உள்ளடக்கத்துக்குச் செல்

கோவூர் கிழார்/உயிர் மீண்ட குழந்தைகள்

விக்கிமூலம் இலிருந்து

9
உயிர் மீண்ட குழந்தைகள்

சோழன் நலங்கிள்ளி புகழுடம்பு பெற்றான். அவனுடைய பிரிவாற் புலவர்கள் மிக வருந்தினார்கள். கோவூர் கிழாருக்கு உண்டான துயரத்துக்கு எல்லையே இல்லை. ‘இனி உறையூரில் இருப்பது எதற்காக?’ என்ற நினைவினால் அவர் கோவூருக்கே சென்று தங்கலானார்.

நலங்கிள்ளியின் பிரிவினால் அடைந்த துயரம் கோவூர் கிழாருக்கு எளிதில் மாறவில்லை. பிறகு ஆட்சியை மேற்கொண்ட கிள்ளிவளவன் அவரைக் காணவேண்டும், தன் அவைக்களப் புலவராக வைத்துப் பாராட்டிப் போற்றவேண்டும் என்று விரும்பினான். அடிக்கடி உறையூருக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினான். கோவூர்கிழார் சிலமுறை உறையூர் சென்றார். அரசன் அவரைச் சிறப்பாக உபசரித்துப் பாராட்டி உயர்ந்த பரிசில்களை உதவினான். அவற்றைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் தம் ஊருக்கே வந்துவிட்டார் புலவர்பிரான்.

சோழன் நலங்கிள்ளியோடு இருந்து அவனுடைய அன்பை முழுமையாகப் பெற்ற கோவூர் கிழாருக்கு அவன் இல்லாத உறையூரில் தங்க விருப்பம் இல்லை. பல ஆண்டுகள் அவனுடன் ஒன்றி வாழ்ந்தவர் அவர்; அவனால் தெய்வம் போலக் கொண்டாடப் பெற்றவர் அல்லவா?

ஆயினும் கிள்ளிவளவன் அழைக்காமலே அவனை நாடிச் செல்ல வேண்டிய சமயம் ஒன்று வந்தது. யாருக்கேனும் தீங்கு நேர இருந்தால் அந்தத் தீங்கை மாற்ற முற்படும் பெரியார் கோவூர் கிழார். பகைமை பூண்டவர்களிடையே சந்து செய்விப்பதில் வல்லவர். தம்முடைய சொல்லாற்றலாலும் கவியாற்றலாலும் மன்னர்கள் செய்யப் புகுந்த தவறான செயல்களை மாற்றும் சான்றோர் அவர். நெடுங்கிள்ளி ஒரு புலவனை ஒற்றனென்று எண்ணிக் கொல்ல நினைந்தபோது அவனிடம் முறையிட்டுப் புலவனை யமன் வாயிலிருந்து மீட்ட செய்தி நமக்குத் தெரியும். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே இருந்த பகையை மாற்றி நன்மை செய்ததையும் பார்த்தோம். அப்படிச் செய்தமையால் சோழ நாட்டில் அமைதி உண்டாயிற்று நாட்டு வளம் பெருகியது. அது போலவே இப்பொழுதும் ஒரு பெரிய நன்மையைச் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தது. நடக்க இருக்கும் தீமையைத் தடுப்பதும் ஒரு வகையில் நன்மை செய்வதே அல்லவா?

புலவர்களின் பாராட்டுக்கு உரிய வள்ளல்கள் ஏழு பேர் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்கள்.

அவர்கள் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள். அவர்களுடைய வள்ளன்மை மிகச் சிறந்ததாக இருந்தமையால் அவர்களை ஒருங்கே சேர்த்துச் சொல்வது பிற்காலத்தில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஒருவன். காரி என்றாலே அவனைத்தான் குறிக்கும்.

காரி திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னன். பெரு வீரன். தன்னிடம் எது கிடைத்தாலும் புலவர்களுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளல். அவனிடம் இருந்த படை சிறிதேயானாலும் பேராற்றலுடைய வீரர்கள் அப்படையில் இருந்தார்கள். காரியின் படைத் தலைமையில் அந்த வீரர்கள் எவ்வளவு பெரிய செயலையும் செய்யும் ஆற்றலைப் படைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டு மூவேந்தர்கள் போர் செய்யும் காலத்தில் மலையமான் திருமுடிக்காரியைத் தமக்குத் துணையாக வரவேண்டுமென்று வேண்டிக் கொள்வார்கள். கெஞ்சிக் கேட்பார்கள். அவன் யாருக்குத் துணையாகச் செல்கிறானோ அவ் வேந்தன் உறுதியாக வெற்றி பெறுவான். அவன் துணை செய்தமையால் வெற்றி உண்டான போர்கள் பல. இதனால் காரியின் பெருமை எங்கும் பரவியது. அவனைத் துணையாகக் கொள்ளும் அரசர்கள் தங்கள் பேற்றை எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் பகையரசர்களோ அவனே நினைத்தாலே நடுங்கினார்கள். சோழனானாலும் சரி, சேர பாண்டியர்களானுலும் சரி, அவன் தம் பகைவருக்குத் துணையாக வருகின்றான் என்ற செய்தியைக் கேள்வியுற்றால் மேலே போரை நடத்தாமல் சந்து செய்துகொள்ளுவார்கள்.

போரில் தமக்கு வெற்றி வாங்கித் தந்த பெரு வீரனுக்கு வேந்தர்கள் வழங்கும் பரிசு கொஞ்சமாகவா இருக்கும்? தமிழ் நாட்டில் எந்த மண்டிலத்தில் உண்டாகும் வளமும் அவனுக்கு எளிதிற் கிடைத்து வந்தது. அவன் யாருக்குப் படைத் துணையாகச் செல்கிறானோ அந்த வேந்தன் தன் நாட்டுப் பொருள்களைத் தருவான். மன்னன் வெற்றி பெறும்போது பகை வேந்தர் தம் நாட்டுப் பொருள்களை அவனுக்குத் திறையாகத் தருவார்கள். அவற்றை, “இவை உன் துணையால் வந்தவை; உனக்கே உரியவை” என்று அம் மன்னன் திருமுடிக் காரிக்கே வழங்குவான். இவ்வாறு எல்லாப் பொருள்களும் காரிக்குக் கிடைத்தன.

கிடைத்த பொருள்களைக் காரி தான் வைத்துக் கொள்வதில்லை. தன்னிடம் வந்தவர்களுக்கு வழங்கிவிடுவான். நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்களிடம் அவனுக்கிருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடு வேறு இல்லை. அவர்களுக்குத் தேரைக் கொடுப்பான்; யானையைக் கொடுப்பான்; பொன்னைக் கொடுப்பான்; வேறு பொருள்களைக் கொடுப்பான். வேந்தர்கள் அவனுக்குத் தந்த தேர்களைப் புலவர்களுக்குக் கொடுத்து அதில் அவர்கள் ஏறிச் செல்வதைக் கண்டு மகிழ்வான். கணக்கில்லாத தேர்களை அவன் இப்படி வழங்கியமையால் ‘தேர்வண் மலையன்’ என்ற சிறப்புப் பெயர் அவனுக்கு உண்டாயிற்று.

புலவர்களுக்கு மலையமான் திருமுடிக்காரியிடம் தனியான அன்பு இருந்தது. முடி மன்னர்களைக் காட்டிலும் அவனை மிகுதியாக விரும்பினர். எவ்வளவுதான் அவ்வேந்தர்கள் புலவர்களைப் போற்றிப் பாராட்டினாலும் அவர்கள் உள்ளத்தைத் தொடும்வண்ணம் நெருங்கிப் பழக அவர்களால் முடியாது. காரியோ தாயைப்போல அன்பு செய்தான்; தகப்பனாரைப் போல இடுக்கண் வராமற் காத்தான்; கடவுளைப் போல எல்லாவற்றையும் கொடுத்தான்; நண்பனைப் போலப் பழகினான்; குழந்தையைப் போலப் பழகுவதற்கு மிக மிக எளியவனாக இருந்தான். அவன் வள்ளல்; அறிவாளி; பெருவீரன்; அன்பிலே சிறந்தவன்; கலைஞன்; இப்படி உள்ளவர்கள் கிடைப்பது அருமையிலும் அருமை. அதனால்தான் புலவர்கள் அவனை நாடி வந்தனர்.

இத்தகைய வள்ளல் உலக வாழ்வை நீத்தான். புலவர் உலகமே புலம்பியது. அவனுடைய துணையினால் வெற்றி பெற்ற வேந்தர்கள் தம் கை, ஒடிந்தது போலச் செயலிழந்து நின்றனர். போரில் தோல்வியுற்றவர்கள், ‘இனிமேல் மலையமான் நம்மை எதிர்க்க வரமாட்டான்’ என்று ஆறுதல் பெற்றர்கள். அப்படிப் பெற்றவர்களில் ஒருவன் கிள்ளிவளவன்.

மலையமானுடைய துணை இனி நமக்கு இல்லாமற்போயிற்றே என்று ஏங்கியவர்கள் சிலரே.

அவனால் விளையும் அச்சம் இல்லையாயிற்று என்று மகிழ்ந்த மன்னர்களே பலர். ஏனெனில் அவன் இன்னாருக்குத்தான் துணையாக நிற்பான் என்ற வரையறை இல்லை. நீதி உள்ள இடத்தில் அவன் இருப்பான். போர் புரியப் புகும் மன்னர்கள் யாவரும் நீதி வழியில் நிற்பார்களா? நின்றால் போர் என்பதே உலகில் நிகழாதே நீதிவழி நிற்பார் சிலராகவும், நீதியைப் புறக்கணிப்பார் பலராகவும் இருப்பதுதான் அரச குலத்தின் இயல்பு. அதனால் காரியின் மறைவு கேட்டு மகிழ்ந்த மன்னர்கள் பலர்.

புலவர்களோ தாயை இழந்த பிள்ளைகளைப் போன்ற துயரத்தை அடைந்தனர். எல்லாப் புலவர்களுமே அவனுடைய வள்ளன்மையை உணர்ந்தவர்கள். அவன் இறந்தாலும் புலவர்களின் நாவில் இறவாமல் வாழ்ந்தான்.

மலையமான் இறந்த செய்தி கிள்ளிவளவனுக்குத் தெரிந்தது. அவன் உவகை பெற்றான். ‘இனிமேல் அரசர்கள் தங்கள் படைப் பலத்தை நம்பி வாழலாம். அந்தப் படைப் பலத்துக்கு ஏற்றபடி வெற்றி தோல்விகளை அடையலாம்’ என்று நினைத்தான். மலையமானைப் போன்றவர்கள் வேறு யாரும் இல்லை. அதனால் மலையமானால் வேந்தர்கள் நடுநடுங்கிக்கொண்டிருந்த நிலையும் ஒழிந்தது” என்று தன் அமைச்சர்களிடம் சொன்னான். அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று.

”மலையமானுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?” என்று கேட்டான். சிங்கம் போனாலும் அதன் குட்டிகள் இருந்தால் அவற்றால் தீங்கு நேரும் அல்லவா?

“இரண்டு பேர்கள் இருக்கிறர்களாம்” என்று ஓர் அமைச்சர் சொன்னார்.

“அப்படியா அவர்களும் மலையமானைப் போன்ற வலிமை உடையவர்களா?”

“இல்லை, இல்லை. இரண்டு பேரும் இளங் குழந்தைகள்” என்று விடை வந்தது.

“இளங் குழந்தைகளாக இருந்தால் என்ன? மலையமானுக்குப் பின் அவன் கீழ்த் தோன்றிய இரண்டு முளைகள் இருக்கின்றன. இப்போது குழந்தைகளாக இருக்கும் அவர்களே இன்னும் சில ஆண்டுகள் போனால் பெரியவர்களாகி விடுவார்கள். காசு கொடுக்கிறவனுக்காகச் சண்டை பிடிக்கிற தொழிலை மேற்கொள்வார்கள். ஒரு காரிக்கு இரண்டு காரி புறப்பட்டதுபோல ஆகிவிடும்” என்று மன்னன் கூறினான்.

“எல்லோரும் மலையமான் ஆக முடியுமா?” என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

“புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? புலியென்று சொல்வது தவறு. அந்த இரண்டு பேர்களும் பாம்புக் குட்டிகள். பாம்பானால் என்ன, குட்டியானால் என்ன? இரண்டும் அச்சத்தை உண்டாக்குவனவே!”

கிள்ளிவளவன் அந்தக் குழந்தைகளுக்கு அஞ்சுகிறானென்பது அவன் பேச்சினாற் புலனாயிற்று.

“எனக்கு ஒன்று தோன்றுகிறது. நம்முடைய படைத் தலைவரையோ, ஒற்றர் தலைவரையேர் கொண்டு அந்த இரண்டு பாம்புக்குட்டிகளையும் பிடித்துக்கொண்டு வரச்செய்யவேண்டும்.”

அமைச்சர்கள் திடுக்கிட்டனர். அரசன் இன்ன உள்ளக் கிடக்கையோடு பேசுகிறான் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி விழித்தனர்.

“நான் சொல்வது விளங்கவில்லையா? இந்த இரண்டு நச்சுப் பாம்புகளும் பெரியனவாகி மன்னர் குலத்தின் நெஞ்சிலே மாளாத அச்சத்தை ஊட்டுவதற்கு முன்னே, முளையிலே கிள்ளி எறிந்து...”

“இந்தக் குழந்தைகளையா!” என்று திடுக்கிட்டு ஒருவர் கேட்டார்.

குழந்தைகள் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? பாம்பிலே குட்டியென்றும், பெரிதென்றும் வேறுபாடு உண்டா, என்ன? பாம்பென்று சொல்லுங்கள்.”

அவன் தன் கருத்தை எடுத்துரைத்தான். காரியின் மக்களைப் பிடித்து வந்து ஒழித்து விட்டால் மலையமான் குலம் வேரொடு நாசமாகுமென்றும், அரசர்கள் அஞ்சுவதற்குக் காரணம் இல்லாமல் ஒழியுமென்றும் அவன் சொன்னான்.

அவன் அரசன்; அவன் சொற்படி நடக்கத்தானே வேண்டும்?

அரசன் ஏவலின்படி மலையமான் திருமுடிக் காரியின் மக்கள் இருவரையும் கொண்டு வந்து விட்டார்கள். அக் குழந்தைகளை யானைக் காலில் இடறிக் கொல்வதாக அரசன் திட்டம் இட்டான். அதற்கு வேண்டியன செய்யக் கட்டளையிட்டு விட்டான்.

இந்தச் செய்தி எப்படியோ வெளியிலே தெரிந்துவிட்டது. புலவர் உலகம் இதை அறிந்து பொருமியது. அந்தக் குழந்தைகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று துடித்தார்கள். அதைச் செய்யும் ஆற்றலையுடையவர் கோவூர் கிழார் ஒருவரே என்று துணிந்து அவரிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னார்கள்.

அப்புலவர் பெருமான் இதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட நாகம் போலானர். “சோழனா இது செய்யத் துணிந்தான்?” என்று கேட்டார்.

“ஆம்! அறம் வளர்வதற்குரிய உறையூரில் வாழும் கிள்ளிவளவன்தான் இந்தத் தகாத செயலைச் செய்ய முற்பட்டிருக்கிறான்” என்று அவர்கள் கூறினார்கள்.

“என் உயிரைக் கொடுத்தாவது அந்தக் குழந்தைகளை மீட்பேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார் கோவூர் கிழார்.

உறையூரை அடைந்தார். சோழன், மலையமான் குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கக் கருதியது அன்றுதான். நேரே கொலைக் களத்துக்கே போய்விட்டார் புலவர். குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருந்தனர். எதிரே யானை வந்து நின்றது. அங்கே புலவர் ஒரு கணந்தான் நின்றார். கொலையாளிகளைப் பார்த்தார். “சற்று நில்லுங்கள். நான் மன்னரைப் பார்த்துப் பேசிய பிறகு அவர் சொல்வதுபோலச் செய்யலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். உறையூரில் அவர் சொல்லைத் தட்டுகிறவர் இல்லை.

அரசன் தன் மாளிகையின் மேலே நின்று கொண்டிருந்தான். கோவூர் கிழார் அவனிடம் சென்றார். அவர் தன்னை நோக்கி வருவது அரசனுக்குத் தெரிந்தது. கீழே இறங்கி வந்து அவரை வரவேற்றான்.

“முன்பு அறிவிக்காமல் இவ்வளவு விரைவாகத் தாங்கள் வந்தீர்களே!” என்றான் அரசன்.

“ஆம். வரும்படி நீ செய்துவிட்டாய்” என்று. படபடப்போடு புலவர் சொன்னார்.

“நான் சொல்லி அனுப்பவில்லையே! ஆனாலும் நீங்கள் எப்போது வந்தாலும் வரவேற்கக் காத்திருக்கிறேன்!”

“நீ சொல்லியனுப்பவில்லை யென்பது உண்மைதான். நானாகத்தான் வந்தேன். அறம் என்னை இங்கே தள்ளிக்கொண்டு வந்தது. உறையூரில் அறம் என்றும் நிலைபெற்றிருக்கிறது. அது குடி போகக்கூடாதே என்றெண்ணி ஓடி வந்தேன்.”

“இப்போது என்ன நடந்துவிட்டது? தங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லையே!”

“விளங்கச் சொல்கிறேன். முதலில் அந்த இளங் குழந்தைகளே விடும்படி உத்தரவு செய். புலவருலகத்தின் பழியும், அறக் கடவுளின் சாபமும், என் போன்றவர்களின் வெறுப்பும் அணுகாமல் வாழவேண்டுமானால், உடனே அந்தக் குழந்தைகளைப் பலியிடுவதை நிறுத்தச் சொல்.”

“அவர்கள் மன்னர் குலத்தையே நடுங்க வைத்த பாம்பின் குட்டிகள்...”

“கோழைகள் பேசும் பேச்சு இது. நெஞ்சில் இரக்கம் இல்லாதவர்கள் பேசுவது. இவர்கள் யார் தெரியுமா? சொல்லுகிறேன் கேள்.”

அரசன் இப்போது உண்மையிலே நடுங்கினான். கோவூர் கிழாரின் சீற்றம் அவனைத் திணற வைத்தது. ஒன்றும் எதிர் பேச அவனால் முடியவில்லை.

“இவர்களைப்பற்றிச் சொல்வதற்குமுன் நீ இன்னானென்பதை முதலில் உணர்ந்து கொள். அறிவில்லாத பறவைச் சாதியிலே பிறந்த ஒரு புறாவுக்காகத் தன் உடம்பையே அரிந்து கொடுத்த கருணையாளன் குடியிலே பிறந்தவன் நீ. தன் உயிர் போனாலும் பிற உயிர் போகக் கூடாதென்று சிபிச் சக்கரவர்த்தி செய்த அருஞ்செயலை உங்கள் குல வரலாற்றின் முதலிலே வைத்துச் சான்றோர்கள் பேசுகிறார்கள். இதை நீ நன்றாக நினைவிலே இருத்திக்கொள். இனி, இவர்களைப்பற்றிச் சொல்கிறேன். இவர்கள் உன் நாட்டுக்குக் கேடு சூழ்ந்தவர்கள் குடியில் வந்தவர்கள் அல்லர். அறிவையே நிலமாகக் கொண்டு புலமை வித்தகத்தையே உழவாகச் செய்து பிழைக்கிற புலவர்களுக்கு வறுமை உண்டானால் அதற்காக இரங்கி, தமக்குக் கிடைத்ததை அவர்களுக்கும் வழங்கிப் பின்பு எஞ்சியிருந்தால் உண்ணும் வள்ளல்களின் குடி இவர்கள் குடி. இவர்களுடைய தண்ணிய நிழலில் புலவர் உலகம் இன்பம் கண்டு வந்தது.”

கிள்ளிவளவன் மனத்தில் இந்தப் பேச்சினூடே மறைந்திருக்கும் குறிப்பு எதிரொலி செய்தது. ‘தங்கள் குடை நிழலின் கீழே உலகத்தை வைத்துக் காக்கிறோம் என்று இறுமாந்திருக்கும் பேரரசர்களால் புலவர்கள் வாழவில்லை. மலையமான் திருமுடிக்காரி போன்ற வள்ளல்களால் தான் புலவர்கள் வாழ்கிறார்கள். அவர் குடியைப் பகைத்தால் புலவர் உலகமே வசை பாடும்’ என்று கோவூர் கிழார் சொல்லாமற் சொல்வதாக எண்ணினான். அவன் அகக் கண்ணின் முன்னே பல புலவர்கள் நின்றர்கள். “நீ கொடியவன்; நீ கொலையாளி; நீ குழந்தைக் கொலை புரிபவன்” என்று ஆளுக்கு ஒரு குரலில் உரத்துக் கடவுவதாகக் கற்பனை செய்தான். அவன் உடம்பு நடுங்கியது.

கோவூர் கிழார் மேலும் பேசினார். “இவ்வளவும் இருக்கட்டும். அதோ அந்தக் குழந்தைகளைப் பார். சின்னஞ் சிறு குழந்தைகள். பாவம் தங்களுக்கு வரும் ஏதத்தை அவர்கள் உணரவில்லை. புதிய இடத்துக்கு வந்திருப்பதனால் அவர்கள் அழுதார்கள். அவர்கள் உயிரை உண்ண வந்த யானை முன்னே நிற்கிறது. அதைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். எத்தனை மாசு மறுவற்ற உள்ளம்! தங்களைக் கொல்ல வந்த யானையென்று தெரியுமா? இந்தக் காட்சியைக் கண்டும் உன் மனம் இரங்கவில்லையா? இளந்தளிர் போல இருக்கும் இவர்களிடமா உன் ஆற்றலைக் காட்டுவது? நான் சொல்வது விளங்குகிறதா? நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீயும் கேட்டாய். இனிமேல் உன் விருப்பப்படியே செய்” என்று சொல்லி எழுந்திருக்கப் போனார் புலவர்.

அரசன் தன் கையால் அவரை அமர்ந்திருக்கும்படி குறிப்பித்தான். பேச வாய் வரவில்லை. தான் செய்யப் புகுந்த தவறு அவனுக்கு இப்போது புலனாயிற்று. சிறிது நேரங் கழித்து அவன் பேசினான்: “புலவர் பெருமானே! அந்தக் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றவில்லை. என்னைத்தான் காப்பாற்றினீர்கள். பகையுணர்ச்சியும் செருக்கும் என் கண்ணை மறைக்க இந்தப் பாதகச் செயலைத் செய்யத் துணிந்தேன். தாங்கள் தடுத்து என்ன ஆட்கொண்டீர்கள். உங்கள் அன்பு எனக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.”

கோவூர் கிழார் அரசனுடன் எழுந்து வந்தார். கொலைக்களத்தில் நின்ற குழந்தைகளிடம் ஓடினர். இருவரையும் தழுவிக்கொண்டார். அந்தக் குழந்தைகள் அப்போதும் அழுதார்கள்; யாரோ புதியவர் என்ற அச்சத்தால் அழுதார்கள். புலவரும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.