சங்ககாலத் தமிழ் மக்கள்-3/புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

விக்கிமூலம் இலிருந்து
VII
புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

மக்கட்குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்குத் துணை செய்பவர் நல்லிசைப் புலவரே. இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப் புலவர் எல்லாரும் தமிழினத்தாரது நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவும், முயற்சியும் உடையராய் வாழ்ந்தமையால், தமிழ் நாடு கலைத்துறையிலும், நாகரிகப் பண்பாடுகளிலும் தலை சிறந்து விளங்கியது. சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்தினையும், எதிர்காலத்தின் சிறப்பினையும், தம் நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து நோக்கித் தம்மைச் சார்ந்த மக்களைக் கல்வித் துறைகளிலும், தொழிற் றுறைகளிலும் உயர்த்த வல்ல பேரறிவு வாய்ந்தவரே புலவர் எனப் போற்றப் பெறுபவராவர். அறிவும், முயற்சியும் உடையார் தம்மில் ஒருங்கு கூடித் தம் அறிவின் திறத்தையும், செயற்றிறத்தையும் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து, எல்லா மக்களையும் அறிவிலும், முயற்சியிலும் முன்னேற்றுதற்குரிய அறிவுரைகளை வழங்கி, நல்வழிப் படுத்துதலே புலவர்களின் தொழிலாகும்.

புலமைக்குக் கருவியாய் விளங்குவது மொழி. நிலத்தின் வளத்தினை அதன் கண் தோன்றிய நென்முளை காட்டுவது போல, மக்களது அறிவினைப் புலப்படுத்துவது, அவர்களாற் பேசப்படும் தாய் மொழியாகும். எனவே, புலமைக்கு அடையாளமாய் விளங்கும் அம்மொழியினைக் கெடாது போற்றுதல் புலவர்களின் கடமையாயிற்று.

சங்க காலத் தமிழ்ப் புலவர் எல்லாரும் தாம் பேசும் சொற்கள் திரிபடையாமலும், வேற்று மொழிக் கலப்பால் பழைய சொற்கள் வழக்கிழந்து மறையாமலும், இலக்கண, இலக்கிய வரம்பு கோலித் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தனர். அறிவையும், தொழிலையும் புலப்படுத்தி, மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது மொழியென்றும், அம்மொழி இலக்கண, இலக்கிய வரம்பின்றி நாளுக்கொரு வகையாய்த் திரிபடைந்து மாறுமானால், முன்னுள்ளார் கருத்தைப் பின் வந்தாரும், அவர் தம் கருத்துக்களை இனி வருவாரும் உணர்ந்து கொள்ளுதற்கு வழியின்றி, அம்மொழியின் வழக்கியல் சிதைந்து கெடுமென்றும் நன்குணர்ந்தனர். ஆகவே, புலவர் பெருமக்கள் தம்மாற் பேசப்படும் தமிழ் மொழியைப் பொருள் தூய்மையும், தெளிவும் உடையதாக உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் நிலை பெற வளர்த்து வருவாராயினர். அதனால், தமிழ் மக்களுடைய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் யாவும் புலமைக் கருவூலமாய் அவர்களாற் போற்றப்படும் தமிழ் மொழியுடன் ஒன்றுபட்டு வளர்வனவாயின.

ஒருவர் கருத்தை மற்றவர் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுதற்குக் கருவியாயமைவது தாய் மொழி என்றும், அம்மொழி வாயிலாக வாழ்க்கையினைச் செம்மைப் படுத்தும் உணர்வினை வழங்குவார் புலவர் என்றும், உலகியற் பொருள்களை நுண்ணுணர்வுடன் ஆராய்ந்து, தாம் உணர்ந்த நற்பொருள்களைப் பாக்களாலும் உரைகளாலும் சுவை பெருக அமைத்துக் கேட்பார்க்கு அறிவுடன், இன்பத்தையும் வழங்க வல்லவர்களே நல்லிசைப் புலவர்கள் என்றும், அத்தகைய புலவர்களாற் பாடப் பெறும் புகழுடையார் இவ்வுலகிற் செய்யத்தகும் நல்வினைகளை முடித்து, வானுலக இன்பத்தையும் பெற்று மகிழ்வர் என்றும் சங்ககாலத் தமிழ் மக்கள் உய்த்துணர்ந்தமை தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். வாழ்க்கையிற் காணப்படும் நலம் தீங்குகளைத் தெளியவுணர்ந்து தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் நல்லறிவுடையாரே பண்டை நாளிற் புலவரெனப் போற்றப் பெற்றனர். கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றுக் கற்ற அம்முறையிலே நல் வழிக்கண் ஒழுகி உறுதியுடைய நற்பொருள்களைப் பிறர்க்கு அறிவுறுத்தி வாழ்க்கையைத் திருத்தமுடைய தாக்குதல் பழந்தமிழ்ப் புலவர்களின் தொழிலாய் அமைந்தது.

செல்வ வறுமைகளாலும், உலகியலிற் பேசப்படும் பிற தொழில் வேற்றுமைகளாலும் அடக்கப்படாது, எல்லா வேற்றுமைகளையும் கடந்து விளங்குவது புலமையாகும். புலமையுடையார் அவ்வேற்றுமைகளை ஒரு பொருளாக எண்ணமாட்டார். 'பகைவர் இவர்; நட்பினர் இவர்', என்னும் வேற்றுமை இறைவனுக்கு இல்லாதவாறு போலப் புலவர்க்கும் அத்தகைய வேற்றுமை இல்லையென்பதனைச் செந்தமிழ்ப் புலவர் நன்குணர்ந்திருந்தனர். ஒரு வரை விரும்புதலும் வெறுத்தலுமில்லாது தமிழகத்திற் புலமைத் தொண்டாற்றிய புலவர்களைத் தமிழரனைவரும் இகலிராலாய் ஒருமித்துப் போற்றி வந்தனர். தம்முட் பகை கொண்ட தமிழ் வேந்தரிடையே ஒருபாற்படாது நடுநிலையிற் பழகுந்திறம் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலை பெற்றிருந்தது. இங்ஙனம் பக்கத்துள்ளார் இயல்பறிந்தொழுகும் பண்புடைமையை மக்கள் மனத்தே வளர்த்த பெருமை தமிழ்ப் புலவர்க்கே சிறப்பாக உரியதாகும்.

வயிற்றுப் பிழைப்பினைக் கருதிக் கல்வியைக் கற்றல் புலவர் செயலன்றாம். கல்வியிலே கருத்துடையராய்ப் பொருளைப் பேணாது வாழ்தல் புலவர்களின் மனவியல்பாதலின் வறுமையுறுதலும் அவர்தம் இயல்பாயிற்று. புலவர் வறுமை நிலையில் வருத்தமுற்றாலும், அவர்தம் மதி நலமுணர்ந்த மன்னர்களாலும் நாட்டு மக்களாலும் வரிசையறிந்து பரிசில் தந்து, பாராட்டப் பெற்றனர். தமது வறுமை நீங்க நிறைந்த பெரும் பொருளைப் பெற்று இன்புறுதல் வேண்டுமென்ற கருத்தால் பெருமையில்லாத மக்களை உயர்த்துக் கூறும் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதனவற்றைச் செய்தனவாகப் பொய்யாகப் பாராட்டுதலைப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அறவே வெறுத்தார்கள். "வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் ; மெய் கூறுவல்,” என்பது மருதனிளநாகனார் வாய் மொழியாகும்.

கல்வி, வீரம், ஈகை ஆகிய பெருமிதப் பண்புகளை உடைய நன்மக்களின் புகழைத் தமிழகம் எங்கணுஞ் சென்று உளமுவந்து பாராட்டிப் போற்றுதல் தமிழ்ப் புலவர்களின் திறனாய் அமைந்தது. "வண்மையில்லாத வேந்தர் காணக் கெடாது பரவிய நின் புகழைத் தமிழ் நாடு முழுவதும் கேட்பப் புலவர் பலரும் தமது பொய்யாத செவ்விய நாவினுல் வாழ்த்திப் பாடுவர்,” எனக் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்னும் புலவர் பிட்டங் கொற்றன் என்னும் வள்ளலை நோக்கிக் கூறுதலால் இவ்வுண்மை புலனாம்.

அறிவுடையார் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையே மன்னர் பலரும் தாம் பெறுதற்குரிய நற் பேறாகக் கருதினர். சோழன் கிள்ளி வளவன் என்பான் குளமுற்றத்துத் துஞ்சினமையறிந்து செயலற்று வருந்திய ஐயூர் முடவனார் என்னும் புலவர், "நிலவரை உருட்டிய நீள்நெடுந்தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை உடையான் கிள்ளி வளவன்,” எனப் பாராட்டி இரங்குகின்றார்.

பழந்தமிழ்ப் புலவர் தாம் கற்ற பெருங்கல்வியைத் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தினர்; தம் அறிவுரைகளை மகிழ்ந்து கேட்பாரை மதித்தனர்; தாம் கூறும் அறவுரைகளைக் கேட்டுணரும் அறிவினைப் பெறாதார் மன்னராயினும், அவரை மதியாது இகழ்ந்தனர். "நற்பொருள்களை விளங்க எடுத்துரைத்தாலும் ஒரு சிறிதும் விளங்கிக்கொள்ள மாட்டாத பெருமையில்லாத மன்னர்களை எம் இனத்தவராகிய புலவர்கள் பாடமாட்டார்கள்," (புறம்-375) என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் கூறுகின்றார்.

தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை ஈட்டி இனிது வாழும் வசதி பெறாத புலவர், ஈகையிற்சிறந்த வள்ளல்கள் முதலியவர்களை நாடிச் சென்று அவர்கள் மதித்தளித்த பரிசிற் பொருளைக் கொண்டு வாழ்க்கை நிகழ்த்த வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். “ எனது மனைக் கண் உண்ணுதற்குரிய உணவில்லாமையால், என் இளம் புதல்வன் தாய்ப்பாலும் பெறாது கூழையும் சோற்றையும் விரும்பி, அடுக்களையிலுள்ள கலங்களைத் திறந்து பார்த்து, ஒன்றுங்காணாது, அழுகின்றான். அவனுடைய அழுகையைத் தணிக்கக் கருதிய என் மனைவி, 'அதோ புலி வருகின்றது!' என அச்சுறுத்தியும், 'வானத்தில் அம்புலியைப் பார்!' என விளையாட்டுக் காட்டியும் அவன் அழுகை தணியாமைக்கு வருந்தி, 'நின்னுடைய பசி வருத்தத்தை நின் தந்தைக்குக் காட்டுவாயாக,' எனச் சொல்லி நின்று மனம் கவல்கின்றாள்,”[1] எனப் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருமான் தமது வறுமைத் துன்பத்தைக் குமண வள்ளலிடம் எடுத்துரைக்கும் முறை, படிப்பார் உள்ளத்தை உருக்குவதாகும்.

பெருஞ்சித்திரனார் இங்ஙனம் வறுமையாற் பெரிதும் வருத்தமுற்றவராயினும், தாம் குமணன் பாற்பெற்ற பரிசிற் பொருளைத் தமக்கென இறுக வைத்துக்கொள்ளாது, தம் போல வறுமையால் வருந்துவார் யாவராயினும் அவரெல்லார்க்கும் வரையாது வழங்குமாறு தம் மனைவிக்கு அறிவுறுத்துகின்றார்[2]. இச்செயலால் அக்காலத் தமிழ்ப் புலவர்களின் வள்ளண்மை இனிது புலனாதல் காணலாம்.

எத்துணைத் துன்பமுற்றாலும் தங்களது பெருந்தன்மைக்குப் பொருந்தாத நிலையில் செல்வர்பாற் பணிந் தொழுகுதலைப் புலவர்கள் ஒரு சிறிதும் விரும்பமாட்டார்கள். தமக்குப் பிறர் தரும் பொருள் அளவாற்பெரிதாயினும், அன்பின்றியும் காலந்தாழ்த்தும் வரிசையறியாதும் வழங்கப்பெற்றால், அதனை வெறுத்து விலக்குதலும்; தினையளவிற்றாய சிறுபொருளாயினும், தம் புலமைத் திறமுணர்ந்து வரிசையறிந்து கொடுக்கப்பெற்றால் அப் பொருளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளுதலும் பெரும் புலவர்களின் இயல்பாகும். அரசர் முதல் வறியவர் வரை எல்லா மக்களையும் ஒப்ப மதித்து, அவர்தம் நல்லியல்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தீமை கண்டால் இடித்துரைத்துத் திருத்துதலும், மக்கள் நலம் பேணும் தறுகண் வீரர்களையும் தமிழ் வள்ளல்களையும் உளமுவந்து பாராட்டி ஊக்குதலும், மனை வாழ்க்கையிலும் உலகியலிலும் மக்கள் பாற் காணப்பெறும் தவறுகளை அவ்வப்போது எடுத்துக்காட்டி அவர்களைத் திருந்திய வாழ்க்கையில் வாழச் செய்தலும் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் செயல்களாய் அமைந்தன. 

சங்ககாலத்தில் மன்னர் முதல் தொழிலாளர் ஈறாக ஆடவர் பெண்டிர் இருபாலாரும் தமிழறிவு நிரம்பப்பெற்றவராய்த் தாம் உலகியலிற் கண்டுணர்ந்த உண்மைகளை எல்லார்க்கும் அறிவுறுத்தும் நல்லிசைப் புலவராய் விளங்கினர். குடிப்பிறப்பு, செல்வநிலை முதலிய உயர்வு தாழ்வுகளை உள்ளத்துட்கொள்ளாது, கற்றறிவுடைய புலவர் பெருமக்கள் கருதிய வழியே தமிழ் வேந்தர்களும் தங்கள் ஆட்சி முறையினை அமைத்துக்கொண்டார்கள். மக்களெல்லார்க்கும் கல்வியின் இன்றியமையாமையினை அறிவுறுத்த எண்ணிய மன்னர் பெருமானாகிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும், என அறிவுறுத்திய சொற்றொடர், அரசியல் நெறியில் அறிவுடைய புலவர்க்கமைந்த பொறுப் பினை நன்கு வற்புறுத்துவதாகும்.

தமிழ் வல்ல பெரும்புலவர்களைப் பழைய தமிழ் வேந்தர்கள் தங்களோடு ஒப்ப வைத்து நண்பு செய்தும், தம்மினும் உயர்நிலையில் வைத்து வழிபட்டுப் போற்றியும் ஆதரித்த செய்திகள் புறநானூற்றுச் செய்யுட்களில் ஆங்காங்கே குறித்துப் பாராட்டப் பெறுகின்றன. புலவர் பெருமானாகிய பிசிராந்தையார்க்கும், வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ் சோழனுக்கும் அமைந்த உணர்ச்சியொத்த நட்பின் திறத்தினை அவ்விருவரும் பாடிய புறப் பாடல்களால் நன்குணரலாம். கோப்பெருஞ்சோழன் உலக இன்பத்தை வெறுத்து, நற்பொருளைச் சிந்தித்து, உண்ணாது வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணுகின்றான் ; தான் வடக்கிருக்கும் பொழுது தன் உயிர்த் தோழராய்ப் பாண்டி நாட்டில் வாழும் பிசிராந்தையார்க்கெனத் தன் பக்கத்தில் ஓரிடம் அமைக்கும்படி தன்னைச் சூழ்ந்துள்ள சான்றோர்க்குச் சொல்லிவிட்டு வடக்கிருந்தான், சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கேள்வி வாயிலாக அறிந்து அன்பு செய்ததல்லது ஒரு முறையேனும் நேரிற்கண்டு பழகியவரல்லர். பல யாண்டுகள் உள மொத்துப் பழகிய பெருங்கேண்மையராயினும், நெடுங் துரத்திலிருந்து நண்பர் நினைத்த மாத்திரத்தே வந்து சேர்தல் என்பது இயலாத செயலாம் என அங்குள்ள சான்றோர் ஐயுற்றிருக்கும் நிலையில் அவர்களெல்லாரும் வியந்து உள்ளம் உருகும்படி பிசிராங்தையார் வந்து சேர்ந்தார் ; கோப்பெருஞ்சோழன் பக்கத்தில் தமக்கென அமைக்கப் பட்ட இடத்தில் மன்னனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு. இவ்வாறே பொத்தியார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருந்து உயிர் நீத்தனர். பொய்யா நாவிற் புலவர் பெருமானாகிய கபிலர், தம்மையாதரித்த உயிர்த்தோழனாகிய பாரிவேள்,வேந்தரது வஞ்சனையால் உயிரிழந்தமைக்கு ஆற்றாது, அவன் மகளிர் இருவரையும் தம் மகளிராகக் கருதி, அவர்களைப் பார்ப்பார் இல்லில் வளரப்பணித்துத் திருக்கோவலூரில் பெண்ணையாற்றின் நடுவே அமைந்த பாறையொன்றில் வடக்கிருந்து உயிர் துறந்தமை அப்பொழுது அவர் பாடிய புறப்பாடலாலும், திருக்கோவலூர்த் திருக்கோயிலிற் பொறிக்கப்பெற்ற சோழர் காலக் கல்வெட்டினாலும் நன்கு புலனாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர் தம்மையாதரித்து நண்பு செய்த அரசர் வள்ளல் முதலியவரின் துன்பக் காலத்தில் அவர்தம் பிரிவாற்றாது அன்பினால் உடனுயிர் விடும் பெருங்கேண்மையினராய் விளங்கினமை மேற்காட்டிய அருஞ்செயல்களால் நன்கு துணியப்படும்.

நாடாளும் மன்னர்கள் வெகுளியினால் மனந்திரிந்து பழியுடைய செயல்களைச் செய்யத் துணிதலும் உண்டு. அந்நிலையிற் புலவர் பெருமக்கள் மன்னர்களின் வெகுளியைத் தணித்துத் தங்கள் அறவுரைகளால் அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன் ஆணை வழியடங்காது அரசியலைக் கைப்பற்றிய பொழுது அவர்கள்மேற் சினங்கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். அங்நிலையிற் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் பெருமான் தம் அறவுரைகளால் கோப்பெருஞ் சோழனது சீற்றத்தைத் தணிவித்துத் தந்தைக்கும் மைந்தர்க்கும் போர் நிகழாதபடி தடுத்தனர்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான், தன்பகைவனாகிய மலையமான்பெற்ற இளங்குழந்தைகளை யானையின் காலால் இடரச் செய்தற்கு முற்பட்டு நிற்கின்றான். அவ்விழி செயலைக் கண்டு உளம்பொறாத கோவூர் கிழார் என்னும் புலவர், செறுநரும்விழையும் சிறப்பமைந்த அவ்விளங் குழந்தைகளின் வனப்பினை இன்றமிழ்ச் செய்யுளால் எடுத்துரைத்து, மன்னனது உள்ளத்தினை உருக்கி அவ்விளங்குழந்தைகளை உய்வித்தருவளினார். “ஒரு புறாவினைப் பாதுகாத்தல்வேண்டி அப்பறவையின் நிறைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையினை அறுத்துக்கொடுத்த அருளாளனாகிய சோழமன்னன் வழியிற் பிறந்த வேந்தர் பெருமானாகிய நீ, புலவர்களின் துயர்க்கிரங்கித் தம் பொருளைப் பகுத்து வழங்க வல்ல அருள் மிக்க மலையமான் குழந்தைகளாகிய இவர்களைக் கொலை செய்ய முந்துதல் அருவருப்பினை விளைக்கும் அடாத செயலாகும். தங்களைக் கொல்லுதற்கமைந்த யானையினைக்கண்ட இக்குழந்தைகள், தங்கள் அழுகையினை மறந்து இங்குக்கூடிய மக்களைப் பார்த்து மருள்கின்றார்கள். இவர்களைக் கொல்லுதல் நினக்கு நீங்காத பெரும்பழியை விளைப்பதாகும்,” எனக் கோவூர் கிழார் கிள்ளி வளவனை நோக்கி இடித்துரைத்து, மலையமான் குழந்தைகளை உய்யக் கொள்ளுங் திறம் வியந்து போற்றுதற்குரியதாம்.

விருப்பு வெறுப்பின்றி எல்லா மக்களையும் ஒப்பக் கருதி அறிவுரை வழங்குதல் புலவர்களின் இயல்பாகும். தமிழரசர்கள் தங்களுக்குள் பகைகொண்டபொழுது அவர்களுள் ஒருவர்பாற் சார்ந்து ஒற்றாய் நின்று கோட்சொல்லுந் தீச்செயலைப் புலவர் பெருமக்கள் எஞ்ஞான்றும் மேற்கொண்டதில்லை. சோழன் கலங்கிள்ளியினால் ஆதரிக்கப் பெற்ற இளந்தத்தனார் என்னும் தமிழ்ப் புலவர், அவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியால் ஆளப்படும் உறையூர்க்குச் சென்றார். அப்புலவரை ஒற்றர் எனப் பிழைபடக் கருதிய நெடுங்கிள்ளி, அவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். இக்கொடுஞ் செயலையுணர்ந்த கோவூர்கிழார், அம்மன்னனை இடித்துரைத்துப் பிறரெவர்க்குந் தீமை கருதாத புலவர் பெருமக்களின் பெருந்தகவினை நன்கு விளக்கி, இளந்தத்தனாரை உய்யக்கொண்ட பாடலொன்று புறநானூற்றில் உள்ளது,

“வரையாது வழங்கும் வள்ளல்களை நினைத்துப் பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப்போல நெடுந்துரங்கடந்து சென்று, பொய்யா நாவினால் அவர் தம் புகழினைப் பாடி, அவர் தரும் பரிசிற் பொருளால் தம் சுற்றத்தாரைப் பேணித்தம்பாலுள்ளதை வறுமையாளர்க்கு வரையாது வழங்கித் தாம் கற்று வல்ல கலைத்திறத்தாற் பெறும் பெருஞ்சிறப்பு ஒன்றினையே பொருளாக மதித்து வருந்தி முயலும் இப்புலவர் வாழ்க்கை, பிறர்க்குக் கடுகளவும் தீமை தருவதன்றாம். தாம் கற்ற கல்வித் திறத்தால் தம்முடன் மாறுபடுவார் நாணும்படி அவர்களை வென்று தலை நிமிர்ந்து நடப்பதல்லது, உலகினையாளும் பெருவேந்தர்களாகிய உங்களையொத்த பெருமிதத்தையும் உடையதாகும்,” எனக் கோவூர் கிழார் புலவர்களின் பண்பினை நெடுங்கிள்ளிக்கு அறிவுறுத்தி, இளந் தத்தனைக் காப்பாற்றுகின்றார். புலவர்களின் சான்றாண்மையினையும், அதனை நன்குணர்ந்து அவர்கள் ஆணை வழி அடங்கியொழுகிய தமிழ்வேந்தர்களின் செங்கோல் முறையினையும் மேற்காட்டிய நிகழ்ச்சிகளால் எளிதின் உய்த்துணரலாம்.

இங்ஙனம் தம் புலமைத் திறத்தால் தமிழகத்தை உய்விக்கத் தோன்றிய புலவர்களை அக்காலத் தமிழ் வேந்தர் தம் உயிரினும் சிறந்தாராக மதித்துப் போற்றினர். இவ்வாறு அரசர் பலரும் புலவர்களைப் போற்றுதற்கு அவ்வரசரும் பெரும்புலமை பெற்று விளங்கினமையே காரணமாகும். “புலம் மிக்கவரைப் புலமைதெரிதல்புலம் மிக்கவர்க்கே புலனாம்,” என்னும் வாய்மொழி இவண் கருதற்குரியதாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுட் பெரும் பாலார், பிறர்பாற் பெறும் பரிசிலை விரும்பாது, தாமே பெருஞ் செல்வர்களாகவும் நிலக்கிழவர்களாகவும் வணிகம் முதலிய பல்வேறு தொழிலினராகவும் உரிமையுடன் வாழ்ந்தனர். வாழ்க்கையில் நுகர்தற்குரிய எல்லாநலங்களும் குறைவறப்பெற்ற அப்புலவர் பெருமக்களாற் பாடப்பெற்ற செய்யுட்கள்யாவும் வையத்துள் வாழ்வாங்குவாழும் தமிழர் நல்வாழ்க்கை முறையினைத் திறம் பெற விளக்குக் திட்பமுடையனவாய்த் திகழ்கின்றன. அரசர்களாலும் பொது மக்களாலும் நன்கு மதிக்கப்பெற்ற செந்தமிழ்ப் புலவர்கள் பெருகி வாழ்தற்கு நிலைக்களமாகிய தமிழகமானது தமிழ் வளம் கெழுமிப் புலமைத் துறையிலும் நாகரிகப் பண்புகளிலும் தலைசிறந்து திகழ்ந்தது.

இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புலமை நலம் பெற்று அறிவிலும் வீரத்திலும் மேம்பட்டு விளங்கிய தமிழகத்தை இன்று நம் மனக்கண்முன்நிறுத்துவன பண்டைத்தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய செந்தமிழ் நூல்களேயாகும். இவற்றைத் தம் புலமைத் திறத்தால் ஆக்கியளித்த நல்லிசைப் புலவர்கள் தாங்கள் நேரிற் கண்ட தமிழகத்தைத் தங்கள் வழியினராகிய பிற்காலத் தமிழரும் உணர்ந்து போற்றும் முறையில் தங்கள் வாய்மொழிகளால் உருவாக்கிக் காட்டியுள்ளார்கள். இவர்களால் இயற்றப்பெற்ற சங்க நூல்களைக் கருவியாகக் கொண்டு ஆராயுங்கால் கற்பார் மனக்கண்முன்தோன்றும் தமிழகத்தின் பரப்பும், அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழரது குடி வாழ்க்கையும், ஆடவர் பெண்டிர் என்பவர்க்குரிய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்ன என முன்னர் ஒருவாறு சுருக்கமாக விளக்கப் பெற்றன. இனி, சங்க காலத்தே வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் உள்ளத்திலே எதிர்காலத் தமிழக வாழ்வினைப்பற்றி எங்ஙனம் எண்ணினார்கள் என்பதனை அவர்களாற் பாடப்பெற்ற செய்யுட்களால் உய்த்துணர்தல் வேண்டும்.

ஆசிரியர் திருவள்ளுவனார் தம் உள்ளத்திற்கருதிய எதிர்காலத் தமிழகத்தின் இயல்பு திருக்குறளில் 'நாடு' என்னும் அதிகாரத்தால் நன்கு விளக்கப் பெறுகின்றது. குறையாத உணவுப்பொருளை விளைவிக்கும் உழவர்களும், நடுவு நிலைமை வாய்ந்த சான்றோர்களும், முயற்சியுடைய பெருஞ்செல்வர்களும் ஒருங்கு வாழ்தற்கு நிலைக்களமாவதும், அளவிறந்த பொருளுடைமையால் எல்லா நாட்டின நாலும் விரும்பத் தக்கதும், கெடுதலில்லாத விளைவினை உடையதும், அரசியலுக்கு வேண்டும் வரிப்பொருளை நிரம்பக் கொடுக்கும் வளம் வாய்ந்ததும் ஆகிய நிலப்பகுதியே நாடு எனச் சிறப்பித்துரைக்கப்படுவதாம். மிக்க பசியும், நீங்காத நோயும், கலக்கத்தைத் தரும் பகைமையும் ஆகிய மூவகைத் தீமைகளும் சேராது இனிது நடப்பதே நாட்டின் சிறப்பியல்பாகும், என ஆசிரியர் திருவள்ளுவனார் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

அயல் காட்டவர் தமிழ் நாட்டிற் குடி புகுந்தமையால் தமிழகத்தில் என்றுமில்லாத கிறவேற்றுமையும் சமய வேற்றுமையுந்தோன்றி, மக்களைப் பல்வேறு குழுவினராகப் பிரித்து, மாறுபாட்டினை விளைவித்தன. அவற்ருல் தமிழ்மக்களின் அரசியல் நெறியைச் சிதைக்கும் உட்பகை களும் நாளடைவிற்ருேன்றலாயின. நாட்டில் மக்களைத் துன்புறுத்தும் குறும்பர்களாகிய கொடியவர்களும் ஆங் காங்கே புகுந்து தீமை விளக்கத் தொடங்கினர்கள். இத்தகைய இடர்நிலையினை யுணர்ந்த ஆசிரியர் இம்மூவகைத் தீமைகளையும் அடியோடு விலக்கிய நாடே மக்கள் அமைதி யாக வாழ்தற்கேற்ற ஆக்கமளிப்பதென நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திப்போந்தார்."

பசியும் பிணியும் பகையும் நீங்கி மக்கள் இசை பெருக இன்புற்றுவாழும் இடமாக இத் தமிழகம் அமைய வேண்டுமென்பதே பண்டைத் தமிழ் புலவர்களின் உட்கோளாகும். இக்கருத்தினால், அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட எண்ணங்கள் வருங்காலத் தமிழர் வாழ்வினை

  • 'பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங்

கொல்குறும்பும் இல்லது நாடு.'-- குறள்.735. இனிமையும் எழிலும் பொருந்தியதாக உருவாக்கும் ஆற்றலுடையனவாய்த் திகழ்கின்றன.

நல்லறிவுடைய புலவர்கள், தம் புலமையின் பயனாகிய அருட்பண்பினையுடையவர்களாதலால், இந்நாட்டிற் பசியால் வருந்தும் பிறர் துயர்க்கு இரங்கி, அவர்தம் பசிநோயினை அகற்றுதற்குரிய நெறி முறைகளைத் தேர்ந்துணர்ந்தார்கள்; வறுமையால் வருந்துவாரது பசியினைத் தணித்தல் செல்வமுடையார் கடன் எனத் தெளிய உணர்ந்தார்கள். “இவ்வுலகத்தைத் தனக்கேயுரியதாகக் கொண்டு ஆட்சி புரியும் பெருவேந்தர்க்கும், இரவும் பகலும் விழித்திருந்து விலங்கு முதலியவற்றை வேட்டத்தாற் கொன்று திரியும் கல்வியில்லாத ஏழை வேடனுக்கும், உண்ணப்படும் உணவு நாழியளவினதே; உடுக்கப்படும் உடைகள் இரண்டே; பிறநுகர்ச்சிகளும் ஒரு தன்மையனவே; ஆதலால், செல்வமுடையார் செல்வத்தாற்பெறும் பயனாவது, வறியார்க்கு மனம் விரும்பிக் கொடுத்தலேயாம். 'செல்வத்தை யாமேநுகர்ந்து மகிழ்வேம்,' எனக் கருதிச், செல்வர்கள் ஈயாது. வாழ்வார்களானால், அதனால் அவர்களுக்கு விளையும் தவறுகள் மிகப்பலவாம்,” என நக்கீரனார் என்னும் புலவர் பெருமான் செல்வர்களுக்கு அறிவுறுத்துகின்றார்,

"வறியாரது பசியை மக்கள் அறம் நோக்கித் தீர்ப்பாராக! பொருள் பெற்றான் ஒருவன் அப்பொருளைச் சேமித்துவைக்குமிடம் அவ்வறச் செயலேயாகும்,” என்பர் தெய்வப்புலவர்.

மக்கள் தங்களுக்கு வகுக்கப்பட்ட வாழ்நாளளவும் நோயின்றி இன்புற்று வாழவேண்டுமெனக்கருதிய தமிழ்ச் சான்றோர், உடலிற் பிணிதோன்றாமைக்குரிய நல்லொழுக்க முறைகளையும், உடற்பிணியை அகற்ற வல்ல மருத்துவ முறைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ் மக்களது நல் வாழ்க்கையினை வளர்த்து வந்தார்கள். 'மருந்து' என்ற அதிகாரத்தினhல் மக்கள் நோயின்றி நீடு வாழ்தற்குரிய இயற்கை முறைகளைப் பொய்யில்புலவர் நன்கு புலப்படுத்துகின்றாார், 'பல்யானைச் செல்கெழுகுட்டுவன்’ என்னும் சேர மன்னன், அரசியல் நெறிக்குத் தடையாகிய வெகுளி, காமம், அச்சம், பொய் முதலிய தீமைகளை அகற்றி, மாந்தர் ஒருவரையொருவர் நலியாமலும் பிறருடைய பொருளை விரும்பாமலும் தூய அறிவினையுடைய சான்றோர் செம்மை நெறியில் நின்று தம் வாழ்க்கைத் துணையைப் பிரியாமல் தம் இல்லிருந்து நல்லறஞ் செய்து முதிர்ந்த யாக்கையுடன் நோயின்றி வாழ ஆட்சி புரிந்தான்,' எனப் பாலைக் கெளதமனார் என்பார் பதிற்றுப்பத்திற் பாராட்டுகின்றார். அரசர்கள் முறை தவறாது ஆட்சி புரிதலால் வேண்டும்பொழுது மழை பெய்ய, நோயும் பசியும் நீங்கி நாடு பொலிவு பெற்றது எனப் புலவர் பலரும் பாராட்டியுரைக்கும் பாடல்கள் அக்காலத் தமிழகத்தின் அரசியற் செம்மையினை நன்கு விளக்குவனவாம்.

வேந்தர்களது போர்த்திறமையைப் பாராட்டப்போந்த புலவர்கள், அப்பாராட்டுதலுடன் போரினாற் பகைவர் நாடு பாழாயின செய்தியையும் எடுத்துக் கூறிவருந்துகின்றார்கள். வெற்றியால் மகிழ்ந்த வேந்தருள்ளத்தில் பகைவர் நாட்டின்பால் அருளினைத் தோற்றுவிக்கும் பொருளுடையனவாகப் புலவர்கள் பாடிய செய்யுட்கள், புலவர்களின் இரக்கவுணர்ச்சியினை இனிது விளக்குவனவாம். போரின்றி அமைதியாக வாழும் ஆட்சி முறையின் இனிமையினைத் தமிழ்ப் புலவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்  பொறையின் ஆட்சியினைக் குறுங்கோழியூர் கிழார் பின் வருமாறு பாராட்டுகின்றார்:

'நினது குடை நிழற்கீழ் வாழும் மக்கள் சோறு சமைக்கும் நெருப்புடனே கதிரவனின் வெயில் வெம்மையைத் தவிர, வேறு வெம்மையை (கொடுந் துன்பத்தை) அறியார்; வான வில்லையன்றிப் பகைவருடைய கொலை வில்லைப் பார்த்தறியார்; உழவுத் தொழிற்குரிய கலப்பையைத் தவிர, வேறு படைக்கலங்களைக் கண்டறியார். நின்னாட்டில் கருவுற்ற மகளிர் வேட்கையினால் விரும்பியுண்பதல்லது பகைவரால் உண்ணப்படாத மண்ணினையுடையாய் நீ' என அப்புலவர் சேரமானைப் பாராட்டுகின்றார். "மாந்தரஞ்சேரல் பாதுகாத்த நாடு அமைதியான இன்ப நுகர்ச்சியால் தேவருலகத்தையொக்கும்," என மற்றொரு பாடலால் அம்மன்னன் போற்றப்படுவதனை நோக்கினால், அவனாட்சியின் அமைதி நிலை நன்கு புலனாம்.

போரின்றி அமைதியாக வாழ்தற்குரிய சூழ் நிலையினையும், அதற்குரிய அறிவாற்றல்களையும் வருங்காலத் தமிழ் மக்கள் உண்டாக்கிக்கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தினைப் பழந்தமிழ்ப் புலவர் இடை விடாது ஆராய்ந்து அமைதி பெற முயன்றமை மேற்காட்டிய குறிப்புக்களால் நன்கு துணியப்படும்.

பழந் தமிழ்ப் புலவர்கள், ஒருவரோடொருவர் இகலின்றிக் கலந்து வாழ்ந்தார்கள் ; தாங்கள் பெற்ற பெருஞ்செல்வத்தை ஏனைய கலைஞர்களும் பெற்று மகிழ்தல் கருதி, அவர்களை வள்ளல்களிடம் வழிப்படுத்தினார்கள். இசைத் தமிழில் வல்ல பாணர்களையும், நாடகத் தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரையும், தம்மை ஆதரித்த வள்ளல்களிடம் வழிப்படுத்தி வாழ்வித்த செயுட்கள் 'ஆற்றுப்படை' என்ற பெயரால் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. பரிசில் பெற வரும் கலைவாணர்கள் தங்கள் கல்வித் திறத்தில் கிறைந்த ஆற்றல் பெற்றவர்களாயினும், அன்றி அவ்வாற்றல் பெறாதவர்களாயினும், அவர்தம் குறைபாடுகளே மறைத்து, அவர்கள் அறியாத கலைத்திறத்தில் வேண்டும் நுட்பங்களே அவர்களுக்கு முன்னரே அறிவித்து நன்றாக நடத்தும் பண்பாடு தமிழ்ப் புலவர்பால் நிரம்ப அமைந்திருந்தது. பக்கத்தார் இயல்பறிந்து அவர்க்குத் தீங்கு செய்யாது நன்மையே புரிந்தொழுகும் பண்புடைமையே புலவர்களால் உருவாக்கப் பெற்ற தமிழகத்தின் நாகரிக வாழ்வாகும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பியவண்ணம் நனி நாகரிக வாழ்வினை எதிர்காலத் தமிழ் மக்கள் எய்தி இன்புறுவார்களாக!


  1. 1. புறம் 160.
  2. 1. புறம் 163.