உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/021-150

விக்கிமூலம் இலிருந்து
 

நெருஞ்சி
ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ் (Tribulus terrestris,Linn.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘நெருஞ்சி’ச் செடி குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. நெருஞ்சியின் மலர், அழகிய மஞ்சள் நிறமானது. இம்மலர் கதிரவனைப் பார்த்துக் கொண்டு திரும்பும் இயல்புடையது. இதனைக் கதிர்நோக்கி இயங்குதல் என்றும் “ஹீலியோடிராபிசிம்” (Heliotropism) என்றும் கூறலாம். இதன் இவ்வியல்பை எவரும் ஆய்வு செய்து அறுதியிடவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : நெருஞ்சி
பிற்கால இலக்கியப் பெயர் : சிறுநெருஞ்சி
உலக வழக்குப் பெயர் : நெருஞ்சி
தாவரப் பெயர் : ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ்
(Tribulus terrestris,Linn.)

நெருஞ்சி இலக்கியம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறுபஞ்சமூலம் என்ற நூலும் ஒன்று. ‘சிறு பஞ்ச மூலம்’ என்றால், ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள். அவை;

பயன் : சிறிய வழுதுணைவேர் சின்னெருஞ்சி மூலம்
சிறுமலி கண்டங்கத்தரி வேர் - நறிய
பெருமலி ஓர்
ஐந்தும் பேசுபல் நோய்தீர்க்கும்
அரிய சிறு பஞ்ச மூலம்[1]
(சிறுமலி-சிறுமல்லி, பெருமலி-பெருமல்லி)

என்று பதார்த்த குண சிந்தாமணி பகர்தலின், ‘சிறுபஞ்ச மூலத்தில்’ ஒன்றாகிய இந்த நெருஞ்சியின் வேர், பல் நோய்க்கு மருந்தாகும் என்று அறியப்படுகிறது. ‘நெருஞ்சி’யைப் பற்றிச் சங்க இலக்கியம் பேசுகின்றது.

நெருஞ்சிச் செடி, பசிய சிறு இலைகளை உடையது. பொன் போன்ற நல்ல மஞ்சள் நிறப் பூக்களுடன், கண்களுக்கு இனிய காட்சி தருவது. மலர்கள் முதிர்ந்து காயாகிப் பழுக்கும். நெருஞ்சிப் பழந்தான், ‘நெருஞ்சி முள்’ எனப்படும். வள்ளுவர் இதனை ‘மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ என்பார். கூடியிருந்த காலத்து இன்பம் தந்த காதலன், பிரிந்து துன்பம் தந்தான். இதனை எண்ணி நெஞ்சம் நொந்த காதலி, நெருஞ்சியின் மலரையும் முள்ளையும் உவமையாக்கிக் கூறுகின்றாள்:

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே
-குறுந். 202

இச்செய்யுளைப் பாடியவர் அள்ளுர் நன்முல்லையார், ‘வாயில் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது’ என்பது இப்பாடலின் துறையாகும்.

கண்ணுக்கு இனிமை செய்த புதுமலர், வீயாகி வாடிப் போய் உலர்ந்து விடுவது போலக் காதலர் சின்னாள் தந்த இன்பம் விரைந்து கெட்டதுமன்றி, அம்மலரே முள்ளாயினவாறு போல, இனிய காதலரே, தன்னைப் பிரிந்ததோடன்றித் தொடர்ந்து இன்னா செய்தற்கு என் நெஞ்சு நோகும் என்றவாறு. தைத்த நெருஞ்சி முள்ளைப் பிடுங்கிய பின்னும் வலியிருக்குமாப் போல, வாயில் வேண்டிய தலைவன் செயலை எண்ணி, மும்முறை நோமெனக் கூறி வாயில் மறுத்தாள் தலைவி.

மிக அழகிய மஞ்சள் நிறமுள்ள நெருஞ்சி மலருக்கு ஒரு சிறப்பான இயல்பு உண்டு. இதனைச் ‘சுடரொடு திரிதரும் நெருஞ்சி’ என்றார் அகநானூற்றுப் புலவர் பாவைக் கொட்டிலார். இக் கருத்தைப் புறநானூறு, ஐங்குறுநூறு, சீவக சிந்தாமணி முதலிய பண்டைய இலக்கியங்களிலும் காணலாம். நெருஞ்சிமலர் காலையில் கதிரவனை நோக்கிக் கிழக்குப் புறமாகப் பூத்து நிற்கும். மாலைப் பொழுதில் கதிரவனைக் கண்ட வண்ணம் மேற்குப் புறமாகத் திரும்பி நிற்கும்.

நெருஞ்சி மலரின் இவ்வியல்பு, ஒரு தாவரவியல் உண்மையாகும். இதனை கதிரோனுடைய கதிக்கு ஏற்பத் திரும்பும் இவ்வியல்பு, பூக்குந் தாவரங்களில் சூரியகாந்தி ‘ஹீலியாந்தஸ் ஆனுவஸ்’ மலருக்கு உண்டு. சூரிய காந்திச் செடி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பர். இதன் இவ்வியல்பு ஆய்வு செய்யப் பட்டுள்ளது. (Bot Gaz : 29:197) இதற்குக் கதிர்நோக்கி இயங்குதல் (Heliotropism) என்று பெயர். இவ்வியல்பு வேறு மலர்களுக்கு இல்லை. நெருஞ்சி மலரில் உள்ள இவ்வரிய இயல்பைப் பற்றி இதுகாறும் யாரும் ஆய்வு செய்ததாக யாம் அறிந்த மட்டில் இல்லை.

கதிர் நோக்கி இயங்கும் இவ்வியல்பினைப் போலவே, ஒளியை நோக்கி இயங்கும் இயல்பு ஒன்றுண்டு. இதனை விதை முளைத்து வரும் போது முளைகளில் காணலாம். இதற்கு ஒளி நோக்கி இயங்குதல் என்று பெயர் (Phototropism). இவ்விரு வகையான இயக்கங்களும் ஒன்றல்ல.

நெருஞ்சி மலர் சுடரொடு திரிதருவதைக் குறிக்கும் அகநானூற்றுப் பாடலில் இவ்வியல்பை உவமையாக்கிப் பாடிய அகப்பொருள் கருத்து சுவைக்கத் தக்கது. நயப்புப் பரத்தை இற் பரத்தை என்ற இரு பரத்தைமார்கள், மருதத் திணைத் தலைவவனாகிய ஊரனுக்கு உண்டு. நயப்புப் பரத்தை, இற்பரத்தையின் பாங்காயினார் கேட்கும்படியாகப் பின் வருமாறு பேசுகிறாள்: “துணங்கைக் கூத்து விழாவிற்று ஊரனுடைய தேர்தர வந்த இற் பரத்தை என் எழிலை ஏசிப் பேசினாள் என்பர். அதற்கு யான் அங்கு வராததே காரணம். நான் வந்திருந்தால், கதிரவனை நோக்கியவாறே அதனுடன் திரிதரும் நெருஞ்சி மலரைப் போல, எனது அழகைக் கண்டு ஊரனை என்னோடு திரியச் செய்திருப்பேன். . . . ” என்று. இதனை,

“தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
 தேர்தர வந்த நேர்இழை மகளிர்
 ஏசுப என்பஎன் நலனே, அதுவே
.... .... .... .... .... ....
 முழவுஇமிழ் துணங்கை தூங்கும் விழவின்
 யான்அவண் வாராமாறே, வரினே வானிடைச்

 சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
 என்னொடு திரியான் ஆயின் .... ....”

- அகம் : 336 : 10-19


என்ற வரிகளில் காணலாம். இப்பாடல், கதிரவனால் நெருஞ்சிப் பூ. எவ்வாறு கவரப்படுகிறது என்பதைப் புலப்படுத்தும். இக்கவர்ச்சியால், இப்பூ கதிரவனுக்கே உரிமையுடையது எனக் கூறுவது போன்று ஒரு தலைவி கூறுகிறாள்.

“கேட்டாயோ தோழி! ஓங்கு மலைநடான் ஞாயிறு அனையன், என்னுடைய பெரிய தோள்கள் நெருஞ்சி மலரை ஒத்தன” என்று கூறுகின்றாள்.

“.... .... .... ஓங்குமலை நாடன்
 ஞாயிறு அனையன் தோழி!
 நெருஞ்சி அனைய என்பெரும் பனைத்தோளே”

-குறுந். 315 : 2-4


நெருஞ்சிப் பூ கதிரவனை எதிர் கொண்டழைப்பதாக மோசி கீரனார் பாடுகின்றார்:

“பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ
 ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாங்கு”

-புறம்: 155 : 5-6


இங்ஙனம், எதிர் கொண்டழைக்கும் நெருஞ்சி மலர், கதிரவன் நெறியில் தொடரும் என்றார் திருத்தக்கதேவர்.

“நீள்சுடர் நெறியை நோக்கும்
 நிறையிதழ் நெருஞ்சிப்பூ”
[2]

இச்சிறப்பியல்பு பெற்ற நெருஞ்சிச் செடி பாழ்பட்ட வெற்றிடங்களில் வளரும்; பல கிளைகளை விடும். கிளைகள் மண் மேல் ஊர்ந்து நீண்டும், பரவியும் வளரும். இவ்வுண்மைகளைப் பதிற்றுப் பத்தில் காணலாம்.

இதனைக் குமட்டூர் கண்ணனார் என்னும் புலவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுங்கால், அவனது படைகள் பகைவனுடைய நாட்டை நெருஞ்சிச் செடி பரந்து வளரும் பாழிடமாக அழித்து விட்டன என்று கூறுகின்றார்!

“ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை
 தாது எருமறுத்த கலிஅழி மன்றத்து”

-பதிற். 13 : 16-17


இதில் நெருஞ்சிச் செடியின் கிளைகள், தரையின் மேல் ஊர்ந்து படர்ந்து வளருமென்னும் உண்மை கூறப்படுகிறது.

இங்ஙனமே பல்யானைச் செல்கெழு குட்டுவனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுமிடத்து, அவனது பகைவர் நிலம் நெருஞ்சிக் காடுறு கடுநெறியாகி விட்டது என்று பாலைக்கௌதமனார் கூறுவர்.

“பீர் இவர்வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
 காடுறுகடு நெறியாக மன்னிய”
-பதிற். 26 : 10-11

மேலும், பெருவிழா மன்றம் பாழ்பட்ட பின், அவ்விடங்களில் அறுகம்புல்லுடன் நெருஞ்சியின் சிறிய பூக்கள் மலர்ந்து நிற்குமென்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாற் பெருவளத்தானது வெற்றிச் சிறப்பைக் கூறுவர்:

“பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து
 சிறு பூ நெருஞ்சி யொடுஅறுகை பம்பி”

-பட்டின. 255-256


இவற்றால், பாழ்படுத்தப்பட்ட வெற்றிடங்களில் எல்லாம் நெருஞ்சிச் செடி அறுகம்புல்லுடன் வளருமென்பதும், சிற்றிலைகளை உடையதென்பதும், கண்ணுக்கினிய பொன்னிறச் சிறு பூக்களையுடையதென்பதும், இம்மலர்கள் சுடரொடு திரிதரும் இயல்புடையன என்பதும், காட்சிக்கினிய பூக்கள் காய்த்து நெருஞ்சி முள் எனப்படும் நெருஞ்சிப் பழமாகும் என்பதும் கூறப்படுமாறு காணலாம்.

நெருஞ்சி தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரக் குடும்பப் பெயர் : சைகோபிஸ்லேசீ
பேரினப் பெயர் : ட்ரிபுலஸ் (Tribulus)
சிற்றினப் பெயர் : டெரஸ்டிரிஸ் (terrestris, Linn.)
இயல்பு : தரையில் படர்ந்து நீண்டு வளரும் செடி
வளரியல்பு : வெப்ப நாடுகளில் நல்ல நிலத்தில் காணப்படும் மீசோபைட்

நெருஞ்சி
(Tribulus terrestris)

வேர்த் தொகுதி : 10 செ.மீ. முதல் 20 செ.மீ. நீளமான, மஞ்சள் நிற ஆணி வேர்
தண்டுத் தொகுதி : 6 முதல் 25 கிளைகள் நில மட்டத்திலேயே உண்டாகி, 40 செ. மீ. முதல் 125 செ. மீ. வரை நீண்டு தரையில் படர்ந்து வளர்வது.
இலை : இறகு வடிவக் கூட்டிலை எதிர் அடுக்கு முறையில் தண்டில் இணைந்துள்ளன. இரு இலைச் செதில்கள் உண்டு. ஒவ்வொரு கணுவிலும் உள்ள இலைகளில் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. இவை அடுத்த கணுவில் மாறி இணைந்திருக்கும். இவ்வாறு மாறி மாறி இணைந்திருப்பதைக் கிளையின் நுனி வரையில் காணலாம்.
பெரிய கூட்டிலை : இலைகளுக்கு 2 இணைச் செதில்கள் உள்ளன. 35-40 மி. மீ. நீளம். கூட்டிலையில் 10 சிற்றிலைகள்.
சிற்றிலைகள் : இறகு வடிவமைப்பில் ஒவ்வொன்றும் நீள் முட்டை வடிவானது. 10 செ. மீ. முதல் 15 செ. மீ. நீளம். 3 - 5 அகலம். இப்பெரிய கூட்டிலையின் கோணத்தில் கணுக்குருத்து இல்லை.
இலை : சிறிய கூட்டிலை. 2 இலைச் செதில்கள் 12 மி.மீ. நீளம். இதன் சிற்றிலைகள் 12-20 மி.மீ.நீளம்; 4-6 சிற்றிலைகளே உள்ளன. சிற்றிலைகள் 5-8 மி. மீ. நீளம். 3-4 மி.மீ. அகலம். இச்சிறிய கூட்டிலையின் கோணத்தில் கணுக் குருத்து தனி மலராகின்றது.
மலர்க் காம்பு : 15-22 மி.மீ நீளம்.
மலர் : 5 அடுக்கானது; ஒழுங்கானது; இரு பாலானது; சமச்சீரானது; மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் தனித்தவை; ஈட்டி வடிவானவை; பச்சை நிறம்; இதழ்கள்
தழுவு ஒட்டு முறையில் அடியில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் விரிந்தவை. தனித்தவை; தழுவு ஒட்டு முறை அமைப்பில் புல்லியிதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன.
மகரந்தத்தாள் வட்டம் : 10 மகரந்தத்தாள்கள்; தாள்கள் அடியில் செதில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 மகரந்தப் பைகள் சற்று நீளமானவை. மஞ்சள் நிறத்தாது. பொதுவாக 5 சூலறைச் சூலகம். ஒவ்வொரு சூலறையிலும் 1 முதல் 5 சூல்கள் அடி ஒட்டு முறையில் உள்ளன.
சூல் முடி : 5 பிளவு வரையில்
கனி : 5 கோணம், 5 காய்கள்; காயின் மேல் 4 கூரிய முட்கள் உண்டு. கனியுறை கூரிய முள்ளாக நீளும். இக்கனிதான் நெருஞ்சிப் பழம் எனப்படும்.
கரு : கருவில், ஆல்புமின் இல்லை. முளை சூழ்தசை உண்டு.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், கனியிலுள்ள கூரிய முட்கள், விலங்குகளின் காலில் ஒட்டிக் கொள்வதால், கனி பரவுவதற்குப் பயன்படும். அதனால் இச்செடி, எளிதாக வேறிடங்களில் பரவும்.

சைகோபில்லேசீ (Zygophyllaceae) என்ற இத்தாவரக் குடும்பத்தின் பெயரைப் பலர் நிட்ராரியேசி (Nitrariaceae) போன்ற வெவ்வேறு பெயரிட்டு அழைத்தார்கள். எனினும், சைகோபில்லேசீ என்ற முதற்பெயரே நெடுங்காலமாக நிலைத்துள்ளது.

பெரும்பாலான மரபு வழி நிபுணர்கள், இத்தாவரக் குடும்பத்தை ஜெரானியேலீஸ் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஹட்சின்சன் மட்டும் இதனை மால்பிகியேலீஸ் வகுப்பில் இணைத்துள்ளார்.

பயன் : இதன் கனி - ‘முள்’ - மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இத்தாவரக் குடும்பத்தில், ஏறக்குறைய 25 பேரினங்களும், 200 சிற்றினங்களும் உள்ளன. உலகில் வெம்மையான சற்று உப்பு மிகுந்துள்ள மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன. பெரிதும் சிறு புதர்ச் செடிகளாகவும், சிறு மரங்களாகவும் உள்ள இத்தாவரங்கள் தங்களுக்கென ஓர் அமைப்பைக் கொண்டுள்ளன என்பர். ஓராண்டுச் செடியும் அருகித் தோன்றும். இவற்றுள் ‘டிரிபுலஸ்’ என்ற பேரினத்தைச் சேர்ந்தது நெருஞ்சி.

‘நெருஞ்சி’, ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும் வளர்கிறது. இந்தியாவில் டெக்கான் எனப்படும் தென்னாட்டில் வெப்ப மிக்கவிடங்களில் வளர்கிறது.


  1. குண சிந்தாமணி: 495
  2. சீ. சிந்: 461