உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/018-150

விக்கிமூலம் இலிருந்து

பாரம்-பருத்தி
காசிப்பியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum,Linn.)

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டடியில் (92) காணப்படும் ‘பாரம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பருத்திப்பூ’ என்று உரை கண்டார்.

பருத்தி ஒரு சிறு செடி. இதன் மலர் செந்நிறமானது. இதன் விதைகளில் உட்புறத்தோலில் வளரும் மெல்லிய இழைகளே பருத்திப் பஞ்சு ஆகும். இதனைக் கொண்டுதான் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : பாரம்
உலக வழக்குப் பெயர் : பருத்தி
தாவரப் பெயர் : காசிப்பியம் ஹெர்பேசியம்
(Gossypium herbaceum.,Linn.)

பாரம்-பருத்தி இலக்கியம்

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்பது கபிலர் வாய் மொழி (குறிஞ். 92). பாரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்திப் பூ’ என்று உரை கூறியுள்ளார். பருத்தியின் பஞ்சு மூடைகள் பற்றிப் புறநானூறு கூறும் :

“கோடைப் பருத்தி வீடுநிறை பெயத்
 மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன

-புறநா. 393: 12-13


(பருத்தி வீடு = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு)

பாரம் என்னும் பருத்திப் பெயரில் ஓர் ஊர். மிஞிலி என்பவனுக்குரியது என்பர் கபிலர். ‘மிஞிலி காக்கும் பாரத் தன்ன’ (நற். 265:4-5). பருத்தியூர் எனவும் இக்காலத்தில் ஊர்ப்பெயர் உள்ளது. பருத்திப் பஞ்சின் நூலை நூற்கும் பெண்டிரைப் பற்றிப் பேரிசாத்தன். பேசுகின்றார் :

“பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
 நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை”

-புறநா. 125 : 1-2


இதற்குப் ‘பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற’ என்று உரை கூறுவர். நீறு பூத்த நிணத்திற்குப் பருத்திப் பஞ்சு உவமை கூறப்படுகின்றமை நோக்குதற்குரித்து (புறநா. 393).



பாரம்–பருத்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; மால்வேலீஸ் அகவிதழ் இணையாதவை.
தாவரக் குடும்பம் : மால்வேசி (Malvaceae)
தாவரப் பேரினப் பெயர் : காசிபியம் (Gossypium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஹெர்பேசியம் (herbaceum)
தாவர இயல்பு : செடி கிளைத்துத் தழைத்து வளரும்; கரிய நிற மண்ணில் நன்கு வளரும்; 2-3 அடி உயரம்; பெரிதும் பயிரிடப்படுகிறது.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அகன்ற தனியிலை; கையன்ன நரம்புகள்; இலை விளிம்பு பல. அகன்ற ஆழமான மெல்லிய இலையடிச் சிறு செதில்கள் பெரியவை; இலைக் கோணத்தில் பெரிய ஐந்தடுக்கான மஞ்சள் நிற மலர் கவர்ச்சியாகக் காணப்படும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள். பசியவை அடியில் இணைந்திருக்கும்.

பாரம்
(Gossypium herbaceum)

அல்லி வட்டம் : (கல்வலூட்) நேருக்கு நேரான அடுக்கில் 5 அகன்ற மெல்லிய இதழ்கள் எடுப்பானவை.
மகரந்த வட்டம் : பல குட்டையான தாதிழைகள். ஒரு குழல் வடிவான தாதுக் காம்பில் சுற்றிலும் ஒட்டியிருக்கும்; தாதுப்பை ஒன்றுதான்; சிறுநீரக வடிவானது.
மகரந்தம் : பல தாதுக்கள் உண்டாகும் தாதுப்பையின் வெளிப்புறமாக வெடித்து வெளிப்படும். தாதுவின் வெளியுறையில் (எக்சைன்) நுண்ணிய முட்கள் உள்ளன.
சூலக வட்டம் : 2 சூலிலைச் சூலகம்; பல சூல்கள்; சூல் தண்டு மகரந்தக் குழலின் உள்ளேயிருக்கும்; சூல்முடி குல்லாய் போன்றது.
வித்திலை : இரண்டும் மடிந்திருக்கும்; விதைக் கரு வளைந்தது.

காசிபியம் பார்படேன்ஸ் (Gossypium barbedense) என்பதை சீ அயலண்டு பருத்தி (sea island cotton) எனவும், காசிபியம் பெருவியானம் (Gossypium peruvianum) தென்அமெரிக்கப் பருத்தி எனவும், காசிபியம் ஹிர்சூட்டம் என்பதை (Gossypium hirsutum) ஷார்ட் ஸடேபிள் பருத்தி (short staple cotton) எனவும் கூறுவர். இவை அனைத்தும் அமெரிக்க நாட்டினது என்பர். காசிபியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum) கருங்கண்ணிப் பருத்தி என்றும், இது கிழக்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தது என்றும் கூறுவர். காசிபியம் ஆர்போரிட்டம் (Gossypium arboretum) என்ற மரப் பருத்தி (Tree cotton) ஆப்பிரிக்காவில் வெப்பப் பகுதியைச் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். பருத்திப் பஞ்சு மிகவும் துல்லியமான செல்லுலோஸ் ஆகும். பருத்திச் செடி வெப்ப நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. பருத்திப் பஞ்சு ஆடைகள் நெய்வதற்குப் பயன்படுதலின் பெரிதும் பயிரிடப்படுகின்றது. இக்காலத்தில் இந்தியப் பருத்தியை அமெரிக்கப் பருத்திச் செடிகளில் செயற்கை முறையில் இணைத்துப் புதுப் புதுப் பருத்திப் பரம்பரைகளை உருவாக்கியுள்ளனர்.

பருத்திச் செடி தொன்று தொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பற்றிய செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. வேளாண்மைத் துறையினர் பருத்திச் செடியில் மிகப்பெரிய, அரிய ஆய்வுகள் பல செய்து மிகவும் பயன் தரும் புதுப் புதுச் செடிகளை உருவாக்கி வருகின்றனர். பருத்தித் துணி இழைகள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டனவாதலின், பருத்தி சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புடையதென்று கே. ஏ. செளத்திரி கூறுவார். மேலும், பழைய உலகப் பருத்தியில் ஆய்வு செய்த ‘எட்சின்சன்’, ‘சைலோ’, ‘ஸ்டீபன்ஸ்’ முதலியோரும் இதனை (1947) வலியுறுத்துவர். எனினும், பருத்தி முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றிற்று என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆதலின், தண்டமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளர்க்கப்பட்டு வரும் பருத்தியின் தோற்றத்தையும், இதனுடைய அனாதி முறையான பழமையினையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து கண்டு சொல்வதற்குத் தமிழ் மகன் உடனடியாகத் துடித்தெழ வேண்டும்.