சங்க இலக்கியத் தாவரங்கள்/148-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

தெறுழ்வீ

‘தெறுழ்வீ’ என்ற இம்மலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறாவிடினும் புறநானூற்றிலும், நற்றிணையிலும் பேசப்படுகின்றது. இது ஒரு வலிய கொடி மலர்; இக்கொடி கருமை நிறமானது. இது வெளிர்மஞ்சள் நிறமான மலர்களைக் கொத்தாக அவிழ்க்கும். இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை. இக்கொடி தண்ணிய புறவில் கார் காலத் தொடக்கத்தில் காலை நேரத்தில் பூக்கும். மழைத் தண்ணீரால் தன்னுடைய வெளிர் மஞ்சள் நிறம் மாறி வெண்ணிறமாகத் தோன்றும்.

சங்கவிலக்கியத்தில் ‘தெறுழ்வீ’ என்னும் இம்மலரைப் பற்றிய செய்திகளை இவ்வளவிற்குத்தான் அறிய முடிகிறது. இவற்றைக் கொண்டு இதன் தாவரப் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : தெறுழ்வீ
தாவரப் பெயர் : தெரியவில்லை

தெறுழ்வீ இலக்கியம்


தெறுழ்வீ என்னும் இம்மலர், குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. எனினும் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இம்மலர் குறிப்பிடப்படுகிறது.

“கார்பெயல் தலைஇய காண்பின் காலைக்
 களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப”
-புறநா. 119:1-2

இதனால் இம்மலர் கார் காலத் தொடக்கத்தில் பூக்கும் எனவும், கண்ணிற்கினிய காலை நேரத்தில் பூக்கும் எனவும், களிற்றின் நெற்றியில் தோன்றும் புள்ளிகளைப் போன்ற வடிவில் இப்பூ பூக்கும் எனவும் அறியலாம்.

அடுத்து மதுரை மருதன் இளநாகனார் இம்மலரைக் குறிப்பிடுகின்றார்.

" வருமழைக் கெதிரிய மணிநிற இரும்புதல
கரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ "

-நற்றி. 302:4-5

இதனால் இப்பூ, வருகின்ற மழையை நோக்கி மலரும் எனவும் நீலமணி போன்ற வலிய புதர்களில் ஏறிப்படர்ந்து பூக்கும் கொடி மலர் எனவும், நல்ல பூங்கொத்தாகப் பூக்கும் எனவும், மழையில் தோய்ந்ததால், தன் வெளிர்மஞ்சள் நிறம் மாறி வெண்மை நிறமாகிவிட்டதெனவும் அறியலாம்.

மேலும், மதுரை கண்ணங்கூத்தனார் இம்மலரைச் சிறு விளக்கங்களுடன் பாடியுள்ளார்.

"கருங்கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து
ஈர்ந்தண்புறவில் தெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரார் அவர்என்று
கூர்ந்த பசலை அவட்கு"
[1]

இதனால் இத்தெறுழ்வீ, தண்ணியபுறவில் பூக்கும் எனவும், கருங்கால் அரும்பவிழ்ந்து பூக்கும் எனவும், மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை எனவும் அறியலாம். இதுகொண்டு இதனை 'வரகுப் பொரிமலர்' என்பர் கோவை. இளஞ்சேரனார். வரகுப் பொரி வெளிர்மஞ்சள் நிறமானது என்பது கருதத்தக்கது.

இம்மலரைப் பற்றிய சங்கவிலக்கியப் பாடல்கள் மூன்றிலும் தெறுழ்வீ என்றே குறிப்பிடப்படுவது உற்றுநோக்குதற்குரியது. இவையன்றி இம்மலரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. இம்மலரைப் பற்றி இம்மூன்று சங்கப் பாடல்களில் இரண்டு பாக்களுக்கு உரை எழுதியவர்கள் சிறு குழப்பம் விளைவித்துள்ளனர். ஆதலின் இதனைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாததாகின்றது.

புறநானூற்றுப் பழைய உரைகாரர் இதனைப் புளிமா என்று உரைப்பாரும் உளர் என்பது பொருந்தாது. ஏனெனின் தெறுழ்வீ கொடியில் பூக்கும், புளிமா ஒரு சிறு மரம் ஆதலின் என்க.


நற்றிணை உரையாசிரியர் மணிநிற இரும்புதல் என்பதற்கு 'நீலமணியின் நிறம் போன்ற, கரிய புதர்களிலுள்ள' என்று உரை கூறுவதில் நீலமும், கருமையும் முரணுமாறு காண்க. மேலும், இரும்புதல் என்பதற்குப் பெரிய புதல் என்றுரைப்பது ஒக்கும். இன்னும் அவர் 'மணி நிற இணரை உடையது எறுழ மலரெனினுமாம்' என்று உரை காண்பது பொருந்தாது. அவர் நல்லினர் தெறுழ் என்பதை-நல்லிணர்த்த எறுழ்வீ-எனப் பிரித்து தெறுழ்வீயை எறுழ்வீயாக்கிவிடுகின்றார். மேலும் மணி நிற இரும்புதல் என்பதை மாற்றி மணி நிறத்தைப் புதலுக்காக்காமல் தெறுழ் மலருக்கு ஏற்றுவதும் பொருந்தாது. என்னை? தெறுழ்வீயானது வண்ண வடிவ உவமங்களால் வரகின் பொரிப்போல் மலர்வது எனக் கூறப்படும்; மேலும் எறுழ்வீ என்பது 'எரிபுரை எறுழம்' என்று பேசப்படுதலின் என்க. எனினும் இம் மூன்று பாடல்களைக் கொண்டு தெறுழ்வீ என்பது தாவரவியலில் எது என்று அறிய முடியவில்லை.

  1. 1. கா. நா. 25