சங்க இலக்கியத் தாவரங்கள்/107-150

விக்கிமூலம் இலிருந்து
 

துழாய்
ஆசிமம் சாங்க்டம் (Ocimum sanctum,Linn.)

சங்க இலக்கியங்கள் இதனைத் துழாய், துளவு, துளவம் என்று குறிப்பிடுகின்றன. இச்செடி திருமாலுக்கு உரியதெனப் போற்றப்படும். வீடுகளில் வளர்க்கப்பட்டுப் பூசிக்கப்படும்.

சங்க இலக்கியப் பெயர் : துழாய்
தாவரப் பெயர் : ஆசிமம் சாங்க்டம்
ஆங்கிலப் பெயர் : தூய பேசில் (Sacred Basil)

‘நறிய இணர்களை உடைய திருத்துழாய் சூடியவன் அருளினல்லால் பெருமைமிக்க துறக்கமேறுதல் எளிதோ?’ என்றிசைக்கும் பரிபாடல்.

இதன் உலர்ந்த தண்டினை மணி மணியாகச் செய்து மாலை சேர்த்து அணிவர்.

துழாய் இலக்கியம்

“தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி”-குறிஞ். 90
நக்கலர் துழாஅய் நாறுஇணர்க் கண்ணியை”-பரி. 4 : 58
துளவம் சூடிய அறிதுயி லோனும்”-பரி. 13 : 29
கள்ளணி பசுந்துள வினவை”-பரி. 15 : 54

சங்க இலக்கியங்கள் கூறும் துழாய் என்னும் இச்செடி துழாய், துளவம், துளவு என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டடியில் வரும் துழாய் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘திருத்துழாய்ப்பூ’ என்று உரை கண்டுள்ளார். திருமாலுக்கு இத்திருத்துழாய் உரியதாகும். ‘கள்ளணி பசுந்துள வினவை’ என்றமையின் இதன் மலரும் இதன் இலைக் கொத்தும் கண்ணியாகவும் மாலையாகவும் கட்டப் பெற்றுத் திருமாலுக்கு அணிவிக்கப்படும். திருமால் ‘துழாயோன்’ என்று குறிப்பிடப் படுவதல்லால், அவனருளினல்லால் துறக்கம் ஏறுதல் எளிதன்று என்றும் கூறும் பரிபாடல்.

“காறுஇணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
 ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்”
-பரி. 15 : 15-16

திருத்துழாய் சூடிய திருமாலின் சேவடி பரவுதும் என்று பதிற்றுப் பத்து கூறும்.

“கண்பொரு திகிரி கமழ்குரற் துழாஅய்
 அலங்கல் செல்வன் சேவடி பரவி”
-பதிற். 31 : 8-9

இதன் கிளை நுனி நீண்டு, பூங்கொத்தாகி விடும். இதில் அடுக்கு அடுக்காக மலர்கள் உண்டாகும். மலரின் புறவிதழ்கள் இணைந்து, பசிய குவளை போன்றிருக்கும். அகவிதழ்கள் இணைந்து, மங்கிய வெண்ணிறமாகவும், மேலே மடல்கள் இரு பிளவுகளாகவும் விரியும்.

துழாய் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
லாமியேலீஸ் (Lamiales)
தாவரக் குடும்பம் : லேபியேட்டே(Labiatae)
அகவிதழ் இணைந்தவை.
தாவரப் பேரினப் பெயர் : ஆசிமம் (Ocimum)
தாவரச் சிற்றினப் பெயர் : சாங்க்டம் (sanctum)
சங்க இலக்கியப் பெயர் : துழாய், துளவம், துளவு
உலக வழக்குப் பெயர் : துளசி
ஆங்கிலப் பெயர் : தூய பேசில் (Sacred Basil)
தாவர இயல்பு : 2-4 அடி உயர்ந்து, செடி நன்கு கிளைத்து வளரும். செடியில் பசிய நுண்மயிர் நிறைந்திருக்கும்.
இலை : மெல்லிய, நீண்ட தனி இலை. எதிரடுக்கில் உண்டாகும். இலை விளிம்பு பற்களைப் போன்றது. இலையில் ஒரு வித சுரப்பி இருப்பதால், இலைச் சாறு சற்றுக் காரமாக இருக்கும்.
மஞ்சரி : கிளை நுனியில் நுனி வளர் பூந்துணர்; துணர்க்காம்பு நீண்டு, அதில் அடுக்கடுக்காக மலர்கள் உண்டாகும்.
மலர் : சிறிய, மங்கிய, வெண்ணிறப் பூக்கள் பூக்காம்பில் உண்டாகும். தட்டுத் தட்டான அடுக்கில் உண்டாகும். நறுமணமுடையது.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் இணைந்து, பசிய குவளை போன்றிருக்கும். நுனியில், குவளை இரு பிளவாகி விடும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அடியில் குழாய் போன்றும், மேலே விரிந்து உதடு போல இரு பிளவாகவும் இருக்கும். மேல் உதட்டின் நுனியில் 4 பிளவுகள் காணப்படும். அடி உதடு தனித்திருக்கும்.
மகரந்த வட்டம் : 4 (2 + 2) இரு வேறு நீளமான தாதிழைகள் மலரில் வெளிப்பட்டுத் தோன்றும். தாதுப்பை ஒரு செல் உடையது. மகரந்த வட்டத்திற்கு அடியில் வளையம் (Disc) இருக்கும்.
சூலக வட்டம் : 4 செல் உள்ள சூலறைச் சூலகம்; சூல் தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : கனியை ‘நட்லெட்’ என்பர்.
விதை : 4 வழவழப்பான உலர்ந்த விதைகள் உண்டாகும்.

திருமாலுக்கு உரிய இத்திருத்துழாயின் இலைக் கொத்தும், மலரும் கண்ணியாகவும், அலங்கலாகவும் திருமாலுக்குச் சூட்டப்படும். இத்திருக்கோயில்களில், இதனை நீரில் இட்டுத் தூய நீராக வழங்கப்படும். இச்செடி மருந்துக்குப் பயன்படும்.

இதில் கருந்துளசி, நாய்த்துளசி என்ற இருவேறு இனங்களும் உள்ளன. இவையும் மருந்துக்கு உதவும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 64 டோயோச்சுக்கி (டி. 1938) என்பவர் அறுதியிட்டார்.