உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்!

விக்கிமூலம் இலிருந்து

17. அறப்போர் நினைவுகள்
(கடிதம் எண் 17. காஞ்சி - 7.3-65)

தம்பி!

கடவுளை மனிதன் தான் படைத்தான் என்பது சாணக்கியன் வாதம். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பது குமாரகிரியின் வாதம். கடவுள் யார்? எப்படி இருப்பார்? காட்டமுடியுமா? என்பது சாணக்கியன் கேள்வி, காட்டுகிறேன் காணீர்; என்று சூள் உரைத்துவிட்டு, குமாரகிரி, 'இதோ! ஜோதிமயமான ஆண்டவன் என்று, அரச அவையின் மையத்தைக் காட்டுகிறார்—அங்கு அடிநுனி காண முடியாத விதமான ஜோதி. அரசன் உட்பட, அவையினர் அனைவரும் வியப்பிலாழ்கின்றனர். 'சாணக்கிய வாதம் தோற்றுவிட்டது, சர்வேஸ்வரனைக் காட்டிவிட்டார் குமாரகிரி' என்கின்றனர். சாணக்கியன் மட்டும், 'ஜோதியா? இங்கா? கண்டீர்களா? எல்லோருமா? நான் காணவில்லையே' என்று கூறுகிறான். அவையினர் சாணக்கியன் போக்கை வெறுக்கின்றனர். நாங்கள் அத்தனை பேரும் கண்டது பொய்த்தோற்றமோ என்று கேட்டுக் கோபிக்கின்றனர். தோல்வியால் தலைகவிழ்ந்துகொள்கிறான் சாணக்கியன். அனைவரும் திகைத்துக் கிடக்கும்போது, ஆடலழகி எழுந்திருக்கிறாள், குமாரகிரியிடம் வாதிட 'கடவுள் என்பதாக ஒரு ஜோதியைக் காட்டினீர். அது உண்மைத் தோற்றமல்ல. உமது மனவலிமை காரணமாக, இங்குள்ள மற்றவர்களின் மனதை உமக்குக் கட்டுப்பட்டதாக்கிக்கொண்டு, ஜோதி தெரிவதாக நம்பும்படி செய்தீர். சாணக்கியரின் மனதை உமது மன வலிமை ஏதும் செய்ய இயலவில்லை. அதனால் அவர் கண்ணில் எந்த ஜோதியும் தென்படவில்லை; எனக்குந்தான். உண்மைதானே நான் சொல்வது?' என்று கேட்டாள். திடுக்கிட்டுப்போன குமாரகிரி, ஆம் என்று ஒப்புக் கொண்டான்.'வெற்றி சித்ராவுக்கே' என்று அவையினர் ஆர்ப்பரித்தனர். வெற்றிச் சின்னம் சூட்டினர் சித்ராவுக்கு அந்த ஆடலழகியோ அந்த வெற்றிச் சின்னத்தை யோகி குமாரகிரிக்குச் சூட்டுகிறாள். சீடன் சிவன், 'காமக்களியாட்டக்காரி என்கிறார்களே, இவளோ கற்றோர் வியக்கும் தத்துவவாதம் புரிகிறாள்' என்றெண்ணி வியப்படைகிறான்.

இந்த வெற்றியால் சித்ராவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை; புதிய கவலை பிறந்துவிட்டது என்கிறான் பீஜகுப்தா. அவன் கண்டறிந்த கருத்திற்கேற்பவே, யோகி குமாரகிரியிடம், சித்ராவின் மனம் இலயித்துவிடுகிறது. அறிவாற்றல் மிக்கவன், அழகன், அவனே எனக்கு ஏற்றவன் என்று கருதுகிறாள் சித்ரா. துணிந்து ஆசிரமம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். நீ போக போக்கியத்தில் புரள்பவள்; உனக்கு இங்கு இடமில்லை என்று விரட்டுகிறார் யோகி. தங்களுக்குப் பணிவிடை செய்வதிலே இன்பம் காண்பேன், வேறு ஏதும் வேண்டேன், போக போகங்களைத் துறக்கிறேன், பற்று அற்றவளாகிறேன் என்று கெஞ்சுகிறாள் சித்ரா. நீயா! பற்று அற்ற நிலை பெறப்போகிறாயா? போ! போ! உன்னால் முடியாது! என்று மேலும் விரட்டுகிறார் யோகி உங்களுக்கு அச்சம்; நான் இங்கு இருந்தால், தவம் கலைந்து விடும் என்ற பயம்; அதனால்தான் என்னை விரட்டுகிறீர். முற்றுந் துறந்தவரான உமக்கு ஏற்படலாமா அந்த அச்சம் என்று பேசி, மடக்குகிறாள் சித்ரா. சம்மதமளிக்கிறார் யோகி; சித்ரா ஆஸ்ரமத்தில் தங்குகிறாள்.

இது தெரிந்த பீஜகுப்தா, மனம் உடைந்த நிலை அடைகிறான். சீடன் திகைக்கிறான்.

பாடலிபுத்ரச் சீமான் ஒருவர் தமது மகளை பீஜகுப்தாவுக்கு மணம்செய்விக்க விரும்புகிறார். அந்தப் பெண் பெயர் யசோதரா. அவளையோ சீடன் சிவன் காதலிக்கிறான். இந்தச் சிக்கல் இங்கு வளருகிறது.

ஆஸ்ரமத்திலேயோ முற்றுந் துறந்தவரின் நிலை குலைகிறது; காமவிகாரம் மேலிடுகிறது, போகபோக்கியத்தில் புரண்டுகிடந்தவளோ, துறவு நிலையை மேற்கொள்கிறாள்—யோகியோ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, அவளை அண்டவே ஆரம்பிக்கிறார். ஆடலழகியோ தன்னைத் தீண்ட இடம்தரவில்லை; யோகியாருக்கு ஆசைகளை அடக்க வேண்டிய அவசியம்பற்றிப் போதனை செய்கிறாள்.

ஒருநாள், பீஜகுப்தா யசோதராவை மணம்புரிந்து கொண்டதாக, யோகி கூறி, இனி அவனைப்பற்றிய நினைவை விட்டொழி, என்னை ஏற்றுக்கொள், நான் வெறும் மாயையில் மூழ்கிக்கிடந்தேன், இனி உன்னுடன் வாழ்ந்துதான் மெய்ப்பொருளை உணரமுடியும், வா! என்று அழைக்கிறார். யோகியை நாடிவந்த போதிலும் சித்ராவின் உண்மைக்காதல் குப்தனிடம். எனவே, குப்தன் யசோதராவைத் திருமணம் செய்து கொண்டதாக யோகி கூறினதும் திடுக்கிட்டாள்; அந்த அதிர்ச்சி அவளை நிலை குலையச் செய்தது; அந்தச் சந்தர்ப்பத்தை யோகி விருந்தாக்கிக்கொண்டார். யோகம் கலைந்தது; போக வாழ்க்கையைத் துவக்கினார் குமாரகிரி.

இங்கே, யசோதரை—சிவன் காதல் விஷயம் பீஜகுப்தனுக்குத் தெரிகிறது. சித்ராவை இழந்துவிட்டோம், இனி யசோதராவைத் திருமணம் செய்துகொண்டு புது வாழ்வு தொடங்கலாம் என்று பீஜகுப்தன் தீர்மானிக்கும் போது, சிவன் காதல் தெரியவருகிறது. மனம் குழம்புகிறது. விரைவில் தெளிவுபெற்று, தன் சொத்து முழுவதையும் சிவனுக்கு எழுதிவைத்து, யசோதராவையும் திருமணம் செய்துவைக்கிறான். இதைக்கேட்டறிந்த சித்ரா, சீறுகிறாள் யோகியிடம்—கேவலம் சிற்றின்பத்துக்காகப் பொய்பேசி என்னை ஏய்த்தீர். பற்று அற்றவரோ நீர்! யோகியோ? என்று ஏசிவிட்டு, எத்தனை இன்பத்திலே மூழ்கிக்கிடந்தாலும், அத்தனையையும் ஒரு நண்பனுடைய நல்வாழ்வுக்காகத் துறந்துவிட ஒப்பி முடிவெடுத்த குப்தனே உண்மையான யோகி; அவனிடம் பணிவிடை செய்வதே எனக்கு இனித்தவம் என்று கூறிப் பாடலிபுரம் செல்கிறாள்—விவரம் விளக்கம் பேசிக்கொள்கிறார்கள். சித்ராவும், குப்தனைப் போலவே செல்வம் சுகம் யாவற்றையும் துறந்துவிட்டு, குப்தனுடன் கிளம்புகிறாள், ஏழையாக.

ஓராண்டுக்குப் பிறகு இரு சீடர்களும், குருவிடம் சென்று தாம் கண்டவைகளைக் கூறுகின்றனர். காமக் களியாட்டத்தில் உழன்றபோதிலும், நினைத்தபோது எதையும் துறந்துவிடத் துணிவுபெற்ற பீஜகுப்தனே, முற்றுந்துறந்தவராக இருப்பினும் பேரழகியைக் கண்டபோது நிலை குலைந்து காமச்சேட்டையில் ஈடுபட்ட குமாரகிரியை விட மேலோன் என்று முடிவு செய்கிறார்கள்.

ஆகவே சீடர்களே! அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அமையும்; அதனை ஆராய்ந்து பார்த்தபிறகே எது பாபம் என்பதுபற்றி முடிவுகட்ட முடியும் என்று குரு கூறிச் சீடர்களை அனுப்பிவைக்கிறார்.

இத்தனை பேர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையிலேயே, இதுதான் பாபம் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்கிறபோது, காக்கையால் கொத்தப் பட்டுச் சாக இருந்த குருவியை நான் எடுத்து கூண்டிலிட்டு வளர்ப்பது பாபம் ஆகாது என்ற நினைப்புடன்தான், குருவியை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

9—5—64

நீண்ட பல நாட்களாக நடைபெற்றுக்கொண்டு வந்த மதுரை வழக்கு முடிவுபற்றி இன்று பத்திரிகையில் பார்த்துப் பதறிப்போனோம். ஏற்கனவே கிட்டத்திட்ட ஆறுதிங்கள் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த முத்துவுக்கும் அவரது குழுவினருக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார்கள், தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட கருணாநிதி, நடராசன் உள்ளிட்ட குழுவினருக்கு ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் மதுரை முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஒன்றரை ஆண்டு சிறை என்று ஆகிறது. மதுரை முத்து இதுகுறித்து மனக்கலக்கம் அடைய மாட்டார் என்றாலும், அவருடைய குடும்பத்தினர் நிச்சயமாகக் கலங்கித்தான் போயிருப்பார்கள். பல திங்களாகவே முத்து, அறப்போர்பற்றியும், தண்டனை கடுமையாக இருக்கும் என்பதுபற்றியும், இல்லத்தாரிடம் சொல்லிவைத்திருப்பார் என்றாலும், அரசியல் சட்டம் கொளுத்தியதற்காக வேறுஇடங்களில், மாதக்கணக்கிலே தண்டனை தரப்பட்டிருக்க, முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஓராண்டு தண்டனை தரப்பட்டிருப்பது வேதனையைத் தான் கிளறிவிட்டிருக்கும். நாங்கள், முத்து காவலில் இருந்துவரும் நாட்கள் அதிகப்பட அதிகப்பட, கவலைப் பட்டபடி இருந்தோம். ஆறு திங்கள் சிறையில் காவலில் வைக்கப் பட்டிருப்பதால், தண்டனை அதிக காலத்குக்குத் தர மாட்டார்கள், சில மாதங்களே இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த நானும், அதிர்ச்சி அடைந்தேன்.

தென்பாண்டி மண்டலத்தில், முத்துவின் பிரசாரப் பணி ஓராண்டுக்கு நடைபெற இயலாமற்போவது இயக்கத்துக்கு ஒரு நட்டம்தான் என்றாலும், அவர் சிறையில் இருப்பதை எண்ணி எண்ணிப் பல்லாயிரக் கணக்கினர் மனம் வேதனைப்படுவர் என்பதும், அந்த வேதனையே இயக்கத்தை வளர்த்திடத்தக்க எழுச்சியாக மாறும் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, முத்து நீண்டகாலத் தண்டனை பெற்றிருப்பது இயக்கத்துக்கு மிகுதியான பயனையே இறுதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எண்ணி, என் மனதுக்கு ஆறுதல் தேடிக்கொண்டேன். முத்து, இதுபோல நீண்டகாலத் தண்டனைதான் தனக்குத் தரப்படும் என்று முன்பே எதிர்பார்க்கும் தோரணையில் அறப்போருக்கு முன்பு மதுரை சென்றிருந்த என்னிடம் பேசிக்கொண்டிருந்த நினைவும், குடும்பத்தாருடன் என்னை வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் நினைவும் என் நெஞ்சினில் தவழ்ந்தது. அறப்போரில் ஈடுபட்டவர்களிலேயே அதிககாலச் சிறைத்தண்டனை பெறும் வாய்ப்பை, முத்து பெற்றுவிட்டார் என்பது, அவரைப் பிரிந்திருக்கும்போது வேதனையாகத் தென்பட்டாலும், பிறகு நமக்கெல்லாம் பெருமிதம் தரும் என்பதில் ஐயமில்லை.

கருணாநிதியும் நடராசனும், அறப்போரில் ஈடுபடுவதற்கான நாளை அவர்களே தேர்ந்தெடுத்து அறிவித்துமிருக்கிறார்கள். இடையிலே அவர்கள் ஆற்றவேண்டிய பணி நிரம்ப. எனவே, அவர்கள் தம்மீது தொடரப்படும் வழக்கு பற்றி உயர்நீதி மன்றம் வரை சென்று நீதி பெற முயற்சிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தண்டனை பெற்ற அனைவரும் திருச்சி சிறையில், இன்றிரவு இருக்கிறார்கள். நானும் நண்பர்களும் சென்னைச் சிறையில். இடையிலே இருநூறு கல் தொலைவு என்றாலும், காடு மலை கடந்து நெடுவழி தாண்டி, என் எண்ணம், திருச்சிச் சிறையிலே உள்ள அறப்போர் வீரர்களிடம் செல்கிறது. இன்றிரவு அவர்கள் நினைவுடனேயே இருப்பதால் தூக்கமும் எளிதாக வராது என்று எண்ணிக்கொண்டேன்; ஆனால் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு, தமிழ் காத்திடும் வீரர்கள் எங்கெங்கு உள்ளனர், எத்துணை ஆர்வத்துடன பணிபுரிகின்றனர், எவ்வளவு கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை எண்ணியபோது, ஒருபுதுவித மகிழ்ச்சியே பிறந்தது; அந்த களிப்புணர்ச்சியைத் துணை கொண்டு கண்ணயரக் செல்கிறேன்.

11—5—64

நேற்று, ஞாயிற்றுக்கிழமை—உப்புச் சப்பற்ற விடுமுறை நாள். படிப்பதும் பேசிக்கொண்டிருப்பதுமாகப் பொழுதை ஓட்டினோம்.

இன்று காலை பிறந்ததும், நாங்கள் நூற்பதற்காக ஒப்படைத்திருந்த ராட்டைகளையும், தக்ளியையும், அந்தத் துறையினர் எடுத்துக் கொண்டு போய்விட்டனர். கணக்கெடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். நமது தோழர்களோ இதிலே ஒரு இரகசியம் இருக்கிறது; நாளை மறுநாள் விடுதலை செய்யப் போகிறார்கள்; ஆகவேதான் இன்று இவைகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சைத் துவக்கிவிட்டார்கள். அவரவர்களுக்கு உள்ள வாதத் திறமையைக் காட்டினர். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கே தெரியும் சலுகைகாட்டி விடுதலை செய்யப்போவதில்லை என்பது. என்றாலும், சிறையிலே எழும் பேச்சுகளில் இது மிகச்சுவை தரும் வகையானது என்பதால் பேசுகிறார்கள்.

இன்று உள்ளபடி மகிழ்ச்சி தரும் செய்தியை 'முரசொலி' தந்திருந்தது. நமது கழகத்தவர்மீது தொடரப் படும் பல்வேறு வழக்குகளை நாம் சந்தித்தாக வேண்டி நேரிட்டுவிட்டது; இதற்காகும் செலவுக்கான பணம் பொது மக்களின் ஆதரவினால் கிடைக்க வேண்டும். இந்த நல்ல நோக்கத்துடன், சென்னை நகரில் ஒவ்வொரு வட்டத்திலும் தோழர்கள் 'உண்டி' வசூல் செய்து, கிட்டதட்ட ஆறு ஆயிரம் ரூபாய் திரட்டிய செய்தி பார்த்து மகிழ்ந்தோம். பொது மக்களின் பேராதரவு கழகத்துக்கு வளருகிறது என்பதை எவரும் அறிந்து கொள்ள இது தேவைப்படுகிறது. கழகத் தோழர்கள் பொதுமக்களுடன் தோழமைத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாகிறது. இந்த நல்ல பணியில் ஈடுபட்டு, பொருளும் புகழும் ஈட்டிய தோழர்களுக்கெல்லாம் நன்றி கூறிக்கொண்டேன் இங்கிருந்தபடி. நான் வெளியே இருந்திருந்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால், இத்தகைய வசூலின்போது ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஒவ்வொரு வட்டமும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பேன். சில வட்டங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகத் திரட்டி உள்ளது தெரிகிறது. வெளியே சென்றதும், அந்த வட்டங்களிடம் மிகுதித்தொகையைக் கேட்டுப் பெறப்போகிறேன் என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன்.

இரண்டு நாட்களாக மனித குலத்தின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி ஏடு ஒன்று படித்துக் கொண்டிருந்தேன். புல்லாகிப் பூண்டாகி என்று இங்கு தேனொழுகப்பாடிட நம்மிடம் கவிதை இருக்கிறது, இல்லை என்று கூறவில்லை. ஆனால், இத்தத் துறையிலே, ஆண்டு பல உழைத்து, நுண்ணறிவினர், ஆராய்ச்சி நடத்தி அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்—மேனாட்டில், அவர்கள் அங்குஎடுத்துக் கொண்ட அரும்முயற்சிகளை வியந்து பாராட்டிப் போற்ற வேண்டியது முறையாயிருக்க, இங்கு நம்மிலே சிலர், இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி உண்மைகள் அவ்வளவும், அதற்கு மேலும்கூட, நம் நாட்டிலே வெகு பழங்காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்று பேசிக்கொள்வதிலே பெருமை இருப்பதாகக் கருதுகிறார்கள். புல்லாகிப் பூண்டாகி என்ற கவிதைகூட, உயிர்களின் தோற்றம் வளர்ச்சி எனும் அறிவுபெற அல்ல, பாவபுண்யங்களுக்கு ஏற்றபடி பிறவிகள் எடுக்கப்படுகின்றன என்ற வைதீகக் கருத்தை விளக்க எழுந்ததேயாகும். பழம் பாடல்களை, இன்றைய ஆராய்ச்சி உண்மைகளை அன்றே தெரிவித்திட ஆக்கப்பட்ட அறிவுப் பாக்களாகும் என்று வாதிடுவது சுவை அளிக்கலாம்; பயன் இல்லை. அந்தப் பாடல்கள் அந்நாட்களின் அருளாளர்களின் கருத்தோவியங்கள். கண்டு பிடிப்புகளுக்கான வழிகளைக் கூறும் பாடங்கள் அல்ல. சொல்லிக் கொள்ளலாம், சுவைக்காக, "சந்திர மண்டலம் போகலாம் என்பதுபற்றி இன்று ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்கிறார்களாம். இதனை மிகப்பெரிய விந்தை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வள்ளலார், 'நாதர் முடிமேலிருக்கும் வெண்ணிலாவே அங்கு நானும் வரவேண்டுகிறேன் வெண்ணிலாவே' என்பதாக, அன்றே பாடினார்—உங்களுடைய அவ்வளவு ஆராய்ச்சியையும் ஒரே அடியிலே அடக்கிக் காட்டிவிட்டார்." என்று பேசிக்கொள்ளலாம். பயன் என்ன? அவருடைய அந்த அடியை வைத்துக் கொண்டு, தைப்பூசத்துக்குப் பயன்படுத்தினோமேயன்றி, வெண்ணிலா இருக்கும் இடம் செல்ல வழி என்ன என்று ஆராய்ச்சி நடத்த அல்ல. இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் யாவும் தமிழகத்தில் பழங்காலத்திலே அறிந்திருந்தனர் என்று விளக்க, இதுபோன்ற சில பல கவிதைகளைப் பின்னி எழுதப்பட்ட ஒரு தமிழ் ஏடு பார்த்துவிட்டு, அன்பழகன் அதில் உள்ளவைகளைப் படித்துக்காட்டி இது போல என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிய நாட்களில், அவருடைய வகுப்பறை எவ்வளவு பயனளித்திருக்கும் என்று அன்று ஓரளவு உணர முடிந்தது.

நான் படித்துக் கொண்டிருந்த மனிதகுல ஆராய்ச்சி பற்றிய ஏடு, பாசுரங்கள், அருளாளர் வாக்குகள் ஆகியவைகளிலே இருந்து அடிகளைப் பெயர்த்தெடுத்துப் பிழிந்து, இதோ ஆராய்ச்சியாளரின் கண்டு பிடிப்புகளின் கருப்பொருள் என்று கூறிடும் முறையிலே எழுதப்பட்டதல்ல. கற்காலத்துக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து, கற்காலம், நாடோடிகளாக வாழ்க்கை நடத்திய காலம், பயிரிட்டுப் பிழைத்த காலம் என்று மனிதகுலம் படிப்படியாகப் பெற்ற வளர்ச்சியின் தன்மைகளை, புதை குழிகளில் கிடைத்த எலும்புக் கூடுகள், அந்த எலும்புகளிலே காணப்பட்ட வெட்டுக்காயக் கோடுகள், சாம்பற் குவியல், குகைகளிலே காணபட்ட கற்கருவிகள், அந்தக் குகைகளின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் என்பன போன்றவைகளை, அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ள இடங்களில் மனித நடமாட்டமற்ற இடங்களிலே கல்லி எடுத்து, அவைகளின் தன்மைகளிலிருந்து காலத்தைக் கணக்கெடுத்து, அன்று இருந்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டறிந்து கூறப்பட்டுள்ள ஏடு. பொழுது போக்காக ஒருமுறை படித்துவிட்டு புரிந்துவிட்டது என்று சொல்லிவிடத்தக்க ஏடு அல்ல. பலமுறை படித்திடவும், சிந்தித்துப் பொருள் பெறவும் வேண்டும். இன்று பெரும் பகுதி அந்த நூலைப் படிப்பதிலேயே செலவிட்டு மகிழ்ச்சி பெற்றேன்.

12—5—64

இப்போது, குருவிகள் நான்கு உள்ளன—ஆமாம். காக்கைகளிடமிருந்து தப்பி எங்களிடம் கிடைத்தவையும், நண்பர் ஏகாம்பரம் கூடையைக் கண்ணியாக வைத்துப் பிடித்த குருவியும். பகலில் அறைக்கு வெளியே கூண்டு வைக்கப்படுகிறது; அருகில் நான் அமர்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ, குருவிகளின் நடமாட்டத்தின் வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் குருவிகள் எப்படிக் கூண்டை விட்டு வெளியே செல்வது என்ற முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளன; இடையிடையே தீனி பொறுக்குகின்றன; இந்தக் குருவிகளிலே ஒன்றினுடைய தாய்க்குருவி மட்டும் கூண்டுக்கு வெளியே வட்டமிடுவதும், குஞ்சுக்கு வெளியே இருந்தபடியே தீனி கொடுப்பதுமாக இருக்கிறது. மற்றக் குருவிகள் தாமாகத் தின்றிடும் பக்குவம் அறிந்துகொண்டுவிட்டன. இது ஒன்று மட்டும், தாயின் உதவியைப் பெறவேண்டிய பருவத்திலிருக்கிறது, அந்தத் தாய்க்குருவியும், மிகுந்த பாசத்துடன், குஞ்சுக்குத் தீனி கொடுக்க, அடிக்கடி கூண்டு இருக்குமிடம் வருகிறது. இரவு, கூண்டு என் அறையில், என்னோடு பொன்னுவேலுவும் வெங்காவும் இருப்பதால் காவலாளிகள் கணக்கெடுக்க வரும்போது, 'மூன்று' என்று வழக்கமாகக் கணக்குக் கொடுப்பதுண்டு; இப்போது ஏழு என்று வேடிக்கையாகக் கணக்குக் கொடுக்கிறோம்.

16—5—64

இரண்டு மூன்று நாட்கள் குறிப்பு எழுதவில்லை. நிகழ்ச்சிகளில் புதுமையும் இல்லை; குறிப்பிடத்தக்கவையாகவும் இல்லை. சிந்தனையில் தோன்றியவைகளை எப்படி இங்கு வடித்துக்காட்ட முடியும்? பகலில், அரசியல் பிரச்சினைகள் பலபற்றி நண்பர்களுடன் பேசுவது, இரவு அறையில் அமர்ந்து வரைவது, எழுதுவது, படிப்பது இப்படி. ஷேக் அப்துல்லாவின் முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்துல்லாவிடம் நட்புறவு காட்டி ஆச்சாரியார், ஜெயப்பிரகாசர், விநோபா ஆகிய மூவரும் பிரச்சினைதீர வழிகளைக் கூறி இருப்பதாகச் செய்தி வந்திருப்பதுபற்றி நண்பர்கள் விளக்கம் கேட்டார்கள். ஆராயத்தக்க விதமான வடிவத்தில் இன்னும் எந்த வழியும் எடுத்துக்காட்டப் படவில்லை. எனவே இப்போது இந்தப் பிரச்சினையில் அவசரமோ, பரபரப்போ காட்டவேண்டிய அவசியம் எழவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தானும், ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு சமரசத்திட்டம் கிடைக்க முடியுமா என்பதிலேயே எனக்கு ஐயப்பாடு எழுகிறது. ஜனநாயக முறையைக் குலைத்துவிட்ட ஒரு அதிபரின்கீழ் பாகிஸ்தான் இருக்கும்போது, அங்கிருந்து நட்புறவு, சமரசம், தோழமை என்பவை கிடைக்க முடியுமென்றும் எனக்குத் தோன்றவில்லை என்று நான் கூறினேன். பண்டித நேருவிடம் கொண்டுள்ள பயபக்தி விசுவாசம் காரணமாகவே, காங்கிரசில் உள்ள மற்றத் தலைவர்கள் அப்துல்லாவை எதிர்க்காமலிருக்கிறார்கள் என்பதும் நன்றாகத் தெரிகிறது என்பதுபற்றியும், பேசிக்கொண்டிருந்தேன்.

காஞ்சிபுரத்தில், அரசியல் சட்ட மொழிப்பிரிவைக் கொளுத்துவதன் மூலம், தமிழகத்திலுள்ள இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக்காட்டிய அறப்போர் வீரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, கம்பராசபுரம் இராசகோபால், காஞ்சிபுரம் துரை அச்சக உரிமையாளர் சம்பந்தம், சீதாபுரம் ராமதாசு, மாதவரம் வேதாசலம் ஆகிய ஐவருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும், அந்த நிகழ்ச்சியின்போது தொடர்பு வைத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாவட்டச் செயலாளர் சி. வி. எம். அண்ணாமலை, நகரசெயலாளர் மார்க், பொதுக்குழு உறுப்பினர் சபாபதி ஆகிய மூவருக்கும் ஆறுவாரக் கடுங்காவல் தண்டனையும், செங்கற்பட்டு வழக்கு மன்றத்திலே விதிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி பி.ஏ., பி. எல். லும், காட்டுமன்னார்குடித் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியும், குற்றம் மெய்ப்பிக்கவிடவில்லை என்பதனால், விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் இதழ்கள் மூலம் செய்தி கிடைத்தது.

மதுரையில் முத்து குழுவினருக்கு ஓராண்டு தண்டனை தரப்பட்டது கண்டு, இங்கும் அதுபோல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நான் சற்று அதிகமாகவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன், ஆகவே ஆறுதிங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஒருவிதமான ஆறுதல் அளித்தது.

தண்டனைதான் ஆறு திங்களே தவிர, அவர்கள் வழக்கு நடைபெற்று முடிய எடுத்துக்கொள்ளப்பட்ட 4 மாதங்களும் சிறையிலே இருந்து வந்தனர்; ஆக மொத்தத்தில் பத்துமாதச் சிறை என்று ஆகிறது.

தோழர் கோவிந்தசாமி சிறையில் இருக்கும்போது, அடுத்தடுத்து அவருடைய அண்ணனும், அக்காவும் காலமாகிவிட்டனர். அதனால் ஏற்பட்ட வேதனையையும் சுமந்து கொண்டு, அவர் சிறையிலே அடைபட்டுக் கிடந்தார்.

தோழர்களைச் சென்னைச் சிறைக்கு எப்போது அழைத்து வருவார்கள் என்று ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கும், சிறை செல்கிறோமே என்ற கலக்கமோ கவலையோ எழுந்திருக்காது; சென்னைச் சிறையில் என்னையும் மற்ற நண்பர்களையும் காணலாம், உடனிருந்து மகிழலாம் என்ற எண்ணம்தான் ஆர்வமாக எழுந்திருந்திருக்கும், என்று எண்ணுகிறேன்.

தமிழகத்தில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு தண்டனைபெறும் கழகத் தோழர்கள் அனைவரையும், ஒரே ஊரில், ஒரே சிறையில் வைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

18—5—64

இரண்டு நாட்களாக கோவிந்தசாமியும் மற்றவர்களும் வருவார்கள், வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோம். ஒருசமயம் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டோம். சிறையிலே அவ்விதமான வதந்தியும் பரவிவிட்டது. ஆனால் பகல் பனிரண்டு மணி சுமாருக்கு எட்டுத் தோழர்களும், கலியாண வீட்டுக்குள்ளே நுழைவதுபோல, புன்னகையுடன் வந்தனர். வெளி உலகத்திலிருந்து வருகிறார்கள் அல்லவா—சிறை உலகிலே இருந்து வரும் எங்களுக்கு அவர்களைக் காண்பதிலே, சேதிகள் கேட்டறிவதிலே, தனி இன்பம் பிறப்பது இயற்கை தானே. இப்போது இந்தப்பகுதியில் நாங்கள் 20-பேர் இருக்கிறோம்—மதி மருத்துவ மனையிலிருந்து வரவில்லை—அவரோடு சேர்த்தால் 21.

வந்தவர்கள்,அறப்போர் நிகழ்ச்சிகள், மக்கள் காட்டிய ஆர்வம், வழக்குமன்ற விவரங்கள் ஆகியவை பற்றிக் கூறினார்கள். நாங்கள் சிறையில் உள்ள நிலைமைகள்பற்றிக் கூறினோம். மீஞ்சூர் கோவன் அணியினரும், பூவிருந்தவல்லி சின்னசாமி குழுவினரும் விடுதலையாகிச் சென்றதைச் சொன்னோம். விவரமெல்லாம் நடராசன் கூறினார். அவரும் மதியின் இளவல் கிட்டுவும், சிறைவாயிலில் எங்களைக் கண்டு பேசினார்கள் என்று கோவிந்தசாமி கூறினார். அவருடைய வேதனையை உணர்ந்து, சில வார்த்தைகள் ஆறுதல் கூறினேன். தம்மைச் சிறுவயதுமுதல் பாசத்தோடு வளர்த்து வந்தவர்கள் தனது அக்காதான் என்பதை, கோவிந்தசாமி கூறிக் கண்கலங்கினார்.

இரண்டு நாட்களாக, மனிதகுல வரலாறுபற்றிய (மற்றோர்) புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இது, கற்காலத்தில் இருந்த நிலையிலிருந்து படிப்படியாக மனித குலம் எவ்விதமெல்லாம் மாறுதல் அடைந்தது என்பது பற்றிய ஆராய்ச்சி ஏடு அல்ல. மிகப் பழய காலத்திலிருந்து உலகிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கதைவடிவிலே எடுத்துக்காட்டும் ஏடு. மொத்தத்தில் கதைகளிலே, கி.மு.30,000 ஆண்டிலிருந்து கி.பி. 1860-ம் ஆண்டு வரை, குறிப்பு தரப்பட்டிருக்கிறது.

காட்டுமிருகங்களைக் கூட்டிவைத்து, இரண்டு காலுள்ள ஒரு பிராணியைக் கண்டேன், இனி நமக்கு ஆபத்து உண்டாகும் என்று ஒரு குரங்கு கூறுகிறது, கி.மு.30,000-ல். அடுத்தகதை கி. மு. 15000—கற் காலத்துச் சூழ்நிலை பற்றியது; பிறகு.கி.மு. 3500, கி.மு. 1152 கி.மு. 480 கி.மு.800, கி.மு.200, கி.மு. 100, கி.மு. 55 என்று தொடர்ந்து, கி.பி.1492, அமெரிக்கா கண்டுபிடிக்கப் பட்ட நிகழ்ச்சி, கி. பி 1736, நீராவி பற்றிய ஆராய்ச்சியின் துவக்கம், கி.பி. 1860-விடுதலை உணர்ச்சி எழும்பியது, என்ற முறையில், புத்தகம் அமைந்திருக்கிறது. இதிலே, வியப்பு என்னவென்றால், இது பத்துவயதுச்சிறுவர்களுக்கு, உலக வரலாற்று நிகழ்ச்சிகளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்தி வைக்க எழுதப்பட்ட புத்தகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது முன்னுரையில்—புத்தகம் 1930-க்கு முன்பு அச்சிடப் பட்டது. மற்ற நாட்டு மாணவர்களுக்கு அறிவு புகட்ட எத்தகைய நேர்த்தியான ஏடுகளெல்லாம் அளிக்கப் பட்டு வருகின்றன என்பதை உணரச் செய்கிறது இந்த ஏடு.

19—5—64

வழக்கமான—பார்வையிடுதல், ஆனால் இந்த முறை, எங்களுக்குப் புதுமகிழ்ச்சி—புதியவர்களுடன் நிற்கிறோம் அல்லவா—மொத்தம் இருபதுபேர், இங்கு மட்டும்— உள்ளே வேறு இருக்கிறார்கள். எட்டுப்பேருக்கும் அவசரம் அவசரமாகக் கைதி உடை தரப்பட்டு அணியில் நிறுத்தப் பட்டனர். இங்கு எல்லாக் கைதிகளைக் காட்டிலும், உயரம், உடற்கட்டு, பார்வையில் உறுதி, எல்லாவற்றிலும் மேலானநிலை, கம்பராசபுரம் ராசகோபாலுக்குத்தான். சிறை மேலதிகாரிகள் பார்வையிட்டுக்கொண்டு சென்ற போது, அவர்கள் மனதிலே எழாமலா இருந்திருக்கும், நல்ல நல்ல ஆட்களப்பா, தி.மு. கழகத்தில் என்ற எண்ணம்!

இன்று மேலும் மகிழ்ச்சி எழத்தக்க விதத்தில் திருச்சியில் பல்வேறு முனைகளில் அறப்போரில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பில் தருமலிங்கம், எம். எஸ். மணி, அழகமுத்து, ஜெகதாம்பாள் வேலாயுதம், வெங்கலம் மணி, அரியலூர் நாராயணன், புதுக்கோட்டை தியாகராசன் உள்ளிட்டு, மொத்தத்தில் 250-க்கு மேற்பட்டவர்கள் 'கைது' செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்றிரவு மதுரை முத்து அவர்களைத் திருச்சி சிறையில் வரவேற்றிருப்பார் என்று கருதுகிறேன். அந்தத் தோழர்களுக்கு மத்தியில் நான் இருப்பதற்கில்லையே என்று ஒருகணம் கவலைகூடப் பிறந்தது. பிறகோ எங்கு இருந்தால் என்ன—தொலைவு நம்மைப் பிரித்துவைக்க முடியாது—அவர்கள் நெஞ்சிலே நாம், நமது நெஞ்சிலே அவர்கள் என்ற எண்ணம் மலர்ந்தது. எது சிதைக்க முடியும்? பேசி மகிழ்ந்திருங்கள். தோழர்களே! நாங்கள் இங்கே உங்களைப்பற்றித் தான் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நானாகக் கூறிக்கொண்டேன்.

இன்னும் நாலு நாட்களில், சுந்தரம், வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகிய நால்வரும் விடுதலை ஆகிறார்கள்.

இன்று காலையிலிருந்து காஞ்சிபுரம் மணி, சுந்தரத்தை பெயரிட்டுக் கூப்பிடுவதில்லை—"என்னய்யா நாலு நாளு!" என்று தான் அழைக்கிறார்.

20—5—64

திருச்சி மாவட்டத்தில் அறப்போரில் ஈடுபட்டவர்களில் பலருக்கு உடனுக்குடன் விசாரணை நடைபெற்று நான்கு, மூன்று, இரண்டு திங்கள் என்ற முறையில் தண்டனைகள் தரப்பட்டுவிட்ட செய்தி பார்த்தோம். வழக்கு தாயரிப்பதாகக் கூறிக்கொண்டு, மாதக்கணக்கிலே தோழர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்குத் திருச்சி மாவட்டத் தோழர்கள் ஆட்படுத்தப் படாதது மிக்க மகிழ்ச்சி தந்தது. எதிலுமே திருச்சி மாவட்டத் தோழர்கள் நல்ல வாய்ப்புப் பெறுபவர்கள்—தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியதும் நடைபெற்ற முதல் மாநாடு திருச்சியில்தானே! பொதுமக்களின் நல்லாதரவைத் திரட்டி, சென்ற பொதுத்தேர்தலின் போது சிறப்புமிக்க வெற்றிகளையும் ஈட்டிய இடம், திருச்சி மாவட்டம். மற்ற எல்லா மாவட்டங்களிலும் கழகத்துக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தேர்தல் சமயத்திலே மோதுதல்-திருச்சி மாவட்டத்திலே மட்டும், 'தழுவுதல்' இருந்தது. பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருவது போலவே, திருச்சி மாவட்டம், அறப்போர் வீரர்களின் எண்ணிக்கையிலும் மற்ற மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டது.

இன்று திருப்பெரும்பூதூர் தொகுதி திருத்தி அமைக்கப்படும் முறைபற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்தத் தொகுதியிடம் அமைச்சருக்குக் கிடைத்ததைவிட எந்த வட்டத்தில் தனக்குக் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் அதிகமாகக் கிடைத்ததோ, அந்த வட்டத்தை வெட்டி எடுத்து, அதனை கடம்பத்தூர் தொகுதியிலே இணைத்திருப்பது கழகத்துக்கு ஏற்படக் கூடிய நல்வாய்ப்பைக் குலைப்பதாக அமையும் என்று கவலையுடன் கூறினார். மேலும் பல தொகுதிகளிலேயும், இது போன்ற நிலைமை ஏற்படுவதுபற்றி நண்பர்கள் எடுத்துக் காட்டினார்கள். இதற்குப் பரிகாரமே கிடைக்காதா என்று கேட்டனர். நிலைமையைப் பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவதைத்தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?—இதற்காக அமைந்துள்ள குழு முடிவெடுத்தது, நாங்கள் என்ன செய்யமுடியும் என்று ஆளுங்கட்சி நியாயம் பேசும். எந்தத் தொகுதி எப்படித் திருத்தி அமைக்கப்பட்டாலும், வெற்றி பொதுமக்களின் நல்லாதரவிலே இருக்கிறது; அந்த நல்லாதரவைப் பெறுவதிலே நாம், மும்முரமாக ஈடுபட வேண்டியதுதான்—வேறு பரிகாரம் என்ன இருக்கமுடியும்? என்று நான் கூறினேன்.

இன்று பொதுவாக ஜனநாயக முறைகள் பற்றிப் அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஜனநாயகம் எத்தனை குறையுடையதாக இருந்தாலும், மக்கள் தமது கருத்தை அறிவிக்கவும், தம்முடைய நலனுக்கு ஏற்ற ஆட்சியை அமைத்திடும் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கிறது. இந்த வாய்ப்பு முழுப்பலனைக்கொடுக்க, திருத்தங்கள், முறை மாற்றங்கள் தேவைப்படக்கூடும்—ஆனால் அடிப்படை ஜனநாயக முறையை மக்கள் பெற்றுள்ள மிகபெரிய வாய்ப்பு என்று கருதுவதிலே, மாறுபாடான எண்ணம் எழலாகாது. சிலருக்கு, தோல்வி காரணமாகவோ, தத்துவ விசாரம் காரணமாகவோ, ஜனநாயக முறையிலேயே ஐயப்பாடு ஏற்பட்டு விட்டிருக்கிறது. இந்தப் போக்கு விரும்பத்தக்கது அல்ல. சிலர், கட்சிகளற்ற ஆட்சி அமைப்பு வேண்டும் என்கிறார்கள். மற்றும் சிலர், நேரடித்தேர்தல் முறையைவிட, மறைமுகத் தேர்தல் முறை மேலானது என்கிறார்கள். ஆனால் எந்தகைய முறை மாற்றங்களைப் பற்றி அவர்கள் சிந்தனை செய்தாலும், ஜனநாயக முறையைவிட மக்களுக்கு நல்வாய்ப்பு தரத்தக்க வேறுமுறை இருப்பதாகமட்டும் கூற முடியாது என்று கூறினேன். ஜனநாயக முறையிலே சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்ற எண்ணம் பல நாடுகளிலேயும் எழும்பிக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டக் கூடிய ஒரு புத்தகம் இன்று படித்தேன். கற்பனைதான்—அதிலே ஒரு கருத்தோட்டமும் இருக்கிறது. 1980-ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பு எவ்விதம் இருக்கும், பிரிட்டனில் முடியாட்சி முறை இருக்குமா, ஜனநாயக முறையிலே என்னென்ன புதுமைகள் புகுத்தப்படும் என்பதுபற்றியெல்லாம் நெவில்ஷட் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிற கதை வடிவம், பிரிட்டனில் முடியாட்சி இருக்கிறதே தவிர, முடிதரித்தோருக்கு உரிமைகளும் சலுகைகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுவிடுகின்றன. 1980-ல், பிரிட்டனில் ராணி தான் ஆட்சி செய்கிறார். ஆனால், அவருக்குத் தமக்குப் பிறகுதம் மக்கள் மன்னர்களாக இருக்கவேண்டும் என்ற விருப்பம்கூட எழவில்லை. முடி தரித்துக்கொண்டு, ஆட்சியின் பிடி அவ்வளவையும் மக்கள் மன்றத்திடம் ஒப்படைத்து விட்டு இருப்பதில், பசையும் இல்லை, ருசியும் இல்லை என்று தோன்றுகிறது. முடிமன்னர்களின் செலவுபற்றி கணக்குப் பார்ப்பதும், கேள்வி எழுப்புவதும் சரியல்ல, முறையல்ல என்ற மரபு கூட 1980—ல் எடுபட்டு விடுகிறது. எந்தச் செலவானாலும் மக்கள் மன்றத்தின் ஒப்பம் பெற்றாக வேண்டும் என்று ஆகிவிடுகிறது. பிரிட்டனில் நிலைமை இவ்விதம் ஆகிவிடும்போது, காமன்வெல்த்தில் இணைந்துள்ள கானடாவிலும், ஆஸ்திரேலியாவிலும், ராஜபக்தி ஓங்கி வளருகிறது. மகாராணியின் செலவுக்காகத் தாராளமாகப் பணம் வழங்க அந்த நாடுகள் முன்வருகின்றன். ராணியே, இரண்டொரு மாதங்கள் மட்டுமே பிரிட்டனில் தங்கி இருப்பது, பெரும்பகுதி நாட்களை கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கழிப்பது என்று திட்டமிடுகிறார்கள்.

ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் ராணியிடம் 'பக்தி விசுவாசம்' காட்டுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ள பகுதியைவிட, சுவையுள்ள சிந்தனையைக் கிளறிவிடும் பகுதி, ஓட்டுகள் பற்றியது. ஆஸ்திரேலியாவில், 'ஒருவருக்கு ஒரு ஓட்டு' என்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு ஒருவர் ஏழு ஓட்டுகள்வரை பெறத்தக்க வாய்ப்பு அளிக்கப்படும் முறை புகுத்தப்படுகிறது—கதையில். செல்வவான்களும், படித்தவர்களும் மட்டுமே ஓட்டு உரிமை பெற்றிருக்கும் முறை மக்களாட்சிக்கு வழி கோலாது—மேல்தட்டிலுள்ளவர்களின் ஆதிக்கத்துக்குத்தான் வழி அமைக்கும். ஆகவேதான், நீண்ட கிளர்ச்சிக்குப்பிறகு. வயதுவந்தவர்கள் அனைவருக்கும், படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், சொத்து இருந்தாலும் இல்லை என்றாலும் ஓட்டு உரிமை உண்டு என்ற திட்டம் கிடைத்தது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற திட்டம், ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகி விட்டது.

இந்த முறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைக்கத்தக்க ஒருமுறை, ஆஸ்திரேலியாவிலே புகுத்தப்படுகிறது என்று 1980ல், நிலைமை எப்படி இருக்கக்கூடும் என்ற கற்பனையைக் கதை வடிவிலே தருபவர் தெரிவிக்கிறார்.

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையின்படி, வயது வந்த அனைவருக்கும், படிப்பு, உடைமை உண்டா இல்லையா என்று பார்க்காமல், விஷயங்களைப் புரிந்து கொள்ளத்தக்க வயது வந்திருக்கிறதா என்பதைக் கவனித்து, ஓட்டு தரப்படும் முறை அகற்றப்படவில்லை. அனைவருக்கும் அந்த ஒரு ஓட்டு இருக்கிறது—அடிப்படை ஓட்டு. ஆனால் அத்துடன் வேறு ஆறுவிதமான காரணங்களால், ஓட்டுகள் வழங்கப் படுகின்றன. அனைவருக்கும் அடிப்படை ஓட்டு வழங்கப்பட்ட பிறகு, கல்வியாளர்களுக்கு அவர்கள் கல்வி காரணமாகப் பெறும் புதிய தகுதி, பொறுப்பு இவற்றைக் குறிப்பில் வைத்து, இரண்டாவது ஓட்டுத் தரப்படுகிறது. எவரெவர், தமது நாட்டு நன்மைக்காக வெளிநாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறார்களோ—குறிப்பாக போர்முனைப் பணியாற்றியவர்கள்—அப்படிப்பட்டவர்களுக்கு அதற்காக ஒரு ஓட்டு கிடைக்கிறது—மொத்தத்தில் மூன்று ஓட்டுகள் அவர்களுக்கு. விவாக விடுதலை செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தி, இரண்டு மக்களைப் பெற்று, அவர்களைப் பதினான்கு வருஷங்கள் வரையில் ஆளாக்கி விடுபவருக்கு, குடும்பக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர் என்பதற்காக, ஒரு ஓட்டு கிடைக்கிறது—குடும்ப ஓட்டு. எவரெவர், தொழில் நடத்தி, பொருள் ஈட்டி, நாட்டின் மொத்தச் செல்வத்தை வளர்க்கிறார்களோ அவர்களுக்கு, அந்தத் துறையில் ஈட்டிய வெற்றிக்காக ஒரு ஓட்டு தரப்படுகிறது. மார்க்கத்துறையில் தூய பணியாற்றுபவருக்கு அந்தத் தனித்தகுதி காரணமாக ஒரு ஓட்டு தரப்படுகிறது. சிறப்பு இயல்பினர் என்று ராணியார் கருதி, சிலருக்கு ஒரு ஓட்டு அளிக்கிறார்கள். இப்படி ஒரு சிலருக்கு ஒரு ஓட்டு என்பது மாறி, ஒருவருக்குப் பல ஓட்டுகள், ஒவ்வொரு தனித் தன்மைகளுக்காக மொத்தத்தில் ஏழு ஓட்டுகள் என்ற புதுமுறை புகுத்தப்பட்டிருக்கிறது—ஆஸ்திரேலியாவில்—கதையில்.

கதைதானே என்று கூறிவிடுவதற்கில்லை—ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது பொதுநீதி என்றபோதிலும், ஜனநாயகம் செம்மையடைய வேண்டுமானால் மக்களிடை ஏற்படும், அல்லது மக்களில் சிலரோ பலரோ பெறும், தனித்தன்மைகள், திறமைகள், தகுதிகள் ஆகியவற்றைப் புறக்கணித்து விடக்கூடாது—அவர்கள் எல்லோரிலும் இருக்கிறார்கள். ஆனால் சில தனிச்சிறப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே எல்லோருக்கும் இருப்பதுபோல அவர்களுக்கும் ஒரே ஒரு ஓட்டு என்பது முறையாகாது என்ற கருத்து, இந்தக் கதை வாயிலாக வலியுறுத்தப்படுகிறது. இந்தக் ஏற்பாட்டின்படி, ஒருவருக்குப் பல ஓட்டுகள் கிடைப்பதால், தேர்தலின்போது அவருடைய முக்கியத்துவம் அதிகமாகிறது. சில தகுதிகளைப் பெற்றால், ஒரு ஓட்டுடன் மற்றும் ஒன்றோ இரண்டோ கிடைக்கும் என்ற நிலை இருப்பது காரணமாக, மக்கள், அந்த அதிக ஓட்டுகளைப் பெறுவதற்காக, தனித்திறமைகளைப் பெற முனைவார்கள்—அதன் காரணமாக, சமுகத்தின் மொத்தத் தரம் உயரும், என்ற கருத்து எடுத்துக் காட்டப்படுகிறது.

ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான் ஜனநாயகத்திலே அடிப்படையாக இருக்கிறது என்றாலும், இப்போதேகூட, ஒருவர் பி.ஏ. பட்டதாரியாக இருந்தால், அவருக்கு எல்லோருக்கும் கிடைக்கும் அடிப்படை ஓட்டு மட்டுமல்லாமல், பட்டதாரி என்பதற்காக, ஒரு ஓட்டு கிடைக்கிறது. அவர் இரண்டு ஓட்டுகளுக்கு உரிமையாளர். அவரே, மாநகராட்சி மன்றம், நகராட்சிமன்றம் ஆகியவற்றிலே உறுப்பினரானால், அந்த மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமையும் கிடைக்கிறது—ஆக அவருக்கு மொத்தத்தில் மூன்று ஓட்டுகள். ஒருவர் பி.ஏ. படித்திருந்து, ஆசிரியராகப் பணியாற்றினால் பொது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அதிலே கலந்துகொள்கிறார் அதற்கு ஓட்டு இருக்கிறது; பிறகு பட்டதாரிகள் தொகுதித் தேர்தலின் போது கலந்து கொள்கிறார், அதிலே ஓட்டு இருக்கிறது, மூன்றாவதாக ஆசிரியர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் அதற்கும் ஓட்டளிக்கிறார்—ஆக அவருக்கு 3 ஓட்டுகள். ஆனால் பொதுவாக, ஜனநாயக அடிப்படை என்று நாம் கூறுவது ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதைத்தான். அந்த அடிப்படை நடைமுறையில் இருக்கும் நாடுகளிலேயே இது போல மூன்று ஓட்டுகள் பெறுகிற உரிமை சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது—சில தனித் தன்மைகள் சிறப்புகள் காரணமாக.