கோயில் மணி/மாடு மேய்க்கும் கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து


மாடு மேய்க்கும் கண்ணன்

“அம்மா, கண்ணன் குண்டு மூஞ்சியா, கறுப்பாத் தானே இருப்பான்?”.

“ஆமாம்; ஆனால் அழகாக இருப்பான்.”

“அவன் மாடுகளை மேய்க்கிறவன்தானே, அம்மா?”

“ஆமாம்; ஆனால் ரொம்பக் கெட்டிக்காரன்.”

கேள்வி கேட்கிறவன் குழந்தை ராமு. பதில் சொல்கிறவள் அவனுடைய அம்மா அம்புஜம்.

கல்யாண நகரில் ஒரு பஜனை சபை இருக்கிறது. சனிக்கிழமைதோறும் அங்கே பஜனை நடக்கும். மார்கழி மாசம் தினந்தோறும் விடியற் காலையில் வீதியில் பஜனை நடைபெறும். மார்கழி முடிந்து தை பிறந்தால் அந்த மாசம் முதலில் ராதா கல்யாணம் நடத்துவார்கள்.

ஒரு வாரம் ராதா கல்யாண உற்சவம், பேச்சு, பஜனை, கதா காலட்சேபம் இப்படி வைபவமாக இருக்கும். கடைசி நாளன்று ராதா கல்யாணம் பஜனைப் பத்ததியின்படி நிகழும், நகரத்தில் உள்ள பாகவத கோஷ்டிகள் அத்தனையும் இந்த உற்சவத்தில் கலந்து கொள்ளும். சனிக்கிழமை இரவு அகண்ட பஜனையும், ஞாயிற்றுக்கிழமை ராதா கல்யாணமும் வைத்துக் கொள்வது வழக்கம். சனிக்கிழமை மாலையிலேயே பாகவதர்கள் கல்யாண நகரில் கூடிவிடுவார்கள். பஜனை சபை இருக்கும் வீதி முழுவதும் அடைத்துப் பந்தல் போட்டிருப்பார்கள். சனிக்கிழமை விடிய விடியப் பஜனை. பாகவதர்களுக்கு அன்று இரவே இல்லை; தூக்கமும் இல்லை.

ராதா கல்யாணத்தில் பாகவதர்களுக்குச் சம்பிரமமான சாப்பாடு உண்டு. அதைவிட முக்கியமானது ஏழைகளுக்குச் சாப்பாடு. மற்ற எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நின்றாலும் ஏழைகளுக்கு உணவளிப்பது மாத்திரம் நிற்காது. இரண்டாயிரம் ஏழைகளாவது அன்று வயிறு நிரம்ப உண்டு பசியாறுவார்கள்.

இந்த உற்சவம் நடைபெறும்பொழுது கல்யாண நகர் முழுவதுமே கோகுலம்போலத்தான் இருக்கும். பஜனை சபை உள்ள வீதியில் எப்போதும் பஜனை ஒலி கேட்டுக்கொண்டிருக்கும். மாலையில் பாகவத பாராயணம். சகசிரநாம அர்ச்சனை, பெண்கள் கூடி நல்ல தோத்திரங்களைப் பாராயணம் செய்வது முதலியவை நடைபெறும். அந்த வீதி முழுவதுமே தெய்வ மணம் கமழும்.

அந்த வீதியில் ஒரு வீட்டுக்காரர் நாராயணன்; அவருடைய தர்மபத்தினி அம்புஜம்; அவர்களுடைய அருமந்த இளங் குழந்தை ராமமூர்த்தி அல்லது ராமு. ராமுவுக்கு ஆறு வயசு, எதைப்பற்றியும் தூண்டித் துருவிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் இயல்புள்ளவன் அவன். மாலை நேரங்களில் உபந்நியாசம் நடக்கும்போது போய்க் கேட்பான். அவனுக்கு என்ன விளங்கப் போகிறது? கண்ணனுடைய குறும்புகளைப் பாகவதரோ பேசுகிறவரோ சொன்னால் அது கொஞ்சம் புரியும். ஆனால் குழந்தைக் கண்ணனுடைய படம் ஒன்று இருந்தது; அதை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருப்பான். அதில் அவனுக்கு இன்னதென்று சொல்ல முடியாத ஆனந்தம்.

அவன் கண்ணனைத் தன் மனக் கண்ணில் கற்பனை செய்து பார்க்கிறானோ? சில சமயங்களில் அவன் கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது இப்படித் தோன்றும். கண்ணனைப் பற்றித் தன் அம்மாவிடம் அவன் எத்தனையோ கேள்விகளைக் கேட்டிருக்கிறான். அவள் பலவற்றிற்கு விடை சொன்னாலும் சிலவற்றிற்கு விடை சொல்ல முடியாமல் திகைப்பாள். கண்ணனுடைய தோற்றத்தை, அழகை, செயலை, எல்லாவற்றையும் கேட்பான்.

“ஏன், அம்மா, கண்ணன் கறுப்பு என்று சொன்னாயே; அங்கே ஒரு பையன் மாடு மேய்க்கிறான்; கறுப்பாய்க் குண்டு மூஞ்சியாய் இருக்கிறான்; கண்ணன் அவன் மாதிரிதானே இருப்பான்?”

“போடா பைத்தியம்! மாடு மேய்க்கிற பையன் எங்கே, கண்ணன் எங்கே? கண்ணன் சாமி அல்லவா?”

“நீதான் கண்ணனும் மாடு மேய்க்கிறவன் என்று சொன்னாயே;”

“மாடு மேய்த்தாலும் அவன் பெரியவன்.”

“ஏன்?”

இந்தக் கேள்விக்குத் தாயால் பதில் சொல்ல முடியவில்லை; “வெறுமனே தொணதொணவென்று கேள்வி கேட்காதே; போய் விளையாடு” என்று சொல்வி, ஏதோ காரியத்தைக் கவனிக்கப் போய்விடுவாள் அவள். பெரியாழ்வார் திருமொழியைக் காலை நேரத்தில் கண்ணன் படத்துக்குமுன் பாராயணம் செய்கிறவள் அவள்; பஜனைக் கூடத்தில்தான்.

கல்யாண நகருக்கு அருகில் இரண்டு சேரிகள். அந்தச் சேரிகளில் உள்ளவர்கள் உற்சவ காலத்தில் அன்னம் பாலிப்பு நடக்கும்போது இங்கே வந்து உணபார்கள். தினந்தோறும் காலையில் தனுர்மாச பஜனை முடிவில் குழந்தைகள் பலர் வந்து நாமாவளி சொல்லிவிட்டுப் பொங்கல் பிரசாதம் பெற்றுப் போவார்கள். சேரியிலிருந்தும் குழந்தைகள் வருவார்கள்; அவர்களும் நாமாவளியைச் சொல்லிப் பிரசாதம் வாங்கிப்போவார்கள். சாதி வேறுபாடு சிறிதும் இன்றி, எல்லாக் குழந்தைகளும் குதூகலமாக நாமாவளி சொல்வதைப் பார்த்தாலே ஒரு தனியான உணர்ச்சி எழும். இதனால் குழந்தைகளுக்குள் ஒரு கூட்டுற வுணர்ச்சி உண்டாகி வந்தது.

அந்தக் குழந்தைக் கூட்டத்தில் ஒரு பையன்; நல்ல கறுப்பு: வயசு ஏழு இருக்கும். அவனுக்குப் பக்கத்தில் தினமும் ராமு உட்கார்ந்து நாமாவளி சொல்வான். “ராதா கிருஷ்ணா!” என்று யாராவது பெரியவர் சொன்னால், குழந்தைகள் அத்தனை பேரும், “கோபால கிருஷ்ணா!” என்று எதிரொலி கொடுப்பார்கள்.

ராமுவுக்கு அந்தக் கறுப்புப் பையனிடம் ஒரு தனியான பிரியம். அவன் மாடு மேய்க்கிறதை ராமு பார்த்திருக்கிறான். “உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

“காத்தான்” என்றான் அவன்.

“இல்லை; நீ கண்ணன். உன்னை நான் கண்ணன் என்றே கூப்பிடப் போகிறேன்” என்றான் ராமு. அன்று முதல் காத்தான் அவனுக்குக் கண்ணனாகிவிட்டான்.

“இவனும் குண்டு மூஞ்சியாய்க் கறுப்பாய் இருக்கிறான்; மாடு மேய்க்கிறான். கண்ணன் இவனைப் போலத்தானே இருப்பான்?” இப்படி அந்தப் பிஞ்சு நெஞ்சில் எண்ணம் ஓடியது. தனக்குக் கிடைக்கும் பொங்கல் பிரசாதத்தையும் அவன் கையில் கொடுத்து விடுவான்.

ராதா கல்யாணத்தில் ஒரு நாள் ராமு வீட்டு மண்டபப்படி. அவன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் எல்லாம் பண்ணினார்கள். பஜனைக் கூடத்துக்குக் கொண்டு வந்து நிவேதனம் செய்து எல்லோருக்கும் வழங்கினார்கள். அன்று காத்தான் என்ன காரணமோ வரவில்லை. ராமுவுக்கு அவனைக் காணாமல் துயரம் பொங்கி எழுந்தது. தங்கள் வீட்டுப் பிரசாதங்களை அவனுக்குக் கொடுக்க முடியவில்லையே என்று ஏங்கினான். தெய்வமாகிய கண்ணன் நிச்சயமாக அந்தப் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான் என்று அவனுக்குத் தோன்றியது; இந்தக் கண்ணனுக்குக் கிடைத்தால்தான் அந்தக் கண்ணனுக்கு, சாமியாகிய கண்ணனுக்கு, திருப்தி உண்டாகும் என்று அவனுக்கு ஓர் எண்ணம்.

“அம்மா, கண்ணனுக்குக் கொஞ்சம் வடை கொடு; நான் போய்க் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றான் குழந்தை.

“அது யாருடா கண்ணன்?” என்றாள் தாய்.

“அதுதான் குண்டு மூஞ்சியா, கறுப்பா, மாடு மேய்க்கிறானே, அந்தக் கண்ணன்.”

“அது யார்? எங்கே இருக்கிறான்?”

“அதோ அந்தச் சேரியில் இருக்கிறானாம்; விசாரித்துக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருகிறேன்.”

அம்புஜத்துக்குக் கோபம் கோபமாக வந்தது; “போடா, அசடு! அவன் இங்கே வந்து வாங்கிக் கொள்ளட்டும்; நீ அங்கெல்லாம் போகக்கூடாது.”

ஆனாலும் குழந்தை மனம் கேட்கவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் இரண்டு வடையை எடுத்து மறைத்து வைத்திருந்தான். ஒருவரும் தன்னைப் பாராத சமயத்தில் சேரியை நோக்கிப் புறப்பட்டுவிட்டான் குழந்தை. பிற்பகல் மூன்று மணி. அம்புஜம் குழந்தையைப் பார்த்தாள்; காணவில்லை. வீதியில் விளையாடிக் கொண்டிருப்பான் என்று எண்ணிப் போய்ப் பார்த்தாள்; காணவில்லை. சின்ன வீதியாகையால் ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து பார்த்தாள்: காணவில்லை.

அவருக்குப் பகீரென்றது. குழந்தை எங்கே? அவன் கையில் தங்க வளை இருந்தது. பத்திரிகைகளில் வந்த செய்திகளெல்லாம் அவள் நினைவுக்கு வந்தன. “ஐயோ! கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று!” என்று கதறினாள். தெரிந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள்.

காரியாலயத்துக்குப் போன அம்புஜத்தின் கணவர் நாராயணனுக்குச் செய்தி போயிற்று. அவரும் ஓடி வந்தார்.

ராமு சேரிக்குள்ளே நுழையும்போது குழந்தைப் புத்தியில் போய்விட்டான். முன்னே வந்தது இல்லை. அங்கே அவன் கண்ணனைக் காண அல்லவா புறப்பட்டிருக்கிறான்? ஏதோ பேச்சு வாக்கில் அந்தக் சேரியிலே தான் இருப்பதாகக் காத்தான் சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டுவைத்துக்கொண்டு குழந்தை வந்து விட்டான். எங்கே யென்று தேடுவது?

அவன் கையில் வடை இருப்பதைக் கண்டு ஒரு நாய் அவனிடம் வந்து குரைத்தது. குழந்தை பயந்து போய் ஓடினான். நாய் துரத்தியது. கையிலுள்ள வடையைப் போட்டுவிட்டு ஓடினான். ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். நாய் வடையைக் கவ்விக் கொண்டு ஓடிப்போயிற்று.

அப்போது அங்கே இருந்தவன் ஒருவன் குழந்தையைப் பார்த்தான். அவன் பஜனைக்கு வந்து பார்த்தவன். இந்தக் குழந்தையை அங்கே பார்த்ததாக நினைவு இருந்தமையால், அழும் குழந்தையை எடுத்துக்கொண்டு பஜனை மடம் உள்ள வீதியை நோக்கி வந்தான். குழந்தை ராமு, “அம்மா! அம்மா!” என்று அழுது கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அவனை ஒருவன் எடுத்து வருவதை அறிந்து, வாங்கிச் சென்று தாயினிடம் விட்டார்கள்.

“என் கண்ணே! எங்கேயடா போனாய்?” என்று தாவிப் பற்றிக்கொண்டாள் தாய்.

அவனை எடுத்து வந்தவன், “என்ன அம்மா, இப்படிக் குழந்தையைத் தனியே விடலாமா? கையில் காப்பு வேறு போட்டிருக்கிறீர்கள். காலம் கெட்டுக் கிடக்கிறதே” என்று எச்சரித்தான்.

அம்புஜம் உள்ளே குழந்தையை அழைத்துச் சென்று முதல் காரியமாகக் கை வளைகளைக் கழற்றினாள். குழந்தைக்குத் தின்பண்டம் தந்தாள். “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாள்.

குழந்தை அழுகை ஓய்ந்து, “கண்ணனுக்கு வடை கொடுக்கப் போனேன்” என்றான்.

“அது யாருடா கண்ணன்? உனக்குச் சொக்குப் பொடி போட்டு மயக்கி விட்டானா அவன்? சேரியிலே எந்தப் பயல் உன்னை ஏமாற்றுகிறானோ தெரியவில்லையே!” என்று கூவினாள்.

“அதுதான் அம்மா, குண்டு மூஞ்சியா, கறுப்பா, அழகா, மாடு மேய்க்கிறானே; அந்தக் கண்ணன்.”

“ஐயோ! எந்தப் படுபாவியோ என் குழந்தையை மயக்கி ஆபத்திலே சிக்கும்படி வைத்து விட்டானே! அவன் தலையில் இடி விழ!”

“அம்மா, அம்மா, அப்படிச் சொல்லாதே! அந்தக் கண்ணன் ரொம்ப நல்லவன் அம்மா!”

இடையிலே நாராயணன் வந்தார்: “என்னடி அம்புஜம், குழந்தை ஏற்கனவே அரண்டு போயிருக்கிறான் நீ வேறு இப்படி உருட்டுகிறாய்” என்று சொல்லிக் குழந்தையை அழைத்துக்கொண்டு மாடிக்குப் போய்விட்டார்.

“நீ எங்கேயப்பா போயிருந்தாய்?“ என்று அவர் கொஞ்சியவாறே தம் குழந்தையைக் கேட்டார்.

குழந்தை பேசவில்லை.

“சொல், அப்பா! நானும் உன்னோடு வருகிறேன். போகலாம். எங்கே போனாய்?” என்று மறுபடியும் கேட்டார்.

“கண்ணனைப் பார்க்கப் போனேன்.”

“யார் அது, கண்ணன்?”

“அதுதான் குண்டு மூஞ்சியா, கறுப்பா, அழகாய், நல்லவனாய், சிரிப்பானே அவன்.”

“இது என்ன இவன் சொல்லுகிறான்! இவன் சாட்சாத் கண்ணபிரானையே தேடிக்கொண்டு போனானோ!” அவருக்கு உடம்பு புல்லரித்தது.

“அவன் எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்”

“அவனும் மாடு மேய்க்கிற கண்ணன்தான்.”

“இதென்ன இவன் குழந்தை வார்த்தையாகப் பேசவில்லையே!—” அவர் புரிந்து கொள்ளாமல் தடுமாறினார்.

அப்போது காபி கொண்டு வந்த அம்புஜம், “என்ன சொல்கிறான் குழந்தை?” என்று கேட்டாள்.

“யாரோ கண்ணனாம்; குண்டு மூஞ்சியாம்; சிரிப்பானாம்; அவனைத் தேடிக்கொண்டு போனானாம். நேற்றுப் பாகவதர் சொன்னாரே, அப்படி அல்லவா இவன் வருணிக்கிறான்?”

“ஆமாம்! யாரோ ஒரு கழிசடை அந்தச் சேரியிவிருந்து வருகிறான் போலிருக்கிறது. அவன் இவனுக்கு எதையோ கொடுத்து மயக்கியிருக்கிறான். அவனுக்கு இவன் வடை கொடுக்கப் போனானாம்!”

அவள் மறுபடியும் ஆத்திரம் கொள்வதைக் கண்டு நாராயணன் பேச்சை நிறுத்திக் கொண்டார். மெல்லக் குழந்தையைத் தூங்கவைத்து விட்டுக் கீழே போனார்.

“அம்புஜம்!” என்று அழைத்தார்.

“ஏன்?”

“குழந்தைக்கு முன் என்ன சொல்வதென்று உனக்குத் தெரியவில்லையே! அவன் அரண்டுபோய்க் கிடக்கிறான். நீ என்னடா என்றால் மறுபடியும் மறுபடியும் பத்திரகாளியைப்போல் நிற்கிறாயே!”

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இன்றைக்குக் குழந்தை உயிருடன் வந்து சேர வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்தது எனக்கல்லவா தெரியும்?”

“அதற்காக வீடு திரும்பிய குழந்தையை மிரட்டித் துன்புறுத்த வேண்டுமா?”

“அவனை எங்கே நான் மிரட்டினேன்? இவன் தேடிக்கொண்டு ஓடினானே, அவனையல்லவா சொன்னேன்?”

“அட, அடிமுட்டாளே! குழந்தைக்கு முன்னாலே யாரையோ சொன்னேன் என்றால், அவன் விவரம் புரிந்துகொள்வானா? இப்போது என்னிடம் சொல், நான் புரிந்துகொள்ள முயலுகிறேன்.”

“சொல்கிறேன், சுரைக்காய்க்கு உப்பில்லையென்று! யாரோ, ஒரு பையன் சேரியிலிருந்து வருகிறான் போலிருக்கிறது. அவன் பெயர் கண்ணனாக இருக்கவேண்டும். அந்தக் கண்ணனுக்கு வடை வேண்டுமென்று இவன் கேட்டான். நான் கொடுக்கவில்லை. இவன் திருடிக் கொண்டு போய்க் கொடுக்கப் போயிருக்கிறான். அவன் இவனைத் தூண்டியிருக்கிறான் போலிருக்கிறது.”

“ஆமாம், அவனை இவன் எங்கே பார்த்தான்?”

“அதுதான். ஒவ்வொரு நாளும் காலையில் பஜனைக்குக் குழந்தைகள் வருகிறார்களே, அங்கே சிநேகம் போலிருக்கிறது. கண்ணனாம்; குண்டு மூஞ்சியாம்; கறுப்பாம்...”

“கண்ணபிரானும் அப்படித்தானே இருப்பான் ?”

“ஓகோ! நீங்களும் சேர்ந்து கொண்டு விட்டீர்களா? பிள்ளைக்கு ஏற்ற அப்பாதான். இந்தக் கண்ணனே வேண்டாம்; அந்தச் சேரியிலுள்ள கண்ணபிரானையே கொண்டு வந்து உட்கார்த்திப் பூசை செய்து விட லாமே!”

நாராயணன் சிரித்துக் கொண்டார்; “நீ அந்தக் . கண்ணனென்கிற பையனையே கண்டு, ‘இவனை நீ கூப்பிடாதே, ஒன்றும் கேட்காதே என்று’ சொல்லு. இவனிடம் போய் இரையாதே. இன்னும் ஒன்று செய்தால் மிகவும் நன்றாயிருக்கும். நீ செய்ய வேண்டுமே!”

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

"அந்தக் கண்ணனக் கண்டுபிடித்து அவனுக்குப் பிரசாதம், தின்பண்டம், காசு எல்லாம் இவன் காணக்கொடு. அதனால் ஏழைக்கும் இன்பம், இவனுக்கும் திருப்தி உண்டாகும்.”

“சரிதான்; என்னையும் சேரிக்குப் போய் அந்தக் கிருஷ்ண பரமாத்மாவைத் தரிசனம் செய்யச் சொல்கிறீர்களோ?”

“கண்ணபிரான் ‘பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அனைந்து’ ஆயர்பாடியில் விளையாடினவன் தானே?”

“ஐயோ! போதுமே இந்த வேதாந்தம்!—எனக்குக் கைக் காரியம் இருக்கிறது.”

ன்று ராதா கல்யாணம், பிற்பகல் மூன்று மணி. ஏழைகளுக்குச் சாப்பாடு நடந்தது. குழந்தைகளையெல்லாம் தனியே ஓரிடத்தில் வைத்துச் சாப்பாடு போட்டார்கள். வீதியில்தான். வயசு வந்தவர்கள் ஒழுங்கின்றி, எனக்கு உனக்கு என்று கத்திக் கூச்சல் போட் டுக் குழப்பம் உண்டாக்கினார்கள். ஆனால் குழந்தைகளோ அமைதியாகச் சாப்பிட்டார்கள்;. முப்பது நாளும் நாமாவளி சொல்லி ஒழுங்காக இருந்து பிரசாதம் வாங்கி உண்ட பழக்கம்.

அந்தக் குழந்தைக் கூட்டத்தில் காத்தானாகிய கண்ணனும் இருந்தான். ராமு அவனைப் பார்க்கப் போனான். அன்று ராமுவின் வீட்டில் பாகவதர்கள் சிலர் சாப்பிட்டார்கள். அவர்களுக்குக் குஞ்சாலாடு போட்டார்கள். ராமு அம்மாவைக் கேட்டு வாங்கி இரண்டு குஞ்சாலாடுகள் வைத்திருந்தான். ஒரே சமயத்தில் வாங்காமல் வெவ்வேறு சமயத்தில் வாங்கி வைத்திருந்தான். தனக்காக என்றுதான் கேட்டான். ஒன்றைத் தின்றுவிட்டு மற்றொன்றை மறைத்துக் கொண்டு வந்தான்; காத்தான் இலையில் போட்டு,“கண்ணா, தின்னு' என்றான் அருகில் உள்ள குழந்தைகளெல்லாம் அதைக் கண்டன. “டேய் எனக்குடா, எனக்குடா?” என்ற ஆரவாரம் எழுந்தது.

பரிமாறுகிறவர்கள் என்ன ஆரவாரம் என்று பார்த்தார்கள். ராமு குஞ்சாலாடைக் காத்தானுக்குப் போட்டான் என்று தெரிந்தது.

“ஏய், என்னடா போக்கிரி! நீ ஏன் இங்கே வந்தாய்? உன் அம்மாவிடம் சொல்கிறேன் பார்” என்று ராமுவை மிரட்டினார்கள். யாரோ போய், “உங்கள் ராமுவைப் பாருங்கள்; வீதியிலே சேரிக் குழந்தைகள் சாப்பிடும் இடத்தில் வந்து ரகளை பண்ணுகிறான்” என்று சொன்னார்கள்.

அவள் வீதிக்கு வந்தாள். ராமு நிற்கும் இடத்துக்குப் போனாள், “இங்கே என்னடா வேலை?” என்று கேட்டாள்.

அவன் தன் சிறுகையால் வெள்ளை உள்ளத்தோடு, “இதோ என் கண்ணன்” என்று காத்தானைச் சுட்டிக் காட்டினான்.

அவ்வளவுதான்; அம்புஜத்துக்குப் பொங்கி வந்தது கோபம். பாவம் அந்தப் பையன் பாதி சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் கவனிக்கவில்லை; பலர் அங்கே இருக்கிறார்கள் என்பதையும் நோக்கவில்லை. தன் பிள்ளையைக் கொல்லத் துணிந்த கொலைகாரனைக் கண்டவளைப் போல ஆத்திரத்துடன் இரண்டு கைகளையும் ஓங்கிப் பளாரென்று காத்தான் முதுகில் அறைந்தாள். தரதர வென்று ராமுவை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த காத்தான் வீரென்று கத்தினான். அங்கே நின்றிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அவர்கள் வீட்டுக் குழந்தையின் வளையை ஒரு நாள் இவன் கழற்றப் போனானாம்” என்று யாரோ மூக்கு முழி வைத்து ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்.

பாவம்! காத்தான் பாதிச் சாப்பாட்டிலே எழுந்து போய்விட்டான். அவன் இலையில் விண்டபடியே கிடந்தது குஞ்சாலாடு !

ராமு வீரிட்டு அழுதான்; விம்மினான், அம்புஜம் அவனை அதட்டினாள்; கடுகடுத்தாள். நாராயணன் சங்கதியைக் கேட்டு அவளைக் கடிந்துகொண்டார்.

“சேரியே திரண்டு வந்து உன்னைப் பழி வாங்கப் போகிறது!” என்று பயமுறுத்தினானர்.

குழந்தை அழ, அம்புஜம் சிணுங்க, அந்த வீடே மூதேவி பிடித்தது போல் ஆகிவிட்டது. அதற்குமேல் அம்புஜம் பஜனைக்குப் போகவில்லை; வீட்டிலேயே கிடந்தாள். குழந்தை அழுதழுது முகம் வீங்கித் தூங்கிப் போய்விட்டான்.

சாயங்காலம் பஜனை நடந்தது. கற்பூரம் காட்டி விட்டு அந்தத் தட்டைச் சுவாமிக்கு அருகில் வைத்தார் பூசை செய்தவர். ஒரு சிறு காற்று அடிக்கவே, கற்பூரத் தீபக் கொழுந்து பக்கத்தில் அலங்காரம் செய்திருந்த காகிதத்தில் தாவிப் பற்றியது. பிறகு துணியைத் தாவியது. கிருஷ்ணன் படம் தனியாகவும் ராதையின் படம் தனியாகவும் இருந்தன. கிருஷ்ணன் படத்தின் அலங்காரங்களில் தீப்பற்றி விட்டது.

ஒரே கலவரம். தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி அணைத்தார்கள். கிருஷ்ணன் படம் முழுவதும் எரிந்து போயிற்று. ராதையின் படத்தை வலிய இழுத்துக் காப்பாற்றினார்கள். இந்தக் கலவரத்தில், மத்தியான்னம் நடந்த கல்யாணத்தின்போது ராதை படத்தில் ஒட்ட வைத்திருந்த திருமங்கலியப் பொட்டு எங்கேயோ கழுவி விட்டது.

பக்தர்களுக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டு சொல்லொணாத் துயரம் குமுறி வந்தது. “இத்தனை பாகவதர்களில் யார் செய்த அபசாரமோ தெரியவில்லையே!” என்று நைந்தார்கள். “எந்தப் பாவியின் கண் பட்டதோ? இப்படி ஆகி விட்டது” என்று சில பெண்கள் மனம் கரைந்தார்கள். “நல்ல வேளை! கல்யாணம் எல்லாம் ஆகி உற்சவம் முடிகிற தருணத்தில் இப்படி ஆயிற்றே” என்று சிலர் சமாதானம் செய்து கொண்டார்கள். எல்லோரும் இந்தச் சம்பவத்தை எண்ணி அங்கலாய்த்தார்கள்.

மறுநாள் குழந்தை ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவர் அவனுக்குப் பயத்தைத் தெளிவித்துத் தடவிக் கொடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

“ராமு, நாளைக்குப் பீச்சுக்குப் போகலாமா?” என்று அப்பா கேட்டார்.

பையன் பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

“எந்த ராஜ்யத்தைப் பிடிக்க யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று நாராயணன் கேட்டார்.

“நேற்று நெருப்புப் பற்றிக் கொண்டதே...”

“அதைப்பற்றி என்ன இப்போது?”

“அம்மா எங்கள் கண்ணனைச் சாப்பிடும்போது அடித்துத் துரத்தினாள். அதனால் இந்தக் கண்ணன் செத்துப் போய்விட்டான்; எரிந்து போய்விட்டான்; ராதையுடைய தாலியும்...”

ஹா ! என்று வீரிட்ட குரல் கேட்டது. கையில் காபியுடன் வந்து கொண்டிருந்த அம்புஜம், குழந்தையின் பேச்சைக் கேட்டவள், அப்படியே கீழே தடாலென்று விழுந்து விட்டாள்.