சடுகுடு ஆட்டம்/பலப்படுத்தும் பயிற்சி முறைகள்

விக்கிமூலம் இலிருந்து
6. பலப்படுத்தும் பயிற்சி முறை

பொழுதுபோக்குவதற்காக விளையாடுகிறோம். அத்துடன் புளகாங்கிதம் அடைவதற்காகவும் விளையாடுகிறோம். அதையும் புத்திசாலித்தனத்துடன் பாதுகாப்பாகவும் பலம் பெறவும் விளையாட வேண்டும் என்பதைத்தான் விளையாட்டுத்துறை பங்கு பெறுவோரிடம் எதிர்பார்க்கிறது.

அதற்கு, அந்தந்த விளையாட்டை ஆட்டக்காரர்கள் எப்படி தங்கள் மனதில் ஏற்றுக் கொள்கின்றார்கள், எந்த வழியில் நடந்து தங்கள் குறிக்கோளை அடைகின்றார்கள் என்பதில்தான், அந்த நோக்கத்தில்தான் நடைமுறை செயல்கள் அமைந்திருக்கின்றன.

சடுகுடு ஆட்டமானது பலப்பரீட்சையில் இறங்கும் பொழுதே பண்பட்ட மனதினராகவும், பொறுமை சூழ் திலகமாகவும், பிறரை நேசிக்கும் அன்புக்களமாகவும் இருந்திட வேண்டிய இனிய நிலை தோன்றிவிடுகிறது. அதற்கேற்ப ஆட்டக்காரர்களை உருவாக்கித் தயாரித்தளிக்கும் பொறுப்பு குழு பயிற்சியாளருக்கு அமைகிறது.

ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால், ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ முடியாது. ஆடுவதற்காக ஆட்களை சேர்த்து விடலாம். ஆனால், அறிவார்ந்த ஆட்டக்காரர்களைச் சேர்த்திட முடியாதே! அதனால், அடிப்படையான பண்புகளை உருவாக்கிட, ஆள் சேர்க்கும் ஆரம்ப காலந்தொட்டே, இச்சீரிய பணியைத் தொடங்கிவிட வேண்டும்.

பயிற்சி காலத்தில் பயிற்சியாளர் கற்றுத்தர வேண்டிய முக்கியமான மூன்று பணிகளை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சடுகுடு ஆட்டத்திற்கான அனைத்து விதிகளையும் மிகத் தெளிவாக விளக்கி, அவர்களுக்கு விதிகளைப் பற்றிப் பூரண ஞானத்தை உண்டாக்கி விடுவது. அதிலும் விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் சடுகுடு ஆட்டத்திற்கு ஏற்ப, விளையாடுகின்ற தன்மையில் விதிகளைக் கற்பித்து வைத்தல்.

2. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குரிய கடமை என்ன? ஆட்டத்திறமை என்ன? அதனை எவ்வாறு அடைவது என்றெல்லாம் தன்னைப் பற்றி புரிந்து கொண்டு, தன் தகுதியை வளர்த்துக் கொள்ளவும், அதே தகுதியையும் திறமையையும் சக ஆட்டக்காரர்களுடன் இணைத்துத் தன் குழுவின் சக்தியையும், ஆற்றலையும் அதிகப்படுத்திட, ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் அவர்களை இணைந்து விளையாட வைத்தல்.

3. தகுதியையும் திறமையையும் ஆட்டக்காரர்களிடையே வளர்த்துவிடும் பொழுதே, அவர்கள் எப்பொழுதும் உடல் திறனை நன்கு காத்துக்கொண்டு விடுகின்ற கருத்தோட்டத்தைத் தினம் பழக்கத்திற்குக் கொண்டு வருதல், அதற்கான பயிற்சிகளின் பட்டியலைத் தந்து, அன்றாடம் அவர்களிடம் பயிற்றுவித்தல்.

ஏதோ அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஒன்று சேர்ந்து எல்லோரும் ஆடி விட்டால் மட்டும் ஒரு குழு, அதற்குரிய திறமையில் உன்னத நிலையை அடைந்து விட முடியாது. அடிப்படை நுணுக்கங்களை ஆராய்ந்து, ஆராய்ந்து, அவற்றை நன்கு தெளிந்து, அனைவரும் கலந்து பேசி, தங்களது பலவீனத்தைத் தெரிந்து மாற்றிக்கொண்டு, வருகின்ற திறனை வளர்த்துக் கொண்டு ஆட முயல வேண்டும்.

முதல் இரண்டு பிரிவுகளுக்கேற்ற கருத்துக்களை, ஆட்டக்காரர்களுக்குரிய சிறப்புக் குறிப்புக்களிலும், பாடுபவர், பிடிப்பவர்க்கு உரிய திறன்கள் என்னும் பகுதிகளிலும் விரிவாகத் தந்திருப்பதால், அவற்றை விட்டுவிட்டு, மூன்றாவது பகுதியாகிய பலப்படுத்துதல் பயிற்சி முறைகளைப் பற்றி மட்டும் இங்கே காண்போம்.

உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள் உடலைத் தரமாகவும், திறமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. அதனால் நினைப்பதற்கேற்ப உடல் உறுப்புக்கள் நெகிழ்ந்து, செய்கின்ற வேலையை செம்மையாகச் செய்திடும் வண்ணம் உழைக்கின்றன.

இதனால் திறன்கள் பெருகி, தேர்ந்த நிலையையும் அடைகின்றன. அதனால் மனோநிலையில் தெளிவும், பொலிவும் பிறக்கின்றன. ஆகவே கொடுக்கப் பட்டிருக்கும் பயிற்சிகள் பட்டியல்களில், விரும்புகின்ற பயிற்சிகளை தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்து உடலைப் பதப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பதப்படுத்துவதுடன் உடலைப் பலப்படுத்தும் முறை

1. ஒரு காலால் நொண்டியடித்தவாறு, முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும்பொழுதே, மற்றொரு காலால் முன்புறம், பின்புற பக்கவாட்டில் உதைத்தாடி (Kicking) பயிற்சி செய்தல், பிறகு அடுத்த காலால் இதுபோல் செய்தல்.

2. இடது காலில் நின்று, முன்புறம் வலது காலை உயர்த்தி, சற்று முன்புறமாகக் குனிந்து இடது கையால் வலது காலைத் தொடுதல். இதுபோல் மாறி மாறி பலமுறை செய்தல்.

3. இடுப்பின் இருபுறமும் கையை வைத்துக் கொண்டு, துள்ளித்துள்ளிக் குதித்தல், ஒவ்வொரு முறை குதிக்கும்பொழுதும் கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து விரித்து சேர்த்தல்.

4. இரு கைகளையும் முன்புறமாகத் தரையில் ஊன்றி, முன்பாதங்களில் முதலில் உட்கார்ந்திருத்தல் (தண்டால் பயிற்சிக்குப் போல). பிறகு கைகளை ஊன்றியவாறு இருந்து இடது காலை மட்டும் துக்கி துள்ளியவாறு பக்கவாட்டில் நீட்டுதல்.

5. கயிறு சுற்றித் தாண்டுதல் (Rope Skipping).

6. மல்லாந்து படுத்து, பின்னர் கால்கள் இரண்டையும் செங்குத்தாக உயர்த்தி, இடுப்பின் பின்புறப் பகுதியினை இரு கைகளாலும் தாங்கியவாறு, கால்களை சைக்கிள் பெடல் மிதித்துச் சுற்றுவது போல் சுற்றுதல்.

7. ஒருவர் இடுப்பை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்திருக்க, முன்புறம் உள்ளவர் முன்புறம் இழுக்க, பிடித்திருப்பவர் அவரைப் பிடித்து நிறுத்த என்பது போல பயிற்சி செய்யவும்.

8. ஒருவர் இரண்டு கைகளையும் முன்புறமாகத் தரையில் ஊன்றி ஒரு காலை ஊன்றி நின்று, மறு காலை பின்புறமாக நீட்டியிருக்க, இன்னொருவர் நீட்டிய அவரது காலை இழுக்க, இவர் முன்புறம் இழுக்க என்பது போல பயிற்சி செய்யவும்.

9. இரண்டு ஆட்டக்காரர்கள் முதுகுப்புறமாக உரசுவதுபோல நிற்கவும். பிறகு ஒருவர் மற்றொருவரை முதுகில் சுமக்கவும். பிறகு அடுத்தவர் அவரை முதுகில் ஏற்றவும். அப்பொழுது கைகளை பூட்டு போல இறுக்கமாகப் பற்றிக் கொண்டுவிடவும்.

10. பச்சைக் குதிரை தாண்டும் பயிற்சியைச் செய்யவும்.

11. பஸ்கிப் பயிற்சி சிறந்த பயிற்சியாகும். நின்ற நிலையில் இருந்து ஒரடி முன் தள்ளி உட்கார்ந்து, பிறகு பின்புறமாகத் தாவி, பின்னர் முன்புறம் தள்ளி உட்காரும் பயிற்சியைச் செய்யவும்.

12. எதிராளியை தோள்களினால் தள்ளும் பயிற்சி செய்யவும்.