சங்க இலக்கியத் தாவரங்கள்/149-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

யா

யா இலக்கியம்

‘யா’ என்பது ஒரு மரம். இது வறண்ட பாலை நிலப்பகுதியில் மலைப்புறத்தில் வளரும். இம்மரம் புரையற்றது. வயிரம் பாய்ந்தது. பொரிந்த திரண்ட அடியை உடையது. மெல்லிய கிளைகளையும் ஒள்ளிய தளிர்களையும் உடையது. இதன் கிளைகளை ஒடித்து யானை உண்ணும். இதனுடைய பட்டையைத் தனது கொம்புகளால் குத்திப் பிளந்து பசி களைய, பெண் யானைக்குக் கொடுக்கும். பசியால் உழந்த யானைக் கூட்டத்திற்கும் கொடுக்கும். யானை முறித்து எஞ்சி நின்ற யா மரத்து அருநிழலில் மான் படுத்துறங்கும். இவ்வாறெல்லாம் இம்மரத்தைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.


“பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
 மென்சினையா அம் பொளிக்கும்”
-குறு. 37:2-3
“பொத்தில் காழ அத்த யாஅத்துப்
 பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
 மறங்கெழு தடக்கையில் வாங்கி உயங்குநடைச்
 சிறுகண் பெருநிரை யுறுபசி தீர்க்கும்
 தடமறுப்பு யானை””
-குறுந். 255
“உம்மில் அகைத்த ஒள்முறை யாவும்” -மலைப. 429
“மரல்புகா அருந்திய மாவெருத் திரலை
 உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய
 யாஅவரி நிழல் துஞ்சும்
 மாயிருஞ் சோலை மலையிறந் தோரே”
-குறுந். 233 : 3-6


தொல்காப்பிய உயிர் மயங்கு இயலில் ‘யா’ மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
 ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே”
-தொல். உயி. மய. இயல். 7 : 27

இதற்கு ‘ 'யா' என்னும் மரத்தை உணர நின்ற சொல்லும், 'பிடா' என்னும் சொல்லும், 'தளா' என்னும் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்' என்று உரை கூறுவர் இளம்பூரணர்.

இக்குறிப்புகளைக் கொண்டு 'யா' என்பது ஒரு பாலை நில மரமென்றறிவதல்லது, அதன் தாவரப் பெயரைக் கண்டு கூற இயலவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : யா
தாவரப் பெயர் : தெரியவில்லை