உள்ளடக்கத்துக்குச் செல்

சங்ககாலத் தமிழ் மக்கள்-3/பெண்டிர் நிலை

விக்கிமூலம் இலிருந்து

IV
பெண்டிர் நிலை

அழகினாலும், அன்பு அருள் முதலிய பண்பினாலும் விரும்பத் தக்க தன்மை பெண்மையாகும். ஆடவர்களால் விரும்பிப் போற்றத் தக்க அன்பு, அடக்கம், அமைதி முதலிய நற்பண்புகளும், அப்பண்புகளுக்கேற்ற உடல் வனப்பும் உடையவரே பெண்டிர் எனப் போற்றப் பெறுவர். கண்ணிறைந்த பேரழகினால் உளங்கவரும் நங்கையைக் 'காரிகை' என வழங்குதல் உலகியல். ஆடவர்களால் காதலிக்கத் தகுந்த காதல் மிக்க மகளிர் 'மாதர்' என வழங்கப் பெற்றனர். ஐம்பொறிகளால் நுகர்தற்கினிய மென்னீர்மை மகளிரின் சிறப்பியல்பாகும். மகளிர்பாற் காணப்பெறும் மென்னீர்மையினைச் ‘சாயல்’ என்பர். சாயலாகிய மென்மையினைத் தம் இயல்பாகப் பெற்றமையால், 'மெல்லியலார்' என்ற பெயர் மகளிர்க்கு உரியதாயிற்று.

ஆடவர் அச்சமின்றி நாடெங்குஞ் சுற்றித் திரிந்து இயற்கையாலுளவாகும் இடையூறுகளை எதிர்தது நின்று வினை செய்தல் போலப் புறத்தொழிலிற்கலந்துகொள்ளும் விருப்பம் பெண்டிர்க்கு இயல்பன்றாம். மகளிரது உடலமைப்பு வலிய தொழில்களைச் செய்தற்கு ஏற்றதன்று. உடலின் திண்மை பெறாத மெல்லியலார் விலங்கு முதலியவற்றால் உலகியலில் நிகழும் இடையூறுகளை எதிர்த்து நிற்றற்குப் போதிய ஆற்றலுடையாரல்லர். துன்பந்தரும் இடர் நெறிகளிற்செல்லாது ஒதுங்கி நின்று தம் உள்ளத்து அமைதியால் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்டிரின் திறமையாகும்.

அச்சம், நாணம், மடம் என்பன பெண்டிர்க்குரிய குணங்களாம். மகளிரது உள்ளத்தில் குறிப்பின்றித்

தோன்றும் நடுக்கம் அச்சமாகும் தம் பெண்மைத் தன்மைக்குப் பொருந்தாத புறச் செயல்களில் ஒதுங்கி ஒழுகுதல் நாணமாகும். உலகியற் பொருள்களின் இயல்பினைப் பிறர் அறிவிக்க அறிந்து தம் அறிவால் மேற்கொண்ட கொள்கையினை நெகிழ விடாது போற்றுதல் மடனாகும். பெண்களுக்கு இயல்பாக அமைந்த இக்குணங்கள் அவர்கள் வாழ்க்கையில் மேன்மேலும் உறுதிபெற்று வளர்வனவாம். தன்னை மணந்துகொண்ட தலைவனுக்கு எத்தகைய தீங்கும் நேர்தலாகாது எனத் தலைமகளிடத்தே தோன்றிய அச்சம், அவள் தன் கணவனிடத்தே வைத்த அன்புகாரணமாகப் பிறந்ததாகும். அறிவும் ஆண்மையும் சால்பும் பெற்ற ஆடவனொருவனைக் தன் ஆருயிர்த் தலைவனாகக் கருதி மணந்துகொள்ள விரும்பிய வழி, அவன்கண் உள்ளம் ஒன்றி அடங்கி யொழுகுதல், காமக் குறிப்பினால் தோன்றிய நாணமாகும். அவனொருவனையே வழிபடுதல் வேண்டும் எனத் தான்கொண்ட கொள்கையை நெகிழாது கடைப்பிடித்தல் கற்பாகும். தன் கணவனே தெய்வமெனக் கருதி மனஞ்சலியாது ஒழுகும் உள்ளத் திண்மையே கற்பெனப்படும். தனக்குச் சிறந்தான் ஒருவனையே தன் உயிர்த் துணைவனாகக் கடைப்பிடித்தொழுகும் உறுதியுடையவளே 'ஒருமை மகள்' எனப் போற்றப் பெறுவள். அயலானொருவனது விருப்பிற்கிணங்கித் தன் உள்ளத்துறுதியினை நெகிழ விட நினைத்தல் கலக்கமாகும். இங்ஙனம் மாறுபட்டுக் கலங்குதல் உள்ளத்திண்மையில்லாத இழிந்த மகளிரின் செயலாகும். கலங்கா நிலையாகிய கற்பென்னும் திண்மையுடைய மகளிரே பெண்டிர் என மதித்துப் போற்றுதற்குரியவராவர்.

தம் பெண்மைத் தன்மையின் இயல்பினை அழியாது காத்துக்கொள்ளுதலும், தம் கணவரைப் பேணி அவர்

சொல்வழி அடங்கியொழுகுதலும், தம் இருவரிடத்தும் அமைதற்குரிய நன்மை நிறைந்த புகழினை நீங்காமற் பாதுகாத்தலும் பெண்டிர்க்குரிய கடமைகளாம்.

தமிழ் மக்கள் வீரத்தை விளைத்தற்கென ஆண்பிள்ளைகளைப் பெற விரும்பியது போலவே, அன்பும் அருளும் ஆகிய மனப் பண்பினை வளர்த்தற்குரிய பெண்மக்களையும் பெற விரும்பினார்கள். அன்பும் அறிவும் அமைந்த பண்புடைய பெண்மக்களைப் பெறுதலை விரும்பிய மக்கள், அத்தகைய நன் மக்கட்பேற்றினை அருளுதல் வேண்டும் என இறைவனை வணங்கிப் போற்றினார்கள். இச்செய்தி,

“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்”[1]

என வரும் கபிலர் பாடலால் இனிது புலனாம்.

தம் உடலமைப்பிற்கும் உள்ள இயல்புக்கும் ஏற்ற விளையாடல்களைச் சங்ககாலத் தமிழ் மகளிர் மேற்கொண்டிருந்தனர். மணலிற் சிறு வீடு கட்டுதல், கழற்சிக்காய் அம்மனைக்காய் முதலியவற்றைக் கையாற்பிடித்து ஆடுதல், பறவை உயர்ந்து பறக்குமாறு போல உந்தி பறத்தல், பந்தாடுதல், ஊசலில் ஏறியாடுதல், பூக்கொய்தல், புனல்விளையாடல் முதலியன மகளிரின் இளம்பருவ விளையாட்டுக்களாம். மேற்குறித்த விளையாடல்கள் யாவும் மகளிர்க்கு உடலில் திண்மையினையும் உள்ளத்து எழுச்சியினையும் தந்து, அவர்தம் உடல் நலத்தினை நன்கு பாதுகாப்பனவாம். இவ்விளையாடல்களின் இன்றியமையாமையினை உணர்ந்த பெற்றோர் தம் மகளிரை நன்றாக விளையாடி மகிழும்படி வற்புறுத்தினர். விளையாடும் மகளிர் கூட்டம் ஆயம் என்னும் சொல்லாற் குறிக்கப்பட்டது. வீட்டின் புறத்தே போந்து விளையாடும் பருவத்து இளமகளிர், தம்

தோழியர்களுடன் கூடி விளையாடி மகிழாது, வீட்டின் கண்ணே அடைபட்டிருத்தல் அறனும் ஆகாது; அவர்கள் உடலின் ஆக்கத்தையும் சிதைப்பதாகும்’, என அறிஞர் பலரும் அறிவுறுத்தினர். அதனால், இளமகளிர் எல்லாரும் புதுப்புனலாடியும், பூக்கொய்தும், மாலை முதலியன தொடுத்தணிந்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

விலங்கினின்றும் மக்களை வேறு பிரித்து உயர்த்துவது கல்வி, அத்தகைய கல்வியை ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலாரும் பயிலுதல் வேண்டும் என்பது பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையாகும். உருவும், திரு வும், அறிவும் முதலியவற்றால் தம்மோடு ஒத்த தகுதி வாய்ந்த மகளிரையே தமிழிளைஞர் மணந்து கொண்டனர். பெண்டிர் கல்வி பயிலுதற்கு உரியரல்லர் என்னும் பிழை பட்ட கொள்கை தமிழறிஞர்க்கு உடன்பாடன்றாம். அடக்கமும், அமைதியும், மனங்கோடாமையும், நன்றும் தீதும் பகுத்துணரும் நல்லறிவும், ஆராய்ந்துணர்தற்கு அரிய அருமைப் பண்பும் பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகுமெனப் பண்டைத் தமிழாசிரியர் வரையறுத்துக் கூறியுள்ளனர் [2]. இப்பண்புகள் யாவும், நிறைந்த கல்விப் பயிற்சியுடைய சான்றோர்கணல்லது ஏனைய பொது மக்களிடத்தே காணப்படாத அருமையுடையனவாகும். ஆகவே, மேற்குறித்த அருமைப் பண்புகளுக்கெல்லாம் நிலைக்களமாய் விளங்குதற்குரிய பெண்டிர், ஆடவர்களைப் போன்று நிறைந்த கல்வியுடையராதல் வேண்டுமென்பது தமிழ் முன்னோர் கொள்கையாதல் நன்கு விளங்கும்.

ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலார்க்கும் கல்வி பொதுவாயினும், ஆடவர் கல்வி பயிலும் முறை வேறாக

வேறாகவும், பெண்டிர் கல்வி பயிலும் முறை வேறாகவும் முன்னையோர் வகுத்திருந்தனர். பொருளீட்டலும், போர் செய்தலும், நாடு காத்தலும் முதலிய புறத்துறைக்குரிய முறையில் ஆடவர் கல்வி பயின்றனர். மனை வாழ்க்கையினை நடத்தலும், அன்பினால் மன அமைதியை வளர்த்தலும் ஆகிய குடும்பப் பணியினை நிகழ்த்தற்கு ஏற்ற முறையில் மகளிர் தம் வீட்டிலிருந்தே கல்வி பயின்றனர். அவர்கள் பயின்ற கல்வி வாழ்வாங்கு வாழும் பயனுள்ள கல்வியாய் அமைந்திருந்தது. உலகியற்பொருள்களின் இயல்பினையும் உயிர்களின் உள்ளத்துணர்ச்சிகளையும் உள்ள்வி உய்த்துணரும் நுண்ணறிவு பெண்களின் தனியுரிமையாகும்.

சங்ககாலத் தமிழ் மகளிர், இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் துறையிலும் சிறந்த புலமை பெற்றுத் திகழ்ந்தனர். இளம்பருவத்திலேயே உயர்ந்த புலமை பெற்று விளங்கிய நல்லிசைப் புலமை மெல்லியலார் பலர், பண்டைநாளில் வாழ்த்தனர். அவர்களுடைய அறிவுரைகளைச் செவிமடுத்த தமிழ் வேந்தர்களும் பொதுமக்களும் அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியிலே அடங்கியொழுகினார்கள். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள சங்கத்தொகை நூல்களில் ஐம்பதின்மர்க்குக் குறையாத பெண்பாற்புலவர்கள் பாடிய செய்யுட்கள் காணப்படுகின்றன. காக்கை பாடினியார் என்னும் பெயருடைய பெண்பாற் புலவர் இருவர் தமிழுக்குச் சிறந்த யாப்பிலக்கண நூல்களை இயற்றியுள்ளனர் [3]." 

இசைப்பயிற்சி மகளிர்க்கு இன்றியமையாததாகக் கருதப் பெற்றது. இசை பாடுதற்கு இனிய குரல் படைத்தவர் பெண்டிரேயாவர். இசைத்தமிழை வளர்த்தலில் ஆடவரைக்காட்டிலும் பெண்டிரே முதலிடம் பெற்றனர். யாழ் இசைத்தல், குழலூதுதல், தண்ணுமை (மிருதங்கம்) வாசித்தல் முதலாகக் கருவியாற்செய்யும் இசைத்தொழிலிலேயே ஆடவர் பயிற்சி பெற்றிருந்தனர். ஆடவரின் மிடற்றோசையைக்காட்டிலும், மகளிரது குரலே செவிக்கு இனிமை தருவதாகும். ஆதலால், கண்டத்தாற்பாடுக் தொழிலிற் சிறந்த பயிற்சியினைப் பெறுதல் மகளிர்க்கு வாய்ப்புடைய செயலாயிற்று. இசைத்தமிழில் வல்ல மகளிர் தம் இசையின் இனிமையினால் யானை முதலிய வலிய விலங்குகளையும் அடக்கியாளும் திறம் பெற்றிருந்தனர்.

மலைவாணர் மகளிர் தினைப்புனத்திலே தங்கிக் கிளி முதலியவை தினையை உண்ணாதபடி ஓட்டுவது வழக்கம். இரவுப் பொழுதிலே பரண்மீதமர்ந்து புனம் காக்குங் கானவனொருவன், கள்ளுண்ட களிப்பால் மயங்கி உறங்கினன். அந்நிலையிலே இளங்களிறொன்று தினப்புனத்திற் புகுந்தது. அதனையுணர்ந்த அவன் மனவியாகிய கொடிச்சி தன் மணங்கமழுங் கூந்தலைக் கோதிநின்று இரவிலே பாடுதற்கு ஏற்ற குறிஞ்சிப் பண்ணினை மிகவும் இனிமையாகப் பாடினாள். அமிழ்தென இனிக்கும் அவ்வின்னிசையினைச் செவி மடுத்த இளங்களிறு, தான் விரும்பி வந்த தினைக் கதிரையும் உண்ணாமல், தினைப் புனத்தினை விட்டுத் திரும்பிச் செல்லுதலையும் நினையாமல், எப்பொழுதும் எளிதில் மூடப்பெறாத தன் கண்கள் மூடுதலைப் பெற்று, நின்ற நிலையினின்றும் பெயராமல் உறங்கியது, என்ற செய்தி அகநானூற்றுப் பாடலொன்றிற் குறிக்கப்படுகின்றது.

இக்குறிப்பினை உற்று நோக்குங்கால், பண்டைக் தமிழ் மகளிர் பாடிய இசை, கொடிய விலங்குகளையும் அமைதியுறச் செய்யுங் திறமுடையதென்பது நன்கு தெளியப்படும். போரிற்புண்பட்ட தம் கணவரது நோயினைத் தாம் பயின்ற இன்னிசையாகிய மருந்தினால் மகளிர் தணிவித்த செய்தி புறப்பாடலொன்றிற் (281) கூறப்பட்டது.

சங்ககாலத் தமிழ் மகளிர், நாடகத் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்று விளங்கினர். உள்ளக் குறிப்பினைத் தம் உடம்பிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும் முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை 'விறல்' என்ற சொல்லாற் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந்திறம் மகளிர்க்கே உரியதாகும். விறல்பட ஆட வல்லவள் 'விறலி’ என வழங்கப் பெற்றாள்.

உள்ளத்திற்கு உவகையளிக்கும் நுட்பத் தொழில்களைக் கலையென்ற சொல்லால் வழங்குதல் மரபு. கவின் கலைகளைப் பயிலுதற்குச் சிறப்புரிமையுடையார் மகளிரேயாவர். ஆடலும் பாடலும் அழகும் அமைந்து, தாம் கற்று வல்ல கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி மகிழ்வளிக்கும் திறன் மகளிரது மதிநலமாகும். யாழும் குழலும் ஆகிய இசைக் கருவிகளை வாசித்தல், பந்தெறி களத்தில் நின்று திறம் பெறப் பந்தாடுதல், அமிழ்தனைய உணவமைக்கும் சமையற்றொழிலிற் பழகுதல், உடம்பிற் பூசுதற்குரிய நறுமணப் பொடியினை அமைத்தல், பருவநிலைக்குப் பொருந்த உணவு முதலியவற்றை அமைத்தொழுகுதல், பிறர் உள்ளக் கருத்தினக் குறிப்பினாலறியும் திறம் பெறல், தாம் எண்ணிய கருத்துக்களை மொழிநடையிற் பிழையின்றித் தொடுத்துக்கூறும் சொல் வன்மை பெறுதல், கண்களைக் கவரும்

ஓவியம் வரைதல், மலர் மாலை தொடுத்தல், கணக்கும் சோதிடமும் முதலிய நூற்றுரைகளை அறிதல் என்பன மகளிர் சிறப்பாகப் பயிலுதற்குரிய கலை விகற்பங்களாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி விளக்கும் கலைகள் பலவற்றையும் தமிழ் மகளிர் ஐந்தாம் வயது நிரம்பிப் பன்னிரண்டாம் வயது முடியவுள்ள ஏழாண்டுகளிலும் நன்றாகக் கற்றுணர்ந்தனர்.

கலை வளம் பெற்ற மாதர்கள், தாங்கள் இடைவிடாது போற்றுதற்குரிய நாணமும் கற்பும் அன்பும் அருளும் முதலிய நற்பண்புகளைத் தங்கள் உள்ளத்தில் நிலைபெற வளர்த்தும், தங்களே அணுகாது தடுத்தற்குரிய குற்றங்களை அறவே விலக்கியும், தங்களைத் தாங்களே நிறையினாற் காவல் செய்து ஒழுகினார்கள் : அரிய வினைகளைச் செய்து முடித்தற்கேற்ற வினைத்திறமும், அன்பும், அறிவும், வீரமும் முதலாகிய நற்பண்புகளும் நல்லொழுக்கமும் வாய்ந்த ஆண் மகனையே மணந்துகொண்டார்கள். முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள் தங்களால் வளர்க்கப் பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் ஆற்றலுடையானுக்கே தங்கள் மகளிரை மணஞ்செய்து கொடுத்தார்கள். 'கொல்லுந்தொழிலையுடைய காளைகளின் கொம்பின் கொடுமையினை நினைந்து அஞ்சும் இயல்புடையானை ஆயர் குலப் பெண் மறுபிறப்பிலும் மணந்துகொள்ள விரும்ப மாட்டாள்,'[4] எனச் சோழன் நல்லுருத்திரனார் என்னும் புலவர் பெருமான் கூறும் மொழி அக்காலத் தமிழ் மகளிரின் விருப்பத்தினை நன்கு வெளிப்படுத்துவதாகும். மகளிரை மணந்துகொள்பவர் அம்மகளிர் அணிதற்குரிய அணிகலன்களுக்கெனப் பெரும்பொருளைப் பரிசமாகக் கொடுப்பது அக்கால வழக்கமாகும். பரிசப் பொருளை



விரும்பித் தகுதியில்லாதானை மணந்துகொள்ளும் வழக்கத்தினைத் தமிழ் மகளிர் வெறுத்து விலக்கினர். ‘நன்மை அமைந்த பெரும்பொருளைப் பரிசமாகக் கொடுப்பினும், உயர்ந்த தகுதியில்லாதானை என் மகள் மணந்துகொள்ள மாட்டாள்’ என்று சொல்லித் தந்தையொருவன் பெண் கொடுக்க மறுத்த செய்தி புறநானூற்றுப் பாடலொன்றிற் கூறப்படுகின்றது [5].'

கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழும் மகளிர், வாழ்க்கைத் துணையெனப் பாராட்டப் பெற்றனர். மனையின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தும் உரிமை மகளிர்க்கே வழங்கப் பெற்றது. அதனால், ‘மனைவி, இல்லாள்’ என்ற பெயர்கள் பெண்களுக்கு உரியவாயின. இவ்வாறு மனையின் உரிமையினைக் குறித்தற்குரிய பெயர்கள் ஆண் பாலார்க்கு வழங்காமையால், மனையறக் கடமைகளில் மகளிரே பொறுப்புடையராய் விளங்கினர் என்பதை அறியலாம். பல்வேறு தொழில்களிற் கருத்துடையராய் இடைவிடாது வினை செய்து உழலும் ஆடவர்களை வினை முடிவின்கண் வீட்டில் அமைதியாகத் தங்கியிருக்கச் செய்து மனை வாழ்க்கைக்கு விளக்கம் தருவார் மகளிரேயாவர். இவ்வாறு மனை வாழ்க்கையிற் பொலிவினைத் தரும் மனைவியை "மனைக்கு விளக்காகிய வாணுதல்"[6] எனப் புலவரொருவர் பாராட்டிப் போற்றுகின்றார்.

தன்னால் தொழப்படும் தெய்வம் வேறு, தன் கணவன் வேறு என்று கருதாமல், கணவனையே வழிபடுதெய்வமாகக் கருதி, அன்பினால் அடங்கியொழுகுதல் பண்டைத் தமிழ் மகளிரின் பண்பாகும். உறக்கத்தினை விட்டு எழுதற்குரிய விடியற்காலையில் தெளிந்த சிந்தையுடன் வழிபடு

கடவுளை வணங்கியெழுவது உலகியல், ‘தெய்வத்தை முதற்கண் தொழுது நின்று எழாது, தன் கணவனையே முதற்கண் வணங்கி கின்று துயிலெழுவாள், ‘பெய்’ என்று சொன்ன அளவிலே மழை பெய்யும்’, என்றார் தெய்வப் புலவர்.

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

என்பது திருக்குறள் (55), இங்கனம் கூறுதலால், பெண்கள் கடவுளே வணங்கக் கூடாதென்பது ஆசிரியர் திருவள்ளுவனாருடைய கருத்தெனக் தவறாக எண்ணிவிடுதலாகாது; காலைப் பொழுதில் எழுந்து கடவுளை வழிபடுதற்கு முன் தமக்குக் கட்புலனாகுந் தெய்வமாகிய கணவனை முதற்கண் வழிபடுதல் வேண்டுமென்பதே ஆசிரியர் கருத்தாகும்.

தம்மாற் காதலிக்கப் பெற்ற தலைவனையே மணந்து கொள்ளவேண்டுமென்ற விருப்பத்தால் மகளிர் இறைவனை மலர் தூவி வழிபடுதல் மரபாகும். ‘மலைவாணர் மகளொருத்தி, தன்னால் விரும்பப்பட்ட தலைவனுக்குங் தனக்கும் விரைவில் மணம் நிகழ வேண்டுமென்ற பேரார்வத்தால், தம் குலமுதற்கடவுளாய் மலையில் எழுந்தருளியுள்ள இறைவனை நன்னீருடன் நறுமலர்களைக் கையிற்கொண்டு அருச்சித்து வழிபட்டனள்’, என ஐங்குறு நூற்றுப் பாடலொன்றிற் கபிலர் (259) கூறுகின்றார்.

சிவபெருமான், மாயோன், முருகன் முதலாய தெய்வங்களுக்கு வழிபாடு செய்தற்கென அந்தியிற் செய்யத் தொடங்கிய திருவிழாவிலே மதுரை நகரத்தில் வாழும் பேரிளம்பெண்டிர் தாமரைப் பூவினைக் கையிலே பிடித்தாற்போன்று தாம்பெற்ற இளங்குழந்தைகளைக் கையினால் தழுவிக்கொண்டு, தம் கணவருடன் பூசைக்கு வேண்டும் பூவும் நறும்புகையுமாகிய பொருள்களோடு

திருக்கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டனர்’, என மாங்குடி மருதனார் கூறுகின்றார் [7] . திருப்பரங்குன்றத்தை அடைந்த மகளிர் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்ட இயல்பினைச் சங்க நூலாகிய பரிபாடல் இனிது விளக்குகின்றது. 'யாம் எம் காதலரைக் கனவிலே மணந்தது பொய்யாகாமல், நனவின்கண் எம் திருமணத்தினை நிறைவேற்றியருளுக !’ என மணமாகாத மகளிர் முருகனை வேண்டிக் கொண்டனர்.மணஞ்செய்துகொண்ட மகளிர், ‘எம் வயிறு பிள்ளைப்பேறு வாய்ப்பதாகுக !’ எனவும், ‘எம் கணவர் செய்யும் செயல்கள் நன்கு நிறைவேறுக !’ எனவும், ‘எம் கணவர் போரில் வெற்றி பெறுவாராக !’ எனவும் வேண்டி நின்று முருகப் பெருமானை அன்புடன் வழிபட்டனர். மணந்துகொண்ட பெண்டிர் தம் கணவரது இனிய மகிழ்ச்சியுடன் கூடிய பேரன்பினைப் பெறுதல் கருதியும், மணமாகாத கன்னியர் அறிவு திரு ஆற்றல்களாற் குறைவற்ற மைந்தரை மணந்துகொள்ளுதல் கருதியும் இவ்வழிபாட்டிற் கலந்துகொண்டனர் எனப் பரிபாடலிற் புலவரொருவர் குறிப்பிடுகின்றார்.

மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழா நடைபெற்றதெனவும், அவ்விழா முடிந்த பின்னர் மதுரை நகரத்து இளமகளிர், 'இவ்வுலகம் மழையாற் குளிர்வதாக!' எனத் தாயருகே நின்று கடவுளை வணங்கித் தைந்நீராடினர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலிற் கூறுகின்றார். இத் தைந்நீராடல் மகளிர் மேற்கொள்ளுதற்குரிய தவச் செயல்களுள் ஒன்றாகக் கலித்தொகையிற் குறிக்கப்படுகின்றது [8]. மனைவியுடனும் தாய் தந்தையருடனும் பிள்ளைகளுடனும் சுற்றத்தாருடனுங்கூடித் தெய்வத்தை வழிபட வேண்டும்.’ எனப் பெரியோர் அறிவுறுத்தியபடி சங்க காலத் தமிழ் மக்கள் கடவுள் வழிபாட்டு முறையை அமைத்துக்கொண்டார்கள். அவ்வழிபாட்டில் நம்பிக்கையும் உறுதியுமுடையவர்களாய் முன்னின்று தம் கணவர்க்கும் புதல்வர் முதலியவர்க்கும் இன்றியமையாத தற்பொருள்களை வேண்டிப் பெறுதல் பெண்டிரது செயலாக அமைவதாயிற்று.

கணவர் உலகியற்கடமை நோக்கித் தம்மைப் பிரிந்து சென்ற காலத்து, அவருடைய பிரிவிற்கு வருந்தாது குறித்த நாளளவும் ஆற்றியிருந்து மனையறம் நிகழ்த்துதல் பெண்ணியல்பு எனப் பாராட்டப்படுவதாம். தம் கணவரையே உயிராகக் கருதும் ஒருமை மகளிர், சிறையின் வழுவாமல் தம்மைத் தாமே காத்துக்கொள்ளும் உறுதி புடையாராவர். இத்தகைய உறுதியால் உள்ளத் திண்மை பெற்ற கற்புடை நங்கையை மனைவியாகப் பெறுதலைக் காட்டிலும் ஒருவன் அடைதற்குரிய சிறந்த பேறு வேருென்றுமில்லையென ஆசிரியர் திருவள்ளுவர் வற்புறுத்துக் கூறுகின்றார்.[9]

கணவனை உணவு முதலியவற்றாற் பேணிக் காத்தலும், அவனது வருவாய்க்குத் தக்கபடி ஆரவாரமற்ற நிலையிற் குடும்பச் செலவினை அமைத்துக்கொள்ளுதலும், பெற்றது கொண்டு உள்ளத்திருந்தும் அமைதியினை உடையளாதலும், பெரியார்களையும் விருத்தினர்களையும் பேணிப் போற்றுதலும், தன் அறிவின் திறத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் அமைந்து ஒழுகுதலும், தன் குடும்பத்திற்குப் புகழுண்டாக்குதலும் மனைவியின் மாண்புகளெனப் பாராட்டப்படும் நற்குண நற்செய்கைகளாகும்.

'பிறந்த வீட்டிலிருந்து நுகரும் இனிய தேன் கலந்த பாலைக்காட்டிலும், என் தலைவனுடன் சென்ற காலத்து பருகிய மான உண்டு எஞ்சிய கலங்கற் சின்னீர் எனக்குப் பெரிதும் சுவையுடையதாயிற்று எனத் தமிழ் நங்கையொருத்தி கூறுகின்றாள்.[10] கணவன் குடும்பமோ, வறுமை திலையடைந்தது. பெண்ணின் தந்தையோ, மிகப் பெரிய செல்வமுடையவன். தந்தை தன் மகள் வீட்டிற்கு வேண்டிய உணவு முதலிய பொருள்களை நிறையக் கொடுத்தனுப்பினான் தந்தையின் பொருளைப் பெற்றுத் தாம் இனிதாக வாழ்தல் தகுதியன்று எனவுணர்ந்த தலைவி அப்பொருளைக் கொள்ளாது, தன் கணவன் ஈட்டிய சிறு பொருளை வைத்துக்கொண்டு ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்டு தன் குடும்பத்தைப் போற்றி வரும் செம்மை பெற்றாள்,' என்ற அருமையான நிகழ்ச்சி நற்றினைப் பாடலிற் (110) குறிக்கப் பெறுகின்றது. தம் குடும்பத்தின் வறுமையினைத் தந்தைக்கும் புலப்படுத்திக்கொள்ளாத செம்மனச் செல்வியாாய்த் தமிழ் மகளிர் வாழ்ந்தமை மேற்காட்டிய குறிப்பினால் நன்கு புலனும் தேவருலகத்தில் நகரப் பெறும் இன்பத்தைவிடத் தம் கணவனுடனிருந்து நகருந் துன்பம் மிகவும் இனியதென்பது தமிழ் மகளிர் கருத்து. குடும்ப வாழ்க்கையில் உண்டாகுதந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு தம் கடமையைச் செய்யுந் திறம் தமிழ் மகளிரின் தனிச் சிறப்பாகும்.

தம்முடைய செல்வமனையை நீங்கி வெளியே நடந்தறி. யாத பேரெழில் வாழ்க்கையினராகிய கண்ணகியார், தம் கணவனாகிய கோவலன் 'மதுரைக்குப் புறப்படுக,' என்ற அளவில் உடனே புறப்பட்டுக் கால்கோப்புளங் கொள்ளும் படியாகக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்கு நடந்து சென்ற வரலாறு, கேட்போரது உள்ளத்தையுருக்கும் தன்மையினதாகும். கண்ணகியாருடைய சீறடிகளின் மென்மையினையறிந்து அவர்தம் மென்மைக்கேற்ப சில மகள் நெகிழ்ந்து கொடுக்கவில்லையேயென அவருடன் சென்ற கவுந்தியடிகள் இரங்குகின்றார், வெயிலின் வெம்மையால் தம் கணவனது உடல்வாடியதே என்று நடுக்கமுற்று வருந்திய நிலையில் தம் துயரத்தினை ஒரு சிறிதும் உளங் கொள்ளாத பெருமை கண்ணகியாரிடம் அமைந்திருந்தது. 'இவ்வாறு இனிய வாழ்க்கைத் துணையாகிய மகளிர்க்கு இன்றியமையாத கற்பு மாண்பினையுடைய கண்ணகியாகிய இத்தெய்வமல்லது இதனினும் சிறந்த அழகுமிக்க தெய்வத்தை யாம் கண்டிலேம்!' எனக் கவுந்தியடிகளாகிய தவச் செல்வியார் கண்ணகியாரைப் புகழ்ந்து போற்றுகின்றார். 'பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு கால மழை பொய்த்தறியாது ; விளைவு குறைந்து வளம் பிழைத்தலை அறியாது ; வேந்தரது வெற்றி சிதைந்தறியாது,' என நல்லார் பலரும் பாராட்டியதற்கேற்பச் செங்குட்டுவன் என்னும் சேரமன்னன் பத்தினித்தெய்வமாகிய கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு நிகழ்த்திய செயலினையும் அதனை உணர்ந்த ஏனைய தமிழ் வேந்தர்களும் இலங்கை வேந்தனாகிய கயவாகுவும் தங்கள் தங்கள் நாட்டிற் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியாரை வழிபட்ட இயல்பினையும் சேரமுனிவராகிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகப் பாராட்டினமை இவண் கருதற்குரியதாம்.

அமிழ்தினும் இனிய உணவினைச் சுவை மிகச் சமைத்துத் தம் கணவனை உண்பித்தலிற் போார்வமுடையராதல் பெண்டிரின் இயல்பாகும். தான் அன்பினாற் சமைத்த நல்லுணவினை மிகவும் இனியது எனச் சொல்லித் தன்

கணவன் உண்ணுதலைக் கண்டு மகிழ்தலைக் காட்டிலும் மனைவிபொருத்தி பெறுதற்குரிய சிறந்த மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. தலைமகள் ஒருத்தி சுவை மிக்க புளிக் குழம்பினை அமைத்துத் தன் கணவனை உண்பித்த திறத்தினைக் குறுந்தொகைப் பாடலொன்றிற் (167) புலவர் நயம் பெற விளக்குகின்றார், தலைவனும் தலைவியும் மனையறம் நிகழ்த்தும் வீட்டிற்குச் சென்று வந்த செவிலித்தாய், தலை மகளது குடும்ப வாழ்க்கையின் சிறப்பினை நற்றாய்க்குக் கூறுவதாக அமைந்தது அச்செய்யுள். 'அடுக்களையில் அலுவல் மிகுதியால் நெகிழ்ந்த ஆடையினைத் தயிர் பிசைந்த கையினால் விரைந்து இறுகவுடுத்துக்கொண்டு, தாளிப்பின் குறும்புகை தன் கண்ணிற்படித்து மணங்கமழ நன்றாகத் துழாவிச் சமைத்த புளிக்குழம்பினைத் தன் கணவன் மிகவும் சுவையுடையதென்று விரும்பி உண்ணுதலைக் கண்டு தலைவியின் முகம் மகிழ்ச்சிக் குறிப்புடன் விளங்கியது,' என்பது அச்செய்யுளின் பொருளாகும்.

தமிழ் நாட்டு மகளிர் விருந்தினரை உபசரித்தலில் மிகவும் திறமுடையவராவர். தம்மிடம் உள்ள பொருள் மிகக் குறைவாயினும், வந்த விருந்தினர் பலர் என்று கருதாமல், எல்லாரையும் இன்முகத்துடன் உண்பிக்கும் இயல்பு அவர்கள்பால் அமைந்திருந்தது ; அதனால், குறைந்த செலவிலே நிறைந்த பயன்களை உண்டாக்கும் ஆற்றல் பெற்றவர்களாய் விளங்கினார்கள். உண்மைக் காதல் வயப்பட்ட மகளிர், தம் கணவர் தம்முடன் அளவளாவுதலில் தவிர்ந்தொழுகுவராயினும், அவர்களிடத்துத் தாம் கொண்ட அன்பில் ஒரு சிறிதும் குறைந்தொழுகுவாரல்லர். "சிறுபிள்ளைகள் தாங்கள் விளையாடுதற்குரிய சிறு வண்டியினே ஏறிச் செலுத்த முடியாவிட்டாலும், இழுத்து

கடந்து இன்புறுதல் போல, என் கணவரை முயங்கி இன்புறேனாயினும், அவர்க்குரிய அடித்தொண்டுகளைச் செய்து இன்புற்றேன்", எனத் தலைவியொருத்தி கூறுகின்றாள்."[11]

பகைவர் முன்னே ஆண் சிங்கத்தினைப் போலத் தலை நிமிர்ந்து நடக்கும் ஆண்மையினைத் தம் கணவர்க்கு அளிக்க வல்லவர் கற்புடைப் பெண்டிரேயாவர். இவ்வாறு தாம் புகுந்த குடும்பத்திற்கு ஆக்கக் தருதல்போலத் தாம்பிறந்த குடியிலுள்ளார்க்கு வெற்றியும் புகழும் விளைவிப்பாரும் அம்மகளிரே என்பது அறிஞர் கொள்கை. "மலை வாணர் மகளிர் தம் கணவரைத் தெய்வமென்று வணங்கி எழுதலைத் தமது கடமையாகக் கொண்டமையால், அவருடன் பிறந்த ஆடவர் தாம் தொடுத்த அம்புகளை இலக்குத் தப்பாமல் எய்யும் ஆற்றல் பெற்றனர்,” எனக் கபிலர் குறிஞ்சிக்கலியிற் (39) குறிப்பிடுகின்றார்.

தமிழ் மகளிர் தம் கணவனைப் பிரியாது. வாழும பெற்றியினராவர். தம் ஆருயிர்த் தலைவன் இறக்க நேர்ந்தால், நெஞ்சு கலங்கி, அவனது பிரிவாற்றாது உடனுயிர் விடும் பெருங்கேண்மை செந்தமிழ்ப் பெண்களின் சிறந்த பண்பாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது அரசியல் பிழைத்தமைக்கு இரங்கி உயிர் துறந்த பொழுது அவன் மனைவியாகிய கோப்பேருந்தேவி தன்னுயிர் கொண்டு அவனுயிரைத் தேடிச் செல்வாள் போலத் தான் உடனே உயிர் துறந்தமை தமிழ் நாட்டுப் பெண்களின் தலையாய கற்பினை இனிது புலப்படுத்துவதாம். கணவன் இறந்தமைக்கு இரங்கிய மகளிர் தீ வளர்த்து அதன்கண் வீழ்ந்து இறத்தலும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்த பொழுது அவன் தேவியாகிய பெருங்கோப்பெண்டு, சான்றோர் பலர் விலக்கவும் கேளாது, தீப்பாய்ந்து உயிர் நீத்த செய்தி இதனை வலியுறுத்தும்.

கணவன் இறந்தமையால் புதல்வர் முதலிய குடும்பத்தவர்களே வளர்க்குங் கடமையினை மேற்கொண்ட மகளிர், ஒரு நாளைக்கு ஒரு வேளையே உணவருந்திக் கைம்மை நோன்பினை மேற்கொண்டனர். கணவனேயிழந்த நிலையில் ஆதரவற்ற இம்மகளிர், பிறருடைய உதவியினை எதிர் பாராது பருத்திப் பஞ்சினை நூலாக நாற்றுத் தம் குடும்பத்தைப் பாதுகாத்தனர். இவர்கள் தம் குடும்ப வருவாய்க்குரிய தொழிலாக நால் நூற்றலை மேற்கொண்டமையால், 'பருத்திப் பெண்டிர்' என்ற பெயரால் தமிழிலக்கியங்களிற் குறிக்கப் பெற்றனர்.

குழந்தைகளை வளர்த்தல் தாயின் கடமையாகும் தன் பிள்ளைகள் நல்ல உடல் திண்மையும் உள்ளத்திண்மையும் பெற்றுச் சான்றோராக விளங்க வேண்டுமென்பதே தாயின் பெருவிருப்பாகும். பிள்ளைகளின் இளம்பருவத்திலேயே அவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்தலில் தமிழ்த் தாயர் கருத்துடையாராயிருந்தனர்; தம் உயிரனைய தமிழ் மொழியினைத் தம் பிள்ளைகளுக்குத் திருத்தமுறக் கற்பித்தனர்; தெருவில் நடை பழகும் குழவிப் பருவத்திலேயே தம் பிள்ளைகளுக்குச் செந்தமிழ் நடையினைத் தெளிவாகக் கற்பித்தனர்; தாம் கற்பித்த சொற்கள் சிலவற்றை மழலை நாவினாற் குழந்தைகள் கூறக் கேட்டுப் பெரிதும் இன்புற்றனர்; அறத்திற் போர் செய்து வெற்றி பெறுதலும், தம்மிடமுள்ள பொருளை இல்லாதார்க்கு வரையாது வழங்குதலும் ஆகிய நற்செயல்களையே விரும்பி மேற்கொள்ளும்படி தம்மைந்தர்களுக்கு அறிவுறுத்தினர்; குழந்தைகளின் உள்ளம் தீச்செயலிற் செல்லாதபடி தடுத்துக் காத்தனர். எல்லாப் பண்புகளும் நிரம்பப் பெற்றுச் சால்புடைய பெரு வீரர்களாய் விளங்குதற்குரிய நல்லுணர்ச்சியினைத் தமிழ் மக்களுக்கு ஊட்டிய பெருமை தமிழ் நாட்டுப் பெண்பாலார்க்கே சிறப்பாக உரியதாகும்.

வீரக்குடியிற் பிறந்த மகளிர் 'மூதின் மகளிர்' எனப் போற்றப் பெறுவர். இவர் தம் இயல்பினைப் புறநானூற்றுச் செய்யுளால் நன்குணரலாம்.

'நரம்புகள் எழுந்து தசையுலர்ந்த உடம்பினை உடைய முதுமகளொருத்தி, தன் மகன் போர்க்களத்தில் முதுகிற் புண்பட்டுத் தோற்றான் என்று சிலர் தவறாகக் கூறியதனைக் கேட்டாள். 'போரிலே என் மகன் புறமுதுகிட்டிருப்பானானால், அவனுக்குப் பாலூட்டிய என் மார்பினை அறுத்திடுவேன்! எனச் சினங்கொண்டு போர்க் களத்திற்குச்சென்று, அங்குள்ள பிணக்குவியலில் தன் மகன் உடம்பைத் தேடினாள். மார்பிற்புண்பட்டுச் சிதைந்த மகனுடம்பைக் கண்டு, அவனே சான்றோன் எனவுணர்ந்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி அடைந்தாள்,' என்று காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் கூறுகின்றார்.

மறக்குடியிற்பிறந்த மற்றொரு பெண், முதல் நாட் போரில் தன் தமையனும், அடுத்த நாட்போரில் தன் கணவனும் இறந்த நிலையில் தன் குடிக்கு ஒருவனாயுள்ள இளஞ்சிறுவனை வேல் கைக்கொடுத்துப் போர்க்களத்திற்கனுப்பினாள் என ஒக்கூர் மாசாத்தியரர் கூறுகின்றார். மூதின்மகளிராகிய இவர்களுடைய வீரச் செயல்கள் தமிழ் மக்களின் மறவுணர்ச்சியினை வெளிப்படுத்துவனவாம்.

நாட்டில் அடிக்கடி போர் நிகழ்ந்தமையால், ஆடவர் தொகை சுருங்கி மகளிர் எண்ணிக்கை பெருகுவதாயிற்று. அதனால், மணந்துகொள்ளும் வாய்ப்பில்லாத மகளிர் ஆடலும் பாடலும் அழகும் என்ற மூன்றிலும் குறைவின்றி மாந்தர் மனத்தைப் பிணிக்கும் இசை நாடகம் ஒவியம் முதலிய அழகுக் கலைகளிற் பொழுது போக்குவாராயினர். உள்ளத்திற்கு உவகையளிக்கும் அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு கற்றுத் துறை போகிய இவர்கள், ஒருவனுக்கே உரிமை பூண்டொழுகும் திறமின்றிப் பொது மக்கள் எல்லாரையும் இன்புறுத்தும் அழகுக் கலைகளை வளர்த்து வந்தார்கள்; ஆதலால், "எண்ணெண் கலையோர்"[12] எனப் பாராட்டப் பெற்றார்கள். ஒருவனுக்கே உரியராய் வாழும் நியதியின்றி, அயலாராகப் பழகுதலின், இவர்கள் 'பரத்தையர்' என வழங்கப் பெற்றனர். இவர்கள் ஒருவனுக்கே உரிமை பூண்டு மனையறக் கடமைகளை நன்கு நிகழ்த்தி வாழ்தலும் உண்டு. கோவலனுடைய காதற்கிழத்தி மாதவியின் நிறையுடைமை இவண் நினைக்கத் தகுவதாம்.



  1. ஐங்குறு நூறு, 257.
  2. தொல்காப்பியம், பொருளியல், 14
  3. காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம் என வழங்கும் யாப்பியல் மேற்கோட் சூத்திரங்கள் இவ்வுண்மையினைப் புலப்படுத்தும்.
  4. கலி. 103
  5. புறம் 343
  6. புறம் 314.
  7. மதுரைக் காஞ்சி
  8. கவி. 59.
  9. 1. திருக்குறள், 54
  10. 1. ஐங்குறு நூறு 203.
  11. 1.குறுந்தொகை 51
  12. 1. சிலப்-ஊர்காண்-167.