சடுகுடு ஆட்டம்/பாதுகாப்பாக விளையாடும் முறைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. பாதுகாப்பாக விளையாடும் முறை

கிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; மன திருப்திக்காக விளையாடுகிறோம்; உடல் திறனுக்காக விளையாடுகிறோம்; உடலில் தோன்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்காக விளையாடுகிறோம். பார்ப்பவர்கள் தன்னை மறந்து, சூழ்நிலை மறந்து, விளையாட்டில் லயித்துப்போய் இன்பமான மனோகர நிலையில் இருத்தி வைத்திட விளையாடுகிறோம். ‘விளையாட்டு என்றால் இன்பம்தான்’ என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒர் ஒப்பற்ற கருத்தினை, உண்மைதான் என்று நிரூபிக்கும் தன்மையில் விளையாடுகிறோம்.

அதே விளையாட்டு சில சமயங்களில் விபரீதமாகப் போய் விடுவதும் உண்டு. அது ஆட்டக்காரர்களுக்கிடையே நிகழ்கின்ற அலங்கோல உணர்வுகளின் ஆரோகணச் சக்தியினால்தான் என்பதையும் எல்லோரும் உணர்வார்கள். ஆகவே, ‘விளையாட்டினைப் பாதுகாப்புடன்தான் விளையாட வேண்டும். விளையாட்டு என்பது ஒருநாள் கூத்து அல்ல. வாழும் காலம் எல்லாம் தொடர்ந்து வரும் துணையாகும்’ என்பதுதான் நல்ல ஆட்டக்காரர்கள் பின்பற்றக்கூடிய நயமான வழிமுறையாகும்.

கைப்பந்தாட்டம், வளையப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், எறிப் பந்தாட்டம், டென்னிஸ் போன்ற ஆட்டங்களில் எதிராட்டக்காரர்கள் வலைக்கு இருபுறமும் இருந்து விளையாடுவதால், ஒருவருக்கொருவர் உடல் மோதல் ஏற்பட வழி இல்லாமல் போய்விடும்.

கால் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், வலைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்களில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் இடித்துக்கொள்ள, சில நேரங்களில் வலிமையுடன் மோதிக் கொள்ளவும் நேரிடுகிறது.

கோகோ போன்ற ஆட்டத்தில், எதிராட்டக்காரரைத் தொட்டுத்தான் வெளியேற்ற வேண்டும் என்ற விதியே அடிப்படை விதியாக இருந்தாலும், அதில் அவ்வளவு வேகம் இல்லை. மோதல் சாடல் என்று எதுவும் இல்லை. அப்படி அடித்து ஆடினால், அவர் தொடப்படவில்லை என்று நடுவர் அறிவிக்கின்ற அளவில் விதிகள் தடுத்தாளுகின்றன.

ஆனால், சடுகுடு ஆட்டத்தில் அப்படியல்ல. இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஆட்டக்காரர்களும் ஆளைப்பிடித்துக் கொண்டு அழுத்தவும், பிடி பட்டவர்கள் திமிறிக் கொண்டு விடுபடவும் என்ற முரட்டுத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு ஆடுவதால், அடிக்கடி நேரக்கூடிய அபாயக்கோடுகள் அதிகம் உண்டு.

ஆகவே, பத்திரமான ஆட்டமாக அமைய வேண்டுமே என்று ஆட்டத்தில் அக்கறை கொண்ட அனைவருமே துடித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை. எனவே, பத்திரமான முறைகள் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது சடுகுடு ஆட்டத்தில் மிகமிக முக்கியம் என்பதை ஆட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்திரமான ஆடுகளம்

ஆடுவதற்கு முதல் தேவை ஆடுகளம் என்பதை நாம் அறிவோம். ஆதிகாலந் தொட்டு, மணற் பரப்பில்தான் இந்த ஆட்டம் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரை மணற்பகுதியில், மணற்பரப்புள்ள வீதிகளில் எல்லாம் விளையாடிய நாட்கள் வேகமாக மறைந்துகொண்டு, மென்தரைக்கு வழிவிட்டு ஒதுங்கிப் போயின.

புதிய ஆட்டமுறை புகுத்தப்பட்ட பின்னர், மணற்பரப்பு ஆடுகளத்திற்கு அவசியம் இல்லை என்று ஆட்ட வல்லுநர்கள் அபிப்ராயம் தெரிவித்துவிட்டனர்.

மணல் இல்லாத, மென்தரையில் (Soft Ground)தான் ஆடுகளம் அமைய வேண்டும் என்ற விதியமைத்தனர்.

ஏனென்றால், அதற்கும் அடிப்படையான காரணங்கள் இருக்கத்தான் செய்தன.

மணற்பரப்பாக இருந்தால், அடிக்கடி சுண்ணாம்புக் கோடுகள் அழிந்து போக நேரிடும். கோடுகள் சரியாகத் தெரியாமற் போனால், சரியான முடிவினை எடுக்க இயலாமல், நடுவர்கள் தடுமாறிப் போவார்கள்.

அழிந்துபோன கோடுகளை ஆட்டம் நடப்பதற் கிடையில் அடிக்கடி போட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆட்டத்தின் வேகம் தடைபட்டுப் போவதுடன், நேரக் கணக்கையும் சரியாக நிர்ணயிக்க முடியாமல் பெருங்குழப்பம் நேரிடவும் கூடும். ஆகவே, ஆரம்பத்திலேயே ஆடுகளத்தில் குறியீடுகளாகப் போடக்கூடிய கோடுகள், ஆட்டம் முடியும் வரை அனைவருக்கும் தெரியக்கூடிய அளவில் தெளிவாக இருக்க வேண்டும். அது கட்டாந்தரையாக அமையாமல், மென்பகுதியாக அமைந்திட வேண்டியது என்பது முதல் பயனாக இருந்தது.

அடுத்து, வளர்ந்து வரும் ஆட்டத் திறன்கள் விஞ்ஞான முறையினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகளினால் வெகு வேகமாக வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கின்றன. பாடி வரும் ஆட்டக்காரர்களின் விரைவான இயக்கங்கள் திடீர் என்று பல திருப்பங்களை உண்டாக்குகின்றன.

வேகமாக ஒடுதல், உடனே நின்றுவிடுதல், விரைவாக மறுபக்கம் திரும்புதல், குதித்துப் பாய்தல் போன்ற செயல்கள் மின்னல் வேகத்தில் அடிக்கடி நடைபெறுவதால், ஆடும் தரை, மணற்பகுதியாக இருந்தால் வசதியாக அமையாது. செயலின் வேகம் குறையும். மணலுள் கால் பதிந்தால் விரைவு எப்படி வரும்? அதனால், தரை மென்பகுதியாக இருந்தால் எல்லாம் சீராகவும், சிறப்பாகவும் நடக்கும் என்பதால், தரையை மணலில்லாத மென் தரையாக்க வேண்டுமென்று அமைத்து வைத்தனர்.

ஆடும் தரை மென் தரை என்கிறோம். அது சம தரையாக இருக்க வேண்டும். குறுங்கற்களும், கூழாங் கற்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றும் கடினமான பொருட்கள் கலந்து கிடைக்காத தரையாக இருந்தால், ஆடுவோருக்கு அபாயம் தராததாக ஆடுகளம் அமைந்துவிடும்.

ஒரு சில ஆடுகளங்களில், தரையின் மேல் சாணத்தைப் போட்டு மெழுகி வைத்து விடுவதும் உண்டு. அதில் ஆடக்கூடிய ஆட்டக்காரர்களுக்கு சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்படும்பொழுது, சுகாதாரத்திற்கு ஏற்றதல்ல என்று மருத்துவத்துறையாளர்கள் கருதுவதால், சாணம் மெழுகிய ஆடுகளத் தரையை உருவாக்க வேண்டாம் என்று தற்போது அறிவுரை கூறுகின்றார்கள் ஆட்ட வல்லுநர்கள்.

மென்தரையாகப் பார்த்து சரி செய்த பின்னர், அதன் மேல் அடிக்கடி தண்ணிர் தெளித்து, அதன் மேல் கல்லுருளை வைத்து உருட்டிப் பதப்படுத்தும் முறை நல்ல முறையாகும். அதிலும் விரிசல் இல்லாதவாறு தரையை பாதுகாத்திட வேண்டும். பள்ளங்கள், குண்டு குழிகள் இல்லாத தரை, அபாயமில்லாத ஆட்டத்திற்கு உத்திரவாதம் தருவதாகும்.

சில இடங்களில் புல் தரையை ஆடுகளமாகப் பயன்படுத்துவதும் உண்டு. அந்த இடங்களில், போடுகின்ற கோடுகளின் குறியீடுகள் பளிச்சென்று தெரிவதுபோல் அமைந்திருக்கும் புல் (உயரத்தை) தரையாக வைத்திருக்க வேண்டும். அந்தப் புல் தரையும் வழுக்கி விடாத தன்மையுள்ளதாக, மென்மையானதாகவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

புல் தரையுள்ள ஆடுகளங்களை வைத்திருப்பவர்கள், தொடர் போட்டி ஆட்டம் நடத்துகின்ற பொறுப்பேற்று விடுகின்ற நேரங்களில், குறைந்தது இரண்டு ஆடுகளங்களாவது வைத்திருக்க வேண்டும். முதல் நாள் போட்டியில் புல்தரை தகர்க்கப்பட்டு, தரை தெரிய நேரிடும் என்பதால், ஆடுவதற்கு அபாயமாக அமையலாம். அதனால் இன்னொரு ஆடுகளம் இருந்தால், மாற்றி மாற்றி ஆடவும், ஒன்றைப் பயன்படுத்தும்பொழுது மற்றொன்றைச் சரிபார்த்துத் தயார் செய்து கொள்ளவும் முடியும்.

ஆக, ஆடுகளமானது புல்தரையுடன் இருந்தாலும் சரி, மென்தரையுடன் விளங்கினாலும் சரி, ஆடுவதற்கு ஏற்றவாறு, அபாயம் விளைவிக்காதவாறுள்ள தன்மையில் அமைந்திடல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைத்திட வேண்டும்.

ஆட்டக்காரர்களுக்குப் பாதுகாப்பு

ஆட்டக்காரர்களுடன் ஆட்டக்காரர்கள் மோதுகின்ற ஆட்டம், அதுவும் அடிக்கடி வலிமை காட்டிமோதுகின்ற ஆட்டம் என்பதை அனைவரும் அறிந்ததே. ‘அறிந்து கொண்டே அபாயத்தில் குதிப்பது’ என்பது விளக்கைப் பிடித்துக்கொண்டே கிணற்றில் விழுபவன் கதை போல்தான் முடியும்.

ஆகவே, அபாயம் தரத்தக்கவைகளை முதலில் அறிந்துகொண்டு, அவற்றினின்றும் தவிர்த்து ஆட வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆட்டக்காரரும் உணர்ந்துகொண்டு, அதன்வழி பின்பற்றி ஆட வேண்டும்.

ஆட்டத்திற்கிடையிலே தவறியோ அல்லது தாவியோ தரையில் விழுவது சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்ச்சிதான். கை கால்களை நீட்டுவது, சமயங்களில் தொடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் மூச்சுமுட்ட, ‘தம்’ பிடித்து தன் சக்திக்கும் மீறி பாடிக் களைப்பது, திடிரென்று அங்குமிங்கும் என்று திரும்பும்பொழுது கால் மூட்டுக்களில் வலி எழுவது, தசைப்பகுதிகளில் விசை கிளம்பி மேலும் அசைகின்றபொழுது வருவதற்கு மேலேயே கிடைக்கும் வேதனை என்றெல்லாம் பல ஆட்டக்காரர்கள் கைகள், கால்கள் பகுதியிலும், எலும்பு மூட்டுக்கள் பகுதியிலும், சுவாசிக்கின்ற நுரையீரல் பகுதியிலும் அதிக வேதனையை சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அளவுக்கு மீறி விளையாடும் பொழுது, அல்லது சக்திக்கு மீறி தன் திறமையைக் காட்ட முயலும்பொழுது, அபாயம் நேரிடக்கூடும். ஏனெனில், பத்திரமான ஆட்ட முறை அங்கு பரிதாபமாக தவிர்க்கப்படுவதே காரணமாகும். ஆகவே, எக்காரணத்தை முன்னிட்டும், ஆட்டக்காரர்கள் தங்களை மறந்து, ஆட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற ஒரு முக்கிய கருத்தினை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

1. விளையாட்டில் கலந்து கொள்வதற்கு முன் நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, போட்டி ஆட்டத்தில் கலந்து கொள்வதற்கேற்ற உடல் தகுதியினைப் பெற்றிருக்கின்றார்களா என்பதைக் கண்டறிந்து, தகுதி பெற்ற மருத்துவர்கள் ‘விளையாடலாம்’ என்று அனுமதி அளித்த உடனே ஆட வைப்பதுதான் சாலச் சிறந்த முறையாகும். அபாயம் யாருக்கும் நிகழாமல் தடுத்திட தகுந்த வழியுமாகும்.

2. கடுமையான போட்டிகள் நிலவும் உயர் போட்டிகளுக்குத்தான் மருத்துவர்கள் சோதனையும், அவர்களின் அனுமதியும் பெற வேண்டும். சாதாரணமாக பயிற்சி காலங்களில் விளையாடுவதற்கு வருடாந்திரம் நடக்கும் ஒரு மருத்துவ பரிசோதனையே போதும்.

பொதுவாக, ஒருவர் உடல் திறன் (Physical Fitness) நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதே ஆட்டத்திற்கு அடிப்படைத் தேவை என்பதால், பலவீனமான தேகம் உள்ளவர்கள் இவ்வாட்டத்தில் பங்கு பெறக்கூடாது என்பதே நோக்கமாகும். பல ஹீனமானவர்கள் பத்திரமான ஆட்டத்திற்கு உரியவர்கள் அல்லர். அவர்களால் எப்பொழுதும் அபாயமே என்பதைக் கருதியே, முன்கூட்டியே சோதனை செய்து முன்னெச்சரிக்கையாக ஆட்டத்தை நடத்திட முயல்வது சடுகுடு நடத்துபவர்களின் சாமர்த்தியமாகும்.

3. துரிதமான இயக்கங்களையும், வேகமான அசைவுகளையும் உடையதாக சடுகுடு ஆட்டம் விளங்குவதால், எடுத்த எடுப்பிலேயே, நினைத்த மாத்திரத்திலேயே சடுகுடு ஆட்டத்தில் குதித்துத் தாவி, குனிந்து அடங்கி விளையாடிட முடியாது. விறைப்பாக இருக்கின்ற உடல் உறுப்புக்களைச் சூடேற்றி, பின்னர் பதமாக்கி (Warm up), இதமாக அவைகள் இயங்கிடும் வண்ணம் நெகிழும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

தசைப் பகுதிகள் தளதளவென்று இருந்தாலும், தன்னிச்சைக்கு ஏற்றாற்போல் வளைந்து செயல்பட வேண்டும் என்றால், அதனைப் பதமாக்கும் பயிற்சி களினால்தான் மெருகேற்ற வேண்டும். அப்பொழுது தான் தசைகள் தங்கள் முழு வலிமையையும் வெளிக்கொண்டு வர முடியும். அதனால்தான் எந்தவித வலியுமின்றி, இடத்திற்கு ஏற்றாற்போல் இணைந்து இயங்க முடியும். இல்லையேல் பிடிப்பு ஏற்பட்டு, வேதனையால் துடித்துத் துவண்டு கிடக்க நேரிடும். ஆகவே, ஆட்டக்காரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்கள், ஆட்டம் தொடங்குவதற்கு முன் அவர்களை நன்கு சூடேற்றும் பதமாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுத்திட வேண்டும்.

குறிப்பு: அதற்கான பயிற்சிகள் பின் பகுதிகளில் தரப்பட்டிருக்கிறது.

4. சடுகுடு ஆட்டத்திற்கு உடையும் முக்கியமானது தான். கிராமப்புரங்களில் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மேலே திறந்த மேனியராய் விளையாடுவது அந்நாள் பழக்க வழக்கமாக இருந்து வந்தது. காலம் மாற மாற, ஆட்டத்தில் புதுமைகள் சேரச் சேர, உடைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விதிகளும் விளைந்தன.

திறந்த மேனியில் பனியன் போட்டாக வேண்டும், அதில் ஆடும் எண்ணையும் பொறித்திருக்க வேண்டும் என்பதுடன், உள்ளே லங்கோடு அல்லது ஜட்டி அணிந்து, அதன் மேல் கால் சட்டையும், கால்களில் காலணிகளும் அணிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி.

விரும்பினால், கணுக்கால்களில் கணுக்கால் காப்புறையும் (Anklet), முழங்கால்களில் காப்புறையும் (Knee Cap) போட்டுக்கொண்டு ஆடலாம். அது அவரவரர் வசதிக்கும் விருப்பத்திற்கும் பழக்கத்திற்கும் உரிய விஷயமாகும்.

5. உடை விஷயத்தில் உரிய கவனமும் கண்ணோட்டமும் செலுத்தினால் போதாது. உடல் உறுப்புகளையும் உகந்த முறையில்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான விதிமுறை களையும் விவேகத்துடன் இணைத்திருக்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்து ஒட வேண்டும் என்கிற அமைப்பில், விரல்களில் நகங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டிருந்தால், கிழித்து விடவும் கீறிக் காயப்படுத்தவும் கூடும் என்பதால், நகங்களை கூர் மழுங்க வெட்டி விட்டுத்தான் விளையாட வேண்டும் என்பது ஒரு விதி.

இடுப்பிலே இடைவார் (Belt) அதிலே அழகாக மாட்டப்பட்டிருக்கும் இரும்புக் கொக்கி, (Buckle) விரலிலே மோதிரங்கள் இவைகளை அணியாமல் செல்ல வேண்டும். அவ்வாறு அணிந்திருந்தாலும், நடுவரால் கட்டாயமாகக் கழற்றி விடப்படும்.

அத்துடன், எதிராளிகள் பிடித்தால், வழுக்கிக் கொண்டு ஓடிவந்து விடலாமென்று தன் தேகத்தில் எண்ணெய் பூசிக் கொண்டு வருபவர்களும் உண்டு. எண்ணெயால் வழவழப்பாக்கிக்கொண்டு வருபவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

மேலே கூறியவைகள் அனைத்தும் அபாயம் விளைவிக்கும் தன்மையில் அமைந்திருப்பதால், ஆட்டக்காரர்கள் அவற்றைத் தவிர்த்துவிட்டு வர வேண்டும்.

6. எக்காரணத்தை முன்னிட்டும், பயிற்சியாளர்கள் (Coaches) தங்கள் ஆட்டக்காரர்களை முரட்டுத்தனமாக ஆடுமாறு ஊக்குவிக்கக்கூடாது. அது ஆட்டத்தின் அழகையும் பண்பாட்டையும் சிதைத்து சின்னா பின்னமாக்கி விடுகிறது.

ஆட்டத்தின் நினைவில் நீந்திக்கிடந்து, உணர்ச்சிப் பிழம்பாக உருமாறி, இளமையின் எழுச்சியில், விளையாட்டு வேகத்தில் தடுமாறி நிற்கின்ற வீரர்கள், சில சமயம் தங்களை மறந்து தவறான ஆட்டம் ஆடும் பொழுதுகூட, அருகிலிருக்கும் பயிற்சியாளர்கள், அவர்களை அமைதிப்படுத்தி, ‘விளையாட்டு விளையாட்டுக்காகவே, மகிழ்ச்சிக்காகவே’ என்று சாந்தப்படுத்தி ஆடச் செய்ய வேண்டுமே தவிர, எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுபவர்களாக மாறிடக்கூடாது.

இத்தகைய இக்கட்டான நிலையினை உணர்ந்து, அந்தந்தக் குழுத் தலைவர்கள், தங்கள் குழுவினரை அமைதி காத்து ஆடுமாறு அறிவுறுத்த வேண்டும். அடக்கியாள வேண்டும். ஆனந்த சூழ்நிலை உருவாக ஆனவரை முயல வேண்டும். ‘தன்னை மறந்தவர் தகுதி இழந்தவர் ஆகிறார்’ என்கின்ற சொல்லைப் பொய்யாக்கும் வகையில், தன்னை உணர்ச்சிக்கு ஆளாக்காது, பண்புடையாளராகப் பாவித்து ஆட்டக்காரர்கள் ஒழுகுதல் வேண்டும்.

7. இதுபோன்ற மதுரநிலை உருவாக வேண்டுமானால், பயிற்சிக் காலங்களிலேயே தங்கள் ஆட்டக்காரர்களைப் பண்புடையவர்களாகப் பழக்குதல் வேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் நல்ல உணவினை தேவையான அளவிற்கு உண்ணும் வகையினை அளித்தல் அவசியம்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகுமே! பண்பு மட்டும் நிற்குமா? நிலைக்குமா? நிறைந்த வயிறு, நிலையான குணங்களை ஏந்திச் சுவைக்கின்ற நெஞ்சினை அல்லவா நல்கும்! ஆகவே பசித்த வயிற்றினராக அல்லாமல், பொதுவாக நல்லுரம் வாழும் தேகத்தினரைத் தேர்ந்தெடுத்து, தேவையான ஆகாரத்தைத் தேடித் தந்து, திறன் நிலையை மிகுதிப்படுத்த முயன்றிட வேண்டும்.

8. சடுகுடு ஆட்டங்களில் சாதாரணமாக ஏற்படுகின்ற காயங்கள், அபாயங்கள் எல்லாம் சரியான முறைகளில், திறமையான வழிகளில் ஆடாததினால் ஏற்படும் விளைவுகள்தான். திறமையற்ற ஒரு ஆட்டக்காரர் எல்லா தருணத்திலும் தடுமாறிப் போகின்றார். தவறாகச் சென்று சிக்கிக் கொள்கின்றார். இடுக்கியில் பிடிபடும் பொருள் போல மாட்டிக்கொண்டு, பிறகு விடுபட முயல்கையில் எல்லாம் மோதல்கள்தானே!

ஆனால் திறன்கள் நிறைந்த ஒர் ஆட்டக்காரர், சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டாலும், அதனை சாதகமான சூழ்நிலையாகத் தன் தந்திரத்தால் மாற்றித் தப்பித்துக்கொண்டு, வருவதுடன், அபாயநிலை உருவாகாமலும் காத்துக்கொண்டு விடுகின்றார். ஆகவே, பயிற்சியாளர் தங்களுடைய ஆட்டக்காரர்களுக்கு திறம்பட எவ்வாறு ஆடுவது என்று கற்றுத் தருவதைப் போலவே, பாதுகாப்புடன் எவ்விதம் ஆட வேண்டும் என்பதையும் முறையாகக் கற்றுத் தந்திட வேண்டும்.

கவனமின்மையாலும், அறியாமையாலும், சில நேரங்களில் அளவுக்கதிகமான தற்பெருமையினாலும், திட்டமிட்டு செயல்படாமையினாலும், திறமையற்ற தலைவர்களின் ஆட்சியினாலும் கண்காணிக்கப்படாத ஆடத் தகுதியற்ற ஆடுகளங்களினாலும், அபாயங்களும், காயங்களும் ஏற்படும்.

அவற்றைத் தவிர்த்து ஆடுவது அறிவுடமை. வந்தபின் மாற்றிக் கொள்வது பெருந்தன்மை, பட்டபின் மேலும் அதை பெரிதாக்காமல் முளையிலே கிள்ளி எறிவது போல முன்னேற்பாடாக முதலுதவிப் பெட்டியினையும் வைத்திருப்பது நல்லது. அதனை முறையுடன் பயன்படுத்தவும் பயிற்சியாளர்கள் தெரிந்து கொண்டிருப்பதுடன், பழகிக் கொண்டிருக்கவும் வேண்டும்.

வெற்றிக்காக விளையாட்டில் தங்கள் வீரர்களைப் பலியிட விரும்பாத பயிற்சியாளர்களும், குழுத் தலைவர்களுமே ஆட்டத்தை வளர்க்கும் அரிய ஆன்றோர்களாக விளங்குகின்றார்கள். களைப்படையும் வீரர்களைக் கண்டுபிடித்து, அவர்களை மாற்றி ஆடச் செய்யவும், தோல்வியைத் தழுவும் நிலையில் சேர்ந்து போவோரை உற்சாக மொழிகளால் சுறுசுறுப்பூட்டவும், அவ்வப்போது நலமான நெஞ்சத்துடன் ஆட்டக் காரர்களை ஆடச் செய்யவும், பயிற்சியாளர்கள் பெரிதும் செயல்பட வேண்டும். அதுவே, ஆனந்தமான ஆட்டத்தின் அரிய ரகசியமாகும்.

இனி, பாதுகாப்பு முறைகளிலிருந்து பண்பட்டதோர் பயிற்சி முறைகளையும் என்னவென்று அறிந்து கொள்வோம்.