சங்க இலக்கியத் தாவரங்கள்/079-150
மல்லிகை
ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd.)
மல்லிகை, புதர்ச் செடியாகவும் புதர்க் கொடியாகவும் வளரும் இயல்பிற்று. இது பல்லாண்டு வாழும்; முல்லையின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆயினும், முல்லையினின்றும் வேறுபட்ட இனம் என்று கூறலாம். மல்லிகையின் இலை, தனியிலை ஆகும். முல்லையின் இலை கூட்டு இலை ஆகும். முல்லையின் மலரைக் காட்டிலும் மல்லிகையின் மலர் சற்றுப் பருத்தது.
சங்க இலக்கியப் பெயர் | : | மல்லிகை, மல்லிகா |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | அதிரல், குளவி, மௌவல் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | மல்லிகை |
உலக வழக்குப் பெயர் | : | மல்லிகை |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd) |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் (Jasmin) |
மல்லிகை இலக்கியம்
சங்க இலக்கியங்களில் பரிபாடலில் மட்டுமே மல்லிகை மலர் குறிப்பிடப்படுகிறது.
“கில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலைவளாய்”-பரி. 11:105
மல்லிகை
(Jasminum pubescens)
“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம்”
-பரி. 12:77
எனினும் மல்லிகையைப் பெரிதும் ஒத்த அதிரல், குளவி, மௌவல் எனப்படும் மலர்கள் சங்க நூல்களில் பயிலப்படுகின்றன. இவை அனைத்தும் முல்லை இனத்தைச் சேர்ந்தவை. இவற்றைக் குறிஞ்சிக் கபிலர்,
“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ். 75
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76
“ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி”-குறிஞ். 81
எனத் தனித் தனியே கூறுகின்றார். ஆதலின், இவை மூன்றும் வெவ்வேறு மலர்கள் என அறிதல் கூடும். எனினும், கபிலர் மல்லிகை மலரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், மதுரைக் காஞ்சியின் ஈற்றிலுள்ள வெண்பா, மல்லிகை மலரைக் குறிப்பிடுகின்றது.
“சொல்லென்னும் பூம்போது தோற்றி பொருளெனும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்”-மதுரைக்கா: வெண்பா.
மேற்குறித்த பரிபாடலில் நல்வழுதியார் மல்லிகையையும், மௌவலையும் வேறு பிரித்தே பாடுகின்றார்.
“மாதவி மல்லிகை மௌவல் முல்லை”
என்று சிலப்பதிகாரச் சீரடி[1] செப்புதலின், பிற்காலத்திலும் மல்லிகை மலர், மௌவலினின்றும் வேறானதென்பது புலனாகும். மேலும், பண்டைய உரையாசிரியர்கள் அதிரல், குளவி, மௌவல் என்பனவற்றுக்குக் கூறும் உரைகளில் மல்லிகைப் பெயர் இடம் பெறுகின்றது.
அதிரல் | : புனலிப்பூ | ..நச்சினார்க்கினியர் |
குறிஞ். 75; முல்லைப். 51 | ||
காட்டுமல்லிகை | ..அரும்பத உரையாசிரியர்[2] | |
மோசிமல்லிகை | ..அடியார்க்கு நல்லார். | |
குளவி | : காட்டு மல்லிகை | ..நச்சினார். குறிஞ். 76 ; |
மல்லிகை விசேடம்[3]; | ||
மௌவல் | : மல்லிகை விசேடம்[4]; | |
மௌவற் பூ | ..குறிஞ். 81 |
மல்லிகை மலர் சிறந்த மணம் தருவது. முல்லைப் பூவைக் காட்டிலும், சற்றுப் பருத்தது. தூய வெண்மையானது. மிக மென்மையானது.
மல்லிகை சிறு புதராக வளரும். நீண்ட கொடியாக வளரும் மல்லிகையும் உண்டு. மனைத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதோடு, மலருக்காகப் பெரும் பண்ணைத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலரிலிருந்து விலை உயர்ந்த மல்லிகைத் தைலம் எனப்படும் (Jasmin oil) ஒரு வகை நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. சிறந்த நறுமணமுள்ள இந்த எண்ணெய் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
மல்லிகை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஓலியேசி (Oleaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் (Jasminum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | புயபெசன்ஸ் (pubescens) |
தாவர இயல்பு | : | பல்லாண்டு வாழும். புதர்க் கொடியாகவும், புதர்ச் செடியாகவும் வளரும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
உயரம் அல்லது நீளம் | : | 1-1.5 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த புதர். |
தண்டு | : | அடியில் 8-12 மி.மீ. பருத்து, சதைப் பற்று உள்ளதாக இருக்கும். முல்லைக் கொடியின் அடித்தண்டைக் காட்டிலும் பெரியது. |
கிளைத்தல் | : | குற்றுச் செடியில் அடியிலேயே பல கிளைகள் உண்டாகிப் புதர் போன்றிருக்கும். |
இலை | : | தனி இலை, செதிலற்றது. எதிர் அடுக்கில் கணுவிற்கு இரண்டு இலைகள். இலைக் காம்பு 2-3 மி. மீ. நீளமானது. |
வடிவம் | : | நீள் முட்டை வடிவம், 8-8.5 செ.மீ. X 3-4 செ.மீ. நேர் வடிவம் விளிம்பு கூர் நுனி. சிறகமைப்புள்ள நரம்புகள். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் கிளைத்த நுனி வளராப் பூந்துணர். சைமோஸ்-ஒவ்வொரு சைமிலும் 3 மலர்கள், நடு அரும்பு முதலில் முதிர்ந்து மலரும். |
மலர் | : | அரும்பு 1.5-2 செ.மீ. நீளமானது. தூய வெள்ளை நிறம். |
புல்லி வட்டம் | : | 5 அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், நுனியில் மெல்லிய பசிய கம்பி போன்றும் திருகிக் காணப்படும். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், மேலே இதழ் விரிந்தும் மலரும். சிறந்த நறுமணம் உள்ளது. |
மகரந்த வட்டம் | : | 2 மகரந்தத் தாள்கள் அல்லியொட்டியவை. அல்லியில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு தாளிலும் இரு மகரந்தப் பைகள் உண்டு. |
சூலக வட்டம் | : | 2 சூலறைகள் உள்ள சூற்பை. ஒவ்வொன்றிலும் 2 தலை கீழ்ச் சூல்கள். |
சூல் தண்டு | : | குட்டையானது. சூல்முடி 2 பிளவானது. |
சூலிலை | : | நீள்வட்டமானது. |
ஓலியேசி (Oleaceae) என்னும் இத்தாவரக் குடும்பம், ஓலியாய்டியே (Oleoideae), ஜாஸ்மினாய்டியே (Jasminoideae) என்று சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஹட்கின்சன் (Hutchinson-1948) என்பவர் இக்குடும்பத்தை இயல்புக்கு மாறான குவியல் என்று குறிப்பிடுகின்றார். இதில் உள்ள இரண்டு மகரந்தத் தாள்களே இக்குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாமெனவும் கூறுகின்றார். செல்லியல் அடிப்படையில் டெய்லர் (Taylor-1945) என்பவர், இக்குடும்பத்தின் பேரினங்களை மாற்றியமைத்துப் பாகுபாடு செய்தார். எனினும், இக்குடும்பத்தைப் பிற குடும்பங்களுடன் தொடர்பு படுத்த முற்படவில்லை.
இக்குடும்பத்தில் உள்ள ஓலியா விதைகளிலிருந்து ஆலிவ் எண்ணெய் எடுப்பதற்கும், பிராக்சினஸ் என்ற மரம் சிறந்த மர வேலைப்பாடுகட்கும் பயன்படுகின்றன. முல்லை, மல்லிகை முதலான நறுமண மலர்களைத் தரும் ஜாஸ்மினம் என்ற பேரினமும், அழகுத் தாவரங்களையுடைய சைரிங்கா, விகுஸ்ட்ராம் ஆகிய பேரினங்களும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.