சங்க கால வள்ளல்கள்/பேகன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


7. பேகன்
கொடை மடமும் படை மடமும்

தண்டமிழ் மொழியில் கொடை மடம், படை மடம் என இரு பெருந் தொடர்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் படைமடமாவது எதிரில் நிற்க இயலாமல் புறமுதுகுகாட்டிப் போர்க்களத்தினின்று இரிந்தோடும் வீரன்மீதோ, அன்றி ஆயுதமின்றி வெறுங்கையினனாய் நிற்கும் வீரன்மீதோ, வீரப்பண்பு இல்லாதார் மீதோ, புண்பட்டார்மீதோ, மூத்தார் மீதோ, இளையார் மீதோ, போர் செய்தற்குச் செல்லுதலாகும். இப்படிச் சென்று படை மடம்பட்ட பார்த்திபர்களோ, வீரப்பெருமக்களோ நம் செந்தமிழ் நாட்டில் இருந்திலர். ஆனால், கொடை மடம்பட்ட கொற்றவர் நம் நற்றமிழ் நாட்டில் இருந்துளார். கொடை மடமாவது தமக்கு அமைந்த பிறவிக் குணமாகிய கொடைக் குணத்தால் அறியாமைப்படுதலாகும்! தம்மை அணுகிக் கேட்டற்கு இயலாதவையான அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்புகாட்டி, இன்னது கொடுத்தல் இதற்குத்தகும் என்றுகூடச் சிந்தியாமல், தம் உள்ளத்தின் போக்குக்கு இயைய ஈவதாகும். ஞானாமிர்தம் என்னும் நூல், கொடை மடம் என்னும் தொடருக்குப் பொருள்காண்கையில், அகாரணத்தால் கொடைகொடுத்தல் என்று கூறுகிறது. திவாகரம் என்னும் நூல், வரையாது கொடுத்தலாகும் என்று விளக்குகிறது. எவ்வாறு பொருள் காணினும், கொடைமடம் என்பது கொடுக்குங்கால் மடமைப்படுதலாம். அஃதாவது அறியாமையுறுதல் என்பதே நேரிய பொருளாகக் கொள்க. இங்ஙனம் அறியாமைப்பட்டவர்கள் பலராக இருப்பினும், இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக அமைந்தவர் இருவர். அவர்களே பாரியும் பேகனும் ஆவர், இவ்வுண்மையை ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள,

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் எந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்.

என்னும் வெண்பாவால் அறியலாம். இவர்களுள் பாரியின் வரவாறு முதற்கண் கூறப்பட்டது. இங்குப் பேகனது வரலாற்றை வரைந்து காட்டுவோமாக.


பேகன் பரம்பரை

வையாவிக் கோப்பெரும் பேகன் சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான். சேரன் செங்குட்டுவனது மாற்றாந்தாயின் தந்தையாவான். அஃதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன். இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தில் தோன்றியவன். பொதினி மலை என்பது இப்பொழுது சீரும் சிறப்பும் பேரும்புகழும் பெற்றுவிளங்கும் பழனி மலையாகும். ஆவியர்குடி தோன்றல்களால் ஆட்சி புரியப்பட்டுவந்தமையால், இப்பழனித் திருப்பதி ஆவினன்குடி என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவியர் குடியில் தோன்றியவனே வையாவிக்கோப்பெரும் பேகன் ஆவான். ஆகவே, இவனும் மலை நாட்டு மன்னனாவன். மலை நாட்டு மன்னனே யானாலும், இவன் வாழ்ந்த ஊர் நல்லூர் என்று நவிலப் பெறும். இவன் யாதோர் அடைமொழியுமின்றி வெறும் பேகன் என்றும் கூறப்படும் பெருமை பெற்றவன்.

மயிலுக்குப் போர்வை ஈதல்

இவன் கொடை, கல்வி, அறிவு, ஆண்மை ஆகியவற்றில் தலைசிறந்தவன். இவனது கொடைத் திறனும் படைத்திறனும், ஆள்வினையுடைமையும் கண்டே கபிலர், வென்பரணர், அரிசில் கிழார், பரணர், பெருங்குன்றூர்க் கிழார் முதலானவர்கள் பாடும் பீடுபெற்றவன். இத்தகையோனுக்கு வாழ்க்கைத் துனைவியாக அமைந்தவள் கண்ணகி என்னும் காரிகையாவாள் ; அவள் மாசிலாக் குலத்து வந்தவள் ; வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக்கு உடையவள் ; கொழுநன் நினைப்பு அறிந்து ஒழுகுபவள் ; திண்கற்பும் வாய்ந்தவள். இங்குக் குறிப்பிடப்பட்ட கண்ணகி என்பாள், கோவலனுக்கு இல்லக்கிழத்தியாக வாய்ந்த ஏந்திழையல்லள். அவள் வேறு. இவள் வேறு. இன்னோரன்ன பெண்மைக்குரிய இயல்புடையாளோடு இல்லறத்தை இனிது நடத்தி வரலானான் பேகன்.

பேகன் வாழ் இடம் மலைப்பாங்கர் அன்றோ ? அம்மலைப்பக்கல் கண்கொள்ளாக் கவின் பெருங்காட்சி நிறைந்தது. இயற்கைக் குடிலாக இலங்க வல்லது. இவ்விடத்து இயற்கை எழிலை அடிக்கடி பேகன் கண்டு இன்புறுவதுண்டு. ஒருநாள் பேகன் தன் நாட்டு வளங்காணப் பணியாட்களுடன் வெளியே சென்றான். ஒவ்வோர் இடமாகக் கண்டு களித்துக்கொண்டே வந்தான். வான்முகில்கள் வரைகள் மீது தவழ்ந்து ஏகும் பொலிவைக கண்டு பூரித்தான். அக்கொண்டல்கள் மலைகட்குக் கவிகை தாங்கி நிற்பன போலும் எனக் கற்பனை செய்து களிப்புக்கொண்டான். கானமயில்கள் ஈட்டம் ஈட்டமாகவும், கூட்டம் கூட்டமாகவும் குலவி விளையாடுவதைக கண்டான். அவற்றுள் ஒன்று தனித்துத் தன் தோகையினை விரித்துக களிப்புடன் ஆடுவதையும் கண்ணுற்றான். அம்மஞ்சை மேகங்கண்டு மோகங்கொண்டு தோகை விரித்து ஆடுகின்றது என்பதை ஓராதவனாய், அது குளிர்க்கு வருந்தித் தன் தோகையை விரித்து ஆடுகின்றதே? என்று எண்ணி , அதன் நளிரினைத் தீர்க்க யாது வழி என்று சிந்தனை கொண்டான். அவன் சிந்தனைக்கு யாதொன்றும் புலனாகவில்லை. தான் அணிந்திருந்த விலைமதித்தற்கரிய பொன் ஆடையை அதற்குப் போர்வையாக ஈவதே பொருத்தமானது என்று உறுதி கொண்டான். அவ்வாறே தான் மேலே அணிந்திருந்த பீதாம்பரத்தினை அத்தோகைக்கு இத்தோன்றல் ஈந்து உள்ளம் மகிழ்ந்தான். இதனைப் பாராட்டிப் புலவர் பாடிய பாட்டுக்கள் மிக மிக அருமைப்பாடுடையன :

உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்சைக்கு, ஈத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்.

என்பதும்,

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!

என்பதும் பரணர் பாட்டு.

"வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞசைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்”

என்பது சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் பாட்டு.

இங்ஙனம் மயிலுக்குப் படாம் அளித்துத் தன் மாளிகைக்குச் சென்று, அன்று தான் செய்த அரும்பெருஞ் செயல் குறித்து அகங் களிகொண்டனன். ஈத்து உவக்கும் இன்பம் அவாவுபவன் ஆதலின், இவன் செயல் குறித்து இவனே இத்துணை மகிழ்ந்தனன்.

பேகனது ஈகையின் இயல்பு
பேகன் பண்டம் மாற்றுப்போலத் தன் பொருள்களை இரவர்களுக்கு ஈந்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறவேண்டும் என்று எண்ணுபவன் அல்லன். எத்துணையாயினும் ஈதல் நன்று என எண்ணும் மனப்பான்மையன். இவன் தான் செய்யும் ஈகை மறுமைக்குப் பயன் தரவல்லது என்று நினைத்துச் செய்யும் ஈகையன் அல்லன். யாசகர்களின் வறுமை நோக்கி, அவ்வறுமை தீரக் கொடுத்தல் முறையென்பதை உள்ளங்கொண்டவன். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்னும் பண்பு வாய்ந்தவன். இதனை அழகுப்படப் பரணர்

"எத்துணை ஆயினு மாத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ? அன்றே; பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே”

என்று நமக்கு அறிவுறுத்துவார் ஆயினர். ஆகவே, இவன் கொடைமடம் படுபவனே அன்றிப் படை மடம் படான் என்றும் இவன் கொடையினைப் புகழ்ந்தார்.

ஒரு முறை பரணர் பேகனைக் கண்டு பொற்றாமரை யணியினையும் பொன்னரி மாலையினையும் பெற்றுத் தாமும் தம் விறலியுமாக ஒரு சுரத்திடையே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அதுபோது ஓர் ஏழை இரவலன் இவரைக் கண்ணுற்று, “ஐயன் மீர். நீவிர் யாவீர்?” என்று கேட்டனன். இங்ஙனம் வினாவிய அவனை நோக்கி, “ஐயா யானும் உன் போல் ஓர் இரவலன். யான் பேகன் என்பானைக் காணுதற்கு முன், நின்னைப்போலவே வறுமைக் கோர் உறைவிடமாக இருந்தனன். அவனைக் கண்டதும் என் மிடி தீர்ந்தது. அதன் பின் இங்ஙனம் பூண்களைப் பூண்டு பொலிவு பெற்றனன். அப் பேகன் கரியும் பரியும் பெற்றுக் கண்ணியமாய் வாழ்பவன். தான் கொடுக்கப்போகும் போர்வையை உடுத்திக்கொள்ளாது; போர்த்தும் கொள்ளாது என்பதை அறிந்தும் மயிலுக்குப் பொன்னாடை போர்த்த பெருந்தகை;” எனக் கூறி ஒரு பாணனை ஆற்றுப் படுத்திப் பேகனது கொடைக் குணத்தைச் சிறப்பித்தனர்.

இசையில் ஒரு வசை

பேகன் நல்லோனே ; ஈகையில் ஓகை கொண்டோனே ; புலவர் பாடும் புகழ் உடையோனே அறிவில் துறை போயோனே; கல்வியில் கண்ணிய முடையோனே ; ஆண்மையில் மேன்மை மேவினோனே. என்றாலும், இவன்பால் தீயசெயல் ஒன்று இருந்தது. அதுவே, இவன் கற்புக்கரசியான கண்ணகியைத் தணந்து வேறொரு மாதுடன் இன்புடன் வாழ்ந்து வந்ததாகும். அந்தோ ! கண்ணகி என்னும் பெயர் பெற்ற காரிகைமார்கட்கு அமைகின்ற கணவன்மார்கள் எல்லாம் தம் ஆருயிர் அனைய இல்லக்கிழத்தியரை விடுத்துப் பிற மாதரொடு வாழும் பெற்றியினர் போலும் ! கண்ணகியைத் தணந்து மாதவி என்பாளுடன் வாழ்ந்தனன் அன்றோ கோவலன்! அவனைப் போலவே வையாவிக் கோப்பெரும் பேகனும், கண்ணகியைத் தணந்து வேறொருத்தியிடம் வாழலானான்.

கண்ணகியின் துயரம்
இங்ஙனம் தன்னை மறந்து வேறொருத்தியுடன் தன் கணவன் வாழ்க்கை நடத்தினன் என்றாலும், அது குறித்துக் கண்ணகி அவனைத் தூற்றுதல் இன்றி, “எந்நாளேனும் இங்கு வந்து சேருவன்” என்று எண்ணி ஆறாத் துயருடன் வாழ்ந்துவரலானாள். ' குலமகட்குத் தெய்வம் தன் கொழுநனே' என்பது சட்டமேயானாலும், “தெய்வந் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்,” என்பது மறை மொழி என்றாலும், தன் கணவன் தகாத ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ளமையின், அவனைத் தக்கவழியில் திருப்புவான் வேண்டி, இறைவனை வந்தித்து வாழ்த்தி வணங்கி வருவாளானாள்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் அன்றோ ? இவள் பராவி வழிபட்ட கடவுள் இவட்கு நற்காலம் வருமாறு திருவுளங் கொண்டு புலவர் பெருமக்களைத் தூண்டினர். அத்தூண்டுதல் காரணமாகப் புலவர்கள் பேசுனைக் கண்டு அறிவுபுகட்டத் தொடங்கினர்.

பேகனைத் திருத்தக் கபிலர் செய்த முயற்சி

ஒரு முறை கபிலர் பேகனைக் காண இவன் வாழ்ந்த மலைப்பாங்கர் சென்றனர். அவர் சென்றதற்குக் காரணம், அவர் சுற்றம் பசியால் வாட்ட முற்றதனால் அதனைத் தீர்த்தற்கு ஆகும். பேகனைக் காணின், பசி நீங்கும் என்பது அவர் கருத்து. சென்றவர் முரசுபோல ஓசை செய்துகொண்டு, அருவி சொரிதலையும் அவண் ஓங்கிய மலையின் உயர்ச்சியையும் கண்டு, பேகன் மனையிடத்தின் வாயிலண்டைப் போந்து மலையினை வாழ்த்தி நின்றார். பேகன் ஆண்டு இலன். இவன் கண்ணகியைப் பிரிந்து வேற்று மங்கையுடன் வாழ்ந்து வந்தனன் என்பது முன்பே குறிப்பிடப்பட்டதன்றோ ?

கபிலர் பேகன் பெயரைச் சுட்டிப் பாடியதைக் கேட்ட கண்ணகி, தன் கணவன் பேரையேனும் காதால் கேட்ட உணர்ச்சி வயத்தளாய், வாயிற்கு வெளியே வந்தனள். அழுகையும் மிக்கது. அவ்வழுகையும் இனிமை தரத்தக்கதாகவே குழல் போல் இருந்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட கபிலர், இரக்கம் மிகக் கொண்டவராய், அங்கு இருக்கவும் மனம் அற்றவராய்ப் பேகன் ஆண்டு, இல்லாமையை உணர்ந்து, அவன் உறையும் உறைவிடம் நேரே சென்றார்; பேகனைக் கண்டார். கண்டு “மழை பெய்ய வேண்டிய முகிற் குழாங்கள் மலைமீது தவழ்வதாக என்று தெய்வம்பராவி, அங்ஙனமே தாம் வழிபட்டதன் பலனாக மழைவளந் தரவும், மீண்டும் அம்மேகம் பெய்தது சாலும்; மேலே செல்வதாக, என்று கடவுளைப் போற்றும் இயல்புடைய குறமகளிர் குலவி மழையின் பயனால் தினைப்புனம் செழிக்க அத்தினையரிசி யுண்டு வாழ்கின்ற மலை நாட்டு மன்ன!” எனவும், “சினத்தினால் செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையினையும் உடையோனே! என்றும் காற்றினும் கடுகிப் பாயும் கலினமா உடைய மண்ணியோனே எனவும் விளித்து, யான் நின்னை நாடி நின் அகத்தை அடைந்து நின் லையைப் பாடி நின்னையும் வாழ்த்தி நின்றேன். அப்பொழுது ஓர் எழிலுடை யணங்கு நின் பேரைக் கேட்டதும் அகத்தினின்றும் புறத்தே போந்து, நீர் வார்க்கண்ணளாய், குழல் போல இசைக்கும் ஒலியுடன் அழத் தொடங்கினாள். அவளது இரக்க நிலை, மிக மிக உருக்கமான நிலையாக எனக்குத் தென்பட்டது. அவள் யாரோ அறிகிலன். அவள் யாராகிலும் என் ? அவள் உன் பேரைக் கேட்ட அளவில் வாட்டமுற்று அழும் அழுகையளாகக் காணப்படுதலின், உனக்கு நெருங்கிய உறவினளாக இருத்தல் வேண்டும். அவள் உனக்கு நெருங்கிய உறவினளாயினும் சரியே. அன்றிப் புற இனத்தவள் ஆயினும் சரியே. அவளுக்கு நீ தண் நளி செய்யவேண்டுவது உன் தலையாய கடனாகும்” என்று கூறினார். இங்ஙனம் கபிலர் பாடி அறிவுறுத்திய பாடலால், நின்மலையிற் குறவர்மாக்கள் கடவுளைப் பேணி மழை வேண்டியபோது அம்மழையினைப் பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகரு மாறுபோல, இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டும், என்னும் பொருள்படப் புலவர் பாடியுள்ளார் என்னும் கருத்து தொனிக்கின்றதன்றோ ?

பரணர் மேற்கொண்ட முயற்சி

பரணர், பேகன் இல்லம் சென்றனர். சென்று செவ்வழிப் பண்ணை யாழில் இசைத்துப் பேகனது மழை தவழ் மலையினைப் பாடி நின்றனர். பேகன் மனைவி கண்ணகி எப்பொழுதும் பேகன் நினைவே நினைவாகக் கொண்டு இணைந்து வாழ்ந்து வந்தனள் ஆதலின், பல நாள் உண்ணாது பட்டினியால் கிடப்பவன் காதில் கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா?” என்று விரைவது போல, பேகன் என்னும் பெயரை எவர் கூறினும், பேகனைக் காண்க போயினும் அத்திருநாமத்தைச் செப்பியவனையேனும் கண்டு சிறுமகிழ்வு கொள்ளும் நிலையில் இருந்தவள் கண்ணகியாதலின், பரணர் பேகனையும் பேகன் வாழ் மலையினையும் பாடி வந்தபோது வெளியில் வந்தனள். வருகின்றபோதே அவளது நீலநறுநெய்தல் மலர்போலும் மையுண்ட கண்களிலிருந்து நீர்த்துளிகள் நித்திலங்கள் உதிர்வனபோல மார்பகம் நனைய உகுத்த வண்ணம் இருந்தன. பரணர் இத்துயரமுற்ற கோலத்தைக் கண்டனர். கபிலர் போல யாதொரு மொழியையும் கண்ணகியை வினவாது, அடிபெயர்த்து அப்பாற் செல்ல ஒருப்பாடிலர். “இங்ஙனம் இம்மாது அழக்காரணம் என்னவாக இருக்குமோ? அதனை உசாவ வேண்டும்,” என உறுதி கொண்டனர். மெல்ல அம்மாதின் சந்தி வதனத்தை நோக்கினர். “அம்மணி! நீ யார் ? எம் உழுவல் அன்புடைக் கெழுதகை நண்பன் பேகன் என்பானுக்கும் நினக்கும் உறவுமுறை ஏதேனும் உளதோ ? அவன் பெயரைக் கூறிய மாத்திரையில் இங்ஙனம் உளங் குழைந்து உயங்குகின்றனையே. உண்மை கூறு,” என்று வினயமாக வினவினர். பெரியவர் ஒருவர் பேசுகையில், அவர் விடுத்த வினாவிற்கு விடை இறுக்காது இருத்தல், முறையன்று என்று ஓர்ந்தவளாய், காந்தள் மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரினைத் துடைத்துக்கொண்டு

அன்பும் அறிவும் சான்ற ஆன்றவரே! யான் எங்ஙனம் எம் கொழுநர்க்கு உறவினள் ஆவேன். யான் உறவினள் ஆயின், அவர் என்னை விடுத்து வேற்றொருத்தியின் பால் வாழ எண்ணியிருப்பரோ? இரார்,” என்று சொல்லாமலே உண்மைச் செய்திகளைச் சொல்லி விட்டனள். இந்த மொழிகளைக் கேட்டதும் பரணர் வருத்தமுற்றனர்; பேகன் செயல் அடாதது என்பதை உணர்ந்தனர்; அப்பேகன் வாழ்ந்த இடத்தை நேரே அடையப் புறப்பட்டனர்; பேகனைக் கண்டனர்; கண்டவற்றை விண்டனர்; பேக! நீ இப்பொழுதே இவணின்று அவண் போந்து அவட்கு அருள் பண்ணுக. இங்ஙனம் பண்ணாயாயின், அது மிகக் கொடிது” என்று இடித்து மொழிந்தனர்.

அந்த அளவில் கூறியும் அமைந்திலர் புலவர். தமக்கு இப்பொழுது பேகன்பால் பரிசில் பெற வேண்டும் என்பது எண்ணம் இல்லை. எப்படியேனும் இவனைக் கண்ணகிபால் சேர்க்கவேண்டும் என்பதே எண்ணமாகும். அதனை வெளிப்படுத்தியும் கூறிவிட்டனர். பேகனுக்கு எம்முறையில் கூறினால், அவன் திருத்தமுறுவான் என்று சிந்தித்தனர். அதன்பொருட்டு இவன் செய்த கொடையைக் கூறி விளித்தனர். “மெல்லிய தகைமையினை யுடைய கரிய மயில், குளிரால் நடுங்குமென அருள் கூர்ந்து படாம் கொடுத்த பேகனே!” என்று விளித்தனர். இங்ஙனம் சுட்டியதன் நோக்கம், ஓர் அஃறிணைப் பொருளின் துயரங் கண்டு ஆற்ற ஒண்ணாத அருங்குணம் படைத்த நீ, ஓர் உயர்திணைப் பொருள், அதிலும் நின்வாழ்க்கைக்கு அரும்பெருந் துணையாக அமைந்த ஒருத்தி நின்னைக் காணாது, கூடி மகிழாது அலமந்து ஆழ்துயரில் உள்ளாள் என்பதைச் சிறிதும் உணராது, இருத்தல் முறையாமோ? என்பதை உணருமாறு செய்தற்கே இங்ஙனம் விளித்தனர். "நீ நின் இல்லக்கிழத்திக்கு இரக்கங்காட்டிலை எனில், நின் இசைக்கு வசையே வரும். ஆகவே, நின் இசையினை இழக்காமல் இருக்க விழைந்தால், அவட்கு அருள்பண்ணுக” என்பதற்காகவே இவனுக்கு இவன் பெற்ற இசையினை நினைவுபடுத்த “நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக!” எனவும் விளித்தனர். விளித்து யாது கூறினர் ? “பேக! யான் பசித்து வந்திலன். எனக்கும் என்னை எதிர்நோக்கி வாழும் சுற்றமும் இல்லை. ஆகவே, நீ எற்கு இது போது பரிசில் தருக என நின்னை வினவவும் மாட்டேன். என்றாலும் ஒன்றைமட்டும் நின்னை இதுபோது கேட்க அவாவி வந்தனன். அது தான், நீ இன்றைப் பொழுதே ஆழி இவர்ந்து, நின் அருமனை புகுந்து, ஆயிழை கண்ணகியின் அருந்துயர் களைவதேயாகும் " என்று வேண்டி இரந்து நின்றார்.
அரிசில்கிழார் அறவுரை

பரணரைப் போலவே அரிசில்கிழார் என்னும் புலவர் பெருந்தகையாரும் பேகனும் கண்ணகியும் கூடிவாழப் பெரிதும் முயன்றனர். அரிசில்கிழார் கருத்தும் பரணர் கருத்தும் இந்த முறையில் ஒன்றாகவே காணப்பட்டன. அரிசில்கிழாரும் பேகன் மனையாள் கண்ணகியின் நிலையை அறிந்துகொண்டனர்; நேரே பேகனிடம் சென்றனர். பேகன் ஏனைய புலவர்கள் புகழ்ந்து விளித்தது போன்று விளிக்காது, இவனது போர் வெற்றியை மட்டும் புகழ்ந்து விளித்தனர். “அடுபோர்ப்பேக” என்றனர். இங்ஙனம் இவர் விளித்ததன் நோக்கம், உன் வெற்றிகள் யாவும் இல்லக்கிழத்தியோடு இல்லறம் நடாத்தாதபோது பயனற்றனவேயாகும். “புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை, இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை” என்பது பொதுமறை. “நின் இல்லக்கிழத்தி உடன் இல்லாத போது உன் வெற்றிச் சிறப்பு வெற்றெனப்படுவதே” என்பதைச் சுட்டிக்காட்டவே இங்ஙனம் விளித்தனர். பிறகு இப்பேகனை நோக்கி, “யானும் நின்னால் தரப்படும் பெறுதற்கரிய அணிகலன்களும் செல்வமும் ஆகிய அவற்றைப் பெறுதலை விரும்பேன். யான் சிறிய யாழைச் செவ்வழியாகப் பண்ணி வாசித்து நின் வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட, அது கேட்டு என்னை விரும்பி எற்குப் பரிசில் தர விரும்புவையாயின், அப்பரிசினை யான் வேண்டேன். நீ அருள் புரியாமையால் கண்டார் எல்லாம் இரங்கும் வண்ணம் மெலிந்து அரிய துயரால் நின் இல்லக்கிழத்தி இல்லின் கண் மழையைக் காணாது வாடிய பயிரினைப் போல் வருந்தி நிற்கின்றாள். அவளிடம் சென்று அவளது அடர்ந்த குழலில் அழகிய மலரைச் சூட்டி மகிழும் பொருட்டு நின் தேரில் பரியினைப் பூட்டி விரைந்து செல்க. இதுவே யான் வேண்டும் பரிசில்” என்று இன்னுரை பகர்ந்தனர். “அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டா, வன்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே” என்பது இப்புலவர் வாய்மொழிகள்.

பெருங்குன்றூர்க்கிழாரும் அவர் புகட்டிய பேருரையும்

பெருங் குன்றூர்க்கிழாரும் பரணர் கருத்தையும், அரிசில்கிழார் கருத்தையும் அடியொற்றிப் பாடினர். பெரும் புலவர்களின் கருத்துக்கள் யாவும் ஒரு படித்தாகவே காணப்படும்.

பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, “ஆவியர் கோவே! யான் நின்மாட்டு வேண்டுவது பொருள் பரிசில் அன்று. நீ நேரே இவண் நின்று நீங்கிக் கண்ணகி வாழும் அவண் சென்று அவட்கு மலர்சூட்டி மகிழ்க. அதுவே யான் வேண்டும் பரிசு. அவள் கூந்தல் தோகை போல் அடர்ந்து மென்மையாகக் காணப்படுவது. அவ்வழகிய குழல் பூசுவன பூசிப் பூண்பன பூண்டு பன்னாள் ஆயது. அதனால், அது பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் பொலிவு பெற நீ அருள் செய்க” என்று வேண்டி நின்றார்.

இங்ஙனம் புலவர்கள் யாவரும் ஒருமனப்பட்டுப் பேகனை அணுகித் தாம் பரிசில் பெறுதலையும் அறவே மறந்து இவன் எவ்வாறேனும் கண்ணகி என்னும் கற்பரசியாளுடன் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தப் பெரிதும் பாடுபட்டனர். இவர்கள் பாடு பாழாய் இருக்குமோ? இராது பேகன் கண்ணகியிடம் சென்றிருப்பான். அவளுடன் இல்லறத்தை ஏற்று இனிது வாழ்ந்திருப்பான்.

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச சொல்,”

என்பது பொய்க்குமோ? ஒருக்காலும் பொய்க்காது.

--------