சங்க இலக்கியத் தாவரங்கள்/096-150

விக்கிமூலம் இலிருந்து
 

முசுண்டை
ரைவியா ஆர்னேட்டா (Rivea ornata ,Choisy.)

முசுண்டை இலக்கியம்

சங்க இலக்கியங்கள், ‘புன்கொடி முசுண்டை’ எனவும், ‘கொழுங்கொடி முசுண்டை’ எனவும் பேசுமாறு போல இது ஒரு கொடியாகும்.

‘முசுண்டை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டில் ‘முசுட்டை’ என்று உரை கூறுகின்றார்: (நெடுந. 13, சிறுபா.166) இச்சொல் உலக வழக்கில் உள்ளது.

இதன் முகை சற்றுத் திருகினாற் போல இருத்தலின், ‘சுரிமுகிழ் முசுண்டை’ எனக் கூறப்படுகிறது (மதுரை 281) இதன் பூ திரட்சியுடையது. வெண்ணிறமானது. நடுயாமத்தில் மலர்வது.

“குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்
 புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூ
” -நெடுந. 13

மழை நின்று தெளிந்த வானில் விண்மீன்கள் அணி கொண்டவாறு போல இக்கொடி மலரும் என்பார் இளங்கண்ணனார்.

“மழையில் வானம் மீன்அணிந் தன்ன
 குழையாமல் முசுண்டை வாலிய மலா
-அகநா. 264:1-2

கார்த்திகை விண்மீன் போலப் பூத்தது என்று கூறுவர் பெருங் கௌசிகனார்.

“அகலிரு விசும்பின் ஆஅல் (ஆரல்) போல
 வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை

- மலைப. 100-101

இக்கொடி முஞ்ஞைக் கொடியுடன் நறுமணத்திற்காக வீட்டு முற்றத்தில் வளர்க்கப்பட்டு, பந்தல் போட்டது போலப் படரும். இதன் நீழலில் பலர் துயில் கொள்வர் என்று கூறுவர் விரைவெளியனார்.

“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை. பம்பி
 பந்தர்வேண்டாப் பலர் தூங்கு நீழல்”
-புறநா. 320 : 1-2

முசுண்டை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (Convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரைவியா (Rivea)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆர்னேட்டா (ornata)
சங்க இலக்கியப் பெயர் : முசுண்டை
உலக வழக்குப் பெயர் : முசுட்டை
தாவர இயல்பு : பெரிய கொடி.
இலை : இதய வடிவான சிற்றிலை. இலையின் அடியில் பட்டுப் போன்று மெல்லிய மயிர் அடர்ந்திருக்கும்.
மலர் : நறுமணம் உள்ளது. இலைக்கோணத்தில் உண்டாகும். வெண்ணிறமானது. 1-3 மலர்களைக் கொண்ட மலர்த் தண்டாகவும் இருக்கும்.
புல்லி வட்டம் : 5 முட்டை வடிவான புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாகவும், மேலே தாம்பாளம் போன்றும் இருக்கும்.
மகரந்த வட்டம் : மெல்லிய குட்டையான மகரந்தக் கால்கள் அகவிதழ்கட்குள்ளே இருக்கும் மகரந்தம் புறத்தில் நுண்முட்களைக் கொண்டது.
சூலக வட்டம் : 4 செல்லானது; 4 கரு. சூல்தண்டு மெல்லியது. சூல்முடி நீண்ட இரு பிளவானது.
கனி : உலர் கனி பழுப்பு நிறமானது. விதை 4 இருக்கும். வித்திலைகள் மிகவும் மடிந்திருக்கும். முளை வேர் தடித்தது.