கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 7
Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.ஆனால் மனம் அந்த நினைவுகளில் இருந்து அகலவில்லை. அப்பா கிளப்பி விட்டுவிட்டார்.
சின்னம்மாவை ஆசுபத்திரிக்கு எதற்கும் கூட்டிப் போகவில்லை. நர்சம்மா யாரும் வரவில்லை. வீட்டில் அந்த வாசல் திண்ணை அறையில் தான் பெற்றிருந்தாள். குழந்தையின் முட்டைக் கண், அந்தக் கூரில்லாத மூக்கு, சுருட்டை முடி எல்லாம் அதன் அப்பனையே கொண்டிருந்தது. ஆனால், குழந்தை கையிலெடுக்க முடியாத நோஞ்சானாக இருந்தது. பெண்...
“புருசன்தா போனா. ஆம்பிளப் புள்ளையைப் பெத்துக்கக் கூடாதா பொட்டை? இது இன்னும் என்ன பேரக் கொண்டு வருமே” என்று இடித்தார்கள்.
“அவ ஆளான நேரமே சரியில்ல. அதுதா புகுந்த எடம், புருசன் உருப்படல...”
குழந்தை எப்போதும் அழுதது. கைக்குழந்தைக்காரி என்று உட்கார்த்தி வைப்பார்களா?
பொட்டழிஞ்சி போனவ, வேல வெட்டி செய்யாம எப்படி?
வீட்டிலேயே அவளை வாட்டினாள். வயல் வெளிக்குப் போகத் தடை. ஏனெனில் அப்பாவும் அங்கே தானே வேலை செய்வார்? பிற ஆண்கள் இருப்பார்களே?
நடவு, களை பறிப்பு என்று கும்பலாகப் பெண்களுடன் கைக்குழந்தையுடன் போக வேண்டும். நோஞ்சான் பாலுக்கு அழும். தாய்ப்பால் இல்லை.
“ராசாத்தி, புள்ள அழுகுதும்மா. பாலு குடு புள்ளக்கி” என்று சமையல் அறையில் பானை சரித்துக் கொண்டிருந்த தாயிடம் அவர் கொண்டு போனதை அம்மா பார்த்து விட்டாள்.“சமில் ரூம்புல உமக்கென்ன வேல? தாய்ப் பால் இல்லன்னா, இந்தச் சனியனுக்கு, ஊட்டுப் பால் குடுக்கணுமா? இது யார் குடியக் கெடுக்குமோ? ஒடஞ்ச நொய்யிருக்கு, கஞ்சிகாச்சி ஊத்தட்டும். ஆம்புளப்பைய, அவம் படிச்சிட்டு வாரான். அவனுக்கு நல்ல பாலில்லை.” என்று தொடுத்தாள்.
“ஏ மூதேவி வாய மூடுடி! உங்கூடப் பிறந்தவதான அவ! இந்த வூடு, காணி எல்லாத்திலும் அவளுக்கும் பாதி உண்டுடி! நீ இப்பிடி வஞ்சன பண்ணாதே. உன் வமுசமம் அழிஞ்சிடும்” என்று அப்பா கத்தினார்.
“இன்னாது? பாதி உண்டா. பாதி? அத்த அவ புருசன் வூட்ல போயிக் கேக்கச் சொல்லுங்க! ஒராம்புளப் புள்ளயப் பெத்துக்காதவ, புருசனும் போனப்புறம் எந்தப் பாதிய நினைச்சிட்டுப் பேசுறீய பாதியாமே பாதி! பன்னாட...” என்று பேசுவாள்.
குழந்தைக்கும் கழுக்கட்டையில் சிரங்கு, மண்டையெல்லாம் கட்டி. அனல் காய்ந்தது. அம்மாவைப் பொருட்படுத்தவில்லை. அப்பாதான் அவளையும், குழந்தையையும் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார். நாலைந்து மாசம் வீட்டுக்கு வரவேயில்லை.
வேலூர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனதாகவும், குழந்தைக்கு ரொம்ப சீக்கென்றும் தெரியவந்தது.
அப்போதெல்லாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்போதும் சண்டைதான். வீட்டில் வேலை செய்ய ஆளில்லை. அப்பாவின் அம்மா அந்தப் பாட்டி வேறு இங்கு வந்திருந்தாள். ஒரு மார்கழி மாதத்தில், பாட்டிக்குக் காலரா வந்தது. செத்துப் போனாள்.
சின்னம்மா குழந்தையுடன் ஒரு வருசம் கழித்துத் திரும்பி வந்தாள். அப்பாதான் கூட்டி வந்தார்.
செவந்திக்குச் சின்னம்மாவின்மீது அப்போதுதான் அதிகம் பிடிப்பும் பாசமும் வளர்ந்தது. குழந்தை அழகாக இருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். ஆனால் குச்சிக் கால்களும், கைகளுமாக இருந்தது. பிடித்துக் கொண்டு நிற்கும், நடக்க வரவில்லை.
“சீ, விடுடீகீழ? சீக்குப்புடிச்சத இங்க கொண்டிட்டு வந்து குலாவுற. அது கண்ட எடத்திலும் பேண்டு வைக்குது. மூத்திரம் போவுது” என்பாள்.
சின்னம்மாள் பொறுத்தாள். எத்தனையோ பொறுத்தாள். ஒரு நாள் செவந்தி ஸ்கூல் விட்டு வந்த சமயம் சின்னம்மா இல்லை. அவளுக்கு யாருடனோ தொடிசாம். குழந்தையை ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டுகிறேன் என்று சொல்லி ஓடி விட்டாளாம். கொல்லை மேட்டில் மணிலாக் கொட்டை போட்டுக் கடலை பிடுங்கி இருந்தார்கள். கடலை வறுத்து உடைத்து, வெல்லம் போட்டு உருண்டை பிடித்துக் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போது கொடுத்திருந்தாள்.
திரும்பி வந்தபோது அவள் இல்லை.
நடுவில் எத்தனையோ சம்பவங்கள். முருகன் படித்து முடிந்து, வேலை நிரந்தரம் என்று நிலைக்காமல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். வீட்டோடு மருமகன் வந்த புதிது. கொஞ்ச நாட்கள் சீட்டுக்கம்பெனி வேலை செய்தான். இரண்டாவதாக இவள் கருவுற்றிருந்தாள். இப்போதும் வளையல் அடுக்கி இருந்தார்கள். திடுமென்று சின்னம்மா மகளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் பகலில் வந்தாள்.
முதலில் ஒன்றுமே புரியவில்லை. மகள் குச்சியாய் பாவாடை தாவணி போட்டுக் கொண்டிருந்தது. பம்மென்ற சுருட்டை முடியை ஒரு நாடா போட்டுக் கட்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி இருந்தது. சின்னம்மாவும் குச்சியாகத்தான் இருந்தாள்.
"வாங்க சின்னம்மா... வாங்க..... என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வரவில்லை. இப்பவானும் வந்தீங்க...”
சுந்தரியின் அம்மா அப்போது அங்கு வந்திருந்தாள். அம்மா அங்கே பேசப் போயிருந்தாள். அடுப்பில் குழம்பு காய்ந்து கொண்டிருந்தது. “செவுந்தி, இத. இவ இங்க கொஞ்ச நா இருக்கட்டும்மா உன் தங்கச்சி. நா. ஒரு ஹோம்ல வேல் செய்யிற. இவள அங்க வச்சிக்க எடமில்ல. எடமும் சரியில்ல. இங்க உன்தங்க மாதிரி நினைச்சிக்க. வேல செய்யிவா. தோதா ஓரிடம் பாத்திட்டு வந்து கூட்டிப் போறேன்.... உன் அம்மா எங்க?”
“அத்த வூட்டுக்குப் போயிருக்காங்க. அப்பா கழனிக்குப் போயிருக்காரு. கூப்பிட்டுட்டு வார சின்னம்மா...இருங்க..."
“பரவாயில்ல. அவ இருந்தா எதும் மனசு சங்கடப்படும்படி சொல்லுவா. பாடி, பரதேசின்னு நினைச்சிக்க. பொம்புளப் புள்ள. அதுக சரியில்ல. ஒரு நெருக்கடி அவுசரத்துல வுட்டுட்டுப் போற. ருக்கு ... இங்க இருந்துக்கம்மா...” என்று பையை வைத்து விட்டு விரைந்தாள்.
“யம்மா... நானும் வாரேன், எனக்கு...” அவள் படாரென்று வெளிக் கதவைச் சாத்திவிட்டுச் சிட்டாய்ப் போய் விட்டாள்.
செவந்திக்கு இது கனவா, நனவா என்று புரியவில்லை. அரை மணி நேரம் சென்ற பின் அம்மா பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கென்று இறைச்சிக் குழம்பு வாங்கிக் கொண்டு படியேறி வருகையில் கதவு சாத்தியிருந்தது.
“கதவ ஏன் சாத்தி வைக்கிற? ஏம்மா? அந்தக் குருசாமி கிராக்கு உன் தங்கச்சி வந்திருக்கா மகள அழைச்சிட்டு, போன்னுது. வந்தாளா?”
அவள் ஒலி தேயுமுன் பார்வை அந்தப் பையின் மீதும் தூணோடுதூணாக நிற்கும் ருக்குவின் மீதும் பட்டுவிட்டது.
“எங்கடீ வந்தாளுவ? பண்னதெல்லாம் பத்தாதுன்னு மிச்ச சொச்சத்துக்கு வந்தீங்களா?”
“யம்மா, நீ எதும்பேசாத, உன் வாய்க்குப் பயந்து அர நிமிசம் தங்காம சின்னம்மா போயிட்டாங்க, எனக்கு ஆளான பொண்ண வச்சிக்க எடமில்ல. ஹோமுல இருக்கிற எடம் தோதாபாத்திட்டுக் கூட்டிப் போறன். ரெண்டு மாசம் இங்க பதனமா இருக்கட்டும். நெருக்கடி. பாடி, பரதேசின்னு நினைச்சிட்டுப் பாத்துக்கிங்கன்னு சொல்லிச்சம்மா. நீ வீணா கத்தாத...” என்றாள் செவந்தி.
"ஊஹூம்... பாடி பரதேசியா? ஏண்டி, நானும் தெரியாமதா கேக்குறேன். ஆளான பொண்ண இங்க எதுக்குடி கொண்டாந்து வுடுறா? அடி சக்களத்தி. இப்ப என் மவளுக்குச் சக்களத்தியாக் கொண்டாந்து வுடுறாளா? போடி, இந்த நிமிசமே இங்கேந்து போங்க! இந்த வூட்டு மனுசன் வந்திட்டா அது வேற புள்ளைய அணச்சிட்டுக் கொஞ்சும்!”
ருக்கு... ஓ... என்று அழத் தொடங்கி விட்டது, பிழியப் பிழிய...
"ம், பைய எடு, நட...!"
“யம்மா, உனக்கே நல்லா இருக்கா? உன் பொண்ணுக்கு, புள்ளக்கி ஒரு கட்ட நட்டம் வராதா? என்னம்மா இது...”
“அடி நாம் பெத்த மவளே! உனக்கு என்னடி தெரியும், இந்தச் சூதெல்லாம்! அப்பந் தெரியாத பொண்ண எவங் கெட்டுவா; அதாஇங்க கொண்டாந்து எளிசா வுட்டுப் போட்டு ஒடிருக்கா ஏய், நட... போ!’
அடித்து விரட்டாத குறையாகப் பிடித்துத் தள்ளி விட்டாள். அது அழுது கொண்டே போயிற்று.
செவந்தி கத்தினாள். அப்பா வந்ததும் அம்மாளின் அக்கிரமத்தைச் சொல்லி ஏற்கெனவே எரியும் நெருப்பில் நெய்யூற்றினாள்.
அப்பன் ஆத்திரத்தில் அன்று குடித்து விட்டு வந்தார். அம்மாவைப் போட்டு அடித்தார். தெருவே கூடிச் சின்னாத்தாளைப் பேசிற்று. நாவில் பல் படக் கூசாமல், சின்னம்மா வேலூருக்குச் சென்று வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தாள் என்றும், அவள் புருசனில்லாத வாழ்வில் வளர்ந்த பெண் தடையாக இருப்பதாக இங்கு கொண்டு தள்ளி இருப்பதாகவும் பேசினார்கள்.
அத்துடன் விஷயம் ஒயவில்லை. செல்லி அம்மன் கோயில் பூசாரி அதிகாலையில் வந்து கதவிடித்தார். “அந்தப் பொண்ணு, ராசாத்தி மக, கெணத்துல வுழப் போச்சுங்க. நல்ல வேள, நாம் பாத்திட்டே. சின்னானக் காவல் வச்சிட்டு சேதி சொல்ல ஒடியாந்தே. பொண்ணு பாவம் பொல்லாதுங்க. ஒண்ணு நீங்க வச்சிக்கணும். இல்லாட்டி பத்திரமா அவாத்தா கிட்டக் கூட்டிப் போய் ஒப்படச்சிடுங்க...” என்றார்.
அப்பா கெஞ்சியும் அவள் வரவில்லை. அத்தை வீட்டில் கொண்டு வந்து வலுக்கட்டாயமாகக் கஞ்சி குடிக்கச் செய்தார்கள். சின்னம்மாளுக்குச் சேதி சொல்ல ஆள் போயிற்று. சின்னம்மா வந்தாள்.
அம்சுவின் மாமன்... அவன் என்ன உறவு?
சின்னம்மாவுக்கு எந்த உறவிலோ அத்தை மாப்பிள்ளையாம். நடுத்தெருவில் நிற்க வைத்து அவளை அநியாயம் பண்ணினான்.
“எங்க மானம் மரியாதையச் சந்தி சிரிக்க வச்சிட்டியே? பாவி, எங்களுக்குத் தல தூக்கமுடியாம, அறுத்தவ, ஊரு மேல போயி மகளையும் உன் வழிக்கு விட இங்க கொண்டாந்து விட்டிருக்க?”
அப்போது செவந்தி திண்ணையில் நிற்கிறாள். துடப்பத்தை எடுத்து வந்து அவளை அடித்தான் மாபாவி!
அவன் ஊர்-உறவுக்குப் பெரிய மனிதர். பெண்டாட்டி தவிர மேல வீதியில் தொடுப்பும் உண்டு. இவன் நியாயம் பேசினான்!
அப்பா... உள்ளே வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தார்.
ஓடினாள். “அப்பா, சின்னம்மாவை செங்கண்ணு மாமன் நடுத்தெருவில நிறுத்தித் துடப்பத்தால அடிக்கிறாரு அம்மா, இன்னும் அல்லாரும் பாத்திட்டிருக்காங்க!”
அப்பா ஓட்டமாக ஓடிவந்தபோது, சின்னம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரி கோலமாக நின்றிருந்தாள். கண்ணகி சினிமாப் போல் இருந்தது. அடி மண்ணை வாரி எல்லாக் கூரைகளிலும் வீசினாள்.
"அபாண்டமா பழி சுமத்தும் நாக்குக்கு ஆண்டவன் கேக்கட்டும்? அந்த ஆத்தா கேக்கட்டும்!” என்று சொல்லிக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு விசுக் விசுக்கென்று போனாள்.
“இவ பெரிய பத்தினி சாபம் வைக்கிறா?" என்று அம்மா நொடித்தாள்.
நாலைந்து மாசம் சென்றபின், ஒரு நாள்...
ஆவணி மாசம். சரவணன் பிறந்து முப்பது நாள். அத்தான் சேதி கொண்டு வந்தார்.
"உன் சின்னம்மா, மக, மருமகன்கூட வந்திருக்கா. வக்கீல் வசதராசர் வீட்டில வந்திருக்கா. ஸ்டாம்ப்வெண்டர் தரும ராசன் வந்துசொன்னான். உன் அப்பா போயிருக்காங்க...”
மனசு சுருசுருவென்று பொங்கி வந்தது.
"வக்கீலையாவை வச்சிட்டு, பாகம் கேக்கப் போறா. அந்தப் பையன் வெடவெடன்னு இருக்கிறான். எங்கியோ கம்பெனில வேலையாம். நம்ம சாதி இல்ல. வேற எனமாம். ரிஜிஸ்தர் கலியாணம் கட்டிருக்காம். அவ ஏற்கெனவே தொட்டுப்புட்டாம் போல...”
“அதைப்பத்திக் கேட்க நமக்கு என்ன மரியாதி இருக்கு? நாமதா வீட்ட விட்டுத்துரத்திட்டமே?” என்றாள் செவந்தி.
சின்னம்மா இந்தப் பக்கமே வரவில்லை.
அப்பா வக்கீல் வீட்டுக்குப் போனதும், அவள் பங்குக்கு ஒரு கிரயம் போட்டுக் கொடுத்து விடு ஏகாம்பரம்... தகராறு எதுவும் வேண்டாம் என்று சொன்னாராம்.
“அவங்களே அனுபவிச்சிக்கட்டும். இந்த ஊரு மண்ணு எனக்கு நஞ்சாயிட்டுது... நானும் எங்கப்பன் ஆத்தாவுக்குப் பொறந்தவ. என் பங்குக்கு நாயமாக் கிரயம் கொடுத்திடணும்” என்றாளாம். அப்பா வீட்டுக்கு வந்து பேசினார். கொல்லை மேட்டுப் பூமி மட்டும்தான் அவளுடையது என்று அம்மா அப்போதும் விவாதம் செய்தாள். அதற்கு நாலாயிரம் என்று மதிப்புப் போட்டார்கள். உடனடியாகக் கொடுக்கப் பணம் இல்லை.
செவந்திக்குப் போட்டிருந்த இரட்டை வரிச் சங்கிலி இருந்தது.
“அவ சங்கிலிதாங் கேட்டா...” என்று அதை வாங்கிக் கொடுத்தார்கள். ரிஜிஸ்தரார் ஆபீசுக்குப் போய்ப் பத்திரம் எழுதினார்கள்.
செவந்தியின் புருசன் பேரில் அது எழுதப்பட்டது. ஏற்கெனவே அப்பாவின் பேரில் இருந்து மருமகன் பேருக்கு வந்தது. இந்த நிலங்களுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் உரிமையும் இல்லை என்று சின்னம்மா, மகள், மருமகன் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்களாம்!
அப்பனின் ரணம், இவளுக்கு நன்றாகப் புரிகிறது. இரவு முழுவதும் ஏதேதோ எண்ணங்கள். அந்தக் கொல்லை மேட்டில் கடலை பயிரிட்டு, மகசூல் எடுக்கவேண்டும்.
ஒரு படி போட்டு உருண்டை செய்து கொண்டு போய் அந்தச் சின்னம்மாளைப் பார்க்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றாள் நாகு பெரியம்மா... மனித வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் எப்படியெல்லாம் வருகின்றன! சுந்த்ரி... பூவிழந்து போனாள். அந்த உத்தமியை நடு வீதியில் வைத்து அவள் செய்யாத குற்றத்துக்கு அடித்தானே, பாவி! நாக்குப் புண்ணாகிப் புழுத்து ஒரு வருஷம் கிடந்தான். வலி வலி என்று துடித்தான். காஞ்சிவரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள். நாக்கில் புற்று வந்து செத்தான். -
அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?
அண்ணன் குடும்பத்தோடு ஒட்டவேயில்லை. அண்ணி குழந்தைகளுடன் இங்கு வருவதேயில்லை. கல்யாணமே அவன் விருப்பப்படி செய்து கொண்டான். மதுரையில் அவர்கள் குடும்பம் இருக்கிறது. பிறந்த வீட்டுச்செல்வாக்கு. தானும் பி.ஏ. பட்டம் பெற்றவள் என்ற பெருமையில் இந்தக் கிராமம் பிடிப்பதேயில்லை. அண்ணியின் தங்கை சென்னைப் பட்டணத்தில் இருக்கிறாள். அவளும் வேலை செய்கிறாள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பெரிய லீவுக்கு அங்கே செல்வார்கள். அப்போது அண்ணன் மட்டும் வந்து ஒப்புக்குத் தலை காட்டிவிட்டுப் போவான். இவன் எம்.எஸ்.சி., எம்.எட் படிக்க ஆதாரமாக இருந்த கிராமத்து மண் அவனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் இங்கு வந்து ஒரு ராத்தங்கியதில்லை. காரில் காஞ்சிபுரம் போனார்கள் எல்லோரும். இங்கே வந்து அரை மணி தங்கினார்கள். எங்கிருந்தோ இளநீர் வெட்டி வந்து கொடுத்து, மைத்துனர் உபசாரம் செய்தார்.
மேலோட்டப் பெருமை. அம்மாவை அந்தக் காரில் கூட்டிச் சென்றுவிட்டு, செல்லும் வழியில் கடைப்பக்கம் இறக்கி விட்டுப் போனார்கள். நெருக்கியடித்துக் கொண்டு அந்த வண்டியில் போன பெருமை அம்மாவுக்குப் பட்டுப் பளபளப்பாக இருந்தது. அது நல்ல பட்டில்லை, வெறும் சாயம் குழம்பும் அற்பம் என்று யார் சொல்வது?
உறவும் மனிதச் சூடும் இல்லாமலே விலகிப் போகும் குடும்பத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்?
உள்ளே ரேடியோப் பாட்டுக் கேட்கிறது. விளக்கும் எரிகிறது.
“சரோசா நீ படிக்கிறியா பாட்டுக் கேக்குறியா? கரண்டு காச எவ கட்டுவது?”
“நீ செத்த சும்மா இரும்மா! நாங் கணக்குப் போடுறனில்ல? நீ வேற ஏன் தொந்தரவு பண்ணற?”
“அதுக்கு ரேடியோ இன்னாத்துக்கு?”
“அதும் வேணும். நான் பாட்டுக் கேட்டுட்டுக் கணக்குப் போடுவ...”
“ஏண்டி பாட்டுக் கேட்டுட்டே நீ என்னாடி படிக்கிறது? அத்த முதல்ல மூடு. படிக்க வேண்டிய பய்யன் ஊரு சுத்திட்டு வந்து சோறு ஒரு வாய் உள்ள போறப்பவே தூங்குறா. நீயானா...” “யம்மா! நீ கொஞ்சம் வாய மூடிட்டு போக மாட்டியா?”
“நா வாய மூடுறேன். நீ ரேடியோவ மூடு!”
இதற்குள் அவளுக்கு ஆதரவாகத் தகப்பன் வந்து விடுகிறான்.
"என்ன இப்ப அதோடு உனக்கு வாக்குவாதம்?"
‘ரேடியோவப் போட்டுக் கத்த வுட்டுட்டு என்ன படிப்பு வரும்?”
“எனக்கு ரேடியோவப் போட்டாத்தான் படிக்க ஓடுது. கணக்கு ஓடுது. இந்த வருசம் டென்த். நல்ல மார்க் எடுக்கணும். நா மேலே படிக்கணும்.”
“இதபாரு, உங்கப்பாரு தலையில தூக்கி வச்சிருக்காரு உன்ன. நீ சைக்கிள்ள அசால்ட்டா பள்ளிக்கூடத்துக்குப் போறதும் வாரதும், ஃப்ரண்ட் வீடு, டீச்சர் வீடுன்னு போவுறதும் சம்சாரி வூட்டுப் பொண்ணா லட்சணமா இல்ல. நீ வரவர தாய மதிக்கிறதில்ல. வூட்டு வேல, ஒண்ணு செய்யிறதில்ல. கழனிப்பக்கம் எட்டிப் பாக்குறதில்ல. உன் வயசுப் பொண்ணு, அத மேகலா, சம்பங்கி எல்லாம் நடவு, கள எடுப்புன்னு போவுதுங்க; காசு சம்பாதிக்கிதுங்க. நீ படிச்சி என்ன ஆகப்போவுது? எங்கண்ணி படிச்ச மேட்டிம, புருசனையே பெறந்த மண்ணுக்கு ஆகாம ஆக்கிட்டா. உனக்குப் படிச்ச மாப்புள தேட இங்கென்ன பவிசு இருக்குது? ஆண்பூடு பெண்பாடுன்னு ஒரு பொம்பளலோலுப்படுற...”
கண்களில் தன்னிரக்கம் மேலிடுகிறது.
“போதுமா? நிறுத்தியாச்சா? ஆம்புள கையாலாகாதவன்னு வாய்க்கு வாய் சொல்லுறதுல உனக்கு ஒரு பவுரு. அட நாம படிக்கல. அதுன்னாலும் ஊக்கமாப் படிக்கிதேன்னு உனுக்கு ஏன் பெருமையா இல்ல? அதும் டீச்சர் என்னப் பாத்து, சரோ ஃபஸ்டா மார்க் எடுக்குதுங்க. இந்த ஸ்கூலுக்கு அவ ரேங்க் வாங்கிப் பெருமை சேப்பான்னு நம்பறோம். நல்லாப் படிக்க வையிங்கன்னு சொன்னாங்க. எனக்கு எவ்வளவு பெருமையா இந்திச்சி? உனக்கு நீதா உசத்தி. மத்தவங்க எல்லாம் மட்டம்...”
அவள் வாயடைத்துப் போகிறாள். சரோ ஊக்கமாகப் படிப்பது பெருமைதான். ஆனால் இவளால் புரிந்து கொள்ளமுடியாத முரண்பாடு இருப்பதால் உள்ளூர ஓர் அச்சம் பற்றிக் கொள்கிறது.
இவள் படிப்பு, சாதி, குலம் இல்லாத ஒருவனுடன் இவள் போகும்படி சந்தர்ப்பம் நேர்ந்து விட்டால்? அன்று சின்னம்மாவுக்கு நேர்ந்த நியாயம் இங்கு நேராது என்பது என்ன நிச்சயம்? செங்கண்ணு மாமன் போய் விட்டான். ஆனால் இந்தக் கீழ்-மேல் தெருக்களில் பிறர் விவகாரங்களில் தலையிட்டு, கண் மூக்கு வைத்துப் பெரிதாக்கி ரணங்களைக் குத்திக் கிளறப் பல செங்கண்ணு மாமன்கள் இருக்கிறார்கள். இவர்கள் பேச்சுக்குத் தாளம் போடும் பிறர் நோவறியாத பெண்களும் இருக்கிறார்கள்.
சுந்தரிக்குப் புருசன் செத்த போது, அவளுக்கு வளையலடுக்கிப் பூ வைத்துச் சிங்காரித்து, இலை போட்டுப் பரிமாறி, எரிய எரிய எல்லாவற்றையும் உடைத்துப் பொட்டழித்துக் குலைத்து, அவமானம் செய்தார்கள். இதெல்லாம் சாதி, சமூகக் கட்டுப்பாடுகள்.
இதை இந்த அநியாயக்கார ஆண்களும் அவர்களுக்குத் துணை நிற்கும் பெண்களும் இன்றும் நாளையும் அமுல்படுத்துவார்கள். இந்தக் கோடுகள், வரமுறைகளை யார் எப்படி அழிக்கப் போகிறார்கள்?
சுந்தரி சாதாரணமாக இருக்க வேண்டும் என்று தூண்டிப் பக்க பலமாக இருப்பவளே செவந்திதான். அதனால்தான்
அவளுக்கு இவள் மீது தனியான பிரியம்.
அவளுடைய அம்மா முணுமுணுப்பதையோ எச்சரிப்பதையோ செவந்தி செவிகளில் வாங்கிக் கொண்டதில்லை.
புருசன் போனபின் ஒருத்தி, அடுப்படி ஊழியத்துக்கே உரியவள். கட்டுக்கிழத்தி, பூவும் நகையுமாக மேனி மினுக்கிக் கொண்டு நெளிவெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களே அவளுக்குப் பிடிப்பதில்லை. ஒரு சிறு மாறுதலையேனும் கொண்டுவர வேண்டும் என்று நினைப்புக்கே ஊக்கமில்லாத சூழலில் சரோ.. என்ன செய்யப் போகிறாள்? கண்களை மூடிக் கொண்டு பழக்கமில்லாத பாதையில் அடி வைக்கிறாளா?