உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/092-150

விக்கிமூலம் இலிருந்து
 

அடும்பு
ஐபோமியா பெஸ்காப்ரே (Ipomoea pescaprae.,Sweet.)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அடும்பு’ என்பது கடற்கரை மணலில் வளரும் அடப்பங் கொடியாகும் இதன் செந்நீல மலர் மிக அழகானது.

சங்க இலக்கியப் பெயர் : அடும்பு
தாவரப் பெயர் : ஐபோமியா பெஸ்காப்ரே
(Ipomoea pescaprae.,Sweet.)
ஆங்கிலப் பெயர் : ஆட்டுக் குளம்புக்கொடி
(Goats foot creeper)

அடும்பு இலக்கியம்

இதனைக் ‘குதிரைக் குளம்புக் கொடி’ என்று சற்றுத் தவறுதலாகக் கூறுவர். எனினும், இதன் இலை மானின் குளம்பு போன்று இரு பிளவாக இருத்தலின் குறுந்தொகைப் புலவர் இதன் இலையை ‘மானடியன்ன கவட்டிலை’ என்றார்.

“அடும்பு அமர்ஆத்தி நெடுங்கொடி அவரை-குறிஞ். 87

என்று கபிலர் கூறும் ‘அடும்பு’ ஒரு கொடியாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அடும்பம்பூ’ எனவும்,

“வறள் அடும்பின் மலர் மலைந்தும்

-பட்.பா. 64.

என்புழி. ‘மணலிலே படர்ந்த அடப்பம்பூ’ எனவும்

“அடும்பிவர் அணி எக்கர்-கலி, 132 : 16

என்புழி ‘அடும்பங்கொடி படர்ந்த இடுமணலிலே’ எனவும் உரை கூறுவாராயினர்.

இக்கொடி கடற்கரை மணல் மேட்டில் நீரில்லாது வறண்ட மணலிலே படரும். இம் ‘மாக்கொடி’ கருஞ்செம்மை நிறமானது. இதனைக் ‘குதிரைக் குளம்புக் கொடி’ எனவும், ‘அடம்பு’ எனவும் வழங்குவர். இதன் இலை குதிரைக் குளம்பு போன்றதன்று. ஆயினும், மானின் குளம்பு போலப் பிளவு பட்டிருக்கும் என்பதைப் புலவர் கூறுவர். மகளிர் இக்கொடியைப் பறித்து விளையாடுவர் எனவும், நோன்பிருக்கும் பெண்டிர் மணல் மேட்டில் அமர்வதற்கு இக்கொடிகளைப் பறித்துப் போட்டிருப்பர் எனவும், இக்கொடி தலைவனது தேர்க்கால் பட்டு அறுபடும் எனவும் கூறுவர்.

“அடும்பிவர் அணிஎக்கர் ஆடி மணந்தக்கால்”
-கலி. 132:16
“வறள் அடும்பின் மலர் மலைந்தும்”—பட்.பா. 65

“முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
 ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்
 செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப”

-அகநா. 80 : 8- 10
“படிவ மகளிர் கொடிகொய்து அழித்த
 பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை”

-நற். 272 : 2ー3


அடும்பின் பூ செந்நீல நிறமானது. இப்பூவின் தோற்றம் குதிரையின் கழுத்தில் கட்டப்படும் சதங்கை மாலையின் மணி போன்றது. இதனைத் ‘தார்மணி ஒண்பூ’ என்பார் நம்பி குட்டுவனார். இப்பூ மலராத பருவத்தில் இம்மணியை ஒத்திருக்கும். நன்கு விரிந்த இம்மலர் ‘பாலிகை’ போன்றது. மண விழாவில் கலங்களில் முளைகளை இட்டு வைக்கும் மண் குவளைக்கும் ‘பாலிகை’ என்று பெயர். இதனால், இம்மலருக்கும் ‘பாலிகை’ என்ற பெயரும் உண்டு[1][2].

கடற்கரையிற் குலவும் தலைவனும், தலைவியும் இக்கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து களிப்பர். அவன் அவளது கூந்தலில், இம்மலரைச் சூட்டுவான். இம்மலரோடு நெய்தற் பூவையுஞ் சேர்த்துத் தொடுத்த நெய்தற் பூவையுஞ் சேர்த்துத் தொடுத்த கோதையை மகளிர் சூடுவர்.

“. . . . . . . . . . . . அடும்பின்
 தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதி,
 ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும்”
-குறுந் 243 : 1-3

“ஆய்பூ அடும்பின் அலர்கொண்டு உதுக்காண்எம்
 கோதை புனைந்த வழி”
-கலி. 144 : 30-31

“இருங்கழி பொருத ஈரவெண் மணல்
 மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
 கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்”
-நற். 145 : 1-3

“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
 நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
 ஓரை மகளிர்”
--குறுந் 401 : 1-3

அடும்பு தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே பாலிமோனியேலீஸ் (Bicarpellatae Polymoniales)
தாவரக் குடும்பம் : கான்வால்வலேசி (Convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : பெஸ்காப்ரே (pescaprae)
தாவர இயல்பு : படர் கொடி. சற்று வலிய கொடி.
தாவர வளரியல்பு : கடற்கரையில் வறண்ட மணல் மேட்டில் படர்ந்து மிக நீண்டு வளரும். சீரோமார்ப் (xeromorph) என்று கூறுவர்.
சங்க இலக்கியப் பெயர் : அடும்பு
பிற்கால இலக்கியப் பெயர் : அடும்பம், அடப்பம்
உலக வழக்குப் பெயர் : அடப்பங் கொடி, குதிரைக் குளம்பிலைக் கொடி குதிரைக் குளம்புக் கொடி.
இலை : இக்கொடியின் இலை தடித்த, அகன்ற தனியிலையாகும். 2 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் உள்ள இலை அடி வரை நீண்ட இரு பிளவானது. இதனால், இதற்குப் ‘பைலோபா’ என்று பெயரிட்டனர்.
மலர் : இலைக்கட்கத்தில் உண்டாகும்‌ பெரிய தனி மலர் மணி வடிவானது. செந்நீல நிறமானது.
புல்லி வட்டம் : 5 பசிய புல்லியிதழ்கள். 3- 5 அங். நீளமானவை. இவற்றுள் புறத்திதழ்கள் இரண்டும் சற்றுச் சிறியவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்தும், மேலே மடல்கள் விரிந்தும், அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 5 மெல்லிய நீண்ட தாதிழைகள் ஒரு படித்தன்று.
சூலக வட்டம் : 2 செல் உடையது. 4 சூல்கள். சூல்முடி, குல்லாய்‌ வடிவானது.
கனி : 4 ‘வால்வு’களை உடைய உலர்கனி. ‘காப்சூல்’ எனப்படும்.
விதை : பழுப்புத் தங்க நிறமானது. நுண்மயிர் அடர்ந்தது. வித்திலைகள் இரு பிளவானவை.

இக்கொடி, மணல் அரிப்பைத் தடுக்கும் நல்லதொரு தாவரமாகும். இதன் அடியில் வலிய நீண்ட கிழங்கிருக்கும்.


  1. ‘அடும்பு பாலிகை’-பிங். நிகண்டு.
  2. திணைமா. நூற். 51