சங்க இலக்கியத் தாவரங்கள்/097-150

விக்கிமூலம் இலிருந்து
 

பகன்றை
ஆப்பர்குலைனா டர்பீத்தம்
(Operculina turpethum,Silva Monso.)

சங்க இலக்கியங்களில் ‘மணமிலகமழும்’ பூ ஒன்று கூறப்படுகின்றது. அதுதான் பகன்றைப் பூ இது ஒரு சிறு கொடி. தூய வெண்ணிறமான மலர்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : பகன்றை
தாவரப் பெயர் : ஆப்பர்குலைனா டர்பீத்தம்
(Operculina turpethum,Silva Monso.)

பகன்றை இலக்கியம்

சங்க இலக்கியத்தில் பகன்றை ஒரு கொடியெனப் பேசப்படுகின்றது.

‘இலர் பகன்றை’ ‘கொழுங்கொடிப் பகன்றை’ என்பர். இது பனித்துறையில் புதல்தொறும் வளர்ந்து பூக்கும். இதன் இலை பெரியது.

பேரிலைப்பகன்றை-குறுந் . 330 : 4
பாசிலைப் பொதுளிய புதல்தொறும் பகன்றை-அகநா 217 : 6
பனித்துறைப் பகன்றை-பதிற்று. 26 : 12
பனித்துறைப் பகன்றை-புறநா. 235 : 18
அகன்துறை அணிபெற புதலொடு தாழ்ந்த
 பகன்றைப் பூவுற நீண்ட பாசடைத் தாமரை
-கலி. 73 : 1-2

பகன்றையின் முகைக்கு நல்லதொரு உவமை கூறுவர் கழார்க்கீரன் எயிற்றியனார். நீரில் முறுக்குப் பிரியாமல் கிடக்கும் துணியைப் போன்று பகன்றையின் வெண்மையான முகை திருகியதாகக் காட்சி தரும் என்கிறார்.

தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
 நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
 பேரிலைப் பகன்றை பொதியவிழ் வான்பூ

-குறுந் 330 : 2-4


இகன் முகை விரிந்தால் இதழ்கள் வட்டமாக நல்ல வெண்மையுடன் பால் பெய்த வட்டக் கிண்ணத்தை ஒத்திருக்கும் என்பார் கயமனார்.

“. . . . . . . . . . . .பேரிலைப்
 பகன்றை வால்மலர் பனிநிறைந் ததுபோல
 பால்பெய் வள்ளம் சால்கை பற்றி”
-அகநா. 219 : 3-5

மேலும், இப்பூ வெண்மையான புத்தாடைக்கு உவமிக்கப்படுகிறது.

“போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
 அகன்று மடிகலிங்கம் உடீஇ”
-புறநா. 393 : 18-19

இவ்வாறு எல்லாம் கூறப்படும் பகன்றைப்பூ நறுமணமில்லாதது. மேலும், கடுங்கள்ளின் அறுமணம் போன்று மூக்கை அறுக்கும் மணத்தை உடையது இப்பூ. இதனை ‘மணமிலகமழும்’ என்று மிக நயமாகக் கழார்க்கீரன் கூறுவார்.

“. . . . பகன்றைப் பொதியவிழ் வான்பூ.
 இன்கடுங் கள்ளின் மணமில கமழும்”
-குறுந் 330 : 4-5

நறுமணமின்மையால் சூடப்படாமல் விடுக்கப்பட்டமையின், இப்பூவைப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீழும் உயிரினத்திற்கு ஒப்பிடுகின்றார் புலவர் ஔவையார்.

“பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
 சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே”
-புறநா: 235 : 18-19

இருப்பினும், இதன் மிக வெள்ளிய நிறங்கருதிப் போலும் கள் விற்கும் மகளிர் இதனைக் கண்ணியாகச் சூடிக் கொள்வர் என்று கூறும் மலைபடுகடாம்.

“பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்”-மலைபடு. 459

நறுமணங் கமழாத இம்மலரையும் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் சேர்த்துள்ளார் .

“பகன்றைப் பலாசம் பல்பூம் பிண்டி” -குறிஞ். 88

பகன்றை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(Bicarpellatae)
பாலிமோனியேலீஸ் (Polymoniales)
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆப்பர்குலைனா (Operculina)
தாவரச் சிற்றினப் பெயர் : டர்பீத்தம் (turpethum)
சங்க இலக்கியப் பெயர் : பகன்றை
உலக வழக்குப் பெயர் : பகண்டை
தாவர இயல்பு : ஒரு பெரிய கொடி.
தண்டு : தண்டு, இலைக் காம்பு, மலர்த் தண்டு முதலியவை சிறகு பெற்றது போன்று அகன்று இருக்கும்.
இலை : முட்டை அல்லது இதய வடிவான பெரிய தனியிலை.
மஞ்சரி : தனி மலர் பெரியது. இலைக்கோணத்தில் தனித்து உண்டாகும். மலரடிச் செதில் எளிதில் உதிர்ந்து விடும்.
மலர் : பெரியவை, வெண்ணிறமானவை.
புல்லி வட்டம் : 5 பெரியவை. முட்டை வடிவான, பளபளப்பான, புறவிதழ்கள் உதிராமல், கனியுடன் வளர்ந்து, ஒட்டியிருக்கும்.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் இணைந்திருக்கும். 5 பட்டையான கோடுகளை உடையது.
மகரந்த வட்டம் : 5. தாதிழைகள் மெல்லியவை. அடியில் அகன்றிருக்கும். தாதுப் பைகள் பெரியவை. முறுக்கி விட்டாற் போன்றவை.
சூலக வட்டம் : பளபளப்பானது. 2 செல் உடையது. 4 சூல்களை உடையது. சூல் தண்டு இழை போன்று மெல்லியது. சூல்முடி 2 உருண்டைகளை உடையது.
கனி : ‘காப்சூல்’ என்ற வெடி கனி; விதைகள் பெரியவை. கரிய வழவழப்பானவை. கருவேர் பெரியது.
இதன் முன்னைப் பெயர் : ஐபோமியா டர்பீத்தம்