உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/146-150

விக்கிமூலம் இலிருந்து

கூவிரம்

இதனைக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் ‘எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்’ (66) என்பர். நச்சினார்க்கினியர் கூவிரம் என்பதற்குக் ‘கூவிரப்பூ’ என்றெழுதியுள்ளார். சங்கப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் காணப்படவில்லை. கம்பர் கூவிரம் என்ற சொல்லை ஆண்டுள்ளார்.

“கூவிரஞ் செறிபொற் கொடித் தேரோடும்”[1]

‘கூவிரம்’ என்பது தேர்த்தட்டின் எதிரில் தாமரை மொட்டுப் போன்றதோர் கைப்பிடி ஆகும். அகரமுதலியில் ‘கூவிரம் என்பது கூவிளை’ என்று கூறும். கூவிளம் என்பது வில்வம். கூவிரம் கூவிளையன்று. என்னை? குறிஞ்சிப் பாட்டில் ‘உரிதுநாறு அவிழ்கொத்து உந்தூழ் கூவிளம்’ (65) என வருதலின் கபிலர் கூறியது கூறாராகலின் என்க. எனினும் ஆவிரை போன்று இது கூவிரையாக இருக்கலாம் என்பாருமுளர். இதனுடைய தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : கூவிரம்
தாவரப் பெயர் : தெரியவில்லை



  1. இராம. இரா. வ. பட 176