சங்க இலக்கியத் தாவரங்கள்/033-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை
எரித்ரைனா இன்டிகா (Erythrina indica, Lam.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘கவிர்’ என்பதற்கு உரையாசிரியர்கள் ‘முள்முருக்கு’ என்று கூறுவர். இது ஒரு மரம். இதன் புறத்தில் ‘முள்’ முதிர்ந்து இருக்கும். இதன் மலர் செந்நிறமானது. சண்டையிடும் சேவலின் பிடர் சிலிர்த்தது போன்ற இணரை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : கவிர்
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் : புழகு
பிற்கால இலக்கியப் பெயர் : முள்முருக்கு, மலை எருக்கு
உலக வழக்குப் பெயர் : கலியாண முருங்கை
தாவரப் பெயர் : எரித்ரைனா இன்டிகா
(Erythrina indica, Lam.)

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை இலக்கியம்

கவிர் என்பது, இற்றை நாளில் கலியாண முருங்கை என வழங்கப்படுகிறது. இது முருக்கு இனத்தைச் சேர்ந்தது. மரத்தாலும், மலரின் நிறத்தாலும் இரண்டும் ஒத்தவை. பிங்கலம்[1] இதனை முள்முருக்கு என்றது. பிற்கால இலக்கியங்களிலும் இது முள்முருக்கு எனப்படுகின்றது. உரையாசிரியர்கள் ‘கவிர்’ என்பது முள்முருக்கு என்றனர். இலக்கியங்களை உற்று நோக்கினால் “செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கு” (அகநா. 99 : 2) என்றாங்கு. ‘கவரில்’ முள் இருப்பதாகக் குறிக்கப்படவில்லை. ஆயினும், முருக்காகிய பலாசத்திலும் (அகநா. 99) கலியாண முருங்கையாகிய கவிரிலும் நுண்ணிய முள் காணப் படுகின்றது. பூக்கள் இரண்டிலும் நல்ல செந்நிறமாயினும், மலர் அமைப்பில், முருக்கும், முள்முருக்கும் வேறுபட்டவை. தாவரவியலில், இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாயினும், இவை இரு பேரினங்களைச் சேர்ந்தவை. முருக்கு மலரைப் புலவர்கள் சண்டைச் சேவலின் பிடரி சிலிர்த்தது போன்றதென்பர். கவிரின் பூ, சேவலின் நெற்றியென்னும், கொண்டையை ஒத்தது என்பர்.

“தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்தின்
 கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன
 நெற்றிச் சேவல் .... .... .... ....”
-அகம் . 367 : 10-12

“கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் .... .... ...”-புறநா 325 : 6

பிற்கால இலக்கியங்களில் முருக்கின் இதழ், மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பினும், பண்டைய இலக்கியத்தில் செவ்வாய் என வாய் நிறத்தளவிற்கு மட்டும் இதன் இதழ் கூறப்பட்டுள்ளது. கவிரின் இதழ், மகளிர் செவ்வாய் இதழிற்கு உவமையாகக் காட்டப்படுகின்றது.

“கவிர் இதழ் அன்ன காண்புஇன் செவ்வாய்”-அகநா. 3 : 15

“கார்அணி கூந்தல், கயல்கண், கவிர்இதழ்”-பரிபா. 22 : 28

“கரைநின் றுதிர்ந்த கவிர்இதழ்ச் செவ்வாய்”[2]

குமட்டூர்க் கண்ணனார், ‘கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி’ (பதிற். 11 : 21) என இம்முள்முருக்கு மலைப்பகுதியில் வளர்வதைக் கூறுகின்றார். இதனால் இதனைக் குறிஞ்சி நிலப்பூவென்பர். ஆகவே, இதுவும் முருக்கு போல வேனிற்காலத்தில் பூக்கும் இயல்பிற்று. சூடப்படாதது. இம்மலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

கவிரை உள்ளிட்ட இத்தாவரப் பேரினத்தில், 9 இனங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், 4 இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் காம்பிளும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42 என, ராவ்.ஆர்.எஸ் (1945), அட்சிசன் (1974 சி), நந்தா (1962) முதலியோர் கூறுவர்.

கவிர்—முள்முருக்கு—கலியாணமுருங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை
தாவரப் பேரினப் பெயர் : எரித்ரைனா ((Erithrina)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
தாவர இயல்பு : மரம் உயர்ந்து வளரும். வலியற்றது. தண்டில் சிறிய முட்கள் காணப்படும்.
தாவர வளரியல்பு : அகன்ற பெரிய மூன்று திட்டு வடிவச் சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. காம்பு 10-15 செ. மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் உள்ளன. இலையடிச் சிறு செதில்கள் சுரப்பி போன்றிருக்கும்.
இலை : மீசோபைட்
மஞ்சரி : 12-15 செ.மீ. நீளமுள்ள நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் அல்லது கிளை நுனியில் உண்டாகும்.
மலர் : பெரியது. நல்ல சிவப்பு நிறமானது. இணரில் நெருக்கமாக இருக்கும். மலரடிச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 பசிய இதழ்கள்
அல்லி வட்டம் : 5 செவ்விய இதழ்கள். பதாகை இதழ் 5-7 செ. மீ. நீளமானது. சிறகிதழ்கள் இருபுறமும் சிறியவை. கீல் இதழ்கள் இரண்டும் நீண்டிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்
சூலக வட்டம் : இரு சூலிலை ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல்தண்டு நுனியில் வளைவானது. சூல்முடி தடித்தது.
கனி : ஒரு புற வெடி கனி. 15-30 செ. மீ நீளமானது. விதை முட்டை வடிவானது. ஹைலம் பக்கவாட்டிலிருக்கும்


இதன் அடிமரம் மென்மையானது. வெண்ணிறமானது. கிளைகளை வேலிக்கு நட்டு வளர்ப்பர். தமிழ் நாட்டில் காணப்

கவிர்
(Erythrina indica)

படும். மலைப்பாங்கில் சிறு புறவில் வளரும். இம்மரம் பூத்த நிலையில், மிக அழகாகத் தோன்றும். மலரில் மணமில்லை.

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பல்வேறு பூக்களையெல்லாம் கூறி, இறுதியாகப் ‘புழகுடன்’ என்கின்றார்.

“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர் ‘அச்சாரலிடத்துத் தம்மில் மயக்கமுடைய வாய்ச் சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற’ பிற பூக்களையும் பருத்த அழகினையுமுடைய ‘மலை எருக்கம் பூவுடனே’ என்று உரை கண்டார். இப்புழகினைப் பற்றிச் சங்க நூல்களில் இன்னொரு குறிப்பும் கிடைக்கிறது.

“அழுந்துபட்டு அலமரம் புழகுஅமல் சாரல்”-மலைபடு. 219

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர், கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் ‘மலைஎருக்கு’ நெருங்கின பக்கமலையில் என்று உரை கூறுவர்.

மேலும் பெருங்கதையில், ‘அகன்றலைப் புழகும்’[3] என வரும் அடியொடும் உற்று நோக்கினால், ‘புழகு’ என்பது ‘மலைஎருக்கு’ எனப்பட்டது என்றும், இம்மரத்தின் மேற்பகுதி அகன்றிருக்கும் என்றும், இதன் அடியில் இதற்குக் கிழங்கு இருக்குமென்றும், இது மலைப்புறத்தே வளரும் என்றும், இதனுடைய பூக்கள் செவ்விய நிறமுடையன என்றும், இம்மலர்கள் உதிர்ந்து கிடப்பது சாதிலிங்கப் பூவை பரப்பினாற் போன்று காட்சி தருமென்றும், இதன் அழகிய அடிமரம் பருத்திருக்கும் என்றும் அறிய முடிகின்றது.

இக்குறிப்புகளைக் கொண்டு இதனுடைய தாவரவியல் பெயரை அறுதியிட முடியவில்லை. இதனைப் புனமுருங்கையுமாம் என்பர் என்பது கொண்டு, ஒரு வேளை இது கலியாண முருங்கையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் பூக்கள் இதன் மரத்தடியில் அரக்கு விரித்தன்ன காட்சி தரும். அங்ஙனமாயின், இதனைத் தாவர இயலில், எரித்ரைனா இன்டிகா (Erythrina indica) என்று குறிப்பிடலாம். இதற்குக் ‘கலியாண முருங்கை’ என்று பெயர்.

அங்ஙனமாயின், இதனைக் ‘கவிர்’ எனப்படும் கலியாண முருங்கையில் விரிவாகக் கூறியுள்ள தாவரவியல் விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம். எனவே, புழகு என்பது கவிர், புனமுருங்கை, கலியாண முருங்கை, மலைஎருக்கு என்றெல்லாம் கூறப்படும் என்பதாயிற்று.


  1. பிங்.நி : 2695 “கவிரே சஞ்சுகம் முள் முருக்காகும்”
  2. சிலப். 13 : 165
  3. பெருங். 12:27