சங்க இலக்கியத் தாவரங்கள்/027-150

விக்கிமூலம் இலிருந்து
 

நரந்தம்–பூ
சிட்ரஸ் மெடிகா (Citrus medica,Linn.)

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி” என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டில் (94) உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘நாரத்தம்பூ’ என்றும், கலித்தொகையில் காணப்படும் ‘நரந்தம்’ என்ற சொல்லுக்கு (54:5) நரந்தம்பூ என்றும் உரை கண்டார்.

நாரத்தை’ என வழங்கும் இச்சிறுமரத்தில் வெள்ளிய பூக்கள் கொத்தாக மலரும். இதன் கனிக்காக இது வளர்க்கப்படும். இதில் இந்நாளில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள். கன்னட நாட்டில் உள்ள சிக்மகளூருக்கருகில் உள்ள மைய அரசின் ஆய்வுப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : நரந்தம்
பிற்கால இலக்கியப் பெயர் : நாரத்து, நாரத்தை
உலக வழக்குப் பெயர் : நாரத்தை
தாவரப் பெயர் : சிட்ரஸ் மெடிகா
(Citrus medica,Linn.)

நரந்தம்–பூ இலக்கியம்

“நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி” என்பது கபிலர் வாக்கு (குறிஞ்:94) இவ்வடியில் உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு ‘நாரத்தம்பூ’ என்று உரை கண்டார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இவரே கலித்தொகையில் வரும் இச்சொல்லுக்கு “நாரத்தம்பூ” என்பார். நாரத்தையின் இலக்கியச் சொல் ‘நரந்தம்’ என்பது மருவி நாரத்தை என்றாயிற்று போலும். சிலப்பதிகாரத்தில்[1] அடியார்க்கு நல்லார் ‘நாரத்தைப்பூ’ என்றார். அருஞ்சொல் உரையாசிரியர் ‘நாரத்து’ என்றார். மலையாளத்தார் இதனை நாரங்கம் என்பர்.

‘நரந்தை’ என்னும் பெயரில் ஒரு வகைப் புல்லும் உண்டு. அது நறுமணம் உள்ளது. அது நரந்தம் என்றும் கூறப்படும்.

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி”-புறநா: 132 : 4

இப்புல்லைக் கவரிமான் விரும்பித் தின்னும். இதன் மணத்திலும், சுவையிலும் மனம் வைத்த மான், கனவிலும் அப்புல்லைக் கண்டு மகிழுமாம்.

“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
 பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்”

-பதிற்: 11 : 21-22


இப்புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் பனிநீரை மலர் மாலைகளில் தெளித்து மணமேற்றுவர்.

“நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்”

இங்கு நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். ஆங்கிலத்தில் இப்புல்லை ‘லெமன் கிராஸ்’ (Lemon grass) என்றழைப்பர். ஆகவே நரந்தம் என்ற சொல்லுக்கு, இடத்திற்கேற்ப உரையாசிரியர்கள் இப்புல்லைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘நரந்தம்’ என்பதற்குக் ‘கத்தூரி’ என்ற பொருளும் உண்டு. (மதுரைக் : 553 நச் : உரை). மற்று, நரந்தம் ஒரு சிறு மரம். சோலைகளில் இம்மரம் வளர்கிறது. பெரிதும் இம்மரம் வேங்கை மரத்தின் பக்கத்தில் வளர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. செறிந்த மரங்களைக் கொண்ட காவில், வேங்கை மரத்து மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றுடன் நரந்தம்பூவும் உதிர்ந்து பரவிக் கிடக்கும்.

“புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
 நரந்த நறும்பூ நாள்மலர் உதிர”
-அகநா. 141 : 25-26

“நனிஇரும் சோலை நரந்தம் தாஅய்
 ஒளிர்சினை வேங்கை விரிந்தஇணர் உதிரலொடு”

-பரிபா: 7 : 11-12


“தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தம்பூ நாறும் கைகளை உடையவன்” அதியமான் நெடுமான் அஞ்சி. (புறநா : 285 பழைய உரை) இக்கையால் தன் தலையை நீவி, அன்பு காட்டியதை ஔவையார் :

“நரந்தம் நாறும் தன் கையால்
 புலவுநாறும் என்தலை தைவரு மன்னே”
-புறநா: 235 : 8-9

நரந்தம்பூவை மகளிர் தம் கூந்தலிற் சூடுவர். “நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்” என்னும் தொடரைப் பரணரும், பனம்பாரனாரும் ஓர் எழுத்தும் மாறாமல் ஆளுகின்றனர்.

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 இளந்துணை மகளிரொடு”
-அகநா: 266 : 4-5

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 நிறத்து இலங்கு வெண்பல் மடந்தை”
-குறுந்: 52 : 3-4

ஒரு தலைமகன். தன் காதலியுடன் குலவிய போது, அவளது கூந்தலில் இருந்து நரந்தங்கோதையை விரலால் சுற்றி, மணம் பெற்ற விரலை மோந்து மகிழ்ந்தான் என்பர் :

“நரந்தம் நாறும் கூந்தல் எஞ்சாதுபற்றி
 பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
 நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஓர்காழ்
 விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்”

-கலி: 54 : 5-8
 (நுங்கிய - செய்த; சிகழிகை - தலைக்கோலம்)

மேலும், அந்நாளில் யாழிற்கும் நரந்த மாலை சூட்டப்பட்டதென்றும் கூறுவர்.

“நரத்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
 ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்”

-புறநா: 302 : 4-5


நரந்த மலர் வெண்மையானது; நறுமணம் உடையது; மணம் நெடுநாள் வரை நீடிக்கும். வேங்கை மலருங்கால் இதுவும் மலரும்.

நரந்தம் என்ற புல் ஒன்று உண்டு; இதற்கும் நறுமணம் உண்டு. இதனைக் கவரிமான் விரும்பி மேயும். தாவரவியலில் இப்புல்லுக்கு சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogan citratus) என்று பெயர். ஆங்கிலத்தில், இதனை லெமன் கிராஸ் (Lemon grass) என்றழைப்பர். இதன் விளக்கவுரையை, ‘நரந்தம்புல்’ என்ற தலைப்பில் காணலாம்.

நரந்தம்—பூ தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் வகை : டிஸ்கிபுளோரே (Disciflorae) அகவிதழ்கள் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் : ரூட்டேசி (Rutaceae)
தாவரப் பேரினப் பெயர் : சிட்ரஸ் (Citrus)
தாவரச் சிற்றினப் பெயர் : மெடிகா (medica)
தாவர இயல்பு : சிறுமரம்
இலை : மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை; எனினும், பக்கத்துச் சிற்றிலைகள் பெரிதும் அருகி ஒழிந்தன. ஒரு சிற்றிலை மட்டுமே காணப்படும். எனினும், இன்றும் சிக்மகளுர் ஆய்வுச் சோலையில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட நாரத்தை வளர்கிறது. சிற்றிலை முட்டை வடிவானது; சுரப்பிகளைக் கொண்டது.
மஞ்சரி : கலப்பு அல்லது நுனி வளராப் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : சிறியது; வெண்மையானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : கிண்ணம் போன்று குவிந்தது.
அல்லி வட்டம் : 4-8 அகவிதழ்கள்; வெண்மையானவை. சற்று நீண்ட இதழ்கள்; தழுவிய அடுக்கு முறை; அல்லிக்கு அடியில் (டிஸ்க்) வட்டத்தண்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : 20-60 வரையிலான தாதிழைகள் வட்டத் தண்டிலிருந்து உண்டாகும் மகரந்தப் பைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

நரந்தம்
(Citrus medica)

சூலக வட்டம் : பல சூல்கள் நிறைந்தது; சூல்தண்டு தடித்தது; உதிரும் சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி; சூலறைச் சுவர்களில் உண்டாகும் மயிரிழைகளில் சாறு நிறைந்து இருக்கும். கனி உறை தடித்தது; இதிலும் சுரப்பிகள் பல உள; விதைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.

நாரத்தையின் பேரினத்தில் நூற்றுக்கணக்கான சிற்றினங்களும், வகைகளும் உள்ளன. எனினும் நாரத்தை முதலானது. இது சிட்ரான் எனப்படும். எலுமிச்சையை, ‘லைம்’, ‘லெமன்’ எனவும் கூறுவர். ‘லிமோனம்’ என்பது இதன் தாவரச் சிற்றினப் பெயர். ‘ஆசிடா’ என்பது புளிப்பு நாரத்தை; குடகு ஆரஞ்சு ‘ஆரண்ஷியம்’ எனப்படும். குளஞ்சி நாரத்தை இனிப்புள்ளது: இதற்கு, ‘லைமெட்டா’ என்று பெயர். இவை அனைத்தும் பெரிதும் கனிக்காகப் பயிரிடப்படுகின்றன. மருந்துக்கும் உதவும்.


  1. சிலப் : மதுரைக். 12 : 2