உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/கைது செய்தார்கள்

விக்கிமூலம் இலிருந்து

கைதி எண் 6342

1. கைது செய்தார்கள்....
(கடிதம் 1- காஞ்சி, 20-9-1964)

தம்பி!

பாரிஸ், இலண்டன், வாஷிங்டன், டோக்கியோ இப்படிப்பட்ட எழில் நகர்களில், ஐம்பது அடுக்குமாடிக் கட்டடத்தில், மினுமினுப்பும் வழவழப்பும் உள்ள மெத்தையில் அமர்ந்தபடி, தான் கண்ட காட்சிகளையும் கோலங்களையும், உரையாடிய நண்பர்கள் குறித்தும், களிப்புப்பெற்ற கலைக் கூடங்கள் பற்றியும், வாங்கிவைத்துள்ள பொருள்பற்றியும், வருவதற்கான நாள்பற்றியும், தம்பிக்கு எழுதும் அண்ணன்மார்கள் உண்டு. உனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறேனே! குறைந்த பட்சம் பினாங்கு, சிங்கப்பூர், கொழும்பு, ஜகார்தா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருந்தாவது கடிதம் எழுத முடிகிறதா? உனக்குக் கிடைத்த அண்ணன் அப்படி! என்ன செய்வது!! சிறையிலிருந்து கொண்டு எழுதுகிறேன். சிறைதானே என்று அலட்சியமாகவும் எண்ணிவிடாதே, தம்பி! மாடிக்கட்டிடம்! தனி அறை!! கட்டுக்காவல் சூழ!! கம்பிகள் பதித்த கதவு! காற்றைத் தடுத்திடும் அமைப்பு! இலேசான இடமல்ல!!

மாடிக் கட்டிடம்—5ம் நம்பர் அறை— மணி கூட அடிக்கிறது 9—நவம்பர் 25.

தொலைவிலே உள்ள பொது இடத்துக் கடிகாரமணி! கடிகாரங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் தொட்டும் தொடர்ந்து இரண்டு மூன்று கடிகாரங்களின் மணியோசை கேட்கிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான இசைநயத்துடன். இந்த இசையை விரட்டும் அளவுக்கு, மின்சார இரயில் வண்டிகள் கிளப்பும் ஓசை!!

சென்னை நகரத்து மையத்தில்தானே இருக்கிறேன். நகரத்தையும் நகரமக்களையும் பார்க்க முடியாதே தவிர, நகரம் எழுப்பிடும் நாதத்தைக் கேட்கமுடிகிறது— அதிலும் இரவு நேரத்தில் தெளிவாக மின்சார ரயில் கிளப்பும் ஒலி காதிலே விழும்போதெல்லாம், ஒவ்வொரு விதமான பொருளுள்ள சொற்றொடர் நினைவிற்கு வருவதுபோல, ஒரு மனமயக்கம்! சிறுவயதுக்காரருக்கு மட்டுந்தான் அப்படி ஒரு மயக்கம் ஏற்படும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்—வயது ஆனவர்களுக்குந்தான் ஏற்படுகிறது.

5-ம் நம்பர் அறை, எனக்கு எற்கெனவே பழக்கமான இடம்; ஆமாம் தம்பி! இங்கு நான் இப்போது மூன்றாவது முறையாகத் தங்கி இருக்கிறேன்.

முன்பு தங்கியிருந்தபோது, இந்த மாடிக் கட்டிடம் முழுவதும், நமது கழகத் தோழர்கள் நிரம்பி இருந்தனர். பூட்டிவிட்ட பிறகு, அவரவர்கள் தத்தமது அறையிலிருந்தபடியே பேசிக் கொள்வதுண்டு. இம்முறை, நான் மட்டும் தான் இங்கு—நமது தோழர்களை, சிறையில் வேறோர் பகுதியில் வைத்துவிட்டார்கள். என்னுடன் இருப்பவர்கள் இருவர்—ஒரு முஸ்லீம் பெரியவர்—மற்றொருவர் செட்டி நாட்டுக்காரர். இருவரும், அமைதி விரும்புபவர்—என்பால் அன்பு கொண்டவர்கள். அரசியல்பற்றி அதிகமாகப் பேசுபவர்கள் அல்ல—விஷயம் தெரியாதவர்களுமல்ல.

சிறையிலே தம்பி, ஒருவன் எவ்வளவு காலம் நம்மோடு இருக்கப்போகிறவன் என்பதைப் பொறுத்தே பெரிதும் பழக்கம் ஏற்படும். சிறைபாஷையிலே, "தள்டா! அவன் போயிடுவான் பத்து நாள்லே! நம்ம கதையைச் சொல்லு, கிடக்கணுமே அடுத்த ஆடிவரைக்கும்" என்று கூறுவார்கள்.

என் 'கதை' இருக்கிறதே, இது எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை! மற்றவர்களுக்கு எப்படித் தெரிய முடியும்!! எத்தனை நாட்களோ! மாதங்களோ! ஆண்டுகளோ! இழுத்துக் கொண்டு வந்தார்கள், பூட்டி வைத்திருக்கிறார்கள். எதற்காகக் கொண்டு வந்தார்கள் என்று சட்டசபையிலே பேசப்படுகிறது. படித்துப் பார்க்கிறேன்—எனக்குச் சொன்னவர் எவரும் இல்லை.

"எதற்காகக் கைது செய்கிறார்கள் என்பதைக் கூற வேண்டும்' என்று என் நண்பர் வழக்கறிஞர் நாராயண சாமி, உயர்நீதி மன்றத்தில் வாதாடுகிறார். நான் எங்கே போய் வாதாடுவது? நில் என்றார்கள்; நின்றேன்! ஏறு என்றார்கள்; ஏறினேன்! இரு என்றார்கள்; இருக்கிறேன். இன்று எத்தனை நாள்? I6-ந்தேதி பிடித்தார்கள்!

பார்த்தாயா, தம்பி! எனக்கே, போலீஸ் 'பாஷை' வந்துவிட்டது—பிடித்தார்கள்!! அந்த அகராதி, எளிதாகப் பழக்கத்துக்கு வந்துவிடுகிறது.

சிலர் என்னைக் கேட்டார்கள்-இங்கு அல்ல-சைதாப்பேட்டை சப் ஜெயிலில்—மரியாதையாக "அய்யா பேர்லே என்ன கேஸ் போட்டிருக்காங்க?" என்று. என்ன பதில் சொல்வது? 'இன்னும் ஒண்ணும் போடல்லே' என்றேன். 'கேஸ் போடாத முன்னயே ஜெயிலா!!'— என்றார்கள். இப்போதும் எனக்குத் தெரியவில்லை—என் பேரில் வழக்கு உண்டா, இல்லையா என்பது. (நவம்பர் 26-ல் புரிந்தது!)

நவம்பர் 17-ல், சென்னை அறிவகத்திலிருந்து கிளம்பி, திருவல்லிக்கேணி கடற்கரைப் பக்கம் சென்று, அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவைக் கொளுத்துவது என்பது நான் மேற்கொண்ட திட்டம்.

நவம்பர் 17 காலை 9மணி சுமாருக்கு, நான் திருவல்லிக்கேணி கடற்கரைப் பக்கம் சென்றேன் என்றால், திடுக்கிட்டுப் போவாயல்லவா—ஆனால் உண்மையாகவே, சென்றேன். நடந்து அல்ல! விலையுயர்ந்த மோட்டாரில்! தனியாக அல்ல; போலீஸ் துணைக்கமிஷனர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். சிறுதூறல்! என்னை, போலீஸ் கொட்டடியிலிருந்து, அந்த அதிகாரி அழைத்துக் கொண்டு போகிறார், திருவல்லிக்கேணி கடற்கரைப் பாதையாக, கமிஷனர் அலுவலகத்துக்கு. என்னையுமறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.

"அவசரப்பட்டு நீங்கள் நடவடிக்கை எடுத்து விட்டீர்கள், ஐயா! மழை பெய்வதைப் பார்த்தால், என் வேலையை மழையே கெடுத்துவிட்டிருக்கும் போல இருக்கிறதே—" என்றேன்

"இந்த இடத்தில் அல்லவா, இன்று மாலை அறப்போர் துவக்கம் நடைபெற்றிருக்க வேண்டும். தடுத்துவிட்டார்களே” என்று எண்ணினேன். ஏக்கமாகத்தான் இருந்தது.

16ந் தேதி காலை, காஞ்சிபுரத்திலிருந்து, நான், தோழர்கள் பார்த்தசாரதி - பொன்னுவேல் - சுந்தரம் - வெங்கா- ஆகியோருடன், திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக ஜீப்பில் கிளம்பினேன், சென்னைக்கு.

13ந் தேதியிலிருந்தே காஞ்சிபுரத்தில், பல விதமான வதந்திகள்; வந்து கொண்டிருக்கிறார்கள்; வந்துவிட்டார்கள்—பிடிக்கப் போகிறார்கள் - வீட்டிலேயே சிறைவைக்கப் போகிறார்கள்—என்றெல்லாம்.

சென்னையில் கழகத் தோழர்களைக் கைது செய்தது, இந்த வதந்திகளுக்கு அதிக வலிவு கொடுத்தது.

காஞ்சிபுரத்தில், நண்பர்கள், நாலைந்து நாட்களாகவே பரிதாபம் கலந்த முறையில் என்மீது பார்வையைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். சரி! இங்கு இருந்து கொண்டு, வதந்திகளைப் பெற்றுக்கொண்டிருப்பானேன்—சென்னைக்கே செல்வோம் என்று, 16-ந்தேதி காலை கிளம்பினேன். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில், அன்று கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை, 17-ந்தேதி, நிகழ்ச்சியின் போதுதான் 'பிடிப்பார்கள்' என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஜீப், பூவிருந்தவல்லி தாண்டிய உடனே, எதிர்ப்புறம் இருந்து வருகிற மோட்டார்கள், வேகத்தைக் குறைத்துக் கொண்டு, என்னைப் பார்க்க ஆர்வம் காட்டத் தொடங்கின. எனக்கு, 'வாடை' புரிந்தது.

வேகமாக வந்துகொண்டிருந்த 'லாரி'யை நிறுத்தினார், டிரைவர் பதைபதைப்புடன்,

"அண்ணே! வளையம் போட்டுகிட்டு இருக்காங்க, அமிஞ்சிகரை கிட்டே" என்றார்.

'போனால் சிக்கிக்கொள்வானே, போலீஸ் தயாராக இருப்பது இவனுக்குத் தெரியாதே, நாமாவது முன்கூட்டிச் சொல்லிவைப்போம்' என்ற எண்ணம், அந்த நல்ல மனம் கொண்டவருக்கு.

"பரவாயில்லை, நடப்பது நடக்கட்டும்."

என்று நான் பதில் கூறிவிட்டுக் கிளம்பினேன்—எதிர்ப்புறமிருந்து வருகிற லாரிகள்—மோட்டார்கள் எல்லாமே, இந்தப் 'போலீஸ் வளையும்' பற்றிக் கூறின. ஒரு ஆர்வமுள்ள லாரிக்காரர், என் மனம் மகிழும்படி சொன்னார்:

"கவலைப்படாதே அண்ணா! நாங்க இருக்கிறோம் வெளியே" என்று.

கொடி ஏறிவிட்டது. இனி திருவிழா நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. நாவலரும், கருணாநிதியும், நண்பர்களும், மோட்டாரில் வந்தார்கள். சென்னையிலிருந்து வழியிலேயே என்னைப் பார்க்க. விவரமாகக் கூறினார்கள் அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, என்னைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக! கேட்டுக்கொண்டு கிளம்பினேன்.

காஞ்சிபுரத்திலிருந்து, அ.க.தங்கவேலர் தமது மோட்டாரில், வந்துகொண்டிருந்தார். அதிலே, என் மகன் இளங்கோவனுடைய மாமனார், பேரளம் குஞ்சிதபாதம் அவர்களும், நண்பர் இராசகோபாலும் வந்துகொண்டிருந்தனர்.

அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, போலீஸ் வான்கள்! சைக்கிள்கள்! இரும்புத் தொப்பிப் போலீசார்! அடே அப்பா! ஏழெட்டுக் கொள்ளைகளை நடத்திப் பிடிபடாத ஒருவனைப் பிடிக்க எடுத்துக் கொள்ளப்படும் 'முஸ்தீப்புகள்'போல!! என்ன வீண் சிரமம்!!

அமைந்தகரை போலீஸ் அதிகாரி, பாதையின் நடுவே நின்றார். நில்! என்று கைகாட்டினார்; ஜீப் நின்றது. முன் பக்கம் உட்கார்ந்திருந்திருந்த என் அருகே வந்தார்.

"என்ன? நான் தேவையா?" என்று கேட்டேன்.

"ஆமாம்" என்றார், சிரித்த முகத்துடன்.

"நான் மட்டுமா? என்னோடு உள்ள நால்வரும் சேர்த்தா?" என்று கேட்டேன்.

"ஐவரும்!"—என்றார். 'ஐவர் அணி' என்று சொல்லி இருந்திருந்தால் அகமகிழ்ச்சி கொண்டிருந்திருப்பேன்.

கீழே இறங்கினேன்—எதிரே, தயாராக இருந்த போலீஸ் வானில் ஏறிக்கொள்ள ஒரு விநாடி யோசித்து விட்டு, போலீஸ் அதிகாரி "ஏன்! ஜீப்பிலேயே போகலாமே, அருகேதான்" என்றார். சரி, என்றேன். என்னுடன் ஜீப்பில் ஏறுவதா கூடாதா என்று அவருக்கு ஐயப்பாடு. "ஏறலாமா?" ஏறிக்கொள்வதிலே தவறு இல்லையே?" என்றெல்லாம் கேட்டார்—குழப்பத்துடன் அவ்வளவு அச்சம் ஏற்பட்டுவிடுகிறது, அதிகாரிகளுக்கு. கழகத் தோழர்களிடம் எந்தக் காரணத்துக்காகத் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டி நேரிட்டாலும், அதை வைத்துக்கொண்டு எத்தக் காங்கிரஸ்காரர் என்ன கலகமூட்டி என்ன தீங்கு தேடிவிடுவாரோ, என்ற அச்சம்! ஆட்சியில் உள்ளவர்கள் நேர்மையாகத்தான் நடந்துகொள்வார்கள்; வீணான கலகப்பேச்சுக்குக் காது கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இப்போது அதிகாரிகளுக்கு இல்லை. நல்ல தமிழில் ஒரு அதிகாரி பேசினாலே, அவர்மீது ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிற காலமல்லவா இது! அதனால்தான், போலீஸ் அதிகாரி. என் பக்கத்தில் உட்கார அச்சப்பட்டார். 'பரவாயில்லை! தவறு இல்லை!' என்று நான் பலமுறை கூறிய பிறகே, வண்டியில் ஏறினார்.

போலீஸ் நிலையம் சென்று ஜீப் நின்றது; உள்ளே, இரும்புத் தொப்பிக்காரர் ஏராளம்.

ஐவரும் உள்ளே சென்று ஒரு பலகை மீது அமர்ந்தோம்.

அங்கு இருந்த இரும்புத் தொப்பிக்காரர், எங்களைப் பார்த்துக்கொண்டு, நின்றிருந்தனர்—ஒருவரும் பேசவில்லை. எனக்கே என்னமோபோல இருந்தது. ஏதாவது பேசிவைப்போம் என்ற எண்ணத்தில், "நீங்களெல்லாம் ரொம்ப நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். வேடிக்கையான பேச்சு என்றுதான் இதனை யாரும் கருதிக்கொள்வார்கள். ஆனால் பாவம், அந்தப்போலீஸ்காரர்கள், அதற்குக்கூடப் பதில் கூறவில்லை; கூச்சம், அச்சம்! அருவருப்பும் அல்ல, கோபமும் அல்ல என்பதை அவர்களின் பார்வை விளக்கிக் கொண்டிருந்தது; அவர்கள் பேசாமல் நின்றது, இன்றைய ஆட்சியில், யாராருக்கு அச்சம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிற்று. இதைக் கண்டு நான் வியப்புற்றேன். ஆனால் அடுத்த கணம், வேறோர் வியப்புக் கிளம்பிற்று. என்னுடைய பேரளத்துச் சம்பந்தியை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்கள், அவரும், எங்களோடு வந்தவர். எனவே கைது செய்யப்பட வேண்டியவர் என்ற கருத்தில், பேரளத்தார் எனக்குச் சம்பந்தியாகி மூன்று மாதம்தான் ஆகிறது! என்னோடு சேர்ந்ததற்காக, அவருக்கும் போலீஸ் கொட்டடியிலே நுழைவு! எனக்கு வியப்பாகவும் இருந்தது, வருத்தமாகக் கூட இருந்தது. என்னென்ன எண்ணிக்கொள்கிறாரோ, என்று வேறு, மனதிலே கொந்தளிப்பு. அதிகாரியிடம் விளக்கம் கூறினேன்—அவர் என் உறவினர்—வெளியூர்—கழகத்தாரும் அல்ல; கிளர்ச்சிக்காகவும் வரவில்லை என்றேன். அதிகாரி, "எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்களுக்குக் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு மோட்டார்களில் கழகத்தார் வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அதிலே ஒரு மோட்டாரில் இவர்! எனவே இவரும், கைதுதான், கமிஷனரிடம் விளக்கம் கூறி விடுவித்துக் கொள்ளுங்கள்" என்றார். அவ்வளவுதான் அவர் கூறமுடியும். நமக்கு உள்ள நிர்வாக முறை, அவ்வளவுக்குத்தான் இடம் அளிக்கிறது. ஏராளமான பொருட் செலவிலே, துப்பறியும் துறை, தகவல் சேகரிக்கும் துறை பணிபுரிகிறது. கழகத் தோழர்கள் எவரெவர்? எவரெவர் கிளர்ச்சியில் ஈடுபடப் போகிறவர்கள்? எப்போ? என்பது அத்தனையும் துரைத்தனம் நன்கு அறியும். நாமும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிவிக்கிறோம், என்றாலும், போலீஸ் துறையினருக்கென்று அமைந்துவிட்டுள்ள வேலைமுறை, உறவினராயினும் விடாதே, உடன்வந்தவர் என்றால், கிளர்ச்சிக்காரராகத்தான் இருப்பார்! என்று கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி காரியம் நடக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, கமிஷனர் அலுவல்கத்திலேதான், பேரளத்தாருக்கு 'விடுதலை' கிடைத்தது. எனக்குச் சம்பந்தி ஆனதற்குக் கிடைத்த சன்மானமா இது என்று எண்ணி, எங்கே சங்கடப்படுகிறாரோ என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால், அவர், வருத்தமோ கலக்கமோ கொள்ளவில்லை. அதைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. பிறகு சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கும் வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. மெத்தச் சிரமப்பட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டேன். காஞ்சிபுரத்திலேயே என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்று வதந்தி உலவியபோது, என்னுடைய இளைய மருமகள், பேரளத்தாரின் மகள், விஜயா, என் மனைவியிடம், "மாமி! முதலமைச்சர் பக்தவச்சலம் எங்கள் குடும்பத்துக்கு ரொம்பத் தெரிந்தவர், வேண்டியவர். நான் போய்க் கேட்கட்டுமா அவரை, ஏன் என் மாமனாரைக் கைது செய்ய எண்ணுகிறீர் என்று" எனக் கூறியதாக, ராணி என்னிடம் சொன்ன நினைவு வந்தது. என்னைக் கைது செய்ய வேண்டாமென்று முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் சிபார்சு செய்ய விரும்பிய விஜயாவுக்கு, பாபம், தன்னுடைய தகப்பனாரையே பக்தவத்சலத்தின் அரசாங்கம் இந்தப்பாடு படுத்திவிட்டதைக் கேள்விப் பட்டபோது, முகம் எப்படி ஆகி இருந்திருக்கும்! நான் தான் உள்ளே இருந்தேனே, பார்க்க முடியவில்லை; ஆனால் யூகித்துக் கொள்ள முடிகிறதல்லவா!

பெரிய கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்கள், சர்க்காரைக் கவிழ்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் பிடி பட்டால், அவர்களை, ஒரே இடத்தில், சிறை வைப்பது இல்லை. பிரித்துப் பிரித்து, தனித்தனியாகச் சிறை வைப்பார்கள். இது போலீஸ் முறை, வழக்குகளுக்குத் தேவையான துப்புகள் பெறவும், சாட்சிகள் சிதையாமல் பார்த்துக்கொள்ளவும், இந்த முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாங்கள் ஐவர் தானே கிடைத்தோம்—எனவே, அந்த முறையை, மெத்தச் சிரமப்பட்டு, எங்கள் விஷயத்தில் உயர்தரப் போலீஸ் அதிகாரிகள் கையாண்டனர். கேலிக் கூத்தல்லவா என்பீர்கள். நடந்ததே!!

பொன்னுவேல், பட்டப்படிப்புப் பெற்ற இளைஞர்; பொறுப்புமிக்க குடும்பத்தினர். அவர்மீது, கலகம், அடிதடி முதலிய எந்தவிதமான புகாரும் சுமத்தப்பட்டதுகூட இல்லை. என்னோடு, விலைவாசிக் குறைப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் இருந்தவர்!

வெங்கா என்ற இளைஞர், நிலபுலத்துக்கு உரியவர், அமைதியானவர், அச்சிறுபாக்கத்தை அடுத்த சீதாபுரம் என்ற சிற்றூரில், மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர். பார்த்தாலே புரிந்துவிடும் படபடப்பான நடவடிக்கையில் கூட அவர் ஈடுபடமாட்டார்—ஈடுபடக் கூடியவர் அல்ல என்பது.

கிளர்ச்சி பார்த்தசாரதி—தாத்தாவானவர்—கழகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்—கழகவரலாறு தொகுத்து அளித்தவர்—வில்லிவாக்கத்தில் வீடும் வாசலும் உடையவர்—பொறுப்பற்ற செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல.

சுந்தரம்—சென்னையில், தையற்கலையில் சிறப்பிடம் பெற்று விளங்குபவர்—தையற்கலை பற்றி பல நூற்களை வெளியிட்டு, புகழ் ஈட்டியவர். எப்போதும் இதழோரத்தில் ஓர் புன்னகை தவழும்; அவர்மீது எந்தவிதமான கலகம், அடிதடிபோன்ற வழக்குகளும் கட்டிவிடப்பட்டதுகூட இல்லை.

என்னை, நான் விளக்கத்தேவை இல்லை; அமைதியான அரசியலை நாடுபவன்!

இந்த ஐந்துபேர்களை, வெடிகுண்டு தாயாரித்தவர்கள், விடிவதற்குள் எட்டு ஊர்களைக் கொளுத்தத் திட்டமிட்டவர்கள், அரிவாள் தீட்டினவர்கள், அடித்து விரட்டுபவர்கள் போன்றவர்களை நடத்துவதுபோல், ஒன்றாகக் கைது செய்து ஒவ்வொருவரை ஒவ்வொரு பக்கமாக இழுத்துக்கொண்டு போயா, கொட்டடியில் போட்டு அடைப்பது! தேவை தானா? முறைதானா?

நான் அடையாறு போலீஸ் கொட்டடியில்; பொன்னேரியில் சுந்தரம்; பூவிருந்தவல்லியில் பொன்னுவேல்; காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதி; செங்கற்பட்டில் வெங்கா!!

அவ்வளவு சர்வஜாக்ரதையாக, வேலை செய்கிறதாம் போலீஸ் இலாகா!!

நாங்கள் ஐவரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டால், என்ன விபரீதம் ஏற்பட்டுவிடும்? உடனே கூடிப் பேசி, 17ந்தேதி எப்படித் தப்பித்துக் கொண்டு வெளியே சென்று சட்டத்தைக் கொளுத்துவது என்று திட்டம் தீட்டிச் செயல் பட்டுவிடுவோமா? அல்லது, எங்கள் ஐவரையும் ஒருசேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல்கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லைகொடுத்து விடுவார்களா? என்ன எண்ணிக்கொண்டு, என்ன, காரணத்துக்காக, இந்த ஐவரையும், பிரித்துப் பிரித்துத் தனி இடத்தில் காவலில் வைக்கவேண்டும்!! தெரிந்தால் தெரிவியுங்கள்; எனக்கு இதிலே தெளிவோ, திட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பிறகு அடைத்து வைத்த சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கள்ளநோட்டு வழக்கில் சம்பந்தப் பட்ட 8 பேர், ஒரே இடத்தில்தான் இருந்தார்கள்! அத்தகைய விவகாரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை விட 'ஜாக்ரதை’யான ஏற்பாடுகள், வெளிப்படையாக, இன்ன காரியத்தை, இன்ன இடத்தில், இந்த நேரத்தில் செய்யப்போகிறோம் என்று முன் கூட்டியே தெரிவித்துவிட்டு, ஒரு அறப்போர் நடத்த முன்வந்த எங்கள் விஷயத்திலா கையாள்வது! ஒரு காரணம், அவசியம், பொருள், பொருத்தம், இருக்கவேண்டாமா! இப்படி இயங்குகிறது ஒரு அரசு. இந்தவிதமாக நடத்தப் படுகிறார்கள், பொதுவாழ்க்கையில் பணி புரிபவர்கள்—அதிலும் சுயராஜ்ய காலத்தில்!!

அந்தந்த ஊர் போலீஸ் அல்லது சிறைக் கொட்டடியில் உள்ளவர்கள், என்ன எண்ணிக் கொள்வார்கள், என்ன பேசிக்கொள்வார்கள், இப்படி தனித்தனியே, கொண்டுவந்து அடைத்ததுபற்றி?

'பெரிய பக்காத் திருடன்போல இருக்கிறது. அதனால்தான் இவனை இவனுடைய கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனியாகக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள்' என்று பேசிக்கொள்வார்கள். இதிலே, போலீசுத் துறைக்குக் கிடைக்கும் கீர்த்தி என்னவோ, இலாபம் என்னவோ, சுவை என்னவோ, எனக்குப் புரியவில்லை!

அடையாறு போலீஸ் கொட்டடி போய்ச் சேருகிறவரையில், எனக்கு எங்கேபோகிறோம் என்பது தெரியாது. அதிகாரியை நான் கேட்கவுமில்லை. இரண்டு நாள் கழித்துத்தான், மற்ற நால்வர் சென்ற இடங்களும் எனக்குத் தெரிய வந்தன.

அடையாறு போலீஸ் கொட்டடியும் எனக்கு முன்பே பழக்கமான இடம்தான்—1957 ல் ஒரு இரவு, நமது நண்பர்களுடன் அடைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துக் கொண்டுவந்த துணைக் கமிஷனர் உத்தரவிட்டார், எனக்குச் சாப்பாடு கொண்டுவரச் சொல்லி. சாப்பாடு முடிகிறவரையில், மிக இயற்கையாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு துணைக் கமிஷனர் சென்றுவிட்டார். போலீஸ் நிலைய அதிகாரிகள், மெல்லிய குரலில் 'லாக்-அப்' என்றார்கள். பகல் 1 மணிக்கு! கைதி! லாக்-அப்பில்தானே போட்டாக வேண்டும். அதுதானே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிமுறை! கைதி என்றால் எல்லோரும் ஒன்று! அதிலே தராதரம் பார்க்கத் தேவையில்லையா! அரசியல் கிளர்ச்சி காரணமாகக் கைது செய்யப் பட்ட ஒருவரை, அறையிலே போட்டுப் பூட்டிவைக்கா விட்டால் தப்பித்துக்கொண்டு ஓடியா போய்விடுவார்!—என்றெல்லாம் கேட்டார்கள்! பொதுமக்களின் பேச்சா இன்று ஆளுகிறது! சட்டம், ஆள்கிறது, சட்டம்! அந்தச் சட்டம் சொல்கிறது, கைதியை லாக்-அப்பில் வை!—என்று. அதன்படி நடந்தாக வேண்டும் அதிகாரிகள். அதிகாரிகள் கண்களிலே ததும்பிய பாசம், பயம், திகைப்பு எல்லாம் எனக்குப் புரிந்தது. எத்தனையோ போலீஸ் கொட்டடிகள் இருக்க, இங்குதானா இவனை அழைத்துக் கொண்டுவர வேண்டும்—நமக்குச் சங்கடமாக இருக்கிறதே என்றுதான் அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். அவர்கள், சிறிதளவு அன்பு காட்ட எண்ணினால், தீர்ந்தது, யார் என்ன கோள் மூட்டிவிடுவானோ, தலைக்கு என்ன தீம்பு வந்துவிடுமோ என்ற பயம் அவர்களைப் பிய்த்துத் தின்கிறது.

'லாக்-அப்' செய்யப்பட்டேன்! கடப்பைக் கற்கள் பரப்பப்பட்ட சிறிய கொட்டடி. போலீஸ் நிலையமே 1957ல் நான் பார்த்த அதே நிலையில்தான் இருக்கிறது—இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் அதைத் தீண்டியதாகத் தெரியவில்லை, ஒழுக்கல்! இட நெருக்கடி!

லாக்-அப்பில், கீழே விரித்துக்கொள்ள என்ன கிடைக்கும்? ஒரு பழய விரிப்பு! அதுவும், பாவம், யாரோ கான்ஸ்டபிளுடையதாக இருக்கும். நான் கொண்டு போயிருந்த சால்வை தலையணை ஆயிற்று. பிற்பகல் நாலு மணிக்குத்தான் விழித்துக்கொண்டேன். பிடிபடுவதற்கு முன்பு நாலைந்து இரவுகள் எனக்குச் சரியான தூக்கம் கிடையாது. எனவே, இடத்தின் இடர்ப்பாடு பற்றிய கவலையற்றுத் தூங்கிவிட்டேன். போலீஸ் அதிகாரிகள், என்ன... எண்ணிக் கொண்டார்களோ தெரியவில்லை. பயலுக்குப் பழக்கம்! என்று எண்ணிக்கொண்டார்களோ—பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்களோ—இவனுக்கு ஏன் இந்த வேலை, இவன் படித்த படிப்புக்கு ஒழுங்காக எங்காவது வேலைக்குப் போயிருந்தால், இப்போது ரிடயராகி, பென்ஷன் கேட்டிருக்கலாம்; இப்படி லாக்-அப்பில் கிடக்கிறானே என்று பரிதாபப்பட்டார்களோ, தெரியாது.

தம்பி! நமக்கு இருப்பதைவிட இத்தகைய அதிகாரிகளுக்குச் சங்கடம் அதிகம்—அதனை உணர்ந்திருக்கிறாயோ இல்லையோ, தெரியவில்லை.

பொதுவாகவே, ஏற்பட்டுவிடும் உணர்ச்சிகளைப் பேச்சினால், வெளியே கொட்டிவிட்டால்தான், மனதுக்கு ஒரு நிம்மதி—பெரிய பாரத்தைக் கீழே இறக்கிவிட்ட போது ஏற்படும் நிம்மதி—உண்டாகும். உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி வெளியே காட்ட முடியாமல், மனதுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால், மனம், சுமையினாலே பாதிக்கப்பட்டுவிடும். வேதனை அதிகமாகி விடும்.

நாம் நமது உணர்ச்சிகளைப் பேசி வெளிப்படுத்துகிறோம்—பாரம் குறைகிறது—மனதுக்குச் சுமை இல்லை.

இந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? நெஞ்சில் இருப்பதை நாவுக்குக் கொண்டுவர முடியாது தத்தளிக்கிறார்கள். என்னை மட்டுமா அவர்கள் 'லாக்-அப்' செய்தார்கள்? தங்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடிய பரிவு, பச்சாதாப உணர்ச்சி, எல்லாவற்றையும் சேர்த்துதிதான் 'லாக்-அப்' செய்துவிடுகிறார்கள்!!

இவ்விதமே செய்து செய்து, சில காலத்திற்குப் பிறகு, அத்தகையவர்கள், உணர்ச்சிகள் எளிதிலே எழமுடியாத 'மனம்' பெற்று விடுகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள், 'பிடிபட்ட'வர்கள், தங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள். ஆணைக்கு அடங்க மறுத்தவர்கள் வம்புதும்பு பேசுபவர்கள் என்ற வகையினராக இருந்தாலாவது, கோபம் கொண்டு, அமுல் நடத்த வசதி ஏற்படும். "பயல் பத்து நாட்களாகச் சிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான்; பிடிக்கச் சென்ற கான்ஸ்டபிளுடைய கையைக் கடித்துவிட்டான்; எவனும் தனக்கு நிகர் இல்லை என்ற விதமாகப் பேசுகிறான்"—என்று கூறி, கோபத்தைக் காட்டலாம். என் போன்றாரிடம், அவர்களுக்குக் கோபம் ஏற்பட ஒரு காரணமும் கிடையாதே! ஆகவே, கோபஉணர்ச்சி எழ வழி இல்லை; பரிவு பச்சாதாப உணர்ச்சியை வெளிப்படுத்த முடிவதில்லை. மெத்தத் தத்தளிக்கிறார்கள்.

சிறிதளவு ஏமாந்தால் மேலே பாய்ந்து பிய்த்து எறிந்துவிடும் கொடிய புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றைக் கூண்டிலே நிறுத்தி வைத்து, சர்க்கஸ்காரர் கையிலே சவுக்கும் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு மிரட்டுவதையும், அந்த மிருகங்கள் உறுமுவதையும், உடனடியாக அடங்க மறுப்பதையும், இரண்டொரு அடிகள் விழுந்த பிறகே அடங்குவதையும் பார்க்கும்போது, காட்சி களிப்பளிப்பதாகக்கூட இருக்கிறது. ஆனால் அதே சர்க்கஸ்காரர், அதே கூண்டிலே, ஆடு, முயல், அணில், இவைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, சவுக்கும் துப்பாக்கியும் கரத்தில் வைத்துக்கொண்டு மிரட்டினால், பார்ப்பதற்கு எப்படி இருக்கும்! அரசியல் பிரச்சினைகள் காரணமாகக் கிளர்ச்சிகளை மேற்கொள்பவர்களை, இன்று போலீஸ் துறையினரிடம் ஒப்படைப்பது, எனக்கு, ஆடு, முயல், அணில் போன்றவைகளைச் சிறுத்தை, புலி, சிங்கம் ஆகிய வற்றை அடக்கி ஆளும் வேலைதெரிந்த சர்க்கஸ்காரரிடம் ஒப்படைப்பது போன்ற வேடிக்கையாகவே தோன்றுகிறது.