கொச்சகப் பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கொச்சகப் பாடல்கள்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை
பாடல் 5
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 146 & 147
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

இந்த ஐந்து பாடல்களும் கைக்கிளை என்னும் சிற்றிலக்கிய வகை எனக் கொள்ளத்தக்கவை.

Wikipedia-logo-v2.svg
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

கொச்சகம்

1[தொகு]

மெய்ச்சர மாக விளையாடும் வேளையிலே
கைச்சரச மென்ற தல்லால் கைச்சரச மென்றேனோ
அச்சனகியரர் மீதில் ஆசைகொண்ட ராவணனைத்
தச்சுருவ வாளிதொட்ட தாமோத ரேந்திரனே. (1)
இந்தப் பாடலில் தாமோதரேந்திரன் (தமோதர இந்திரன்) என்னும் புரவலன் பாராட்டப்பட்டுள்ளான். இவன் பெயரைப் புலவர் இராமன் பெயரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். தாமோதர இந்திரனாகிய இராமன் சானகிமீது ஆசை கொண்ட இராவணனை அவன் உடம்பில் தைத்து ஊடுருவிச் செல்லுமாறு அம்பு எய்தவன் என்று போற்றுகிறார்.
இந்தப் பாடல் இவனை விளித்து இவன்மிது பாடப்பட்ட ஓர் அகப்பொருள் பாடல்.
தலைவி சொல்கிறாள்
நம் உடம்பை அம்பாக்கி ஒருவர்மீது ஒருவர் பாய்ச்சி விளையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் கையால் சரசம் செய்வது சரி. கைக்கும்படி வேறொருத்தியோடு நீ சரசம் செய்யலாமா என்று தலைவனைக் கேட்டு அவனோடு ஊடல் கொள்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

2[தொகு]

மீன்பார்த்து விண்பார்த்து வேளையும் பார்த்தாள் வரவு
தான்பார்த்து எனைப்போல் சரிபார்க்கும் வெண்குருகே
மான்பார்த்து வாளிதொட்ட மால்சிவ நாராயணனை
நான்பார்த்து மாதர்நகை பார்த்து இருந்தேனே. (2)
மால் சிவநாராயணன் இந்தப் புலவரைப் பேணிப் பாதுகாத்த புரவலன்.
இது ஓர் அகப்பொருள் பாடல். பொருள் கைக்கிளை.
மானின் மேல் அம்பு விட்ட மால் சிவநாராயணன் (இராமன்) பார்வை தன்மீது விழவேண்டும் என, மாதர் பலர் தன்னை நகைப்பதையும் பொருட்படுத்தாமல் தலைவி ஏங்குவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
வெண்குருகே! நீரில் உள்ள மீனைப் பார்க்கிறாய். மீனைப் பிடித்ததும் அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாய். நானும் (காமதேவனின் கொடியிலுள்ள) மீனைத்தான் பார்க்கிறேன். அவன் வில் விண் விண் எனத் தெறிப்பதைத்தான் பார்க்கிறேன். நீ பார்ப்பதோ மீனைக் கௌவும் வேளை. நான் பார்ப்பதோ காமவேளை. நீயும் நானும் சரிக்குச் சரி. நீயே சொல் இராமன் பார்வை என்மேல் படுமா?

3[தொகு]

முல்லை முல்லையாய்த் தொடுத்து மோகமத னெய்யவந்த
வில்லை வில்லையாய் நறுக்கி மெல்ல மெல்லத் தாராயோ
இல்லை இல்லை யென்று சொல்லி யேற்கவரும் பாவலர்கள்
தொல்லை தவிர்க்குங் களந்தைச் சுப்ரமண்ய பூபதியே. (3)
களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சுப்பிரமணிய பூபதி என்னும் வள்ளலின் மீது காதல் கொண்ட தலைவி ஒருத்தியின் கூற்றாக அமைத்துப் பாடப்பட்டுள்ள அகப்பொருள் பாடல் இது.
திணை - கைக்கிளை
இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏற்க வரும் பாவலர்களின் தொல்லை அனைத்தையும் தீர்க்கும் பூபதியே! மதன் முல்லைப்பூ அம்புகளை என்மீது விட்டுக் காமத்தை மூட்டுகிறான். அவன் கரும்பு வில்லை நறுக்கி என் வாயில் மெல்லுவதற்குத் தரமாட்டாயா?

4[தொகு]

ஆயிரங் கண்ணாக மதனம்பு மேலம்புவிட
வேயிரங்கு செந்தேன் இறாலினங்க மானேனே
தாயிரங்க வேணபெண்க டாமிரங்க வானிரங்க
வேயிருக்கும் வாயா விசயரகு நாயகனே. (4)
விசய ரகுநாயகன் பெருமகன்மீது காதல் கொண்டு ஒருத்தி கூறுவதாக அமைந்துள்ள அகப்பொருள் பாடல் இது.
திணை - கைக்கிளை
வானம் வாய்த்துப் பொழிய வாழும் விசய ரகுநாயகனே! என் உடம்பு ஆயிரம் கண்ணாகும்படி மதன் அம்பு மேல் அம்பு விடுகிறான். என் உடம்பு மூங்கிலில் கட்டியிருக்கும் தேன்கூடு போல் ஆயிற்று. என்னைப் பார்த்து என் தாய் வருந்துகிறாள். எனக்கு வேண்டிய பெண்களெல்லாம் வருந்துகிறார்கள். என்ன செய்வேன். - என்கிறாள் தலைவி.

5[தொகு]

கன்னலெனுஞ் சிறுகுருவி கனமழைக்கு ஆற்றாமல்
மின்னலெனும் புழுவெடுத்து விளக்கேற்றுங் கார்காலம்
மன்னவனாம் தென்மதுரை மாவலி வாணனைப் பிரிந்திங்
கென்ன பிழைப்பென்ன விருப்பென்ன நகைப் பின்னமுமே. (5)
தென்மதுரை மாவலி வாணன்மீது காதல் கொண்ட ஒருத்தி பாடுவதாக இந்தப் பாடல் உள்ளது.
குளவி என்னும் ஈ இனப் பறவைக்குக் 'கன்னல்' என்னும் பெயர் உண்டு. இந்தப் பறவை மின்னல் என்னும் மின்மினிப் பூச்சிப் பறவையைப் பிடித்து வந்து தான் கட்டும் குளவிக் கூட்டில் விளக்கேற்றும் எனக் கூறப்படுகிறது. இப்படி விளக்கேற்றும் காலமாம் அந்தக் கார்காலம். இந்தக் கார் காலத்தில் என் நிலைமை இன்னும் நகைப்புக்கு இடமாக உள்ளது. தென்மதுரை மாவலிவாணனுக்கு நான் என்ன பிழை செய்தேன்? கார்காலத்திலும் அவன் வீடு திரும்பவில்லையே - தலைவி ஏங்குகிறாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=கொச்சகப்_பாடல்கள்&oldid=25036" இருந்து மீள்விக்கப்பட்டது