சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்/அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

விக்கிமூலம் இலிருந்து

3. அண்ணாவும்
இலக்கியப் படைப்பும்

இந்திய நாட்டு வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பொற்காலமாகும். இந்த நாடு விடுதலை பெற்றதும் இந்த நூற்றாண்டே இணையற்ற மனித குலச் சிற்பிகளான அமரர் அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் வாழ்ந்தது இந்த நூற்றாண்டேயாம்.

தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வரும் நம்முடைய நாட்டுக்கு அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் ஓருருவம் கொண்டாற்போல திகழ்ந்த ஈடு இணையற்றவராக விளங்கும் அருமை அண்ணா தோன்றியதும் இந்த நூற்றாண்டேயாம்.

இந்த நாட்டு வரலாற்றில் அறிஞர் அண்ணா ஒரு மையம்; ஒரு திருப்புமுனை, அவர் ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவித்து இருக்கிறார். அவர் கண்ட தலைமுறை - தம்பியருலகு - தமிழுலகு இணையற்ற உலகு, அன்பில் விளைந்த உலகு, ஆர்வம் நிறைந்த உலகு, நண்பென்னும் நாடாச் சிறப்பு நிறைந்து நிலவும் உலகு. இத் தலைமுறை தாழாது. உயர்வதாக! தமிழுலகு சிறப்பதாக! அறிஞர் அண்ணா இயல்பிலேயே சிந்தனையாளர்; நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். மணம் வீசும் மலர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் பாசறையில் புடம்போடப்பட்டவர். அதனால் அந்த மலர் பொன் மலராயிற்று.

பொன் மலரில் புதுமை மணமும், பொதுமை மணமும் கமழ்ந்து வீசுகிறது. உலகியல் முறைப்படி தந்தையினும் தனயன் சிறந்து விளங்குகிறார்; தந்தைக்குப் பெரு மகிழ்வு ஊட்டுகிறார்; பொது மக்களின் புகழ்மாலையை வாங்கிச் சூடுகிறார்.

அறிஞர் அண்ணா புதுமையில் வேணவா உடையவர். ஆயினும் பழைமையை வெறுப்பவரல்லர். இங்ஙணம் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அண்ணாதுரைக்கா பழைமையில் வெறுப்பில்லை; இது புனைந்துரை! பொய்! என்று கருதுகிறீர்களா? நீங்கள் அப்படிக் கருதுவதில் தவறில்லை. ஏன்? இந்த நாட்டிலேயே பலர் அப்படித்தான் கருதுகின்றனர்.

ஆனால் நாம் கூறுவது உண்மை! சத்தியம்! வெறும் புகழ்ச்சியில்லை! அவர் பழைமையின் வெறுப்பாளர் அல்லர். ஆனால், உதவாப் பழைமைகளை ஒதுக்குகிறார்; நம்மையும் ஒதுக்கத் துரண்டுகிறார். உடைந்த பானையை, கிழிந்த பாயை, உயிரற்ற பிணத்தை யார்தான் பேணுவர்? அவை பயன்படா. அவற்றை ஒதுக்குவதே வாழ்க்கைக்குச் சிறப்பு.

அதுபோலவே நமது வாழ்க்கையின் வளத்திற்கும் ஏற்றத்திற்கும் பயன்படாத பழைமையை ஒதுக்குகிறார். “இறந்தது விலக்கல்” ஆன்றோர் மரபுதானே! புலவர்கள் போற்றும் புறநானூறு, கற்றவர்கள் போற்றும் கலித்தொகை, வையகம் போற்றும் வள்ளுவன் தந்த திருக்குறள் முதலியன இன்று தோன்றியனவா? நேற்று தோன்றியனவா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழைமையான நூல்கள் அல்லவா? அந்த நூல்களை அறிஞர் அண்ணா பாராட்டவில்லையா? இந்த வகையில் தந்கைக்கும் தனயனுக்கும்கூடி முரண் பாடில்லையா?

தமிழினத்தை, தமிழ் சமுதாயத்தை வளர்த்து வாழ வைக்கும் எந்த ஒரு கருத்தையும் அது எப்பொழுது தோன்றியதாயினும், எங்கே பிறந்ததாயினும் எத ன் பெயரில் பிறந்ததாயினும் அறிஞர் அண்ணா தாராள மாக ஏற்றுக் கொள்கிறார்.

நம்முடைய சமுதாயத்துக்குத் துணை செய்யாததும், துணை செய்யாததோடு மட்டுமன்றி, ஊரும் கறையான் மரத்தை அரிப்பது போலவும், என்புருக்கி போலவும் நம்முடைய சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள எந்த ஒரு கருத்தையும் காலம், களம், இடம் பாராமல் உறுதியுடன் எதிர்க்கின்றார்,

சமூக அநீதிகளோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர். ஆதலால் வாழ்க்கைக்கு உதவாத, பழமைக்கு, அவர் பகைவரேயாம். வாழ்க்கையை அறிவாலும் ஆர்வத்தாலும் திறனறிந்த உழைப்பாலும் தூண்டி வளர்க்கும் எந்த ஒரு கருத்துக்கும் அறிஞர் அண்ணா ஒரு கொழு கொம்பாவார்.

அறிஞர் அண்ணா ஒரு சிந்தனையாளர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளர்; செயல் தொண்டர் . அவருடைய இலக்கியப் படைப்பு மரத்துப்போன பழைமைக்கு கல்லறையாகும்; பூத்து வரும் புதுமைக்கு பூங்காவாகும்.

அவர் இலக்கியத் துறையிலும் சாதாரண மக்கள் பக்கத்திலேயே நின்றார். அவர் காப்பியங்கள் செய்யவில்லை; தோத்திரங்கள் செய்யவில்லை; துதி நூல்கள் செய்யவில்லை.

எளிய நடையில் அன்றாடப் பிரச்சனைகளை எழுதுகிறார்; கதையாக எழுதுகிறார்; கடிதமாக எழுதுகிறார்: கட்டுரையாக எழுதுகிறார்.

அண்ணாவின் படைப்பில் அன்றாடப் பிரச்சனைதானா? அன்றாடம் என்பது தனித்து நிற்பதில்லையே! அன்றாடத்திலேயே நேற்றும் உண்டு, நாளையும் உண்டு. அவர் தம் மனோ நிகழ்ச்சிகளை - அதாவது நேற்று, இன்று பலாபலன்களை, மனப் போராட்டத்தைக் ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற கதையில் காந்தா என்னும் பாத்திரத்தில் காண முடிகிறது.

அறிஞர் அண்ணாவின் படைப்புக்கள் பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக வரவில்லை. பக்கம் பக்கமாக எழுதி, படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல், சுருக்கமாகவும் நேரிடையாகவும் எடுத்துக்கொண்ட கருத்துக்களைச் சொல்லும் கதை நூல்கள் அருமையேயாகும். அதை அண்ணாவின் கதைகளில் காணலாம்.

அறிஞர் அண்ணா, உலகம் மிகச் சிறந்த பல்கலைக் கழகம் என்ற மூத்த கருத்தின் முதல்வராகத் திகழ்கின்றார். அவர் நிறைய உலகத்திலிருந்து படித்துக் கொள்கிறார். நம்மையும் படிக்கத் தூண்டுகிறார். ‘குமாஸ்தா வின் பெண்’ணில் இராகவன் மூலம் ‘உலகத்தைவிட உன்னதமான புத்தகம் இருக்கிறதா?’ என்று நம்மைக் கேட்கிறார்.

அண்ணா அவர்கள் சமூகத்தின் மனப் போக்குகளை ஓரளவு தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார். “சமூகத்தினர் கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதில்லை; அலைகளையே எண்ணி அலமருகின்றனர்; நெஞ்சினோடு நெஞ்சு உற்று நோக்கும் உணர்வின்றி முலாம் பூசிய முகத்தோடு மோதுகின்றனர்.

மனித சமூகத்தை ஏமாற்றி விடுவதென்பது கெட்டிக்காரத்தனமான காரியமல்ல. ஏனெனில் அவர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உயர்வுக்குப் பயன்படாத உதட்டில்,உலாவும் இரக்க உணர்ச்சிகளே உள்ளன.

கண்டும் கேட்டும் போடும் பிச்சைகளில் மகிழும் மக்கள் மனப்போக்கு மாறாத வரையில் சமூகத்தில் நிலையான வளமான பொருளாதாரப் புரட்சியைத் தோற்றுவிக்க முடியுமா?” என்று பார்வதி பி.ஏ. யின் மூலம், நம்மைக் கேட்கிறார்.

“ஆடம்பரத்திலும் வெளி வேஷத்திலும் இவ்வளவு சுலபத்திலே ஏமாந்து போகும் இந்த மக்களைக் கொண்டு எப்படி சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்?” என்று பார்வதி ஏக்கம் கொண்டாள்.

சமூகத்தில் பல வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழில் இல்லை. அவர்களுடைய வயிறு வளர்வது பலருடைய அறியாமையிலேயே. ஆனாலும் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை. அவர்கள் மரியாதைக்கு மரியாதை தரமாட்டார்கள். அவர்கள் மரியாதைக்கு மிரட்டையும், மிரட்டுக்கு மரியாதையும் தருவார்கள்.

ஐயோ, பாவம் இப்படி நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். இத்தகையவர்களைச் சந்தித்தவுடன், அண்ணாவின் படைப்பாகிய ‘பெங்களுர் அம்பக் ஆறுமுகம்’ இவர்தானோ என்று கருதும்படி இருக்கிறது. அவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கிறார்.

சென்ற பல நூற்றாண்டுகளைவிட இந்த நூற்றாண்டு பெருமையும் புகழும் பெற வேண்டுமென்ற வேட்கை மலிந்து வளர்ந்துள்ள காலம். பலர் பஞ்சாங்கம் பார்ப்பதை மறந்துவிட்டனர்.

ஆனால், பத்திரிகைகளில் பெயர் வருகிறதா? என்று பார்க்கத் தொடங்கிவிட்டனர். வரவில்லையானால் ஏக்கம்! பெருமூச்சு! அத்தகையவர்களுக்கு ‘பெங்களூர் அம்பக் ஆறுமுகம்’ போன்றவர்களின் விளம்பர கமிஷன் ஏஜெண்டுகளின் மாநாடுகள் கூடுகின்றன.

யார் பெயரால்? தொழிலாளர்களின் பெயரால்! கூடுவது யார்? மச்சு வீட்டுக்காரர்கள்! பேசுவது யார்? “எல்லோருக்கும் கஷ்டமிருக்கிறது; சகித்துக் கொள்ளுங்கள்” என்று புது கார் வாங்க முடியாததை பிலாக் கணமாகப் பாடும் செல்வர்கள்!

இவர்களுக்குத் தாராளமாக ‘அம்பக் ஆறுமுகம்’ என்பவர் ‘இரட்சகன்’ என்ற பட்டத்தை வாரி வழங்குகிறார். ஆமாம், அவர் பிழைப்பு ஓடுகிறதல்லவா? அவர் வரையில் இரட்சகன்தானே!

ச-6 இத்தகைய போலி விளம்பரப் போக்குகளை பார்வதி பி.ஏ.,யில் அண்ணா சித்தரிப்பதைப் பார்த்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டியதிருக்கிறது. விரசமில்லாமல் இத்தகு வேடிக்கை மனப்போக்குகளைச் சித்தரிப்பதில் அண்ணா வல்லவராக விளங்குகிறார்.

இனம், இனத்தைச் சாரும். போலி மனிதர்கள் போலி மனிதர்களையே சார்வார்கள். இது ஆச்சரியப்படத் தக்கதல்ல. இருவருக்கும் வியாபாரம் ‘புளுகு’ தானே ஒருவர் செல்வத்தோடு, ‘புளுகு’ வியாபாரம் செய்கிறார்: புகழ் வேட்டையாடுகிறார். .

இவர் அண்ணாவின் படைப்பாகிய ஆலாலசுந்தரர். பிறிதொருவர் ஆலால சுந்தரரின் வாரிசாகத் துடிக்கும். பார்த்திபன். ஆலாலசுந்தரர், பழைய மாதிரி மோசடிக்காரர்; பார்த்திபன் நவீன மாதிரி மோசடிக்காரர்.காரணம் இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும் கூட. பத்திரிகை ஆசிரியர் மட்டுமா? சொற்பொழிவாளர்; கலா ரசிகர்; நவீன ஆயுதங்களைக் கையாளுபவர்.

இவர்களுக்கு பெங்களுர் அம்பக் ஆறுமுகத்தைப், போன்றவர்கள் தானே உறவாக முடியும் அம்பக் ஆறுமுகமோ வெறும் வாயால், படி படியாக அளப்பவர்; விளம்பரப் பிரியர்; ஆனால் கொஞ்சம் யோக்கியர்; பிறருக்கு விளம்பரம் செய்து தனக்கும் விளம்பரம் தேடுபவர். இவர்களின் கூட்டுறவை அண்ணா சிரிக்கச் சிரிக்கப் படைத்திருக்கிறார்.

அழகான உவமை ஒன்றும் எடுத்துக்காட்டுகிறார். “சேற்றிலே தானே தவளை இருக்கும் தவளைக்கும் சேறுதானே கிடைக்கும்! அது போலத்தான் அம்பக் ஆறுமுகத்துக்கு ஏற்ற ஆள்தான் பார்த்திபன். பார்த்திபனுக்கு ஏற்ற ஆள்தான் ஆறுமுகம்” என்று எழுதிச் சிரிக்க வைக்கிறார்; சிந்தனை செய்யத் தூண்டுகிறார். இச்சையுணர்ச்சிகளுக்கு ஏற்ற சேர்க்கையைத் தேடாமல் உயர்வு பொருந்திய - வளர்ச்சிக்குரிய சேர்க்கையை நாடிச் செல்ல வழி நடத்துகிறார்.

சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பல உயர்ந்த கருத்துக்களைப் பலர் தந்திருந்தாலும் அவை முறையாக வளரவில்லை. செயல்படுத்தப் பெறவில்லை, என்று அண்ணா கருதுகிறார். புராணங்களே ஆனாலும் அவற்றிலுள்ள கருத்துக்கள் பல நாளாவட்டத்திலே பொது அறிவு பரவப் பரவ மறைந்து விடுவதாகவும், சில மறைக்கப்பட்டு விடுவதாகவும் கூறி, சில கருத்துக்கள் உரம் குறையாமல் உள்ளன, ஏன்? என்றும் கேட்கிறார்.

இவற்றிற்குச் சிலர் உரம் தருகிறார்கள் என்று கூறி ஏனென்றும் காரணம் காட்டுகிறார். அப்படி உரமிட்டு வளர்க்கப்படும் கருத்துக்கள் எவை என்றும் எடுத்துக்காட்டுகிறார்.

ஒரு சிறு கூட்டத்தின் சுகபோக வாழ்க்கைக்கு வழி செய்கின்றனவும், ஆடாமல் அசையாமல், ஓடாமல் உழைக்காமல் எக் கவலையுமின்றி வாழ வழி வகுக்கின்றனவும் ஆகிய கருத்துக்களை எந்தப் புதுமையும் தாக்காமல், வளரும் காலத்தினாலும் மாற்ற முடியாமல் அவை இம்மியும் கெடாதபடி ஓயாது உழைத்து கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர்.

நல்லூழ் இன்மையின் காரணமாக, பிரச்சா எந்திர மும் இந்தச் சிறு கூட்டத்தினரின் ஏகபோக இயக்கமாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கூற்றுக்களின்படி புராணங்களின் மீது நேரிடையாக அண்ணாவுக்கு வெறுப்பில்லை யென்பதையும், அவை காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சிக்குத் துணை செய்யாமல், சமூக அநீதிகளுக்கு அரண் செய்து இருப்பதால், அவற்றை எதிர்க்க வேண்டிய அவசியத்தில் அண்ணா இருக்க வேண்டியதிருக்கிறது என்று உணர முடிகிறது. இதை, “புராண மதங்கள்” என்ற புத்தகத்தை ஆழப் படித்தால் தெளிவாக உணர முடியும்.

இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து சமய சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஜாதீய மனப் போக்குகளுக்கு அறிஞர் அண்ணா ஒரு சவுக்கு, ஒரு வெடிகுண்டு. அவர் உண்மையிலேயே ஜாதிக் கொடுமைகளை எண்ணும்பொழுது கொதிப்படைகிறார்; குமுறுகிறார் என்பதை அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.

ஜாதியில் கீழ் ஜாதியாகவும், பணத்தில் ஏழையாகவும் மனிதன் இருந்துவிட்டால், அவனுடைய சிறு தவறுகளுக்கும் கூட ஏச்சும் கண்டனமும் கிடைக்கின்றன. ஏன்? முடிந்தால் தண்டனைகளும் கூடக்கிடைக்கின்றன.

ஆனால் ஜாதியால் உயர்ந்தவனோ, பணத்தால் உயர்ந்தவனோ பழிபாவங்களும் படுகொலையும் செய்தாலும் கூட சமூகம் மூடி மறைக்கிறது; பாராட்டியும் பேசுகிறது. ஏழைகள் பால் - கீழ் ஜாதியினர் பால் இரக்கம் என்று ஒன்றுகூட காட்ட மாட்டார்களென்று ஜாதிக் கொடுமைக்கு ஆளான உத்தமியை பார்வதி தேற்றுமிடம் நினைந்து நிலைந்து உருகத் தக்கதாக அமைந்திருக்கிறது.

உயர் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதியை முற்றிலும் ஒதுக்கினாலும் பரவாயில்லை. தேவைப்படும்பொழுது இச்சிக்கிறார்கள். சுவைத்து அனுபவிக்கிறார்கள்! எச்சில் ஆக்குகிறார்கள். பலியான பிறகு உயர் ஜாதித் துடுக்கை காட்டி ஒதுங்கிக் கொள்ளும் கொடுமையை அண்ணா நாடி நரம்புகளும் இரத்தமும் கொதிக்கும்படி கண்டிக்கிறார்.

“பழி வருகிறதே என்று பதறித் துடித்துக் கேட்டால் சுவைத்து அனுபவித்த பிறகு மதம் காட்டுகிறான். மதம் மாற உடன்பட்டால், மாறி வந்தால் முன்னுள்ள கீழ் ஜாதியிலேயே சேர வேண்டுமாம்! இது என்ன நியாயமோ? இந்த அநீதியை தில்லை நடராஜனும், சீரங்க நாதனும் தாங்கிக் கொண்டிருப்பது எதனாலோ நமக்குப் புரியவில்லை” என்று கனல் கக்கக் கண்டிக்கிறார்.

‘பார்வதி பி. ஏ.’யில் இடுக்கண் உற்ற நிலையிலும் கூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட ஒரு தமிழ்க் குழந்தையை - ஜாதி, இனம், மொழி, எண்ணம் படியாத பச்சைக் குழந்தையை ஏற்று வளர்க்க பெங்களுர் பார்ப்பனச் சேரி ஆண்டாள் அம்மாளுக்கு மனம் துணியாத ஜாதி வெறியை அண்ணா சுவையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழ்க் குழந்தையை வளர்ப்பது பாவமாகவும், பொய் சொல்லிக் கணவனை ஏமாற்றுவது புண்ணியமாகவும் தெரிகிறது. அந்தப் புண்ணியவதிக்கு, “சூத்திரர் வீட்டுக் குழந்தையை என் குழந்தேன்னு கூறி எங்க ஆத்திலே வளக்கிறது மகாபாவ காரியம்னு நேக்கு பயமாயிடுத்து. அதுக்காகத்தான் அவரிடம் சொப்பனம்னு கதை சொன்னேன்” என்று ஆண்டாளைப் பேச வைத்து ஜாதி அமைப்பின் இறுகிய நிலையைப் புலப்படுத்துகிறார். “உயர் ஜாதிக் குடியினரும் சிறப்பாக சமரச ஞானம் பேசுவார்கள். அதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால், எல்லாம் பேச்சளவில்தான். செயலில் இம்மியும் இல்லை. காரணம், இந்த பாகுபாட்டு முறைகள்தான் சிலரை வாழ்விக்கிறது. அதை எப்படி இழப்பார்கள்?” என்று கேட்கிறார்.

அண்ணா சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேறுபாட்டு முறைகளை மாற்றியமைக்க விரும்புகிறார். ஆனால், பொருளியல் சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாத வரை ஜாதி வேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது என்பதையும் உணர்கிறார்.

ஆதலால் அவர் தமது இணையற்ற இலட்சியமாக சமதர்ம சமுதாய அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அவருடைய படைப்புகள் தெளிவாகப் பேசுகின்றன.

மனித சுபாவம் என்பது இயற்கையுமல்ல; தெய்வமுமல்ல. அது சூழ்நிலையால் உருவாகி வளர்வதேயாகும். இதனைத் திருவள்ளுவரும் “இனத்துள்ளதாகும் அறிவு” எனறார்.

குமாரைப்பற்றி அவன் ஏழை - அவன் நிதியை எடுத்து ஏப்பம் விட்டுவிடுவான் என்றும், அது ஏழைகள் சுபாவம் என்றும் செல்வச் சீமான் பார்த்திபன் சொல்லுகின்றான். அறிஞர் அண்ணா தமது அருமையான படைப்பாகிய பார்வதியின் மூலம் உயிரோட்டமுள்ள உணர்வுடன், குபேரபுரியின் வாதத்தை எதிர்த்து, வாதாடுகிறார்.

“அந்தச் சுபாவம், பணக்காரத் தன்மை ஒருபுறமும் வறுமை மற்றோர்புறமும் இருப்பதால்தான் உண்டாகும். பனியிலே குளிருண்டாகும். வெய்யில் உடல் எரிச்சலைத் தருகிறது. வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனையூட்டி அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது.

தர்ம பிரபுக்கள் என்று சிலரும், தரித்திர பூச்சிகள் என்று பலரும் இருக்கும் வரையில் சுபாவமும் அந்தப் பொருளாதார நிலைக்கு ஏற்றபடிதான் அமையும். அது குமாரின் குற்றமல்ல. மேலும் குமாரின் சமதர்ம பற்று ஆழமானது” என்று வழக்காடுகிறாள் பார்வதி.

அண்ணாவின் படைப்பில் உத்தமி மிதவாதப் போக்குடையவள். அவள் விதியை நொந்து கொள்கிறாள். அவள் உலகத்தின் போக்குக் கண்டு சமாதானம் செய்து கொள்கிறாள். “மழை பெய்யும் போது ஊருக்கெல்லாம் குடை பிடிக்க முடியுமா?” என்று அறியாமையின் வடிவமாக - ஆனால் வாதத் திறமை போலப் பேசுகிறாள்.

ஆனால், பார்வதியின் வாயிலாக அறிஞர் அண்ணா பேசுகிறார்; சமதர்மத்துக்காக வழக்காடுகிறார்; வாதாடுகிறார். “மானைத் தின்று புலி கொழுப்பது. போல் ஏழையின் உழைப்பை உறிஞ்சி முதலாளி கொழுக்கிறது யாருக்குத் தெரியும்? ஈவு இரக்கம் தயவு தாட்சண்யம் என்பவைகளை படுபாதாளத்திலே போட்டு விடுபவர்கள் தான் நாலடுக்கு, ஐந்தடுக்கு மாளிகையிலே உலாவுகிறார்கள்.

நமக்கு என்ன என்றிருக்க இந்த உண்மையை உணர்ந்த பிறகு மனம் எப்படி இடம் கொடுக்கும். தொட்டிலிலே தூங்கும் பாலகனை, கொட்டிடத் தேள் போனால், தேளை அடிக்காதிருப்பது நியாயமா?” என்று பார்வதியின் மூலம் நியாயம் கோருகிறார். குபேர உலகத்தைச் சார்ந்த மனிதர்களைப் பார்த்து. அறிஞர் அண்ணா!

அரசியல் வானில் காரல்மார்க்ஸின் சிந்தனையும், வள்ளுவத்தின் சிந்தனையும் பிரஞ்சு புரட்சியும், சமதர்மச் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கின்றன . இன்று எங்கும் அந்தப் பேச்சு செல்வச் சீமான்களும் சமரசம், சன்மார்க்கம், சமதர்மம் இவைபற்றி ஓயாது பேசுகின்றனர். இஃது உண்மையான ஆர்வமா? இல்லை என்றார் அறிஞர் அண்ணா.

சில சொற்களால் இதைக் கேலி செய்கிறார். “சீமானின் சமதர்மப் பிரச்சாரம் ஓய்வு நேர உல்லாசம்” என்கிறார். அதே நேரத்தில் ஏழைகளைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறார். அவர் எச்சரிக்கை சமதர்மம் ஒன்றே ஏழைகளின் வாழ்க்கைத் தோணி என்பதாகும்.

புதுதில்லியில் 1947 - ல் அண்ணல் காந்தியடிகள் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் சமூகத்தைப் பிடித்திருக்கின்ற ரோகத்தைப் பற்றிப் பேசினார். அதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் லாவகமாக பிரதிபலிப் பதைப் பார்க்கிறோம். “செல்வம் சமூகத்தில் சிலரிடத்தே. குவிவது காசநோய் போன்றது. காசநோய் பரவிய உடல் இளைக்கத்தானே செய்யும்?” என்று வினாவை எழுப்புகிறார்.

அமரர் நேருஜி “எல்லோருக்கும் ஒரு வாக்கு” என்பதினாலேயே பூரண மக்களாட்சியும் சமதர்ம சமுதாயமும், சமூக ஒருமைப்பாடுடைய சமுதாயமும் அமைந்துவிடாது” என்று தெளிவாகக் கறியுள்ளார். அறிஞர் அண்ணாவும் இந்தக் கருத்தில் தெளிவாகவே இருக்கிறார்; உறுதியாகவும் இருக்கிறார்.

அதனால்தான் போலும் அவர் கட்சி, நிறைய. நன்கொடைகள் வாங்கவில்லை. “குடியரசு முறையையும் வைத்துக்கொண்டு சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும் படியும் அனுமதித்துவிட்டால் புத்தியுள்ள ஒரு மன்னனே கூட குடியரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப் படைக்க முடியும்” என்று இரண்டுபட்ட கருத்துக்கு இடமின்றி “எல்லோரும் இந்நாட்டு, மன்னர்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

அறிஞர் அண்ணா கசப்பு மருந்தை கருப்பட்டியுடன் கலந்து கொடுப்பதைப் போல தனது சீர்திருத்தக் கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்து படைத்துக் காட்டுகிறார். பெண்கள் முன்னேற்றத்தில் அறிஞர் அண்ணாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு.

‘ரோமாபுரி ராணிகள்’ என்ற அறிஞர் அண்ணாவின் படைப்பு விரச உணர்ச்சிகள் நிறைந்தது என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. ஒரு எதார்த்த: நிலைமையை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது எழுத்தாளன் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான்.

அறிஞர் அண்ணாவின் நிலைமையும் இதுவே என்று கருதுகிறோம். ஆயினும் தனது படைப்புத் திறனில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளார். இந்த வித்தியாசத்தை “ரோமாபுரி ராணி”யைப் படிப்பவர்களும் “பார்வதி பி.ஏ.”யைப் படிப்பவர்களும் தெளிவாக உணர முடியும்.

முன்னையதைப் படைக்கும் காலத்தில் அவர், தீமையை மட்டும் கண்டு தீமையை மட்டும் விமர்சித்து அழிக்கும் முகாமில் இருந்தார். பின்னர் அவர் தீமையை அழிப்பதோடின்றி நன்மையை உருவாக்க வேண்டுமென்ற கருத்தில் ஈடுபட்டார். இந்த வளர்ச்சி மனப்போக்கை ‘பார்வதி பி.ஏ.’ என்ற கதையில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ‘பார்வதி பி.ஏ.’யில் விரச உணர்ச்சியே இல்லை. அறிவு உணர்வுகளே தலைதூக்கி நிற்கின்றன. சமூகப் போராட்டங்களே வேரூன்றி உள்ளன. இஃது அவருடைய தலையாய படைப்பு. தமிழர்கள் தவறாது படிக்க வேண்டிய படைப்பு.

“ரோமாபுரி ராணிகள்” படைப்பிலும் மிகச் சிறந்த இனிய தத்துவங்களை எடுத்துக்காட்டத் தவறிவிட வில்லை. நோயை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. மருந்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் வெறுப்பு என்ற நோய் பிடித்த விமர்சகர்கள் அவர் மருந்தைக் கண்டு காட்டியதை எடுத்துக்காட்டத் தவறி விட்டார்கள்.

“பெண்களுக்கு சரியான சமத்துவமும், சுதந்திரமும் வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் வரை அவர்களுடைய அழகு ஆபத்தாகவே முடிகிறது. ஆனாலும் ஏழை அபலைகளாக இருக்கிற பெண்கள் இந்த ஆயுதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் தவிக் கின்றார்கள்” என்று எழுதிக் காட்டியுள்ளார்.

“ரோமாபுரி ராணி”களில், பெண்களைச் சம உரிமையுடன் கருதாமல் இன்பத்துக்குரிய எண்ணரிய பொருள்களோடு கருவி போலக் கருதுகிற மனப் போக்கை அண்ணா, பார்வதி பி.ஏ.,யில் இடித்துரைக்கின்றார்.

அறிஞர் அண்ணா சமயத்துறையில் புரியாத புதிராக இருக்கிறார். இறைவனைப் போலவே அவரும் கேள்விக் குறியாகவே திகழ்கிறார். இறைவனை எப்படி ‘இப்படியன் இவ் வண்ணத்தன்’ என்று எழுதிக் காட்ட முடியாது என்று சொன்னார்களோ, அதுபோலவே அறிஞர் அண்ணாவும் விளங்குகிறார்.

இஃது ஒரு பொதுவான உண்மையே. ஆனால் உண்மை அப்படியல்ல. அண்மைக் காலமாக அவரி அதனைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார். “சமயம் வேண்டுமா, வேண்டாமா என்பது அல்ல எங்கள் கேள்வி. அது எப்படியிருக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி” என்று உரத்த குரலில் கூறி வருகிறார்.

அண்மைக் காலமாக என்பதால் வாக்குகளுக்காகவும் ஆட்சிக்காகவும் என்று சிலர் கருதக்கூடும். இது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘புராண - மதங்கள்’ என்ற புத்தகத்தை உய்த்துணர்ந்து படிப்பவர்கள் இதனை உணர முடியும். புத்தரைப் பற்றி ‘பார்வதி பி.ஏ.’யில் குறிப்பிடும் இடத்தில் அடியிற் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“இன்பத்தை மதிக்க மறுத்ததுடன் போகப்படு குழியின் இலாபச் சுழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்ட காலை அவைகளிலே இடறி விழாமல் இன்பம் - நிரந்தர இன்பம் - துன்பத்துடன் பிணைத் திருக்கும் இன்பமல்ல - இணையற்ற - எல்லையற்ற - இன்பம் எது? எங்கேயிருக்கிறது? எங்கனம் பெற முடியும்? என்று கண்டுபிடிப்பதிலே காலத்தைச் செல விட்டார்.”

என்று எழுதியுள்ள பகுதிகள் தெளிந்த சமயத் தத்துவத்தை விளக்குவனவாகவில்லையா? ‘ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே’ என்ற மணிவாசகரின் வாக்கு இதனை நமக்கு நினைவுக்குக் கொண்டு வரவில்லையா? நாத்திகம் என்ற தத்துவம் இயல்பிலேயே இல்லை. அதை ஆத்தீக உலகமே உருவாக்கியது என்பது அறிஞர் அண்ணாவின் கருத்து. இந்தக் கருத்தினை “குமாஸ்தாவின் பெண்” என்ற கதையில் சீமானாகிய சோமுவுக்கும் ஏழையாகிய இராகவனுக்கும் நிகழும் உரையாடலில் சித்தரித்துக் காட்டுகிறார். அந்தப் பகுதியை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள்.

இராகவன் : உம்மை இலட்சாதிபதியாக வைத்திருப்பது அவன் செயல். என்னை பிட்சாதி காரியாக வைத்திருப்பதும் அவன் செயல்; மிக நல்லவன்!

சோமு : இராகவா, நீ நாத்திகம் பேசுகிறாய்.நாக்கு கூசவில்லையா?

எங்கே நாத்திகம் காட்டுகிறது? மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! இந்தப் பார்வையில் தான் காரல்மார்க்ஸாம் நாத்திகரானார். தலைவர் பெரியாரும் நாத்திகரானார். அறிஞர் அண்ணாவும் நாத்திகரானார். சமய நம்பிக்கை உடையவர்கள் அருள் கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுளை நம்புகிற துணிவைவிட, கடவுள் தத்துவத்தைச் செயல்படுத்தி எல்லோரும் இன்புற்று வாழ வழிவகை செய்யவேண்டும். அதை செய்யத் தவறினால் மன்பதைக்கும், மன்பதையின் மன சாட்சியாகிய கடவுளுக்கும் போலி ஆத்திகர்கள் பகைவர்கள் ஆவார்கள்.

நாத்திக உலகம் நலவிருந்தாகிவிடும். உத்தரவாதம் எது? அண்ணாவின் கருத்து “மடாதிபதிகள் மடத்தை ஆள்வதைக் காண்கிறோம். மக்களிடை ஆள்வதில்லை;மக்களிடிை வருவதுமில்லை” என்பது. இதனை மனச் சாட்சியுடையோர் மறுக்கமாட்டார்கள். காலத்தின் தேவையை அறிந்த அறிவுடைய பெருமக்கள் மறுக்கமாட்டார்கள்.

ஏன்? உண்மையான அருளாளர்களும் மறுக்க மாட்டார்கள். உறுதியான சிந்தனை, உலகத்தில் நடை முறைக்கு வந்தே தீரும்; மாறுதலை ஏற்படுத்தியே தீரும். இது மக்கள் மன்றத்தின் சென்ற காலத் தீர்ப்பு. இந்த வரலாற்றுத் திருப்பம் நம்முடைய தமிழகத் திருமடங்களில் - தமிழர் திருமடங்களில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மக்களை நாடி வரத் தொடங்கிவிட்டனர்; பேரவை கண்டுள்ளனர்; மக்கள் நலங்கருதிப் பேரறங்களைச் செய்ய முன்வந்துள்ளனர். இது தமிழகச் சமய வரலாற்றில் புதிய அத்தியாயம்.

இந்த அத்தியாயத்தை இடையீடின்றி இன்பமே சூழ, எல்லோரும் வாழும் வகையில் எழுதி முடிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழக அரசு இருப்பது சமய சீர்த்திருத்த உலகத்துக்குப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என விளங்குகிறது.

ஆறமலை அடிகள் அவர்களும் தமிழ்த் தந்தை திரு வி. க. அவர்களும் இன்ன பிற சான்றோரும் பக்தி நெறியை, கண் மூடிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முயன்று சூழலைச் சீராக்கியுள்ளதால் பகுத்தறிவு இதுக்கத்தினரும் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்வுக்கு ஆவாத வறண்ட பழைமையைத் தாக்கி வலுவிழக்கச் செய்துள்ளனர்.

இக்க இருமுனைத் தாக்குதலால் வறண்ட பழைமை, கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இருதும் கருத்துக்களையும் ஒன்றாக்கி எழுதிச் செயல்படுத்தித் தமிழ்ச் சமயததையும், சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும்.

மாணிக்கவாசகப் பெருமான் எடுத்துக் கூறியதைப் போல “முன்னைப் பழைமைக்கும் பழைமையதாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்” என்ற நிலையில் நமது சமயத்தினை விளங்கச் செய்ய வேண்டும்.

அறிஞர் அண்ணா “துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்கத் துன்பத்தில் வளர்ந்தவர்; நெறியில் நீங்கியோரின் ஏச்சில் வளர்ந்தவர்; பெருநெறி விலகிய பேதையர் பேச்சைக் கடந்து வந்தவர்.

பொது வாழ்க்கையை அறிஞர் அண்ணா மலராலாய மஞ்சம் எனக் கருதவில்லை. அது துன்பம் நிறைந்தது; இடையூறுகள் நிறைந்தது என்று எடுத்துக்காட்டிப் பொது வாழ்க்கையின் வெற்றிக்குரிய சக்தியைப் பெறத் தூண்டுகிறார்; ஓடாது நிற்கச் சொல்லுகிறார்; எதிர்த்துச் செல்ல தூண்டுகிறார்; போராடி வெற்றி பெற வற்புறுத்துகிறார்.

தேனிக்களைப் போல பிறருக்கென சுற்றித் திரிந்து உழைக்கச் சொல்லுகிறார். பொது வாழ்க்கைக்குத் தன்னலம் - தன்னலச் சபலம் கேடு என்று சொல்லுகிறார். சபலத்தைக் கடந்து, சஞ்சலத்தைக் கடந்து, பொது வாழ்க்கையில் ஈடுபட கற்றுத் தருகிறார்.

அறிஞர் அண்ணா சிறந்த இலக்கியப் படைப்பாளர். மிகச் சிறந்த மனிதப் பண்புகனை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறார். ஆனால் அதே காலத்தில் அவர் தன்னுடைய இலட்சியங்களையே. இலக்கியங்களாகப் படைக்கிறார் என்பதையும் அவருடைய ஆர்வ உணர்வுகளே அன்னை மொழியாம் அமுதத் தமிழில் எழில் உருவம் பெற்று வெளிவருகின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அவர் தமது இலட்சியங்களை, தனது இலக்கியத்தில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனது தம்பிகளின் வாழ்க்கையிலும் தனது ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்க்கையிலும் உருவாக்கத் துடிதுடிக்கிறார்; உருவாக்குகிறார். ஏன்? உருவாக்கியும் உள்ளார், என்பதை எண்ணிப் பார்க்கும்போது, திருவள்ளுவரின் படிைப்புக்குத் தனது வாழ்க்கையின் மூலம் உரை காண வந்த தோன்றலோ அறிஞர் அண்ணா என்று கருத வேண்டியுள்ளது.

அறிஞர் அண்ணா “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற புத்தகத்தில் “ஜனநாயக முறையில் ஈடுபட்ட தலைவர்களாக - அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே மண்டிைக்கனம் கொண்டுவிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணா 1967 பொதுத் தேர்தலில் ஆட்சிக்குரிய தகுதியுடையவராக வெற்றி பெற்ற போது, மிடுக்காகப் பேசாமல், அடங்கிப் பேசிய பண்பும், தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் வீடு தேடிச் சென்று ஒத்துழைப்புத்தர வேண்டிக் கேட்டுக் கொண்டமையும் இந்திய நாட்டு வரலாற்றிலேயே இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. இந்தப் பண்பு மூலம் அவரது படைப்புக்கு, அவருடைய இலக்கியத்துக்கு, அவரே இலக்கியமாக இருப்பது நெகிழ்ந்து பாராட்டக்கூடியது.

அண்ணல் காந்தியடிகளிடத்தில் அறிஞர் அண்ணாவுக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாடு காலத்திற்குக் காலம் மாறியும் வந்திருக்கிறது என்பதிலே உண்மையுண்டு. ஆனால், ஈடுபாட்டையாரும் மறுக்க முடியாது.

‘உலகப் பெரியார் காந்தி’என்ற நூலில் நமது தலைமுறையின் வேலை, ‘இந்த நாட்டை - காந்தி நாடாக்குவது’ என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார். அண்ணாவின் வார்த்தைகள் இதோ! அப்படியே படித்துப் பாருங்கள்.

“ஏழை ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற நிலையில்லாத நாடு எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு - இந்த நாடு; காந்தி நாடு - காண்பது தான் நமது தலைமுறைக்கு உள்ள வேலை” என்பது அவர் வாக்கு. இதனை உணர்ந்து, ஓயாது உழைப்பது அண்ணாவின் - நாண்மங்கல விழாப் பரிசு!

口口口