சங்க இலக்கியத் தாவரங்கள்/056-150

விக்கிமூலம் இலிருந்து
 

மராஅம்–செங்கடம்பு
பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

சங்க இலக்கியங்களில் பயிலப்படும் ‘மராஅம்’ என்ற சொல் பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு என்ற இரு வகை மரங்களையும் குறிப்பிடும். எனினும், ‘கடம்பு’ என்ற சொல் ‘செங்கடம்ப’ மரத்தையே குறிப்பிடும்.

சங்க இலக்கியப் பெயர் : மராஅம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கடம்பு
உலக வழக்குப் பெயர் : செங்கடம்பு, அடம்பு, அடப்ப மரம், கடம்பு மரம்.
தாவரப் பெயர் : பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

மராஅம்–செங்கடம்பு இலக்கியம்

மராஅம் என்ற சொல் செங்கடம்பையுங் குறிக்கும். செங்கடம்பின் மலர் செந்நிறமானது. இதன் பூக்கள் தீயை ஒப்பன என்பர்.

“எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து-மலைபடு. 498

வெண்கடம்பைப் போல வலிமிக்கது. ஆயினும், மலரியல்பால் செங்கடம்பு வேறுபட்டது. செங்கடம்பைக் குறிப்பதற்குக் கடம்பு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் இலைகள் நன்கு தழைத்து வளரும். மரத்தைச் சுற்றிலும் பரவித் தாழ்ந்து கவிழ்ந்து வளர்வதால் அடிமரப்பகுதி இருண்டிருக்கும் என்பர்.

‘இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து’ என்றார் நக்கீரர் (திருமு. 10) ‘திணிநிலைக் கடம்பு’ என்றார் கபிலர். இம்மரம் பொய்கைக் கரையில் வளரும்.

“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
 துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை”
-சிறுபா. 69-70

கடம்பின் பூங்கொத்து நீளமானது. மரக் கிளைகளிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும். தூங்கிணர்க் கொன்றையைப் போன்றது. பூங்கொத்தில் இளஞ்சிவப்பு மலர்கள் உண்டாகும். மலர், தேர்ச்சக்கரம் போன்றது. மலரின் நடுவில் வெண்மையான துளையுண்டு. பூங்கொத்து தொங்கிக் கொண்டிருப்பதால், முதிய மலர்கள் இணரின் மேற்பகுதியிலும், மொட்டுகள் அடிப்பகுதியிலும் காணப்படும். பூத்து முதிர்ந்த மலர்கள் பூங்கொத்திலிருந்து கழன்று உதிரும். இப்பூங்கொத்து மலர்ந்த நிலையில், பூக்களைக் கட்டிய மாலை போன்று தோன்றும். இதனையே கடம்பின் ‘துணையார் கோதை’ என்றார். இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் ‘கோதை போலப் பூத்தலின் கோதை யென்றார்’ என்பர். இந்தச் சிறுபாணாற்று அடியினைச் சீவக சிந்தாமணிப் பாடலுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். அப்பாடல்,

“கடம்பு சூடிய கன்னி மாலைபோல்
 தொடர்ந்து கைவிடாத் தோழிமா ரோடும்
[1]

(கடம்பு-ஒரு வகை மரம். சூடிய-பூத்த, கன்னி மாலை-புதுமையை உடைய பூ மாலை, கைவிடா-நீங்காத)

கடம்பு பூத்த புதுமையை உடைய பூ மாலை போல் தொடர்பு நீங்காத தோழியர் என்றார். மேலும், தலைவன் தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்ட தலைவியும், தோழியும் ஒருவரை ஒருவர் கை கோத்து நின்ற நிலையைக் ‘கடம்பின் திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலை போல’ என்னும் கபிலரின் வாக்கினை, ‘திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய துணையமை மாலையின் கைபிணி விடோம்’ (குறிஞ்.176-177) மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். இதற்கு அவர்,

‘திண்ணிய நிலையினை உடைய கடம்பினது திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதல் உடைய மாலை போலக் கை கோத்தலை விடேமாய்’, என்றெழுதுவாராயினர்.

மேலே குறிப்பிட்ட சிறுபாணாற்றுப்படை அடிகட்கு ‘நெருங்குகின்ற தன்மை உடைய கடம்பினது இணைதல் நிறைந்த மாலை’ என்று உரை கண்டுள்ளார்.

இத்துணையும் நோக்குழி கடம்பினது பூங்கொத்து, மலர்களாற் கட்டிய கோதையைப் போலப் பூத்திருக்கும் என்பது தெளிவாகின்றது.

மேலும், இக்கடம்பினது மலரைப் பற்றிப் புலவர் பெருமக்கள் குறிப்பிடுவதையும் காண்பாம்.

“இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
 உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்”
-திருமுரு. 11

“உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே ”-பரி. 5 : 81

“உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை”
-பதிற். பதிகம். 4 : 7


இவற்றுள் ‘உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்’ என்ற அடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர், ‘செங்கடம்பினது தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினை உடையவன்’ என்றார். ஆகவே, செங்கடம்பினது மலர், தேர்ச் சக்கரத்தை ஒத்து மிக அழகாகத் தோன்றும். வட்ட வடிவம்; நடுவில் சிறுதுளை; துளை மருங்கில் வெண்ணிறம்; அதற்கு வெளிப்புறம் இளஞ்சிவப்பு நிறம். மலரின் வட்டத்தை ஒட்டிய மிகச் சிவந்த பிசிர் போன்ற நூற்றுக் கணக்கான தாதிழைகள் நுனியில் தாதுப் பைகள்; அவைகளில் இருந்து வெளிப்படும் குங்கும நிறமான மகரந்தம். இப்பூக்கள் நீண்ட பூவிணரில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல மலரும். ஆதலின், இதன் இணர், கோதை போன்றது . இப்பூக்கள் பொய்கையில் மிதக்கும் காட்சியே காட்சி! புலவர்கள் கூறும் இவ்வுண்மைகளையும், நச்சினார்க்கினியர் கண்ட உரைகளையும் கொண்டு, இது செங்கடம்பு என்றும், இதன் தாவரப் பெயர் பாரிங்டோனியா அக்யுடாங்குலா என்றும் அறிய முடிந்தது. இதனுடைய தமிழ்ப் பெயர் ‘அடம்பா’ என்று குறிப்பிடுவார் காம்பிள். கடம்பு என்பது சிதைந்து, அடம்பு எனப்பட்டது போலும். இன்றும் தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் கடம்ப மரத்தை அடம்பு, அடப்ப மரம் என்று கூறுவர். இதுவே தாவரவியலில் இப்பெயரை உடையதாகும்.

இதன் தாதுக்கள் நல்ல செம்மை நிறம் கொண்டவை. இத்துகள் உதிர்ந்து பரவிக் கிடப்பது அழகிய காட்சியாகும். இதனைக் கோபம் எனப்படும் இந்திர கோப வண்டின் நிறம் போன்றது என்றும், பரந்து கிடப்பது, சித்திரத்தைப் போன்று அழகியது என்றும் நத்தத்தனார் பாடினார்:

“ஓவத் தன்ன ஒண்துறை மருங்கில்
 கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்”

-சிறுபா. 70-71


செங்கடம்பு மலர் முருகனுக்குரிய மலராகக் கொள்ளப்பட்டது.

‘உருள்பூம் தண்தார் புரளும் மார்பினன்’ எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பது போன்று, பிற நூல்களும் முருகனது மார்பில் அணியப்பட்ட மாலையாக அமைந்ததைப் புலப்படுத்துகின்றன. மேலும், இது தலையிலும் சூடப்பட்டது,

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி”-நற். 34 : 8

முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று ஒரு பொருள். அழகனாகிய இவன் இக்கடம்பைச் சூடுவதால், மேலும் அழகு பெற்றனன் என்பார் மாங்குடி மருதனார்.

“கடம்பின் சீர்மிகு நெடுவேள் .... பேணி”
-மதுரைக் காஞ்சி. 613-614


இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகனை வழிபடுகையினாலே’ என்றார். இம்மலரைச் சூடுவதினாலே முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றொரு பெயர் அமைந்தது. இதனைப் ‘பூக்கும் கடம்பா’ என்ற தொடரால் அறியலாம். பூவைச் சூடுவதோடு கடம்ப மரத்தில் முருகன் இடம் பெறுவதாகக் கருதினார்.

“கடம்பமர் நெடுவேளன்ன”
-பெரும்பா. 75


இங்கு அமர்தல் என்பது விரும்புவதையும், இடம்பெறுவதையும் குறிக்குமென்பர்.

இங்ஙனமே இக்கடம்பு, திருமால் இடங்கொள்ளும் செய்தியைப் பரிபாடல் பகரும்.

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
 . . . . . . . . . . . . . . . .
 அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்”

பரி. 4 : 67-69


இக்கடம்ப மாலை முருகனுக்கு உரியதாகையால், முருகனை முன்னிட்டு வெறியாடும் வேலன், இம்மாலையை அணிந்தும், மலரைச் சூடியும் ஆடுவான்.

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
 வேலன் கொண்ட வெறிமனை வந்தோய் ”
-நற். 34 : 8-9

இம்மலரைப் பனந்தோட்டுடன் சேர்த்துக் கட்டியும், வேலன் வெறியாடுவான் என்பர் காமக்கண்ணியார்.

“வெண்போழ்க் கடம்புடன் சூடி
 . . . . . . . . . . . . வேலன்
 வெறியயர் வியன் களம்”
-அகநா. 98 : 16-18

மேலைக் கடற்கரைப் பகுதியில் கூலகத்தீவு என்று ஒன்றுண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு ‘கடம்பர்’ என்றொரு இனத்தவர் வாழ்ந்தனர். அப்பகுதியில் ‘கடம்பத்தீவு’ என்பதும் ஒன்று. இக்கடம்பர்களது மன்னன் தனக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தைக் கொண்டிருந்தான். இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் இத்தீவின் மேல் படை எடுத்துச் சென்றான். அங்கிருந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி வென்றான். இதனால் அவன் ‘கடற்கடம்பெறிந்த காவலன்’ எனப்பட்டான்.[2]

இவ்வரலாற்றுச் செய்தியைக் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் ஈரிடங்களிலும் (பதிற்: 11, 20), மாமூலனார் அகநானூற்றிலும் (127) பாடியுள்ளனர் என்பார் இளஞ்சேரனார். [3]

கடம்பினால் ஒரு நிலம் பெயர் பெற்றது. ஓர் இனத்தவர் பெயர் பெற்றனர். இம்மரம் முருகனும், திருமாலும் தங்குமிடமாகச் சிறந்தது. மதுரைக்குக் கடம்ப வனம் என்று ஒரு பெயரைத் தந்தது. இத்தகைய கடம்பு மிக அழகிய கடப்பம் பூவைப் பூத்தது மட்டுமல்லாமல், புகழும் பூத்தது.

“புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு”-பரி. 19 : 2

 

செங்கடம்பு
(Barringtonia acutangula)

மராஅம்—செங்கடம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெசித்திடேசி (Lecythidaceae)
தாவரப் பேரினப் பெயர் : பாரிங்டோனியா (Barringtonia)
தாவரச் சிற்றினப் பெயர் : அக்யுடாங்குலா (acutangula)
தாவர இயல்பு : மரம் பசியது. கிளைத்தது. நீர் நிலை ஓரமாகவும், நீரிலும் வளர்ந்திருக்கும். வேடந்தாங்கல் ஏரியின் கரையிலும், ஏரியிலும் வளர்கிறது. சாதாரண உயரம் உள்ளது.
இலை : மெல்லிய அகன்ற தனியிலை. சுற்றடுக்கில் இருக்கும். பல நரம்புகளை உடையது.
மஞ்சரி : நீண்ட நுனி வளரும் பூந்துணர் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். தேர்ச் சக்கரம் போன்ற செவ்விய வட்ட வடிவான மலர்களை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று மலர் விடும்.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது. வட்ட வடிவானது. நடுவில் துளை உள்ளது. மலர்ந்த பின், இணர்க் காம்பிலிருந்து கழன்று கீழே விழும். மலர்த்துளையின் விளிம்பு வெண்ணிறமானது. வெளிப்புறம் செந்நிறமான, நூற்றுக்கணக்கான தாதிழைகளால் ஆனது. தாதிழைகள் நுனியில் வட்டமான வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்திற்கு வெளிப்புறத்தில் தாதுப் பைகள் காணப்படும். அவற்றில் செந்நிறத் தாது உகும்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ் விளிம்புகள் நேர் ஒட்டு முறையில் இணைந்துள்ளன. நடுவில் துளை இருக்கும்.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் தாதிழைக் குழலுடன் இணைந்துள்ளன.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள் மெல்லியவை. நீண்டவை. அடுக்கடுக்கானவை. அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். இவை தேர் உருளையின் ஆரக்கால்கள் போன்றவை. தாதிழைகளில் தாதுப்பைகள் உள்ளன. மகரந்தம் செந்நிறமானது.
சூலக வட்டம் : 2-4 செல்களை உடையது. ஒவ்வொன் றிலும் 2-8 தொங்கு சூல்களை உடையது. சூல்தண்டு நீளமானது. மெல்லியது. சூல்முடி சிறியது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி. நீள் உருண்டை வடிவானது. நான்கு பட்டையானது. கனியின் துனியில் புல்லிவட்டம் ஒட்டிக் கொண்டிருககும்.
விதை : ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை உண்டாகும். விதை அடியிலும், நுனியிலும், சிறுத்தும், நடுவில் பருத்தும் இருக்கும். கரு பெரியது. வித்திலைகள் அருகிப் போயிருக்கும்.

இம்மரம் வலியது. ஆயினும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. பட்டை கரும்பழுப்பு நிறமானது. மரம் வெண்மையானது. மென்மையானது. அழகிய வெள்ளிய ஆரங்களை (கோடுகளை) உடையது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று சப்தி சிங் (1961) என்பாரும், ராய் ஆர். பி. ஜா (1965 பி) என்பாரும் கூறுவர்.


  1. சீ. சிந். 990
  2. சிலப். 23 : 81
  3. இலக்கியம் ஒரு பூக்காடு. பக்: 525