சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/1

விக்கிமூலம் இலிருந்து

சங்ககிரிக் கோட்டையின்
மர்மம்
[1]

லீவு வந்தது!

'“இந்தத் தடவை நீங்கள் மூன்று பேரும் சங்ககிரியிலுள்ள பாட்டி வீட்டுக்குப் போகலாம்” என்றார் தங்கமணியின் தந்தையான வடிவேல். இவர் சென்னையிலே வேலை செய்யும் ஒரு தத்துவப் பேராசிரியர்.

“மாமா, வேண்டாம்” என்று வாய்விட்டுக் கத்திவிட்டான் சுந்தரம். இவன் கோடை விடுமுறையின் போது தன் மாமா வீட்டுக்கு வருவது வழக்கம். மதுரையில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.

“ஆமாப்பா, பாட்டி வீடே வேண்டாம்” என்று சிணுங்கினாள் தங்கமணியின் தங்கை கண்ணகி. ஆறாம் வகுப்பில் படிக்கும் கண்ணகிக்கும் இப்பொழுது விடுமுறை.

தந்தை சிரித்துக் கொண்டே “ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“மாமா, உண்மையைச் சொல்லி விடுகிறேன். போன தடவை கோடை விடுமுறைக்குப் போனோமே அந்தப் பாட்டி படுபோர்” என்றான் சுந்தரம். “ஆமாப்பா, எங்களை எங்குமே பாட்டி தனியாகப் போக விடவே இல்லை. நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?” என்று தங்கமணி இடையிலே சொன்னான். தங்கமணிதான் எல்லாருக்கும் பெரியவன்; பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.

தந்தைக்கு விஷயம் விளங்கிவிட்டது, அவர், “அந்தப் பாட்டியைப் போல அல்ல இந்தப்பாட்டி. நீங்கள் கை கால்களை முரித்துக்கொண்டு வந்தாலும், ‘சின்னவயசிலே இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கவலைப்பட மாட்டாள். ஆனால் வேண்டிய சிகிச்சையை உடனே கவனிப்பாள். இந்தப் பாட்டியின் போக்கே தனியாக இருக்கும்”. என்று அவர்களுக்கு உற்சாகம் வரும்படி பேசினார்.

“அப்பா, சங்ககிரியிலே என்னவெல்லாம் பார்க்கலாம்?” என்று ஆவலோடு கேட்டாள் கண்ணகி.

“அங்கே சங்ககிரி என்ற ஒரு மலை இருக்கிறது. அதிலே திப்புசுல்தான் கட்டிய கோட்டைச் சுவர்களும் உண்டு, அங்கே பல அதிசயங்களைக் காணலாம்” என்ற பதிலைக் கேட்டதும் மூவருக்கும் குஷி பிறந்து விட்டது.

“அப்பா, அங்கே கோட்டைக்குள் போக விடுவார்களா?” இது கண்ணகி.

“திப்புசுல்தான் கட்டிய கோட்டை என்றால் அங்கே சண்டை நடந்ததா?”-- இது தங்கமணி.

“அங்கே பீரங்கிகளெல்லாம் உண்டா?” --இது சுந்தரம்.

இப்படி மூவரும் பதிலுக்குக் காத்திராமல் ஒரே மூச்சில் பேசினார்கள்.

“மூன்று பேரும் ஒரே மூச்சில் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது? எல்லாம் அங்கே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சுருக்கமாகப் பதில் கிடைத்தது. இவர்கள் இவ்வளவு உற்சாகமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜின்கா மேஜைமேல் தாவி நின்று ஜிங் ஜிங் என்று குதித்தது. அந்தக் குரங்கு அப்படிக் குதிப்பதால் தான் அதற்கு ஜின்கா என்ற பெயர் ஏற்பட்டது. தங்கமணி செல்லமாக வளர்த்து வருகின்ற குரங்கு அது. எத்தனையோ தீரச் செயல்களை அது புரியவல்லது.

பிறகு வழக்கம்போல தங்கமணியின் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் கூர்ந்து கவனித்தது. தங்கமணி ஜின்காவை மிகுந்த பிரியத்தோடு தட்டிக் கொடுத்தான் அதற்கு அவன் பலவகையான உபயோகமான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்திருந்தான். தங்கமணியின் குறிப்பறிந்து அதன்படி, நடப்பதில் ஜின்கா புகழ்பெற்றிருந்தது.

சங்ககிரிக்கு அடுத்த நாள் நீலகிரி எக்ஸ்பிரசில் போவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அதற்கு வேண்டிய பயணச் சீட்டுகளும் முன்னாலே ரிசர்வ் செய்ததோடு சங்ககிரிப் பாட்டிக்கும் தகவல் எழுதிப் பதிலும் கிடைத்திருந்தது.

ஒரு மாதம் சங்ககிரியில் இருப்பதற்கான துணிமணிகளையும், சோப்பு, கண்ணாடி முதலியவற்றையும் எடுத்துப் பெட்டியிலே வைப்பதில் மூவரும் அடுத்த நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள்.

“கண்ணகி, உன்னுடைய பவுடர் டப்பாவை எடுத்து வைத்தாயா? அதில்லாமல் நீ வெளியே கிளம்ப மாட்டாயே?” என்று கேலியாகக் கேட்டான் சுந்தரம்.

“அதை வைக்க மறந்துவிட்டேன், நல்ல வேளை நீ ஞாபகப்படுத்தினாய்” என்று கூறிவிட்டு பவுடர் டப்பாவை எடுக்க ஓடினாள் கண்ணகி.

அவளையும் முந்திக் கொண்டு ஜின்கா தாவிக் குதித்து அந்த டப்பாவை எடுத்து வந்தது. வந்த அவசரத்தில் அது தடுக்கி விழுந்ததால் பவுடர் ஜின்காவின் முகத்திலும், உடம்பிலும் கொட்டிவிட்டது. பாதி டப்பா காலியாகிவிட்டது.
எல்லாம் ஜின்காவின் முகத்திலும் உடம்பிலும்தான் என்றால் கேட்கவேண்டுமா?

அப்பொழுது ஜின்கா விநோதமாகக் காட்சி அளித்தது. அதைக் கண்டு மூவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.