சடுகுடு ஆட்டம்/ஆட்டக்காரர்களுக்கு சில சிறப்புக் குறிப்புக்கள்

விக்கிமூலம் இலிருந்து
7. ஆட்டக்காரர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்


1. வலிமையும் மோதலும் நிறைந்த ஆட்டம் ஆகையால், சடுகுடு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுதே, தேக வலிமை உள்ளவர்களாகவும், மன தைரியம் நிறைந்தவர்களாகவும் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.

2. பயிற்சி தரும்பொழுது வலிமையை முரட்டுத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பயன்படுத்தாமல், சக்தியை வீணே செலவு செய்யாமலே தந்திரத்துடன் திறமையை அவ்வப்பொழுது பயன்படுத்தி வெற்றிகரமாக உபயோகிக்கக் கற்றுத் தந்திட வேண்டும்.

3. இது தனித்திறமை உள்ள ஆட்டக்காரர்களால் சில சமயங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்றாலும், இது ஒரு குழு ஆட்டம் என்பதை எந்த ஆட்டக்காரரும் மறந்துவிடக் கூடாது. கூடி விளையாடினால், குழு ஒற்றுமை நிறைந்த குழுவே, எளிதாக வெற்றி பெறும் என்பதையும் மறந்துவிடக் கூடாது; நான்கு மாடுகள் ஒரு சிங்கத்தை விரட்டிய கதையையும், முண்டனுக்கும் இரண்டு ஆள் என்ற பழமொழியையும் மறந்துவிடாமல், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. ஒரு குழுவின் வெற்றியானது அந்தக் குழுவின் தலைவனைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. தன் குழு ஆட்டக்காரர்களுடைய திறமையினை அறிந்து வைத்திருந்து யாரை, எப்படி, எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். வழி நடத்தத் தெரிந்த குழுத் தலைவனே வெற்றியடைய முடியும்.

5. எந்த நேரத்திலும் ஒருவருக்கொருவர் கருத்தில் முரண்பாடு கொள்ளாமல் காப்பதுடன், எதிராட்டக் காரர்களையும் சமாதானப்படுத்திடவும் குழுத் தலைவன் எச்சரிக்கையுடன் இருந்து செயல்பட வேண்டும்.

6. எதிர்க்குழுவைக் கண்டு பயந்து ஆடுவதும் தவறு. அதே போல் அவர்களை மிகத் தாழ்வாக தரக்குறைவாக எண்ணும் மேதாவித்தனமும் தவறு. இதை உணர்ந்து குழுத் தலைவன் புகழ் பெறத்தக்க அளவில், வெற்றி பெறத் தக்க நிலையில் விவேகத்துடன் தன் குழுவினை நடத்திட ஒரு சில குறிப்புகளை இங்கே தந்திருக்கிறோம். பின்பற்றி பயன்பெறவும்.

பாடிச் செல்பவர்களுக்கு

1. எதிர்க்குழு பகுதியிலே பாடிக் கொண்டிருக்கும் பொழுது இயன்றவரை, தனது கைகளையும் கால்களையும் நீட்டிப் பயன்படுத்தித் தொட முயல வேண்டும்.

2. பாடிச் செல்பவர் எந்த நிலையிலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனது முதுகுப்புறத்தை (Back) பிடிப்பவர்களிடம் காட்டியவாறு பாடிக் கொண்டு இருக்கக்கூடாது.

3. ஒரே சீராகவே பாடிக் கொண்டிருந்துவிட்டு, அதாவது ஆரம்பம் முதல் முடிவு நேரம் வரை ஒரே மாதிரியாகப் பாடிக் கொண்டு வருவதுதான் சிறந்த பாடும் முறையாகும். வீணே கத்துவதிலோ, அலட்டிக் கொண்டு பாடுவதிலோ அர்த்தமுமில்லை; பயனுமில்லை.

4. இன்னும் கொஞ்ச நேரம் தம் பிடித்துப் பாட முடியும் என்ற நிலை வரும்பொழுதே, பாடுபவர் தனது ஆடும் பகுதியை நோக்கித் திரும்பி வந்திட முயல வேண்டும். அப்படி வந்தால் எதிர்க்குழு பாய்ந்தடிக்க (Pursuit) முயலும்பொழுது, தப்பித்து வர முடியும். கடைசி மூச்சு வரை கத்திவிட்டு, களைத்துப்போய் திரும்புவது புத்திசாலித்தனமான ஆட்டமல்ல.

5. எதிர்பாராத விதமாக எதிராட்டக்காரர்களிடம் பிடிபட்டுவிட்டால், ‘இனி தப்பிக்க வழியில்லை’ என்று உணரும் நேரத்திலேயே பாடுவதை நிறுத்திவிட வேண்டும்.

தொடர்ந்து பாடிக்கொண்டே மேலும் விடுபட முயற்சித்தால், மேலும் பலர் மேலே விழுந்து அழுத்தவும், மடக்கவும், அழுத்தவும் கூடும்.

அதனால் சிக்கல், உடலில் வலி, இதை உணர்ந்து கொண்டு, தப்பிக்க வழியில்லாதபொழுது, ‘டக்கென்று’ பாட்டை நிறுத்திக்கொள்வது மரியாதை. அதுவே அபாயமில்லாத ஆட்டமாகும்.

6. எதிர்க்குழு பகுதிக்குப் போகவும், பாடத் தொடங்கவும் முன்பாக, எங்கெங்கே, யார் யார் நிற்கின்றார்கள் என்பதையும் நன்றாகக் கவனித்தவாறு தான் முன்னேறிட வேண்டும். அதுவும் ஒரு பக்கமாகத் தான் (Side) போக வேண்டும். நடு ஆடுகளத்திற்குள்ளே செல்லக்கூடாது.

7. தனக்குத் தெரிந்த சாகச வேலைகளையெல்லாம் (Tricks) பாடிப் போனவுடனேயே காட்டிவிடக் கூடாது. ஒவ்வொரு முறை பாடிப் போகும்பொழுதும், சமயத்திற்கேற்றாற் போல, ஒவ்வொரு திறமையைக் காட்ட வேண்டும். அதுவே அறிவார்ந்த ஆட்டமாகும்.

8. பலர் பிடித்திருந்தாலும் அவர்களிடமிருந்து விடுபட்டுத் தப்பித்து வருவதென்பது உடல் சக்தியை மட்டும் பிரயோகித்து அல்ல. திறனும் மனோ வல்லமையும் சேர்ந்த சமயோசிதப் புத்தியினாலுந்தான். ஆகவே, ஆட்டம் பழகிக்கொள்ளும் நாட்களிலேயே இந்தத் திறமையையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

9. எதிர்க்குழுவில் ஒன்று அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் எஞ்சி நிற்கும்பொழுது, நல்ல சாதுர்யம் நிறைந்த சமயோசிதப் புத்தியுள்ள ஆட்டக்காரரையே பாடிச் செல்ல அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதாக அவர்களைத் தொட்டுவிட்டு வெற்றி எண்கள் பெறுவதுடன், மேலும் ‘லோனா’வையும் பெற முடியும்.

10. நடுக்கோட்டருகில் நின்றவாறே, எதிராளியைத் தன்னைப் பிடித்து விடுமாறு தூண்டுகின்ற பாவனைகள் நல்லதுதான். அவ்வாறு எத்தனை ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டு வர முடியுமோ, அத்தனை பேர்களையும் தொட்டுவிட்டு வர முயற்சிக்கலாம்.

11. காலில் காலணி (Shoe) அணிந்து கொண்டு ஆடலாம் என்று விதி இருந்தாலும், காலணி இருக்கிறதே, விதியும் அனுமதிக்கிறதே என்று பழக்கமில்லாதவர்கள் காலணி அணிந்து கொண்டு ஆடக்கூடாது. அது அவர்கள் இயல்பான இயக்கத்தைத் தடுத்துவிடும். அத்துடன், ஆடுகளத் தரை வழுக்கல் நிறைந்ததாக இருந்தாலும் காலணிகளை அணிவது நல்லதல்ல. நிலைமைக்கேற்றபடி அனுசரித்து ஆடவும்.

சடுகுடு ஆட்டத்திற்கு நல்ல உயரமானவர்கள், சிறந்த தசை வலி நிறைந்தவர்கள், கட்டுமஸ்தான தேகம் உள்ளவர்கள், நீண்ட நேரம் ஆடினாலும் களைத்துப் போகாத நெஞ்சுரம் (Stamina) கொண்டவர்கள், மோதலுக்கும், சாடலுக்கும், போராட்டத்திற்கும் பயப்படாதவர்கள்தான் தேவை என்பதால், அப்படிப்பட்டவர்களைக் கொண்ட குழுவே எளிதில் வெற்றி பெறும்.

அடுத்து, பிடிப்பவர்களுக்கான சில முக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

பிடித்தாடுபவர்களுக்கு

1. பாடி வரும் எதிராட்டக்காரர் எத்தனை முயற்சிகளை மேற்கொள்கின்றார் என்று கணிப்பதுடன், அவரை பாடித் தொடும் கோட்டைக் கடக்க முடியாதவாறு தடுக்க வேண்டும். அவரைப் பயப்படுத்தி, கோட்டை மிதிக்காதவாறு செய்வதில் வெற்றி கண்டால், அவர் ஆட்டமிழந்து விடுவாரல்லவா? ஆகவே, அத்தகைய படை முயற்சியை எல்லா ஆட்டக்காரர்களும் ஒற்றுமையாக சேர்ந்து செய்ய வேண்டும்.

2. முன்னாலே தடுக்க முயற்சித்தும், அவர் பாடித் தொடும் கோட்டைத் தொட, தன் காலை நீட்டும் பொழுது, காத்திருந்தபடி திடீரென்று ஒருவர் காலைப் பிடிக்கவும், அதே சமயத்தில் மற்றவர்கள் வந்து உடலைப் பிடித்துவிடவும் என்ற முறையில் ஆளைப் பிடித்திட வேண்டும். இதில் ஒற்றுமையாக, காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும். இதை வேகமாக, விறுவிறுப்புடன், திடீர் பாய்ச்சலில் செய்ய வேண்டும்.

3. காலைப் பிடித்து இழுத்து விடுகின்ற ஆட்டக்காரர்களே, ஆடுகளப் பக்கவாட்டில் (Side) நின்று ஆட வேண்டும். இருபுறமும் இந்த ஆற்றல் உள்ளவர்கள் நிறுத்தப்படுவது சிறந்த ஆட்ட அமைப்பாகும்.

4. ஆற்றல் குறைந்த அல்லது பலவீனமுள்ள ஆட்டக்காரர்களை நடுவிலே நிறுத்திட வேண்டும்.

5. பாடித் தொடும் கோட்டருகில் அல்லது நடுக் கோட்டுக்கு அருகில் ஆளைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அப்படியே ஆளை அலாக்காகத் துக்கி விடுகின்ற தன்மையில் சூழ்நிலை அமைந்தால்தான் பிடிக்க வேண்டும். வீணாகப் பிடி நழுவுகின்றவாறு பிடிக்கும் முயற்சியை (Loose catch) எப்பொழுதும் தொடரக்கூடாது.

6. காலை ஒருவர் பிடிக்கும்பொழுது, பிடிபட்டவர் கீழே விழுந்து கையால் நடுக்கோட்டைத் தொட முயற்சிப்பது இயல்பே. அப்பொழுது, அவர் கையை அப்படியே தூக்கிப் பிடித்திட மற்றவர்கள் முயல வேண்டும். இந்தப் பிடி முறையைப் பக்குவமாகச் செய்தால், ஆட்டத்தில் நல்ல பலன் அடிக்கடி கிடைக்கும்.

7. ஒற்றைச் சங்கிலிப் பிடி முறை (Single Chain) என்ற பிடித்தாடும் ஆட்டமுறை உண்டு. ஐந்து ஆட்டக்காரர்கள் கடைக் கோட்டருகில் நிற்க, இரண்டு பேர் தங்களது ஒரு கையைக் கோர்த்தவாறு நடுக்கோட்டருகில் வந்திட, அவர்களுக்கு நடுவிலே பாடிக் கொண்டிருப்பவரை இருக்குமாறு வைத்துப் பிடித்துவிடுவது.

குறிப்பு: 5 புள்ளிகள் பிடிக்கும் ஆட்டக்காரர்கள், ஒரு புள்ளி நடுவிலே மாட்டிக்கொண்ட பாடும் ஆட்டக்காரர், பின்னால் கோடு இணைக்கப்பெற்ற இரண்டு புள்ளிகள், ஒற்றைச் சங்கிலி முறையால் பிடிக்க முயலுதல்.

8. இரட்டைச் சங்கிலிப் பிடிமுறை (Double chain), இதில் இடைக்கோட்டருகில் மூன்று ஆட்டக்காரர்கள் நிற்க, அவர்களைத் தொட வந்த பாடுபவர் மத்தியில் சிக்கிக் கொள்ள, இரண்டு இரண்டு பேர் தங்கள் தங்கள் கையைக் கோர்த்துக்கொண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

குறிப்பு: மூன்று புள்ளிகள் மூன்று பிடித்தாடும் ஆட்டக்காரர்கள்.

ஒரு புள்ளி பாடி வந்த ஆட்டக்காரர்.

இரண்டு புள்ளிகள் இடையில் கோடு ஒற்றைச் சங்கிலி முறை.

இரண்டு புள்ளிகள் இடையில் கோடு – இரட்டைச் சங்கிலி முறை.

9. இருவர் மூவர் இருவர் என்று ஆட்டக்காரர்கள் பிரிந்து நின்று பாடி வருபவரைப் பிடிக்க முயற்சி செய்தல்.

முதல் இரண்டு புள்ளிகள் இரண்டு ஆட்டக்காரர்கள் கைகோர்த்துக் கொண்டு நிற்பது. அடுத்த மூன்று புள்ளிகள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொண்டு நிற்பது.

கடைசி இரண்டு புள்ளிகள் கைகோர்த்துக் கொண்டு நிற்பது.

ஒரு புள்ளிதான் பாடி வரும் ஆட்டக்காரர்.

பாடுபவர் அதே இடத்தில் நிற்கும்பொழுது, கடைசி இரண்டு பேரும் கைகோர்த்தபடி, பாடித்தொடும் கோட்டிற்கு பாடுபவர் பின்னே வந்திட, மூன்று பேர் சங்கிலிபோல் கோர்த்தவாறு அவர்களுக்கு முன்னே வர, இப்படியாக மூன்று சங்கிலிகளுக்கு இடையே வைத்து பாடுபவரைப் பிடிக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

10. இருக்கின்ற ஏழு ஆட்டக்காரர்களும் ஒவ்வொரு கையை கோர்த்தபடியே இருந்து, அப்படியே பாடுபவரை நடுவில் விட்டு, சுற்றி வளைத்துக் கொள்ளும் பிடி முறையும் உண்டு. எந்தெந்த இடத்திற்கு, எப்படி எப்படி அமைப்பு முறையும், பிடி முறையும் பயன்படுகின்றதோ, அப்படி பிடிக்கும் திறமையை ஆடிப் பழகும் நேரத்திலேயே சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திட வேண்டும்.

மேலே கூறிய முறைகள் எல்லாம் எளிமையாகத் தோன்றினாலும், நடைமுறைப் படுத்தும்பொழுது கொஞ்சம் கஷ்டமாகவே தெரியும். முனைப்பும், உழைப்பும், பயிற்சி செய்யும் வேகமும், கற்றுக் கொள்ளும் யூகமும் இருந்தால், எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

11. அத்துடன், பிடித்தாடும் குழுவில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. அதுதான் பாய்ந்தடிக்கும் முறை (Chase). பாடிக் கொண்டிருந்துவிட்டு, தன் பகுதியை நோக்கிப் போகின்ற எதிராட்டக்காரரை, பிடிக்கும் முறையில் இருந்த குழுவில் இருந்து ஒருவர், நடுக்கோட்டைக் கடந்து அவர் போகத் தொடங்கிய உடனேயே பாய்ந்தடித்துத் தொட்டுவிட்டு வந்துவிடுதல்.

அதாவது,

அ) பாடி முடித்தவர் மெதுவாகத் தன் இடம் நோக்கிப்போகும்பொழுது;

ஆ) எதிர்க்குழுவிற்குத் தன் முதுகைக் காட்டியவாறு மெய்மறந்து நடந்து போகும்பொழுது;

இ) பாடிச்செல்பவர் சுறுசுறுப்பாக இல்லாமல் மந்தமாக இயங்கும்பொழுது;

ஈ) பாடுகிற மூச்சை அவர் விடப்போகிறார் என்று அறிந்து கொண்டபொழுது

   உடனே ஒடிப் போய், பாடிக் கொண்டே அவரைத் தொட்டுவிட்டுத் தன் பகுதிக்கு வந்துவிடுவதையே பாய்ந்தடித்தல் என்கிறோம். இந்தக் கலையையும், இனிதே கற்றுக் கொண்டால், எளிதாக வெற்றி எண்ணைப் பெற்றிட இயலும். இதற்கு சுறுசுறுப்பான இயக்கமும், வேகமான பாய்ச்சலும், சமயோசிதப் புத்தியும், சந்தர்ப்பத்திற்கேற்ப தந்திர யுக்தியும் தேவையாகும்.