உள்ளடக்கத்துக்குச் செல்

கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்

விக்கிமூலம் இலிருந்து
4
புரோகிதரின் புலம்பல்

புரோகிதர் புண்ணியகோடீஸ்வர கனபாடிகளுக்குப் பிரமபுரத்திலே அபாரமான மதிப்பு! கெம்பீரமான உருவம்–இனத்தின் இலட்சணப்படி! உலகம் உருண்டை வடிவமென்பதை விளக்கும் தொந்தி! கட்டாந்தரையிலே இரண்டோர் புற்கள் முளைத்துக் காய்ந்துகிடப்பது போன்ற வைதீகக் குடுமி, பஞ்ச கச்சம், பட்டை விபூதி, சந்தனப்பொட்டு, சரிகை உத்தரியும், மெருகிடாத பொன்மேனி, ஆசை ததும்பும் கண்கள், விரிந்த செவிகள், கூர்மையான நாசி— சாமுத்ரிகா இலட்சணம் இது. குணாதிசயமோ, குல தர்மத்தின்படி அமைந்திருந்தது. புன்சிரிப்புத் தவழ்ந்தபடி இருக்கும். எவரிமும் தமக்குப் பிரிவு இருப்பதான பாவனையைப் பேச்சாலும் பெருமூச்சாலும் காட்டுவார். வழியில் தென்படுவோரைக் குசலம் விசாரியாமலிரார். குறித்த தேதிப்படி, திதி வகைகளைக் கவனப்படுத்தத் தவறமாட்டார். இடையிடையே, “இளநீர் ஒரு ஆறும், இஞ்சி கொஞ்சமும், வாழைக்கச்சல் கிடைக்குமானால் அதுவும், சம்பாவோ சிறுமணியோ இரண்டு மரக்கால் சத்தியமாகத் தேவை” என்பதையும் கூறுவார். பல கேட்டுச் சில பெறுவார். வந்தவரையில் பகவத்கடாட்சந்தானே என்று கூறுவார். குளிர்ந்ததாகக் காட்டிக்கொள்வார். முகூர்த்தம் குறித்துக் கொடுப்பதிலும், சடங்கு சம்பிரதாயத்தை அமைப்பதிலும் வாடிக்கைக்காரரின் விருப்பந்தான் அவருக்கு மேஷம், ரிஷபம், மிதுனம். “முதலியார்வாள்! கோர்ட்டுக்குப் போக வேண்டாமா! காலையிலே பத்து மணிக்குள் காரியத்தை முடித்துவிடுகிறேன். கரி நாள் என்று சொல்வா, அது ஒன்றும் செய்யாது. ஏன் தெரியுமா? முதலியாருடைய ஜாதகமிருக்கிறதே அது அப்படிப்பட்டது. சனிகூட சுக்கிர காரியம் செய்யும்” என்பார் சமயத்தைத் தெரிந்து. வைதீகப் பித்தரிடம் சென்றாலோ, “நாள் செய்வதை நல்லவாள் செய்யமாட்டான்னு பெரியவா வீணுக்கா சொன்னாள். விஷக்கடி வேளை கூடாது பாருங்கோ. தருமபுத்ரர், சொக்கட்டான் ஆட உட்கார்ந்தாரே சகுனியுடன், அந்த வேளை எவ்வளவு பொல்லாதது தெரியுமோ! சனி பார்வை பார்த்தான்? தருமரின் ராஜ்யம், சொத்து, திரௌபதி சகலமும் போச்சு. சகுனியா செய்தான். ‘சனியன்’ வேலை. விடியற்காலமே தான் முகூர்த்தம்! ஜாம் ஜாமென இருக்கும்” என்று கூறுவார். ஒவ்வோர் ரகத்துக்கும் இஷ்டமான ரகம் கனபாடிகளுக்குத் தெரியும். அதற்கேற்றபடிதான் நாள், கிழமை, நட்சத்திரம், சடங்கு ஆகியவைகள் அமைப்பார். ஆகவே, பிரமபுரத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லாவிட்டால், புரோகிதரின் ஏக புத்திரி ஏமலதாவை ஒரு எஞ்சினியரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து, சீர் சம்பிரமமாகச் செய்ததுடன், எல்.எம்.பி. படிக்க, கனபாடிகள் பணம் தந்திருக்கமுடியுமா? ஏமலதா, ஆமதாபாத் சேலையும், ஆர்கண்டி ஜாக்கெட்டும், கெம்பு வளையும், பச்சை மூக்குத்தியும், வைர லோலாக்கும் போட்டுக்கொண்டு, வாலிபர்களின் விழிகளுக்கு விருந்தாக இருந்திருக்க முடியுமா? அவர் வைதீகர். ஆனால், அது வாட்டமா அவருக்குத் தந்தது? தோட்டமும் துறவும். நில புலன்களும் தந்தது. அவர் ஏன் பின்பு அதைவிடப் போகிறார்?

அவருடைய குற்றமல்ல, எல். எம். பி. மாப்பிள்ளை திடீரென்று இறந்துவிட்டது. அதனால் ஏமலதாவின் அழகொன்றும் போய்விடவில்லை. அமங்கலையானாளே என்று அப்பாவுக்கு வருத்தந்தான். பாவம், அந்த மங்கையும் ஒரு சுகமும் காணாமல் மூலையில் உட்கார்ந்திருக்க ‘விதி’ நேரிட்டது. வேதனைதான் தந்தது. தாயும் இல்லை, அந்த சாய்ந்து தளிருக்கு! பெண்ணின் பருவ வளர்ச்சியும் எழிலின் வளர்ச்சியும், கனபாடிகளுக்கு, அவளுக்குத் தாலி மட்டும் இருந்துவிட்டால் பரமானந்தமாக இருக்கும். அமங்கலை அழகாகவும், இளமையாகவும், நாகரிகமாகவும் இருந்தால் அப்பாவுக்கு அச்சந்தானே! இச்சைதான் பொல்லாத நச்சரவாயிற்றே! எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டார்கள். காலம் கெட்டுப் போச்சு என்று பல எண்ணிப் புலம்பினார் கனபாடிகள். அவளோ எண்ணி விம்மினாள் சில காலம். பிறகு வீதிவழியே செல்லும் “கண் சிமிட்டிகள், போலோ காலர்கள், புன்சிரிப்புப் பாண வீரர்கள், புதுப் பார்வையினர்” ஆகியோரைக் கண்டு காலந்தள்ளினாள். கண்டதும் கெட்ட எண்ணம் கொண்டு விடவில்லை. “அவரைப் பார்த்தால், என் ஆத்துக்காரர் போலே இருக்கு; அதோ அதே மாதிரி காலர்தான் அவர் போடுவார்” என்று தான் முதலிலே எண்ணினாள். பிறகு, அந்தப் பொல்லாத உணர்ச்சி இருக்கிறதே அது ஆட்சி செய்ய ஆரம்பித்தது. அந்தப் பேதை அதற்கு அடிமையானாள்.

கனகசுந்தரம் கட்டு இல்லாத காளை. பெற்றோர் சிறு பிராயத்திலே இறந்துவிட்டனர். எப்படியோ, படித்து யாரையோ அடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தான். சாப்பாட்டு விடுதியிலே ஜாகை. அந்த ஜாகையின் ஜன்னல் வைதீகத்தின் கெட்ட காலமோ என்னமோ ஏமலதாவின் தோட்டத்துக்கு நேராக இருந்தது. முதலிலே லஜ்ஜை; பிறகு ஒருவிதமான சந்தேகம்! அதற்கடுத்தபடி ஒரு வகையான சந்தோஷம்! பிறகு கண்டதும் முகமலர்ச்சி; காணாவிட்டால் கவலை. பிறகு, கண் கடிதம். பின்னர் கடிதமே புறப்பட்டுவிட்டது, அமங்கலை ஏமலதாவுக்கும், வாலிபன் கனகசுந்தரனுக்கும்! பாழாய்ப்போன பள்ளிக் கூடம் ஒன்று இல்லையானால் ஜன்னலும் அவனும் இணைப் பிரிந்திருக்கமாட்டார்கள்! ஜலம் மொள்ளும் வேலை ஏமலதாவுக்கு எப்போதும் இருந்தபடியே இருக்கும்.

அந்த பச்சை நிறப் பத்திரிக்கையும் அவனுக்குக் கிடைத்துவிட்டது. கட்டுகளை அறுத்தெறி, சிறையை விட்டு வெளியே வா, நாட்டாரின் மூட ஏற்பாட்டை நீ மதியாதே என்றெல்லாம் ஒரு கிழவர் கூறினால், ஒரு காளைக்கு உணர்ச்சி பொங்காமலா இருக்கும்? கடிதத்துடன் சேர்த்துக் குடி அரசுக் கட்டுரைகளையும் அனுப்பலானான். காதலுடன் காலக் கண்ணாடியையும் பெறவே ஏமலதா காதல் உள்ளத்துடன் அச்சத்தைத் துடைத்த அணங்குமானாள். இளைய உலகில் நடக்கும் இவை, கிழ வைதீக கனபாடிக்குத் தெரியாது. விதவைத்தனம் அவளிடம் தங்கிவிட்டது என்று நம்பினார். அவள் அந்தச் சிறையை விட்டுத் தப்பித்துக்கொண்டு செல்லச் சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கும் கிளி என்பது அவருக்குத் தெரியாது. “சம்போ! மகாதேவா! எனக்கு சகல சம்பத்தும் தந்தாய். ஒரே ஒரு குறையை மட்டும் தந்துவிட்டாய் தேவா! ஏமலதாவின் கதியை எண்ணினால், என் சொத்து சுகம் எல்லாம் சுடு நெருப்பாகிறதே! சர்வேஸ்வரா! ஏனோ எனக்கிந்த தண்டனை!” என்று கூறி ஆயாசப்படுவார். ஏமலதாவின் அலங்காரங்களைக் கண்டால் அவருக்குச் சந்தேகம் வளரும். என் செய்வார்?

சந்தியாவந்தனத்தை முடிக்கப் போகும் சமயம் தன்னை நோக்கி ஒரு வாலிபன் வருவதைக் கண்டதும், திறந்த கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார் புண்ய கோடீஸ்வரர். அது அவர் முறை! தியானத்திலே ஐயருக்கு எவ்வளவு அக்கரை தெரியுமோ என்று ஊரார் பேசிக் கொண்டது அந்தத் தந்திரத்தின் பயனாகத்தான். வந்த வாலிபன் பத்து நிமிடங்களுக்கு மேல் ஐயர் எதிரிலே நின்ற பிறகு, “பரமேஸ்வரா! தயாநிதே” என்ற பேச்சுடன், கண்களைத் திறந்தார் கனபாடிகள். வாலிபனைக் கண்டார். புதுமுகம் அவருக்கு! இருந்தாலென்ன. புது வாடிக்கை பிடிக்க வேண்டுமே! அதற்காக வாஞ்சையுடன் வாலிபனை நோக்கினார்.

“அடுத்த கிராமம் நான் வசிப்பது. நாளைக்கு முகூர்த்தம். எனக்குத்தான். பெண் என்னைவிட உயர்ந்த ஜாதி. அவள் என்னைக் காதலிக்கிறாள். எனக்கும் இஷ்டந்தான். ஆனால், சாஸ்திர சம்மதமாகாதே என்பதற்காகச் சஞ்சலப்படுகிறேன். முகூர்த்தம் உங்களைக் கொண்டே நடத்த வேண்டுமென்று என் பெற்றோர் பேசிக் கொண்டனர். அதைக் கேட்டு நான் ஓடோடி வந்தேன். நீங்கள் இந்தச் சாஸ்திர சம்மதமற்ற கலியாணத்துக்கு வரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளவே இங்கு வந்தேன். கிருபை செய்ய வேணும்” என்றான் வாலிபன்.

கனபாடி யோசித்தார்! “அடுத்த கிராமமா! யார் வீடு?” என்று கேட்டார். இடத்துக்கேற்றபடிதானே அவருடைய முகூர்த்தம், சடங்கு எல்லாம்!

“நாங்கள் சென்னை! இங்கே வந்து ஒரு வாரந்தான் ஆகிறது. என் அப்பாவுக்கு வியாபாரம். ஆண்டவன சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறான். பங்களா, மோட்டார், சின்ன ஜமீன், இவ்வளவும் உண்டு” என்றுரைத்தான் வாலிபன். ஐயருக்கு நெஞ்சிலே நமைச்சல் ஏற்பட்டுவிட்டது. பெரிய இடத்துக் கலியாணம், தட்சணை சன்மானம் ஏராளமாகக் கிடைக்குமே என்ற எண்ணம்.

“இப்படி உட்கார் தம்பி! சாஸ்திர விரோதம், தர்ம விரோதம், ஆசார விரோதம் ஆகியவைகள் பாபக் கிருத்தறியந்தான். ஆனால் அவைகளுக்குப் பிராயச்சித்தமும் உண்டு, நிவர்த்தியும் உண்டு. கொஞ்சம் செலவாகும். ஆனாலும் பாதகமில்லை! பகவத் பிரீதி ஏற்பட்டுவிடும். மேலும் அந்தப் பெண் உயர்ந்த ஜாதி என்கிறாய். காதலுக்கு ஜாதி ஏது! சந்தனுவின் சரசத்துக்குச் சொந்தமான சுந்தராங்கி மீன்பிடிப்போர் குலம். மச்சகந்தியே பிறகு பரிமளக்கந்தியாகிவிடவில்லையா! பெண்ணுக்கேற்றது ஆணுக்குந்தான். ஆகையால் நீ ஆயாசப்படாதே” என்று கனபாடிகள் சாஸ்திரோக்தமான பதிலே கூறினார். வாலிபன் பூரிப்புடன் “மற்றுமோர் விசேஷம்! எங்களுக்குள் காந்தர்வ விவாகமும் நடந்துவிட்டது” என்று சொல்லித் தலை குனிந்தான். கன பாடிகள் ‘பலே! கைகார ஆசாமிதான்! குட்டியுங் கெட்டிக் காரிதான்! இன்னமும் சாஸ்திரமும் கீஸ்திரமும் குறுக்கே நிற்பானேன்? அதை நான் சரி செய்துவிடுகிறேன். 150 ரூபாய் பிடிக்கும். இங்கேயே செய்ய முடியாது. வீட்டிலே தான் செய்ய வேணும்” என்றார். வாலிபன் நோட்டுக்களைத் தந்தான். கனபாடி களிப்போடு வீடு சென்றார். விடியற்காலை மூன்று மணிக்கு முகூர்த்தம்! ஐயர் இரண்டு மணிக்கே எழுந்துவிட்டார். ஏமலதா வெந்நீர் தயாராக வைத்திருந்தாள். ஐயர் குளித்தார். போர்க்கோலம் பூண்டார்; புறப்பட்டார். “புறக்கடைக் கதவும், தெருக்கதவும் தாள் போட்டுண்டு இரு அம்மா! எட்டு மணிக்கு வந்துவிடுகிறேன்” என்று ஏமலதாவிடம் கூறிவிட்டுக் கலியாண வீடு சென்றார்.

கலியாண வீட்டிலே ஆனந்தம்! புரோகிதரும் அதிலே கலந்து கொண்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு மோட்டாரில் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து இறங்கினர். “சரிதான்! ஏற்கெனவே காந்தர்வம் நடந்தவள்! இப்படி வருவதுதான் முறை. மேலும் நேற்றிரவு நான் இதற்கெல்லாம் சேர்த்தே பிராயச்சித்தம் செய்துவிட்டேன்” என்று கனபாடி கூறினார். மேளம் காது செவிடுபடக் கிளம்பிற்று.

“இவ்வளவு நாகரிகமாகக் கலியாணம் செய்யறவா, மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் இடையே திரை போடுவானேன்? சுத்த கர்நாடக மன்னோ!” என்று கனபாடியே சீர்திருத்தம் பேசலானார். “அது எங்கள் குல தர்மம்” என்று கலியாண வீட்டார் கூறினர். கலியாண வீட்டிலே கனபாடிகளுக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தனர்.

“காலம் போகிற போக்கின்படி செய்ய முன்வந்தீர். இதுதான் முறை” என்றும், “ஜாதிபேதம் ஒழியத்தானே வேண்டும். கலப்பு மணம் பரவவேண்டும். கனபாடிகளே இதற்குச் சம்மதித்த பிறகு, ஒரு வைதீகனாவது இனி வாய்திறக்க முடியுமா” என்றும், “ஆசைக்குத்தானே சார் நாயகி, ஆசாரத்துக்காக வேண்டி ஒரு அழுமூஞ்சியையா கட்டிக் கொள்வது” என்றும், பலரும் கலப்பு மணத்தை துவக்கி வைக்க முன்வந்த கனபாடிகளைப் பாராட்டினர். 150 ரூபாய் கிடைத்தது. இப்போது 10 ரூபாயாவது படும் என்ற கணக்கில் கனபாடி களித்தார். ஓமம், மணமக்கள் மனதிலே கொழுந்து விட்டெரியும் காதல் ஜுவாலையைப் போல் கிளம்பிற்று. இராகபாவத்துடன் மந்திரங்களைக் கூறினார் புரோகிதர். மாங்கல்யதாரணம் நடந்தது. கெட்டி மேளம் நடந்தது. திரையும் நீங்கிற்று. மணப்பெண் “அப்பா! நமஸ்கரிக்கிறேன்” என்று கூறினாள். ‘ஆ! யார்? ஏமுவா? என்று அலறினார் புரோகிதர்; மயக்கமுற்றார்.

‘அப்பா! அப்பா!’ என்ற அன்பு மொழியும், ‘மாமா! மாமா!’ என்ற கனிவான மொழியும், குளிர்ந்த நீர் தெளிக்கப்பட்டபின் புரோகிதர் எழுந்தார். நடந்ததை நினைத்தார். நெஞ்சு நெருப்புக்கூடாயிற்று. நீர் பெருகும் கண்களுடன், “பாதகி! கல்லைப் போட்டாயே தலையிலே! உன்னைப் போல விதவைகள் இப்படியா காரியம் செய்கின்றனர்? இலைமறை காயாக ஏதோ நடப்பதுண்டு. இப்படி விவாகமா! அதற்கு நான் புரோகிதமா! என்ன துணிவு! எவ்வளவு அக்ரமம்! என் மதிப்பு என்ன ஆவது! மதம் என்ன ஆவது! பிழைப்பும் போச்சேடி பேதையே! இந்தத் தடிப்பயல் 150 ரூபாய் கொடுத்து என்னை மயக்கிவிட்டானே! இதற்கு உடந்தையா! மண்டையை உடைத்துக் கொண்டு இங்கேயே சாகிறேன்! நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறேன்” என்று துடித்தார்.

“சாஸ்திரோக்தமாக நீரே இருந்து திவ்வியமாகத் திருமணம் நடந்துவிட்டது. இனி விசனப்படுவானேன்! உடைந்த பாண்டம் என்று எண்ணிக் கொள்ளுங்கள்” என்பதாகச் சமாதானங் கூறினர்.

அதற்கு அவர், “போக்கிரிகளே! துஷ்டர்களே! என்னை ஏய்த்து விட்டீர்களே, நான் விடமாட்டேன். ஏமலதாவுக்கு நடந்தது விவாகமல்ல!” என்று கதறினார்.

“காந்தர்வ மணம் முதலிலே! இப்போது அக்னி சாட்சியாக, பிரமபுரத்துப் பிரபல புரோகிதர் முன்னிலையில் திருமணம் நடந்தேறியது” என்றான் மாப்பிள்ளை கனக சுந்தரம். மணப்பெண் ஏமலதாவோ, “இனிக் கிணற்றங் கரைக்குப் போவதும் வருவதுமாக இருக்கத் தேவையில்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் இசைந்த கண்ணாளன் கிடைத்தான்; குலதர்மம் கெட்டுவிட்டால் குடியா முழுகிவிடும், இயற்கை தர்மம் நிலைத்தது” என்று எண்ணி மகிழ்ந்தாள்.

“நீ யாரடா, என் குடி கெடுத்தவன்?” என்றார் கோபத்துடன் கனபாடி. மனம்போல் மாங்கல்யம் கிடைத்ததால் மகிழ்ந்த ஏமலதா, “நம்ம ஊர் பள்ளிக்கூடத்துத் தமிழ் வாத்தியாரப்பா அவர். இருபது ரூபாய் சம்பாதிக்கிறார். முதலியார் வகுப்பு. வேறு மனுஷா கிடையாது” என்றாள்.

“வாத்தியா! இருபது சம்பளமா! அடபாவி! ஜமீன் இருக்கு, பங்களா இருக்கு, மோட்டார் இருக்கு என்றாயே. அதுவும் இல்லையா! பஞ்சைப்பயதானா?” என்று கூறிப் பிரலாபித்தார். “பெண் போச்சு! பிழைப்பு போச்சு! மதிப்புப் போச்சு! பணமும் இல்லை இந்தப் பயலிடம்” என்று கூறி அழுதார்.

“பணத்திற்கு குறை ஏதப்பா! நம்மிடம் இல்லையா?” என்று ஏமலதா கூறினபோது கனபாடியின் இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது.

“ஒரு காசு காணமாட்டீர்கள்! எல்லாம் ஈஸ்வரன் கோயிலுக்கு எழுதி வைத்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று மிரட்டினார் கனபாடிகள்.

“இரண்டு ஜீவன்களுக்கும் இருபது ரூபாய் போதும்” என்றான் கனகசுந்தரம்.

“அட! பாவிப்பயலே! என் மானத்தை வாங்க வேண்டாம். இந்த ஊரை விட்டு இவளையும் இழுத்துக் கொண்டு எங்காவது தொலை. இருநூறு ரூபாய் தந்து விடுகிறேன். இந்த க்ஷணம் போய்விடவேண்டும். நான் சிவனே என்று இங்கேயே கிடக்கிறேன். என் மகளோடு திருப்தி அடை; மானத்தையும் பறிக்காதே. பிராமணன் நான்; உன்னிடம் கெஞ்சுகிறேன்” என்றார் கனபாடி.

“அப்படியே செய்கிறேன் மாமா! மோட்டார் அதற்காகத்தான் ஏற்பாடாகி இருக்கிறது. நேற்று மாலையே புரோகிராம் போட்டுவிட்டோம். பெங்களூர் போகிறோம்” என்றான் மாப்பிள்ளை.

“இருநூறு ரூபாய் வேண்டாமப்பா. எனக்காக நீங்கள் செய்துவைத்த நகைகள் 2000 தாளுமே! அது போதும்” என்றாள் மகள். “அதுவும் போச்சா!” என்று அழுதார் புரோகிதர். அவரது புலம்பலை யார் கேட்கிறார்கள்? ஊர் முழுவதும் வம்பளப்புத்தான்! அவர்கள் பெங்களூரில் சரசமாக வாழ்ந்து வந்தனர்.

அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் போடுகிறாள் ஏமலதா. கனபாடிகளும் வழக்கப்படி, புரோகிதம் செய்கிறார். பேரன் பிறந்தான் என்று கேட்டும் பூரித்தார். சேருகிற சொத்து யாருக்கு! எல்லாம் அந்தப் பையனுக்குத்தானே! பேரப் பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்பது கனபாடிகளின் விருப்பம். யாரும் அறியாமல் போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணினார்.

பெங்களூரில் குழந்தையைத் தொட்டிலிட்டு, ஏமலதா தாலாட்டும்போது, “தாத்தா வருவார்! தங்கமல்லவா தூங்கு! உனக்கு பட்சணம் வாங்கித் தருவார், பட்டுச் சொக்கா எடுத்து வருவார்! தங்கச் சங்கிலி போடுவார்” என்று கொஞ்சுகிறாள்.

புண்ணிய கோடீஸ்வரரின் புதல்லி பெங்களூரில் இருப்பது பற்றி, யாரேனும் துடுக்குத்தனமாகப் பேசினால், புரோகிதர், “அவ தலையெழுத்து அதுபோலிருந்தா, யாராலே தடுக்க முடியும்” என்று சமாதானம் கூறுவார். மனதிலே என்னவோ திருப்திதான்.
சீர்திருத்தப் பிரசாரம் பலமாக நடக்க ஆரம்பித்தது. புரோகிதப் புரட்டு, மத ஆபாசம், பொருந்தா மணம், விதவை மணத்தின் அவசியம் ஆகியவற்றைப் பற்றிப் பலமான பிரசாரம் நடந்தது. அது புரோகிதரின் மனதைப் புண்ணாக்கிற்று. “காலம் எவ்வளவு கெட்டு விட்டது பார்த்தேனோ! ஆசாரம் கெட்டுப் போச்சு! மதத்தின் மதிப்பு போகிறது. ஜாதி உயர்வு தாழ்வு பற்றிய சம்பிரதாயம் போயிண்டிருக்கு! கலியின் கூத்து” என்று கூறிப் புலம்புகிறார். பெங்களூர் நினைப்பு வந்தால் மட்டும் புன்னகை.