சங்க இலக்கியத் தாவரங்கள்/091-150
இல்லம்–தேற்றா
ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.)
சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘இல்லம்’ என்பது தேற்றாங்கொட்டை மரம். இதன் பூக்களைப் பிற மலர்களுடன் சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்து, முல்லை நிலத்தவர் அணிவர். இம்மரம் கார்காலத்தில் பூக்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | இல்லம் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | தேறு, தேற்றா, தேறுவீ |
உலக வழக்குப் பெயர் | : | தேற்றாங்கொட்டை மரம் |
தாவரப் பெயர் | : | ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.) |
இல்லம்-தேற்றாங்கொட்டை மரம் இலக்கியம்
இல்லம் என்பது தேற்றாங்கொட்டை மரம். கலங்கல் நீரைத் தேற்றித் தெளிவிக்க இதன் கொட்டையை நீரில் தேய்ப்பர். தேற்றப் பயன்படும் இதன் கொட்டையைத் தேற்றாங்கொட்டை என்றனர் போலும். பின்வரும் கலித்தொகைப் பாடலில்:
“கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்துநலம் பெற்றாள்”
(காழ்-கொட்டை)
-கலி. 142 : 64-65
முடத்தாமக் கண்ணியார், ‘நகுமுல்லை உகுதேறுவீ’ (பொரு. 200) என்பார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அலர்கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்றா வினையும்’ என்று உரை கூறுவர்.
“மனை மாமரம் வாள் வீரம்”-பரி. 11 : 19
என்புழி, பரிமேலழகர், ‘மனை மாமரம்’ இல்லம், ஆவது தேறு என்றனர். இது முல்லையுடன் கார் காலத்தில் பூக்கும். இதன் பூ காம்பிலிருந்து கழன்று உதிரும்.
“முல்லை இல்லமொடு மலர,
. . . . . . . . . . . . . . . .
கார் தொடங்கின்றே காலை காதலர்”-அகநா. 364:7-9
இதன் பூவை முல்லை நிலத்தவர் குல்லை, குளவி, கூதளம். குவளை முதலிய பூக்களுடன் கணணியாகத் தொடுத்து அணிவர்;
“குல்லை குளவி கூதளம குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”
-நற். 376 : 5-6
எனினும், இப்பூ குறிஞ்சிப் பாட்டில் கூறப்படவில்லை.
இல்லம்—தேற்றாங் கொட்டை மரம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) |
தாவரக் குடும்பம் | : | லொகானியேசி (Loganiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஸ்டிரிக்னஸ் (Strychnos) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பொட்டடோரம் (potatorum) |
தாவர இயல்பு | : | மரம். 50 அடி வரையில் உயர்ந்து, கிளைத்து வளரும். ஏறக்குறைய 4000 அடி உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படும். |
இலை | : | இரு முனையும் குறுகிய, நீண்ட சிற்றிலை. 6 அங் X 2.5 அங் இலை நரம்புகள் இணையிணையான நடு நரம்பிலிருந்து உண்டாகும். |
மஞ்சரி | : | ஓர் அங்குல அகலமான நுனி வளராப் பூந்துணர். |
மலர் | : | மலர் வெண்ணிறமானது. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக நீண்டிருக்கும். மேலே சிறிய 5 மடல்கள் விரியும். குழலுக்குள் நுண் மயிர் செறிந்திருக்கும். |
மகரந்த வட்டம் | : | 5 மகரந்தத் தாள்கள் - குட்டையானவை. அல்லிக் குழலில் ஒட்டியிருக்கும். மகரந்தப் பைகள் நீண்ட முட்டை வடிவானவை. |
சூலக வட்டம் | : | இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் உள்ளன. சூல் தண்டு நீளமானது. சூல்முடி குல்லாய் போன்றது. |
கனி | : | உருண்டையான பெர்ரி எனப்படும் சதைக் கனி. 0.5-0.7 அங்குலப் பருமன் உடையது. இரு விதைகள் உள்ளன. |
அடிமரம் கருமஞ்சள் நிறமானது. வலிமையான மரம். பட்டை தக்கை போன்றது. பல பிளவுகளை உடையது. இதன் கொட்டையைத் தேய்த்துக் கலங்கிய நீரைத் தெளியச் செய்வர். இதனைக் கிளியரிங் நட் (Clearing nut) என்று ஆங்கிலத்தில் கூறுவர். இம்மரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை.