உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/002-150

விக்கிமூலம் இலிருந்து

சண்பகம்
மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகத்தைக் கபிலர் ‘பெருந்தண் சண்பகம்’ (குறிஞ். 75) எனக் குறிப்பிடுவர். இங்ஙனமே நக்கீரரும் (திருமு. 26-27) நல்லந்துவனாரும் (கலி. 150:20-21) இதனைப் ‘பெருந்தண் சண்பகம்’ என்றே கூறுகின்றனர். சண்பக மலர் மஞ்சள் நிறமான நறுமணம் உள்ளது. பெரிய மரத்தில் பூப்பது. சண்பக மரம் இந்நாளில் திருக்குற்றாலத்தில் நன்கு வளர்கிறது. இதனைச் சண்பகம் என்றுதான் அழைக்கின்றனர். சங்கப் பாடல்களில் ‘சண்பகம்’ என்ற தனிப்பெயர் காணப்படவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம், செண்பகம், செம்பகம்
தாவரப் பெயர் : மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகம் இலக்கியம்

பத்துப் பாட்டில் நக்கீரரும், கபிலரும், பரிபாடலில் நல்லந்துவனாரும். ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவது, ‘சண்பகப்பூ’வைக் குறிக்கும்.

“துவர முடித்த துகள் அரும்முச்சி
 பெருந்தண் சண்பகம் செரீஇ”
-திருமுரு. 26-27

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ் 75

“அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
 பெருந்தண் சண்பகம் போல”
-கலி. 150:20- 21

சண்பக மரம் தமிழ் நாட்டில் சில இடங்களில் வளர்கிறது. திருக்குற்றாலத்தில் இளவேனிற் காலத்தில் பூக்கின்றது. இதனைப் பாலைக்குரிய மலர் என்பர் . இதன் மலர் மஞ்சள் நிறமானது. நறுமணம் உள்ளது. சிவபெருமானுக்குரியது. பூசைக்குரிய எண் வகை மலர்களில் ஒன்று. சிவபெருமான் நிறத்தைக் குறிக்கும் பொருள்பட மலர்ந்த, ‘பெருந்தண் சண்பகம்’ என்றார் நல்லந்துவனார். சூரர் மகளிர், வேண்டுவனவற்றைக் கூட்டி முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகினார் என்பர் நக்கீரர். ஒரு சில மலரழகைப் புலப்படுத்தும் திருத்தக்க தேவர், இப்பூவின் வடிவமைப்பையும் நிறத்தையும் சேர்த்து, ஓர் உவமையால் விளக்குகின்றார்:

“ஓடுதேர்க்கால் மலர்ந்தன்ன வகுளம், உயர்சண்பகம்
 கூடுகோழிக் கொடுமுள்ளரும்பின்”[1]

சண்பக மலர் அலர்ந்த போழ்து போர்ச் சேவலின் காலில் உள்ள (முள்ளை) நகங்களைப் போன்றிருக்கும் என்று வடிவத்தையும் மஞ்சள் பாவிய செம்மை நிறத்தையும் அப்படியே குறிப்பிடுகின்றார். வண்டுறை மலர்களின் பட்டியலில், இப்பூவும் இடம் பெற்றுள்ளது. ‘வண்டறைஇய சண்பகம்’ என்பார் பரிபாடலாசிரியர் (பரி. 11:18).

கவி மரபில், இதனை மகளிர் நிழல் பட்டால் மலரும் என்பர். எனினும், கட்டியங்காரன் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நோன்பு மேற்கொண்டதைக் கூறும் திருத்தக்கத் தேவர், இவர்களைச் சண்பகப் பூவின் வாடலுக்கு உவமித்துள்ளார்.

“தாதார்க் குவளைத் தடங்கண் முத்துருட்டி விம்மி
 மாதார் மயில் அன்னவர் சண்பகச் சாம்பலொத்தார்”[2]

தாவரவியலில் சண்பகம் மக்னோலியேசி (Magnoliaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இக்குடும்பத்தில் 18 பேரினங்களும் ஏறக்குறைய 300 இனங்களும் உள்ளன. இவை பெரிதும் ஆசியாவின் வெப்ப நாடுகளிலும் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. இவற்றுள், இந்தியாவில் 8 பேரினங்கள் வளர்கின்றன என்பர் ‘ஹுக்கர்’ . தாவரவியலில் சண்பக மரத்தை ‘மைக்கீலியா’ என்றழைப்பர். இப்பேரினத்தில் 8 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. நீலகிரியில் வாழும் ‘மைக்கீலியா நீலகிரிகா (Michelia nilagirica) என்ற சிறுமரம், ‘சண்பகம்’ என்றே அழைக்கப்படுகிறது. இதன் மலர் வெண்மையானது. அகவிதழ்களில் உட்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும்; சிறந்த மணமுள்ளது. இவ்விரண்டு மலர்களுமே மாலையாகக் கட்டிச் சூடிக் கொள்ளப்படும்.

சண்பகம்
(Michelia champaca)

சண்பகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
தாவரக் குடும்பம் : மக்னோலியேசி (Magnoliaceae)
தாவரப் பேரினப் பெயர் : மைக்கீலியா (Michelia)
தாவரச் சிற்றினப் பெயர் : சம்பகா (champaca, Linn)
தாவர இயல்பு : மரம்; கிளைத்துப் பரவி ஓங்கி வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட் என்றும் பசிய பெரிய இலைகளையுடையது.
இலை : இலையடிச் செதில்கள் இலையைத் துளிரிலேயே மூடியிருக்கும்; இலை 10-12 செ. மீ. நீளமானது. மேற் புறத்தில் அகன்றது.
மஞ்சரி : தனி மலர், இலைக் கோணத்தில் நுனியில் மலருண்டாகும்.
புல்லி வட்டம் : இது அல்லிவட்டத்தைப் போன்றதே. 3 புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : இது 6 அகவிதழ்கள்; மஞ்சள் நிறமானவை. இரு அடுக்காக இருக்கும். இதழ்கள் பிரிந்த மலர்.
மகரந்த வட்டம் : பல தட்டையான தாள்களை உடையது. தாதுப் பை ஒட்டியிருக்கும்: உட்புறமாகத் தாது உகுக்கும்.
சூலக வட்டம் : சூலக அறைகள் நீண்ட நடுத்தண்டில் நேரடியாக ஒட்டியிருக்கும். சூல்முடி உள்வளைந்திருக்கும். தொங்கும் 2 சூல்கள் ஒவ்வொரு அறையிலும் காணப்படும்.
கனி : நீண்ட மேல்புறம் வெடிக்கும் ‘காப்சூல்’ போன்றது.
விதை : நுண் இழையினால் சூலக அறையின் மேலிருந்து தொங்கும் விதையுறை, சதைப்பற்றுடையது. எண்ணெய் போன்ற ‘ஆல்புமின்’ கொண்டது.

இம்மரம் மைசூர் முதல் திருவாங்கூர் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பாங்கில் வளர்கிறது. இதன் மணமுள்ள மலருக்காகத் தோட்டங்களில் இது வளர்க்கப்படுகிறது.

மைக்கீலியா நீலகிரிகா (Michelia nilagirica) என்ற ஒரு சிறு மரம் நீலகிரியிலும்,பிற மலைப் பகுதிகளிலும் வளர்கிறது.

மைக்கீலியா சம்பகாவின், குரோமோசோம் எண்ணிக்கை 2n- 38 எனச் சானகி அம்மாள் (1952-சி) கூறியுள்ளார்.


  1. சீ.சிந். 1650
  2. சீ.சிந். 2349