சங்க இலக்கியத் தாவரங்கள்/145-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

ஏனல்–தினை
செட்டேரியா இட்டாலிகா
(Setaria italica, Beauv.)

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப் புனமும், தினையும். இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச் செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது.

மலைமக்கள் தினைமாவில் தேனைப் பெய்து உண்பர். விருந்தினர்க்கும் படைப்பர்.

சங்க இலக்கியப் பெயர் : ஏனல், தினை
தாவரப் பெயர் : செட்டேரியா இட்டாலிகா
(Setaria italica, Beauv.)

ஏனல்–தினை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் ‘ஏனல்’ என்ற சொல் தினைப்புனத்தையும், தினையையும் குறிப்பிடும். மலைப்பாங்கிலும், சிறுபுறவிலும் தினைப்புனம் பரவி இருந்தது. அதில் தினை விதைக்கப் பெற்றது. தினையின் தாள் பசுமையானது. தினை இலை நீளமானது. தினைத்தாளின் அடியில் சுற்றிலுமாகப் பசிய வேர்கள் பரவியிருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமிப்பர். தினைப்பயிர் சூல் கொண்டு அதன் கதிர் வெளிப்படும். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிறச் செவ்விய தினை விளையும். இக்கதிர்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும். இதனைத் தம்மில் விளையாடிப் பொருகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றொடொன்று சேர்ந்த துதிக்கைகளுக்கு உவமித்துள்ளார் பெருங்கௌசிகனார். தினைப்புனத்தை மகளிர் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களில் உள்ள தினையைக் கவர்ந்துண்னும், தினைப்புனத்தை யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. தினைப்புனத்தைக் காப்பதற்கு மலை உச்சியில் சிறு இதணம் அமைப்பர். அதிலிருந்து கிளி கடி மரபினவாகிய குளிர், தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும் கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியன தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்குப் பறைஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவர்.

" - - - - - - - - - - - - - . . . மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் "
- குறுந். 72:3-5

" சுடுபுன மருங்கில் கலித்த ஏனல்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே "
-குறுந். 291

" நீடிலை விளை தினைக்கொடுங்கால் நிமிர "

-நற். 44:6

" தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே "
குறுந். 25

" . . . . . . ...... . . . . . . . . . . . . . . அணந்த யானை
முத்தார் மருப்பின் இறங்கு கைகடுப்ப
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நல்கோட் சிறுதினைப்படுபுள் ஒப்பி "
-குறிஞ். 35-38

" இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங்காற் செந்தினை கடியு முண்டன "

-நற்றிணை. 122:1-2

" பொய்பொரு கயமுனி முயங்கு கைகடுப்ப
கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல் "

-மலைபடு. 107-108

" நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும் "
-ஐங். 263:1-2

" திணைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் "

-
மலைப. 342

" களிறு அணந்து எய்தாக் கல்முகை இதனத்து
சிறுதினைப் படுகிளி எம்மொடு ஒப்பி "

-அகநா. 348:9-10

" அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி
யானை வவ்வின தினை என நோனாது"

-அகநா. 348 :10-11

" தோடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும்
ஒண்தொடி மகளிர்க்கு ஊச லாக "
-அகநா. 368:3-4


" ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை "
-குறுந் 54:2-3


" குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
பைந்தாள் செந்தினைப் படுகிளி ஒப்பும்
ஆர்கலி வெற்பன் "
-நற். 104:4-7


" பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்ப
தோடுதலை வாங்கிய நீடு குரல் பைக்தினை
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் "
-நற். 317:2-4


" தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர "
-நற். 147:2-3

ஊர்தோறும் எடுத்துக்கொண்ட விழாவின் கண்ணே தினை அரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாக வைத்து, மறியை அறுத்து, கோழிக் கொடியை நிறுத்துவர். வேலன் வெறியாட்டு அயருங் காலை, உதிரம் அளைந்த சிவந்த தினை யரிசியைப் பரப்பி செந்நிற மலர்களைத் தூவி வழிபடுவான்.

" சிறுதினை மலரொடு விரை இ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட கிறீஇ "

-திருமு. 218-219


" உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பி குறமகள்
முருகு இயம் கிறுத்து "

திருமு. 241-243

மேலும் தினைப்புனம் தலைமகனுக்குப் பகற்குறி இடமாக அமைந்த பாடல்களும் உள்ளன. தினை அரிசி நண்டுக் குஞ்சுகளைப் போன்றதென்றும், தினை அரிசிச் சோற்றைப் பாலுடனே தொண்டமான் இளந்திரையனிடம் பெறுவீர் என்றும் பாணர்களை ஆற்றுப்படுத்துகின்றார் உருத்திரங் கண்ணனார்.

" இருங்கிணை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர் "

-பெரும்பா. 167-168

ஏனல்-தினை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்

தாவரத் தொகுதி  : குளுமேசி (Glumaceae)

தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)

தாவரப்பேரினப்பெயர்  : செட்டேரியா (Setaria)

தாவரச்சிற்றினப்பெயர்  : இட்டாலிகா (italica)

சங்க இலக்கியப் பெயர்: ஏனல்

சங்க இலக்கியத்தில்

வேறு பெயர்  : தினை

உலக வழக்குப் பெயர்: தினை, தெனை

ஆங்கிலப் பெயர்: இட்டாலியன் மில்லெட் (Italian millet)

தாவர இயல்பு : ஓராண்டுச்செடி, 5 அடி உயரம் வரை வளரும்

இதன் தண்டு “கல்ம்" எனப்படும்.

இலை:குறுகிய தட்டையான சற்று நீண்ட இலை 6-18

அங். நீளமும் 0.4-1.4 அங் . அகலமும் உள்ளது.

மஞ்சரி:கதிர் தனித்து செடியின் நுனியில் உண்டாகும்.

12 அங். வரை நீளமானது. ' ஸ்பைக்லெட்' என்ற

கதிரில் நீளமான நுண்ணிய முட்கள் இருக்கும்.


மலர்:மேற்புற லெம்னா' வழவழப்பானது. அடிப்புற

'லெம்னா'வில் நீண்ட நுனியில் கூர்மையான

‘பாலியா'இருக்கும். மலர் உண்டாகும் இதில் 2

'லாடிக்கியூல்' இருக்கும். 3 தாதிழைகள் 2 சூல்

தண்டுகள்.

கனி :செம்மஞ்சள் நிறமானது. தினை அரிசியை

'லெம்னா' 'பாலியா' என்ற உமி மூடிக்

கொண்டிருக்கும். தினை அரிசிக்காகத் தினை பயிரிடப்படுகின்றது. நல்ல உணவுப் பொருள். ஆங்கிலத்தில் இதற்கு எப்படியோ இட்டாலியன் மில்லெட் (Italian millet) என்று பெயரிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் தினை விளைவது பலவாறாகக் கூறப்படுகின்றது. தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டு விளைந்து வருகின்றது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=18 என்று மோரி நாகா முதலியோர் (1929) கிருஷ்ணசாமி அய்யங்கார் (1935 பி) சர்மா, ஏ. கே. (1956) சிங், டி. என். காட்வார்ட் (1960) போடென்; சென் (1962) போல் (1962) வீல்வீபெர் கிஷிமோட்டோ (1962) என்போர் கணித்துள்ளனர்.