உள்ளடக்கத்துக்குச் செல்

சங்ககாலத் தமிழ் மக்கள்-3/தமிழர் கல்வி நிலை

விக்கிமூலம் இலிருந்து

V
தமிழர் கல்வி நிலை


கல்வியென்பது மக்கள் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மனப் பயிற்சியாகும். உட்கருவியாகிய மனமும் கண் முதலிய புறக் கருவிகளும் ஒன்றி நின்று இவ்வுலகியற் பொருள்களை நோக்கியுணரும் இப்பயிற்சி முறையினாலேயே மக்களது அறிவு வளர்ச்சியடைகின்றது.

கல்வி வளர்ச்சிக்கு மொழியின் துணையே இன்றியமையாததாகும். மக்கள் தாங்கள் எண்ணிய கருத்துக்களை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லுதற்கும், பிறர் எண்ணங்களைத் தாங்கள் கேட்டறிதற்கும் அவர்களாற் பேசப்படும் தாய்மொழியே இடை நின்று துணை செய்வதாம். ஆகவே, தமிழ் முன்னோர்களால் கல்வியெனக் குறிக்கப்பட்டது, அவர்தம் தாய்மொழி வழியாகப் பயிலும் தமிழ்க் கல்வியே என்பது புலனாம்.

மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றாத நிலைக் களமாய் விளங்குவது அவர்கள் பேசும் மொழியேயாகும். அதன் உதவியினாலேயே அவர்தம் கல்வி உருவாகின்றது. மொழியின் துணையின்றிக் கல்வியை வளர்த்தல் என்பது இயலாத செயலாம். இவ்வுண்மையை நன்குணர்ந்த தமிழ் முன்னோர், தம் தாய் மொழியாகிய தமிழைக் கல்விப் பயிற்சிக்குரிய திறமுடையதாக அமைத்துக்கொண்டனர்.

உலகியற்பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினையுடையது 'இயற்றமிழ்' எனப்படும். மக்கள் மனத்தில் அமைந்து கிடந்த எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறம் இயற்றமிழுக்குரியதாகும். தாம் சொல்லக் கருதிய கருத்துக்களைக் கேட்பார் உள்ளம்



மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத் திறத்தாற் புலப் படுத்தும் மொழிநடை 'இசைத் தமிழ்' ஆகும். தன் எண்ணங்கள் தம் உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டுத் தோன்ற நடித்துக் காட்டுதற்கு அமைந்த மொழி நடை, 'நாடகத் தமிழ்’ என வழங்கப்படும். எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத்தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற்றமிழ் என்றும், கேட்பார் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னோசை மிக்க உரையின் இயல்பினை இசைத் தமிழ் என்றும், மக்கள்சொல்வன் அவர்கள் உடலிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும் முறையில் அமைந்த மொழிநடையினை நாடகத் தமிழ் என்றும் மிகப் பழைய காலத்திலேயே நம் தமிழ் முன்னோர் வகுத்துள்ளனர். மக்கள் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் அறிவுறுத்தவும், உரையினால் அறிவித்தவற்றை உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ் மொழி அமைந்தமையால், அதனை முத்தமிழ் என்ற பெயரால் முன்னையோர் குறிப்பிடுவாராயினர்.

மக்கள் தங்கள் மனப் பயிற்சியின் பயனாக உணர்ந்து கொண்ட இயல்புகளை ஒர் ஒழுங்கு முறையிலே வைத்து ஏனையோர்க்கு எடுத்துரைப்பதே கல்விப் பயிற்சிக்குரிய நூலாகும். அறிய வேண்டுவனவற்றை அறிவிக்கும் கருவி, 'நூல்’ எனப்படும். நுண்ணிய பஞ்சின் நுனிகளால் ஒரிழைப்படுத்தி நூற்கும் நூலைப்போன்று, ஆழ்ந்தகன்ற பொருளுடைய சொற்களால் முறைப்பட இயற்றப்பட்டதே 'நூல்' எனச் சிறப்பிக்கப்படும். முறைப்பட இயற்றப் பெற்றமை கருதி அதனை 'முறை' என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. 

கல்விப் பயிற்சிக்குரிய நூலினை ‘எண்’ எனவும் ‘எழுத்து’ எனவும இரு பகுதியாகப் பண்டைத தமிழ மக்கள் வகைப்படுத்தினார்கள். காலம், இடம், பொருள் என்பவற்றின் அளவினை உள்ளத்தால் எண்ணிக் கூறுபடுத்தி அறிதற்குரிய பயிற்சியினை வளர்க்குங் கருவி ‘எண்ணூல்’ என வழங்கப் பெறும். எண் என்னும் சொல் இக்காலத்தில் ‘கணிதம்’ என்ற பொருளில் வழங்குகின்றது. மிகப் பெரிய அண்டங்களையும் மிகச் சிறிய அணுவினையும் எண்ணியறிதற்குரிய பேரெண்களையும் சிற்றெண்களையும் தமிழ் முன்னோர் முன்னரே கண்டறிந்திருந்தனர்.

அண்டம் முதலிய பொருள்களின் அகலம், நீளம், நிறை முதலியவற்றை அளந்து கூறுதற்குரிய கோடி, சங்கம், தாமரை, நெய்தல், வெள்ளம் முதலிய பேரெண்களும், ஒரு பொருளையே பன்னுாறு கூறாகப் பகுத்துணர்தற்குரிய காணி, முந்திரி முதலிய சிற்றெண்களும் தமிழ் மக்களால் முன்னரே இயற்றப் பெற்றுள்ளன. கணக்கினைக் ‘கருவி, செய்கை’ என இருவகையாகப் பிரித்து விளக்கிய ஏரம்பம் முதலிய தமிழ்க் கணக்கு நூல்கள் தம் காலத்திலிருந்தனவெனப் பரிமேலழகர் கூறுகின்றார். சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட முதற்கடவுளாகிய இறைவன் ஒருவனைத் தவிர, ஏனைய எல்லாப் பொருள்களும் இவ்வெண்ணூலின் வரம்புக்குட்பட்டுத் தோற்றுவனவே என்பது தமிழ் மக்களின் துணிபாகும் [1].

இனிக் கல்வியின் இரண்டாவது பிரிவாகச் சொல்லப்பட்ட எழுத்தென்பது, இயற்றமிழ் நாலாகும். உலகில் உள்ள பொருள் எல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாகப் பகுத்து, அவற்றின் இயல்பினை 

உள்ளவாறு விளக்குவது, இயற்றமிழின் இயல்பாகும். உலகத்தார் செய்யும் வினைகள் யாவும் அறிவதும், செய்வதும் என இரண்டுள் அடங்கும். அவற்றுள் எண்ணி அறிவதற்குக் கருவியாவன எண் (அறிவியல்) நூல் எனவும், அறிந்து செய்வதற்குத் துணை செய்வன எழுத்து (இயல்) நூல் எனவும் பண்டைத் தமிழ் மக்களால் வழங்கப் பெற்றன. எண்ணூற் பயிற்சியால் எப்பொருளையும் தெளிய விளக்கும் உரைத் திறமும், இயல் நூற்பயிற்சியால் எத்தொழிலையும் செய்து முடிக்கும் செயற்றிறமும் பெருகுமென்பது பண்டைத் தமிழாசிரியர்களின் கருத்தாகும்.

எண்ணூல்களின் இயல்புணர்ந்து ஓதும் முறையினை ‘வாயினால் வகுத்த பக்கம்’ எனவும், இயல் நூல்களின் கருத்துணர்ந்து அரிய வினைகளைக் கையால் இயற்றும் முறையினைக் ‘கையினால் வகுத்த பக்கம்’ எனவும் தமிழ்ச் சான்றோர் வகைப்படுத்தியுள்ளனர். எண்ணூலினை அறிவியல் (Science) நூல் எனவும், இயல் நூலினைக் கலை (Arts) நூல் எனவும், இக்காலை மேலை நாட்டாசிரியர்கள் வகுத்துரைப்பதனை ஒத்த முறை நம் தமிழ் மொழியில் தொன்று தொட்டுக் காணப்பட்டு வருவது, தமிழ் மக்களின் உயர்ந்த கல்வித் திறனைப் புலப்படுத்துவதாகும்.

எண்ணும், எழுத்துமாகிய இரு வகைக் கல்வியினையும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய இரண்டு கண்களாகக் கருதிப் போற்றி வந்தார்கள். மக்கள் உடம்பிலே அமைந்த கண்கள் ஒரு காலத்தே ஓரிடத்தே அமைந்த புறப்பொருள்களையே காட்டுவன. எண்ணும், எழுத்துமாகிய இக்கண்களோ,

இடத்தையும், காலத்தையும் ஊடுருவிச் சென்று, எல்லாப் பொருள்களையும் காண வல்ல சிறப்புடையனவாகும். ஆதலால், மக்கள் உயிர்க்கு இவ்விரண்டுமே சிறந்த கண்களாம்

எனத் தமிழ்ச் சான்றோர் கருதினர், அறிவில்லாதார் இவ்விரு திறக் கல்வியையும் எண் என்றும் எழுத்தென்றும் கூறித் தமக்குப் புறம்பாகக் கருதி வந்தாலும், அறிந்தவர் இவ்விரண்டனையும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்றே அறிவுறுத்தி வந்தனர்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.”

என்ற திருக்குறளாலும் (392) அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையாலும் இவ்வுண்மை புலனாம்.

கல்லாதார் முகத்திற் கண்ணுடையராயினும், உலகியற்பொருள்களின் இயல்பினை உள்ளவாறுணரும் ஞானக் கண்ணைப் பெறாமையால், அவர்தம் முகத்திலுள்ள கண்கள் புண்களாகவே இழித்துரைக்கப்பட்டன.

கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்று, கற்றபடி நன்னெறிக்கண் ஒழுகுதல் வேண்டுமெனவும், தோண்டத் தோண்டக் கிணற்றில் நீர் ஊறுவது போல, நூல்களை மேலும் மேலும் கற்றலால் அறிவு பெருகும் எனவும், அழிவில்லாத செல்வம் கல்வியே எனவும், தாம் கற்ற கல்வி தமக்கேயன்றி, உலகத்தார்க்கும் இன்பந் தருவதனைக் கண்டு, கற்றோர் மேலும் அக்கல்வியினையே விரும்புவர் எனவும், கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி எந்நாடும் எவ்வூரும் தன்னாடும் தன்னூருமேயாகும். எனவும், ஒருபிறப்பிலே கற்றகல்வி ஒருவர்க்கு எழுபிறப்பிலும் உயிரோடு சென்று உதவும் இயல்புடையதாதலால், அக் கல்வியை ஒருவன் இறக்குமளவும் கற்றல் வேண்டுமெனவும் ஆசிரியர் திருவள்ளுவனார் அறிவுறுத்துகின்றார்.

திருக்குறளிலுள்ள கல்வி, கல்லாமை, கேள்வி, அறி வுடைமை, சொல் வன்மை என்னும் ஐந்ததிகாரங்களும்

கல்விப் பயிற்சியின் முறையினையே இனிது விளக்குவனவாம். கல்வியின் முடிந்த எல்லையாக ஆசிரியரால் அறிவுறுத்தப் பெறுவது, 'மெய்யுணர்தல்' என்னும் அதிகாரமாகும். துறவறவியலிற் கூறப்பட்ட இவ்வதிகாரம், தமிழ் மக்களின் சமய நூற்பயிற்சியினை நன்கு தெளிவிப்பதாகும்.

தமிழ் மக்கள் இவ்வுலகியற் பொருள்களை முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகையாகப் பகுத்து ஆராய்ந்தார்கள். அவற்றுள் முதற்பொருள் எனப்படுவன, இடமும் காலமுமாம். இவையிரண்டன் சார்பாகத் தோன்றும் புல் மரம் முதலிய நிலையியற் பொருள்களும், பறவை விலங்கு முதலிய இயங்கியற் பொருள்களும், உணவு தொழில் முதலியனவும் கருப் பொருள்களாம். இவை யாவும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலால், கருப்பொருள்களென வழங்கப் பெற்றன மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள், உரிப்பொருள் என வழங்கப் பெற்றன.

உலகியற் பொருள்களையெல்லாம் முதல், கரு, உரி என மூன்று திறமாகப் பகுத்துக் கொண்டு தமிழ் மக்கள் கண்டறிந்த நுட்பங்கள் யாவும் அவர்களது கல்விப் பயிற்சியை மிகுதிப்படுத்தின. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும்பூதங்களால் ஆகியதே இவ்வுலகம் என்னும் உண்மையினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் உணர்ந்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வுலகனத்தினையும், இதனைச் சூழ்ந்த வெளியாகிய வானத்தின் இயல்பினையும், வானத்தில் இயங்கும் ஒளிப் பொருள்களாகிய ஞாயிறு திங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துணரும் ஆராய்ச்சியில் தமிழ் மக்கள் மிகப் பழைய காலத்திலேயே ஈடுபட்டு உழைத்துள்ளார்கள். அவ்வுழைப்பின் பயனாக அவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட உண்மைகள் பலவாகும். அவர்கள் பூதநூல் ஆராய்ச்சி பற்றி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிவுறுத்திய உண்மைகளிற் சில இப்பொழுது கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. தொன்மைக் காலத்திலேயே தமிழ் மக்கள் கண்டுணர்த்திய முடிவுகள் இக்காலத்துப் பல்வேறு கருவிகளின் துணை கொண்டு மேனாட்டார் கண்டுணர்த்திய முடிவுகளுடன் பெரிதும் ஒத்திருக்கக் காண்கின்றோம்.

ஞாயிறாகிய அனற்பிழம்பிலிருந்து தெறித்து விழுந்த ஒரு சிறு உருண்டையே உலகமென்றும், இந்நிலத்தினின்றும் தெறித்துச் சென்ற மற்றோர் உருண்டையே சந்திரனென்றும், ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த பூமி அதனது கவர்ச்சியால் இழுக்கப்பட்டு ஞாயிற்றைச் சுற்றிவருகிறதென்றும், அவ்வாறே பூமியிலிருந்து சிதறிய மற்றோர் உருண்டையாகிய சந்திரன் ஞாயிற்றையும் தனக்குப் பிறப்பிடமாகிய பூமியையும் ஒருங்கு சுற்றி வருகிறதென்றும் இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். விசும்பில் மேன்மேற்சென்று பார்க்குங்கால், அங்குக் காற்றின் இயக்கம் குறைந்துள்ள தென்பதும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் காற்று அறவே இயங்குவதில்லை என்பதும் இக்காலத்தார் கண்ட ஆராய்ச்சியினால் உறுதி செய்யப் பெற்ற உண்மைகளாகும்.

இவ்வுண்மையினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நுண்ணுணர்வால் அறிந்து வெளிப்படுத்திய பேரறிஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்கள். அப்பேரறிஞர்களின் கல்வித்திறத்தை நேரிற்கண்டு வியந்த உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் பெருமான், அவர்களது கல்வித் திறத்தின் உயர்வினைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைந்த பாடலொன்று புற நானூற்றில் உள்ளது.

"ஞாயிற்றினது இயக்கமும், அதனுடைய ஈர்ப்பாற்றலும், அவ்வாற்றலால் இழுக்கப்பட்டு அஞ் ஞாயிற்றைச் சுற்றி வரும் இப்பார் வட்டமும், இப்பூமியில் காற்று வீசும் திசையும், காற்றின்றி வறிதேயுள்ள ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று நேரிற்கண்டறிந்தவர்களைப்போலச் 'சென்ற காலத்து இவ்வாறு இருந்தன ; இப்பொழுது இன்ன நிலையில் உள்ளன ; இனி எதிர் காலத்து இன்ன தன்மையை அடைவன, என்று மூன்று காலத்தும் அறுதியிட்டுச் சொல்லும் கல்வியையுடைய பெரியார்களும் இந்நாட்டில் உள்ளார்கள்,” என்பார்,


"செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றனந் தறிந்தோச் போல் வென்றும்
இனைத்தென் போரும் உளரே.”

-புறம் 30.

எனக் கூறுகின்றார்,

ஞாயிற்றின் பரிப்பினால் (இழுப்பாற்றலால்) பூமி அதனைச் சூழ்ந்து வருதலும், வானம் காற்றின்றி இருத்தலும் ஆகிய உண்மைகள் இப்பாடலில் குறிக்கப்பட்டன. இக்கால ஆராய்ச்சியாளர் நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டறிந்த இவ்வுண்மைகளை உறையூர் முத்துகண்ணன் சாத்தனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளமை சங்ககாலத் தமிழ் மக்களின் வான நூற்பயிற்சியினை இனிது விளக்குவதாகும்.

வானத்தில் மின்னுகின்ற ஒளிப்பொருள்களை உற்று நோக்கி அவற்றிற்கு 'மீன்கள்' எனப் பெயரிட்டனர். இம்மீன்களை 'நாள்மீன், கோள்மீன்' என இருவகையாகப் பகுத்துரைப்பர். தம்பாலுள்ள இயற்கையொளியால் விட்டு விட்டு மின்னுவன நாள் மீன்கள் என்றும், பிறவற்றின் ஒளியைக் கொண்டு விளங்குவன கோள் மீன்கள் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு வழங்கினமை அவர்களது வான நூற் பயிற்சியை நன்கு விளக்கும்.

கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் திங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் உச்சியிலிருந்துசாய, மூலம்எழ, மிருகசீரிடம் மறைய, நட்சத்திரம் ஒன்று வடக்கும் கிழக்கும் போகாமல் இடைநடுவே எரிந்து வீழ்ந்ததென்றும்; அதனைக் கண்ட கூடலூர் கிழார் என்னும் இப்புலவர் தம் அரசனாகிய யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறைக்குத் தீங்குண்டாகுமென்று தெரிந்து உளந்திடுக்குற்றார் என்றும் ; புலவர் அஞ்சியதற்கேற்பவே அன்றைக்கு ஏழாவது நாளில் அம்மன்னன் உயிர்நீத்தான் என்றும் அவர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்றால் (229) அறிகின்றோம்.

கூடலூர்கிழார் பாடிய புறப்பாட்டிலுள்ள வானநூற் குறியீட்டுச் சொற்கள் யாவும் தனித் தமிழ்த் சொற்களாகவே அமைந்துள்ளதனை நோக்குங்கால், அவர்காலத்து வான நூலைப்பற்றிய தமிழ் நூல்கள் பல இயற்றப்பட்டிருந்தமை நன்கு புலனாம். வான நூலிற் சிறந்த பயிற்ச்சியுடையார் 'கணி', என வழங்கப்படுவர். பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து, அங்கே நிகழும் வானவில், மின்னல், ஊர்கோள் (பரிவேடம்), தாமம், மீன் வீழ்வல், கோள் நிலை, மழை நிலை முதலியவற்றைக் கண்ணி (கருதி)ப் பயன் கூறுவார் கணி என வழங்கப் படுவர். கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் சோதிடத்தில் வல்லவர் என்பது அவர் 'கணியன்' என வழங்கப்படுதலால் விளங்கும். சங்கச் செய்யுட்களில் வான நூலைப்பற்றிய பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக் குறிப்புக்களைத் தொடர்ந்து ஆராய்ந்தால், வான நூல்பற்றிய புதிய உண்மைகள் பல வெளிப்படுதல் கூடும்.

தமிழ் மக்கள் கிலத்தின் தட்ப வெப்ப இயல்பினை நன்குண்ர்ந்து, அந்நிலத்தினைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என இவ்வாறு வகுத்து, அவற்றிற்கேற்ற கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும்பொழுதுகளும்; மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என அறுவகைச் சிறு பொழுதுகளும் வகுத்துரைத்தலால், நிலநூல்பற்றிய கல்வி அக்காலத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றமை புலனாம். நிலங்களுக்கேற்றவாறு புல் மரம் முதலிய தாவரங்களும், பறவை விலங்கு முதலிய உயிர் வகைகளும் இன்னஇன்ன எனப்பிரித்து விளக்குதலால், தாவர நூலும் உயிர் நூலும் பற்றிய உண்மைகள் அக்காலத்துக் கற்பிக்கப்பட்டமை தெளியப்படும்.

நிலத்திற்கேற்ற உணவும் தொழிலும் வகுத்துரைத்தலால், நிலவியல்புக்கேற்ப மேற்கொள்ளும் பயிர்நூல் பயிற்றப்பட்டது என உய்த்துணரலாம். குறிஞ்சி முதலிய நிலங்களுக்குத் தக்கபடி அவ்வந்நிலங்களிலே வாழும் மக்களுடைய உள்ளத்திலே சிறந்து தோன்றும் உள்ளத்துணர்ச்சிகள் இன்ன எனத் தமிழியல் நூலாகிய தொல் காப்பியம் கூறுகின்றது. இவ்வாறு நிலத்திற்கும் அங்கு வாழும் மக்களின் உள்ளத்துணர்ச்சிக்குமுள்ள தொடர்பினைக் கண்டுணர்ந்தமையால், மக்களது உள்ளத்தின் இயல்பினை உணர்வதில் தமிழர் நிறைந்த தேர்ச்சியுடையார் என்பது நன்கு துணியப்படும்.

உலகத்தின் தோற்றம், உயிர்த்தோற்றம், உலக ஒடுக்கம், அரசர் வழி முறை, காலவரையறை, மன்னர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் என்னும் இப்பொருள்களை விரித்துரைப்பது உலக வரலாறாகும். இவ் வரலாற்றினை உணர்ந்தவரே முன்னுள்ள பேரறிஞர்கள் அறிவுறுத்திய கலைச் செல்வத்தை நன்குணரும் ஊக்கமும் ஆற்றலும் பெற்றவராவர். இத்தகைய உலக வரலாறு பண்டை நாளில் தமிழ்க் கல்வியில் இடம பெற்றிருந்தது. இவ்வரலாறு உரைநடையில் அமைந்தால் தான் எல்லா மக்களுக்கும் பயன்படும் என்பது முன்னுள்ளோர் கருத்தாகும். இவ்வாறு உரை நடையில் அமைந்த பழைய வரலாறு தொன்மை என்ற சொல்லால் வழங்கப்பட்டது.

அறத்தின் முறை தவறாது தாம் செய்யும் தொழிலால் பொருளீட்டி இன்பம் நுகர்தற்குரிய வாழ்க்கையின் இயல்பினை அகம், புறம் என இரண்டு பிரிவாக வகுத்து விளக்குவதே தமிழுக்குச சிறப்பாக உள்ள பொருளிலக்கண நூலாகும். மக்கள் வாழ்க்கையின் இயல்பினே உள்ளவாறு விளக்கியுரைக்கும் வாழ்வியல் நூலாகிய பொருளிலக்கணப் பகுதி, தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்புடையதாகும்.

மக்களுடைய வாழ்க்கைக்கு அரண் செய்வது அரசியல் நூற்கல்வியாகும். அரசியலின் இயல்பினை ஆசிரியர் திருவள்ளுவனார் திருக்குறள் பொருட்பாலில் தெளிவாக அறிவுறுத்துகின்றார். திருச்குறளை நன்கு கற்றுணர்வோர் சங்ககாலத் தமிழகத்தில் வழங்கிய அரசியல் முறையின் செம்மையினை நன்குணர்வர். நாட்டினை ஆளும் அரசியற் தலைவன் தன்னாட்டுக்கு உண்டாகும் ஆக்கத்தையும், அதனைப் பெறுதற்குத் தடையாயுள்ள இடையூறுகளையும் புறத்தார்க்குப் புலப்படாது தன் மனத்தேயடக்கிக் கொண்டு அமைதியாக அரசியலைச் செலுத்துதற்குரியவனாவன். சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன், யானை தன் மேல் ஒருவன் எறிந்த கல்லை யாருக்கும் புலப்படாமல் தன் கன்னத்தில் அடக்கிக்கொண்டிருந்தாற்போலக், காலமும் இடமும் கருதி அடங்கியிருந்தான். அவனது அரசியல் நுட்பத்தினை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் ஒரு செய்யுளிற் புகழ்ந்து போற்றுகின்றார் :

"ஐம்பெரும்பூதத்தின் இயல்பினையும், ஞாயிறு முதலியவற்றின் இயக்கத்தினையும் நேரே சென்று பார்த்தவர்களைப் போல நாளும் இன்ன தன்மையன எனச் சொல்கின்ற பேரறிஞர்களும் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். அவர்களாலும் அறிய முடியாத வன்மையினையுடையவனாக நீ அடங்கி வாழ்கின்றாய். ஆதலால், நின்னுடைய திறத்தை எவ்வாறு புலவர்கள் விளங்கப்பாடுவார்கள்?" என அவனை அவர் போற்றும் முறை, அவ்வேந்தனது அரசியற்கல்வியின் நுட்பத்தைக் குறிப்பாக அறிவுறுத்துவதாதல் காணலாம்.

வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது பொருளாகும். 'பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்வில் யாதொரு தொடர்பும் இல்லை' எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். பொருள்கள் வருதற்குரிய வழி துறைகளை  மேலும் மேலும் உண்டாக்குதலிலும், அத்துறைகளிற் கிடைத்த பொருள்களை ஒரு வழித் தொகுத்தலிலும், அம் முதற்பொருள் அழியாது மேன்மேல் வளரக்கூடிய நிலையிற் பாதுகாத்தலிலும், அவ்வாறு காக்கப்பெற்ற பொருள்களை நாட்டு மக்களின் நலங்கருதி அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் செலவழித்தலிலும் வல்லவனே அரசனாவன்', என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய பொருளுரையாகும். இப்பொருளுரையினைச் சிறிது ஊன்றி நோக்குவோமானல், சங்ககாலத்தில் பொருளாதார வாழ்வினைச் செம்மைப்படுத்தும் நூல்கள் பல வழங்கினமை நன்கு புலனாம். பொருளாதார நூல் அக்காலத்துப் 'பொருள் புரிநூல்' என்ற பெயரால் வழங்கப் பெற்றது. நாட்டில் உள்ள பொருள், சகடக்கால் போல யாவர்கண்ணும் சென்று பயன் தரும் ஆற்றலுடையதாகும். அப்பொருளின் வளர்ச்சியினை உணர்ந்த அறிஞர்கள் அதனை முதலாகக் கொண்டு ஏதாவதொரு தொழிலைச் செய்து ஊதியம் பெருக்குவதில் கருத்தைச் செலுத்தினார்கள். 'முதற்பொருளைப் பெற்றார்க்கே ஊதியம் உண்டு ; முதலில்லார்க்கு ஊதியம் இல்லை’ என்றார் திருவள்ளுவர். தம்பால் உள்ள பொருளைப் பொன்னிலும் மணியிலும் ஆகிய அணிகலங்களுக்குச் செலவிடுவோர், அப்பொருளின் ஆற்றலையுணராது அதனே முடக்கி நோய் செய்பவராவர். இந்நுட்பத்தினைச் சங்ககாலத்துப் பொதுமக்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். 'ஆயர்குலப் பெண்ணொருத்தி தான் மோர் விற்றதனால் வாங்கிய நெல் முதலிய உணவுப் பொருள்களைக் கொண்டு தன் சுற்றத்தாரெல்லாரையும் பாதுகாத்துப் பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைப் பொருளுக்குக் கட்டியாகப் பொன்னை வாங்கிக் கொள்ளாமல், தான் செய்யும் பால் மோர் வாணிகத்தை மேலும் பெருக்குதற்குறிய பாலெருமையையும், நல்ல பசுவையும், கரிய எருமை நாகினையும் வாங்கினாள்,' என்ற செய்தி பெரும்பாணாற்றுப் படையில் குறிக்கப்படுகின்றது. இதனை உய்த்துணருமிடத்து மகளிரும் ஏற்றுப் போற்றுதற்குரிய நிலையில் பொருள்புரி நூற் புலமை தமிழர் எல்லாரிடத்தும் அமைந்திருந்தமை புலனாம்.

இவ்வாறு பல துறையிலும் கல்வி வளர்ச்சியடையவே, கற்ற நூற்பொருள் பற்றிக் கற்றாரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அவரவரும் தாம் தாம் கருதியனவே உண்மையென நிலை நாட்ட முயன்றனர். இந்நிலையில் பலரும் உடன்பட்டு ஏற்றுக் கொள்ளுதற்குரிய நெறியில் பொருளின் துணிபுணர்த்தும் அளவை நூல்கள் வகுக்கப் பெற்றன. அவ்வளவை நூன்முறையைப் பின்பற்றிச் சான்றோர் பலரும் தம்முட் பொருள் வேற்றுமை கருதி உறழ்ந்து பேசித் தாம் கருதிய பொருளை விளக்க முயன்றனர். இவ்வாறு கல்வித் துறையில் தங்நிகரற்ற புலமை பெற்ற சான்றோர் தம் கருத்தினை நிலை நாட்டக் கருதி, எம்மை உறழ்ந்து கூறுவாருளாரயின் வருக !' எனப் பேரவையிற் கொடி கட்டி அழைத்தலை வழக்கமாகக் கொண்டனர். காவிரிப்பூம்பட்டினத்தில் கல்வித்துறை பற்றிய உறழ்ச்சி குறித்துச் சான்றோர் கொடி கட்டியிருந்தனர்.


'பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ் குறித் தெடுத்த உயர்கெழு கொடி'

என வரும் பட்டினப்பாலை அடிகளால் அத்தகைய கொடியின் இயல்பினை நன்குணரலாம். 'பலவாகிய நூற்கேள்வியினையும், முற்றக் கற்றுச் சொல்லியபடி நடக்கும் பழைய ஆணை மொழியினையுமுடைய கல்லாசிரியர்கள் வாது செய்யக் கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடி' என்பது மேற்காட்டிய அடிகளின் பொருளாகும்.

இரட்டித்த கதிர்களையுடையதாகி விளைந்த திணையின் தோற்றத்தை விளக்க வந்த புலவரொருவர், தருக்க நெறியினைப் பின்பற்றிப் பொருளை விளக்கிக் காட்டுபவன் கையிடத்து இரு பிரிவாக இணைந்த விரல்களை உவமையாகக் கூறி விளக்குகின்றார் (மலைபடு.) இவ்வாறு நூற் பொருள்களை விளக்குதற்குச் சொல்வன்மை இன்றியமையாததாகும். ஒருவன் தன் உள்ளக் கருத்துக்களைத் தங்கு தடையின்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் மொழிப் பயிற்சியே சொல் வன்மை எனப்படும். 'தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் அறியும்படி விரித்துரைக்கும் சொல் வன்மை இல்லாதவர், நன்றாக மலர்ந்தும் மணங்கமழாத மலரைப் போன்று பயன்படாதவராவர்', என அறிஞர் கூறுவர். ஒருவன் தான் கூறக் கருதிய பொருள்கள் பிறரால் உணர்ந்து கொள்ளுதற்கு அரியனவாயிலும், கேட்பார்க்கு எளிய பொருளாக மனத்திற் பதியும்படி தெளிவான சொற்களால் விளக்கியுரைத்தல் வேண்டும். பிறர் கூறுகின்ற பொருள்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள இயலாத அரிய பொருள்களாயினும், அவர் கூறும் சொற்களின் நுண்ணிய பொருள்களை உய்த்துணர்ந்து காணுதல் வேண்டும். தான் கற்றவற்றைப் பிறர்க்கு விளங்க உணர்த்தும் முறையும், பிறர் கூறுவனவற்றைத் தான் விளங்க உணரும் முறையுமாகிய இவ்விரு திறனுமுடையதே அறிவு என ஆசிரியர் திருவள்ளுவர் இலக்கணங் கூறுகின்றார்.

'ஒருவருடைய அறிவின் மாட்சியினை விளங்க உண்ர்த்தும் கருவியாவன, அவர்தம் வாய்ச் சொற்களே', என அக்காலத் தமிழர் நன்கு துணிந்தனர். அவர்கள் சொல்வன்மையினை வளர்த்தற்குப் பயன்பட்டது 'உரைநூல்' என்பதாகும். வழக்கியல் நூல் சங்ககாலத் தமிழ் மகளிர்க்குப் பயிற்றப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்திலமைந்த அறங் கூறவையத்திலே இவ்வுரை நூல்வழங்கப் பெற்றதெனவும் இவ்வுரை நூல் நெறிக்கு மாறுபடப் பேசுதல் ஆகாதெனவும் இளங்கோவடிகள் கூறுகின்றார்.

ஒவியம் எழுதும் முறையினைக் கற்பிக்கும் ஒவிய நூலும், மனை முதலியன அமைக்கும் சிற்ப நூலும், மக்களுடைய உடம்பிலுள்ள நோயினைத் தீர்க்கும் மருத்துவ நூலும், இவ்வாறே வேறு பல நுண்கலைகளை அறிவிக்கும் நூல்களும் சங்க காலத்தில் வழங்கின. ஆசிரியர் திருவள்ளுவனார் 'மருந்து' என்ற அதிகாரத்தில் அறிவுறுத்திய உண்மைகளே ஆராயுமிடத்து அவர் காலத்தில் உடம்பின் அமைதியினை உள்ளவாறு விளக்கிய உடல் நூலும், உடலிலுள்ள நோய்களைத் தீர்த்தற்குரிய மருத்துவ முறையினை விளக்கும் மருத்துவ நூலும் வழங்கியிருத்தல் வேண்டுமெனத் தெளிதல் எளிதாம். 'நல்லொழுக்கத்தால் திருத்தமாகப் போற்றி வரப்பட்ட உடம்பில் மருத்துவன் கொடுத்த மருந்து விரைவிற் சென்று சேர்ந்து நல்ல பயனைத் தரும், எனப் பெருங்கடுங்கோ என்னும் புலவர் கூறுகின்றார், (பாலைக்கலி, 16) இதனால், உடம்பின் கூறுபாடுணர்ந்து மருந்து செய்யும் முறை சங்ககாலத்தில் வழங்கியது புலப்படும்.

இதுகாறும் கூறியவற்றால் எண்ணும் எழுத்துமாகிய இரு வகையிலடங்கும் பல்வேறு கல்வித் துறைகளைப் பற்றிய தமிழ் நூற்களும் சங்ககாலத்து வழங்கினமை ஒருவாறு தெளிந்துகொள்ளலாம்.

தமிழ் மொழிக்கே உரியனவாகத் தமிழ் மக்கள் வகுத்துணர்த்தியவை இசையும் நாடகமும் ஆகும். இயற்கையில் எழுந்த இனிய ஓசையைப் பொருளுணர்த்தும் பாக்களோடு ஒன்றுபடுத்தி இசைத்துப் பாடுவது ‘இசை’ எனப்படும். மூலாதாரத்திற்றொடங்கிய எழுத்தின் ஒலி, நெஞ்சு, கண்டம், நாக்கு, மூக்கு, மேல்வாய், கீழ்வாய், உதடு, பல் என்னும் எட்டிடங்களிலும் பொருந்தி, எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்வு, கம்பிதம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைப்பட்ட தொழில்களால் உருவாகப் பண்ணிக்கொள்ளப்படுதலாற் ‘பண்’ என்பதும் காரணப் பெயராம். நானிலத்தவராகிய நிலமாந்தர் எல்லாரும், தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய யாழ், பண், பறை முதலிய இசைக் கூறுபாடுகளை வளர்த்து வந்தனர். கிளி, குயில் முதலியவற்றின் இன்குரலினைக் கேட்டுணர்ந்த மக்கள், இயற்கையில் தோன்றும் அவ்வின்னோசைகளையொத்த ஒசைகளைத் தம்முள்ளிருந்து எழுப்பக் கற்றுக்கொண்டதுடன் படிப்படியாக மேன்மேல் உயர்ந்து செல்லும் அவ்வோசையினை ஏழு வகையாகப் பகுத்துக் கொண்டார்கள். ஆண் மக்களது கண்டத்தின் ஒசை காந்தார சுரத்தையொத்த தென்பர். அச்சுரத்தின் வழியோசையாக ‘உழை’ என்ற இசையும், அதன் வழியோசையாகக் ‘குரல்’ என்ற ஒசையும் அதன் வழியோசையாக ‘இளி’ என்ற ஒசையும், அதனையொட்டித் ‘துத்தம்’ என்ற ஒசையும், அதனையொட்டி ‘விளரி’ என்ற ஒசையும், அதன் வழியாகக் கைக்கிளை என்ற ஒசையும் கிளைமுறையாகப் பிறக்கும் என முதன்முதற் கண்டுணர்ந்த பெருமை தமிழ் மக்களுக்கே உரியதாகும்.

இவ்வேழிசைகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களால் வளர்க்கப் பெற்றதே இசைத்

தமிழாகும். இசைக் கலையைப் பிறழாத நிலையில் வளர்ப்பன, குழல் யாழ் முதலிய இசைக் கருவிகளே. மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத்துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினை மிகப் பழைய காலத்திலே கண்டு கேட்டுணர்ந்த தமிழ் முன்னோர், தம் உணர்வின் திறத்தால் முதன் முதல் அமைத்துக்கொண்ட இசைக் கருவி குழலாகும். வில்லின் கண்ணே வலிந்து கட்டப்பட்ட நாணோசையின் இனிமையை உணர்ந்து குமிழங்கொம்பில் மரல் நாரால் தொடுத்துக் கட்டப்பெற்ற பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து அமைத்துக் கொண்ட பழைய இசைக் கருவி வில் யாழ் என்பதாகும். வரையறுக்க முடியாத தொன்மைக் காலத்திலே அமைந்த இவ்வில் யாழினை அடிப்படையாகக் கொண்டே 'செம்முறைக் கேள்வி' யென்னும் 'சகோட யாழ்' முதலாக ஆயிர நரம்புடைய 'பெருங்கலம்' என்னும் 'பேரியாழ்' ஈறாகவுள்ள சிறந்த இசைக் கருவிகளெல்லாம் உய்த்துணர்ந்து அமைத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நாம்பு கட்டப் பெற்றது. தமிழர் கண்ட யாழ்க் கருவியாகும். ஒரு நரம்பிலே பல சுரங்களையும் வாசித்தற்கமைந்தது பிற்காலத்து வீணைக் கருவியாகும். இவ் வீணைக் கருவி ஒரே முறையில் தொடர்ந்து செல்லும் தொடரிசையினை மட்டுமே வாசித்தற்குரியது. தமிழரது யாழ்க் கருவியோ, தொடரிசையுடன் பலரும் சேர்ந்து பாடும பண்ணாகிய ஒத்திசையினையும் வாசித்தற்கு ஏற்புடையதாகும். தொடரிசையினை மட்டும் வாசித்தற்குரிய வீணைக் கருவியைக் காட்டிலும், தொடரிசையினையும் ஒத்திசையினையும் ஒரு சேர வாசித்தற்கமைந்த யாழ்க்கருவி பெரிதும் சிறப்புடையதென்பது சொல்லாமலே விளங்கும். அக்காலத்து யாழுக்கு நரம்பு கட்டுதல் வழக்கம். நரம்பு வெயில், மழை முதலியவற்றால் ஏற்படும் நெகிழ்ச்சி, இறுக்கம் காரணமாக இசை வேறுபடும் நீர்மையது, பண்டைத் தமிழர் குழலோசையின் துணை கொண்டே யாழ் நரம்புக்கு இசை கூட்டினர். குழல், யாழ் என்பன தனித் தமிழ்ச் சொற்களாம்.

தமிழ் மக்கள் குழலும், யாழுமாகிய இசைக் கருவிகளின் துணை கொண்டு பல்வேறு இசை நுட்பங்களை வெளியிட்டுள்ளார்கள் என்பது முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தினாலும், அதன் உரைகளாலும் நன்கு துணியப்படும். இடைக் காலத்தில் வழக்கற்று மறைந்த யாழ்க்கருவியின் இயல்பும், அதன் கண் இசைக்கப் பெற்ற பன்னிரு பாலைகளின் பயனும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்னும் நாற்பெரும்பண்களின் இயல்பும், அவற்றின் வழி அமைந்த நூற்று மூன்று பண்களின் திறனும் ஆகிய இசை நுட்பங்களை, இக்காலத்திலும் பயன்படுத்தி மகிழும் வண்ணம் சேர முனிவராகிய இளங்கோவடிகள் அறிவுறுத்திய திறத்தினை அருண்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய இசைத் தமிழ் நூலாகிய யாழ்நூலில் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்கள். உலக இசைகள் எல்லாவற்றிற்கும் பழந்தமிழிசையே அடிப்படையாய் அமைந்த உண்மையினை யாழ்நூலிற் கண்டு தெளிதல் தமிழறிஞர் கடனாகும்.

ஒன்றோடொன்று தொடர்பில்லாத தனித் தனி வரலாற்று நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டுதல் ‘கூத்து’ என வழங்கப்படும். இறைவன், முருகன், மாயோன், கொற்றவை முதலிய தெய்வங்களின் வீரச் செயல்களை விளக்கிக் காட்டும் பதினோராடல்கள் கூத்து என்னும் இவ்வகையைச் சேர்ந்தனவாம். பதினோராடலின் இயல்பு சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டது. இத்தகைய கூத்தின் இயல்பினை விளக்கிய நூல் 'கூத்தநூல்' என வழங்கப்பெறும்.

மக்கள் ஒருவரைப் போன்று ஒருவர் ஒத்து நடித்தல் 'பொருநுதல்' என்ற சொல்லால் குறிக்கப்படும். இத் தொழிலில் வல்ல ஆட்டவர் ‘பொருநர் ' என வழங்கப்பெற்றனர். மகளிர் நம் உள்ளக்குறிப்பு உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும்படி சுவைபட நடித்தல் ‘நாட்டியம்' என வழங்கப்பெற்றது, இதற்கு வேண்டும் ஆடல், பாடல், அழகு என்பவற்றை விளக்கி உரைக்கும் நூல் ‘ நாட்டிய நன்னூல்' என இளங்கோவடிகளாற் குறிக்கப் படுகின்றது, மாதவி சோழமன்னன் பேரவையில் ஆடிய ஆடற்கலைகள் யாவும் நாட்டியான்னூலை நன்கு கடைப் பிடித்துக் காட்டியனவாகுமென்று இளங்கோவடிகள் கூறுகின்றார். உள்ளதும் இல்லதுமாகிய ஏதாவதொரு கதை இலைத் தழுவி நடிக்கப் பெறுவது ' நாடகம்' என வழங்கப்படும். உரையும் பாட்டுமாய் அமைந்து நடித்தற்குப் பயன்படும் முறையிலுள்ள காப்பியம் 'நாடகக் காப்பியம்' எனக் குறிக்கப்பட்டது.

ஆடலைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியன் இயல்பும், இசையாசிரியன் இயல்பும், நாடகத்திற்கும் இசைக்கும் வேண்டிய இசைப்பாடல்களை இயற்றித் தரும் கவிஞன் இயல்பும், இசையினை வரம்பு பெற நிறுத்த வல்ல தண்ணுமை (மத்தள) ஆசிரியன் தொழிற்றிறனும், குழலிசைப்பான் அமைதியும், யாழாசிரியன் இயல்பும், நாடக அரங்கின் இலக்கணமும், அரங்கிலே புகுந்து ஆடுகின்ற முறையும், பிற நுட்பங்களும் சிலப்பதிகார அரங்கேற்று காதையிலே தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன. இக்குறிப்புக்களையெல்லாம் நோக்கும் பொழுது சங்க காலத்திலே தமிழ் மக்கள் வளர்த்த இயலிசை நாடகம் என்ற முத்தமிழும் விரிந்த பல துறைகளையுடையவை என்பது இனிது புலனாதல் அறிக.

தமிழ் நாட்டில் ஊர்தோறும் இளஞ்சிறார்கட்குத் தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் தெற்றிப் (திண்ணைப்) பள்ளிக்கூடங்கள் இருந்தன. அங்கே இள மாணவர்களுக்கு நெடுங்கணக்கு முதலிய அடிப்படைக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பலர் இருந்தனர். அங்குப் பயிலும் மாணவர்களை 'மையாடலாடல் மழ புலவர்' எனப் பரிபாடல் கூறுகின்றது. இளம்பருவ மாணவர்களைப் பயிற்றும் ஆசிரியர்கள் 'இளம்பாலாசிரியர்’ (தொடக்கப்பள்ளி ஆசிரியர்) என வழங்கப்பெற்றார்கள். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் . எனக் கடைச்சங்கப் புலவரொருவர்க்கு வழங்கும் பெயரால் இச்செய்தி உணரப்படும். நெடுங்கணக்கு முதலிய தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் 'கணக்காயர்’ என்ற பெயரால் குறிக்கப் பெற்றனர். உயர்ந்த கல்வியைச் சொல்லிக்கொடுப்போர் 'ஆசிரியர்' என வழங்கப்பெற்றனர். சிறுவர்கட்குக் கல்வியினைக் கற்பிக்கும் பொறுப்பினையும் செலவினையும் பெற்றோர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.’

(குறள், 69)


'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே.'

(புறம், 312)


என்பவை ஈண்டு நினைக்கற்பாலன. உயர்ந்த கல்வியினைப் பெறும் விருப்பமுடையவர், ஆசிரியர்க்கு வேண்டும் 

உதவிகளைச்செய்தும், பெரும்பொருள் கொடுத்தும், அவர்களிடத்துப் பணிவுடையவராய் ஒழுகி நற்பொருள்களை ஒதி உணர்ந்தனர். அக்காலத்துத் தமிழ் மக்கள் மாணவ நிலையில் மட்டுமன்றி, மணந்துகொண்ட பின்னரும், உயர்ந்த நூற்பொருள்களைக் கற்றற்கெனவே வேற்றூர்களுக்குப் பிரிந்து சென்றார்கள். இங்ஙனம் உயர்ந்த கல்வியின் பொருட்டுப் பிரியும் பிரிவு 'ஒதற்பிரிவு' என அகப் பொருள் நூல்களிற் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டிலுள்ளவர் பலரும் தாம் சாந்துணையும் அறிவு நூல்களைக் கற்றுக் கல்வியிற் கருத்துடையவராய் வாழ்ந்தமை பால், தமிழ் மொழி பல கலைத் துறைகளிலும் சிறப்புற்று வளர்வதாயிற்று.



  1. திருக்குறள் 392 பரிமேலழகர் உரை.