உள்ளடக்கத்துக்குச் செல்

சங்ககாலத் தமிழ் மக்கள்-3/தமிழர் தொழில் நிலை

விக்கிமூலம் இலிருந்து



VI
தமிழர் தொழில் நிலை

ஒரு நாட்டின் கல்வி கிலை உயருமானால், அதன் பயனாகப் பல்வேறு தொழில்களும் திருத்தம் பெற்று வளர்ச்சியுறுதல் எளிதாகும். கல்வியின் பயனாக அறிவும், அவ்வறிவின் பயனாகத் தொழில்களும் வளர்ச்சியடைதலே வாழ்க்கையின் வளர்ச்சி நிலையாகும்.

தமிழர் தம் அறிவின் திறத்தால் கண்டுணர்த்திய பல்வேறு கலைகள் இவையென முன்னர்க் குறிக்கப் பெற்றன.

வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது உணவு. நிலமும் நீருங்கூடிய நிலையிலேதான் இவ்வுணவினை விளைவிக்க முடியும். நிலத்தை நன்றாக உழுது புழுதியாக்கி, நீர் பாய்ச்சி, நெல் முதலியவற்றை விளைவிக்கும் பயிர்த் தொழிலை மேற்கொள்வார் உழவர் என வழங்கப் பெறுவர். 'உழத்தல்' என்பது இடை விடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக் குளவாகுக் தொல்லைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, நெற்றி வேர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப் பயிர்த் தொழிலுக்கு வேண்டப்படுவ தாகலின், இத்தொழிலை உழவு என்ற சொல்லால் பண்டை யோர் வழங்கினர். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் எல்லாத் தொழில்களிலும் இவ்வுழவே தலைச்சிறந்த தொழில் என்பது அறிஞர் கொள்கை.

தமிழர் எல்லாத் தொழிலிலும் இவ்வுழவினையே தலையாக வைத்துச் சிறப்பித்தனர். உலக மக்கள் தாங்கள் விரும்பிய பல்வேறுதொழில்களையுஞ்செய்து பொருளீட்டிஞர்களாயினும், தங்கள் பசியினைத் தீர்த்தற்குரிய உணவினைப் பெறுதல் வேண்டி உழவரது கையினையே எதிர் பார்த்து நிற்பர். மெய்ம்முயற்சியுடைய இவ்வுழவினைச் செய்து உணவினை உண்டாக்கும் ஆற்றலின்றிப் பிற தொழிலை மேற்கொள்வார் எல்லாரையும் உணவளித்துப் பாதுகாத்தலால், உலகியல் வாழ்வாகிய தேர்க்கு அச்சாணி போன்று உதவி செய்பவர் இவ்வுழவரேயாவர். யாவரும் பசி நீங்க உண்ணும்படி உழுதலைச்செய்து, அதனால் தாமும் உண்டு, பிறர் கையை எதிர்பாராது உரிமையுணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்தும் திறமுடையார் உழவரே. ஏனைய தொழிலாளரெல்லாம் பிறரையடுத்து அவர்தம் ஆதரவு பெற்று வாழ வேண்டிய எளிமை நிலையினரே என்பது அறிஞர் துணிபு. பிறர்பாற் கையேந்தி நில்லாத பெருமையும், இரப்பார்க்கு இல்லையென்னாது வழங்கும் வண்மையும் உழவர்க்கு இயல்பாக அமைந்த பண்புகளாகும்.

குறையாத விளையுளைச் செய்யும் உழவர்கள் வாழும் நிலப் பகுதியே நாடெனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் முயற்சியால் விளைந்த நெற்கதிர் நீழலில் வாழ்வாராகிய உழவர், தாம் விளைத்துக் கொடுத்த உணவின் ஆற்றலால் பல வேந்தர் ஆட்சியிலமைந்த நிலப்பரப்பு முழுவதையும் தம் வேந்தன் ஆட்சியில் அடங்கச் செய்வர் என்பர்.

'பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்,' என இளங்கோவடிகள் சோழநாட்டு உழவர்களைப் பாராட்டுகின்றார். நீரின் துணைகொண்டு தொழில் செய்வார் உழவராதலின், அவர்களைப் 'பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்' என அடிகள் சிறப்பித்தார். பசியால் வருந்தியிரக்கும் எளியாருடைய சுற்றத்தையும், 

நாட்டினைக் காக்கும் அரசரது வெற்றியையும், தம் உழவினிடத்தே ஒரு சேர விளைவிக்குத் திறமையுடையவர் உழவராகலின், அவர்கள் வாழும் ஊர்களைப் 'பழவிறல் ஊர்கள்' எனச் சேர முனிவர் பாராட்டிப் போற்றினார். சங்ககாலத்தில் வாழ்ந்த உழவர், நிலத்தினைத் தம்முடையதாகக் கொண்ட காணியாளராய் விளங்கினமையால், எப்பொழுது பார்த்தாலும் தமக்குரிய நிலத்தினைப் பண்படுத்துந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பலம் நிறையுள்ள மண்ணானது காற்பலம் நிறையுள்ளதாகும்படி நிலத்தினை ஆழ உழுது புழுதியாக்கினால், ஒரு கைப்பிடி எருக்கூட நிலத்திற்கு இட வேண்டாமல், உணவுப் பொருள்கள் நிறைய விளைவனவாம் என்பதைப் பண்டைத் தமிழர் கண்டுணர்ந்தனர். ஆழ உழுவதோடமையாமல், விளைவுக்கு ஆக்கந்தரும் எருவினைக் கண்டுணர்ந்து அதனை நிலத்திற்கு இட்டனர். விளை நிலத்திலே பயிருக்குத் தடையாய் வளர்ந்த களைகளை அவ்வப்பொழுது களைந்தெறிந்தனர். சுருங்கக்கூறினால், பயிர்த்தொழிற்குரிய பல வகை நுட்பங்களையும் தம் தொழிற் பயிற்சியால் கண்டு பயன்படுத்திய பெருமை நம் தமிழ் நாட்டு உழவர்களுக்கு உரியதெனக் கூறலாம். நாட்டில் மக்கள் தொகை பெருகப் பெருகத் தமக்குள்ள சிறிய நிலத்திலே நிறைந்த உணவினை விளைக்க வேண்டிய பொறுப்பு உழவர்களுக்கு உரியதாயிற்று. எனவே, அவர்கள் தாங்கள் தொன்றுதொட்டுப் பயின்று வரும் அத்தொழிலை மேன்மேலும் திருத்தமுற வளர்த்து வரத் தொடங்கினார்கள். அதனால், ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கல நெல் விளைதற்கேற்ற வாய்ப்பு உண்டாயிற்று. தாழ்ந்த உணர்வுடைய விலங்குகளாகிய எருதுகளை உழவிற் பழக்கிப் பயிர் செய்து அவற்றுக்கு வேண்டும் வைக்கோல் முதலிய உணவினைத் தந்து

பாதுகாக்கும் உழவர்களைப் 'பகடு புறந்தருநர்' எனப் புலவர் பெருமக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இங்கனம் தன்னலங் கருதாது பிறர்க்கு உதவி செய்தல் கருதி இடைவிடாது உழைக்கும் பண்பு இவ்வுழவர்களிடம் சிறப்பாகக் காணப்படுதல் பற்றி இவர்களை 'வேளாளர்' என்ற சொல்லாற் சான்றோர் வழங்கிப் போற்றினர் என்க (வேளாளர் - பிறர்க்கு உதவுபவர். வேளாண்மை - உபகாரம்.)

மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவற்றுள் உடையும் ஒன்றாகும். 'நாணுடைமை மாந்தர்சிறப்பு' என்றார் வள்ளுவர். விலங்குகளைப்போலத் திரியாமல், அற்றம் மறைத்தற்குரிய உடையினையுடுத்து மானத்துடன் வாழும் முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். நாகரிகம் வளராத மிகப் பழங்காலத்தே தழையினையும், மான், புலி முதலியவற்றின் தோலினையும் உடுத்து வாழ்ந்த மக்கள், தங்களுடைய நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று ஆடை நெய்து உடுத்துக் கொண்ட செயல், நாகரிகத்தின் தனிச்சிறப்பாகும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்கள் இந்நெசவுத் தொழிலினைக் கண்டுணர்த்து, இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பது, பழைய தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். மகளிர் பருத்திப் பஞ்சினைக் கடைந்து செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்குந் தொழிலிற் கைத்திறம் பெற்று விளங்கினார்கள். அவர்கள் நூற்று இழைத்துத் தந்த நூலைப் பாவாக விரித்துத் தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் கடமை ஆடவர் தொழிலாய் அமைந்தது. பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், எலி மயிராலும் நுண்ணிய ஆடை நெய்பவர்கள் தமிழ் நாட்டுப் பேரூர்களில் ஆங்காங்கே



நிலைபெற்றுத் தங்கள் தொழிற்றிறத்தைப் பெருக்கினார்கள். இவ்வாறு நெசவுத் தொழிலைச் செய்தவர் 'காருகர்' என்ற பெயரால் அக்காலத்து வழங்கப்பெற்றனர். இக்காருக வினைத்தொழில் மிகவும் நுண்ணுணர்வுடன் செய்தற்குரியதாதலின், இதனை 'நுண்வினை' என இளங்கோவடிகள் சிறப்பித்துள்ளார். அக்காலத்து நன்றாகத் துாய்மை செய்யப்பெற்ற மெல்லிய நூலாலும் பட்டினாலும் நெய்யப் பெற்ற ஆடைகள் ஆவியைப் போன்ற மென்மையும், கண்ணினால் நோக்கி இழைகளைப் பிரித்துணர முடியாத செறிவும், காண்பார் கண் கவரும் பூங்கரைகளும், ஒளியும். உடையனவாய், எல்லாராலும் விரும்பப்பெறும் அழகினைப் பெற்றுத் திகழ்ந்தமையால், 'நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை', 'ஆவி யன்ன அவிர்நூற்கலிங்கம்', 'காம்பு சோலித்தன்ன அறுவை' எனப் புலவர் பலரும் பாராட்டியுள்ளனர். தறியில் நெய்து அறுக்கப்பட்டமையால், 'அறுவை' என்ற பெயர் உடைக்கு உரியதாயிற்று. நெய்த உடையினைச் சுருக்கமின்றி நன்றாக மடித்து விற்று வந்தமையால். அதற்கு 'மடி' என்ற பெயரும் வழங்குவதாயிற்று.

நுண்ணிய நூலினாலும் பட்டினாலும் திறம்பட நெய்யப்பெற்ற பல்வேறு புடைவைகளை விற்றற்குரிய கடை வீதிகள் பேரூர்தோறும் அமைந்திருந்தன. 'அறுவைவீதி' எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்படுவது இத்தகைய வீதியேயாகும். நம் தமிழ் நாட்டில் நெய்த நுண்ணிய ஆடையினை வேற்றுநாட்டு மக்கள் விரும்பி வாங்கி உடுத்து மகிழ்ந்தார்கள் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் உணர்ந்த உண்மையாகும்.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையாகத் தம்பால் உள்ள பொருள்களைக் கொடுத்து இல்லாத பொருளைப்



பிறர்பால் பெறுதல் 'பண்டமாற்று என வழங்கப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள், தத்தம் நிலத்திலுள்ள பொருளைக் கொண்டு சென்று மற்றை நிலங்களில் உள்ள உணவு முதலியவற்றைப் பண்டமாற்றுமுறையிற் பெற்று வந்தமை சங்க இலக்கியங்களிற் பேசப்படுகின்றது. இப்பண்ட மாற்று முறையே 'வாணிகம்' என ஒரு தனித் தொழிலாக வளர்ச்சி பெறுவதாயிற்று. கடற்கரையில் வாழ்ந்த பரதவர்கள், தங்கள் நிலத்திற்கிடைத்த மீன், உப்பு முதலியவற்றை மருத நிலத்தார் முதலியவர்க்குக் கொடுத்து, அவர்களிடமிருந்து நெல் முதலியன பெற்றார்கள். ஒரு நிலத்திலுள்ள பொருளை மற்றொரு நிலத்திற்குக் கொண்டு செல்லும் வணிகர்கள், அப்பொருள்களை வண்டிகளிலும், எருது முதலியவற்றின் மேலும் ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்று விற்று வருவதுண்டு. இவர்கள் இடை வழியிற் கள்வர் முதலியவரால் நிகழும் இடையூறுகளை எதிர்த்தல் கருதிப் போரிற் பயின்ற வீரர்களைத் தங்களுக்கு வழித்துணையாக அழைத்துச் செல்வது வழக்கம்.



வணிகர்க்குத் துணையாகச் செல்லும் வீரர் திரளினைச் 'சாத்து' என வழங்குவர். அதனை நடத்திச் செல்லும் தலைவன் 'சாத்தன்' என வழங்கப் பெறுவன். இவ்வாறு உள் நாட்டின் படைத்துணை கொண்டு வணிகத் தொழிலை வளர்த்த தமிழ்நாட்டு வணிகர்கள், கடல் கடந்து வெளி நாட்டுடன் தொடர்பு கொண்டு வாணிகத் தொழிலை வளம்படுத்தினார்கள். இவர்களுடைய நன்முயற்சியால் கடலிற் காற்றின் பருவநிலையுணர்ந்து நாவாய் செலுத்தும் தொழிலில் தமிழ் நாடு முதலிடம் பெற்று விளங்கியது. புகார் நகரத்து வணிகர்கள் தரை வழியாகவும், நாவாயின்



துணைகொண்டு கடல் வழியாகவும் பெரும்பொருளை ஈட்டித் தருதலால், எல்லாத் தேயங்களிலும் உள்ள பொருள்கள் ஒருங்கு சேர்ந்தாற்போன்ற பண்டங்கள் உலகம் முழுவதும் வந்தாலும் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாத வண்ணம் நிறைந்திருந்தன எனச் சிலப்பதிகாரமும், பட்டினப்பாலையும் குறிப்பிடுகின்றன. இங்ஙனம் தங்கள் வினைத்திறத்தால் நாடெங்கும் சென்று வாணிகம் புரிந்து பெரும்பொருள் தொகுத்த வணிகர்கள் பெருஞ் செல்வத்தால் அரசரோடு ஒப்ப வைத்து மதிக்கும் பெருஞ் சிறப்பினைப் பெற்று விளங்கினார்கள். 'மன்னர் பின்னோர்' என அரசரையடுத்துப் பாராட்டுஞ்சிறப்புத் தமிழ் நாட்டு வணிகர்களுக்கு உரியதாயிற்று.

மக்கள் வாழ்க்கைக்கு உணவு, உடையினைப் போன்று சிறப்பாக வேண்டப்படுவது உறையுள் ஆகும். மழை, பனி, வெயில் என்பவற்றால் உளவாகும் இடர்களை விலக்கி, இன்புற்று வாழ்தற்குரிய வசதியினைத் தருவது இவ்வுறையுளேயாகும். வைக்கோல் முதலிய புல்லால் வேயப்பட்ட சிறு குடில் முதலாக, அண்ணாந்து நோக்க இயலாதபடி உயர்ந்து தோற்றும் எழுநிலை மாடம் ஈறாகப் பல திறப்பட்ட கட்டிடங்களையும் திறம்பட அமைக்கும் கட்டிடக் தொழிலிற் சங்ககாலத் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினார்கள். நக்கீரனார் என்னும் புலவர் தாம் பாடிய நெடுநல் வாடை என்னும் பாட்டில் கட்டிட நூலிலை நன்குணர்ந்த சிற்பிகள் நிலத்தினைக் கயிறிட்டு அளந்து பெரும்பெயர் மன்னர்க்கு ஏற்ப மாளிகையினை அமைத்த தொழிற் திறத்தை விரிவாக விளக்குகின்றார். மலையை நடுவிலே திறந்தாற் போன்ற உயர்ந்த கோபுர வாயில்களும், மக்கள் பருவநிலைக்கேற்ப இன்பம் நுகர்தற்குரிய நிலா முற்றம்.

வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி முதலியனவும் தமிழ்நாட்டுக் கம்மியர்களால் சிறப்பாக அமைக்கப்பட்டன. கட்டிடத் தொழிலுக்கு இன்றியமையாத தொழிலாளர், தச்சர் கொல்லர் முதலியவராவர். இவர்களுடைய உதவியின்றி மனை வகுத்தல் இயலாத செயலாம். மண்ணினாற்சுவரை எழுப்பிய செயலே விடுத்துச் சுட்ட செங்கற்களைக் கொண்டு செம்பினாற் செய்தாற் போன்ற திண்ணிய சுவர்களை அக்காலத் தொழிலாளர் எழுப்பிய தொழிற்றிறம் பெரிதும் பாராட்டுதற்குரியதொன்றாம்

.

மரத்தினை அறுத்து வீடமைத்தற்கும், வண்டி தேர் முதலியன செய்தற்கும் வழி கண்ட பெருமை தச்சர் என்னுந் தொழிலாளர்க்கே உரியதாகும், மக்கள் சுமந்து செல்லுதற்குரிய பாரத்தை எளிதிலே உருட்டி இழுத்துச் செல்லுதற்கேற்ற சகடையை அமைத்துதவிய திறம் தச்சுத் தொழிலின் நுண்ணுணர்வாகும். மக்கள் விரைந்து ஊர்ந்து செல்லுதற்குரிய தேர் முதலிய ஊர்திகளை உண்டாக்கியது. இத்தகைய தச்சுத் தொழிலேயாகும். நாளொன்றில் எட்டுத் தேர்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற தச்சர்கள் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். தச்சச் சிறுவர்கள் தங்கள் கையிலுள்ள உளி முதலிய கருவியினைக் கொண்டு காட்டிலுள்ள நல்ல மரங்களைச் செதுக்கி மக்கள் கையாளுதற்குரிய பொருள்களை இயற்றி வாழ்வு நடத்தினார்கள். வெண்கலம், செம்பு, இரும்பு முதலிய உலோகங்களையுருக்குந் திறம் பெற்று, அவற்றால் மக்கள் பயன் படுத்துதற்குரிய பல்வகைப் பொருள்களையும் படைக் கலங்களையும் செய்ய வல்ல வன்தொழிலாளர்கள் ஊர் தோறும் தங்கித் தங்களுக்குரிய தொழில் வகைகளைப் பெருக்கி வந்தார்கள். வெண்கலத்தையுருக்கிக் கலங்கள்

 முதலியன செய்பவர் 'கஞ்சகாரர்’ என வழங்கப்பட்டனர். செம்பினால் கலம் செய்வார் 'செம்பு கொட்டிகள்' எனப்படுவர். இரும்பினைக் காய்ச்சி அடித்து வலிய தொழில் செய்வார் 'கொல்லர்'என வழங்கப்பட்டனர். கண் கவரும் ஒவியங்களை எழுதவல்லவர் 'கண்ணுள் வினைஞர்' எனக் குறிக்கப்பட்டனர். ஒவியத்தினை எழுதுதற்குரிய பல நிறங்களும், எழுதுகோலும், இலக்கியங்களிற் பேசப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் புராண வரலாறுகளைக் குறித்த ஒவியங்கள் பல எழுதப்பட்ட சித்திரமண்டபமொன்று 'எழுதெழில் அம்பலம்' என்ற பெயரால் பரிபாடலிற் பாராட்டப் பெறுகின்றது. கதையினாலே பதுமை முதலியன செய்து வாழ்பவர் ‘மண்ணிட்டாளர்' என வழங்கப்பெற்றனர். அருமைப் பாடுடைய வினைத்திறம் அமையப் பொன்னினால் பலவகை அணிகலங்களைச் செய்பவர் ''பொற்கொல்லர்’ எனப்படுபவர். பொன்னிலே நல்ல மணிகளைப் பதிக்கும் இயல்பறிந்து அணிகலனமைக்கும் இரத்தினப் பணித் தட்டார்களும், தமிழ் நாட்டிற் பெருக வாழ்ந்தார்கள். திருமணி குயிற்றுநர் என்பார் முத்துக் கோப்பவராவர். ஆடையினால் மெய்ப்பை (சட்டை) முதலாயினவற்றை அழகு பெறத் தைக்குத் தொழில் வல்லவர் 'துன்னகாரர்' என வழங்கப் பெற்றனர். தோலினாலே செருப்புத் தைத்தலும் கட்டில் முதலியன பின்னுதலும் ஆகிய தொழிலைச் செய்தவர் 'தோலின் துன்னர்’ என்ற பெயரால் வழங்கப்பட்டனர். துணியினாலும், கெட்டியினாலும் பறவை, பூ, வாடா மாலை, கொண்டை முதலிய கண்கவர் பொருள்களைச் செய்யும் வனப்பமை சிறுதொழில்கள் தமிழ் மக்களால் ஆதரித்து வளர்க்கப் பெற்றன. 

துளைக்கருவியாகிய குழலினாலும், நரம்புக் கருவியாகிய யாழினாலும் ஏழிசையினையும் வழுவற இசைக்க வல்ல குழலர், பாணர் முதலிய இசைத் தொழிலாளர் தம் நுண் புலமையினால் இசைத் தமிழை வளர்த்து வந்தனர். அவர்களால் வளர்க்கப்பெற்ற இசைக்கலை மக்களுடைய மனமாசு கழுவி உடல் நோயினையும் அகற்றவல்ல திறம் பெற்று விளங்கியது. 'போரிற்புண்பட்ட வீரர்களின் நோய் நீங்க, அவர்தம் மனைவிமார் இசைபாடினர், எனப் புற நானூற்றிற் குறிக்கப்பெறும் செய்தி இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும். இசைத் தொழிலாளராகிய பாணர்களைப் போன்று, நாடகக் கலையில் வல்ல பொருநர், கூத்தர் விறலியர் என்பாரும் தத்தமக்குரிய கலைத்திறத்தினை மேன் மேலும் நயம் பெற வளர்த்து வந்தனர். இவர்களால் வளர்க்கப் பெற்ற இசைநாடகக் கலைகள் இவர்தம் பரிசில் வாழ்க்கைக்குரிய தொழில்களாகவே பிற்காலத்தில் கருதப் படுவனவாயின. பொன்னும் மணியும் என்பவற்றின் இயல்புணர வல்லவர்களும், சங்கினையறுத்து வளையல் செய்வாரும், நறுமணச் சுண்ணங்களே அமைக்க வல்லவர்களும், மாலை தொடுத்தல், பூ, வெற்றிலே முதலியன விற்றல் முதலிய தொழில்களில் ஈடுபட்டாரும், இன்சுவைப்பண்ணியம் (பலகாரம்) செய்து விற்கும் பெண்டிர்களும், கூலம் பகர்வாரும் என எண்ணற்ற தொழிலாளர்கள் சங்க இலக்கியுங்களிற் குறிக்கப்படுகின்றார்கள்.

அக்காலத் தமிழ் மக்கள் தங்கள் பிழைப்புக்கென ஏதாவதொரு தொழிலினைத் தங்களுக்குரியதாக மேற் கொண்டு உழைத்து வந்தார்கள் என்பது பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களில் குறிக்கப்பட்ட தலைநகரங்களின் செயல் முறைகளால் .



நன்குணரப்படும். மூவேந்தர்களின் பேரூர்களில் பலவகைத் தொழிலாளரும் ஒருங்கிருந்து தத்தம் தொழிற்றிறத்தில் கருத்துடைய ராய்ச் சோம்பலின்றி வினை செய்தனர்.

மனைக்கண் வாழும் பெண்டிர் தமக்குரிய குடும்பக் கடமைகளை முடித்து ஒய்வுபெற்ற பொழுது, ஒவியம் வரைதல், தடுக்கு முதலியன பின்னுதல் முதலாகத் தாம் கற்றறிந்த கவின் வினைகளுள் ஏதாவதொன்றனை மேற் கொண்டு செய்தனர்.

கோவலன் கண்ணகியாருடன் மாதரி என்னும் ஆயர் முதுமகள் வீட்டில் தங்கிய பொழுது, கண்ணகியார் நாட் காலையில் எழுந்து அடிசில் சமைத்துத் தம் கணவனை அன்புடன் உபசரித்து, பனையோலையினால் அழகாகப் பின்னப் பெற்ற தவிசில் அவனையமரச் செய்து உணவு படைக்கின்றார், உள்ளத்தையுருக்கும் இவ்வழகிய காட்சியினை விளக்க வந்த இளங்கோவடிகள், பொன்னினும் மணியினும் இழைக்கப்பெற்ற உயர்ந்த தவிசில் அமரும் செல்வச் சிறப்பமைந்த கோவலனுக்கு அன்று ஆயர் பாடியில் தவிசாகப் பயன்பட்ட அழகிய பனையோலைத் தடுக்கினைத் "தாலப் புல்லின் வால்வெண்டோட்டுக் கைவினை மகடூஉகவின் பெறப் புனைந்த செய்வினத் தவிசு" என வியந்து பாராட்டுகின்றார், "தாலப்பனையின் வெள்ளிய குருத்தோலையினாலே கண் கவரும் முறைமையிற் பின்னும் கைத் திறமுடைய மகளொருத்தி அழகுபெறப் புனைந்து செய்த சித்திர வேலைப்பாடமைந்த தவிசு" என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். ஒலையால் பின்னப்படும் தடுக்கு எளிய பொருளாயினும், அதன் கண் அமைந்த அழகிய வேலைப்பாடு அரச முனிவராகிய அடிகள் உள்ளத்தையும் கவர்ந்து நின்ற தன்மையினை இங்கே காண்கின்றோம். எனவே, எளிய தொழிலாயினும், அதனை வனப்புறச்

 செய்வதனால் பாராட்டத்தகும் சிறப்புடையதாகும் என்பது இனிது பெறப்படும். உயிர் வாழ்க்கைக்கு ஆக்கந்தரும் சமையற்றொழில் அக்காலத்து 'அட்டிற்றொழில்’என வழங்கப்பட்டது. இத் தொழிலில் தமிழர் நிரம்பிய தேர்ச்சியுடையராய்ச் சுவைக் கினிய அடிசிலை ஆக்கி விருந்தளித்தனர் என்பது சங்கச் செய்யுட்களிற் பாராட்டப்படும் பல்வேறு சுவைமிக்க உணவின் திறத்தால் இனிது புலனாம், புலால் கலந்த உணவினை சமைத்தலும், புலால் கலவா உணவினை சமைத்தலும் எனச் சமையல் முறை இருவகையாகக் கொள்ளப்பட்டது. இரும்பு முதலிய உலோகங்களைக் காய்ச்சியுருக்கும் தொழிற்றிறம் பெற்ற தமிழ் வினைஞர்கள், கரும்பின் எந்திரம் கத்தரிகை முதலிய வாழ்க்கைக்கு வேண்டும் சிறு தொழில் புரியும் பொறிகளையும், அரண்களிலே பகைவரை வருத்துதற்குரிய பொறிகள் சிலவற்றையும் தங்கள் நுண்ணுணர்வால் ஆக்கியமைத்தமை சங்க நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆடையினை நன்றாக ஒலித்துக் கஞ்சி பூசி மடித்துக் கொடுக்கும் தொழிலை அக்காலத்து வண்ணார் மகளிர் செய்து வந்துள்ளனர். உணவு சமைத்தற்குரிய கலங்களை மண்ணினால் வளையும் புத்தி நுட்பத்தினையுணர்ந்தவர் வேட்கோவர் ஆகிய குயவராவர். செய்தற்கரிய இத்தொழிலில் வல்ல சிறுவர்களை 'நன்மதி வேட்கோச்சிறார்' என ஒரு புலவர் பாராட்டுகின்றார். இதுகாறும் கூறியவாற்றால் சங்ககாலத் தமிழ் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் வாழ்க்கை வளர்ச்சிக்கு இன்றியமையாத பல்வேறு தொழில்களையும் கண்டு வளர்த்து வந்தார்கள் என்பது ஒருவாறு விளங்குதல் காணலாம்.