சங்க இலக்கியத் தாவரங்கள்/108-150

விக்கிமூலம் இலிருந்து
 

தும்பை
லியூகஸ் ஆஸ்பெரா (Leucas aspera,Spreng.)

‘தும்பை துழாஅய்’ என்று கபிலர் இதனைக் குறிஞ்சிப் பாட்டில் (90) குறிப்பிடுகின்றார். இது ஒரு செடி. வெற்றிடங்களில் தழைத்துக் கிளைத்து வளரும். மலர் தூய வெண்ணிறமானது. இது ஒரு போர் மலராகும். போரில் கைகலக்கும் இரு படைகளும் சூடிக் கொள்ளும் பூங்கொத்து இத்தும்பையாகும். தும்பை மலர் மருந்துப்பொருளாகவும் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : தும்பை
தாவரப் பெயர் : லியூகஸ் ஆஸ்பெரா
(Leucas aspera,Spreng.)

தும்பை இலக்கியம்

அனைத்துத் திணைகளும் பூக்களாலேயே பெயர் பெற்றனவாயினும் நச்சினார்க்கினியர் ‘தும்பை’ என்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர் என்று சிறப்பித்துரைக்கின்றார். இதனைப் போர் மலர் என்று கூறுவர் இளஞ்சேரனார்[1]. வெட்சி முதல் நொச்சி வரை எதுவாயினும் போர்க்களத்தில் கைகலப்பு நேரும் போதும், தும்பைத் திணையாகும் என்று கூறும் புறப்பொருள் வெண்பா மாலை[2]. போர் தொடங்கும் போதே இரு படைகளும் தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளும். இதுவும் தும்பைக்கு ஒரு சிறப்பாகும்.

“தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி”-குறிஞ். 90

என்று கபிலர் இதனைத் துழாயுடன் சேர்த்துப் பாடுகின்றார். தும்பைச் செடி தாவரவியலில் துழாய்ச் செடிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தும்பைப் பெயர் பல செடிகளுடன் இணைத்துப் பேசப்படினும், சிறு தும்பை, பெருந் தும்பை அல்லது மலைத் தும்பை மட்டுமே தும்பையினத்தவையாகும். இவற்றுள், சிறு தும்பையே இங்குப் பேசப்படுவது. இச்செடி வெற்றிடங்களில் ஒன்று முதல் இரண்டடி உயரம் நீண்டு, கிளைத்துச் செழித்து வளரும். இதன் இலைகள் எதிரடுக்கில் கிளைகளில் உண்டாகும். இலைக் கோணத்தில் கிளைக் குருத்து, இரு கிளைகளாக வளரும். இதனால், இதனைக் ‘கவட்டிலைப் பைந்தும்பை’ என்று புலவர் கூறுவர். இரு இலைகளை ஒட்டி, பசுங்கிண்ணம் போன்ற மஞ்சரி உண்டாகும். இதில் தூய வெண்மையான மலர்கள் உண்டாகும். கொத்துக் கொத்தாகத் தோன்றும் இக்கிண்ண அடுக்குகளான இப்பூங் கொத்தைக் ‘கொத்தலர் தும்பை’[3] என்பர் திருத்தக்க தேவர். இப்பூங்கொத்தைச் சூடும் போது, இதன் இலைகளும் அதிலிருக்கும், போருக்கெழுந்தவர் கவட்டிலையோடு கூடிய தும்பைக் கொத்தை அங்ஙனமே சூடிக் கொண்டனர் என்பர் கம்பர்.[4] இதனை இங்ஙனமே நெடுங்கல்வியாரும் பாடுவர்.

“. . . . . . . . . . . . பாசிலைக்
 கவிழ்பூந் தும்பை நுதல்அசைந் தோனே”

-புறநா. 283 : 14-15


தும்பைத் திணையைச் சிறப்பித்துக் கூறுகின்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

“மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
 சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப”

-தொல். பொருள்: 2 : 12


வீரத்திற்கு வீரம், வீரனுக்கு வீரன், வலிமைக்கு வலிமை, திறத்திற்குத் திறம் என்னும் நெறித் தூய்மையுடன் போர் புரிவதால், தூய்மையான வெள்ளிய தும்பை சிறப்புடைய திணைப் பூவாகின்றது. போரில் எதிர்த்துப் போரிடும் பகைவரும் தூயவராதல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்குத் ‘தும்பைப் பகைவர்’ என்றார் குமட்டூர் கண்ணனார் (பதிற். 14 : 8). மேலும், விழுப்புண் பெறாத வீரரை எதிர்த்துத் தும்பையைச் சூட மாட்டார் என்றுரைக்கும் பதிற்றுப்பத்து.

“. . . . . . . . . . . . வடுவாழ் மார்பின்
 அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
 தும்பை சூடாது மலைந்த மாட்சி”
-பதிற். ப. 42 : 4-6

மற்று, தழைத்த தும்பை சூடி வென்றாரைப் பாடும் புலவர் ஒருவரைத் ‘தும்பைப் புலவர்’ என்றார் ஐயூர் மூலங்கிழார்.

“ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
 பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே”
-புறநா. 21 : 10-11

மேலும் தும்பைப் பூவைக் கொத்தோடு ஆடவரும், மகளிரும் அணிவதும் உண்டென்பதை முறையே புறநானூற்றிலும் (96 : 1) ஐங்குறுநூற்றிலும் (127 : 2) காணலாம்.

தும்பை மலர் மருந்தாகவும் பயன்படும். இதன் மலர்களை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து, முழுக ஒரு பக்கத் தலைவலி குணமாகும் என்பர்.

தும்பை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
லாமியேலீஸ்
அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : லேபியேட்டே (Labiatae)
தாவரப் பேரினப் பெயர் : லியூகஸ் (Leucas)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆஸ்பெரா (aspera)
சங்க இலக்கியப் பெயர் : தும்பை
தாவர இயல்பு : 3000 அடி உயரம் வரை வறண்ட வெற்றிடங்களில் 1-3 அடி உயரம் வரையில் வளரும் செடி. செடியில் நுண்மயிர் இருக்கும்.
இலை : தனி இலை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைக் கோணத்தில் உள்ள கணுக்குருத்து இரு கிளைகளாக வளரும்.
மஞ்சரி : கிளகளில் உள்ள எதிரடுக்கான இலைகளுடன் சேர்ந்த ‘வர்ட்டிசி லாஸ்டர்’ என்ற பசிய கிண்ணம் போன்ற பூந்துணர்.
மலர் : தூய வெண்ணிற மலர். பூங்கொத்தில் உண்டாகும்.
புல்லி வட்டம் : குழல் வடிவானது. பசியது. நுனியில் 10 விளிம்புகளை உடையது. விளிம்புகட்கு உட்புறமாக வட்ட வடிவில் நுண்மயிர்கள் அடர்ந்திருக்கும். விதை உண்டாகும் புல்லிக் குழல் சற்று நீளமானது.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் இரு உதடுகள் போன்றிருக்கும். அடியில் இவை இணைந்து, குழல் வடிவாயிருக்கும். மேல் உதடு விரிந்து 3 பிளவாகக் காணப்படும். அல்லியிதழ்களுக்குள் மிக நுண்ணிய வெள்ளிய மயிர் அடர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள். இரண்டு உயரமானவை பூவின் அடிப்புறத்திலும், இரு குட்டையான தாதிழைகள் மேற்புறத்திலும் இருக்கும். இவை நான்கும் மேல் உதட்டில் அடங்கியிருக்கும்.
சூலக வட்டம் : 4 பிரிவானது. சூல்தண்டு நீண்டது. 4 முட்டை வடிவான ‘நட்லெட்’ என்ற உலர்கனிகள் உண்டாகும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என ஜா, சின்ஹா (1960) என்போர் கண்டறிந்தனர்.


  1. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 296
  2. “....போர்கருதித் துப்புடைத்தும்பை மலைந்தான்”
    -பு. வெ. மா. தும்பை: 1
  3. சீ. சிந்தாமணி: 2227
  4. “கொத்தலர் கவட்டி லையோடு ஏர்பெறத்
    துளவியல் தும்பையும் கழியச் சூடினான்”
    -கம்ப இரா. முதற்போர்: 115