கோயில் மணி/போடாத செருப்பு

விக்கிமூலம் இலிருந்து

போடாத செருப்பு

சுவாமி, தாங்கள் சந்தியாசியாக இருந்தும் ஒரு கிருகஸ்தர் படத்தை வைத்துப் போற்றுகிறீர்கனே!” என்று கேட்டேன்; முத்தானந்த சுவாமிகளிடந்தான் கேட்டேன்.

அவர் புன்முறுவல் பூத்தார். “சாதி, சமயம், ஆசிரமம் ஆகிய இவை அன்புக்கு முன் நிற்பதில்லை. அதுவும் நன்றியறிவும் கலந்து கொண்டால், நிச்சயமாக இந்த வேறுபாட்டுக்கு இடமே இல்லை” என்றார்.

அவர் சந்தியாசிதான்; ஆனால் எப்போதும் நிஷ்டையிலே இருந்து கொண்டு உலகத்திலே ஊடாடாமல் இருக்கிறவர் அல்ல. ஒரு சின்ன ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். தலை மொட்டை, கழுத்தில் ருத்திராட்சம்; இடையில் நாலு முழ வெள்ளை வேட்டி; நெற்றியில் எப்போதும் திருநீறு துலங்கும். அவர் வைத்தியத்தில் கிடைக்கும் பொருளைக் கொண்டு, பிறர் கையை எதிர்பாராமல் தம்முடைய ஆசிரமத்தை நடத்தி வந்தார். பண வரவு செலவுக் கணக்கை நம்பிக்கையான ஓர் ஆசாமியிடம் விட்டு விட்டார். மருந்து சாமான்கள் வாங்குவது, சாமியாருக்கு உணவு ஏற்பாடு செய்வது முதலிய எல்லாக் காரியங்களும் அவர் பொறுப்பில்தான் இருந்தன. ஆகவே முத்தானந்தர் காசைக் கையில் தொடாமல், துறவியாகவே இருந்து வந்தார். காலை மாலைகளில் தியானம் செய்வார். இரவு நேரங்களில் பிள்ளைகளைப் பஜனை செய்யச் சொல்லிக் கேட்பார். அவரும் கூடப் பாடுவார். அவருடைய ஒவ்வொரு நாள் வேலை முறையும் இவ்வளவுதான். அவருடைய முகத்தில் ஒரு பொலிவு இருந்தது. கண்ணில் ஓர் ஒளி இருந்தது. அவரிடம் பேசும் பொழுது யாருக்கும் மிக மிக நல்லவர் ஒருவரோடு பேசும் உணர்ச்சியே உண்டாகும்.

படத்தைப் பற்றிக் கேட்ட எனக்கு அவர் அன்பு, நன்றியறிவு என்று காரணம் சொன்னார். “இவரிடம் உங்களுக்கு அன்பும் நன்றியறிவும் இருக்கின்றன என்று உங்கள் பதிலிலிருந்து ஊகிக்கிறேன். அதற்குக் காரணம் ஏதாவது இருக்க வேண்டுமே!” என்றேன்.

“நான் இன்று பரதேசியாக இருந்தாலும், பிறருடைய பொருளை ஒரு வேலையும் செய்யாமல் பெறுவதில்லை. ஏதோ வைத்தியம் என்ற சிறிய உபகாரத்தைச் செய்து பெறுகிறேன். அந்த வைத்தியத்தைச் சொல்லித் தந்தவர் இந்த மாசிலாமணி முதலியார். வைத்தியத்தை நான் வைத்திருக்கும் வரையிலாவது இந்தப் படத்தை வைத்திருக்க வேண்டாமா?”

“நல்ல காரணந்தான். இந்தக் காலத்தில் யார் நன்றியை நினைக்கிறார்கள்?”

“நினைக்காதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நினைப்போமே! நன்றியை நினைக்கிறது என்று சொல்லும் போது எனக்கு ஒரு பெரிய கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதைக்கு அடையாளமாக ஒரு பொருளை வைத்திருக்கிறேன். அதை நீங்கள் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். இந்தப் படத்தைக் கண்டு நீங்கள் கேள்வி கேட்டீர்கள். அதைக் கண்டுவிட்டாலோ நீங்கள் பிரமித்துப் போவீர்கள். கொஞ்சம் இருங்கள். அதைக் கொண்டு. வருகிறேன்” என்று அருகில் இருந்த அறைக்குள் போனார் முத்தானந்தர்.

சிறிது நேரத்தில் பட்டுத் துணியில் கட்டியிருந்த மூட்டை ஒன்றைக் கொண்டு வந்தார். உட்கார்ந்து கொண்டு அதை அவிழ்த்தார். நான் உண்மையிலே ஆச்சரியப்பட்டுப் போனேன்; திடுக்கிட்டேன் என்றே சொல்ல வேண்டும். பட்டுத் துணியில் பாதுகாத்து வைத்திருந்த பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஒரு ஜோடிச் செருப்பு!

“என்ன சுவாமிகளே இது?” என்று சற்று உரக்கவே கேட்டுவிட்டேன்.

“இதுவும் அன்புக்கும் நன்றியறிவுக்கும் அடையாளம்!” என்றார் சாமியார்.

“இது எந்த ஆசிரியருடைய திருவடி நிலை?” என்றேன்.

“இது யாரும் அணியாதது.”

“ஏன் அணியவில்லை?”

“நான் அணிவதற்காகக் கிடைத்தது இது, ஆனால் அணியவில்லை. மதிப்புக்குரிய பொருளாகப் பாதுகாத்து வருகிறேன்.”

நான் ஒன்றும் தோன்றாமல் விழித்தேன். “இதன் கதை பெரியது; அதைச் சொல்கிறேன், கேட்கிறீர்களா?” என்று கதையைத் தொடங்கிவிட்டார்.

ந்த இடத்தில் நூறு குடிசைகளுக்கு மேல் இருந்தாலும் அந்தக் குடிசையை அடையாளம் தெரிந்து கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் கந்தர் அநுபூதிப் பாராயண ஒலி அங்கே கேட்கும். காளிமுத்து எழுந்து நீராடித் திருநீறிட்டுக் கொண்டு இந்தப்பாராயணத்தைச் செய்வார். எது தப்பினாலும், இது தப்பாது. அவர் சென்னை மாநகரில் ஒரு சேரியில் வசித்தாலும், அவர் வேலை செய்தது பணம் புரளும் பெரிய பாங்கியில் அங்கே சாவல் செய்யும் வேலை; அவ்வளவுதான். தமக்குக் கிடைத்த சின்னச் சம்பளத்தில் மாசத்துக்கு ஒரு முறை வடபழனிக் கோயிலில் சிறிய அபிஷேகம் செய்யா விட்டால், அவருக்குச் சம்பளம் வாங்கிய திருப்தியே இராது. அவருடைய மனைவி சாது; உழைப்புக்கு அஞ்சாதவள்; யார் வீட்டிலோ வேலை செய்து பத்துப் பன்னிரண்டு ரூபாய் சம்பாதித்தாள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. செக்கச் செவேலென்ற நிறமும் கண்ணும் மூக்கும் யார் கண்டாலும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொஞ்சவேண்டுமென்று தோன்றும்.

இந்த இடத்துக்கு அருகிலுள்ள ரோடு வழியே காய் கறி விற்கும். பேர்வழி ஒருவர் தம் கூடைகளை ஒரு கை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே போவார். அங்கங்கே சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தார் அவர். ஒரு நாள் அவர் வேகமாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போகும் போது, காளிமுத்துவின் குழந்தை அந்தப் பக்கமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அது ரோடைத் தாண்டும் போது, காய்கறி வண்டி வந்து விட்டது. ஒரு கணம் தப்பியிருந்தால், குழந்தையின் மேல் சக்கரம் ஏறியிருக்கும். நல்ல வேளை! காய்கறிக்கரரக் குப்புசாமி நிதானித்துக் கொண்டார்; சட்டென்று வண்டியை ஒடித்துக்கொண்டார். வண்டியில் இருந்த ஒரு கூடை கீழே சாய்ந்துவிட்டது. குழந்தையும் இந்தக் கலவரத்தில் கீழே தடுக்கி விழுந்தது. குப்புசாமி வண்டியை விட்டு, கூடையைத் தூக்காமல் குழந்தையைத் தூக்கித் தடவிக் கொடுத்தார். ஒரு தக்காளிப் பழத்தைக் கொடுத்து ஆறுதல் சொன்னார். “நீ எங்கே இருக்கிறாய் குழந்தாய்?” என்று கேட்டு, அதனுடன் காளிமுத்துவின் குடிசைக்கு வந்து குழந்தையை விட்டு விட்டுப் போனார்.

அது முதல் அந்தக் குழந்தையிடம் குப்புசாமிக்கு ஒரு பாசம் விழுந்துவிட்டது. அந்தப் பக்கம் வரும்போதெல்லாம், குப்புசாமி அந்தக் குடிசைக்கு வந்து, குழந்தையைக் கண்டு சிறிது நேரம் கொஞ்சிவிட்டே போவார். வரும் போது, கையில் குழந்தைக்குப் பிஸ்கோத்தோ, பழமோ கொண்டு வருவார். அவருக்கு வயசு கிட்டத் தட்ட அறுபது இருக்கும். காளிமுத்துவின் மனைவி அவரை அண்ணன் முறை வைத்துப் பேசுவாள். நாளடைவில், அவர் அந்தக் குடும்பத்தின் நெருங்கிய உறவினரைப் போல ஆகிவிட்டார்.

காளிமுத்துவின் மனைவி வேலை செய்து கொண்டிருந்த வீடு ஒரு பெரிய செல்வர் வீடு. அவள் அந்த வீட்டு அம்மாளிடம் சிபாரிசு செய்து குப்புசாமியிடம் காய்கறி வாங்கும்படி செய்தாள். அந்த அம்மாளுடைய தயவால் இன்னும் பலருடைய வாடிக்கையும் அவருக்குக் கிடைத்தது. “தங்கச்சி, உன்னாலே என் வியாபாரம் பெருகிப் போயிற்று” என்று அடிக்கடி அவர் சொல்வார்.

காளிமுத்து மிகவும் சிக்கனமாக வாழ்கிறவர். தம் குடிசையைத் தாமே கட்டிக் கொண்டார். அதற்கு ஆன செலவைத் தம்முடைய வருவாயிலிருந்தே செய்தார். அநாவசியச் செலவு என்பதே அவரிடம் இல்லை.

ஒரு நாள் குப்புசாமி வந்தபோது, காளிமுத்து வேலைக்குப் போயிருந்தார். குடிசைக்குள் அவருடைய செருப்புக் கிடந்தது. குப்புசாமி காளிமுத்து மனைவியிடம், “அவர் பாங்கிக்குப் போகவில்லையா?” என்று கேட்டார். “போயிருக்கிறாரே!” என்று பதில் சொன்னாள் அவள்.

“செருப்பு இங்கே இருக்கிறதே!” என்றார் குப்புசாமி.

“அதை எப்போதும் அவர் போட்டுக் கொள்கிறதில்லை. அதிக வெயிலாக இருந்தால் போட்டுக் கொள்வார். செருப்புச் சீக்கிரம் பிய்த்துவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்.”

“செருப்புப் பிய்ந்தால், புதுச் செருப்பு வாங்கிக் கொள்கிறது.”

“ஆறு ஏழு ரூபாய் இல்லாமல் புதுச் செருப்பு வருமா? அப்படியெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தால், எங்களுக்குக் கட்டுமா, அண்ணாத்தை?” என்று அவள் கூறிய போது குப்புசாமிக்கு இரக்கமாக இருந்தது. .

அந்தப் செருப்புப் பழையது. போட்டுக் கொண்டு வேகமாக நடந்தால், பிய்ந்துவிடும் நிலையில்தான் இருந்தது. புதுச் செருப்பு வாங்கக்கூட யோசிக்கும் நிலையில் காளிமுத்து இருப்பதை எண்ணிக் குப்புசாமி மிகவும் வருந்தினார்.

ரு நாள் அந்தச் செருப்பைக் காணவில்லை. காளிமுத்து அதைத் தேடித் தேடிப் பார்த்தார்; காணவில்லை. இனியாவது புதுச் செருப்பு வாங்குவார் என்று எதிர் பார்த்தார் குப்புசாமி. காளிமுத்து வாங்குவதாகத் தெரிய வில்லை “என்ன தம்பி, புதுச் செருப்பு ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாதா? மாசம் ஐந்து ருபாய் சாமிக்கு அபிஷேகம் செய்யச் செலவழிக்கிறாயாமே! ஒரு மாசம் அதை நிறுத்திச் செருப்பு வாங்கிக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார் குப்புசாமி. “இந்த உடம்பைத் தந்த பெருமானுக்கு அது கூடச் செய்யாமல் இருக்கலாமா?” என்று காளிமுத்து உரைத்ததைக் கேட்ட போது குப்புசாமிக்கு ஒருபக்கம் ஆச்சரியமும், ஒரு பக்கம் இரக்கமும் உண்டாயின.

ஒரு நாள் திடீரென்று அந்தக் குடிசைக்குள் ஒரு ஜோடிப் புதுச் செருப்பு இருந்தது. அதைக் காளிமுத்து பார்த்து, “இது ஏது?” என்று தம் மனைவியைக் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே!” என்றாள்.

தம் குழந்தை எங்கே இருந்தாவது கொண்டு வந்து வைத்து விட்டாளோ என்று எண்ணி விசாரித்தார். அப்படியும் நடந்ததாகத் தெரியவில்லை. செருப்பு, புத்தம் புதியதாக இருந்தது.

“நம் வீடு தேடி வந்திருக்கிறது. நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்” என்றாள் அவர் மனைவி.

“இதைப் போட்டுக்கொண்டு வீதியிலே போகும் போது எவனாவது திருட்டுப் பட்டம் கட்டி இழுத்துப் போக வேண்டுமா?” என்று கேட்டார் காளிமுத்து.

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் காய்கறி வண்டிக் குப்புசாமி அங்கே வந்து சேர்ந்தார். அவள் அவரிடம் செருப்பைப் பற்றிச் சொன்னாள். “வடபழனி ஆண்டவனே தம்பிக்கு இரங்கி இந்தச் செருப்பைக் கொண்டு வந்து போட்டிருக்கலாம், ஆண்டவன் அருளாகத்தான் இருக்கும்” என்று குப்புசாமி சொன்னார்.

“என் ஆண்டவனை எனக்குத் தெரியும் அண்ணே. அவன் எனக்குச் செருப்புத்தர வேண்டுமானால், இப்படிக் கொண்டு வந்து வைக்க மாட்டான்” என்று சொன்ன காளிமுத்து, வெறுங்காலோடு தம் கடமையை ஆற்றப் போய்விட்டார்.

“அண்ணாத்தை, இது என்ன அதிசயமாய் இருக்கிறது! அன்று பழஞ் செருப்புப் போன விதமும் தெரியவில்லை. இன்று புதுச் செருப்பு வந்த விதமும் தெரிய வில்லை” என்று காளிமுத்து மனைவி சொன்னாள்.

குப்புசாமி சிரித்துக் கொண்டார்; “தம்பி வெறுங்காலோடு நடக்கிறதைக் கண்டு எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பழஞ் செருப்புப் போய்விட்டால், புதுச் செருப்பு வாங்குவார் என்று நான்தான் அதைத் திருடிக் கொண்டு போனேன். அவர் வாங்கவில்லை. சரி, புதுச் செருப்பு வாங்கி வைத்துவிடலாம் என்று நானே வாங்கிக் கொண்டு வந்து, வைத்தேன். இப்போது இதைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறார்!”

“அதென்ன அண்ணாத்தை, நியாயமான காரியமா? நீங்கள் எதற்குக் கையிலிருந்து பணம் போட்டுச் செருப்பு வாங்க வேணும் நம் குழந்தைக்குப் பிஸ்கோத்து, மிட்டாய் என்று அடிக்கடி வாங்கித் தருகிறீர்கள். அந்தச் செலவோடு இது வேறா”

“இதெல்லாம் ஒரு செலவா? உன்னால் எனக்கு எத்தனை கிராக்கி கிடைத்திருக்கிறது, தெரியுமா?. அதற்கெல்லாம் கமிஷன் போட்டுக் கொடுக்கிறதென்றால், மாசத்துக்கு ஒரு புடைவை வாங்கிக் கொடுக்க வேண்டும். அது கிடக்கட்டும் தங்கச்சி. எப்படியாவது இந்தச் செருப்பை அவர் போட்டுக் கொள்ளும்படி செய்தால் உனக்குக் கோடி புண்ணியம் உண்டு.”

“அவரைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?” “எனக்கு வியாபாரம் பெருக நீயும் உன் குழந்தையும் காரணம். ஏதாவது பதில் உபகாரம் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். கொஞ்ச காலமாவது நிற்கிற சாமானாக வாங்கித் தர வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அந்தப் பழஞ் செருப்பு என் கண்ணில் பட்டது. உடனே இந்த யோசனை செய்தேன். அவர் இந்தச் செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்தால் நான் பட்ட கடன் தீர்ந்ததுபோல இருக்கும். தங்கச்சி, எனக்காக அவரிடம் வாதாடிப் பாரேன்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் குப்புசாமி.

“பார்க்கிறேன்” என்று சொல்லியனுப்பினாள் அவள்.

அவள் காளிமுத்துவிடம் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். குப்புசாமி நன்றியறிவு காரணமாக அதைத் தந்திருக்கிறார் என்பதையும், எப்படியாவது அது பயன்பட வேண்டுமென்று அவர் ஏங்கியிருப்பதையும் சொன்னாள். காளிமுத்து கேட்கவில்லை. “அடி பைத்தியக்காரி, வேறு ஒருவர் இரங்கித் தந்தால் அதை வாங்கிக் கொள்ளலாமா? அது கெளரவப் பிச்சைக்குச் சமானம். அவசியமாக இருத்தால், கொஞ்சம் பணம் சேர்த்து நாமே வாங்கிக் கொண்டால் போகிறது. நான் அந்தப் புதுச் செருப்பை நிச்சயமாகக் காலில் போட்டுக்கொள்ள மாட்டேன்!” என்று சொல்லிவிட்டார்; “அதை அப்படியே அவரை எடுத்துக் கொண்டு போய் விடச் சொல் வேறு யாருக்காவது கொடுக்கட்டும்” என்றார்.

“இதை உங்கள் காலுக்காகவே அளவெடுத்துச் செய்யச் சொன்னாராம்.”

“எனக்குத் தெரியாமல் அவர் எப்படி அளவெடுத்தார்?” “உங்கள் பழைய செருப்பிலிருந்து.”

“அதுதான் காணாமற் போய்விட்டதே!”

“அவரே அதை எடுத்துக்கொண்டு போனாராம்.”

“அப்படியானால், அந்தப் பழஞ் செருப்பை மறுபடியும் கொண்டுவந்து போடச் சொல்.”

“அதை எங்கேயோ தூக்கி எறிந்து விட்டாராம்.”

“சரிதான். அப்படியானால் நானாகப் புதுச் செருப்பு வாங்குகிற வரைக்கும் வெறுங் காலோடு நடக்கிறேன். என் கால் தேய்ந்து போகாது. நான் இப்படி நடக்க வேண்டுமென்பது ஆண்டவன் திருவுள்ளம். அதனால் இப்படி ஒரு வேடிக்கை செய்திருக்கிறான்.”

அவர் இப்படிச் சொல்லிப் பாங்கிக்குப் போய் விட்டார்.

மறுநாள் குப்புசாமி வந்தார். அப்போது காளிமுத்து வீட்டில் இருந்தார். அவரைக் கண்ட காய்கறிக்காரர் அழாக்குறையாக, “தம்பி, நான் பெரிய தப்புப் பண்ணி, விட்டேன். அந்தப் பழஞ் செருப்பை நான்தான் திருடி எங்கேயோ எறிந்துவிட்டேன். புதுச் செருப்பை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன். பாவி! இப்போது தம்பி வெறுங் காலோடு நடப்பதைப் பார்க்கிற போது நான் பெரிய பாவம் செய்துவிட்டதாக எண்ணுகிறேன். எப்படியாவது நீங்கள் செருப்பைப் போட்டுக்கொண்டு நடக்க வேண்டும்” என்று கெஞ்சிய குரலில் கூறினார்.

“அண்ணே, நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேட்க வேண்டும். நீங்கள் என்னுடைய அண்ணனைப் போல. ஆனாலும் நாங்கள் உங்களுக்கு ஓர் உபகாரமும் செய்யவில்லை. அப்படியிருக்க இதை வாங்கிக் கொள்ளலாமா? நீங்கள் வயசில் பெரியவர்கள். உங்கள் உழைப்பில் நான் பங்குபெறுவதுதான் பாவம். இந்தச் செருப்பைப் பார்க்கிற போதெல்லாம் இது என் கண்ணை உறுத்துகிறது. உங்களுக்கு வீண் செலவு வைத்து விட்டேனே என்று தோன்றுகிறது. இதை நீங்கள் எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். எனக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டு மென்று எண்ணினால், அதைச் செய்யுங்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் வயசான உங்கள் பாவத்தை நான் கொட்டிக்கொண்டதாகவே எனக்குப் படுகிறது.”

குப்புசாமி பாவியா, காளிமுத்து பாவியா என்று யோசிக்கும்படி இருந்தன, இரண்டு பேருடைய பேச்சும். கடைசியில் காளிமுத்துவே வென்றார். குப்புசாமி. பேசாமல் கண்ணில் நீர் துளிக்க அந்தச் செருப்பை எடுத்துக்கொண்டு போனார், காளிமுத்து, பாரம் இறங்கியது போலப் பெருமூச்சு விட்டார்.

அதற்குப் பின் குப்புசாமி முன் போல் அடிக்கடி அந்த வீட்டுக்கு வருவதில்லை. அவருக்கு என்ன எண்ணமோ தெரியவில்லை. நம் வார்த்தையைக் கேட்கவில்லை என்ற கோபமோ என்று எண்ணினார் காளிமுத்து. ஆனால், ஆறு மாசம் கழித்து அந்தச் செருப்பை மறுக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது அவருக்கு.

ஒரு நாள் யாரோ ஒருவர் அந்தச் செருப்பை எடுத்துக்கொண்டு காளிமுத்துவைத் தேடி வந்தார்; “நீங்கள்தாம் காளிமுத்துவோ?” என்று கேட்டார்.

“ஆம்” என்று அவர் சொன்னார்.

“காய்கறி வண்டிக் குப்புசாமியை உங்களுக்குத் தெரியுமா?” என்று வந்தவர் கேட்டார்.

“நன்றாகத் தெரியுமே! அந்தப் பெரியவர் இங்கே சில காலமாக வருவதே இல்லையே!”

“அவர் இனிமேல் வரமாட்டார்.”

“ஏன்?”

“அதைத்தான் சொல்ல வந்தேன். அவர் ஒரு மாசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இரண்டு நாளைக்கு முன்தான் காலமானார்.”

“என்ன காலமாகிவிட்டாரா?” என்று காளிமுத்துவும் அவர் மனைவியும் திடுக்கிட்டுக் கேட்டார்கள். அந்தப் பெண்மணி அழுதேவிட்டாள்.

“அவர் இறந்து போகும்போது, என்னிடம் ஒரு வேண்டுகோளைச் சொன்னார். அதை நிறைவேற்றத் தான் இங்கே வந்திருக்கிறேன். இந்தச் செருப்பை உங்களுக்குக் கொடுத்துத் தம் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டாராம். அது முடியவில்லையாம். எப்படியாவது இதை உங்களிடம் சேர்த்துவிட்டால் தம் ஆத்மா சாந்தி அடையும் என்று சொன்னார். இந்த வீட்டைத் தேடிக் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. அந்தப் பெரியவர் மிகவும் மானி. மிகவும் நல்லவர். அவர் ஆசையை நிறைவேற்ற இங்கே வந்தேன்” என்று சொல்லிக் கையில் கொண்டு வந்த பொட்டலத்தை அவிழ்த்துச் செருப்பை எடுத்து வைத்தார்; “சரி எனக்கு வேலை இருக்கிறது; போய் வருகிறேன்” என்று சொல்லிப் போய்விட்டார். .

காளிமுத்து திக்பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தார். அந்தப் பெரியவர் உள்ளம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்று இப்போது ஊகித்துப் பார்த்தார். அவர் கண்களில் நீர் சுரந்தது. அவருடைய மனைவியோ புலம்பிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் இப்படி இருந்தார். காலக் கழுவிக்கொண்டு வந்தார். அந்தச் செருப்பை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார். சுவரில் முருகன் படம் ஒன்றை மாட்டியிருந்தார். அதன்கீழ் அமர்ந்துதான் அவர் தினந்தோறும் அநுபூதிப் பாராயணம் செய்வார். அங்கே கொண்டு போய் அந்தச் செருப்பை வைத்தார். ஒரு பூவை எடுத்து அதன் மேல் வைத்தார். ‘முருகா! முருகா! முருகா!’ என்று அவர் விம்மினார். அவர் அந்தச் செருப்பைப் போட்டுக்கொள்ளவில்லை; பூசித்து வந்தார்.

காலம் எப்படி எப்படியோ மாறியது. காளிமுத்துவின் மனைவியும் குழந்தையும் இறந்துபோனார்கள். பெரியவர் மனம் புண்பட்டதனால் வந்த விளைவோ என்று எண்ணினார், அவர் வாழ்த்துவாரேயன்றிச் சாபம் இட்டிருக்க மாட்டார் என்ற எண்ணம் அப்புறம் தோன்றியது. காளிமுத்துவுக்கு இப்போது ஒவ்வொரு பந்தமாக நழுவிக் கொண்டு வந்தது. வீடும் குலைந்து போயிற்று. அவர் வேலையை விட்டுவிட்டுக் கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்று சுற்றனார். ஆறு படைவீடுகளையும் தரிசித்தார். பழனியில் ஒரு பெரியவரிடமிருந்து வைத்தியம் கற்றுக் கொண்டார்......பிறகு...... .

னக்கு அதற்குப் பிறகு நடந்த கதை தானே விளங்கிவிட்டது. “அப்படியானால்.....?” என்று ஆச்சரியத்தோடு நான் வாயைப் பிளந்தேன்.

“ஆம்; அந்தக் காளிமுத்துதான் இப்போது முத்தானந்தனாக இருக்கிறேன். அந்தப் பெரியவரின் தெய்விக உள்ளத்தின் பெருமையை இன்று நன்றாக உணர்க்கிறேன். அவர் கொண்டிருந்த அன்பையும், அந்தப் பெண் பிள்ளையால் தமக்கு ஏதோ சிறு லாபம் கிடைத்தது என்றதனால் மேற்கொண்ட நன்றியுணர்வையும் தெய்வப் பண்புகளாகவே எண்ணி எண்ணி உருகுகிறேன். அதற்கு அடையாளம் இது.”

பட்டுத் துணியில் பொதிந்திருந்த அந்தச் செருப்பு இன்னும் யார் காலிலும் அணியாத புதிய செருப்பாக, முத்தானந்தருடைய பெரு மதிப்புக்குரிய பொருளாக, விளங்கியது. அவர் சொன்ன கதையைக் கேட்டு எனக்கும் கண்ணீர் துளித்தது.

அவர் அந்தச் செருப்பை மறுபடியும் பட்டுத் துணியில் வைத்துக் கட்டத் தொடங்கினார்.