சங்க இலக்கியத் தாவரங்கள்/008-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஐயவி
பிராசிக்கா ஆல்பா‌ (Brassica alba, H. f.& T.)

‘ஐயவி’ என்பது சிறிய வெண்கடுகுச் செடி. ஓராண்டுச் செடி. வெண்கடுகுக்காக இது பயிரிடப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : ஐயவி
தாவரப் பெயர் : பிராசிக்கா ஆல்பா
(Brassica alba, H. f. & T.)

ஐயவி இலக்கியம்

சிறுவெண்கடுகு எனப்படும் ஐயவி, ஒரு சிறுசெடி இரண்டடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது ஐவன வெண்ணெல் விளைந்த கொல்லையில், அதன் கதிர்களோடு பிணங்கி வளருமென்பர் மாங்குடி மருதனார்.

“............நெடுங்கால் ஐயவி
 ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி

-மதுரைக்.287-288

போரில் புண்பட்ட வீரர்களைப் பேய்க் கணம் தீண்டாதிருக்கும் பொருட்டு ‘ஐயவி’யைப் புகைப்பர் என்றும், ஐயவியைச் சிதறுவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“வேம்பு மனை ஒடிப்பவும், காஞ்சிப் பாடவும்
 நெய்யுடைக்கையர் ஐயவி புகைக்கவும்
-புறநா. 296:1-3


“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
 இசைமணி எறிந்து, காஞ்சிபாடி
 ..........காக்கம் வம்மோ
-புறநா. 281:4-5

ஐயவி ஆரல் மீனின் முட்டை போன்றது என்பர்.

“ஆரல் ஈன்ற ஐயவி முட்டை-புறநா. 342 : 9

ஐயவி மிகச் சிறியது. அதன் நிறை மிகக் குறைவானது. வான்மீகியார் என்ற புலவர், வையகத்தையும் மனிதன் நோற்கும் தவத்தையும் துலாக்கோவில் நிறை போடுகிறார். தவத்திற்கு முன்னே, ஐயவி நிறைக்குக் கூட வையகம் நிறை போகாது என்று கூறுகின்றார்.

“வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
 ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்”
-புறநா. 388:3-4

ஐயவி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
பெரெய்டேலீஸ் (Parietales)
தாவரக் குடும்பம் : குரூசிபெரே (Cruciferae)
தாவரப் பேரினப் பெயர் : பிராசிக்கா (Brassica)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆல்பா (alba)
சங்க இலக்கியப் பெயர் : ஜயவி
உலக வழக்குப் பெயர் : வெண்கடுகு
தாவர இயல்பு : 2 அடி உயரம் வரை வளரும் சிறு செடி. அடியில் கிழங்கு இருக்கும். மேல் தண்டு முழுவதும் நுண்ணிய மயிர் நிறைந்திருக்கும். ஓராண்டுச் செடி.
இலை : சிறகன்ன பிளவுள்ள கூட்டு இலை முழுவதும் சிறுமயிர் அடர்ந்திருக்கும். சிற்றிலைகள் முட்டை வடிவானவை.
மஞ்சரி : மஞ்சள் நிற மலர்கள் நுனி வளர்பூங்கொத்தில் உண்டாகும்.
மலர் : மஞ்சள் நிறமானது.
கனி : ‘பாட்’ எனப்படும். இதன் கனியில் உண்டாகும் விதைகள் வெண்ணிறமானவை. சிறு வெண்கடுகு எனப்படுவது இதுவே.

இது கடுகுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஒரு நல்ல மருந்துப் பொருள் என்பர். இதில் ‘கடுகு எண்ணெய்’ எடுக்கப்படுகிறது.