடராஜன்: நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு தந்தையும் மகனும் ஒரே நாளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் யார், யார் என்று தெரியுமா?

பத்மஜா: நேரு மாமாவும் அவரது தந்தை பண்டித மோதிலால் நேருவும்.

பால: அடே, பத்மஜா சரியாகக் கூறி விட்டாளே! 6.12-1921ல் இரு வரையும் ஆங்கிலேயர் கைது செய்தார்கள். சரி, நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்களே, அவை யாவை ?

சுப்பிரமணியன் : ரிக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம்.

பால: சரியாகச் சொன்னாய்...நம்; நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் முதலாகச் சிறை சென்ற பெண்மணி யார்?

இராஜலெட்சுமி : சரோஜினி தேவி.

பால ரொம்ப சரி. உலகிலுள்ள பறவைகளிலே மிகப் பெரியது எது?

பத்ம : வான்கோழிதானே?

பால : இல்லை.

சுப்பிர : நெருப்புக்கோழி.

பால: சரியான விடை. அது இரண்டரை மீட்டர் உயரம் இருக்கும். எடையும் ஏறத்தாழ 130 கிலோ கிராம் இருக்கும்... தாஜ்மஹாலைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அதைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின. என்பது தெரியுமா?

மூவரும் (மெளனம்).

பால: என்ன, யாருக்குமே தெரியாதா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். 21 ஆண்டுகள் ஆயின. 1632ல் ஆரம்பித்தது...நவரத்தினங் கள் என்கிறோமே, அவைகளின் பெயர்களைக் கூற முடியுமா?

பத்ம: வைரம், நீலம், மாணிக்கம், புஷ்பராகம்... அப்புறம்...அப்புறம்.

இராஜ : ம ர க த ம், கோமேதகம், முத்து, வைடுரியம்.

பால: ஆக மொத்தம் எட்டுத்தானே சொன்னிர் கள்? இன்னொன்று...?

சுப்பிர: பவளம்.

பால : உம், மூவரும் சேர்ந்து கூறிவிட்டீர்கள். பம்பாய் மாநிலத்தில் பிறந்த பெரிய தேசத் தலைவர் ஒருவர் கணபதி விழா, சிவாஜிநாள் போன்ற விழாக்களை மிகுந்த ஆர்வத்துடன் நடத்தி வந்தார். அவர் யார் என்று தெரியுமா?

எல்லாரும் ; (மெளனம்)

ஒரு குறிப்புத் தருகிறேன். அவர் பர்மாவிலுள்ள மாண்டலேச் சிறையில் இருந்த போது கீதா ரகசியம்' என்ற நூலை எழுதினார்.

பத்ம : தெரிகிறது, தெரிகிறது. அவர்தான் பாலகங்காதர திலகர்.

பால: சரியாகச் சொன்னாய். நம் தேசத்தில் உள்ள மாநிலங்களிலேயே மிகப் பெரியது எது ?

சுப்பிர : உத்தரப் பிரதேசம்.

பால : தவறு.

இராஜ : மத்தியப் பிரதேசம்தான் மிகப் பெரியது.

பால: இராஜலெட்சுமி சொன்னதுதான் சரி... பெரும்பாலான தமிழ் மருந்துகளில் மூன்று பொருள்களைச் சேர்ப்பார்கள். அவற்றில் ஒன்று மிளகு. மற்றவை:

சுப்பிர: சுக்கு, மிளகு, திப்பிலி என்பார்களே!

பால: ஆமாம், அந்த மூன்றும்தான்.பூட்ஸ் போல வடிவம் உள்ள ஒரு நாடு இருக்கிறது. அது எந்த நாடு?

பத்ம: இத்தாலி .

பால: பத்மஜா, சரியாகச் சொல்லிவிட்டாய்.

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தம் ஒன்று வருகுது'

என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

சுப்பிர: நாமக்கல் கவிஞர்.

பால: சரி, அவருடைய முழுப் பெயர்?

சுப்பிர : நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை.

பால: அதுவும் சரி. இப்போது கோடைக் காலம். எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சோடாக் கலர்களாக இருக்கின்றன. இந்தச் சோடா பானத்தை முதல் முதலில் தயாரித்தவர் யார், தெரியுமா?

இராஜ: ஐசக் நியூட்டன்

பால: இல்லை. பத்மஜா, சுப்பிரமணியம், உங்களால் கூற முடியுமா?

பத்ம, சுப்பிர : தெரியவில்லையே!

பால: சரி, நானே சொல்லிவிடுகிறேன். ஜோசப் பிரீஸ்ட்லி என்ற இங்கிலாந்துக்காரர்தான் முதன் முதலில் சோடா பானத்தைத் தயாரித்தவர்...முதல் முதலில் மோட்டார் கார்களைப் பெரும் அளவிலும், குறைந்த செலவிலும் தயாரித்தவர் யார்?

பத்ம : ஹென்றி ஃபோர்டு.

பால: பத்மஜா சொன்னது சரியான விடை. அந்த ஹென்றி ஃபோர்டு, ஃபோர்டு ஃபோர்டு நிறுவனம் (Ford Foundation)என்ற அறநிலையம் ஒன்றை ஏற்படுத்தினார். அந்த அறநிலைய உதவியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென் மொழிகளிலும் நல்ல புத்தகங்களை வெளியிட, சென்னையிலே ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் தெரியுமா?

பத்ம : எனக்குத் தெரியும். அந்த நிறுவனம் வெளியிட்ட பறக்கும் பாப்பா' என்ற புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அதன் பெயர் தென்மொழிப் புத்தக நிறுவனம் .

பால: ஆம். Southern Languages Book Trust என்பது அதன் ஆங்கிலப் பெயர். கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலமும், விளையாடித் திரிந்த பிருந்தாவனமும் எங்கே இருக்கின்றன?

சுப்பிர : கிண்டியில்.

(மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)

இராஜ : மதுராவில் இருக்கின்றன.

பால: சரியான விடை...உத்தரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் உள்ளது மதுரா"

3085–7

என்ற நகரம். அதை 'வட மதுரை' என்றும் அழைப்பார்கள்.......தமிழ் டிக்க்ஷனரியை அதாவது, அகராதியை முதல் முதலில் தயாரித்தவர் யார் என்று தெரியுமா?

இராஜ: தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர்.

பால: இல்லை.

சுப்பிர : பரமார்த்த குரு என்ற வேடிக்கைக் கதையை எழுதினாரே, அவர் பெயர்.... தொண்டை வரை வந்துவிட்டது....

பால : உம், சீக்கிரம் வாய்க்கு வரவழை,

சுப்பிர: இதோ வரவழைத்து விட்டேன். வீரமா முனிவர்.

பால : சுப்பிரமணியா, சரியாகச் சொன்னாய். இத்தாலி நாட்டைச் சேர்ந்த அவர் தயாரித்த சதுரகராதிதான், பிறகு வெளிவந்த தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடி ... இது வரை உலகிலேயே மிகப் பெரிய பரிசான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர்கள் யார், யார்?

பத்ம : இரவீந்திரநாத தாகூர், சர் சி.வி. ராமன்.

பால : இன்னும் இருவர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் ?

சுப்பிர : எஸ். சந்திரசேகர்...

பால: சந்திரசேகருக்கு முன்பு நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ஹரிகோவிந்த் கொரானா. சரி...

...பாம்புகளிலே சிலவற்றுக்கு விஷம் உண்டு. ஆனால், பல பாம்புகளுக்கு விஷம் இல்லை. விஷம் இல்லாத பாம்புகளில் நான்கைச் சொல்ல முடியுமா?

இராஜ : தண்ணிர்ப் பாம்பு, பச்சைப் பாம்பு.

சுப்பிர: கட்டுவிரியன்.

பால : ஐயோ, அது பொல்லாத விஷப் பாம்பு! கேட்டது விஷம் இல்லாத பாம்புகளை. இராஜலெட்சுமி இரண்டு பாம்புகளின் பெயர் களைச் சரியாகச் சொன்னாள். இன்னும் இரண்டு?

பத்ம: சாரைப் பாம்பு...மலைப் பாம்பு.

பால : ரொம்ப கரெக்ட் ... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாருக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?

சுப்பிர : கனக சுப்புரத்தினம்.

பால: சரியான விடை......'அம்பர்' என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து கிடைக்கிறது?

இராஜ : ஒருவித மரத்திலிருந்து.

பால : இல்லை.

சுப்பிர : பூக்களிலிருந்து.

பால: தவறு

பத்ம: தெரியவில்லை

பால: நானே சொல்லிவிடுகிறேன். திமிங்கிலத்தின் குடலிலிருந்துதான் அம்பர் எடுக்கப் படுகிறது...சரி, சுங்க வரி' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?

இராஜ: வெளி நாடுகளிலிருந்து டி. வி., டிரான் சிஸ்டர், கடிகாரம், காமிரா-இப்படிச் சில பொருள்களைக் கொண்டு வரும்போது, அவற்றிற்கு வரி விதிக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் சுங்க வரி.

பால : இராஜலெட்சுமி, நீ சொன்னது ஓரளவு சரிதான். ஆனால், வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் சில பொருள்களுக்கு மட்டுமல்ல; நம் நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில பொருள் களுக்கும் வரி விதிக்கிறார்கள். அதுவும் சுங்க வரிதான் ... பெரிய கோயில்களில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களைப் பார்த் திருப்பீாகள். அவர்களில் பெண்கள் யார் யார் தெரியுமா?

பத்ம : காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார்.

பால : இன்னும் ஒருவர் உண்டு. அவர் பெயர் இசை ஞானியார்...கடைசியாக ஒரு கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒர் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருந்தார். அதில் ஒரு பகுதியைக் கூறுகிறேன் :

‘தீபாவளிக்கு முதல் நாள் இரவு, செல்வம் மொட்டை மாடியில் நின்று கம்பி மத்தாப்புக் கொளுத்தினான். அதைப் பார்த்து அவன் தம்பி சேகரும், தங்கை கல்யாணியும் துள்ளிக் குதித்து மகிழ்ந்தார்கள். அப்போது வானத்திலேயிருந்த பூரணச் சந்திரனும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது.' இதில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன தவறு ?

இராஜ : தீபாவளி சமயத்திலே அமாவாசையாகத் தானே இருக்கும்? அப்போது சந்திரனைப் பார்க்க முடியுமா? அ து வு ம் பூரணச் சந்திரனை...?

எல்லாரும் : முடியாது, முடியாது. (சேர்ந்து சிரிக்கிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/9&oldid=494079" இலிருந்து மீள்விக்கப்பட்டது