உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

19. விலங்கின் கதை...
வேதனை நிகழ்ச்சிகள்

(கடிதம் 19. காஞ்சி-4-4-65)

தம்பி

பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி "இது என்ன?" என்று கேட்கிறான். இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி. "பெயர்?" "தெரியாது". "எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது?—யாரும் கொடுக்கவில்லை—ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்." —"பார்த்து?" "இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்".-"இவர் அருளாளர் என்று யார் சொன்னார்கள் உனக்கு?"—"ஒருவரும் சொல்லவில்லை; எனக்கே தோன்றிற்று முகத்தைப் பார்த்ததும். மற்ற அடியார்களை விட இவர் மேலானவர் என்று தோன்றிற்று. அதனால் தான், முன்பு ஏசுவுக்குப் பக்கத்தில் இருந்த அடியார் படத்தைச் சற்றுத்தள்ளி மாட்டிவிட்டு, இவர் படத்தை ஏசுவுக்குப் பக்கத்திலே மாட்டி பூஜை செய்தேன்."

வாலிபன் புன்னகை புரிந்தான்—இந்த முறை ஏளனமாக அல்ல—பெருமிதத்துடன், ஏனெனில் கிழவி கண்டு கொண்டு வந்து பூஜா மாடத்தில் வைத்து, இவர் ஏசுவுக்குப் பக்கத்தில் இருக்கவேண்டிய அருளாளர் என்று கருதிபூஜை நடத்தி வந்தது, —எந்தப் படத்துக்கு என்றால், காரல் மார்க்ஸின் படம்!

"இந்த அருளாளரின் போதனையின்படி நடந்தால், ஏழை எளியவர்கள் புது வாழ்வு பெறுவார்கள்" என்று கூறினான் களிப்புடன்."

மழை நின்றது....

ஒருநாள் கிழவி, வெளியே சென்று அலைந்துவிட்டு அலுத்துப்போய் வீடு திரும்பினாள். வீட்டு எதிரே சாமான்கள் நிரம்பிய பாரவண்டி நிற்கிறது. வீட்டின் கூரைப்புறத்தில் இரண்டு ஆட்கள் உட்கார்ந்து கொண்டு, பலகைகளைப் பழுது பார்ப்பதும், கெட்டுப் போனவைகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய பலகைகள் அமைப்பதுமாக இருக்கிறார்கள். விவரம் புரியாமல் முதலில் காகூவெனக் கூச்சலிடுகிறாள். "கிழவி! ஏன் கூச்சல் போடுகிறாய். உன் வீடு மெத்தக் கலனாகி விட்டிருக்கிறது. அது விழுந்து விடாதபடி, பழுது பார்த்துக் கொடுக்கிறோம். உன்னுடைய வீட்டை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள் பதறாதே" என்று கூறினார்கள்.

"என் வீடு விழாதபடி செய்கிறீர்களா! புதுசாக்குகிறீர்களா! நல்லவர்களப்பா நீங்கள். ஆமாம், யாருடைய உத்திரவு இதற்கு—இந்த ஏழையின் கஷ்டத்தைத் தெரிந்து இந்த உதவியைச் செய்யச்சொன்ன உத்தமன் யார்? அருளாளர் யார், அடியார் யார்?" என்று நெஞ்சு நெகிழக் கேட்கிறாள் கிழவி. வீடு பழுது பார்ப்பவர்கள், "நாங்கள் மாவட்ட பொது உடைமைக் காரியலாய உத்திரவு பெற்று, இதனைச் செய்கிறோம்" என்றார்கள். கிழவிக்குப் புரியவில்லை.

வீடு செப்பனிடப்பட்டாகிவிட்டது. குளிர் தெரிய ஒட்டாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. உள்ளே செல்கிறாள் கிழவி: உட்காருகிறாள்; நிம்மதி பெறுகிறாள்; என் பூஜை பலித்தது; என் பிராத்தனைக்குப் பலன் கிடைத்தது என்று கூறி தொழுகை நடத்துகிறாள்—குறிப்பாக, பெயர் தெரியாத புதிய அருளாளருக்கு.

காரல் மார்க்சின் படம் கர்த்தரின் படத்துடன் ஒரே வரிசையில் பூஜா மாடத்தில் இருக்கிறது.

அருள்பாலித்தவர் என்று நெஞ்சு நெக்குருகத் தொழுகிறாள் கிழவி—அவள் அறியமாட்டாள் பூஜா மாடங்கள் பணக்காரர் தமது ஆதிக்கத்துக்காக ஏற்படுத்திவைத்த கபடக் குகைகள் என்று போதித்த காரல்மார்க்சின் திருஉருவப்படம் அது, என்பதை.

மற்றோர் கதை, கைதியின் கதை.

ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்தத் தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி, கதை, இந்த விலங்கைப்பற்றித்தான்— 'விலங்குவிடு தூது!' என்ற கருத்துப்பட, கதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தக் கால்விலங்கை, மற்றோர் கைதி பார்க்கிறான், உற்றுப் பார்க்கிறான், தொட்டுப் பார்க்கிறான், மகிழ்ச்சியுடன் பார்க்கிறான். பார்த்துவிட்டு, "அதேதான்! அதே விலங்குதான்! அதிர்ஷ்ட விலங்கு!" என்று கூறுகிறான். விலங்குகளிலே, அதிர்ஷ்டமானது அதிர்ஷ்டக்கட்டை என்று என்ன இருக்கிறது என்று புரியவில்லை, தொழிலாளிக்கு. விவரம் கேட்கிறான்.

"இதே விலங்குதான் முன்பு ஒரு முறை எனக்குப் பூட்டினார்கள்! கழற்றிவிட்டு ஓடித் தப்பித்துக் கொண்டேன். அதற்கு முன்பு ஒருமுறை இதே விலங்கை வேறு ஒருவனுக்குப் பூட்டியிருந்தார்கள். அவனும் இதைக் கழற்றிப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். இது கைதிகளைத் தப்பி ஓடிவிடச் செய்யும் விலங்கு! அதிர்ஷ்ட விலங்கு" என்று கூறினான்.

தன் சிறை வாழ்க்கைபற்றி, தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், மகன், இந்த விலங்குபற்றி குறிப்பிட்டிருந்தான்—சிறை அதிகாரிகள் கண்ணில் படலாமா இப்படிப் பட்ட கடிதம். ஆகவே கடிதத்தை அனுப்ப வேண்டிய முறைப்படிதான், இரகசியமாக அனுப்பி வைத்தான். மகன் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தைப் படித்த தகப்பனுக்கு, அந்த விலங்குமீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. எப்படியாவது அந்த இரும்புச் சங்கிலியையும் விலங்கையும், தனக்கு அனுப்பிவைக்கும்படி கடிதம் எழுதினான். மகன், தந்திரமாக, அந்த விலங்கைத் தகப்பனாருக்கு அனுப்பிவைத்தான். அது கிடைத்ததும், தொடுவதும், குலுக்கி கிளம்பும் ஓசையைக் கேட்பதும், மனைவியிடமும் மற்ற மகன்களிடமும் காட்டுவதும்—தகப்பனுடைய பெருமை நிறைந்த வேலையாகிவிட்டது.

"தொழிலாளிகள் உரிமைபெற்று வாழவேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட என் மகன் காலிலே, இருந்த விலங்கு இது. பார் இது பாடுவதை, பாடலின் பொருள் புரிகிறதா!"—என்று பேசியபடி விலங்கை நண்பர்களிடம் காட்டுவான்.

தொழிற்சாலையிலே ஒரு விழா வந்தது. அந்த விழா நாளன்று ஆடல் பாடல். அந்த விழாவிலே விலங்கு கொண்டுவரப்பட்டது. அதை ஒருவர் அணிந்துகொண்டு நடப்பது, அதிலே கிளம்பும் ஓசையைக் கேட்டு மகிழ்வது விலங்கைக் கையிலே எடுத்துக் கொண்டு குலுக்குவது, அதனால் கிளம்பும் ஓசையை இசையாகக் கொண்டு நடனமாடுவது. இப்படி நடந்தது. என் மகன் காலில் இருந்த விலங்கு—என்று கூறிக்கொள்வதிலே அந்தத் தகப்பனுக்கு ஒரு தனிப்பெருமை, தனி மகிழ்ச்சி!

தொழிற்சாலை முதலாளிக்கு விஷயம் எட்டிற்று, வெகுண்டெழுந்தான்—"எங்கே விலங்கு?" யாரிடம் இருக்கிறது? எப்படிக் கிடைத்தது?" என்று கேள்விகளை அடுக்கினான் அவன். தேடிட ஆட்களை ஏவினான். விலங்கோ, ஒருகையிலிருந்து மற்றோர்கை, பிறகு இன்னொருவர் கை என்று மாறிமாறி மறைந்தேவிட்டது—பாதுகாப்பான இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டது—முதலாளியால் கண்டு பிடிக்க முடியவில்லை.

புரட்சி வந்தது, புது ஆட்சி எழுந்தது. முதலாளி தத்துவம் முறிந்தது. தொழிற்சாலைகள் பொது உடைமையாயின.

கைதியாகச் சென்ற மகன், இதற்கிடையில், சிறையினிலும் தப்பிச் சென்றான்; புரட்சியில் பங்குகொண்டான் என்று கேள்விப்படுகிறான் தகப்பன்; மேலும் பெருமைப்படுகிறான்.

பொது உடைமை ஆட்சி ஏற்பட்டுவிட்டது. இனி விலங்குக்கு விடுதலை—இதைக் கண்டுபிடிக்க மோப்பமிடும் முதலாளி இனி இல்லை—விலங்கு இனித் தலைமறைவாக இருக்கத் தேவை இல்லை என்று கூறி, தன் வீட்டுக் கூடத்தில், அந்த விலங்கைத் தொங்க விட்டிருந்தான், காட்சிப் பொருளாக தொழிலாளர்களும் பொதுமக்களும் அணி, அணியாக அவன் வீடு வந்தனர், விலங்கைக் காண, அதனுடன் இணைத்திருந்த வரலாறு கேட்க, பாட்டாளியின் கதை அறிய, 'என் மகன் காலில் இருந்தது! பாட்டாளிகளுக்காகப் பாடுபட்ட என் மகன் காலில் இதைப் பூட்டி வைத்தார்கள்—என் மகன் இதனால் நசுங்கியா போய்விட்டான்—முதலாளித்தனம்தான் பொசுங்கிப் போய்விட்டது—இதோ, விலங்கு கொலு இருக்கிறது தளைகள் பூட்டப்பட்டிருந்தவர்கள் தரணி ஆள்கிறார்கள்—இதோ கேளுங்கள் விலங்கின் பாடலை என்று கூறி, கையிலே எடுத்து வைத்துக்கொண்டு குலுக்குவான்—அந்த ஓசை இசையாக இருந்தது கேட்பவர்களுக்கு.

எதிர்ப்புரட்சியை அடக்கும் போரில் ஈடுபட்டு மகன் மடிந்துவிட்டான் என்று தகப்பன் கேள்விப்படுகிறான். வேதனை அடைகிறான். தொழில்கள் பொது உடைமையான உடன், வேலை நேரம் குறையும் கூலி வசதி பெருகும் என்று எதிர்பார்த்த தொழிலாளருக்கு, மேலும் உழைக்கவேண்டிய நிலையும், கடினமான சூழ்நிலையும், கூலி உயராத் தன்மையும் ஏற்பட்டது; ஏற்படவே கோபம் கொந்தளிப்பு! என்னய்யா மணலைக் கயிறு ஆகத் திரிப்போம் என்று வாய்வீச்சாக நடக்கிறார்கள்; நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே; பொது உடைமை வந்து கண்ட பலன் இதுதானா? முன்பு வேலை செய்ததைவிட அதிகமாக வேலைசெய்ய வேண்டுமாமே! ஏன்?கூடாது! ஆகாது!—என்றெல்லாம் தொழிலாளிகள் முழக்கம் எழுப்புகிறார்கள். இரும்புப் பட்டறையில் குழப்பமான நிலைமை. பொது உடைமை ஆட்சியினர் இதை எப்படிச் சமாளிப்பது, தொழிலாளிகளுக்கு என்ன விளக்கம் அளிப்பது, சமாதானம் கூறுவது என்று குழம்பிக் கொண்டிருந்தனர். இரும்புப் பட்டறையில் மூண்டுவிட்ட கலவரம் பற்றிக் கேள்ளிப்பட்டதும், அந்த முதியவன் வீட்டுக்கூடத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த விலங்கை எடுத்துக்கொண்டான். நேராகத் தொழிற்சாலை சென்றான். கூவிக்கொண்டும், குழம்பிக் கொண்டும் கிடந்த தொழிலாளர்களை நோக்கினான்—ஒரு மேடை மீது ஏறினான், விலங்கை எடுத்துக் குலுக்கினான்—ஓசை கிளம்பிற்று. கூச்சல் அடங்கிற்று, மேலும் குலுக்கினான்; அனைவரும் அந்த ஓசை இசையைக் கேட்டிடலாயினர்.

"என் மகன் காலில் இருந்த இரும்புச் சங்கிலி—விலங்கு—கேளுங்கள் இதன் இசையை—இதைப் பூட்டினார்கள் என் மகன் காலில்—எத்தனையோ பேர்களுடைய காலில்—ஏழை எளியோருக்குப் பாட்டாளிக்கு முன்பு இருந்த அரசு பூட்டியது விலங்கு! கவனம் இருக்கட்டும்! விலங்கு— நமக்கு! பூட்டியவர்கள் அவர்கள்; இன்று அவர்களை அகற்றிவிட்டோம். நமது அரசு அமைத்திருக்கிறோம். நமது அரசு ஆரம்பமாகி இருக்கிறது. இந்த அரசு முறையில குறை இருக்கலாம் —நீக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் குறை காரணமாகக் குழம்பிவிடுவது கலாம் விளைவிப்பது, ஆட்சியை எதிர்ப்பது என்று பாட்டாளிகள் கிளம்பினால், என்ன நடக்கும்—நமது அரசு விழும்—பழய அரசு எழுமும். பழய அரசு வந்தால் என்ன கிடைக்கும்? இதோ இது! விலங்கு! இரும்புச் சங்கிலி! காலில் விலங்கு! என் மகன் காலில் பூட்டியது போல—புரிகிறதா! கேளுங்கள் விலங்கின்—இசையை கேளுங்கள்—"

இந்தப் பேச்சும், விலங்கு கிளப்பிய ஓசை இசையும், தொழிலாளிகளை, ஒரு முடிவுக்கு வரச்செய்தது.

விலங்கின் இசை புரிகிறது—வேலைக்குச் செல்வோம்—நமது அரசு நிலைத்திடவேண்டும். அதற்காக நாம் கஷ்ட நஷ்டம் ஏற்போம்—விலங்கின்—இசையின் பொருள் அது தான் என்று எண்ணினர். அமைதியாக வேலைக்குச் சென்றனர்.

2—6—64

இன்று காலை ஆறுமணிக்கு அன்பழகன் விடுதலையானார். அவருடன் குழுவினரும் விடுதலை பெறுகின்றனர். இத்தனை நாட்களாக மெத்தவும் எனக்கு உதவியாக இருந்து வந்த அன்பழகன் விடைபெற்றுச் சென்றபோது, இருவருமே ஒரு கணம் கவலைகொண்டோம்; பிறகோ இரண்டு வாரத்திற்குள் நானும் விடுதலை பெறப்போகும் நினைவைத் தருவித்துக் கொண்டோம்.

அன்பழகன் குடும்பமே கழகத்துக்குச் சிதம்பரத்தில் ஆண்டு பலவற்றுக்கு முன்பிருந்தே அணிகலனாய்த் திகழ்ந்து வருவது. அவருடைய தகப்பனார் என்னைத் தருவித்துச் சிதம்பரத்தில் கூட்டம் நடத்தும் அந்த நாட்களில், ஒல்லியான இந்த உருவம் அன்பழகன்—ஓடி ஆடி வேலை செய்யக்கண்டேன். ஆண்டு சில சென்றபின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பயிலக் கண்டேன். அப்போதே ஆர்வம், அஞ்சாநெஞ்சு, உள்ளொன்று புறமொன்று கொள்ளாப் பண்பு, எல்லாம் உண்டு. கழகத் தொண்டு அப்போதே அவருக்குக் கற்கண்டு. இரும்பைக் கரைத்து இன்பவாழ்வு நடத்தும் குடும்பமல்ல—எளிய வாழ்க்கை—என்றாலும் எவரிடமும் இச்சகம் பேசிடவோ, நச்சரித்து வாழ்ந்திடவோ முனைந்ததில்லை. எல்லாப் பிள்ளைகளும் கற்றறிவாளராயினர்—மூவர் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டனர்—அன்பழகன், பச்சையப்பன் கல்லுரியில்—அறிவழகன்; வண்ணை தியாகராயர் கல்லூரியில்; திருமாறன் விருது நகர் கல்லூரியில். கல்லூரியில் அன்பழகன் கழகக் கொள்கைகளைக் கலந்து தமிழ்த்தேன் குழைத்துத் தந்துவந்தார். அதனால் கிடைத்த தோழர் பலர் நமக்கு. முழுநேரம் கழகத்துக்காக்கிடுவேன் என்று என்னிடம் கூறியபோதெல்லாம், தமிழ்ப்பேராசிரியர் எனும் தகுதிநிலை இழத்தல் கூடாது என்று கூறித் தடுத்து வந்தேன்—பிறகு இசைவளித்தேன்—இன்று அவர் மேல் சபையில் உறுப்பினர்; எனக்கு உற்ற நண்பர்.

நான் ஓய்வு விரும்பும்போது, சென்னையில் எனக்கு இல்லம் அவர் இல்லம். கனிவு இருக்கும், குழைவு இருக்காது—தெளிவு இருக்கும் பேச்சில், நெளிவு எழாது. எத்தனையோ தோழர்கள் இதனை எடுத்து எப்படிக்கூறுவது என்று எண்ணி இருப்பதுண்டு—இருவர் என்னிடம் தமது மனதில் பட்டதை மெருகும் ஏற்றாமல் எடுத்துரைப்பர்—இவர் அதில் ஒருவர்—மற்றொருவர் காஞ்சி கலியாண சுந்தரம்.

சிறையிலே சிந்தைக்கு மகிழ்வும் தெளிவும் உண்டாகும் விதமாக எத்தனையோ பேசினோம். குறளின் பொருளதனை சுவைமிஞ்சக் கூறிவந்தார். ஏடு முடித்திட இயலவில்லை, வெளியே சென்று தொடர்ந்து எழுதி முடித்துத் தருவேன் என்றுரைத்துச் சென்றார்.

உடல் நலிவு எனக்கு, அதில் ஏதும் மாற்றமில்லை—உணவுவகை மாற்றமே உற்ற மருந்தென மருத்துவர் உரைத்துச் சென்றார். இரவெல்லாம் கண்விழிப்பு—பகலெல்லாம் வலிபொறுத்தல்—இந்த நிலை நாலைந்து நாளாய். இன்று மருத்துவமனை சென்று வரவேண்டுமென நண்பர்கள் கூறினர்—நானும் அது தேவை என உணர்ந்தேன்—ஆனால் இங்குள்ள மருத்துவர் இப்போதைக்குத் தேவை இல்லை, நோய் கடினமானால் பார்த்துக் கொள்ளலாம் என்ற போக்கில் பேசிச் சென்றுவிட்டார்; பதில் பேசாதிருக்கின்றோம். வலிமுற்றி அதன் வகை முற்றிடும் முன்பு, தக்கமுறையினில் மருந்து உட்கொள்வதுதான் மருத்துவம் கூறும் முறை. ஆனால் கைதிகளுக்குக் காட்டுவது வேறுமுறை; உணர்கின்றேன்.

இன்று மாலை அக்காவும் அண்ணாவும் அடிகளும் இளங்கோவனுடன் என்னைக் காணவந்தனர். ஊரில் உள்ளோர் நலன்பற்றிக் கூறினார்கள்.

புதுமுக வகுப்புத்தேர்வில் கௌதமன், ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் வெற்றிபெறவில்லை என்று சேதி கிடைத்தது.

இன்று இதழ்கள் எங்களுக்கு மாலை ஐந்துமணிக்குத்தான் கிடைத்தன. லால்பகதூர் சாஸ்திரி ஒருமனதாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற செய்தி கண்டோம்.

தொடர்ந்து படித்திட இயலவில்லை—சிலநேரம் படிப்பது, சிலநேரம் பேசுவது, எந்நேரமும் வலிபொறுத்துக் கொண்டிருக்கும் பயிற்சி—இதுபோல் இருக்கின்றேன்.

நாளையத்தினம் விடுதலையாகும் நண்பர்களை, இன்று மாலை தொலைவிலிருந்து கண்டேன். தோழமை வணக்கம் செய்தேன்.

அமெரிக்க நூலாசிரியர் அரிய பல ஏடுகளை ஆக்கித் தந்தவர் அப்டன்சிங்களர் என்பார், பல்வேறு நாடுகளில், பல பேரறிவாளர், நீதிக்காகப் பரிந்துரைத்துரைத்தவைகளைத் தொகுப்பு நூலாக்கித் தந்துள்ளார். இப்போது அதனைத்தான் படித்துப் பயன் கண்டு வருகின்றேன்.

இன்று மாலை, முன்பு திராவிடநாடு அச்சக அலுவல் பார்த்து. இப்போது துரை அச்சக உரிமையாளராகியுள்ள தோழர் சம்பந்தம், மீண்டும் இதழ் நடத்த வேண்டுமெனக் கூறினார்.

என்னாலே இதழ் நடத்தும் பொறுப்புகளை நிறைவேற்ற இயலாது. எழுதித் தரலாம். இளங்கோவன் இதழ் நடத்த இருக்கின்றான் என்று கூறினேன். இதழ் நின்றுவிட்டது எனக்குமட்டும் இனிப்பளிக்குமா? இல்லை. என்ன செய்வது? பொறுப்புகளைக் குறைத்துக் கொண்டாக வேண்டி ஏற்பட்டுவிட்டது.

நேற்றிரவு மழை இலேசாக—இன்று குளிர்காற்று. வெளியே மிகுதியாக, உள்ளேயோ தொடுவதும் படுவதுமாக.

இப்போது நான் தங்கி இருப்பது முதல் எண் உள்ள அறை—அன்பழகன் இருந்த இடம். நான் மூன்றாம் எண்ணுள்ள அறையில் இருந்தபோதும், இந்த அறையினில் அதிகநேரம் கழித்திருக்கிறேன், இப்போது இங்கேயே குடியேறி இருக்கிறேன்.

காலையில், வழக்கமான பார்வையிடல்—வரிசையாக நின்றோம்.

3—6—64

இன்று மாலை துரை அச்சகம் சம்பந்தத்தை சிறை அதிகாரி அழைத்துவரச் சொன்னார். சம்பந்தம் சமையலறைப் பொறுப்பில் இருப்பதால் அதுபற்றி ஏதோ கூற அழைத்தனர் என்று எண்ணிக் கொண்டோம். சில நிமிடங்களில் சம்பந்தம் பயமும் துக்கமும் கலந்த முகத்துடன் திரும்பி வந்து, 'ஒரு வாரம் பரோல் எடுத்திருக்கிறோம் உடனே புறப்படு' என்று சொல்கிறார்கள், அரங்கண்ணலும் சிட்டி பாபுவும், என்ன காரணம் என்று கூற மறுக்கிறார்கள் என்று சொன்னார். அனைவருக்கும் திகிலாகி விட்டது; வீட்டில் ஏதோ விபத்து என்று உணர்ந்தோம். விவரமோ தெரியவில்லை. வேதனையை அடக்கிக்கொண்டு, சம்பந்தம் விடை பெற்றுச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு மணியைக் காண காஞ்சிபுரம் தோழர்கள் வந்திருந்தனர். அவர்கள் மூலமாகச் சேதி தெரிந்தது. சம்பந்தத்தின் மகன் ஏழு வயதுச் சிறுவன் அம்மை நோய் கண்டு இறந்துவிட்டிருக்கிறான்—முந்தின தினம்; மாலை அடக்கம் செய்து விட்டனராம். பிறகு, சம்பந்தம் பரோலில் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. உடலைக்கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எப்படி வேதனைப்படுகிறாரோ, என்னென்ன கூறிக் கதறுகிறாரோ, மகனைப் பறிகொடுத்த தாய் எத்தனை பதறுகிறார்களோ என்றெல்லாம் எண்ணி ஏங்கினபடி இருந்தோம். இழப்புகள், இன்னல்கள், இடாப்பாடுகள் பல பொறுத்துக்கொண்டு, இன்தமிழ் வாழ, வளர, தமது தொண்டினை நல்கும் ஆர்வம், பலரைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இன்று பிற்பகல்தான், சம்பந்தம் சொன்னார்: "அண்ணா, உங்களோடு சேர்ந்து சிறையினிலே இருப்பதாலே தொல்லைகள் மிகுதியாக இல்லை" என்று. வேடிக்கையாக நான் சொன்னேன், "என்னோடு சேர்ந்ததனால் தானே அப்பா, சிறைவர நேரிட்டது உங்களுக்குக்கெல்லாம். உங்கள் வீட்டிலும் வேறு பல இல்லங்களிலும், இவனுடன் கூடிக்கொண்டு, என் மகன் சிறை சென்றுவிட்டான் என்று என்னை ஏசிக்கொண்டிருக்கிறார்களோ என்னமோ" என்று சொன்னேன். சம்பந்தம் போன்ற உழைத்துப் பிழைத்து வரும் தோழர்கள் உயர்பதவி கிடைக்குமென்றோ, ஊர் மெச்சுமென்றோ, வருவாய் பெறத்தக்க வழி கிடைக்கும் என்றோ எண்ணி அதற்காகச் சிறை வந்தவர்களல்ல—நமது கழகத்தொடர்பு கொண்டுள்ளவர்கள். அதன் காரணமாக இத்தகைய வாய்ப்புகளைப் பெறவும் இயலாது. இது நாடறிந்த உண்மை; இருப்பதை இழந்தவர்கள் பலரும் உண்டு. இது நன்கு தெரிந்திருந்தும், அச்சகத் தொழிலாளி சம்பந்தம், அறப்போரில் ஈடுபடத் தாமாக நான் தடுத்தும் கேளாமல் ஈடுபட்ட காரணம், அவர் நெஞ்சத்தில் இடம் பெற்றுள்ள தமிழார்வம், உரிமை உணர்ச்சியன்றி வேறெதுவாக இருக்கமுடியும்? அத்தகைய நல்லார்வம் பெற்றுள்ள தோழருக்கு நேரிட்டுவிட்ட, இழப்பினை எண்ணி எண்ணிப் பெரிதும் வாட்டமுற்றுக் கிடந்தோம்.

அண்ணன்,
அண்ணாதுரை

குறிப்பு: இதன் பின்னர், அண்ணாவின் இந்த கடித வரிசை மேலும் தொடரவில்லை. 8—6—64 தேதியோடு கடிதம் முடிகின்றது. ஜூன் இரண்டாவது வாரத்தில், அண்ணா, தம் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையும் பெற்றார்கள்.