சங்க இலக்கியத் தாவரங்கள்/019-150

விக்கிமூலம் இலிருந்து
 

இலவம்

பாம்பாக்ஸ் மலபாரிக்கம் (Bombax malabaricum,D.C.)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இலவமரம் செந்நிறமான பூக்களை உடையது. நெடிது உயர்ந்து வளர்ந்த கிளைகளை உடையது: மரத்தில் குவிந்த முட்டு முட்டான தடித்த முட்கள் இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : இலவு, இலவம்.
உலக வழக்குப் பெயர் : முள்ளிலவு இலவம், பஞ்சுமரம்.
தாவரப் பெயர் : பாம்பாக்ஸ் மலபாரிக்கம்
(Bombax malabaricum,D.C.)
ஆங்கிலப் பெயர் : ரெட் சில்க் காட்டன் மரம் (Red Silk Cotton tree)

இலவம் இலக்கியம்

இதில் உண்டாகும் பஞ்சைக் காட்டிலும் மென்மையும் பளபளப்பும் குளிர்ச்சியும் உடைய பஞ்சு தரும் இலவ மரமொன்று உண்டு. அதற்கு ஆஙகிலத்தில் (White Silk Cotton tree) வொயிட் சில்க் காட்டன் மரம் என்று பெயர். இம்மரமும் ஓங்கி வளரும் இயல்புடையது. மேற்புறத்துக் கணுக்களில் நான்கு புறமும் கவிந்த கிளைகளை விடுவது. வெளிர் மஞ்சள் நிறமான பூக்களை அவிழ்ப்பது. முதிராத இதன் அடிமரத்தில் தடித்த குவிந்த முட்கள் இருக்கும். இதற்குத் தாவரவியலில் எரியோடெண்ட்ரான் பென்டான்ட்ரம் (Eriodentron pentandrum, Kurz) என்று பெயர்.

சங்க இலக்கியங்கள் கூறும் ‘இலவம்’ என்பது நெருப்பு போலும் சிவந்த நிறமுள்ள மலர்களையுடைய பெரிய மரம். இக்காலத்தில் இதனை ‘முள்ளிலவு’ என்று கூறுவர். இம்மரத்தின் பூ குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிமரம் நீளமானது. பருத்து வளர்வது: பட்ரெஸ் (Butress) என்ற அகன்ற பட்டையான முட்டு வேர்களைக் கொண்டது. அடிமரத்திலும், கிளைகளிலும் முட்டு முட்டான கூம்பிய முட்கள் இருக்கும். களிறு தன்னுடைய தினவைப் போக்கிக் கொள்ளுதற்கு இம்முள்ளமைந்த அடி மரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும். இம்மரம் மலைப் பகுதியான பாலை நிலத்தில் வளரும். இவ்வுண்மைகளைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

“ஈங்கை இலவம் தூங்குஇணர்க் கொன்றை”-குறிஞ். 86

“நீள்அரை இலவத்து அலங்கு கிளை”-பெரும் . 83

“நீள்அரை இலவத்து ஊழ்கழிபன்மலர்”-அகநா. 17 : 17

“ஓங்கு சினை இலவம்”-ஐங். 338 : 2

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ”-ஐங். 320

“முளிகொடி வலந்த முள்ளுடை இலவம்”-நற். 105 : 1

“களிறுபுலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்”-அகநா. 309 : 7

இந்த இலவ மரத்தின் பூ மலையுறு தீயை ஒத்த செந்நிறமானது. இலைகள் எல்லாம் உதிர்ந்த பின்னர், மலர்களைப் பரப்புவது. இம்மரத்தில் பெருங்காற்று மோதுவதால், இம்மலர்கள் கீழே விழுவது இடியுடன் கூடிய நெருப்பு வானத்திலிருந்து தரையில் வீழ்வதை ஒக்கும். பெருவிழா எடுத்த பழம் பெருமை சான்ற மூதூரில் ஏற்றப்பட்டுள்ள நெய் விளக்குகளிலிருந்து விழும் சுடரை ஒக்கும். வீழ்ந்தவை போக எஞ்சியுள்ள மலர்கள், விடியற்காலையில் வானத்தில் தோன்றும் விண் மீன்களை ஒத்துக் காட்சி தரும். இலைகளே இல்லாமல் அனைத்து மொட்டுகளும் மலர்ந்து நிற்கும் இக்காட்சி, கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றிய சுடர் விளக்கின் அழகுடன் தோன்றும்.

“இலைஇல மலர்ந்த ஓங்குநிலை இலவம்
 மலையுறு தீயின் சுரமுதல் தோன்றும்”
-ஐங். 338 : 2-3

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ
 முழங்கழல் அசைவளி எடுப்ப வானத்து
 உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்”
-ஐங். 320 : 1-3

“அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்
 நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்
 விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
 நெய்யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி
 வைகுறு மீனின் தோன்றும்”
-அகநா. 17 : 17-21

இலவ மலரின் செம்மை நிறத்தைப் பரணர், சான்றோரின் நாவிற்குவமிக்கிறார். சான்றோர் பாடியதைக் குறிக்கின்றவர், அச்சான்றோரது நாவின் நிறத்தையும், நேர்மையையும் அம் செந்நா என்று கூறுகின்றார். இச்சொற்றொடரில் உள்ள செம்மை நேர்மையுடன், நாவின் நிறத்தையும் குறிக்குமாறு கண்டு மகிழலாம்.

“இலமலர் அன்ன அஞ்செந் நாவில்
 புலமிக் கூறும் புரையோர்”
-அகநா. 142 : 1-2

முள்ளிலவின் பசிய காய் மஞ்சள் நிறமாக முதிரும். முதிர்ந்து வெடித்து வெள்ளிய பஞ்சினை வெளிப்படுத்தும். இலவம் பஞ்சிற்குப் ‘பூளை’ என்றும் பெயர்.[1] இதன் காய் வெடிக்கும் போது அதன் முதுகுப்புறத்தில் தோன்றும் கோடு அணிலின் புறத்தில் தோன்றும் கோடுகளை ஒத்திருக்குமென்பர்.

“பூளையம் பசுங்காய் புடைவிரித் தன்ன
 வரிப்புற அணில்”
-பெரும். 84-85

இலவ மரத்திற்கு ஆங்கிலத்தில் சில்க் காட்டன் மரம் (Silk cotton tree) என்று பெயர். முள்ளிலவிற்கு (Red cotton tree) ரெட் காட்டன் மரம் என்றும், வெளிர் மஞ்சள் நிறமான பூக்களையுடைய இலவம் பஞ்சு மரத்திற்கு (White cotton tree) வொயிட் காட்டன் மரம் என்றும் பெயர்.

“நெருப்பெனச் சிவந்த உருப்புஅவிர் அங்காட்டு
 இலைஇல மலர்ந்த முகையில் இலவம்
 கலிகொள் ஆயம் மலிவுதொகுபு எடுத்த
 அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”

-அகநா. 11 : 2-5

“வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
 அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
 பெருவிழா விளக்கம் போல பலவுடன்
 இலையில மலர்ந்த இலவமொடு
 நிலைஉயர் பிறங்கல் மலையிறந் தோரே”

-அகநா. 185 : 9-13


இம்மலரில் ஐந்து செவ்விய அகவிதழ்கள் இருக்கும். இதழின் தடிப்பாலும், மென்மையாலும், செம்மையாலும் மகளிரது வாயிதழுக்கு இதன் இதழ் உவமிக்கப்படுகிறது.

“இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்”-பெரும். 27

தீக்காடாக மலர்ந்திருக்கும் இலவ மரத்தின் மேல் ஒரு மயில் ஏறியமர்ந்தது. இக்காட்சி நெருப்பில் இறங்கிய மகளிரை ஒத்தது என்பர்.

“. . . . . . . . . . . . . . . . முள்ளுடை
 இலவம் ஏறிய கலவ மஞ்ஞை
 எரிபுகு மகளிர் எய்க்கும்”
-ஐங். மிகை : 3

இவ்வாறு கூறப்படுதலை எண்ணின், அக்காலத்தில் கணவரை இழந்த மகளிர் எரிபுகுவர் என்று அறியக் கிடக்கிறது.

புலமையில் மேம்பட்டுப் பிற்காலத்தில் வாழ்ந்த, ஆத்திசூடி பாடிய அவ்வையார் கூறும் இலவ[2] மரத்தில் பஞ்சு மிக மென்மையுடன், பளபளப்பும் உடையது. இதனையே மெத்தைகளுக்கும் தலையணைகட்கும் பயன்படுத்துவர்.

இந்த இலவ மரமும் நெடிதுயர்ந்து வளர்வது; மேற்பகுதியில் கிளைகள் நாற்புறமும் பரந்து உண்டாகும். முதிராத இதன் அடி மரத்தில் முட்கள் இருக்கும். பின்னர் இம்முட்கள் உதிர்ந்து விடும். இதன் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பசுமையானவை. முதிர்ந்த இக்காய்கள் மங்கலான மஞ்சள் நிறமாய் இருக்கும். இதுவும் மலைப்பாங்கில் வளருமியல்பிற்று. கோயில்களின் புறத்தே பந்தல் போடுவதற்கு இவை வரிசையாக வளர்க்கப்படும். இதனைத் தாவரவியலார் ‘எரியோடென்ட்ரான் பென்டான்ரம்’ (Eriodendron pentrandrum, Kurz.) என்று கூறுவர்.

இலவம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே – மால்வேலீஸ் – அகவிதழ் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் : பாம்பகேசி Bombacaceae இதில் 22 பேரினங்கள் உள்ளன.
தாவரப் பேரினப் பெயர் : பாம்பாக்ஸ் (Bombax)
தாவரச் சிற்றினப் பெயர் : மலபாரிக்கம் (malabaricum) இதில் 50 சிற்றினங்கள் உள்ளன. இது அமெரிக்க நாட்டைச் சேர்ந்ததென்பர்.
சங்க இலக்கியப் பெயர் : இலவம், இலவு
உலக வழக்குப் பெயர் : முள்ளிலவு. பஞ்சு மரம், இலவ மரம்
ஆங்கிலப் பெயர் : ரெட் சில்க் காட்டன் மரம்
(Red silk cotton tree)
தாவர இயல்பு : பெரிய மரம். உயர்ந்து, கிளைத்து வறண்ட மலைப் பாங்கில் வளரும். மரத்தின் புறத்தே முட்டு முட்டான குவிந்த தடித்த முட்கள் இருக்கும். அடிமரத்தில் பட்ரெசஸ் (Buttressus) என்ற அகன்று தடித்த பட்டையின் முட்டு வேர்கள் இருக்கும்.
இலை : கூட்டிலை. குத்துவாள் போன்ற சிற்றிலைகள் ஓர் அங்குல நீளமானவை. இலைகள் உதிர்ந்து முளைக்கு முன் மலரத் தொடங்கும்.
மலர் : செந்நிறமானது. 3 அங்குல நீளமானது. கிளை நுனியில் கொத்தாகத் தோன்றும். இலையில்லாமல் செவ்விய மலர்களே பூத்து நிற்கும்.
புல்லி வட்டம் : தோல் போன்று தடித்த கிண்ண வடிவானது; மேற்புறத்தில் பிளவுற்றது.
அல்லி வட்டம் : 5 செந்நிறமான அகவிதழ்கள் அகன்று நீண்டவை.
மகரந்த வட்டம் : பலப் பல மகரந்தத் தாள்கள் பெரிதும் அடியில் ஒட்டியிருக்கும்.
சூலக வட்டம் : 5 செல் உடையது. ஒவ்வொன்றிலும் சூல்கள் மலிந்துள்ளன. சூல் தண்டு மேலே 5 கிளைகளாகத் தோன்றும்.
கனி : உலர் கனி. “காப்சூல்” என்ற வெடிகனி 5 பகுதிகளாக வெடிக்கும்.
விதை : உருண்டையானது; வழவழப்பானது; வெள்ளிய நீண்ட பஞ்சிழைகளை நெருக்கமாக உடையது. வித்திலைகள் மூடப்பட்டது போன்றிருக்கும்.

இதன் அடிமரம் மென்மையானது. எளிதில் உளுத்து விடுவது. ஆனால், உவர் நீரில் வலுவுடன் கூடிப் பல்லாண்டுகட்கு உழைக்கும். அதனால், இதன் அடிமரம் கடல் கலன்கட்கும் கட்டு மரத்திற்கும் பயன்படுத்தப்படும். இதில் ஒரு பிசின் உண்டாகும். இதனை மருந்துக்குப் பயன்படுத்துவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 72 எனச் சானகி அம்மையார் (டி-1945) கணித்துள்ளனர்.


  1. இலவம் பஞ்சின் பேர் பூளையாகும்-சேந். திவா.
  2. “இலவம் பஞ்சில் துயில்”-ஆத்திசூடி - 26