சங்க கால வள்ளல்கள்/நள்ளி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


5. நள்ளி
நள்ளியின் நாட்டு வளனும் தோற்றப் பொலிவும்
நள்ளி என்பானும் கடையெழு வள்ளல்களின் வரிசையில் ஒருவனாகத் திகழவல்லவன். இவனைக் கண்டீரக் கோப்பெருநள்ளி எனவும், கண்டிற்கோப் பெருநற்கிள்ளி எனவும், கண்டிரக்கோன், கண்டிரக்கோ எனவும், நள்ளி யெனவும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவன் தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலை நாட்டிற்கும் காடுகளுக்கும் தலைவனாக இருந்தவன். இவன் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார் என்னும் பெரும் புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவன். இவன் “இயல்வது கரவேல்” என்பதற்கு இணங்கத் தன்னை விரும்பி வந்தவர்கட்கெல்லாம் இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து மகிழ்ந்தவன். அப்படிக் கொடுக்குங் காலத்தும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்," என்பதற் கிணங்க யாதொரு தட்டுத் தடங்கல் இன்றி அளித்து வந்தவன்; நல்ல தோற்றப் பொலிவும் உடையவன். தாள்தோய் தடக்கையூடையவன். இவன் இத்தகைய நல்லோன் ஆதலின், இவன் மலையும் நல்ல மழை வளங்கொண்டு விளங்க, அத்தோட்டி மலைக்குத் தலைவனாக இருந்தவன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் அல்லவா?

மாரி இடையறாது பொழிந்தால் அன்றோ தானம் தவம் இரண்டும் நிலவுலகில் தங்கும் வானம் வழங்காது எனில் இவ்விரண்டும் தங்காவே. ஆகவே இவன் மழை வளம் தரும் தோட்டி மலையில் மாண்புடன் வாழ்ந்து வந்தனன். இதனைச் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் வெகு அழகுபட,

"கரவாது நாட்டோர் உவப்பநடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி ”

என்று பாடிக் களித்துள்ளனர்.

வன்பரணர்க்கும் நள்ளிக்கும் இருந்த நட்புடைமை

இனி வன்பரணருக்கும் நள்ளிக்கும் இருந்த தொடர்பையும் அன்பையும் சிறிது கவனிப்போமாக. பரணர் என்னும் பெயருடையார் வேறு இரு பெரும் புலவர்கள் இருந்துள்ளனர். கபிலருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் பரணர் என்பவர். இதனால், 'கபில பரணர்' என்னும் தொடரும் நீண்ட நாளாக வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை இச்சந்தர்ப்பத்தில் நீங்கள் அறிதல் சாலவும் நன்றெனவே இங்கு யான் குறிப்பிட்டனன். இவ்விரு பரணர்களினும் இவர் வேறுபட்டவர் என்பதை வன்பரணர் என இவருக்கு முன்னுள்ள அடைமொழியால் நன்கு உணரலாம். வன்பரணர் கண்டீரக் கோப்பெருநற் கிள்ளியின்பால் பெற்ற பரிசில் பல என்பது இவருடைய பாட்டால் அறிகிறோம். நள்ளி இலம் என்னும் சொல்லைப் பிறரிடம் சென்று மீண்டும் கேட்காதவாறு இவருக்கு ஈந்திருக்கின்றான் என்பதுந் தெரிகிறது. புலவர் இதனைக் குறிப்பிட்டுப் பாடுகையில் "உச்சிக்கண்ணிருந்து ஒலியுடன் ஒழுகும் அருவியையுடைய உயர்ந்த தோட்டி மலையையுடைய நள்ளி! உன் செல்வத்தை வாழ்த்தி வந்தனம். நின் செல்வம் எம்போலும் புலவர்களால் வாழ்த்தி வளர்தற்குரிய பெருமை வாய்ந்தது. ஏனெனில் அச்செல்வம் நின் தளர்ச்சியில்லாத வலிய முயற்சியால் ஆயது. அது தாள் ஆற்றித் தந்த பொருள். ஆகவே, அஃது என் போலியரால் நச்சப்படும் தன்மையுடையது. அச்செல்வத்தை நீயே துய்க்க எண்ணங்கொள்ளாமல், பரிசிலர்க்கும் ஈந்துவிடுகின்றாய். அந்தப் பண்புக்கு ஏற்ப எனக்கும் அளவுகடந்து அளித்து விட்டாய். இப்படி நீ அளித்தமையால் என்னுடைய நாக்கு, ஈத்து உவக்கும் இன்பமும் பெருமையும் படைக்காத அரசரை நச்சிப் புகழும் செயலை மறந்தது. நின்னையே பாடும் பண்பாடு பெற்றது” என்று பாடியுள்ளார். இதனால் பிற மன்னர்கள் தாமே துய்க்கும் குணம் படைத்தவர் என்பதையும், இவன் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை என்பதையும் நன்கு உய்த்து உணர்ந்து கொள்க. மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும், காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும் இப்புலவர் பெருமானால் குறிப்பிட்டுப் பேசப்படுவதை உற்று நோக்கினால், நள்ளி மகிழ்ச்சியால் தம்மையே மறக்கும். அளவுக்கு ஈயவல்லவன் என்பது தெளிய வேண்டி இருக்கிறது.


பாராட்டற்குரிய பண்பாடு

இக்கண்டீரக்கோப் பெருநற்கிள்ளியினிடம் அமைந்த குணம் ஒன்று மிக மிகப் பாராட்டற்குரியது. அதுதான் இசைவேண்டா ஈகைக் குணமாகும். இவன் “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை மீரதுடைத்து” என்னும் கொள்கையுடையவன். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன் என்பதும், மற்றையவை ஆரவாரத் தன்மையுடையன,” என்பதும் இவன் உளங்கொண்ட உண்மைகளாகும். வாழ்க்கையில் ஒரு முறை இவன் நடந்துகொண்ட தினின்றும் இதனை நன்கனம் உணரலாம்.

வன்பரணர் ஒரு முறை தாமும் தம் சுற்றமுமாகப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். இப்புலவர் ஒரு குசேலர். அஃதாவது கிழிந்த ஆடையை அணிந்திருந்தவர். அக்கிழிசலும் நேர்நேராக இன்றி உடையிடையே சந்துகளைப் பெற்றதாக இருந்தது. இஃது இவ்வாறு இருந்தது என்பது இவர் கூறும் உவமையால் புலனாகிறது. அது பருந்தினுடைய இறகைப்போல இருந்ததாம். பருந்தின் இறகு ஒரே நிறமுடையதாக இன்றி இடையிடையே வெண்புள்ளி கலந்ததாக இருக்கும் அல்லவா ? அப்புள்ளிகளே ஈண்டு ஆடையில் அமைந்த கிழிசலுக்கு உவமையாகும். இதனைச் செய்யுள் அடியில் குறிக்கையில் “பருந்தின் இருஞ் சிறகன்ன பாறிய சிதர்” என்றனர் புலவர்.

நள்ளி வேட்டைமேல் நாட்டமுற்றவனாய்க் காட்டகத்து வந்திருந்தனன். புலவரது நல்லோரையின் காரணமாக நள்ளி புலவரைக் கண்ணுற்றதும் கழிபெருந்துயர் கொண்டான்; புலவரது வறுமைக் கோலத்தையும்; பசியால் உயங்கிய வாட்டத்தையும் கண்ணால் கண்டான்; நெக்கு நெக்கு உருகினான். தன்னை உற்று நோக்குகிறான் எவனோ ஒரு வேட்டுவன். அவனுக்கும் ஒரு வணக்கம் செலுத்துவோம் என்பார் போலப் புலவர் தம் இரு கைகளையும் குவித்து மெல்ல அஞ்சலி பண்ணினார். விரைவாகவும் கைகளை முகிழ்த்து வணக்கம் செலுத்தப் புலவர்க்கு இயலவில்லை. அத்துணைப் பல ஈனராய்ப் புலவர் இருந்தனர். பசியால் உடல் மெலிந்திருந்தமையே அதற்குக் காரணம். இத்துணை கெட்ட நிலையினும் கையெடுத்து வணங்குகின்றனரே இவர், என இரக்கங்கொண்ட நள்ளி அவரை எழுந்திருக்க விடாது கையமர்த்தி இருக்கச் செய்தான். தான் வேட்டையில் வீழ்த்திய மான் ஒன்றன் மாமிசத்தைத் தீக்கோல் கொண்டு தீ மூட்டிப் பக்குவப்படுத்தி, “ஐய நீயும் நின்னுடன் வந்துள்ள நின் சுற்றமும் புசித்திடுக,” என்று ஈந்தனன். இதனைத் தன்னுடன் வந்த இளையரும் ஏனையோரும் தன்னை வந்து அணுகுதற்கு முன்பு செய்து முடித்தனன். அப்படி இவன் செய்ததன் நோக்கம் தான் ஓர் அரசன் என்பதைப் புலவர் அறியாதிருக்கும் பொருட்டேயாகும்.

புலவரும் புலவர் சுற்றமும் மான் தசையினை யுண்டு மகிழ்ந்தனர். உணவுகொண்ட இப்புலவர்க்கும் புலவர் சுற்றத்திற்கும் நீர் வேட்கை மிக்கிருந்தமையால் மலையினின்று கீழே இழி தரும் அருவி நீரை அருந்தி, நீர்வேட்கையையும் போக்கிக்கொண்டனர். உண்ண உணவும், பருக நீரும் உதவிய கண்டீரக் கோப்பெரு நள்ளி புலவரை அண்மி “ஐய! யான் இது போது காட்டகத்து உள்ளேன், நாட்டகத்து இல்லேன். ஆகவே, நும் உள்ளம் மகிழ உதவுவதற்குரிய அணிகலன்கள் என்னிடம் இப்பொழுது இல்லை என்றாலும், உம்மை வெறுங் கையினராய் அனுப்புதற்கு எனக்கு விருப்பமின்று. ஆகவே, இதோ, இம்முத்தாரத்தைப் பெறுக. யான் செய்வது தினைத் துணைய தானமே யானாலும், உம்போல்வார் பனைத்துணையாகக் கொள்வர் என்னும் எண்ணங்கொண்டே இதனை ஈகின்றேன்; ஏற்றருள்க,” என்று வினயமாகக் கூறியீந்தனன். நள்ளி கொடுத்தது தரளமாலை என்றாலும், மிகுதியாகக் கொடுத்தற்கு இல்லையே என்று இவன் எண்ணியதை நாம் நினைக்கும் போது, இவனுக்கு ஈவதில் எத்துணை இன்பம் இருந்தது என்பது தெற்றெனத் தெரிகிறது அன்றோ ? நித்திலக் கோவையை ஈந்ததோடு அல்லாமல், தன் முன்கைக் கடகத்தையும் கொடுத்து இன்புற்றான். உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் வள்ளியோன் இவன் என்பதில் ஐயம் என்ன இருக்கிறது ?

இங்ஙனம் ஈந்த வள்ளலை நோக்கிப் புலவர் பெருமான், ‘ஐயா நீர் யாரோ? நும் பெயர் என்னவோ? நும் வாழ் இடம் எதுவோ?’ என்று உசாவினன் இத்துணை வினாக்களுக்கும் கண்டீரக் கோப்பெருநள்ளி யாதொரு விடையும் ஈயாது சென்றனன், இவ்வாறு இவன் சென்றது இவனுக்கிருந்த செருக்கன்று. தான் செய்த தருமம் பிறர் அறிதல் கூடாது என்பதற்கே யாகும். ஆனால், புலவர் மனம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. தாம் புறப்பட்டுச் சென்ற செல்லாறுதோறும் கண்டாரை யெல்லாம் தமக்கு ஈந்தவன் செயல்கள் அனைத்தையும் செப்பிக் கேட்டுக்கொண்டே செல்ல, இத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவன், நள்ளியைத் தவிர்த்துப் பிறர் எவரும் இருக்க இயலாது, ஆகையால் புலவரைக் கண்டவர்கள் எல்லாம், “தோட்டி மலைக்குத் தலைவனான நள்ளி தான் உமக்கு இத்துணை உபசரணை செய்து உதவியவன்” என்று கூறக் கேட்டுப் புலவர் இவனது ஈகைக்குணத்தைப் பெரிதும் பாராட்டுவாரானார். ஈகையாளன் என்றால் இவ்வாறு அன்றோ இருக்க வேண்டும் ! இதனால் நள்ளி செய்த நன்கொடை யாவும் புகழுக்காகவோ புண்ணியத்திற்காகவோ செய்யப்பட்டவை அல்ல, என்பதன்றோ தெரியவருகிறது? வாழ்க அவன் கொடை ; வளர்க அவன் புகழ்.

கண்டீரக் கோப்பெருநள்ளி பெருந்தலைச் சாத்தனாரால் பாராட்டப்பட்ட முறை வியந்து பேசுதற்குரியதாகும். ஒருமுறை நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கே வீற்றிருந்தனர். அவ்வமயம் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அவண் வந்துற்றனர். அங்ஙனம் வந்தவர், இருவரையும் ஒருசேரக் கண்டனர். என்றாலும், நம் நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்பு காரணமாக நெஞ்சிறுகப்புல்லி இன்புற்றார். இளவிச்சிக்கோ என்பானைத் தழுவாது வாளா இருந்தனர். ஒரு பெரும் புலவர் ஓர வஞ்சனையால் இவ்வாறு செய்தால், எவர்தாம் பொறுப்பர்? அறிஞர் ஒருவர் இப்படிச் செய்தார் என்றால், இதற்கு ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமல்லவா ? ஆகவே, இளவிச்சிக்கோ புலவர் பெருமானை நோக்கி, “புலமை மிக்கீர்! இளங்கண்டீரக்கோவும் யானும் ஒருங்கே வீற்றிருத்தலைக் கண்டும், அவனை மட்டும் புல்லி, என்னைப் புல்லாது விடுத்தீரே, இதற்கு ஏதேனும் காரணம் உளதோ?” என உசாவினன். பெருந்தலைச் சாத்தனார் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் இயல்பினர். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் குணமுடையர் அல்லர். ஆகவே, புலவர் இளவிச்சிக்கோவைப் பார்த்து, "இளவிச்சிக்கோ! இவ்விளங்கண்டீரக்கோ, கண்டீரக் கோவின் இளவல். அக்கண்டீரக்கோ எத்தகையவன் எனில், தான் இல்லாத காலத்திலும் அவனது வாழ்க்கைத் துணைவியார் தம்மை அடைந்து கேட்கும் இரவலர்களின் பெண்டிர்கட்குப் பெண்யானைகளை நன் கனம் பொன்னணி பூட்டி ஈயும் கடப்பாடு உடையவர். அவ்வில்லக்கிழத்தியாரே அத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவராயின், அவருடைய கொழுநனான கண்டீரக்கோப்பெருநள்ளி எத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவனாக இருப்பான் என்பதை நீயே உணர்ந்துகொள். அத்தகைய மரபினனான நள்ளியின் இளவலாக இளங்கண்டீரக்கோ இருந்தமையால், என் மார்பகம் ஞெமுங்கப் புல்லினேன். நீயோ, “பரிசிலர் வருவர், வந்து ஏதேனும் கேட்பர். அவர்கட்கு ஈயவேண்டுமே” என்பதைக் கடுப்பதற்காக நின் அரண்மனையை எப்பொழுதும் அடைபட்ட நிலையில் தாழிட்டிருப்பை. இதனை யறிந்த என்போலும் பரிசில் மாக்கள் நின்னையும் நின் மரபில் உள்ளாரையும் பாடுதலை நீக்கினார். அங்ஙனம் பாடிற்றிலர் என்பதனை நன்கு உணர்ந்த யான், நின்னை யாங்ஙனம் புல்லுவேன் ? ஆகவே, யான் நின்னைத் தழுவிலேன்” என்று காரணம் காட்டினர். இதனால், நள்ளி ஒருவன் செய்த கொடைச்சிறப்பு அவனது சுற்றத்தாருக்கும் பெருமை தருவதாக அமைந்தது என்றால், நள்ளி வள்ளல் வரிசையில் வைக்கப்படுதற்கு எல்லாப்படி யானும் பொருத்தமா தலை அறிந்து இன்புறுக.