சங்க இலக்கியத் தாவரங்கள்/135-150

விக்கிமூலம் இலிருந்து

 

உந்தூழ்–பெருமூங்கில்–கழை
பாம்பூசா அருண்டினேசியா
(Bambusa arundinacea, willd.)

குறிஞ்சிப் பாட்டில் இடம் பெற்ற ‘உந்தூழ்’ எனப்படும் பெருமூங்கில் புறக்காழ் உடைமையின் புல்லெனப்படும். இது ஒரு வலிய பல்லாண்டு வாழ்ந்து ஒரு முறை பூக்கும் புதர்ச்செடி.

இதன் அரிசிக்கு ‘அரி’ என்று பெயர். ‘அரி’ என்பதற்கு ‘மூங்கிலரிசி’ என்று உரை கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : உந்தூழ்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கழை, வெதிர், வெதிரம்
தாவரப் பெயர் : பாம்பூசா அருண்டினேசியா
(Bambusa arundinacea, willd.)

உந்தூழ் இலக்கியம்

‘உந்தூழ்’ என்பதற்குப் ‘பெருமூங்கில் பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை,

“உரிதுகாறு அவிழ் தொத்து உந்தூழ்” -குறிஞ். 65

என்று இதற்கு மூன்று அடைகொடுத்துப் பாடினார். ‘தொத்துந்தூழ்’ என்னும் கபிலர் தொடரை, தொத்து உந்தூழ் என்றே பிரித்தனர் நச்சினார்க்கினியர். மலைபடுகடாத்தில் ‘அலமரு முந்தூழ்’ என்று இது கூறப்படுகின்றது.

“. . . . . . . . . . . . பயம்புக்கு
 ஊழ்உற்று அலமரும் உந்தூழ். . . . ”
-மலைப. 132-133

‘அலமருமுந்தூழ்’ என்ற தொடரை அலமரும் உந்தூழ் என்றும் பிரிக்கலாம். அலமரும் முந்தூழ் என்றும் பிரிக்கலாம். நச்சினார்க்கினியர் இங்கேயும் ‘உந்தூழ்’ என்றே பிரித்து உரை கண்டார்.

குறுந்தொகையில்,

“பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
 முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே”
-குறுந் 239 : 5-6

என்று ஆசிரியர் பெருங்கண்ணன் கூறுகின்றார். இவ்வடிகளில் வரும் ‘தோன்றுமுந்தூழ்’ என்பதைத் ‘தோன்றும், உந்தூழ்’ என்று பிரித்தே உரை கண்டார் உ. வே. சா. அகநானூற்றில் இது ‘முந்தூழ்’ என்று கூறப்படுகின்றது.

“ தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
 முந்தூழ் ஆய்மலர் உதிர . . . ”
-அகநா. 78 : 7-8

இங்கு ‘உந்தூழ்’ என்றிருப்பது உதிர என்று வரும் சீருக்கு நிறைவான மோனையாகும் என்பர் கோவை. இளஞ்சேரனார்.[1] இவர் கூற்று பொருத்தமானதாகவே தோன்றுகிறது. ‘முந்தூழ்’ என்பதை விட ‘உந்தூழ்’ என்பதற்குப் பொருத்தமும் உண்டு.

‘உந்தூழ்’ எனப்படும் பெருமூங்கில் பெரிய, கிளைத்த, பல்லாண்டு வாழும் புதர்ச் செடி ஆகும். இதனையும் புலவர் பெருமக்கள் புல் என்றே கொண்டனர். இது தாவரவியலுக்கும் ஒத்ததாகும்.

பெருமூங்கில் அறுபது ஆண்டுகள் வரை நீண்டு, ஓங்கி வளர்ந்து, பின்னரே பூக்கும்.

இதன் மலரை ‘ஆய்மலர்’ என்றார் நக்கீரனார். ‘உரிது நாறு அவிழ் தொத்து’ என்றார் கபிலர். இந்த அடிக்கு நச்சினார்க்கினியர் ‘தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்தினை உடைய’ என்று பெருமூங்கிற் பூவைச் சிறப்பித்துக் கூறுவர்.

சற்று மங்கிய வெண்ணிறமாகப் பெருமூங்கில் கொத்தாகப் பூக்கும். தனக்கே உரியதான ஒரு மணத்தை உடையது. இம்மலர் பூத்துக் காய்த்துக் கனியாகி விதையுண்டாகும். இவ்விதை வெண்ணீல நிறங் கொண்டது. இதற்கு மூங்கிலரிசி என்றும் ‘அரி’ என்றும் பெயர். இதனையே பிற்காலத்தில் மூங்கில் தரும் ‘முத்து’ எனக் கொண்டனர் போலும்.

மேலும் இதற்குக் ‘கழை’ என்ற பெயரும் உண்டு. இதற்கு ‘மூங்கில்’ என்றே நச்சினார்க்கினியர் கூறுவர். இச்சொல். கரும்பையும் குறிக்கும். சங்க இலக்கியத்தில் ‘வேரல்’ என்றதொரு சொல்லும் ஆளப்படுகின்றது. இதற்குச் ‘சிறுமூங்கில்’ என்று உரை கூறுவர். ஆகவே, கழை என்பது பெருமூங்கில், சிறுமூங்கில் ஆகிய இவற்றுடன் வேறுபட்டதா என்ற ஐயம் எழுகின்றது. கழையும் மலையிடத்தில் வளரும் என்பர் புலவர்.

“மழைவிளை யாடும் கழைவளர் அடுக்கத்து” -பெரும்பா. 257
“கழைவளர் நவிரத்து” -மலைப. 579

கழையின் கொம்பு மிக ஓங்கி வளரும், என்றும் அதன் கவடுகளிலே கடுவன் உகளும் என்றும் கூறுவர் புலவர்.

“நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்” -மலைப. 237

எனினும் ‘கழை’ என்பது ‘பெருமூங்கிலைக்’ குறித்தது என்றே யாம் உரை கண்டாம்.

உந்தூழ் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி
தாவரக் குடும்பம் : கிராமினே
தாவரப் பேரினப் பெயர் : பாம்பூசா (Bambusa)
தாவரச் சிற்றினப் பெயர் : அருண்டினேசியா (arundinacea, willd.)
சங்க இலக்கியப் பெயர் : உந்தூழ்
உலக வழக்குப் பெயர் : பெருமூங்கில், மூங்கில்
தாவர இயல்பு : நெடுநாள் வாழும், ஒரு தரம் பூக்கும். 80 முதல் 100 அடி வரை மிக உயரமான ‘கல்ம்’ என்னும் தண்டு உடையது. 4 முதல் 7 அங். அகலமுள்ளது தண்டின் கணுவில் தோன்றும் கிளைகள் முட்களுடன் இருக்கும். உட்கூடு உள்ளது. மிக வலிமையானது
குருத்து : அடிமட்டத் தண்டிலிருந்து ஓங்கி வளரும். கழிகளின் குருத்து கூரியது. கரும் பழுப்பு நிறமான மெல்லிய
நீண்ட அடர்ந்த உறையால் மூடப்பட்டிருக்கும். இதில் உட்புறத்தில் நீண்ட மயிரிழைகள் உள்ளன.
இலை : இலை 8" நீளம் வரை இருக்கும். ஓர் அங். அகலம் வரை இருக்கும். இலைச் செதில்கள் நீண்டு, மயிரடர்ந்து, பழுப்பு நிறமாக இருக்கும்.
மஞ்சரி : ‘ஸ்பைக்லெட்’ எனப்படும். 5-1 அங்குலம் கொத்தான கலப்பு மஞ்சரி நீளமானது.
மலர் : மங்கிய வெண்ணிற மலர்கள் பல பூந்துணரில் இருக்கும். ஒவ்வொன்றும் ‘குளும்’ என்ற உமியுறையினால் மூடப்பட்டிருக்கும். இணரில் 2-3 ‘குளும்’ இருக்கும். இதற்குள் நீள் முட்டை வடிவான ‘லெம்னா’ கூரிய நுனியுடையதாக இருக்கும். ‘பிளாரெட்’என்ற மலர் இருபாலானது. மெல்லிய ‘லாடிக் யூல்’ 3 இருக்கும். இதன் விளிம்பில் நுண்மயிர்கள் உண்டு
மகரந்த வட்டம் : 6 தாதிழைகள்: ‘குளுமில்’ அடங்கியிருக்கும். தாதுப்பைகள் குறுகியவை. இதன் நுனி மொட்டையானது.
சூலக வட்டம் : சூலகம் பளபளப்பானது. நீள்முட்டை வடிவானது. நுனியில் மயிரடர்ந்து இருக்கும். சூல்தண்டு குட்டையானது. சூல்முடி மூன்றாகப் பிரிந்திருக்கும்.
விதை : மெல்லிய சற்று நீளமான விதை.

அறுபது ஆண்டு வாழ்விற்குப் பின் பூக்கும். இதனால் இது ‘மானோகார்ப்பிக்’ எனப்படும். இதில் மிகத் தடித்த மூங்கிற் கழிகளையுடைய மூங்கிலும் உண்டு. இதற்குப் பெருமூங்கில் என்று புலவர்கள் கூறுவர். இது பல வழிகளில் கட்டிட வேலைக்கும், பாய் முடைதல், கூடை பின்னுதல், தட்டிகள் செய்தல் முதலான சிறு தொழில்களுக்கும் பயன்படுகிறது. இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 4.6 என பார்த்தசாரதி (1946) கணித்துள்ளார்.

  1. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 616