கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து

6


செவந்தி வயல் வெளியில் நிற்கிறாள். கார்கால வானம் கனத்திருக்கிறது. . .

கீழே ஒரே பசுமை. அவருடைய கால்காணி மட்டும் தனியாகத் தெரிகிறது. பதினைந்து, இருபத்தைந்து, முப்பத்தைந்து என்று மூணுரம் இட்டாயிற்று.

வேப்பம் புண்ணாக்கில் யூரியாவைக் கலந்து, முதல் நாளிரவே வைத்து விட வேண்டும். காலையில் பொட்டினையும் கலந்து தூவினாள். மூன்றாந் தடவை வேப்பம் புண்ணாக்கு இல்லை.

யூரியாவை ஒரேயடியாக அதிகமாப் போடுவார் அப்பா. அது தண்ணீராகி வீணாகப் போய் விடுமாம்.

சிறு குழந்தைக்குச் சிறுகச் சிறுக உணவு கொடுப்பது போல், முதல்-இளம் பருவத்தில் வேப்பம் புண்ணாக்குடன்

கலந்த யூரியா கொஞ்சம் கொஞ்சமாக அதன் வேர்களுக்குப் போகுமாம்.

பத்தி நடவு, இடையில் உள்ள வெளி, கால் வைத்துப் பயிர்களைப் பார்க்க, இடையே களை, பூண்டு இருக்கிறதா என்று பார்க்க, கழிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், களையே மண்டவில்லையே? மேலுரம் இடுமுன் களையெடுக்க என்று நாலைந்து ஆட்கூலி கொடுக்க வேண்டுமே? ஆச்சரியமாக இருக்கிறது. களையே வரவில்லை. அவ்வப்போது வந்து புல், பூண்டு சும்மாகையில் புடுங்கி விடுகிறாள். கதிர் பூக்கும் பருவம்.

சித்திரைப் பட்டம்-சொர்ணவாளிப்பினால், இப்போது அறுவடையாகும். அதற்கு முப்பத்தைந்துக்கு மேல் உரமிட வேண்டாமாம். இது ஆடிப்பட்டம். சம்பா.... இன்னொரு உரம். யூரியாவும் பொட்டாஷும் மட்டும் போட்டால் போதும்.

தினமும் இந்தப் பயிரைச்சுற்றி வரும்போது மனது எல்லாக் கவலைகளையும் மறந்து விடுகிறது. வான வெளியில் சிறகடித்துப் பறக்கும் ஒர் உற்சாகம் மேலிடுகிறது. கால்காணியோடு ஏன் நிறுத்தினோம், முழுவதும் இப்படிப் பயிரிட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. நாற்றங்களில் எஞ்சிய நாற்றுக்களை, வேல்சாமி பயன்படுத்திக் கொண்டான்.

“செவந்தியே! செவுந்தி!”

ரங்கனின் குரல்தான். முள்ளுக்காத்தான் செடிப் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறது.

வா! என்று கையைசைக்கிறான்.

கருக்கென்று ஒரு திடுக்கிடும் உணர்வுடன் வரப்பில் விரைந்து நடக்கிறாள். சிறு களைக்கொட்டும் கூடையுமாக விரைகிறாள்.

அப்பனுக்கு ஏதேனுமா? மாடு நிறைசெனை... அதற்கு ஏதேனுமா? நெஞ்சு குலுங்க வருகிறாள்.

“என்னாங்க? அப்பா..... ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, வாசொல்றே....”

வெற்றிலைக் கொடிக்காலின் வாசனை வருகிறது. “சென மாடு..... காலமயே தீனி எடுக்கல. அதுக்கு நேரம் வந்திடிச்சா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..... வூட்ல ஆள் வந்திருக்காங்க. பட்டணத்துப் பெரீம்மா...”

“பட்டணத்துப் பெரீம்மாவா? பெரீம்மாவா?”

சின்னம்மா என்றால் நடவாதது நடந்து விட்டதாகத் தோன்றும். “பெரிம்மா. ஆரு... எந்தப் பெரீம்மா?”

“என்ன நீ, தெரியாதது போலக் கேக்குற? சுந்தரிக்கும் கூட ஒரு பக்கம் உறமுறை. அவ பெரியப்பன் மக உசாவைக் கட்டிருக்கே அந்தப் பெரிம்மா...”

“ஒ....அவுங்களா?”

“அவுங்க எதுக்காக நம்மூட்டத் தேடி வாராங்க? அவுங்களுக்கும் நமக்கும் எந்த நாளிலும் நெனப்பில்லியே? இப்ப என்ன வந்திச்சி, உறவு, நீங்க அக்கறயாகூப்பிடவரீங்க? அதுக்குத்தா, அம்மா இருக்காங்க, சுந்தரி இருப்பா?”

“நீ என்ன கிராஸ் கேள்வி கேக்குற? செவுந்தி இல்லியான்னு கேட்டாங்க. வூடு தேடி வந்தாங்க. வந்திருக்காங்க. சேவுப் பொட்டலம் ஒண்ணு வாங்கியாந்தே.... நீ வந்து ரெண்டு வார்த்த பேசு...”

அவளுக்குப் பிடிக்கவில்லை.

பின் தாழ்வரையில் களைகொட்டையும் கூடையையும் வைக்கிறாள். தலைப்பை உதறிச் சுற்றிக்கொண்டு வருகிறாள். பசு மாடு குரல் கொடுக்கிறது.

அதற்கு நேரம் வந்து விட்டது. ஒரு காலை மாற்றி ஒரு காலை வைத்து அவதிப்படுகிறது.

“என்னாங்க பசு அவதிப்படுது. பாத்தீங்கல்ல!”

 “இருக்கட்டும். அதுக்குள்ள கன்னு போடாது. நீ உள்ளற வந்து வந்தவங்கள வாங்கன்னு சொல்லு?”

ஒ.... பெரியம்மா.... உடம்பு முகம் ஒரே செழிப்பில் மிதப்பது தெரிகிறது. கழுத்தில் பட்டையாக இரண்டு வரிச் செயின். காதுகளில் பெரிய தங்கத்தோடு. மூக்குப் பக்கங்களில் அன்னமும் பூவாளியுமாக மூக்குத்திகள். கைகளில் வளையல்கள். வெள்ளை ரவிக்கை. நீலத்தில் பூப்போட்ட பாலியஸ்டர் சேலை. வெள்ளை இழையோடிய முடியை இழைய வாரிக் கொண்டை போட்டிருக்கிறார்.

பலகையில் உட்கார்ந்து அம்மாவுடன் பேசுகிறார்.

“பெரியவன்தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறான். முத்துய்யா, கண்ணன், ஜயகுமார் நற்பணி மன்ற செயலாளன். தமிழ்நாடு மிச்சூடும் இளைஞர் மன்றத்துக்கும் அவந்தா. நிதம் கூட்டம், நிதம் மீட்டிங். வூட்ல தங்க நேரமில்ல. ஆளு காரு வாசல்ல வந்திடும். புதுசா, நாகரகேணில வூடுகட்டிட்டிருக்கு. இது ராசியான எடம், இத்தவுட்டுப் போகக் கூடாதுன்னு குமார் சொல்லுறான். அவன் எக்ஸ்பர்ட் கம்பெனில ஆறாயிரம் சம்பாதிக்கிறான். பொஞ்சாதி முழுவாம இருக்கா. அவப்பன் துபாயில இருக்கிறான். நான் போறேன்னு பயமுறுத்திட்டிருக்கிறான். காலம் எப்படி மாறிப் போச்சுங்கற செங்கோலு!காசு..... காசுதா.... மாசத்துல ரெண்டு நா ஒட்டல்ல போயி சாப்பிட்டு ரெண்டாயிரம் செலவு பண்ணுறா குமார். குடும்பத்தோட ஆமா, எனக்கென்னத்துக்குடான்னா, கேக்கமாட்டா. போன மாசம் இப்பிடித்தா..... ஏஸி ஒட்டல்ல கூட்டிட்டுப் போனா காரு காரா வாறாங்க. எங்கதா பணம் இருக்குதோ? சிக்கன் எழுபதோ? இன்னமோ சொன்னான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாதான் இருந்திச்சி. என்னமோ அவுங்க இதெல்லாம் அநுபவிக்காம போயிட்டாங்க. அப்படியே ஒரு சினிமாக்குக் கூட்டிப் போனா. ஜெயகுமார் படம்.... எல்லாம் ஏசிதா. புதுசாகட்டுற வூடு கூட ஏசி பண்ணப் போறாங்க....”

செவந்திக்கு இந்தப்பெருமைகளைக் கேட்டு எரிச்சல் மண்டுகிறது.

“வாம்மா. செவுந்தி! உன் தாத்தா திருவிழாவுக்கு உன்னத் தூக்கிட்டு வாரப்ப பாத்தது. மூக்கொழுகிட்டிருக்கும். மேத்துணில துடச்சி பாசமா வச்சிப்பாரு. இப்ப உனுக்கு மேசரான பொண்ணிருக்காமே.....?” என்று விசாரிக்கிறாள்.

“ஏது இவ்ளோதுாரம் வந்திட்டீங்க? உங்களுக்கெல்லாம் நாங்க இருக்கிறது ஞாபகமே இருக்காதே?”

செவந்தி குத்தலாகப் பேசிவிட்டு உள்ளே சென்று தண்ணி எடுத்துக் குடிக்கிறாள். பிற்பகல் மூன்று மணி நேரம். இன்று பொழுதுடன் சாப்பாட்டுக் கடையாகி விட்டது.

“டீ போட்டுட்டு வா செவுந்தி....” என்று காரா சேவை சில்வர் தட்டில் பிரித்துப் போட்டுக் கொண்டு வருகிறான்.

“மாமா உடம்பு ரொம்ப மோசமாயிருக்காரே! ஒரு நட எல்லாம் வாங்க.”

“முத்தப்பனுக்கு அப்பலோ ஆசுபத்திரி டாக்டர்லாம் நல்லாத் தெரியும். வெளிநாட்டிலேந்தெல்லாம் ஹார்ட் ஆபுரேசன் பண்ணிட்டுப் போறாங்க. எம்.ஜி.ஆர். அங்கதான படுத்திருந்தாரு? அவருக்குன்னு ஸ்பெசலா ஒரு மெத்த பண்ணிருந்தாங்க. அது மட்டும் நாலு கோடியாம்....” செவந்திக்கு அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவேண்டும் போல இருக்கிறது.

அப்பனுக்கு ஒரே தாரக மந்திரம் தான்...

“ஆமா.....ராசாத்திய எப்பனாலும் பாப்பியா?”

“ஏம்பாக்காமா? அவ மருமவ சுந்தர் நம்ம கண்ணனுக்குத் தோஸ்து. இவந்தா அவனுக்கு வேல போட்டுக் குடுத்திருக்கிறா. ரெண்டு பொட்டப்புள்ள... ஏரிப்பக்கம் குட்சையில தா இருக்கு... அவ ஆத்தாக்காரி ஹோம்ல வேல செய்யிறா. எப்பனாலும் பாப்பே.....”

“நீ பார்த்தா, ஒருக்க வந்து போகச் சொல்லு. நாகு போனதெல்லா போவட்டும். மறந்திடு. மன்னாடிக் கேட்டுக்கிட்டேன்னு சொல்லு...”

அப்பனுக்கு நெஞ்சுதழுதழுத்துக் குரல் நெகிழ்கிறது.

“அதுக்கு என்ன இப்ப? சுவர்ணவல்லிம்மா அவங்க ஹோம்லதான அது? இதுக்கு நல்லா தங்க எடம் சலுகை எல்லாம். ஆளு நல்லாத்தா இருக்கா. இங்கேருந்தா என்ன கிடைக்கும்? முத்தய்யஞ் சொல்றா. இங்கல்லாம் சர்க்கார் தொழிற்சாலை என்னமோ வருதாம். நிலமெல்லாம் கட்டாயமா ஆர்ச்சிதம் பண்ணிடுவாங்கன்னு. நெறயப்பேரு, நில நீச்சில வருமானமில்லன்னு வித்துப் போட்டு, பட்டணத்துல ரெண்டு வீட்டக் கட்டிப் போடுறாங்க. மாசம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு ஆட்டு வாடகைய வசூல் பண்ணிட்டு உக்காந்து சாப்புட்றாங்க.கூலி குடுத்துக் கட்டுப் படியாவலன்னு வித்திட்டாங்க. அத்தோட பயிர்லல்லாம் பூச்சி வுழுகுதாமே?”

“அத்தே, இத்தச்சொல்லவா மூட்டக் கட்டிட்டு வந்திங்க? நா என்னாக்கும்னு பாத்தனே? நாங்க பூமிய விக்கிற உத்தேசம் இல்ல” என்று செவந்தி வெடித்துவிட்டு அடுப்பில் கரி வட்டையில் தண்ணிரைக் கொதிக்க விடுகிறாள்.

காரியமில்லாமல் இவள் ஏன் வந்தாள் என்று பார்த்தது சரியாக இருக்கிறது? புருசன் சொல்றதுக்காக டீத்துளைப் போட்டு, வடிகட்டிக்கொண்டு வருகிறாள். கைச்சூடு, மனச்சூடு இரண்டும் அவள் டம்ளரையும் வட்டையையும் வைத்ததில் புலனாகின்றன.

“இன்னாமோ உம் புருசன் கூப்பிட்டானேன்னு வந்த நா. இங்க கண்ணனோட சிநேகிதப்புள்ளக்கிக் கலியாணம், நெகமத்துல. காருல இங்க பஸ்ஸுக்குக் கொண்டாந்து வுட்டா. உன் புருசன் கடையிலேந்து வந்து வாங்க பெரிம்மா வூட்டுக்குன்னு கூப்பிட்டா; வந்தேன். இந்த ஊரு ஒறவே வாணாம்னு எப்பவோ போனவ. முத்தய்யஞ் சொல்லுவ. நம்ம ஆடு இருந்த எடம்னாலும் இருக்கும்பா. பாத்தனே. குட்டி சுவராகெடக்கு. எங்களுக்கு எந்த நெலமும் வாணாம். உங்களுக்கு வோணும்னா அதுக்கு ஒரு வெல போட்டு எடுத்துக்குங்க.....”

அவள் முகத்தில் பல வண்ணங்கள் - மின்னுவது போல் இருக்கிறது. பக்கத்து மனை அவர்களுடையதுதான்.

“யார் சொந்தமும் யாருக்கும் வாணாம். அவுங்கவுங்க சொத்து தங்கினாப் போதும்...”

முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டு அவள் பின்கட்டுக்குப் போகிறாள்.

மாடு..... வேதனைப்படுகிறது.

அவிழ்த்துத் தாழ்வாரத்தில் கொண்டுக் கட்டுகிறாள். ஏர் சட்டி சவரெல்லாம் கிணற்றுப்பக்கம் ஒதுக்குகிறாள்.

கிடாரிக் கன்றாகப் போட வேணும்...முருகா... என்று வேண்டுகிறாள்.

குமுறிய வானில் மழைத் தூற்றல் விழுகிறது. பெரிய மழை இன்னும் விழவில்லை என்றாலும், சமையற்கட்டு ஒழுகுகிறது. பானைகளில், பருப்பு, புளி, மிளகாய் வைத்திருக்கிறாள். மேலே ஏறி இந்த மழைக்குத் தாங்குவது போல பிளாஸ்டிக் ஷீட்டோ, மெழுகு சீலையோ போட்டால் பரவாயில்லை. எப்படியேனும் இந்த மழையைத் தாங்கி விட்டால் தை பிறந்தோ கோடையிலோவீட்டுக் கூரை மாற்ற வேண்டும். சமையல் அறையும், பின் தாழ்வரையும் கீற்றுக்கூரை.... மற்ற இடங்கள் ஒடு. பழைய காலத்து நாட்டு ஒடு. அதுவும் பிரித்துக் கட்டத்தான் வேண்டும்.

கால் காணியில் நல்ல மகசூல் வந்து, எல்லா நிலமும் பயன்தரக் கைக்கு வந்து... வளமை கண்டு வீடு பிரித்துக்கட்ட முடியுமா? கிணற்றுப்பாசனப் பூமியைப் பந்தகத்துக்குக் கொடுத்துவிட்டு, கோடைச் சாகுபடி என்றால் அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும். வீட்டு ஆண் பிள்ளை என்று அப்பாவும் படுத்த பிறகு, இவள் புருசனின் எதிர்ப்பையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள்? சரவணனுக்கு வயசு பன்னிரண்டுதான் முடிகிறது. அவனை உழவில் பூட்டலாமா?சீ!

மழை இறங்குவதையும் மாடு தவிப்பதையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறான்.

கொல்லையில் வைத்த தெங்கு இப்போதுதான்காய்க்கத் தொடங்கி இருக்கிறது. ஐந்துவருசம் என்று கொண்டு வைத்த பிள்ளை பத்தாவது வருசத்தில்தான்காய்க்கத் தொடங்கிற்று. 

ஆனால் பெரிய காய். ஒரமாக அவரையை ஊன்றி, அது கொடி வீசி படர்ந்திருக்கிறது. வைக்கோல் போர் கரைந்து விட்டது. வேளாண்மை இல்லை என்றால் விலைக்குத்தான் வாங்க வேண்டும்.

சட்டென்று நினைவு வருகிறது. பசுகன்று போடும் போது முகம் உதயமானதும் சூடம் கொளுத்திக் காட்டிக் கும்பிடுவார்களாம். இவர்களுக்கு வழக்கமில்லை. அது தாயேதான். மழையில் நனைந்து கொண்டு சரோசா வருகிறாள். சைக்கிளை உள்ளே கொண்டு வைக்கிறாள். சரவணனுக்கு பிளாஸ்டிக் மழைக் கோட்டு இருக்கிறது.

அத்த எடுத்திட்டுப் போகலாமில்ல ? நனஞ்சி ஒரே தெப்பலாயிருக்கு. காய்ந்த சேலைத் துணியைப் போட்டுத் துடைத்து விடுகிறாள் பாட்டி.

செவந்தி கர்ப்பூரம் இருக்கிறதா என்று பார்க்கிறாள். கன்று போட்ட பிறகு, நல்லபடியாகக் கர்ப்பூரம் ஏற்றித் திருஷ்டி கழிக்க வேண்டும்.....

டிபன் டப்பியைப் பையில் இருந்து எடுத்து முற்றத்தில் போட்டபடி, “யம்மா, சூடா காபி, டீ எதினாச்சிம் குடும்மா. எனக்கு சார்ட் போடணும் உட்காந்து...” என்று கூறுகிறாள்.

“அம்சுப் பெரிம்மா வூட்டில போயி பாலு கேட்டேன்னு வாங்கிட்டு அப்பிடியே, ஒரத்துக் கடயில நாலணாகர்ப்பூரம் வாங்கிட்டு வா சரோ. மாடு கன்னு போட நிக்கிது. காபி போட்டுத் தரே...” -

அவளிடம் ஒரு ரூபாய் நோட்டொன்றைத் தருகிறாள். அடுப்பில் காய்ந்த ஒலையைச் செருகிப் புகைய விடுகிறாள். அந்தச் சமையலறை ஒரமாகவே ஒலை எரு முட்டை, காய்ந்த சுள்ளிகள் எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கிறாள். தட்டுமுட்டு பானை என்று சமையலறையில் பல்லியும் பாச்சையும் இருக்கத்தான் இருக்கின்றன. சமயத்தில் தேளும் கூட ஒடும். மாசத்தில் ஒரு நாள் அமாவாசைக்கு முதல் நாள் கோமயத்தில் மஞ்சட் தூளைப் போட்டு ஒரமெல்லாம் மெழுகுவாள். விஷப்பூச்சி அண்டாது. சென்ற அமாவாசை விட்டுப் போய்விட்டது. மேலுரம் கலந்து கொண்டு இருந்தாள். சாந்தியின் வயலுக்கு நடவென்று போனாள்.

ஒரு கண் கொட்டாங்கச்சியைப் பார்த்து அடுப்பில் போடுகிறாள். அது பாதி எரிந்ததும் வெளியில் இழுத்து அணைக்கிறாள்.

தேயிலைக் கசாயம் போட்டு விட்டு, அடுப்பில் உலை போடுகிறாள்.

தெருக்கோடிக்குப் போவதற்குக் கூட சைக்கிள்.

“கர்ப்பூரம், தூக்கில் பால்....இதென்னடீ, பொட்டலம்?”

வெங்காயம் பொரிந்த மணம் பகோடா...

“இது ஏது?”

“வேணிப் பெரிம்மா குடுத்தாங்க!”

“குடுத்தாங்களா? அவ பாவம் முதுகொடிய உழைக்கிறா. அடுப்படில வேகுறா... நீ வாங்கிட்டுவர?”

“நாஒண்னும் கேக்கல. குமாரு காலம கணக்கு சொல்லித் தரச் சொன்னா. சொல்லிக் குடுத்தேன். பெரிம்மா என்னப் பாத்ததும் நிறுத்திக் கொண்டுக் குடுத்தாங்க.”

“சீ...ஏ இப்பிடிப் புத்தி போவுது உனக்கு?”

“நாங் கேக்கலம்மா! சத்தியமா....”

“சரி சரி ..... இந்தாங்க பாட்டிக்கு ரெண்டும், தாத்தாக்கு ரெண்டும் குடு....”

“பாட்டி எங்கே?”

பாலைக் கலந்து தேநீரை டம்ளரில் ஊற்றுகிறாள்.

கிணற்றடியில் சலதாரையில் தண்ணீர் ஓடுகிறது.

பாட்டி அங்கேதானிருக்கிறாள். மாடு ஈன்று விட்டது. குளம்பு கிள்ளிக் கன்று கிடாரி என்று பார்த்து இருக்கிறாள்.

நஞ்சுக் கொடி தொங்குகிறது. மாடு கன்றை நக்கி நக்கிக் கொடுக்கிறது. சரசரவென்று அரிசி கழுவிக் கழுநீரில் பொட்டும் சிறிது புண்ணாக்கும் கலந்து கொண்டு வந்து வைக்கிறாள்.

கர்ப்பூரம் ஏற்றி மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்கிறாள். பாதி எரிந்த கண் கொட்டாங்கச்சியில் கறுப்புக் கயிற்றைக் கோர்த்து அதன் கழுத்தில் கட்டுகிறாள்.

நஞ்சுக் கொடியை பழந்துணியில் சுற்றிச்சாக்குத்துண்டில் பதிந்து ஒரமாக வைக்கிறார். காலையில்தான் அம்மன் கோயிலின் பின் உள்ள அத்தி மரத்தில் கொண்டு கட்ட வேண்டும்.

பாட்டி சீம்பாலைக் கறந்து கீழே ஊற்றுகிறாள். கன்றுக் குட்டியை முட்ட விடுகிறாள்.

“அப்பா.... மாடு கிடாரிக் கன்று போட்டிருக்கு! டீ சாப்பிடுங்க இந்தாங்க கடிச்சிக்குங்க!”

அப்பா எதோ கனவில் இருந்து வெளிப்படுபவர் போல், உ.ம்... உம்? என்று கேட்கிறார்.

“செவுந்தி, நாவு வந்ததிலேந்து மனசு சரியில்ல. உன் அம்மா எங்க போனா?”

“பின்னாடி மாடு கன்னு போட்டிருக்கப்பா”

“அதான பாத்தன். எங்கனாலும் விட்டு ஒரு பத்து நா இருக்கணும் போல இருக்கு. எம் மனசு விட்டு அழுகணும் போல இருக்கு செவுந்தி அபாண்டமாக அவ பேரில பழி சொல்லி, நடுகாட்டுல வச்சி அடிச்சாங்களே... அந்தப் பாவம் வுடுமா?”

“அதெல்லாம் இப்ப எதுக்கப்பா நினைக்கிறீங்க?” என்று மகள் சமாதானப்படுத்துகிறாள்.

“நெஞ்சுல ஒரு பக்கம் அது குமுறிக்கிட்டிருக்கு செவுந்தி. உன் சின்னாத்தா என்ன தப்புப் பண்ணிச்சி? அவ எப்பிடி வேல செய்வா தெரியுமா? வூட்டுவேல, காட்டுவேல, கழனிவேல சும்மா குருவி பறந்து பாராப்பல வருவா. ஒரு நேரத்துல அவ மூக்கச் சிந்திட்டு மூசுமூசுன்னு அழுதுட்டு உக்காந்ததில்ல. அவ அப்பங்கிட்ட, அவுரு இருக்கிற வரையிலும் தனக்கு அப்பன் அக்காளைப் போல் பாராட்டவில்லை, நகை நட்டு செய்து போடவில்லைன்னு கோபம் இருந்திச்சி. ஆனா, அதை ஒரு நேரம் கூட அக்காகிட்டக் காட்டியதில்லை. எட்டு வருசம் சின்னவ தங்கச்சி சங்கிலி போட்டுக்கட்டும், வளவி போட்டுக்கட்டும்னு குடுத்ததில்ல, இந்த மவராசி. அப்படி இல்ல சீல உடுத்தனும், மேனி அழுக்குப்படாம நிக்கணும்னு எண்ணம் இல்ல. உழப்பாளி. அவுலிடிச்சி, பொரி பொரிச்சி, காஞ்சிபுரம் சந்தையில வித்திட்டு வந்து பணம் காசு சேப்பா. உனுக்குத்தா ஞாபகம் இருக்குமே? இருபது பேருக்கு. நடவாளுகளுக்குப் பொங்கி வச்சிட்டு, இவளும் நடவுன்னு வந்திடுவா. புருசன் நல்லா இருக்கக் கூடாதா? அவ விதி. இருக்கிறதே பாரம்னு செத்துப் போனா.....”

“ஏப்பா, அவரு எங்க கட்டிட வேலக்காப் போனாரு?”

“இல்லம்மா. இதா இங்க மில்லு. ரோட்டாண்ட இருக்கில்ல? அது அப்பதா வய்க்கிறாங்க. மேலே இரும்புச் சட்டம் போட்டிருக்கறாங்க. வண்டில கனசாமான். அதெல்லாம் வந்திருக்கு. இவ ரோட்டோரம் வயல்ல களை வெட்டுறா. வண்டி மாடு எதிரே எத்தயோ கண்டு மெரண்டு மீற, வண்டி எப்பிடியே கவுந்திடிச்சி. அந்தச் சட்டம் வந்து இவ இடுப்பைச் சதக்கிட்டு விழுந்திடிச்சி. சேறில்ல. கோர உழவு. கட்டி கரம்பை கிடந்திச்சி. எசகு பிசகா வுழுந்திட்டா... இடுப்பு எலும்பு ஒடஞ்சி போச்சி. கையிலும் முழங்கைக்கு மேல எலும்பு முறிஞ்சிடிச்சி. புத்துாருக்குக் கொண்டிட்டு உடனே போயிருந்தா நல்லாயிருக்கும் இங்கதா நெகமத்துல ஒரு வயித்தியருகிட்டப் பச்சில போட்டுக் கட்டிக் கொண்டாந்து விட்டாங்க. அது சரியாவல. பெறகு புத்துாருக்குக் கொண்டு போனாங்க. மூணுமாசமாச்சி. ஆனா கை, காலு சரியாவல. ஆண்பாடு, பெண்பாடு பட்டிச்சி. அவன் செத்தப்ப இது முழுவாம இருக்கு உங்கம்மா ராட்சசி. இது அவனுக்குத் தரிச்சதில்லன்னு என்ன ரகள பண்ணுனா? செவந்தி! மேல காயுறானே அவனுக்குப் பொதுவாச் சொல்லுறேன், அவ நாக்கு அழுகாம செத்தா, அது சரியில்ல. அத்த அபாண்டமா என்ன வச்சிப் பேசினது தாங்காம, உங்க பாட்டன் நெஞ்சிலியே அடிச்சிட்டாரு... உன்ன மருமகனா நெனக்கல ஏகாம்பரம், எதுனாலும் தப்பு நடந்திருந்திச்சின்னா எங்கிட்டச் சொல்லிடு. பாவம், அதுக்கு ஒரு கெதி இல்லாம பாவி பண்ணிட்டன். அது உம் புள்ளன்னாலும் இருந்திட்டுப் போகட்டும்; உனுக்கே கட்டி வச்சிடறேன்னு சொன்னாரு...” “அப்டில்லாம் இல்ல... இது அவம் புள்ளதா. அபாண்டமா அதும் பேரில பழி சொல்லாதீங்க...”

“அரச பொரசலா ஊரெல்லாம் பேசுனா அசிங்கமாயிடுமேப்பா...”ன்னாரு.

“பேசுனவங்க நாக்கு அழுவிடும்னே. ஆனா, ஆரு நாக்கும் அழுவல. அவருதா அறுப்பறுத்திட்டிருந்தவரு, நெஞ்சு வலின்னாரு, போயிட்டாரு. உனுக்கு ஞாபகமிருக்குமே செவுந்தி?”

செவந்தி சிலையாக நிற்கிறாள்.

இப்படி ஒரு பொறி அவளுக்குள் தட்டியதில்லை. ஆனால், சின்னம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா அபிப்ராயப்பட்டதை அவரே சொல்லி இருக்கிறார்.

“இதொண்ணும், பழிபாவமில்ல. அந்தப் புள்ளையையும் பாத்துக்கிட்டு, கொல்ல மூட்டுல பயிர்பண்ணுறவ யாரேனும் வந்தா கட்டிட்டா என்ன? அதுக்கு ஒரு நாதி இருக்குமே?” என்று சண்டை போட்ட விசயம் இவள் வளர்ந்த பின் நினைவில் தெறித்திருக்கிறது.

ஆனால், நட்டுவாக்காலி வாயில் கவ்விக் கொண்டுதான் கொடுக்கால் கொட்டும். அம்மா அப்படித்தான் தங்கச்சியைப் பற்றி இருந்தாள் என்று தோன்றுகிறது.

“என்ன, இங்க அப்பனும், மகளும் பேசுறீங்க...? ஏ... என்ன ஒரு வீட்டில் அப்பனும் மகளும் கட்சி கட்டுறீங்க?”

அந்தக் குரல் அம்மாவுக்குரியதா?

இது எங்கிருந்து வருகிறது? பாம்பு செத்து, குப்பைக்குப் போனபின், அது மேடாகிப் புதைந்து பின், இன்னும் பலம் இருக்குமா? எதனால் இப்படிப் பயம்?

“இங்க யாரும் கட்சி கட்டல. இதுக்கு நேரமும் இல்ல” என்று சொல்லிவிட்டு அகலுகிறாள் செவந்தி.