சங்க இலக்கியத் தாவரங்கள்/028-150

விக்கிமூலம் இலிருந்து
 

செருந்தி
ஆக்னா ஸ்குவரோசா (Ochna squarrosa,Linn.)

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பும், போதும், மலரும், இணரும் பேசப்படுகின்றன. மேலும், வேறு பல மரங்களுடன் இது வளர்வதாகக் கலித்தொகை கூறும். குறிஞ்சிப் பாட்டில் இம்மலர் இடம் பெற்றுள்ளது. ‘செருந்தி’ என்ற பெயர் ஒருவகையான புல்லையும் குறிப்பிடுவதாகச் சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சியும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவை செருந்தியின் மலரைக் கூறவில்லை. ஆகவே, செருந்தி என்பது ஒரு சிறு மரமெனக் கொண்டு, இவ்விளக்கம் தரப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : செருந்தி
தாவரப் பெயர் : ஆக்னா ஸ்குவரோசா
(Ochna squarrosa,Linn.)

செருந்தி இலக்கியம்

“களிறுமாய் செருந்தி“-மது. கா: 172

என்ற இச்சொற்றொடருக்கு நச்சினார்க்கினியர் ‘யானை நின்றால் மறையும் வாட்கோரை’ என்றும், செருந்தி-நெட்டிக் கோரையுமாம் என்றும் உரை கண்டுள்ளார்.

“இருஞ்சாய் அன்ன செருந்தியோடு வேழம்
 கரும்பின் அலமரும் கழனி ஊரன்“
-ஐங்: 13 : 1-2

என்று ஓரம்போகியார் கூறுவர். ‘சாய்’ என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். ‘சாய்’ அன்ன செருந்தியொடு வேழம் அலமரும் என்கிறார். இவற்றைக் கொண்டு பார்த்தால் ‘செருந்தி’ என்பது ஒருவகையான கோரை என்று எண்ண இடமுண்டு.

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்“-குறிஞ்: 75

என்ற இக்குறிஞ்சிப் பாட்டின் அடியில் கூறப்படும் ‘செருந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘செருந்திப்பூ’ என்று உரை கண்டார்.

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பு, போது, மலர், இணர் இவை யாவும் குறிப்பிடப்படுகின்றன. மேலும், கலித் தொகையில் ‘செருந்தி’ வேறு பல மரங்களுடன் பேசப்படுகிறது. கோரைப்புல்லில் அரும்பு, போது, முதலியன இல்லையாதலின். செருந்தி என்பது ஒரு மரம் என்றும், ‘செருந்தி’ என்ற சொல் ஒரு வகைக் கோரையையும் குறித்தது என்றும் அறிதற்கு இடமுண்டு. ஆதலால், செருந்தி என்பதை ஒரு சிறு மரமெனக் கொண்டு விளக்குதும். செருந்தி நெய்தல் நிலத்தைச் சார்ந்தது என்பதும். நெய்தலைச் சார்ந்த மருதத்திலும் காட்சி தரும் என்பதும், ஆண்டின் ஆறு பருவங்களில் முதல் பருவமான இளவேனிற் பருவத்தில் மலரும் என்பதும், செருந்திப்பூவின் காம்பு நீளமானதென்பதும், இது வண்டுபட நன்கு விரிந்து மலரும் என்பதும், இதன் மலர் நறுமணம் உள்ளதென்பதும், தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளச் செய்யுமாறு பொன் தகடு போன்றுள்ள இது பளபளப்பாகப் பூக்கும் என்பதும், இதனை மகளிர் சூடிக் கொள்வர் என்பதும் சங்கப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

“செருந்திதாய இருங்கழிச் சேர்ப்பன்”-ஐங்: 18 : 1

“நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ”-அகநா: 150 : 9

“பருதி அம் செல்வன் போல்
 நனைஊழ்த்த செருந்தியும்”
-கலி : 26 : 2

“போதவிழ் மரத்தொடு பொரு கரைகவின்”-கலி: 26 : 7

“.... .... .... .... .... .... .... வண்டுபட
 விரிந்த செருந்தி வெண்மணல்”
-அகநா: 240 : 12-13

“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிசைச் செருந்திப்
 பல்மலர் வேய்ந்த கலம்பெறு கோதையள்”

-அகநா: 280 : 1-2
“அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்”
-புறநா: 390 : 3
“தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்”-சிறுபா : 147

செருந்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே (Disciflorae)
தாவரக் குடும்பம் : ஆக்னேசி (Ochnaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆக்னா (Ochna)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்குவரோசா (squarrosa)
சங்க இலக்கியப் பெயர் : செருந்தி
உலக வழக்குப் பெயர் : சிலந்தி என்பர் காம்பிள்
தாவர இயல்பு : சிறு மரம்; பழுப்பு நிறமானப் பட்டையும், செம்பழுப்பு நிறமான மரத்தையும் உடையது.
இலை : தனி இலை; மெல்லியது; பசியது; தலை கீழான முட்டை வடிவினது; இலைக் காம்பு குட்டையானது; இலை நுனி கூரியது.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் பொன் மஞ்சள் நிறமான எடுப்பான தோற்றமுள்ள பூங்கொத்து.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் உதிராது ஒட்டிக் கொண்டிருக்கும். மஞ்சள் நிறமானது.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள்; பொன்னிறமானவை. மடல் விரிந்து அழகாகத் தோன்றும்; அடியில் வட்டத்தட்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : பல எண்ணற்ற தாதிழைகள் அகவிதழ்களுக்குள் அடங்கியிருக்கும். தாதிழைகள் உதிர மாட்டா; தாதுப் பைகள் நீளமானவை.
சூலக வட்டம் : மூன்று முதல் பத்து வரை ஆழ்ந்த பிளவான சூலகம்; ஒவ்வொரு பிளவும் ஒரு செல்லுடையது; சூல் தண்டு அடியொட்டி இருக்கும்; சூல்முடி நுண்ணியது.
கனி : 3-10 ‘ட்ருப்’ எனப்படும் சதைக் கனி. நீண்ட விதைகள் நேராக அமைந்திருக்கும்; வித்திலைகள் தடித்தவை.