சடுகுடு ஆட்டம்/பிடிப்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள்

விக்கிமூலம் இலிருந்து
4. பிடிப்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள்

பிடித்தாடும் ஆட்டம்

முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை விளையாட்டுக்களில் எல்லாம், தாக்கி ஆடும் முறை என்றும், அதனைத் தடுத்தாடும் முறை என்றும் இருக்கும். சடுகுடு ஆட்டத்தில் தடுத்தாடும் முறை என்று அழைக்கப் படாமல், பிடித்தாடும் முறை என்றே பெயர் தரப்பட்டிருக்கிறது.

பாடிவரும் எதிராட்டக்காரர் தங்களை தாக்கித் தொட மேற்கொள்கின்ற அரிய முயற்சிகளை எல்லாம் தடுத்துவிடுவதுடன் மட்டுமன்றி, அவர்களைப் பிடித்து நிறுத்தி ஆட்டத்தை விட்டே வெளியேற்றுகின்ற கடமையில் இருப்பதால்தான், இதனைப் பிடித்தாடும் ஆட்டம் என்று இங்கே பெயர் தந்திருக்கிறோம்.

பிடி முறைக்கு ஒரு பீடிகை

1. பல தந்திர முறைகளையும், தாக்குகின்ற போர் முறை வேகத்திலேயும் ஆவேசமுடன் பாடி வருகின்ற எதிர்க்குழு ஆட்டக்காரரை மடக்கிப் பிடிக்க வேண்டு மென்றால், பிடிக்கின்ற ஆட்டக்காரருக்கு உடலில் பலம் மட்டுமல்ல, உள்ளத்தில் பயமற்ற தன்மையும் வேண்டும்.

2. கபாடி ஆட்டம் மல்யுத்தத்தின் முன்னோடி என்று பலர் அபிப்பிராயப் படுவதைப்போல, இங்கே பிடி போட்டு எதிரியை மடக்குகின்ற முறையும் அமைந்திருக்கிறது. இவ்வாறு பிடிபோடும் திறமையானது ஆளுக்கு ஆள் மாறுபடும். வேறுபடும். ஆட்டக் காரர்களின் உயரத்திற்கேற்ப, அவரவரின் உடல் சக்திக்கேற்ப, ஏற்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறி மாறி வரும் என்பதால், பலமான பிடிபோடும் முக்கியத்துவத்தினை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

3. இந்த பிடிக்கும் நேரத்தில், ஒர் எதிரியின் மேல் பலர் பாய்ந்து விழுகின்ற நிலை அடிக்கடி ஏற்படும். வருபவரின் வேகம், பிடிப்பவர்களின் வேகம் என்று பெரு மோதல் நிகழும்பொழுது, தவிர்க்க முடியாத பலவந்தமும் நிர்ப்பந்தமும் ஏற்படும். ஆகவே, இது விளையாட்டுத்தான் என்பதை நினைவு கூர்ந்து, எந்தவிதமான அசந்தர்ப்பமும், நடக்கக்கூடாத நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என்ற நினைவுடன் ஆடுகளத்தில் இறங்கும்பொழுதே மனதில் கொண்டு விளையாட வேண்டும். 4. உடலுடன் உடல் மோதும்போது வலியும் வேதனையும் ஏற்படுவது சகஜமே. அப்பொழுது எரிச்சலும், இனம் புரியாத கோபமும் எழுவதும் இயல்பே. அந்த நிலையிலும் அமைதிகாத்து, அறிவுப்பூர்வமாக, எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் நேராது பார்த்துக் கொண்டால்தான், நட்புறவுடன் தொடங்கும் ஆட்டம் இறுதிவரை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை தளர்த்தாதவாறு நிம்மதியான இறுதிக்கட்டத்தை அடையும் என்பதிலும், அப்படி அமைத்தால்தான் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து ஆனந்தம் அடைவார்கள். மாறுபட்ட நிகழ்ச்சிகள் நடந்தால், அது ஆட்டத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், ஆட்டக்காரர்கள் மேலும் ஒருவித வெறுப்பினை வளர்த்துவிட, மரியாதை இல்லாத நிலைமையையும் உண்டாக்கிவிடும்.

5. தங்கள் பகுதிக்கு வருபவரைப் பிடிக்க பல பிடி முறைகள் (Holds) உண்டு. விரல்களைப் பிடித்து இழுப்பது, மணிக்கட்டைப் பிடித்து நிறுத்துவது, ஒரு காலை கோர்த்து, பாடி வருபவரின் கால்களைத் தடுத்தல் என்பன போன்ற பிடிமுறைகள் உண்டு என்றாலும், ஒரே ஒரு பிடி மட்டும் விதிவிலக்காகத் தவிர்க்கப் பட்டிருக்கிறது. அதாவது கால்களால் கத்தரிக்கோல் போடும் முறை. அதாவது இரண்டு கால்களாலும் எதிராளிகளின் கால்களைப் பின்னிக் கொண்டு, போகவிடாமல், தடுத்து நிறுத்துவதாகும். இது தவறு என்று விதி குறித்திருக்கின்றபடியால், இந்தப் பிடி முறையை மட்டும் தவிர்த்துவிட வேண்டும்.

6. பலத்தைப் பிரயோகித்துத்தான் எதிரியைப் பிடித்திழுக்க வேண்டும் என்பதால், பிடிப்பவர் கைகளுக்கு நல்ல பலம், தேக சக்தி தேவைப்படுகிறது. அதனை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு அல்லாமல், தங்களுக்கு, மூட்டுப் பிசகிக் கொள்ளுதல், மற்றும் துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் பாதுகாப்புடன் பிடித்து ஆடுகின்ற முறைகளையும் பயின்று கொள்ள வேண்டும்.

7. பிடிப்பு (Grip) எப்போதும் கெட்டியாக இருக்க வேண்டும். அது வலிமையுடனும், விடாத் தன்மை யுடனும் இருக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் வலிமையானது, ஆளுக்கு ஆள் வேறுபடும். வெறும் உடல் சக்தியினால் மட்டும் இந்தத் திறன் வந்துவிடாது. முறையாகப் பெறுகின்ற பயிற்சியினால் மட்டுமே நிறைவாகக் கிடைக்கும். இது போன்ற பிடி முறைகள் என்னென்ன என்பதை பின்வரும் பக்கங்களில் முறையாக விளக்கப்பட்டிருக்கின்றன என்பதால், தேவையை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறோம்.

8. ஒவ்வொரு முறையும் பாடி வருபவரைப் பிடிக்க முயல்கின்றபொழுது, துணிவுடன் முயன்றாலும், வெற்றிகரமாக நிறைவேறும் என்று கூறிவிட முடியாது. அதில் தோல்வியும் வரும். முயற்சி செய்கின்றபொழுது, அது சரியான பிடி கிடைக்கக்கூடியதாக அமையுமா என்று இடம் பார்த்து, நேரம் பார்த்து முயல்வதுதான் சிறந்த பிடித்தாடும் ஆட்டமாகும்.

9. அலட்சியமாகப் பிடித்திட முயல்வது தன் குழு ஒர் ஆட்டக்காரரை இழந்துபோக விடுவதுடன், எதிர்க்குழுவிற்கு ஒரு வெற்றி எண்ணையும் தந்து, வெளியே நிற்கும் இன்னொரு எதிர்க்குழு ஆட்டக்காரரைத் தொடர்ந்து ஆட ஆடுகளத்திற்கு உள்ளே வரவழைத்து விடுகிறது என்பதை உணர்ந்து, தேவையானால், அவசியமானால், முடியுமானால், நம்பிக்கை வருமானால் பிடிக்க முயல வேண்டும்.

மேலே கூறியிருக்கும் கருத்துக்களை நினைவில் வைத்து, பிடித்தாடும் குழுவினர், அவ்வப்பொழுது தன் குழுத்தலைவன் கூறும் கருத்தின்படி, காட்டும் சைகையின்படி நடந்துகொண்டு, வெற்றிகரமாகப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு தன் குழுவை ஒற்றுமையாக நடத்திச் செல்வது குழுத் தலைவனின் தனித்திறமையைப் பொறுத்தே அமைகிறது.

பிடித்தாடும் குழுவினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் ஆட வேண்டும். அதற்கேற்ற வகையில் பிடி முறைகள் ஒவ்வொன்றையும் பின்வரும் பகுதியில் படங்களுடன் விளக்கி யிருக்கிறோம். ஆட்டக்காரர்கள் அறிந்துகொண்டு, ஏற்ற பயிற்சிகளுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, அரிய ஆற்றலையும் நேரிய சக்தியையும் பெற்று, புகழ்பெற வாழ்த்தி அழைக்கிறோம். பயிற்சி பெறுக, பயனடைக, என்றும் உங்களை அழைக்கிறோம்.

பிடி முறைகள் (Holds)

பிடிப்பவரின் ஆற்றலை அடிப்படையாக வைத்தே, ஒரு குழுவின் மேன்மையும், வெற்றி பெறும் தன்மையும் அமைந்திருக்கிறது என்று நாம் அறிவோம். தன்னையும் தொடப்படாமல் காத்துக்கொண்டு, தப்பித்துக்கொண்டு, அத்துடன் சக ஆட்டக்காரர்களையும் தொடப்படாமல் காப்பாற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் ஆட முயல வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் பிடிக்கும் கலையை நன்கு கற்றுத் தேர்ந்திட வேண்டும்.

ஒவ்வொரு பிடிக்கும் ஆட்டக்காரரும் தனது பிடிக்கும் முன்னேறும் இயக்கத்தில் வேகம் மிகுந்தவராக, சுறுசுறுப்பு நிறைந்தவராக, பதட்டப்படாத நெஞ்சினராக, பாடி வருபவரின் இயக்கத்தைப் பாங்காக அறிந்தவராக, தனது அடுத்த நிலை என்ன என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அனுபவம் உள்ளவராக இருந்திட வேண்டும். அப்பொழுதுதான், பிடிக்கும் கலையில் சிறப்பாக வெற்றிபெற முடியும்.

அத்தகைய பிடி முறையை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. பாடி வரும் ஆட்டக்காரரைக் கையை அல்லது கைகளைப் பிடித்து மடக்குவது, 2. காலை அல்லது கால்களைப் பிடித்து நிறுத்துவது, 3. இடுப்பு அல்லது தோள் பகுதியைப் பிடித்து ஆளை அடக்குவது என்ற மூன்று வகைகளையும் இனி நாம் ஒவ்வொரு பிடிமுறையாக, விரிவாகக் காண்போம்.

1. கைகளைப் பிடித்து நிறுத்தும் முறை (Hand Hold)

அ) மணிக்கட்டைப் பிடிக்கும் முறை (Wrist Catch)

ஆ) கைமாற்றி மணிக்கட்டைப் பிடிக்கும் முறை (Wrist catch with reverse grip)

இ) முதலைப் பிடி (Crocodile catch)

2. கால்களைப் பிடித்து நிறுத்தும் முறை

அ) கணுக்கால் பிடி முறை (Ankle catch)

ஆ) இரு கணுக்கால்களைப் பிடிக்கும் முறை (Double Ankle catch)

இ) ஒரு முழங்கால் பிடி முறை (Knee catch)

ஈ) இரு முழங்கால் பிடி முறை (Double Knee Catch)

உ) தொடைப் பிடி முறை (Thigh Catch)

ஊ) இரு தொடைப் பிடி முறை (Double Thigh Catch)

3. இடுப்புப் பகுதி பிடி முறை

அ) இடுப்புப் பிடி முறை (Trunk Catch)

ஆ) ஆளைத் தூக்கும் முறை (Lift Catch)

இ) துணி மூட்டைத் தூக்கும் முறை (Washerman's Catch)

ஈ) கோழி பிடிக்கும் (அமுக்கும்) முறை (Hen Hold)

உ) தோளைப் பிடிக்கும் முறை (Round the Shoulder Catch)

ஊ) கரடிப் பிடி முறை (Bear Hug)

எ) கை கால் பிடி முறை (Wrist and Ankle Catch)

1. கைகளைப் பிடித்து நிறுத்தும் முறை

அ) மணிக்கட்டைப் பிடிக்கும் முறை

மணிக்கட்டு அல்லது முன்கைப் பகுதியைப் பிடித்துப் பாடி வரும் ஆட்டக்காரரைப் பிடிக்கும் முறை இங்கே முதன்முதலாக விளக்கப்படுகிறது.

பாடிவரும் ஆட்டக்காரர் தனது கையை நீட்டித் தொட முயற்சிக்கும் நேரத்தில், படக்கென்று அவரது முன் கையைப் பிடித்துவிடுவதாகும். விரல் பகுதியில் பிடித்தால், வழுவிக் கொண்டு போய்விடக்கூடும். அதனால் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தால் எலும்பின் பகுதி இணைப்பு இருப்பதால், பிடி கெட்டியாக அமைந்துவிடும். நழுவிக்கொண்டு போவதும் சிறிது கஷ்டமாக இருக்கும். ஆகவே, பிடிப்பவர் பாடி வருபவரின் நீட்டப்பட்ட கை வாய்ப்பாக அருகில் வரும்பொழுது, தனக்கு முன்னால் வந்ததும் அல்லது பக்கவாட்டில் சென்றாலும், சரியான நேரம் பார்த்து பிடித்துவிட வேண்டும்.

திடீரென்று பிடித்தாலும் பிடிக்கலாம்,அல்லது பிடிக்க முயல்வது போல ஏமாற்றி, உடனே எதிர்பாராத நேரத்தில் பிடித்தால், பாடுபவர் திகைத்துப்போய் நின்றுவிடுவார். அல்லது சக ஆட்டக்காரர்கள் வந்து சூழ்ந்து கொண்டுவிட, அவர் பிடிபட்டுப் போவார்.

ஆ) கைமாற்றி மணிக்கட்டைப் பிடிக்கும் முறை

முன் கையைப் பிடிக்கும் முறையில் சற்று மாறுபட்ட பிடி முறையாக இது பயன்படுகிறது.

வேகமாகப் பாடி வரும் ஆட்டக்காரர் தன் முழுக் கையையும் நீட்டி, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு

பக்கத்திற்குப் போகும் நேரத்தில், திடீரென்று கையின் மணிக்கட்டைப் பிடித்துவிடுவது.

இப்படிப் பிடிக்கும்பொழுது, பிடிப்பவர் கையின் கட்டை விரல்கள் அவரையே நோக்கி இருப்பது போல பிடிமுறை அமைந்திருப்பதைப் படத்தில் காணலாம். இந்த பிடி முறை, பொதுவாக ஆட்டத்தில் அதிகமாகப் பின்பற்றப்படுவதில்லை என்றாலும், சில இக்கட்டான நேரங்களில் உதவுகிறது என்பதால், இதுவும் ஒரு நல்ல முறை என்றே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

குறிப்பு: முதல் பிடிக்கும் இந்தப் பிடிக்கும், பிடிக்கும் முறையில் வித்தியாசம் இருப்பதை இரண்டு படங்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

இ) முதலைப் பிடி (Crocodile catch)

பாடி வருகின்ற ஆட்டக்காரர் தனது கையை மேலும் கீழும் அசைத்தவாறு பாடி வரும்பொழுது, பிடிப்பவர் திடீரென்று அவர் முன் கையைப் பற்றி அவரது கையை தனது இரு கைகளுக்குள்ளே இழுத்துப் பிடித்துக் கொள்ளும் முறையே முதலைப்பிடி என்று அழைக்கப்படுகிறது.

எதிரியின் கையைப் பற்றியிருப்பதைப் பாருங்கள். பிடிப்பவர் இரு கைகளும் ஒன்றுக்கொன்று இணையாக பின்னிக் கொண்டிருப்பது போல் இருக்கின்றன. இந்தப்பிடி பிடித்தவுடன், பாடுபவரைப் பற்றி, வேகமாக இழுக்கும் வலிமையும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது. அதுவும் கையைச் சற்று உயரமாகத் துக்குகிற பொழுதுதான் இந்த முதலைப் பிடியைப் போட முடிகிறது. பிடித்தவுடன் பிடிபட்ட கை வலது கையாக இருந்தால், இடது பக்கமாக இழுக்கவும், இடது கை பிடிபட்டால் வலது பக்கமாக இழுக்கவும், அப்பொழுது தான் அவரது கையில் வலி ஏற்பட்டு, மீறி இழுக்க முடியாமற் போகும். அதனால் எளிதாகப் பிடித்து விடவும் முடியும்.

இனி, கால்களைப் பற்றிப் பிடிக்கின்ற முறைகளைக் காண்போம்.

2. கால்களைப் பிடித்து நிறுத்தும் முறை

அ) கணுக்கால் பிடி முறை (Ankle catch)

கணுக்காலைப் பிடித்து பாடி வருபவரை மடக்குவது என்பது எப்பொழுதும், எல்லோராலும் பின்பற்றப் படுகின்ற முறைதான் என்றாலும், இது மிக முக்கியமான முறை என்பதால், அவசியம் கற்றுத் தேர்ந்து கொள்வது தனிப்பட்ட நபருக்குப் புகழ் அளிப்பதுடன், தான் இருக்கும் குழுவிற்கும் நல்ல வெற்றியையும் தேடித் தரும்.

ஆடுகளப் பகுதியின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருக்கும் ஆட்டக்காரர்களே கணுக்கால் பிடி பிடிக்கும் வாய்ப்புள்ளவர்களாக விளங்குகின்றார்கள்.

பாடி வரும் ஆட்டக்காரர் நின்று கொண்டிருக்கும் பொழுது அல்லது ஒரு காலை நீட்டித் தொட முயலும் பொழுது, அல்லது பின்புறமாக முதுகைக் காட்டிப் பாடிக் கொண்டிருக்கும்பொழுது கணுக்காலைப் பிடிக்க நல்ல வாய்ப்புண்டு.

பிடிப்பவர்கள் நின்று கொண்டிருந்தால், கணுக் காலைப் பிடிக்க வாய்ப்பில்லை. முழங்கால் போட்டு உட்கார்ந்தோ அல்லது சற்று குனிந்தவாறு காலத்தை எதிர்பார்த்தவாறு காத்திருந்து, காலை நீட்டுகின்ற

வாய்ப்பான தருணத்தில், வசமாக கணுக்காலைப் பிடிக்கும் அமைப்பையே சிறந்த முறை என்கின்றனர்.

காலைப் பிடிக்கும்பொழுது, ஒரு குச்சியை அல்லது கம்பைப் பிடிக்கின்ற தன்மையில் அமைய வேண்டும் என்பதை படம் பார்க்கவும். அதில் எளிதில் கைப்பற்றுதல் போல காலைப் பிடித்திருக்கும் முறையைக் காண்க.

ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு’

என்னும் பாடலைப்போல பாடி வருபவர் எப்படி ஆடி ஒடிப் பாய்ந்தாலும், நல்ல தருணம் வரட்டும் என்று சலிப்பில்லாமல் காத்துக் கொண்டிருந்தவாறு, சரியான நேரத்தில் பிடித்துவிட, உடல் உறுப்புக்களில் நல்ல ஒருங்கிணைந்த செயலாற்றல் (Co–ordination) தேவை. இல்லையேல், எளிதாக கைப்பிடியிலிருந்து காலை உருவிக்கொண்டு, பாடியவர் தப்பித்துப் போய்விடக் கூடும்.

கணுக்காலை நன்கு பற்றிய பிறகு, பிடிபட்டவர் தனது பிடிபட்ட காலை வேகமாகப் பின்புறமாக உதைத்து, தப்பித்துக்கொண்டு போக முயற்சிப்பார். காலைப் பிடித்தவாறே இருந்தால், அவர் மேலும் உதைத்து, அந்தப் பிடியிலிருந்து வெளியேறவும் துணிவார். அந்த விடுதலை பெறும் நிலைமைக்கு அவரை விடாது, காலைப் பிடித்த உடனே, சற்று மேலே தூக்கிப் பிடித்துவிட்டால், அவர் சமநிலை இழப்பார். கீழேவிழ அவரது வேகமும் குறையும்.

அப்படி முடியாவிடில், கணுக்காலை தரையுடன் கீழே அழுத்தினால் அவர் கீழே விழ நேரிடும். அதனால் பிடி தளராமல் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆகவே, கணுக்கால் ஒன்றைப் பிடிக்கும்பொழுது மேலே தூக்கியோ அல்லது தரையோடு தரையாக அழுத்தியோ பிடித்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு ஆட வேண்டும்.

ஆ) இரு கணுக்கால்களைப் பிடிக்கும் முறை (Double Ankle catch)

பாடி வருபவரின் இரண்டு கால்களும் ஒரே இடத்தில் இருக்கும்பொழுது, முழங்காலிட்டு உட்கார்ந்த வண்ணம் அல்லது குனிந்த நிலையில் தயாராக இருக்கும் பிடிப்பவர், குபிர் என்று பாய்ந்து வீழ்ந்து இரண்டு கணுக்கால்களையும் சேர்த்துப் பிடித்துக் கொள்வதுதான் இரு கணுக்கால் பிடி என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கணுக்காலையும் ஒவ்வொரு கையால் பிடிக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் பயன்படுத்தி தன்னிடம் பிடிபட்டவரை கீழே விழச் செய்துவிடலாம். அல்லது ஏற்கனவே பயிற்சி நேரத்தில் பழகி வைத்திருப்பது போல, இரு கால்களைப் பிடித்தவுடனே மற்ற ஆட்டக்காரர்கள் வந்து, சூழ்ந்து கட்டிப் பிடித்து மடக்கிவிடலாம். இவ்வாறு, பாய்ந்து பிடிப்பதால், இந்தப் பிடி முறை வெற்றிகரமாக அமைவதுடன், ஆட்டத்தில் நல்ல பலனையும் அளித்து வருகிறது.

இ) ஒரு முழங்கால் பிடி முறை (Knee catch)

பாடி வருகின்ற ஆட்டக்காரரின் இரு கால்களும் இடைவெளி அதிகம் இருப்பது போல் தூரமாகவும், சற்று மடங்கிய நிலையிலும் இருக்கின்ற பொழுது, அதுவும் பிடிப்பவரின் அருகில் ஏதாவது ஒரு கால் இருக்கும்பொழுது, பிடித்துவிடுகின்ற முறையைத்தான் ஒரு முழங்கால் பிடி என்று கூறுகிறோம்.

பிடிக்கின்ற முறையில் கைகள் சாதாரண நிலையில் பிடித்தாலும் சரி அல்லது கைகள் இரண்டையும் துணையாகக் கோர்த்தபடி பிடித்தாலும் சரி, பிடித்த உடனேயே காலை மேலே தூக்கிவிட்டால், பிடிபட்டவர் சமநிலை இழந்து கீழே விழ நேரிடும். பாட்டும் நின்றுபோய் விடும். ஆகவே, ஒரு முழங்காலைப் பிடித்த உடனே காலை மேலே தூக்கி விடுவதை மறக்காமல் செய்து பழகவும்.

ஈ) இரு முழங்கால் பிடி முறை (Double Knee Catch)

பாடி வருபவரின் இரு கால்களும் இணைந்தாற் போல இருந்து, சற்று வளைந்தாற் போலவும் இருந்து, அதுவும் பிடிப்பவரின் கைகளுக்கு அருகாமையில், அவரது கால்கள் இருந்தால், இரு முழங்கால்களையும் இரு கைகளால் கோர்த்துப் பிடித்துக்கொள்கின்ற முறையைத்தான் இரு முழங்கால் பிடி முறை என்கிறோம்.

இரண்டு கைகளாலும் முழங்கால்கள் இரண்டையும் அழுத்தி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதும், அப்படியே தூக்கிவிட்டால், பிடிபட்டவர் சமநிலையை இழந்து, அப்படியே கீழே விழுந்துவிடுவார். அதற்குப் பிறகு அவர் விடுபட்டுப் போகவே முடியாது. இது மிகவும் கடுமையான ஒரு பிடி முறையாகும்.

உ) தொடைப் பிடி முறை (Thigh Catch)

பாடி வரும் ஆட்டக்காரர் பாடியவாறு வந்து நின்று அல்லது காலை நீட்டி எட்டி உதைத்துத் தொடுவதற்காக ஒரு காலைத் துக்கி விடும்பொழுது, பக்கத்தில் நிற்கும் பிடிபட்டவர், சற்று குனிந்த நிலையில் இருந்து கொக்கி போட்டு பிடிப்பது போல் ஒரு தொடையைப் பிடித்துக் கொள்வதைத் தொடைப் பிடி முறை என்கிறோம்.

தொடையைப் பிடித்தவுடன், ஒரு சுண்டு சுண்டி யிழுத்து, மேலும் அடித் தொடையையும் சேர்த்துப் பிடிக்கும்பொழுது உடல் சமநிலையிழந்து, பிடித்தவர் தோளையே பற்றிச் சாய்ந்து விழவும் நேரிடும். அதனால், எவ்வளவுதான் முயன்றாலும், பிடிபட்டவர் தப்பித்துப் போகவே முடியாது. ஆகவே, கவனமாகவும், கருத்தாகவும் தொடைப் பிடி பிடிக்கும்பொழுது நடந்து கொள்ள வேண்டும்.

ஊ) இரு தொடைப் பிடி முறை (Double Thigh Catch)

இந்தப் பிடியும் இரு முழங்கால் பிடி போடுவது போல்தான். பாடி வரும் ஆட்டக்காரரின் இரு கால்களும் சேர்ந்தாற்போல் இருக்கும்பொழுது பிடிக்கலாம். இரு கால்களையும் பிடித்தவுடன் அப்படியே ஆளை அலாக்காகத் துக்கிவிட்டால், பிடிபட்டவர் உடல் சமநிலை இழந்து, எதுவும் செய்ய முடியாது செயலற்றுப்போய் ஆட்டமிழந்துவிடுவார்.

3. இடுப்புப் பகுதி பிடி முறை

அ) இடுப்புப் பிடி முறை (Trunk Catch)

இடுப்புப் பிடி முறையானது, பத்திரமான, மிகவும் பாதுகாப்பான பிடி முறையாகும். இந்த முறையுடன் சரியாகப் பிடித்துவிட்டால், பாடி வருபவரைப் பக்குவமாகப் பிடித்து மடக்க ஒரு ஆளே போதும். மற்றவர்கள் உதவியோ, துணையோ எதுவும் இந்த நேரத்திற்குத் தேவையில்லை.

ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு முன்புறம் பார்த்தே பாடிப் போகும் ஆட்டக்காரர், பின்புறம் யார் இருக்கிறார், எப்படி வருகிறார் என்பதைப் பார்க்காமலேயே முன்னால் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு பாடியவாறு இருக்கும்பொழுது, அந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும் பிடிபோடும் ஆட்டக்காரர், திடீரென்று உடனே பாய்ந்து பிடித்துவிட வேண்டும்.

பாடி வருபவர் சுற்றி உதைத்துத் தொடும் முறையில் (Roll Kick) காலால் மற்றவர்களை உதைத்துத் தொட முயற்சிப்பதை எதிர்பார்த்துத் தயாராக இருக்கும் பிடிக்கும் ஆட்டக்காரர் ஒருவர், இந்தப் பிடிமுறையை மிகவும் கச்சிதமாகப் பிரயோகிக்கலாம்.

இந்த இடுப்புப் பிடி முறை மிகவும் பயனுள்ள முறையாகும். ஆட்டத்தில் அதிகம் பயன்படுகின்ற முறையுமாகும்.

ஆளைப் பிடித்தவுடனே, அப்படியே தரையை விட்டு மேலே தூக்கிவிட்டால், பிடிபட்டவரால் உதைத்தோ, தள்ளியோ தப்பிப்போய்விட முடியாது. தரையை விட்டு தூக்கப்பட்ட உடனேயே பிடிபட்ட ஆட்டக்காரர் தன் பலத்தை இழந்து விடுகிறார். அதனால் அவரால் தப்பித்துப் போக முடியாது. அதுவும் சற்று பலம் உள்ள ஆட்டக்காரர் பிடித்துவிட்டால், நிச்சயம் அவரால் பிடியிலிருந்து விடுபடவே முடியாது.

ஆ) ஆளைத் துக்கும் முறை (Lift Catch)

பாடி வருபவரின் ஒரு காலை வாய்ப்பான இடத்தில் வைத்துப் பிடித்துக் கொண்டவுடனே, மற்றொரு ஆட்டக்காரர் ஓடிவந்து அவரின் இடுப்புப் பகுதியைப் பிடித்து, இரண்டு பேருமாகச் சேர்ந்து அப்படியே ஆளை அலாக்காகத் தூக்கிக் கொள்கின்ற முறை, குழு ஒற்றுமையின் சிறப்பை எடுத்துக்காட்டும் முறையாகும்.

படத்தைப் பாருங்கள். ஒருவர் தொடையைப் பிடித்திருக்க, மற்றொருவர் இடுப்புப் பகுதியைப் பிடித்திருக்க, அப்படியே ஆளை தரையிலிருந்து மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். தரையின் தொடர்பு நீங்கியவுடனேயே, பிடிபட்டவரின் பலமும் சக்தியும் குறைந்து போய்விடுவதால், அவர் பகீரத முயற்சி பண்ணினாலும், வெற்றி பெறும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ஆனால், அவர் இந்தப் பிடியில் சிக்கிய உடனே, விடுபடும் முயற்சியிலே முரண்டு பண்ணாமல் இருப்பதுதான் அறிவார்ந்த செயலாகும்.

இ) துணி மூட்டைத் துக்கும் முறை (Washerman's Catch)

இதைப் பின்புறமாகத் துக்கும் பிடி முறை (Back Lift) என்றும் கூறுகின்றார்கள். உதாரணத்திற்காக, சலவைத் தொழிலாளி தனது துணி மூட்டையை தரையில் இருந்து உயர்த்தித் துக்கி தனது முதுகுப்புறம் கொண்டு வந்து முதுகில் ஏற்றுகின்ற செயலை இத்துடன் ஒப்பிட்டுக் காட்டுவார்கள்.

பாடி வருபவர் தனது ஒரு கையை நீட்டித் தொட முயற்சிக்கும்பொழுது, டக்கென்று அவர் நீட்டிய மணிக்கட்டுப் பகுதியில் பிடித்துக்கொள்ள வேண்டும். இது படத்தின் முதல் பகுதியாகும்.

மணிக்கட்டுப் பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்தாலும், அந்தப் பிடியை விட்டுவிடாமல், அப்படியே தன் தோளில் பின்புறமாகக் கொண்டு வந்து விடுவது இரண்டாவது நிலையாகும். இது இரண்டாம் படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது.

இரண்டாம் படத்தில் தோளின் இடப்புறம் பிடித்த கையைக் கொண்டு வருவது போல் படம் இருக்கிறது. மூன்றாம் படத்தில் வலது தோள்புறமாகக் கையைக் கொண்டு வந்து, பாடியவரை முதுகில் துக்கிக் கொண்டு இருப்பது போல் இருக்கிறது. முடியுமானால், இடப்புறமாகவே கொண்டு வரலாம். இல்லையேல், வலப்புறம் கொண்டு போக வாய்ப்பிருந்தால், வலதுபுறமாகக் கொண்டு செல்லலாம். அது, அந்தந்த நேரத்தைப் பொறுத்ததாகும்.

அப்படி, ஆளை முதுகுப்புறம் தூக்கிவிட வேண்டுமானால், தன் முதுகுப்புறத்தைச் சற்றுத்தாழ்த்தி, ஒரு குலுக்கு குலுக்கியவாறு வலது புறத் தோள் புறம் ஆளைக் கொண்டு வந்து, அப்படியே தூக்கிக் கொள்ள வேண்டும். அப்படி கொண்டு வரும்போது, அவரது கால்கள் தரைக்கு மேலே வந்து விடுவதால், அவரது பலம் போய்விடுகின்றது. உடல் சமநிலை இழந்து விடுகிறது.

நன்றாகப் பழகியவர்களே இந்த முறையைப் பின்பற்ற முடியும். இல்லையேல் கை பிசகிக் கொள்ளக்கூடும். தோள் மூட்டு நழுவிக் கொள்ளவும் கூடும். ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள, காயம்கூட ஏற்படவும் வழியுண்டாகும். இந்த பிடிக்கும் அகப்பட்டவர் தப்பித்துப்போக வழியும் இல்லை. வாய்ப்பும் கிடையாது. அதனால், நன்கு கற்றுக்கொண்ட பிறகே, இந்தப் பிடிமுறையை ஆட்டத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஈ) கோழி பிடிக்கும் (அமுக்கும்) முறை (Hen Hold)

பாடி வரும் எதிராட்டக்காரர், கீழே மண்டியிட்டோ அல்லது முழங்கால் மடிய தரைக்கு மேலே சற்று அமர்ந்தவாறோ, பிடிக்க இருப்பவர்களைத் தொட முயற்சிக்கும்பொழுது, கோழியை அமுக்கிப் பிடிப்பது’ போல பிடித்து விடும் முறைக்குத்தான், கோழி பிடிக்கும் முறை என்று கூறப்படுகிறது.

பாடிக் கொண்டிருப்பவர் முன்னே கூறிய முறையில் இருக்கும்பொழுது, அவர் பாராத சமயத்தில் திடீரென்று தாக்குதலை நடத்திப் பிடித்துவிட வேண்டும். அதாவது ஒரு கையால் இடுப்புப் பகுதியைப் பிடித்து, மற்றொரு கையால் கழுத்து பிடரிப் பகுதியையும் அழுத்தி அவரால் மேலே எழுந்திருக்க முடியாதவாறு அழுத்திவிட வேண்டும்.

அவர் கழுத்தைப் பின்புறம் பிடித்தவாறு, தனது உடல் எடை முழுவதையும் பாடுபவர் மேல்பட்டு கீழ்நோக்கி அழுத்தும்போது, அவர் உடல் சமநிலை இழந்து, தடுமாறி விழுந்து பாட்டை நிறுத்துவதுடன், விடுபட்டுப் பிடியிலிருந்து வெளியேறும் முயற்சியையும் நிறுத்திவிடுவார்.

அந்தக் ‘கோழிப்பிடி’ முறை பொதுவாக அபூர்வமாக ஆட்டத்தில் நடைபெறும் சம்பவமாகும். மிகவும் கடுமையான பிடிமுறையாக இது பயன்பட்டாலும், இதை அடிக்கடி ஆட்டக்காரர்கள் பயன்படுத்துவ தில்லை. நன்கு அனுபவம் உள்ள ஆட்டக்காரர்களே இதனை அபாயமின்றி சரியான முறையில், வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

உ) தோளைப் பிடிக்கும் முறை (Round the Shoulder Hold)

பாடி வருபவரைக் கால் அல்லது கையைப் பிடித்து இழுத்து ஆட்டமிழக்கச் செய்வது போலவே, தோள் பகுதியையும் பிடித்து நிறுத்துவதும் ஒருவகைப் பிடிமுறையாகும்.

ஏறத்தாழ நடு ஆடுகளத்திற்குள் பாடி வருபவர் முன்னேறி வந்துவிட்டால், பிடிப்பவருக்கு, அதாவது அவரது கைகளுக்கும் எட்டுவது போல அருகாமையிலும் நின்றுவிட்டால் பாடுபவர் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று பாய்ந்து, தோளுக்கும் கீழே அக்குளைச் (Armpit) சுற்றி ஒரு கையாலும், விரல்களைப் பற்றி அழுத்தி மற்றொரு கையாலும் பிடித்துவிட வேண்டும்.

விரல்களையும் தோளையும் பற்றி ஒரே சமயத்தில் வெடுக்கென்று இழுக்கும்பொழுது, பாடுபவர் தடுமாறி சமநிலை இழந்து போவார். எல்லாப் பிடி முறைகளைப் போலவே, இதுவும் ஒரு சிறந்த பிடிமுறையாகவே ஆட்டத்தில் பயன்படுகிறது.

நீண்ட கைகள் உடைய ஆட்டக்காரர்களுக்கு இந்தப் பிடி பிடித்து இழுத்து நிறுத்த, கைகள் நீளமாக இருப்பது ஆளை தன் பிடிக்குள் போட, பற்றுக் கோடாகத் தோளைப் பிடிக்கப் பயன்படுவதால், இம்முறையை உயரமாகவும் அதே சமயத்தில் நீளமான கையுள்ள ஆட்டக்காரர்களே நன்கு பயன்படுத்தி செழிப்பான சூழ்நிலையை உருவாக்கி உதவும். முடியும்.

ஊ) கரடிப் பிடி முறை (Bear Hug)

பாடி வரும் எதிராட்டக்காரரை நேருக்கு நேராக சந்தித்து, அப்படியே முன்புறமாகவே பிடித்து, அதாவது அவரது மார்பும் தன் மார்பும் (Chest) பொருந்தும்படி, அப்படியே மேல் நோக்கி ஆளைத் துக்கிக்கொள்ள வேண்டும்.

ஆள் பாடி வரும்பொழுதே, இரண்டு கைகளுக் கிடையில் அவரது உடலை வரவிட்டு, அவரது இடுப்புப்பகுதி(பின்புறத்தில்)யில் கைகளைக் கோர்த்து, தரையிலிருந்து அப்படியே உயரத்தில் தூக்கி நிறுத்திவிட வேண்டும்.

பாடி வருபவர், பிடிப்பவரைத் தொட்டுவிட முன்னோக்கி வந்து முயற்சிக்கும் நேரத்தில், பின்னால் நகர்வது போல ஒரு பாவனை செய்துவிட்டு, திடீரென்று முன்னோக்கித் தாவி, ஆள்மேல் எகிறிப் பிடித்து, மேல்நோக்கித் துக்கி, தப்பிக்க முடியாமல் செய்கின்ற தன்மைக்கே கரடிப்பிடி என்கிறோம்.

இந்தப் பிடிமுறைக்குச் சரியான நேரம், சரியான மோதல் வேண்டும். இல்லையேல் அவர் முகத்தில் தன் முகத்தை மோதி, பற்களைத் தாக்கிக் கொள்ள என்று பேராபத்தும் நேரிடவும் கூடும். நல்ல அனுபவமும் பயிற்சியும் இந்த பிடி முறைக்கு நிச்சயம் தேவைப் படுகிறது.

அத்துடன் அல்லாது, நல்ல கனமான ஆட்டக் காரர்களால்தான் இப்படிப் பாய்ந்து எதிரியை தூக்கி நிறுத்த முடியும். (சாதாரண) எடையில்லாத ஆட்டக் காரர்களால் இந்தப் பிடி முறையை செய்ய முடியாது; செய்யவும் கூடாது.

எ) கை கால் பிடி முறை (Wrist and Ankle Hold)

பாடி வருபவர் குள்ளமான, கனமில்லாத ஆட்டக்காரர்களாக இருந்து, பிடிப்பவர் கனமான, எடை மிகுந்த பெரிய உருவ அமைப்புள்ள ஆட்டக்காரர்களாக இருந்தால், இந்த பிடி முறை பயன்படும்.

பாடி வருபவரை, தக்க சமயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவாறு, ஒரு கையால் அவரது கையைப் பற்றி இழுத்துக்கொண்டே, உடனே அவரது காலையும் மற்றொரு கையால் பிடித்து, அதே வேகத்தில் ஆளை மேலே தூக்கிவிட்டால், பாடுபவர் சமநிலை இழப்பதுடன், பாட்டையும் நிறுத்திட, ஆட்டம் இழந்து போவார்.

தாக்குதலும் எதிர் தாக்குதலும்

பாடி வரும் முறையைத் தாக்கி ஆடுதல் என்றால், பிடிக்கும் முறையை எதிர்த் தாக்குதல் என்று அழைக்கிறோம். தாக்குதலும் எதிர்தாக்குதலும் நிறைந்தவைதான் சடுகுடு ஆட்டமாகும்.

மல்யுத்தம் சத்தமில்லாமல் ஆளுடன் ஆள் மோதி, ஒருவரை ஒருவர் மடக்க முயற்சிப்பதாகும். சடுகுடு ஆட்டம் சத்தம் போட்டபடி, ஒரே மூச்சுக்குள் எதிரியை அல்லது எதிரிகளை மடக்கிட முயற்சிப்பதாகும்.

இந்த வல்லமை நிறைந்த விளையாட்டுப் போட்டியில், ஆளுடன் ஆள் மோதுவது, அலையுடன் அலை மோதி அடங்குவதுபோல்தான். அதனால் அபாயமான சூழ்நிலைகள் அடிக்கடி தோன்றவும் தோன்றும். ஆபத்தும், எலும்பு முறிவும், சுளுக்கும் நிகழவும்கூடும். அதனைத் தவிர்த்திடவே விதிமுறை களும் மிகமிகக் கடுமையாக உருவாக்கப்பட்டிருக் கின்றன. ஆக, எதிர்த்தாக்குதலில் ஈடுபடும் ஆட்டக் காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். பிடிக்க முயற்சிக்கும்பொழுது கால நேரத்தை அனுசரித்து, சூழ்நிலையை புரிந்துகொண்டு, ‘இது முடியும், இதனால் வெற்றியுடன் செயல்பட முடியும்’ என்று எண்ணித் துணிந்தே நடத்திட வேண்டும்.

பிடிமுறை எதுவானாலும், அதனை நிலைமைக் கேற்பத் தேர்ந்தெடுத்தே பயன்படுத்திட வேண்டும். இதுதான் பிடிக்கும் வெற்றியின் அற்புத ரகசியமாகும். அத்துடன், தன் சக ஆட்டக்காரர்களின் கூட்டு முயற்சியும், உடன் தொடர்ந்துவரும் ஒப்பற்ற ஒற்றுமையும்தான் ஒருவரை வெற்றிகரமாகப் பிடித்திடத் தூண்டுகிறது; செய்கிறது.

அதனால், ஒருவர் பிடிக்க முயற்சிக்கும்பொழுது, எதிரியைத் தப்பிப் போகவிடாத வகையிலே பிடித்திட வேண்டும். ஏனெனில், பாடி வருபவரைப் பிடிக்கப் போய் தவறி, அவர் தொட்டுவிட்டுப் போய்விட்டால், அவருடைய குழுவிற்கு ஒரு வெற்றி எண், தன் குழுவில் ஒருவர் குறைய, அவரது குழுவில் ஒருவர் அதிகமாக என்று பல நஷ்டங்கள் ஏற்பட ஏதுவாவதால், மிகவும் எச்சரிக்கையுடன் பிடிக்க வேண்டும்.

பிடிக்கும்பொழுது உணர்ச்சி வசப்படக்கூடாது, முரட்டுத்தனம் கூடாது. அசட்டுத் தைரியம் கூடாது. அறிவார்ந்த தந்திரம் நிறைந்த, ஆட்டக்காரராக எல்லாரும் மாறினால், ஆட்டம் பார்ப்பவர்களுக்கு ஆனந்தமாக அமைவதுடன், ஆடுவோருக்கும் அற்புதமான ஆட்டமாக அமைந்துவிடும் என்பதை மறவாமல், பிடித்திட வேண்டும்.

இனி, தாக்கி ஆடுவோர், எதிர்த்தாக்குதல் நிகழ்த்துவோர் இவர்கள் பத்திரமான முறைகளில் ஆடத் தேவையான பயிற்சி முறைகளையும், பாதுகாப்பு வழிகளையும் தொடர்ந்து வரும் பகுதியில் விரிவாகக் காண்போம்.